“கண்டிப்பா பாஸ்”

“ஒரு வேளை எங்க வீட்ல ஒத்துக்கலைனா என்ன பண்ணுவ?”

“என்னை மறுக்க வாய்ப்பிருக்கா பாஸ்? நானும் ழி மாதிரியே டாக்டர். வருங்காலத்துல நானும் அவளும் சேந்து ஹாஸ்பிட்டலை ரன் பண்ணுவோம்”, என்றான் பெருமையாக.

“சரி தான், ஆனா எங்க வீட்ல ஒத்துக்கலன்னு  வச்சிக்கோ  அப்ப என்ன பண்ணுவ? ஏன்னா முக்கியமான காரணம் இருக்கு ரீலிஜியன்”

“ஆமால்ல? ஆனா ஏசப்பாவா இருந்தா என்ன பிள்ளையாரா இருந்தா என்ன? நான் உங்க மதத்துக்கு வந்திருவேன்”, என்று சொன்னவனை  பேச்சற்றுப் பார்த்தான் அதிபன்.

யாழிக்கு இப்படியாகப்பட்ட நல்லவன் மாப்பிள்ளையாக கிடைக்க அவன் சந்தோஷம் தான் பட்டிருக்க வேண்டும். ஆனால் அவனுக்கு கணிக்க முடியாத ஏதோ ஒரு உணர்வு வந்தது.

ஜானைத் தவிர யாழியின் மற்ற நண்பர்கள் அவனுக்கு பழக்கம் தான். வினோத்தைக் கூட அவனுக்கு தெரியும். அவளது தோழிகள் கூட அதிபனை சைட் அடிப்பதாக அவளே சொல்லி இருக்கிறாள். அப்போதெல்லாம் ஏதாவது கலாய்த்து விட்டு கடந்து விடுவான்.

ஆனால் ஜானின் காதல் பற்றி ஏன் யாழி சொல்ல வில்லை என்று எண்ணியவனுக்கு அப்போது தான் ஒன்று உரைத்தது யாழி தன்னிடம் அனைத்து விஷயங்களையும் பகிர்ந்து கொள்ள வில்லை என்று. அவன் அனைத்து விஷயங்களையும் அவளிடம் சொல்லி விடுவான். அவனுக்கு வந்த லவ் லட்டர் புரப்போசல் என அனைத்தையும் சொல்லுவான். ஆனால் யாழி இது வரை அப்படி சொன்னதே இல்லை.

ஏன் ஜான் என்னுடைய நண்பன், தான் பணிபுரியும் மருத்தவமனையின் உரிமையாளன் என்ற அளவுக்கு தான் சொல்லி இருக்கிறாளே தவிர அவன் காதல் சொன்னதையோ அதற்கு அவள் பதில் சொன்னதையோ அவள் சொல்லவே இல்லை.

ஏதோ தனிமை பட்டது போல ஒரு உணர்வு எழுந்தது அவனுக்கு. யாழி அவனை விட்டு விலகி செல்வது போல உணர்வு எழுந்து அவனை ஆட்டிப் படைத்தது.

அப்படி என்றால் அவள் அன்பு எல்லாம் பொய்யா? இவ்வளவு பெரிய விஷயங்களை கூட தன்னிடம் அவள் பகிர்ந்து கொள்ள வில்லை என்றால் அவளிடம் தனக்கான இடம் எது என்று புரியாமல் குழம்பி போனான்.

அதற்கு விடை அவள் உனக்கு அந்த அளவுக்கு முக்கியத்துவம் தர வில்லை என்றே வர அதுவும் மனது அப்படி வலித்தது. அப்போது அங்கே பிரகாஷ் வரவும் அனைவரின் கவனமும் அவன் பக்கம் சென்றது.

“வாங்க பிரகாஷ்”, என்ற படி அவனை லேசாக அனைத்து விடுவித்தாள் யாழி. “மச்சான் எப்படி டா இருக்க?”, என்று கேட்ட படி பிரகாசும் அதிபனை அனைத்துக் கொண்டான்.

“நல்லா இருக்கேன் டா. சரி வாங்க, போகும் போது பேசிட்டே போகலாம்”

“சரி டா வாங்க போகலாம்”, என்று அழைத்ததும் “நான் தான் இன்னைக்கு டிரீட் கொடுப்பேன் ழி”, என்றான் ஜான்.

அவன் மண்டையில் அடித்தவள் “அங்க போய் பாத்துக்கலாம் வா”, என்று சொல்லி விட்டு சென்றாள்.

“பாஸ்”, என்று அதிபனின் கரத்தைச் சுரண்டினான் ஜான். “இப்ப என்னடா வேணும் உனக்கு?”, என்று எரிச்சலுடன் கேட்டான் அதிபன். அந்த எரிச்சல் எதனால் வந்தது என்று அவன் அறிய வில்லை.

“பாஸ் ழி என் தலையை தொட்டுட்டா பாஸ்”

“பைத்தியம் அவ இப்ப பிரகாஷை கூட தான் கட்டிப்பிடிச்சா. என்னையும் தான் பிடிப்பா. உன்னை அடிக்க தானே டா செய்யுறா. அப்புறம் என்ன?”

“அதை தான் சார் சொல்ல வரேன். உங்களை எல்லாம் இயல்பா ஹக் பண்ணுறா. ஆனா என் கிட்ட அப்படி நடந்துக்க மாட்டா. அப்ப அவளுக்கு நான் ஸ்பெஷல் தானே?”, என்று கேட்க “எப்படி போட்டாலும் சிக்ஸ் அடிக்கிறானே”, என்று எண்ணிக் கொண்டான் அதிபன்.

“பேசாம நான் வேணும்னா அவ கிட்ட ரெக்கமண்ட் பண்ணட்டுமா ஜான்?”

“நோ பாஸ், காதலுக்கு தூது எல்லாம் வைக்க கூடாது. அப்புறம் இன்னொரு விஷயம், அவ கிட்ட என் மனசை சொல்லிட்டேன். அப்புறம் என்ன? அவ எப்ப வேணும்னா பதில் சொல்லட்டும். நாம இடைல அவளை தொல்லை பண்ணக் கூடாது”, என்று சொல்ல இவ்வளவு நல்லவனா இருக்ககுறானே என்று தான் அதிபன் எண்ணினான்.

பிரகாஷ் காரில் தான் அனைவரும் கிளம்பினார்கள். “ழி நீ கம்பர்ட்டபிளா உக்காந்துருக்கியா? உனக்கு ஓகே வா? பேசாம என் கார்ல வந்துருக்கலாம்”, என்பதில் ஆரம்பித்தது ஜானின் யாழியின் மீதான அக்கறை அதிகரித்துக் கொண்டு தான் சென்றது.

ஒரு வழியாக ரெஸ்டாரண்டுக்குள் நுழைந்தார்கள். மெனு கார்ட் வந்ததும் பழக்க தோஷத்தில் யாழிக்கு பிடித்த விஷயங்களை அதிபன் ஆர்டர் செய்ய “பாஸ் அதெல்லாம் யாழிக்கு முன்னாடி பிடிச்சது, இப்ப மேடத்துக்கு பிடிச்ச விஷயங்களே வேற. இருங்க நான் அவளுக்கு ஆர்டர் பண்ணுறேன்”, என்று சொன்னவன் உணவுகளை வரிசையாக சொல்ல யாழி சிறு புன்னகையுடன் அமர்ந்திருந்தாள்.

அதிபனுக்கு தான் சட்டென்று அவமானப் படுத்தப் பட்டது போல இருந்தது. ஜான் இயல்பாக தான் அதை சொன்னான். ஆனால் அதிபனுக்கு என்னை விட ஜானுக்கு யாழியை பற்றி அதிகம் தெரிகிறது என்ற பொறாமை உணர்வு லேசாக எட்டிப் பார்த்தது.

“எப்ப இருந்து உன் டேஸ்ட் மாறுச்சி யாழி?”, என்று கேட்டான் அதிபன்.

“இங்க வந்த அப்புறம் ஜா தான் இந்த உணவு எல்லாம் டேஸ்ட்  பாக்க வச்சான் மாமா. ரொம்ப பிடிச்சது. அதுலே செட் ஆகிட்டேன்”, என்று சொன்னாள்  யாழி.

ஒரு வேளை அவள் செட் ஆனது ஜானிடமும் தானா என்ற எண்ணம் எழுந்ததும் அதில் தப்பு என்ன என்று கேட்ட மனசாட்சிக்கு பதில் சொல்ல வில்லை அதிபன்.

உணவு வந்ததும் அதிபனை தவிர மூவரும் பேசிய படியே உண்ண ஆரம்பித்தார்கள். யாழி எப்போதும் அவனுடன் பேசிய படியே தான் சாப்பிடுவாள். ஏனோ இன்று அந்த இடத்தில் ஜான் இருப்பது போல இருந்தது.

பிரகாஷ் மட்டும் அவ்வபோது நண்பனை கவனித்துக் கொண்டு தான் இருந்தான். யாழிக்கும் அதிபனுக்கும் இடையே இருக்கும் புரியாத உறவை பற்றி அவனுக்கு ஏற்கனவே தெரியும் தான். கல்லூரியில் படிக்கும் போதே “அவளை லவ் பண்ணுறியா  டா”, என்று கூட பிரகாஷ் கேட்டிருக்கிறான்.

தயக்கமே இல்லாமல் “அவ என்னோட பாப்பு டா. லவ் எல்லாம் இல்லை. அவ வயசு என்ன? என் வயசு என்ன? இனி இப்படி பேசாதே”, என்று சொல்லி விட்டு கடந்து விட்டவனின் கண்களில் இன்று பொறாமை டன்  கணக்கில் வழிந்தது.

உணவு உண்டு முடித்ததும் “நான் கை கழுவ போறேன்”, என்று சொல்லிச் சென்றாள் யாழி.

“யாழி இன்னைக்கு ரொம்ப நல்லா சாப்பிட்டா பாஸ். நான் கவனிச்சிக்கிட்டே தான் இருந்தேன்”, என்று சந்தோஷமாக சொன்னான் ஜான்.

“நீங்க யாழியை லவ் பண்ணுறீங்களா ஜான்?”, என்று பிரகாஷ் கேட்க “ஆமா பாஸ் ரொம்ப ரொம்ப”, என்றவன் “அவ கை கழுவ போனா இன்னும் காணும். என்ன ஆச்சோ தெரியலை. இருங்க நான் போய் பாக்குறேன்”, என்று சொல்லிச் சென்றான்.

“என்ன மச்சான் உன் யாழியை இவன் பைத்தியமா காதலிக்கிறான் போல”, என்று நக்கலாக கேட்டான் பிரகாஷ்.