Advertisement

அத்தியாயம் எட்டு :

வாசு ஜனனியையே சிறிது நேரம் பார்த்திருந்தவன், தெளிந்த மனதை கட்டுக்குள் கொண்டு வந்தான். தனது கைகளை ஜனனியின் கைகளிடம் இருந்து உருவிக் கொண்டவன்.. கூடவே “சாரி” என,

“எதுக்கு சாரி? என் ஃபோன் எடுக்காததுக்கா” என்றாள் இலகுவாகவே ஜனனி.  

“இல்லை” என்பதுப் போல தலை அசைத்தவன்.. “ஐ லவ் யு சொல்வேன்னு சொன்னதுக்கு” என,

ஜனனியின் முகம் என்ன பேசுகிறான் இவன் என்பதுப் போல பார்த்தது.

விளக்கம் சொல்ல வேண்டிய அவசியத்தை உணர்ந்தவன், “அது உன்னை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு.. என்னோட கவலைகள் என்னை சூழாத போது எனக்கு உன்னோட ஞாபகம் தான்.. நான் உன்கிட்ட பேசும்போது என்னையே மறந்துடறேன்.. ஒரு மாதிரி ரொம்ப சந்தோஷமா இருக்கு.. ஐ லவ் யு ன்னு கத்தணும் போல ஆசையாயிருக்கு! அதுதான் உன்கிட்ட அப்படி சொன்னேன்!” என்று நிறுத்தினான்.

வாசுவின் பாவனைகள் காதல் சொல்வது போல இல்லை, ஜனனியின் முகம் குழப்பத்தைத் தத்தெடுக்க..

“இப்போ அது தப்பு மாதிரி தோணுது!” என்றான்,

ஜனனியின் முகம் அதிர்ச்சியை தாங்கி அவளின் விழிகள் தானாய் விரிந்தது.   

“ஐ மீன் உன்னை லவ் பண்றது இல்லை! ப்ளீஸ் சரியாப் புரிஞ்சிக்கோ!  அப்படி உன்கிட்ட சொல்றது! ஏன்னா இது என்னோட வயசு கிடையாது.. மே பீ உன்னை விட சில மந்த்ஸ் தான் பெரியவனா இருப்பேன், இது என்னோட அனுமானம்.. பொண்ணுங்களுக்கு இது ரைட் ஏஜ், ஆனா பசங்களுக்குக் கிடையாது இல்லையா! என்னோட வீடு இப்போ இருக்குற சூழல்ல, நான் லவ் பண்றேன்னு சொல்றதே எனக்கு ரொம்ப கில்டியா இருக்கு!”  

முதலில் அதிர்ந்தாலும் ஜனனி இடையில் பேசவேயில்லை.. பேச முற்படவுமில்லை.. அமைதியாக கேட்டுக் கொண்டு இருந்தாள்.

“அதுவும் அம்மாக் கிட்ட என்னால சொல்லவே முடியாது!” என்றான், சொல்லும் போதே முகத்தில் அவ்வளவு குற்ற உணர்ச்சி..

அவன் உணர்ச்சி வசப்படுவது தாளாமல், “ஹேய், ஈசி! இதுக்கு இவ்வளவு நீங்க கில்டியா பீல் பண்ண வேண்டாம், இதுவரைக்கும் உங்களுக்கு எப்படியோ? எனக்கு என்னோட பேசிகிட்டு இருந்த ஃபிரன்ட் திடீர்ன்னு இப்படி சொல்லிட்டாரேன்னு ஒரு ஷாக்.. அப்புறம் ஏன் இப்படின்னு ஒரு எண்ணம்? அதுவே உங்களை எப்பவும் நினைக்க வெச்சது.. இப்போ உங்களைப் பார்க்கணும் போல தோன வந்துட்டேன்!”

“அவ்வளவு தான்… நீங்க ரொம்ப அப்செட்டா இருக்கவும் தான் அப்படிப் பேசினேன்.. உங்க லவ்வை அக்சப்ட் பண்ணினா என்னன்ற மாதிரி.. பட் எனக்கு உங்க மேல லவ் இருக்கான்னு இதுவரை தெரியலை”

“ஆனா இப்போ லவ் பண்ணினா என்னன்னு தோணுது..” என்றாள் முகத்தில் ஒரு மென்னகையுடன்.

“வேண்டாம்! வேண்டாம்! இது சரிவராது!” என்றான் வாசு அவசரமாக.

“ஓஹ்! அப்படியா! சரி வேண்டாம்!” என்றாள் உடனே.

அப்படியே அவனின் முகம் ஏமாற்றத்தை பூசியது.

“இது என்னங்க? சரின்னு சொல்ல வந்தாலும், லவ் சொல்லவே வேண்டாம் சொல்றீங்க! வேண்டாம்னு சொன்னாலும் உங்க முகம் இப்படியாகிடுது!” என்றாள்.

“நீ என்ன ஃபீல் பண்ற?”

“அதான் சொன்னேனே லவ் பண்ணினா என்னன்னு தோணுது! ஆனா அது தானா தாங்க வரணும்..  இவ்வளவு யோசிக்காதீங்க…” என்று தோளைக் குலுக்கி அவள் சிரித்த போது மனது ரசிக்க முற்பட்டாலும் என்ன சொல்லுகிறாள் என்று புரியவில்லை.

“காதல் சொன்னா மனசு முழுக்க ஒரு சந்தோஷம், ஒரு பரவசம் இருக்கணும். சொல்றதுக்கு முன்னாலயே இவ்வளவு டென்ஷன் இருக்கும் போது சொல்ல வேண்டாம்! ஸ்டே கூல்!” என்றபடி எழுந்தாள்.

“நீ என்னை லவ் பண்ணறியா இல்லையா?” என்றான்.

“நான் அதை யோசிக்கறதா இல்லை!” என்றபடி உள்ளே சென்றவள், சிறிது நேரத்தில் அவளின் பெரியம்மாவுடன் வெளியே வந்து, அவர் வாசுவிடம் பேசியதை வேடிக்கை பார்த்திருந்து ஒரு சிறு தலையசைப்புடன் சென்று விட்டாள்.   

 “இவளையா விளையாட்டுப் பெண் என்று நினைத்தேன். இல்லவே இல்லை .. நான் தான் இப்பொழுது அப்படி இருக்கிறேன் போலும்” என்று தோன்றியது.. அப்பொழுது மட்டுமல்ல அதற்கு பிறகும்…

அதன் பிறகு ஒரு மாதம் வரை இயல்பு போல வேலைகள் நடந்தாலும், ஜனனி மனதின் ஓரத்தில் எப்பொழுதுமே இருந்தாள். “பேசு! அவளிடம் பேசு!” என்று மனது அடித்துக் கொண்டே இருந்தது.

என்ன எதிர்பார்க்கின்றான் அவன் என்று அவனிற்கே தெரியவில்லை, எப்பொழுதும் யாரிடமும் எதையுமே பகிராதவன் வாசு, இப்பொழுது இதை யாரிடம் சொல்வான்.

ஜனனி அழைப்பாளோ, அழைப்பாளோ என்ற தவிப்பும் கூடவே… ஏனோ ஒரு இனம் புரியாத வேண்டுதல் கடவுளிடம் கூட.. சரி வராது.. தன்னால் அவளை நோக்கி எந்த அடியும் எடுத்து வைக்க முடியாது என்று தெரிந்தும்.. “ஜனனிக்கு என்னைப் பிடிக்க வைத்து விடு கடவுளே! இது நடக்குமோ? நடக்காதோ? அது வேறு விஷயம்!”

“அவளுக்கு என்னைப் பிடிக்க வேண்டும்!” என்று மனது அடித்துக் கொண்டது.

வாசுவாக ஒரு நாள் தன்னைக் கட்டுப்படுத்த இயலாமல் குரலையாவது கேட்போம் என நினைத்து..

ஜனனியின் தொலைபேசி எண்ணிற்கு அழைக்க… இந்த தொலை பேசி எண் தற்போது உபயோகத்தில் இல்லை என வந்தது.            

“ஏன்? ஏன் நம்பர் உபயோகத்தில் இல்லை என வருகிறது?” என தலை குடைய… ஒரு முறை ஜனனி அழைத்த இமானின் எண்ணை சேமித்து இருந்தவன், இமானிற்கு அவன் கல்லூரியில் இருக்கும் சமயம் பார்த்து அழைத்தான்.

“ஹாய் இமான்! நான் வாசு பேசறேன்! ஜனனி கசின், அவங்களோட பேச முடியுமா?” என்றான்.

“அவ இன்னைக்கு காலேஜ் லீவ் வாசு, பொண்ணு பார்க்க வர்றாங்கன்னு ரக்ஷா சொன்னா!” என,

வாசுவின் கையினில் இருந்த கைப்பேசி தானாக நழுவியது.

திரும்ப எடுத்துப் பார்த்தால் அது வேலை செய்யவில்லை. “நான் ஐ லவ் யு சொல்லியிருக்க வேண்டும்.. அவசரப்பட்டு அதையும் இதையும் நினைத்து சொல்லாமல் விட்டது தவறு”

“இப்பொழுது ஐ லவ் யு சொல்லாமல் விட்டதனால் மட்டும் என்னுடைய சூழல் மாறிவிட்டதா என்ன? ஜனனியை இழப்பதா?”  தலையில் கை வைத்து அமர்ந்து விட்டான் .

அங்கே ஜனனிக்கும் அதே நிலை தான்..

அன்று ஹாஸ்பிடலில் இருந்து வரும் பொழுதே பெரியம்மாவிடம் வாய்க் கொடுத்து, வாயைக் கிண்டி, கிளறி, எல்லா விவரங்களையும் அக்கு வேறு ஆணி வேறாக பெரியம்மாவின் கண் பார்வையில் வாங்கியிருந்தாள்.

முதல் அதிர்ச்சி வாசுவின் அம்மா தங்கள் ஆட்க்கள் அல்ல, என்ன தெலுங்கா..? அதுவும் காதல் திருமணமா..? அதுதான் பெரியப்பாவிற்கு வாசுவின் அம்மாவைக் கண்டால் ஆவதில்லையா?

இவர்கள் வீட்டினர், அடுத்தவர் வீட்டில் காதல் திருமணம், வேற்று ஆட்களுடன் செய்தாலே ஆகவே ஆகாது.. அவர்களை முறைத்துக் கொண்டு திரிவர். இதில் அவளை எப்படி அனுமதிப்பர்.. மாட்டவே மாட்டர்.

தங்கள் இனம், உறவினன், என்ற சில சலுகைகள் இருக்கவும் தான் அவளின் மனம் அவன் புறம் சாய முற்பட்டது. இப்போது இல்லையா? அய்யகோ? என்று வசனம் தான் பேசியது. ஆயினும் விளையாட்டுத்தனத்தை விட்டு சூழலை ஆராய்ந்தாள், ஆதலினும் விளையாட்டுத்தனம் அவளை விட்டு எங்கே போகும்.

“அது மட்டுமா? இந்த லூசுப் பயல்.. நீ அழகா இருக்கன்னு தோணலை?.. உன்னைப் பிடிக்கணும் தோணலை? ஆனா நடந்துடுமோன்னு பயமா இருக்குன்னு கூடச் சொல்லாம, எப்போ வேணா ஐ லவ் யு சொல்வேன்னு என்னைக் குழப்பி விட்டுட்டு இப்போ சரி வராது, தெரியாம சொல்லிட்டேன்னு சொல்றான். டேய் வாசு! உன் மண்டையை உடைச்சா என்ன?” என்று தான் தோன்றியது.

“இவனே இப்படிச் சொல்லும் பொழுது, அவனிடம் நான் சொன்னது தான் சரி! நான் இவனைக் காதலிக்கிறேனா இல்லையா என்று யோசிக்கவே கூடாது!” என்று நினைத்தவள்..

வாசுவின் ஃபோன் நம்பர் இருந்தால் தானே அழைப்போம் என நினைப்போம்,  இல்லை அவன் அழைக்கிறானா மெசேஜ் செய்கிறானா என்று பார்த்துக் கொண்டே இருப்போம்! முதலில் அவனின் நம்பர் எனக்கு தெரியவே வேண்டாம் என்று நினைத்து சிம்மை டீ அக்டிவேட் செய்து தூக்கிப் போட்டு விட்டாள்.

ஆனால் மனதில் இருந்த வாசுவின் கைபேசி எண்ணை எந்த அழிப்பானை வைத்து அழிப்பது. தன் மனது வாசுவின் புறம் போகாமல் இருக்க ஆன முயற்சி எடுத்தாள் அவளாகவே. தனக்கென்று கைப்பேசியே வைத்துக் கொள்ளவில்லை.

“ஒரு அவசரம்னா எப்படி கூப்பிடறது? போன் இல்லாம எப்படி?” என்றுக் கேட்ட செல்லமாளிடம்,

“நான் எங்கே தனியா போறேன், கிளாஸ்ல ரக்ஷாக்கு கூப்பிடு!” என்று விட்டாள்.

“ஏன் போன் வேண்டாம்?” என்று அப்பா அம்மா கேட்க,

“எப்போ பார்த்தாலும் அதுலயே இருக்குற மாதிரி ஒரு ஃபீல் பா! கொஞ்ச மந்த்ஸ் கழிச்சு வெச்சிக்கறேன்!”

“உண்மையை சொல்லுடா? யாரும் எதுவும் தொந்தரவு பண்ணலையே?”

“இல்லைப்பா! அதுதான் என் சைட்ல ரெண்டு பாடி கார்ட்ஸ் இருக்காங்களே! அவங்களை மீறி என்க்கிட்டே யார் வர முடியும்?” என,

“ஆமாப்பா! காலேஜ்ல எல்லாம் ஸ்மூத்தா தான் போகுது, எந்த ப்ராப்ளமும் இல்லை!” என்று அவினாஷும் அடித்துச் சொல்ல… பெற்றோர்கள் பாரம் நீங்கியவர்களாக இருந்தனர்.

அந்த சமயத்தில் ஒரு மாப்பிள்ளை பூரணியைத் திருமணம் செய்து கொடுத்த வகையில் இருந்து வந்தது.

“பூரணி கல்யாணத்துல நம்ம ஜனனியைப் பார்த்தாங்களாம் பரதா! பொண்ணு கேட்கறாங்க? என்ன சொல்லலாம்?” என்று லக்ஷ்மணன் தந்தையின் முன்னிலையில் தம்பியிடம் சொல்ல,

“ஆளுங்க எப்படிண்ணா?”

“வசதி வாய்ப்புள ஒரு படி நம்மளை விட மேல தான். ஆளுங்களும் நல்ல மாதிரி தான் தெரியறாங்க.. அடிமை வேலையில்லை, சொந்த தொழில் தான்! ஒரே பையன்.. ஜாதகம் வாங்குவோம்! சரி வந்தா மேற்கொண்டு பேசலாம்!” என்று முடிவெடுத்தனர்.

“மாப்பிள்ளை பார்க்கலாமா?” என்று ஜனனியிடம் யாரும் கேட்கவில்லை. முதலில் அவர்களுக்குத் திருப்தியானால் தானே பெண்ணிடம் கேட்பார்.

அதனால் அவர்கள் ஜாதகம் பார்த்து, பொருத்தம் பார்த்து, பையனைப் பார்த்து, அவனின் சொத்து, சுகம், திறமை, தோற்றம், எல்லாம் பார்த்து, அவர்கள் அத்தனை பேருக்கும் பிடித்த பிறகு தான் ஜனனியிடம் சொன்னர்.

“என்ன? அதுக்குள்ள கல்யாணமா!” என்றவளின் பேச்சு யார் காதிலும் விழவில்லை.

“பூரணிக்கும் தான் ரெண்டு வருஷமா பார்த்தோம்! அவளுக்கு உடனே அமையலை! அதனால் வேலைக்கு போனா! நீ அதைப் பத்தி பேசாதே!” – அம்மா

“முதல்ல பையனைப் பாரு, அப்புறம் பேசு!” – அப்பா.

அவருக்கு அவ்வளவு நம்பிக்கை மகளுக்குப் பிடித்து விடும் என்று. குறை சொல்ல எதுவும் இல்லை. தோற்றம், ஆஸ்தி, அந்தஸ்து, படிப்பு, எல்லாம் சிறப்பாக இருந்தது. 

மனது வேறு ஒருவரிடம் இருக்கும் பொழுது எவ்வளவு சிறப்பாக இருந்தாலும் எப்படிப் பிடிக்கும் என்று யோசிக்கவில்லை! ஏனென்றால் ஜனனிக்கு யாரையாவது பிடிக்கும் என்று அவர்கள் நினைத்ததே இல்லை.

அதையே தான் வாசுவும் நினைத்தான், “ஜனனிக்கு என்னை பிடிக்கவில்லை” என.

அதையே தான் ஜனனியும் நினைத்தாள், “எனக்கு வாசுவைப் பிடித்திருக்கிறதா? இல்லையா?” என,

ஆனால் யார் நினைத்து என்ன பயன்? .. இங்கு அவளை அலங்கரித்து இருக்க.. மாப்பிள்ளை தனது அப்பா அம்மாவுடன் பெண் பார்க்க ஹாலில் அமர்ந்து இருந்தான்.

மாப்பிள்ளைக்கு பிடித்து விட்டால் அவ்வளவு தான்.. அதன் பிறகு ஜனனியின் கையினில் எதுவும் இல்லை என்று அவளுக்குத் தோன்றியது. பின்னே அதற்குள்ளாகவே மாபிள்ளையின் அருமை பெருமைகள் கேட்டு நொந்து விட்டாள்.

“அக்கா! மாப்பிள்ளை ரகுநாதன் செம ஹேன்ட்சம்” என்று அவினாஷ் ரன்னிங் கமன்ட்ரி கொடுக்க,

“அதை நான் சொல்லணும்” என்றாள் ஜனனி.

“உன் முகத்தை பார்த்தாலே நீ சொல்லுவன்னு தோணலையே!” என்று மனதிற்குள் சரியாக நினைத்தான் அவினாஷ், ஆனால் வெளியில் சொல்லவில்லை.  சொன்னால், “அப்போ உனக்கே எனக்கு பிடிக்காதுன்னு தெரியுது தானே! மாப்பிள்ளையைத் திருப்பி அனுப்பிவிடு!” என்று அக்கா சொன்னாலும் சொல்லுவாள் என்று வாயில் பசை போட்டுக் கொண்டான்.

“இந்த வாசு எதையாவது தெளிவாக சொன்னானா?” என்று மனதிற்குள் நினைத்தவாறு பல்லைக் கடித்துக் கொண்டிருந்தாள் ஜனனி.  எதிரில் இருந்தால் அடித்து துவைத்து விடும் ஆவேசம் தான்.

அவள் கண்டாளா என்ன வாசு தேவன் எதிரில் வந்து நிற்பான் என்று?

அதன் பின் நிகழப் போகும் அனர்த்தங்கள்!!!

 

Advertisement