அத்தியாயம் 10

தவறுகள் என்றுமே 

காதலில் திருத்தப்படக் 

கூடியவை தான்!!!

மருத்துவமனை என்று சொன்னதும் அனைவரும் அதிர “ஆமா இனியா, நம்ம பிரியா நர்சிங் ஹோம்ல தான் இருக்கோம். நம்ம வெண்ணிலா விஷத்தை குடிச்சிட்டா டா. டாக்டர் பாத்துட்டு இருக்காங்க”, என்றார் சரஸ்வதி. 

“என்ன மா சொல்றீங்க?”

“ஆமா டா, கொசுபத்தி லிகுய்டு இருக்குல்ல அதை தான் ரெண்டோ மூனோ குடிச்சிருப்பா போல? எப்ப குடிச்சான்னு  வேற தெரியலை. டாக்டர்ஸ் உள்ள பாத்துட்டு இருக்காங்க. நாங்க எல்லாரும் ஆஸ்பத்திரில தான் இருக்கோம். அந்த அடங்காபிடாரி யாழி மட்டும் வீட்ல இருக்கா. விஷயத்தை சொல்லியும் அவ பதட்டமே படலை டா. என்ன பிள்ளையோ? சரி நீ வா”, என்று சொல்லி விட்டு வைத்தார். 

“என்ன ஆச்சு இனியா? என்ன ஆஸ்பத்திரின்னு பேசிட்டு இருந்த? யாரு ஃபோன்ல?”, என்று கேட்டார் செழியன். 

“பெரியப்பா வெண்ணிலா விஷத்தை குடிச்சிட்டாளாம்”, என்று சொல்ல அனைவரும் பதறி தான் போனார்கள். 

அதிபனுக்குமே இது திகைப்பு தான். பெண்களும் சமையலை மறந்து பதறினார்கள். என்ன இருந்தாலும் அவர்கள் வீட்டுப் பெண் ஆயிற்றே. 

“சரி வாங்க போகலாம்”, என்று அனைவரும் கிளம்ப “அம்மா நீங்க எல்லாரும் போங்க. நான் வீட்டைப் பூட்டிட்டு  இனியன் கூட வண்டில வரேன்”, என்றான் அதிபன். 

“நீ வரலைனாலும் பரவால்ல டா. இங்கயே இரு”, என்று சொல்லி விட்டுச் சென்றார் செழியன். 

அவர்கள் போன பிறகு அறைக்குச் சென்றார்கள் இருவரும். “ரெண்டு நிமிஷம் இரு இனியா. முகம் கூட கழுவலை”, என்றான் அதிபன்.

“பரவால்ல அண்ணா, நீங்க மெதுவா ரெஃப்ரெஷ் ஆகுங்க. அவளுக்கு ஒண்ணும் ஆகாது”

“என்ன தான் டா ஆச்சு? எல்லாரும் அவளை ரொம்ப திட்டிட்டிங்களா?”

“திட்டுனோமா? நீங்க வேற? உங்களுக்கு விஷயம் தெரியாதுல்ல. இதுக்கு எல்லாம் காரணம் உங்க அருமை யாழி தான்”

“என்ன டா சொல்ற?”

“ஸ்கூல் படிக்கும் போது உங்க கூட படிச்ச பையன் உங்க சைக்கிள் டயரை பஞ்சர் பண்ணினான்னு அவன் மண்டையை உடைச்சு ஆஸ்பத்திரில படுக்க வச்சவண்ணா அவ. இப்ப கேக்கவும் வேணுமா? உங்களை அழ வச்சவங்களை சும்மா விடுவாளா? அதான் படுக்க வச்சிட்டா”

அதைக் கேட்டு அதிர்ந்து போனவன் “என்ன டா சொல்ற?”, என்றான். 

“யாழி இப்ப நம்ம வீட்ல தான் இருக்கா”, என்று சொல்ல உண்மையிலே அவனுக்கு இது இரண்டாவது அதிர்ச்சி. 

“கிளம்புங்க போற வழில எல்லாம் சொல்றேன்”, என்று சொன்னதும் அதிபனும் கிளம்ப ஆரம்பித்தான். 

நடந்த விஷயங்கள் அனைத்தையும் இனியன் கதை கதையாய் சொன்னதைக் கேட்டு உண்மையிலே அவ்வளவு அதிர்ந்து தான் போனான். அவனது அதிரடி பட்டாசு தனக்காக தன் மேல் விழுந்த பழிக்காக எப்படி ஒரு எல்லை வரை சென்றிருக்கிறாள் என்று கேட்கவே அவனுக்கு வியப்பாக இருந்தது. கூடவே சிறு கோபமும் வந்தது. எனக்காக அவ படிப்பை விட்டுட்டு வந்ததும் இல்லாம வாழ்க்கையையும் அடகு வைப்பாளா என்று எண்ணினான். 

“டேய் இனியா உண்மையிலே யாழியா டா இப்படி பண்ணது? எனக்கு அப்படியே புல்லரிக்குது டா. அதுவும் அவ வாழ்க்கையை பணையம் வைக்கிற அளவுக்கு”

“அவளுக்கு தான் உன்னை ரொம்ப பிடிக்குமே அண்ணா? உனக்காக உயிரையே கொடுப்பா. இதை செய்ய மாட்டாளா?”, என்று அவன் கேட்கும் போதே அவனது அன்னை அழைத்து வெண்ணிலாவுக்கு இப்போது ஆபத்து இல்லை என்று சொல்ல அதை அதிபனிடம் சொன்னான். 

“வண்டியை நம்ம வீட்டுக்கு விடு டா. எனக்கு யாழியை பாக்கணும்”, என்றான் அதிபன். 

“அப்ப வெண்ணிலா?”

“அவளைப் பாக்க அத்தனை பேர் இருக்காங்களே? நம்ம போய் என்ன பண்ணப் போறோம்? நீ என்னை வீட்ல விட்டுட்டு கிளம்பு”, என்றான். 

“சரிண்ணா”, என்ற படியே வீட்டுக்குச் சென்றவன் அதிபனை அங்கே விட்டுவிட்டு “நான் கிளம்புறேன். நீ வரும் போது அவளையும் கூட்டிட்டு வா”, என்று சொல்லி விட்டுச் சென்றான். 

அதிபன் உள்ளே போன போது தனது அறைக்குள் தலையை பிடித்த படி அமர்ந்திருந்தாள் யாழி. வாசலில் நிழல் ஆட நிமிர்ந்து பார்த்தவள் அங்கே நின்றிருந்த அதிபனைக் கண்டு ஒரு நொடி இன்பமாக அதிர்ந்தாலும் முகத்தை திருப்பிக்கொண்டாள். 

“பாப்பு”, என்று மென்மையாக அழைக்க “பேசாம போயிரு மாமா, செம கடுப்புல இருக்கேன்”, என்று எரிச்சலுடன் சொன்னாள் . 

“என பாப்பு குட்டிக்கு என்ன கோபம்?”, என்று கேட்ட படியே அவள் அருகே சென்று அமர்ந்தவன் அவள் கையைப் பற்றிக் கொண்டான்.

“எத்தனை தடவை உனக்கு கால் பண்னினேன்? ஒரு தடவையாவது எடுத்தியா நீ? அந்த அளவுக்கு நீ என்னை வெறுத்துட்டல்ல?”, என்று கண்ணீருடன் கேட்டாள். 

“இல்லை பாப்பு, எங்க உன் போனை எடுத்தா நீயும் என்னை தப்பா நினைச்சு..”, என்று அவன் சொல்ல வருவதற்குள் அவனை இறுக்கமாக அனைத்துக் கொண்டவள் “எந்த ஜென்மத்துலயும் உன்னை நான் தப்பா நினைக்க மாட்டேன் மாமா.  நீ என்னோட அதி மாமா. எப்பவும் தப்பு பண்ண மாட்ட”, என்றவள் ஏங்கி ஏங்கி அழுதாள். இவ்வளவு நாள் அவளிடம் இருந்த தைரியம் அனைத்தும் அவனைக் கண்டதும் மொத்தமாக போயிருந்தது. 

அவள் அழுவதைக் கண்டு அவன் கண்களும் கலங்கி தான் போனது. தன்னுடைய பெற்றோரின் நம்பிக்கையிலே ஆனந்த பட்டவன் தனது உயிரானவளின் நம்பிக்கையில் மொத்தமாக நிமிர்ந்து விட்டான்.

 

இனி அவனைப் பற்றி யார் என்ன நினைத்தால் அவனுக்கு என்னவாம்?

“நிஜமா என்னை நம்புறியா பாப்பு?”

“என்னை விட நான் உன்னை நம்புறேன் மாமா”, என்று சொன்னதும் அவன் கரங்களும் அவளை அனைத்துக் கொண்டது. 

“ஆனா உன் மேல செம கோபமா இருக்கேன் மாமா “

“எதுக்கு குட்டி?”

“எவ்வளவு தைரியம் இருந்தா என் மேல பண்ணின சத்தியத்தை மறந்து குடிச்சிருப்ப? நீ குடிச்சதுனால நான் சாக பாத்தேன் மாமா”, என்று சொன்னதும் அதிர்ந்து போனவன் “என்னை மன்னிச்சிரு டா. உனக்கு ஒண்ணுனா நான் என்ன செய்வேன். நான் அன்னைக்கு குடிச்சிருக்கவே கூடாது”, என்றவன் அன்றைக்கு நடந்ததையும் ஆதியுடன் அந்தமாக சொல்லி முடித்தான். 

எல்லாவற்றையும் கேட்டவள் அவனுக்கு வந்த ஆபத்தை உணர்ந்து அவனை பாதுகாப்பது போல அனைத்துக் கொண்டாள். 

“அன்னைக்கு மட்டும் உன்னோட ஞாபகம் வரலைனா நான் இன்னைக்கு இல்லை டி”

“அப்படிச் சொல்லாத மாமா. நான் இருக்குற வரைக்கும் உனக்கு ஒண்ணும் ஆகாது”, என்று சொன்னதும் அவளுடைய காயங்களை பரிசோதித்தான். 

“சரி டி, அப்புறம் கேக்கணும்னு நினைச்சேன். எதுக்கு அப்படி செஞ்ச? இப்ப பாரு உன்னால அந்த பொண்ணு ஆஸ்பத்திரில இருக்கா. வருணை எதுக்கு கல்யாணம் பண்ணிக்க போறேன்னு சொன்ன பாப்பு?”

“செத்தா சாகட்டும் மாமா. உன்னை கஷ்டப் படுத்தினவளை இதோட விட்டேன்னு நினைச்சிக்கோ”, என்று சொன்னவளுக்கு இப்போதும் வெண்ணிலா மேல் பரிதாபம் வரவில்லை. 


“அவ தான் புத்தி கெட்டு பண்ணினா நாமளும் அப்படி செய்யனுமா டா? என்னை அசிங்க படுத்தணும்னு நினைச்சா. எனக்கு ஒரு நாள் தான் அவமானம். ஆனா அவ தான் இப்ப பெருசா அசிங்க பட்டு நிக்குறா. ஆயுசு முழுக்க அவ மனசுல அது உறுத்த தான் செய்யும். ஆனா அவளும் அவளோட காதலுக்காக தான் செஞ்சா. எவ்ரி திங்க் இஸ் ரைட் இன் லவ் அண்ட் வார் டா பாப்பா. அவ வாழ்க்கையை நீ கெடுக்க கூடாது”

“இல்லை நான்.. “

“நீ என்னோட யாழி, எனக்கு பிடிச்சது மட்டும் தான் செய்யணும்? பிளீஸ் டா”

“சரி மாமா, நான் இப்ப என்ன செய்யட்டும்?”

“வா முதல்ல வருணையும் அவங்க அம்மாவையும் பாப்போம்”, என்று சொன்னவன் அவளை அழைத்துச் சென்றான். அப்போதும் அவனது காரை எடுக்காமல் அவளது வண்டியிலே அழைத்துச் சென்றான். 

முதலில் ஆபீஸ் சென்று வருணை தான் பார்த்தார்கள். வெண்ணிலா விஷயம் கேள்வி பட்டு அவன் கண்கள் கலங்கியது. “அவ செஞ்சது தப்பு தான். எனக்கு கோபம் நிறைய இருக்கு. ஆனா அவ சாகுறதை எல்லாம் என்னால பாத்துட்டு இருக்க முடியாது. எனக்கு அவளை ரொம்ப பிடிக்கும் அதிபன் அண்ணா. பிளீஸ் எனக்காக அவளை மணனிச்சிருங்க”, என்றான் வருண். 

“அதெல்லாம் அவளுக்கு ஒண்ணும் ஆகாது வருண் மாமா. உங்களை பாத்தாலே அவ சரி ஆகிருவா. எங்க நீங்க கிடைக்க மாட்டீங்களோன்னு தான் அவ பயந்துட்டா”, என்றாள் யாழி. 

அவள் சாதாரணமாக பேசவும் “உனக்கு உங்க அக்கா மேல இருந்த கோபம் போயிருச்சா மா?”, என்று கேட்டான் வருண். 

“என் மாமாவுக்கே அவ மேல கோபம் இல்லை. அப்புறம் எனக்கு எதுக்கு வரப் போகுது?”, என்று அவள் கேட்க அவன் தான் நே என்று விழித்தான். 

நேத்து கல்யாணம் பற்றி அவ்வளவு பேசியது என்ன? இப்போது என்னவென்றால் இப்படி சொல்கிறாள் என்று எண்ணியவனுக்கு யாழி அதிபன் மீது வைத்திருக்கும் அன்பை எண்ணி வியப்பாக இருந்தது. அவன் அறியாதது யாழியின் உலகம் அவளது மாமனைச் சுற்றியே சுழலும் என்பது தான்.