அத்தியாயம் 1 

சின்ன சின்ன காயங்களை

கூட மென்மையாக வருடிச்

செல்கிறது காதல்!!!

தன்னுடைய அறையில் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் முடங்கிப் போய் அமர்ந்திருந்தான் அதிபன். அவன் மனது அதீத மன அழுத்தத்திற்குச் சென்று கொண்டிருந்தது. தாய் தந்தைக்காக தன்னை சாதாரணமாக காட்டிக் கொண்டாலும் உண்மையில் அவன் அப்படி இல்லை.

நடந்ததை எண்ணி பெரும் மன உழைச்சலில் இருந்தான். அப்போது அவனது மொபைல் நான் இருக்கிறேன் என்று சத்தம் கொடுக்க அவன் கவனம் அதற்கு தாவியது. அதில் ‘யாழி பேபி’ என்ற பெயர் மின்ன அதைக் கண்டு அவன் கண்கள் கண்ணீரை சிந்தியது. அவளிடம் பேசினால் தனது மனபாரம் குறையும் என்று அவனுக்கு தெரியும். ஆனால் அவள் மனதை வேதனைப் படுத்த அவன் விரும்ப வில்லை.

இப்போது அவளிடம் பேசினால் தன்னுடைய மன அழுத்தங்கள் அனைத்தையும் அவளிடம் இறக்கி வைத்து விடுவோம் என்று பயந்து போனான். கடல் கடந்து படித்துக் கொண்டிருப்பவளை கவலை கொள்ள செய்ய அவன் விரும்ப வில்லை. கூடவே அவளும் தன்னை மற்றவர்கள் போல தவறாக எண்ணி விடுவாளோ என்ற பயமும் அவன் போனை எடுக்காததற்கு காரணம்.

“மாமா போனை எடு டா”, என்று போனைப் பார்த்துக் கத்தி கொண்டிருந்தாள் அவனின் அத்தை மகள் யாழி. அவள் அழைத்தால் முதல் அழைப்பிலே போனை எடுப்பவன் இப்போது தவிர்க்கவும் அவளுக்கு இருப்பு கொள்ள வில்லை.

அவன் எடுக்காததால் அவள் முகம் சுருங்கிப் போனது. தன்னுடைய அதி மாமா தன்னை தவிர்க்கிறானா என்று எண்ணி சோர்ந்து போனாள். அவள் அருகில் அமர்ந்திருந்த இனியன் “என்ன ஆச்சு டி?”, என்று கேட்டான்.

“மாமா போனை எடுக்கலை இனியா. எனக்கு ரொம்ப கவலையா இருக்கு. அவனுக்கு அப்படி நடந்திருக்க கூடாது. நமக்கு உடனே ஃப்ளைட் டிக்கட் புக் பண்ணு, நாம இப்ப மாமா கூட இருக்கணும்”, என்றாள்.

“ஏய் பைத்தியமா நீ, இன்னும் ரெண்டு வாரத்துல உனக்கு எக்ஸாம் இருக்கு. இப்ப அங்க அலைஞ்சா உன் படிப்பு என்ன ஆகும்?”, என்று கேட்ட இனியனுக்கும் அதிபன் அண்ணனை எண்ணி கவலை தான்.

“ஆமா யாழி, இனியன் மாமா சொல்றது சரி தான். உன் படிப்பும் முக்கியம். நானும் மாமாவும் வேணும்னா கிளம்பி போய் அதிபன் மாமாவை பாத்துக்குறோம்”, என்றான் அவர்கள் அருகே இருந்த விஷ்வா.

“அங்க ஒருத்தனை உயிரோட கொன்னு அனுப்பிருக்காங்க டா. என்னால எப்படி டா இங்க இருந்து வேடிக்கை பாக்க முடியும்?”, என்று விஷ்வாவிடம் சொன்ன யாழி இனியன் புறம் திரும்பி “உன் அப்பா மட்டும் என் கையில கிடைச்சா என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது. அவர் மனசுல எவ்வளவு வஞ்சம் இருந்திருந்தா என் மாமாவை கை நீட்டி அடிச்சிருப்பாரு. எனக்கு வர ஆத்திரத்துக்கு. கேக்க ஆள் இல்லைன்னு நினைச்சிட்டாங்களா? எல்லாரையும் அங்க போய் பாத்துக்குறேன். இப்ப உடனே டிக்கட் போடு”, என்று பட்டாசாய் வெடித்தாள். கோபத்தில் அவள் முகம் செங்கொழுந்தாக சிவந்து போனது.

“சரி இன்னும் ரெண்டு நாள்ல டிக்கட் இருக்கான்னு பாக்குறேன்”, என்று சமாதானமாக சொன்னான் இனியன்.

“ரெண்டு நாள்ல இல்லை. இன்னைக்கே இருக்கான்னு பாரு. அதுவும் இப்பவே”, என்று சொன்னவளின் உறுதி அவனையே திகைக்க வைத்தது.

உடனே அவன் டிக்கட்டை சோதனை செய்ய இயற்கையோ வேறு மாதிரி அவளை தடை செய்தது. பனிப் பொழிவின் காரணமாக ஒரு வழியாக நான்கு நாட்கள் கழித்தே அவர்களால் கிளம்ப முடிந்தது.

இந்தியாவை நோக்கி பயணம் செய்த யாழியின் மனமோ அதிபனிடமே இருந்தது. அவளுடன்  இனியன் மற்றும் விஷ்வா இருவரும் இருந்தார்கள். அவர்கள் இருவருக்கும் நடந்ததை எண்ணி வருத்தம் தான் என்றாலும் இனி நடக்க போவதைப் பற்றியும் பயமாக இருந்தது.

            யாழி அவளுக்கு என்ன ஆனாலும் பொறுத்துக் கொள்வாள். ஆனால் அதிபனுக்கு ஒன்று என்றால் யாரையும் சும்மா விடவே மாட்டாள் என்று அவர்களுக்கு தெரியுமே.

அவர்கள் பிளைட்டில் அமர்ந்திருந்த அதே நேரம் அவர்களின் எண்ணங்களுக்கு காரணமான அதிபனும் தன்னுடைய வாழ்க்கையில் இது வரை நடந்ததைப் பற்றி தான் நினைத்துக் கொண்டிருந்தான்.

சென்னை திருவான்மியூரில் பணக்காரர்கள் வசிக்கும் தெருவில் அமைந்திருந்தது அந்த இரண்டு மாடிகள்  கொண்ட  அழகிய வீடு. காம்பவுண்ட் வாசலின் வெளியே ‘கோமதி இல்லம்’ என்ற பெயர் பலகை பதிக்கப் பட்டிருந்தது.

            கம்பவுண்டின் மத்தியில் அழகிய வீடு இருந்தாலும் சுற்றி அழகிய தோட்டம் அந்த வீட்டை சூழ்ந்திருந்தது. வீட்டின் உள் வேலைக்கு வெளி ஆட்களை வேலைக்கு வைக்காமல் போனாலும் வாயிலில் காவலாளியும் தோட்டத்தில் இரண்டு ஆண்களும் வேலைக்கு இருந்தார்கள்.

அந்த வீட்டின் உரிமையாளர் வேணுகோபாலன், அவர் மனைவி கோமதி. கோமதி இறந்து ஐந்து வருடங்கள் ஆகிறது. மனைவியை பறிகொடுத்தாலும் அவருக்கு ஆறுதலாக இருப்பது அவரின் குடும்பம் தான். இந்த தம்பதிக்கு இரண்டு ஆண்கள், இரண்டு பெண்கள் என நான்கு பிள்ளைகள். செழியன், தண்டாயுதபாணி, சத்யாவதி மற்றும் சௌந்தர்யா.

நான்கு பிள்ளைகளுமே தங்களின் துணை மற்றும் பிள்ளைகளுடன் அதே வீட்டில் தான் வசித்து வருகிறார்கள். அனைவரும் இருப்பதற்கேற்ப மிக பெரியதாக தான் அந்த வீட்டை வேணு கோபாலன் கட்டி இருந்தார். கூடவே வீட்டு மாப்பிள்ளைகளையும் அன்பைக் காட்டி அதே வீட்டில் கட்டிப் போட்டிருந்தார். கீழே ஏழு அறைகளும் மாடியில் ஐந்து அறைகளும் அந்த வீட்டில் உண்டு.

தங்களின் காலத்துக்கு பிறகும் தங்களின் பிள்ளைகள் ஒற்றுமையாக ஒரே வீட்டில் இருக்க வேண்டும் என்ற கோமதியின் ஆசையை அவர் உயிரோடு இருக்கும் போதே நிறைவேற்றி வைத்தார் வேணுகோபாலன். இது வரை அனைவரும் ஒற்றுமையாக தான் இருந்தார்கள். ஆனால் இனியும் இருப்பார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

பிள்ளைகள் ஒற்றுமையாக இருப்பதை பார்த்து விட்டே கோமதி இவ்வுலகை விட்டுச் சென்றார். வேணு கோபாலனுக்கும் அந்த பாக்கியம் கிடைக்குமா?

மனிதர்கள் நினைப்பது அனைத்தும் நிறைவேற வேண்டும் என்று இல்லையே. செத்த பிறகு என்ன? அவர் இருக்கும் போதே அந்த குடும்பம் தூள் தூளாக சிதறிப் போகும் என்று அவர் கனவா கண்டார்? மனைவி ஆசை நிறைவேறியது. ஆனால் அவர் ஆசை நிராசையாக தான் போகப் போகிறது. விதியை யாராலும் மாற்ற முடியாது. நடப்பதை அப்படியே ஏற்றுக் கொள்ள தான் வேண்டும்.

வேணு கோபாலனின் மூத்த மகன் செழியன். பொறுப்புகளை ஏற்றுக் கொள்வதாகட்டும் என்ன நடந்தாலும் பொறுமையாக இருப்பதாகட்டும் அவருக்கு நிகர் அவர் மட்டுமே. குடும்பத்திற்கு மூத்தவர் என்பதால் அவரே குடும்ப பொறுப்பை ஏற்றுக் கொண்டார். தொழிலில் தந்தைக்கு இணையாக வளர்ந்து நிற்பவர். மனைவி மற்றும் மகன் மேல் உயிரையே வைத்திருந்தார்.

செழியனின் மனைவி புவனா. அவருக்கு ஏற்ற துணைவி. கல்லூரி படிக்கும் போதே புவனாவை காதலித்து பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் புரிந்தார் செழியன். புவனாவும் அவர் தான் வேண்டும் என்று அனைத்தையும் உதறி தள்ளி விட்டு வந்தவர் தான்.

ஆரம்பத்தில் இரண்டு குடும்பத்திலும் அவர்களை ஏற்றுக் கொள்ளாததால் அவர்களின் வாழ்க்கை கொஞ்சம் போராட்டமாக இருந்தாலும் அதை தைரியமாக எதிர் கொண்டனர். எந்த இறக்கமான சூழ்நிலையிலும் அவர்கள் காதல் குறையவே இல்லை. பிறப்பில் பணக்காரராக இருந்தாலும் மனைவிக்காக எந்த வேலையையும் செய்து அவளை மகாராணி போல தான் வைத்திருந்தார்.

அவர்களின் காதல் வாழ்க்கைக்கு சாட்சியாக பிறந்த அவர்களின் தவப்புதல்வன் தான் அதிபன். அவன் பிறந்ததும் இரண்டு குடும்பமே அவர்களை ஏற்றுக் கொண்டனர். வீட்டுக்கு மூத்த பேரன் என்ற உரிமையுடன் வேணுகோபாலன் வீட்டில் வலம் வந்தான் அதிபன்.

அதிபன் அமெரிக்காவில் எம்.பி.ஏ முடித்து விட்டு குடும்ப தொழிலான மீன் பொருட்கள் ஏற்றுமதி தொழிற்சாலையை தன்னுடைய தம்பி இனியன் மற்றும் அத்தை மகன் விஷ்வாவுடன் இணைந்து திறம் பட செய்து கொண்டிருக்கிறான். அழகானவன், அன்பானவன், அதே நேரம் அளப்பரிய திறமையும் கொண்டவன். இந்த கதையின் நாயகன் அதிபன் தான். ஆறடி உயரம், அலையலையான தலைமுடி, அழுத்தமான உதடுகள், அதன் மீது கச்சிதமான மீசை, கட்டுக்கோப்பான உடல் தேகம் என அழகாகவே இருக்கும் கட்டிளங்காளை.

வேணு கோபாலனின் இரண்டாவது மகன் தண்டாயுதபாணி, அவர் மனைவி சரஸ்வதி. அவர்களின் பிள்ளைகள் இனியன் மற்றும் இலக்கியா. தண்டாயுதபாணிக்கு கொஞ்சம் பேராசை அதிகம். அதனால் அண்ணன் செழியன் மற்றும் அண்ணன் மகன் அதிபன் மேல் சிறிது கடுகடுப்பு உண்டு. தன்னுடைய தந்தை அவர்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கிறார் என்ற கடுப்பு அவருக்கு உண்டு.

அதை வெளிய காட்டி விட முடியாது அந்த வீட்டில். ஆனாலும் அவர் குணம் அனைவருக்கும் தெரிய தான் செய்யும். அவர் மனைவி சரஸ்வதியும் கணவருக்கு நிகரே. அந்த வீட்டில் மூத்த மருமகளாக அதிகாரம் செய்ய முடிய வில்லையே என்ற ஏக்கம் உண்டு. புவனாவுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் தனக்கு இல்லை என்ற எண்ணம் அவருக்கும் உண்டு.

இனியன் அதிபனுடன் சேர்ந்து தொழிலைக் கவனித்துக் கொள்கிறான். அவனுக்கு பேராசை என்று எதுவும் கிடையாது. கடைசி வரை அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் அவ்வளவு தான்.  மற்ற படி அவனுடைய அண்ணன் அதிபன் சொன்னால் அது அவனுக்கு வேத வாக்கு.

அவனின் இந்த குணம் தான் அவனது பெற்றோருக்கு பிடிக்காது. ‘எதற்க்கெடுத்தாலும் அதிபனிடம் போய் நிற்காதே’ என்று அவர்கள் எவ்வளவு ஓதினாலும் அவன் ‘அதி அண்ணா’ என்று தான் போய் நிற்பான்.

அவனது தங்கை இலக்கியாவிற்கு திருமணம் ஆகி ஒரு வருடம் தான் ஆகிறது. அவளுக்கு ஒரு மகளும் இருக்கிறாள்.  இலக்கியா இப்போது அவளது கணவருடன் புதுச்சேரியில் இருக்கிறாள். அவளது கணவன் தனசேகர் அங்கே ஆசிரியராக பணிபுரிகிறான். அழகும் அன்பும் கொண்ட நல்லவன். அவனுக்கு உடன் பிறந்தவர்கள் யாரும் இல்லாததால் அவனது பெற்றோர் மருமகளை மகளாக தான் தாங்குகிறார்கள்.

 இலக்கியாவும் அன்னையைப் போன்று பொறாமை உணர்வு கொள்ளாமல் கணவர் மேல் கொண்ட அதே அளவு அன்பை அவனது பெற்றோரிடமும் காட்டி அவளது புகுந்த வீட்டில் இளவரசியாக வலம் வருகிறாள். அனைவருக்கும் இப்படிப் பட்ட வாய்ப்புகளும் வாழ்க்கையும் கிடைப்பதில்லை. ஆனால் இலக்கியாவிற்கு கிடைத்திருந்தது.

வேணுகோபாலனின் மூன்றாவது மகள் சத்யாவதி, அவர் கணவர் சேகர். சேகர் நல்ல மாதிரி தான். மாமியார் வீட்டில் இருந்தாலும் அவர் ஒரு போலீஸ் அதிகாரி. ஆம் காவல் துறையில் பெரிய பதவியில் தான் இருக்கிறார். அந்த வீட்டில் இருக்கும் அனைவரிடமும் அன்பாக இருப்பார். ஆனால் அவர் வெறுக்கும் ஒரு ஆள் உண்டு என்றால் அது அவரின் மனைவி சத்யாவதி தான்.

ஆம் அந்த வீட்டில் பாவபட்ட பிறவி சேகர் தான். என்ன தான் போலீஸ் அதிகாரியாக இருந்தாலும் அவரின் கம்பீரம் ஆளுமை அனைத்தும் வீட்டுக்கு வெளியே தான். வீட்டுக்குள் அதுவும் மனைவியிடம் அவருடைய ஆளுமையை  காட்டி விட முடியாது. அப்படி காட்டினால் அவர் தான் அசிங்கப்பட்டு நிற்பார்.