அவரின் மனைவி சத்யாவதி ஒரு நச்சுப்பாம்பு. அதனால் முடிந்த அளவு அதை சீண்டாமல் ஒதுங்கியே சென்று விடுவார். அவரின் மனப் போராட்டம் யாருக்குமே தெரியாமல் போனது தான் அங்கே பரிதாபம். மற்றவர்களைப் பொறுத்த வரைக்கும் சேகர் அன்பானவர், அதிகம் பேச தெரியாதவர், நல்லவர், அமைதியானவர் என்பது தான்.
ஆனால் அவருக்குள் இருக்கும் ஆசை அளவிட முடியாதது. பிள்ளைகளுடன் சேர்ந்து சிரித்து விளையாட அவருக்கு அவ்வளவு ஆசை. ஆனால் அவர் ஆசை அனைத்தும் கனவாகவே சென்று கொண்டிருக்கிறது சத்யாவதி என்ற ஒரு ஜீவனால்.
வீட்டுக்கு ஒருவர் தப்பி இருப்பார் என்பார்களே அது போன்ற குணமுடையவர் தான் சத்யாவதி. திருமண வீட்டில் மட்டுமல்ல சாவு வீட்டில் கூட தனக்கு தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று நினைப்பார்களே அப்படி ஒரு குணம் அவருக்கு. இந்த தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் வெண்ணிலா மற்றும் விஷ்வா.
வெண்ணிலா இன்ஜினியரிங் முடித்து விட்டு ஒரு தனியார் கம்பெனியில் பணிபுரிகிறாள். அவளது குணம் முற்றிலும் வேறு மாதிரி. அவளை நல்லவளா கெட்டவளா என்று கணிக்கவே முடியாது. அவளது அம்மா குணம் அப்படியே அவளுக்கு உண்டு. ஆனால் அவள் அன்னை மனதில் உள்ளதை மூர்க்கமாக அப்படியே வெளியே காட்டி விடுவார். ஆனால் இவள் உள்ளுக்குள் வைத்து தகுந்த நேரத்தில் வெளிப்படுத்தி காரியம் சாதிப்பவள். மொத்தத்தில் சுயநலவாதி.
வெண்ணிலாவின் தம்பி விஷ்வா, அவனும் இன்ஜினியரிங் முடித்து விட்டு அதிபன் மற்றும் இனியனுடன் சேர்ந்து தொழில் செய்து வருகிறான். அந்த குடும்பத்தில் கொஞ்சம் வெகுளியானவன். அம்மா சொல் படி நடக்கும் பிள்ளை. ஆனால் தன்னுடைய அன்னையே ஆனாலும் அந்த குடும்பத்தில் உள்ள யாரையாவது குறை சொன்னால் மட்டும் சரியென்று தலையாட்டாமல் அமைதியாக கடந்து சென்று விடுவான். அந்த விஷயத்தில் மட்டும் அன்னையின் குரலுக்கு அவனிடம் மதிப்பு இருக்காது.
வேணு கோபாலனின் கடைசி மகள் சௌந்தர்யா, அவரின் கணவர் விஷ்ணுவர்தன். சவுந்தர்யா பெயரில் மட்டும் அல்ல அழகிலும் சௌந்தர்யா தான். குணத்தில் சொக்கத்தங்கம் என்று கூட சொல்லலாம். அவரது அழகைக் கண்டு காதல் கொண்டு விரும்பி பெண் கேட்டு போராடி தான் விஷ்ணுவர்தன் திருமணம் செய்தார்.
விஷ்ணுவர்தன் தன்னுடைய மனைவியின் மீது உயிரையே வைத்திருக்கும் இயல்பான ஒரு மனிதர். ரயில்வேயில் லோக்கோ பைலட்டாக பணி புரிகிறார்.
அவர்களின் ஒரே ஒரு செல்ல மகள் யாழி. இந்த கதையின் நாயகி, அதிபனின் பாப்பு. எம்.பி.பி.எஸ் முடித்து விட்டு இப்போது அமெரிக்காவில் மேற்படிப்பு படிக்கச் சென்றிருக்கிறாள்.
யாழியின் அன்னை சவுந்தர்யா உண்மையிலே அந்த வீட்டின் தேவதை தான். சௌந்தர்யாவுக்கு யாராலும் கெடுதல் நினைக்க முடியாது ஒருவரைத் தவிர. அது அவரது அக்கா சத்யாவதி தான். தன்னை விட அழகாக இருக்கும் தங்கையை இப்போது என்று அல்ல சிறுவயதில் இருந்தே அவருக்கு பிடிக்காது. தனக்கு ஒன்று வேண்டும் என்றால் அதை தங்கையிடம் இருந்து அடித்து பறித்து சந்தோஷபட்டுக் கொள்ளும் சதிகாரி தான் சத்யாவதி.
சௌந்தர்யா மற்றும் விஷ்ணுவின் காதலுக்கு பிறந்த யாழி தான் அந்த வீட்டின் குட்டி இளவரசி. அந்த வீட்டின் ஆணிவேர் அவள். அத்தனை பேருக்கும் அவளைப் பிடிக்கும். அவளை பிடிக்காதவர்கள் சத்யாவதி மற்றும் அவரது மகள் வெண்ணிலாவுக்கு தான்.
யாழி என்று அவளுக்கு பெயர் வைத்தது அதிபன் தான். அவள் பிறந்த போது அவனுக்கு ஒன்பது வயது. மற்ற பிள்ளைகள் அனைவரும் எட்டு, ஏழு, ஆறு என்ற வயதில் இருக்க இவள் மட்டுமே கைக்குழந்தை என்பதால் அனைவருக்கும் உயிர் என்று சொல்லலாம்.
அவள் கேட்டது நினைத்தது அனைத்தும் அவளுக்கு கிடைக்கும் படி அதிபன் பார்த்துக் கொள்வான். ஆனால் அவளிடம் இருந்து வெண்ணிலா பறித்துக் கொள்வாள். இவளும் விட்டும் கொடுத்து விடுவாள். ஆனால் யாழி தன்னுடைய அன்னை சௌந்தர்யா போல ஏமாளி அல்ல.
வெண்ணிலா என்ன கேட்டாலும் அதை யாழி கொடுத்து மற்றவரிடம் நல்ல பெயரையும் பெற்றுக் கொள்வாள். அதே நேரம் அவள் ஆசைப்பட்ட பொருளை ஒன்றுக்கு இரண்டாக வாங்கிக் கொள்ளவும் செய்வாள்.
“வெண்ணிலா இப்படி அடம் பிடிக்கிறது நல்லது அல்ல. யாழி எப்படி விட்டுக் கொடுத்து போறா. நீ மட்டும் எதுக்கு இப்படி இருக்க?”, என்று வெண்ணிலாவுக்கு திட்டு விழும். அதே நேரம் யாழிக்கு தாத்தா, இரண்டு மாமா, பெரியப்பா, அப்பா என அனைவரும் அதே பொருளை வாங்கிக் கொடுப்பார்கள்.
வெண்ணிலாவுக்கு தான் இப்போது ஜெயிச்சது நானா இல்லை அவளா என்று தோன்றும். அந்த அளவுக்கு அவளுடைய அக்காவை மண்டை காய விடுவாள் யாழி. அந்த வீட்டில் அவளுக்குச் செல்லம் அதிகம். அதுவும் அதிபன் அவளுக்கு கொடுக்கும் செல்லம் அளவிட முடியாதது.
அவள் மனதில் நினைத்தாலே அவன் அவளுக்கு வாங்கிக் கொடுத்து விடுவான். அவனுக்கு யாழி என்றால் உயிர். அவள் சவுந்தர்யாவின் வயிற்றில் இருக்கும் போதே பாப்பா பாப்பா என்று உயிரையே விடுவான். அந்த இன்பு இப்போது வரை அதிகமாக தான் ஆகி இருக்கிறது.
இது தான் வேணுகோபாலனின் குடும்பம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம் என்றாலும் இது நாள் வரை அனைவரும் ஒற்றுமையாக தான் இருந்தார்கள்.
இப்போது நான்கு நாட்களுக்கு முந்தைய நிகழ்வுகளை எண்ணி தான் அதிபன் வருத்ததில் இருந்தான். ஆனால் அதற்கான ஆரம்ப புள்ளி ஒரு வருடத்திற்கு முன்பே அவனது தாத்தா வேணு கோபாலனால் போட பட்டு விட்டது.
சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு அன்று காலையில் அதிபன் அலுவலகம் செல்வதற்காக தன்னுடைய அறையில் கிளம்பிக் கொண்டிருந்தான்.
அப்போது அவனது அறைக்குள் வந்தார் அவனது அன்னை புவனா. “குட் மார்னிங் மா”, என்று அன்னையைக் கண்டு புன்னகைத்தான் அதிபன்.
“குட் மார்னிங் டா அதிகண்ணா. இந்தா உனக்கு பால் எடுத்துட்டு வந்தேன். குடி”
“நீங்க ஏன் மா மேல வந்தீங்க? நான் தான் வந்துருப்பேன்ல”
“நீ கீழ வந்ததும் நேரா டிபன் சாப்பிட ஓடிருவ. இன்னும் தான் அரை மணி நேரம் இருக்கே. அதுக்குள்ள பால் செமிச்சிரும். குடி”
“என் செல்ல அம்மா பேச்சை மீற முடியுமா? குடுங்க”, என்ற படியே வாங்கிக் குடித்தான்.
“கண்டிப்பா போகலாம் மா. நீங்க ஆசைபட்டா அந்த நிலவுக்கே கூட கூட வருவேன்”, என்று புன்னகைத்தான் அதிபன்.
“போடா அரட்டை”
“மாமா கிட்ட பேசுனீங்களா மா. ராதிகா, அத்தை எல்லாம் எப்படி இருக்காங்க?”
“நல்லா இருக்காங்க டா. ராது குட்டி கூட பேசினா. அதான் பாத்துட்டு வரலாம் போல தோணுது”, என்று சொன்ன புவனாவின் குரலில் பெருமிதம் வழிந்தது.
“எம்மாடியோ பிறந்த வீட்டைப் பத்தி பேசின உடனே உன் முகம் எப்படி டால் அடிக்குது”, என்று அன்னையை கிண்டல் அடித்தான் அதிபன்.
“என்ன டா என் பொண்டாட்டியை கிண்டல் பண்ணிக்கிட்டு இருக்க?”, என்ற படி அங்கு வந்தார் செழியன்.
“அப்பா, நான் ஒண்ணும் உங்க பொண்டாட்டியை கிண்டல் பண்ணல. அவங்க தான் இப்ப வானத்துல பறக்காங்க”
“எதுக்காம்? என் பொண்டாட்டி அவ்வளவு சந்தோஷமா இருக்காளா ? எனக்கு தெரியாம போச்சே?”
“சன்டே மாமா வீட்டுக்கு போறோம்ல? அதான்”
“அடப்பாவி சன்டே வரதுக்கு இன்னும் அஞ்சு நாள் இருக்கு டி”, என்றார் செழியன்.
“இப்ப தெரியுதா நான் எதுக்கு அம்மாவை கிண்டல் பண்னேன்னு”, என்று அவன் கேட்டுக் கொண்டிருக்க “பாத்தீங்களா என்னை விட்டுட்டு குடும்ப மாநாடு நடக்குது. இது தப்பாச்சே, நானும் இந்த சங்கத்துல ஒருத்தி தான் பா. என்னை விட்டுட்டு எந்த முடிவும் நீங்க எடுக்க கூடாது. நான் இதை வன்மையாக கண்டிக்கிறேன் மாமா”, என்ற படி உள்ளே வந்த யாழி செழியனின் தோளைக் கட்டிக் கொண்டாள்.
“நீயில்லாமையா ராஜாத்தி, சும்மா உங்க அத்தையை ஓட்டிட்டு இருக்கோம் டா”, என்று செழியன் சொல்ல “அது எப்படி நீங்க என் செல்ல அத்தையை கிண்டல் பண்ணலாம், அத்தை இவங்களை பழி வாங்கலாமா?”, என்று கேட்ட யாழி இப்போது புவனாவைக் கொஞ்ச “வேண்டா டா கண்ணு. பாவம் பாத்து மன்னிச்சி விட்டுறலாம்”, என்றார் புவனா.
“நீங்க உங்க பிள்ளையை கூட விட்டுக் கொடுப்பீங்க, உங்க காதல் கணவரை விட்டுக் கொடுப்பீங்களா?”, என்று யாழி சலித்துக் கொள்ள “என் பிள்ளையை விட்டுக் கொடுத்தா அவனுக்கு நீ இருக்க. என் புருஷனுக்கு யார் இருக்காங்களாம்?”, என்றார் புவனா.
“ஏன் நான் இல்லையா? நான் என் மாமாவை பாத்துக்க மாட்டேனா? பாருங்க மாமா”, என்று அவள் சிணுங்க “அவளை விடு யாழி மா. ஆனா அடிச்சாலும் புடிச்சாலும் எனக்கு என் பொண்டாட்டி தயவு போதும்”, என்று செழியன் சொல்ல “ஹா ஹா இப்ப ஒருத்தி பெரிய தொப்பி வாங்கிட்டா பா”, என்று சிரித்தான் அதிபன்.
அவனை முறைத்த யாழி “சரி அதை எல்லாம் விடுங்க. நான் வரதுக்கு முன்னாடி எல்லாரும் என்ன பேசிட்டு இருந்தீங்க?”, என்று கேட்டாள்.
“அம்மா சொல்லாதீங்க”, என்று அதிபன் கண்ணை காட்டியதைக் கவனிக்காமல் “எங்க அண்ணன் வீட்டுக்கு சன்டே போகலாம்னு இருக்கோம் டா. அதை தான் பேசிட்டு இருக்கோம்”, என்றார் புவனா.
“போச்சு டா”, என்று அதிபன் தலையில் கை வைக்க “அங்கயா. எதுக்கு இப்ப அங்க போகணும்? சரி அத்தை, நீங்களும் மாமாவும் போய்ட்டு வாங்க. அதி மாமா வர மாட்டான்”, என்றாள் யாழி.
அதில் புவனா முகம் வாட அதைக் கண்டாலும் “நான் போகலை பாப்பு. அம்மா அப்பா தான் போறாங்க”, என்றான் அதிபன்.
“என் அதி மாமானா மாமா தான். சரி எல்லாரும் வாங்க. நான் கீழ போறேன்”, என்று விட்டு யாழி சென்றதும் புவனா முகம் ஒரு மாதிரி இருக்க “என்ன புவி மா?”, என்று கேட்டார் செழியன்.
“இப்ப தான் உங்க பையன் அந்த நிலாவுக்கு கூட என் கூட வருவேன்னு சொன்னான். இப்ப அதுக்குள்ள வர மாட்டேனு சொல்றான். எங்க அண்ணன் வீட்டுக்கு போகலாம்னு இருந்தேன். இப்ப இவன் வரலைனா நானும் போக வேண்டாம்”, என்று சொல்ல தன்னுடைய அன்னையின் தோளில் சாய்ந்த அதிபன் “கண்டிப்பா நாம மாமா வீட்டுக்கு போகலாம் மா. இப்ப அவ முன்னாடி கண்டிப்பா போவோம்னு சொல்லியிருந்தா அதை பாப்பு தாங்கிக்க மாட்டா மா. அவ கிட்ட நானே பொறுமையா சொல்லிக்கிறேன். அவளுக்கு ராதிகாவை கண்டாலே ஆகல. அதான்”, என்றான்.