Advertisement

அத்தியாயம் ஒன்பது :

“என்ன பெண் பார்க்க வருகிறார்களா? அதன் பின் நிலை கொள்ளவில்லை வாசுதேவனுக்கு.. அவன் முன் காதல் சொல்ல முடியாமல் நின்ற காரணங்கள், அவனின் பொறுப்புகள், எல்லாம் பின்னுக்கு ஓடி விட்டன.

தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியவில்லை.. எப்படியாவது பார்த்தே ஆகவேண்டும் என்று ஆவல் உந்த,

பெண் பார்க்க மாலையில் தானே வருவார்கள் என்று தோன்ற, பாட்டியிடம் பேசி, ஒரு காரணத்தை உருவாக்கி, அத்தையைப் பார்க்க செல்வது போல ஜனனியின் வீட்டிற்கு ஒரு பன்னிரண்டு மணி போல சென்றான்.

ஹோட்டலில் வேலை செய்யும் ஒரு பையனை ஜனனியின் வீட்டில் விடச் சொல்லி அவனோடு வந்தான்.

ஆம்! வாசுவிடம் பைக் கிடையாது, அதையும் விட அவனுக்கு அதை ஓட்டவும் தெரியாது. ஒரு முறை பழகச் சென்ற போது, அவனின் நேரமோ என்னவோ முதல் நாளே தடுமாறி விழுந்து விட்டான்.

நெற்றியில் சிறிது காயமும் ஆகிவிட, அதன் கொண்டு ஸ்வாதி அன்று மிகவும் டென்ஷனாகி விட்டார். பைக் ஆக்சிடண்டில் தலையில் அடிபட்டு தான் வாசுவின் தந்தையின் நிலை இப்படி ஆகிவிட்டது. அந்த நினைவுகள் ஒரு பெரும் பயத்தைக் கொடுக்க, அதன் பிறகு வாசுவை பைக் கற்று கொள்ள விடவில்லை.

அம்மாவிற்குத் தெரியாமல் கற்று கொள்ளலாம் தான், தடுப்பவரோ அம்மாவிடம் சொல்பவரோ யாரும் கிடையாது தான். ஸ்வாதிக்கு பிடிக்காத எதையும் செய்து பழக்கம் இல்லாத காரணத்தால் வாசு இன்னம் அதைப் பற்றி யோசித்ததில்லை.

அம்மாவிற்குத் தன்னால் ஒரு சிறு மன சுணக்கமும் வந்து விடக் கூடாது என்பதில் அவ்வளவு கவனமாக வாசு இருப்பான்.

இன்று இந்த மணித் துளிகளில் அம்மாவைப் பற்றிய ஞாபகமே இல்லை. ஜனனி மட்டுமே அவனின் ஞாபகத்தில்…  எப்படியாவது  அவளைப் பார்த்து காதல் உணர்த்தி விட வேண்டும் என்று ஒரு வேகம்.

அது எந்த அளவில் சாத்தியம் என்றெல்லாம் யோசிக்கவில்லை. கேட்டின் உள் நுழைந்த பிறகு தான் அங்கே இரண்டு மூன்று கார்கள் நிற்பதை பார்த்தவன், யாரோ வந்திருக்கிறார்கள் போல ஒரு வேலை மாப்பிள்ளை வீட்டினரோ, நினைவே கசந்த போதும், இப்போது சென்று நிற்க முடியாது.. திரும்புவோமா என்று நினைக்க.. சரியாக அந்த நேரம் பார்த்து ரகுலன் அவனைப் பார்த்து விட்டான்.

“வாங்க, வாசு அத்தான்!” என்று ஆர்வமாக அருகில் வந்தவன், “வாங்க! உள்ள வாங்க!” என்று கைப் பிடித்து அழைத்துச் செல்ல முயல,

“அத்தைக் கிட்ட சொல்லணும்னு பாட்டி ஒரு விஷயம் சொல்லி விட்டாங்க, உள்ள வீட்ல கெஸ்ட் போல, நான் அப்புறம் வர்றேன்” என்று திரும்பிச் செல்ல முயல,  

“வாங்க அத்தான் நீங்க! அது ஒண்ணுமில்லை, ஜனனி அக்காவைப் பொண்ணு பார்க்க வந்திருக்காங்க” என்று கை பிடித்து விடுவேணா என்று மறுக்க மறுக்க உள் அழைத்துச் சென்றான்.

ஜனனி தன்னை எப்படி எதிர் கொள்வாளோ என்று மனது திக் திக் என அடித்துக் கொள்ள ஆரம்பித்தது.

சரியாக அவன் உள்ளே செல்ல, ஜனனியை சில நிமிடங்களுக்கு முன் தான் வெளியே அழைத்து வந்து அமர வைத்து இருந்தனர்.

மாப்பிள்ளை பையனின் அம்மா ஏதோ கேட்க, அதற்கு பதில் சொல்லிக் கொண்டு இருந்தாள். வாய் மொழி உரைத்தாலும் மனது “என்ன செய்ய? என்ன செய்ய? ஏதாவது செய்!” என்று அவளிடம் சண்டை இட்டுக் கொண்டிருந்தது. 

வாசு உள் நுழையவும், அவனைப் பார்த்த ஜனனியின் கண்களில் அப்படி ஒரு அதிர்ச்சி, பின் ஹப்பாடி வந்து விட்டாயா என்பது போன்ற ஒரு உணர்வு.. வாசுவிற்கு அதை நன்கு புரிந்து கொள்ள முடிந்தது.

வாசுவும் சில நொடிகள் அவளைப் பார்க்க, ஜனனியும் பதில் பார்வை பார்த்தது சில நொடிகளே!!!

ஒரு காதல் என்பது என் நெஞ்சில் உள்ளது                                                                          என் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி

“நீங்க வாங்க வாசுத்தான்… நாம அந்த ரூம் போவோம்!” என்று வாசுவை வேறு ஒரு ரூமிற்கு ரகுலன் அழைத்துச் சென்றான். பார்த்துக் கொண்டிருந்தவர்களிடம்… “அம்மாவைப் பார்க்க வந்தாங்க!” என்று அவனின் அப்பாவிடம் சொல்லி போனான்.

ரகுலன் இவனிடம் பேச்சுக் கொடுக்க, மனது அவன் என்ன பேசினான் என்று உணரவில்லை, வெளியே என்ன நடக்கிறது என்ற எண்ணம் தான்.

“இருங்க என்ன நடக்குதுன்னு பார்த்துட்டு வர்றேன்” என்று வாசுவை அங்கே விட்டுப் போக…

சிறிது நேரத்தில் அங்கே அவன் அமர்ந்து இருந்த இடத்திற்கு அனுராதா, லக்ஷ்மணன், பரதன், செல்லமாள் எல்லோரும் வந்தனர்.. கூடவே ஜனனியும்… அங்கே மாப்பிள்ளை வீட்டினருடன் தாத்தாவும் பாட்டியும் பேசிக் கொண்டு இருந்தனர். யாரையும் அழைக்கவில்லை! வீடு வரை மட்டுமே வைத்துக் கொள்ளலாம். பிடித்தால் பின்னர் உறவுகளுக்குச் சொல்லிக் கொள்ளலாம் என்று இருந்தனர். 

அனுராதா வாசுவிடம் “நீ இங்கேயே இரு, ஒரு அஞ்சு நிமிஷம் வந்துடறேன்” என்று விரைந்து வந்து சொல்லிச் சென்றார்.

வீட்டினர் ஜனனியிடம் பையனைப் பிடித்து இருக்கிறதா என்று கேட்டுக் கொண்டு இருந்தனர். “அப்புறம் சொல்றேன் மா!” என்று செல்லமாளிடம் ஜனனி சொல்லிக் கொண்டு இருந்தாலும், ஓரக் கண்ணால் வாசுவைவையும் பார்வைத் தொட்டு மீண்டது.

வாசு ஜனனி என்ன சொல்லப் போகிறாள் என்று இமை எடுக்காமல் பார்த்து இருந்தான்.

“அப்புறம் எல்லாம் சொல்ல வேண்டாம்! இப்போவே சொல்லுவோம்! ரொம்ப நல்ல ஆளுங்களா தெரியறாங்க, பையனை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு!” என்று  செல்லமாள் சொல்ல, ஜனனி அவரை முறைத்துப் பார்த்த பார்வை சொன்னது, “உனக்கு பிடிச்சிருந்தா நீ பண்ணிக்கோ!” என்று.

அந்தச் சூழலிலும் ஜனனி அவளின் அம்மாவைப் பார்த்த பார்வை வாசுதேவனை இலகுவாக்கியது என்றேச் சொல்ல வேண்டும்.

படபடத்த மனது அமைதி அடைய, ஜனனியைப் பார்த்து இருந்தான்.

அப்போதும் விடாமல் “சரி” என்று சொல் என்பது போல, மாற்றி மாற்றி ஆளுக்கொருவராக நிர்பந்தித்னர். என்னவோ அவள் சின்னப் பெண்! அவளுக்கு ஒன்றும் தெரியாது என்ற பாவனையே! 

ஒரு நொடி கண் மூடி திறந்தவள், முடிவெடுத்தவளாக, “எனக்கு இவரைத் தான் பிடிச்சிருக்கு!” என்று வாசு தேவனைக் காட்டினாள்.

வாசுதேவன் அதிர்ந்து எழுந்தே விட்டான்..  ஜனனியின் இந்த தைரியத்தை அவன் எதிர்பார்க்கவில்லை. எல்லோரும் ஸ்தம்பித்து நின்றனர்.

தூர நின்று வேடிக்கைப் பார்த்திருந்த அவினாஷ், “அக்கா! விளையாடாதே, இந்த விஷயத்துல எல்லாம் விளையாடக் கூடாது!” என அவசரமாக அருகில் வந்தான்.

“நான் விளையாடலை! ஐ அம் சீரியஸ்!” என்றாள் நிறுத்தி நிதானமாக தெளிவாக.

“ஹப்பா! இவளா விளையாட்டுப் பெண்! எனக்குக் கூட இந்தத் தைரியம் கிடையாது” பார்த்தது பார்த்தபடி நின்றான் வாசு.

லக்ஷ்மணனின் பார்வை அழுத்தமாக வாசுதேவன் மீது பதிந்தது. பரதனும் செல்லமாளும் இப்படித் தங்கள் பெண் பேசுவாள் என்று கனவிலும் நினைத்தது கிடையாது. அப்படியே நின்று விட்டனர்.

“நீ இங்க யாரைப் பார்க்க வந்த!” என்ற லக்ஷமணனின் கேள்விக்கு..

“ஜனனியை” என்று வாசு மறையாமல் உரைத்தான்.   

அவ்வளவு தான் செல்லமாள் பரதனிடம் பாய்ந்தார்.. “அவளுக்குச் செல்லம் குடுக்காதீங்கன்னு எத்தனை தடவை சொன்னேன், எப்பவாவது அவளைக் கண்டிச்சு இருக்கீங்களா! இப்போ அவளோட விளையாட்டுத்தனம் எதுல கொண்டு வந்து விட்டிருக்கு பாருங்க.. வெளில மாப்பிள்ளை வீட்டுக்காரங்க இருக்காங்க! எவ்வளவு தைரியமா இப்படி பேசறா!” என்று ஆவேசமாக பேசத் துவங்க..

“ஷ்!” என்று அவரை அடக்கிய பரதன்.. “ஏற்கனவே உன் பொண்ணு என் மானத்தை வாங்கிட்டா! இனி நீயும் வாங்காத! சத்தமா பேசாதே வெளில ஆளுங் இருக்காங்க!” என்றவர்.

ஜனனியை நெருங்கினார், “நிஜமா தான் சொல்றியா!” என்ற அவரின் கேள்வி, அது கேட்ட விதம்.. ஜனனிக்கு உள்ளுக்குள் குளிரெடுத்தது. இருந்தாலும் “ஆம்!” என்றே தலையாட்ட..

அவருக்கு வந்த கோபத்திற்கும், ஆத்திரத்திற்கும், ஓங்கி ஜனனியை  கன்னத்தில் அறைய, தூரப் போய் விழுந்தாள். பொறி கலங்கி விட்டது என்றே சொல்ல வேண்டும்.. அப்பா அடிப்பார் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. எவ்வளவு குறும்பு செய்தாலும் அடித்தது கிடையாது.  

வாசு வேகமாக அருகில் வர.. ஒற்றைக் கையால் அவனைப் பிடித்த லக்ஷ்மணன்.. “நீ உன் வீட்டுக்குக் கிளம்பு!” என்றார்.

அவினாஷும் ரகுலனும் ஜனனியிடம் விரைந்தனர்.

“இல்லை! ஜனனி மேல தப்பில்லை!” என்று அவன் சொல்ல வர.. “கிளம்புன்னு சொன்னேன்!” என்றார்.

அவரின் கையை விலக்கியவன்.. “அடிக்க வேண்டாம் அவளை!” என்றான்..

“என் பொண்ணு நான் அடிப்பேன்! கொல்லுவேன்! நீ கிளம்பு முதல்ல!” என்றார் பரதனும்.

என்ன செய்வது என்று தெரியாமல் ஜனனியைப் பார்த்து, “என்னோட வந்துடு!” என்றான்.

கண்களில் நீர் தளும்ப, அழுகை என் நேரமும் வெடிக்கும் என்ற நிலையில் பார்த்து இருந்தவள்.. “வரமாட்டேன்!” என்பது போலத் தலையசைத்தாள்.

“அதான் வரமாட்டேன்னு சொல்றா தானே! கிளம்புடா!” என்று பரதன் ஆக்ரோஷமாகக் கத்தினார்..

“கிளம்ப முடியாது! என்ன செய்வாய்?” என்று வாசு வாய் மொழியாகக் கேட்கவில்லை, ஆனால் பார்வை அதை உணர்த்த பரதனை பார்த்து நின்றான்.

வாசுதேவனை அமைதியான வாய் பேசத் தெரியாத தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருக்கும் ஒரு பையனாகத் தான் அவர்களுக்குத் தெரியும். இப்படி ஒரு நிமிர்வை அவனிடம்  யாரும் எதிர்பார்க்கவில்லை.

அனுராதா வேகமாக வாசு அருகில் வந்தவர்.. “கிளம்பு வாசு! வெளில மாப்பிள்ளை வீட்டுக்காரங்க இருக்காங்க.. வெளில தெரிஞ்சா எங்களுக்கு அசிங்கம்! கிளம்பு!” என்று மன்றாடிக் கேட்டார். ஒரு பையனை தங்கள் பெண் பிடித்திருக்கிறது என்று இப்படி மாப்பிள்ளை வீட்டினர் வெளியில் இருக்கும் போது சொல்வதைக் கருத்தில் கொண்டு சொன்னார்.  

“எது அசிங்கம்? என்னைப் பிடிச்சிருக்குன்னு உங்க பொண்ணு சொல்றதா?” என்றான் நிதானமாய்.

அனுராதாவிற்கு பதில் சொல்லவே வாய் எழவில்லை. வாசுவின் பார்வை, வாசுவின் வார்த்தை பிரயோகம், எல்லாம் எதிரில் நிற்பவருக்கு ஒரு கலக்கத்தைக் கொடுத்தது.

அவினாஷ் தான் ரகுலனிடம் ஜாடைக் காட்டி, இருவரும் வாசுவிடம் வந்தவர்கள்.. “எதுன்னாலும் அப்புறம் பேசலாம் ப்ளீஸ் வாங்க!” என்று அவினாஷ் சொல்ல,

எப்படி உள்ளே அழைத்து வந்தானோ, அதே போலவே ரகுலன் “வாங்க வாசுத்தான்!” என்று கைப் பிடித்து திரும்ப அழைத்து சென்றான்.

அப்போதும் அவினாஷைப் பார்த்து “ஜனனியை அடிக்க வேண்டாம்னு சொல்லு.. அவரோட பொண்ணு தான்! அது என்னைக்கும் மாறப் போறது கிடையாது! அதை அடிச்சு நிரூபிக்க வேண்டாம்னு சொல்லு!”

“அடிக்க மாட்டாங்க! அடிக்காம நான் பார்த்துக்கறேன்!” என்று அவினாஷ் ஸ்திரமாகச் சொல்ல,

ஜனனியை ஒரு பார்வை பார்த்துக் கிளம்பினான்.

கீழே விழுந்தவள் எழுந்திருக்கவில்லை, அப்படியேத் தான் அமர்ந்து இருந்தாள்.

வாசு சென்ற நிமிடம், ஜனனியை விட்டு அனைவரும் முன்னறைக்கு வந்தனர்.. “எல்லாம் நல்ல வார்த்தையாத் தான் பொண்ணு சொல்றா! இருந்தாலும் எங்க மத்த அண்ணன் தம்பிங்கக் கிட்ட கலந்துகிட்டு, நல்ல பதிலா ஒரு ரெண்டு நாள்ள சொல்றோம்!” என்று சுமுகமாகப் பேசி அவர்களைக் கிளப்புவதற்குள் போதும் என்றாகி விட்டது.

அவர்கள் வேறு, பெண்ணிடம் ஒரு வார்த்தை சொல்லிச் சொல்கிறோம் என்று சொல்ல..

ஆளாளுக்கு முகத்தைப் பார்க்க, அதுவே எதோ சரியில்லை என்று காட்டியது, அவர்கள் மேலும் வற்புறுத்தாமல் கிளம்பினர்.

வாசு நேராக சென்றது அம்மாவிடம்.. அம்மாவிடம் நடந்த அத்தனையையும் ஒன்று விடாமல் சொன்னான். அதாகப்பட்டது ஜனனியின் வீட்டினில் நடந்தது. மற்றபடி இன்னும் வாய் வார்த்தையாகக் காதல் சொல்லிக் கொள்ள வில்லை என்பது போல எல்லாம் சொல்லவில்லை. இருவரும் விரும்புகிறோம் என்று சொல்லிவிட்டான்.    

வாசு சொல்லச் சொல்ல, என்ன காரியம் செய்து வந்திருக்கிறான் மகன் என்று ஸ்வாதி அப்படியே அமர்ந்து விட்டார். அவரே பெற்றவர்களை எதிர்த்து காதல் திருமணம் செய்தவர் தான், ஆனால் மகனின் காதலை ஏற்றுக் கொள்ள அவரால் முடியவில்லை.

  நான் காதல் சொன்னேன் என்றால், எனக்கு எந்த பொறுப்புகளும் இல்லை.. என் தாய் தந்தையரைப் பார்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.. அதற்கான வயதும் வந்திருந்தது, வாழ்க்கையை எதிர் கொள்ளும் பக்குவமும் இருந்தது.

ஆனால் வாசு.. இந்த வீட்டின் ஆதாரமே அவன் தானே! எப்படி அவனால் முடிந்த்து. இருபத்தி இரண்டு வயது.. வாழ்க்கை எங்கோ இருக்க என்ன செய்து வந்திருக்கிறான்.

ஸ்வாதியை புரிந்தவனாக தெலுங்கினில் பேச ஆரம்பித்தான், “அம்மா! எனக்கு இது சரியான வயசு கிடையாதுன்னு தெரியும்.. இது அதுக்கான நேரமும் இல்லைன்னு தெரியும். நானே சொல்லக் கூடாதுன்னு தான் இருந்தேன், ஆனா முடியலை..” என்று வாசுவும் தலை பிடித்து தான் அமர்ந்து இருந்தான்.   

“என்ன செய்யணும்னு நினைக்கிற?”

“என்ன செய்யட்டும்?” என்று திரும்ப அம்மாவிடம் கேட்டான்.

“எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை.. ஆனா அந்தப் பொண்ணு உனக்கு ரைட் சாய்ஸ் கிடையாதுன்னு தான் தோணுது.. நீ பூரணி கல்யாணத்து வரலை, ஆனா நான் போனேன் தானே.. ரொம்ப ஆட்டம்.. நீ லவ் பண்றேன்றதுக்காகத் தப்பா சொல்லலை”

“நான் பார்த்தவரை ஒரு மெச்சுரிட்டி இல்லை.. சின்ன பசங்களுக்கு சமமா ஆடிக்கிட்டு.. ஒரு பொறுப்பில்லாம.. உனக்கு அந்த பொண்ணு மனைவியா வர்றதை நான் என்னைக்குமே விரும்ப மாட்டேன்!” என்றார்.

வாசு அம்மாவின் இந்த பதிலில் அப்படியே தேங்கி நின்றான். காதலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று எதோ ஒரு வகையில் மனம் சொல்ல அதை எதிர்பார்த்தான்.

ஆனால் “எனக்குப் பெண்ணை பிடிக்கவில்லை! அந்தப் பெண் உனக்கு பொருத்தமில்லை!” என்று சொல்வார்கள் என்று அவன் நினைக்கவேயில்லை!!!  

 

Advertisement