Advertisement

 

அத்தியாயம் ஏழு :

வாசுவிற்கு மனது குழப்பமான குழப்பம் தான், ஜனனி வேண்டும் என்று மனது சொல்ல.. “இது சரிவராது உனக்கு! இப்பொழுது வயதும் அல்ல.. சூழலும் அல்ல.. அம்மா ஒத்துக் கொள்ளவே மாட்டார்!” என்று என்று அறிவு அடித்துச் சொன்னது. ஒரு வாரமாக இந்த குழப்பம் தான் ஜனனியிடம் பேசிய நாளாக.

ஜனனி திரும்பக் கூப்பிடுவாளோ என்று நினைக்கக் கூப்பிடவில்லை. இவனிற்கும் பின்பு கூப்பிடும் தைரியமில்லை.    

ஒரு புறம் இந்த எண்ண அலைகள் மனதினில் ஓடிக் கொண்டே இருந்தாலும்.. எந்த வேலைகளையும் நிறுத்தவில்லை.. அது பாட்டிற்கு நடந்து கொண்டிருந்தது.

கலகலப்பான மகன் கிடையாது தான், ஆனாலும் இன்னும் ஏதோ வாசுவிடம் குறைவது போலத் தோன்ற..

“என்னவோ உன் முகமே சரியில்லையே, என்ன வாகிற்று?” என்று ஸ்வாதி மகனிடம் கேட்டார். தமிழில் இல்லை தெலுங்கில்.. ஆம் அம்மாவும் மகனும் உரையாடுவது தெலுங்கில் தான்.

கணவரிடம், கணவர் வீட்டினரிடம், திருமணமாகி வந்த நாள் முதலாக ஒரு உடைந்த தமிழில் பேசினாலும், மகன் பிறந்த நாள் முதலே அவனிடம் பேசுவது தெலுங்கில் தான்.. தெலுங்கு அவரின் தாய் மொழி மட்டுமல்ல உணர்வு மொழியும் கூட, ஆம்! அவர் பிறந்தது வளர்ந்தது படித்தது எல்லாம் ஹைதராபாத். அவர்களது அங்கே ஐந்து நட்சத்திர ஹோட்டல் இருந்தது. அங்கு மட்டுமல்ல ஆந்த்ராவின் இன்னும் சில இடங்களிலும்.

அவர்கள் சென்னையில் கால் பதிக்க விரும்பி, சென்னையில் அவர்களுடைய பெயரைக் கொண்டு ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டல் கட்டி முடிக்க.. சமீபமாக படிப்பை முடித்த தனது பெரிய மகளிடம்.. அந்தப் பொறுப்பைக் கொடுத்து சென்னையில் விட..

அங்கு ஏற்பட்ட பழக்கம் தான் பாலகிருஷ்ணனோடு. புதிதாக தொழில் துவங்கியிருந்த பாலகிருஷ்ணன் தன்னுடைய பொருட்கள் சிலவற்றை ஹோட்டல் வாங்குவதற்காக அதன் நிர்வாகியை அணுக, அந்த இடத்தில் ஸ்வாதி இருக்க..

எங்கு எப்படி என்று தெரியாமல் இருவருக்குள்ளும் காதல் மலர… ஸ்வாதியின் அப்பா, பாலகிருஷ்ணன் ஒரு தமிழ் மகன் என்று திருமணதிற்கு சம்மதம் தர மறுக்க.. அவர்களை மீறித் திருமணம் நடந்தது, அதனால் மகளை பெற்றோர் ஒதுக்கி விட..

மனதினில் பல வருத்தங்கள் இருந்தபொழுதும்.. கணவன் பின்னோடு வந்து விட்டார்.. இவர் தான் மூத்த மகள்.. இவருக்கு பின் ஒரு மகன், மகள் என்று இருந்தனர்.

அதன் பிறகு பிறந்த வீட்டினருடன் எந்த வகையிலும் ஸ்வாதிக்கு தொடர்பு இல்லை. அதனால் மகன் பிறந்ததில் இருந்து அவனோடு அவர் உரையாடும் மொழி தெலுங்காகிப் போனது. தொடர்ந்த பத்து வருடங்களில், பெற்றோருடன் தொடர்பு இல்லை என்ற வருத்தத்தை தவிர ஸ்வாதிக்கு வேறு எந்த வருத்தமும் இல்லை.

பாலகிருஷ்ணனோடு இல் வாழ்க்கை எந்த குறையும் இன்றி மகிழ்வோடு நிறைவோடு சென்றது. எல்லாம் பாலகிருஷ்ணன் ஒரு விபத்தில் மாட்டும் வரை.. அதில் தலையில் அடிபட்டு மூளையில் ஏற்பட்ட பாதிப்பால் மன நிலை பிறழ்ந்து விட்டார், வேறு வார்த்தைகளில் பைத்தியமாகி விட்டார்.

சில சமயம் அமைதியாக இருப்பார், மனைவி, மகன், அப்பா, அம்மா, எல்லோரையும் அடையாளம் தெரியும்.. சில சமயம் யாரையும் தெரியாது, கையினில் கிடைத்ததை தூக்கி வீசுவார்.. எதிரில் இருப்பவரை அடிக்க ஆரம்பித்து விடுவார்.

வீட்டில் வைத்திருப்பது ஆபத்து அவரை இதற்கென்று இருக்கும் மருத்துவமனையில் சேர்த்து விடுங்கள் என்று மருத்துவர் சொன்னாலும் ஸ்வாதி சேர்க்கவில்லை. மருத்துவர் மட்டுமல்ல ஸ்வாதியின் பெற்றோர் கூட…

ஆம்! நன்றாக இருந்தவரை வராத பெற்றோர் மகளுக்கு இப்படி ஒரு நிலை என்றதும் ஓடி வந்தனர்.. “எப்படி இவருடன் இருக்க முடியும். வந்து விடு.. இவரை மருத்துவமனையில் சேர்த்து விடலாம்.. ராஜ வைத்தியம் செய்யலாம், அவர் இருக்கும் வரை.. அவருடைய பெற்றோருக்கும் அவர்கள் இருக்கும் வரை பணம் அனுப்பிக் கொடுக்கலாம், நீ வந்துவிடு” என்று மகள் பைத்தியமான தன் கணவருடன் கஷ்டப்படுவதை பொறாத பெற்றோர் கெஞ்சிக் கெஞ்சி கேட்டனர்.

ஸ்வாதி ஒத்துக் கொள்ளவில்லை.. அவர்களிடம் இருந்து ஒரு உதவியும் பெறவில்லை.. கணவரிடம் இந்த பத்து வருட சம்பாதனையில் வந்திருந்த ஒரு வீட்டினை விற்று, அதை வங்கியில் இட்டு.. குடும்பத்தை சமாளிக்க ஆரம்பித்தார். வேறு ஒன்றிரண்டு சொத்துக்களும் இருந்தது. எல்லாம் கை கொடுத்தது. 

ஸ்வாதி மிகுந்த புத்திசாலிப் பெண் தான்.. தனியாகவே தொழில் செய்யக் கூடிய திறமை இருந்தது, அவரின் பிறப்பே அதை கொடுத்து இருந்தது. சிறந்த கல்வி இருந்தது.

ஆனால் கணவரைத் தனியாக விட முடியாத ஒரு சூழலில், எதுவும் செய்ய முயலவில்லை. தினசரி வாழ்க்கைக்காக, கணவரின் மருத்துவத்திற்காக என்று இருந்தது எல்லாம் கரைந்து, கஷ்ட ஜீவனம் ஆனா போதும் மீதம் இருப்பதைக் கொண்டு சமாளித்தார். வேறு யோசிக்கவில்லை.

அதுதான் அவரின் பெற்றோருக்கு இன்னும் வருத்தமே! ஆண் பெண் என்ற பேதம் இல்லாத அவரின் அப்பா, மகள் கோலோச்சுவால் என்று சிறுவயது முதலே நினைத்து இருக்க.. இப்படி காதல் திருமணம் என்று சென்று அதிலும் கஷ்டங்களை அனுபவிக்க.. அவர்களால் தாள முடியவில்லை.

என்ன தான் சொத்து சுகம் இருந்தாலும், பரம்பரையின் பேர் கூடவே நின்றாலும், அது கொடுக்கும் மரியாதை இருந்தாலும்,  இன்னொரு மகனும், மகளும், சீரும் சிறப்புமாய் வாழ்ந்தாலும், பெரிய மகளின் இந்த நிலை அவர்களின் கண்களில் ரத்தக் கண்ணீர் வர வைத்தது. ஆனாலும் எதுவும் செய்ய முடியவில்லை.

யார் பேச்சையும் கேட்பவர் அல்ல ஸ்வாதி. இப்போது வாசுதேவன் இருப்பது அவர்களின் ஹோட்டல் தான். மகனையாவது எங்களுடன் விடு என்றதற்கு.. எனக்கு உயிர்ப்பு அவன் தானே என்று விட்டார். உயிர்ப்பு மட்டுமல்ல வடிகாலும் கூட, அவருடைய வாழ்க்கை மீதான கோபங்கள் அத்தனையும் வாசுவிடம் மட்டுமே காண்பிப்பார்.

சில சமயம் கணவரை சமாளிக்க முடியாமல், இயலாமையின் உச்சியில் இருக்கும் பொழுது வாசுதேவனுக்கு அடி கூட  விழும் ஸ்வாதியிடம் இருந்து. மௌனமாக வாங்கிக் கொள்வான்.   

ஸ்வாதியின் பெற்றோர்களின் தொடர் வேண்டுகோளுக்குப் பின் தற்பொழுது ஒரு இரண்டு மாதமாக ஹோட்டல் வர ஆரம்பித்து இருந்தான்.

ஸ்வாதி அவனை அனுப்ப ஆரம்பத்து இருந்தாலும், வேலை செய்யட்டும், இன்னும் பொருப்பெடுக்க அவன் தயாராகவில்லை என்று விட்டார்.

அதுதான் இந்த மேனேஜர் போஸ்ட்!!!

“ஏன்ட்ரா பாபு, ஏமாயிந்தி செப்பு..” என்று மகனின் அருகில் அமர்ந்து வினவ,

“ஏமி லேதம்மா!” என்று அம்மாவைப் பார்த்து புன்னகைத்தான்.

அவர்களின் உரையாடல்கள் தெலுங்கில் தான் தொடர்ந்தன..

“இல்லை, எனக்கு என்னவோ உன்க் கிட்ட வித்தியாசம் தெரியுது”

“கண்ணாடி மாத்துங்க முதல்ல!”

“நான் இன்னும் கண்ணாடியே போடலை, அப்புறம் எப்படி கண்ணா மாத்துவேன்!”

“அப்போ முதல்ல போடுங்க, அப்புறம் மாத்துங்க!” என்றான்.

எல்லாம் உறங்கிக் கொண்டிருந்த தந்தையின் அருகில் அமர்ந்தபடி தான்.. இருவரின் பார்வையுமே அடிக்கடி அவரைத் தொட்டு தொட்டு மீள, இனிமையான பேச்சுக்கள் என்றாலும், இலகுத்தன்மை இருந்தாலும், ஒரு சந்தோஷம் அம்மாவிடமோ மகனிடமோ வரவில்லை.

எப்போதும் இருக்கும் சூழல் இருவருக்குமே மனதில் வந்து வந்து போகும் தந்தையின் நிலை. உறக்கம் கூட மருந்துகளின் உதவியால் தான். நாளுக்கு நாள் நலிந்து மெலிந்து விட்டார்.. உடலிலுமே மருந்து மாத்திரைகளின் தாக்கம் அதிகமாகி விட்டதால் உடல் உறுப்புகள் சிதிலமடைய ஆரம்பித்து விட்டது.

தற்பொழுது வலிகளும் சேர்ந்து கொள்ள.. அவரிடம் ஆர்ப்பாட்டங்கள் அதிகமாக ஆரம்பித்தன. அதனால் அந்த ஆர்ப்பாட்டத்தை குறைக்க மாத்திரை, கூட வலி மாத்திரை, நித்திரையில் இருந்தார்.

சட்டென்று ஒரு மௌனம் சூழ, அம்மாவின் கண்கள் கண்ணீரைக் காட்ட, அம்மாவின் கையை ஆதரவாக பிடித்தான்.

“ரொம்ப கஷ்டப்படறார், இன்னைக்கு எல்லாம் என்னால சமாளிக்கவே முடியலை” என்றார் ஸ்வாதி.

அதற்குள் “வாசு!” என்ற பாட்டியின் குரல் கேட்க… அங்கே எழுந்து சென்றான்.

தாத்தாவும் படுக்கையில்.. அவருக்குமே காய்ச்சல்.. “ரொம்ப காய்ச்சல் அடிக்குதுடா கண்ணா” என்றார்.

“ஹாஸ்பிடல் போகலாம் பாட்டி” என்றவன் அம்மாவிடம் சொல்லிக் கொண்டு, ஆட்டோவை வரவழைத்து.. “நீங்க வராதீங்க, நான் போயிட்டு வர்றேன்” என்று பாட்டியிடம் சொல்லிக் கொண்டு.. தாத்தாவை ஒரு குழந்தையைப் போல இரு கைகளிலும் தூக்கிக் கொள்ள, ஆட்டோ ஓட்டுனர் உதவி செய்ய, கிளம்பினர்.

பார்த்திருந்த பாட்டிக்கு, “இப்படி இந்த பையன் கஷ்டப்படுகிறானே, பகவானே எங்களை எல்லாம் உன்னுடன் அழைத்துக் கொள், இவனுக்கும் இவனின் அம்மாவிற்கும் ஒரு நிம்மதியை கொடு” என்று மனமுருக வேண்டினார்.

“எனக்கும், என் கணவருக்கும், என் மகனிற்கும், ஒரு நல்ல சாவைக் கொடுத்துவிடு!” என்றும் வேண்டினார்.

கண்கள் கலங்கி அவர் நிற்க, “சரியாகிடும் அத்தே! நீங்க வாங்க!” என்று ஸ்வாதி சொல்ல, ஒன்றும் சொல்லாமல் முகத்தை மருமகளுக்காக சாதாரணமாக வைத்து கொண்டார்.

அவர் வந்து அமர, அவரின் முகத்தை வைத்து மாமியார் சோர்வாக இருப்பதைப் பார்த்து, உடனடியாக காஃபி போட்டு, அவரின் முன் வந்து நீட்ட, கலக்கத்தில் அவருக்கு கைகள் நடுங்க, “இருங்க!” என்று ஸ்வாதியே புகட்டினார்.

“பூர்வ ஜென்ம பாபங்கள் தங்கள் மகனுக்கு இப்படி செய்தாலும், ஏதோ ஒரு புண்ணியம் இவளை எங்களுக்கு மருமகளாக்கியதோ” என்று தோன்றியது.

ஜனனிக்கு அன்று கல்லூரி விடுமுறை, வீட்டில் தான் இருந்தாள். அவினாஷிற்கும் ரகுலனிற்கும் கல்லூரி இருந்தது. ஹாலில் அமர்ந்து படித்துக் கொண்டிருக்க, அங்கே தான் அவளின் தாத்தாவும் பாட்டியும் கூட அமர்ந்து இருந்தனர். அங்கே வந்த அவளின் பெரியம்மா அனுராதா, “அப்பாவுக்கு உடம்பு சரியில்லையாம் அத்தை, ஹாஸ்பிடல்ல சேர்த்து இருக்காங்கலாம், நான் போகட்டுமா?” என்று கேட்டார்.

தற்பொழுது பூரணியின் திருமணதிற்கு பிறகு தான், பெற்ற்வரகளிடம் பேச ஆரம்பித்து இருந்தார் கைபேசியில். இன்று பெற்றவர்களின் ஞாபகம் சற்று அதிகமாக இருக்க, அதன் கொண்டு அழைக்க, அப்பா ஹாஸ்பிடலில் இருப்பது தெரிய, உள்ள்ளமும் உடலும் அவரைக் காண பரபரத்தது.     

“போயிட்டு வா அனு!” எனவும் உடனே அவர் அவசரமாக கிளம்ப, கேட்டுக் கொண்டிருந்த ஜன்னனிக்கு வாசு அங்கே இருப்பான் தானே என்று உரைத்தது.

வாசு பேசிய நாளாக திரும்ப அவனிடம் பேசத் தைரியமில்லை, காதல் இருக்கிறதா என்று தெரியவில்லை, இருந்தாலும் ஒத்துக் கொள்ள எல்லாம் தைரியமில்லை.

வாசுவே எந்நேரமும் மனதில் இருந்தான். ஏதாவது போன் அடித்தால் அவனோ என்று தான் மனம் ஆவலாக எதிர்ப்பார்த்தது. வாசு அழைக்காத பொழுது ஒரு ஏமாற்றம் மனதினில்.

இப்போது பெரியம்மா கிளம்பவும், “நானும் வரட்டுமா பெரியம்மா” என, தனியாக கிளம்பிய அவரும் உடனே வா என,

கார் இருந்தாலும் கார் ஓட்ட ஆண்கள் யாரும் இல்லாததால் ஆட்டோவில் கிளம்பினர்.

அங்கே ரூம் தேடிப் போய் உள் பார்க்க, தாத்தாவிற்கு ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டிருக்க பாட்டி அருகில் அமர்ந்து இருந்தார். அனுராதாவை பார்த்ததும் கண்கள் கலங்க, அம்மாவைப் பார்த்ததும் அனுராதாவும் கண்கள் கலங்க, இருவரும் பேச ஆரம்பிக்க,

கூட இருந்த ஜனனிக்கு வாசு இல்லையா என்று ஏமாற்றமாக இருந்தது.

பேசிக் கொண்டு இருந்தவர்கள், “நீங்க மட்டும் தான் இருக்கீங்களா அம்மா?” என்று கேட்க,

“இல்லை அனு, வாசு இருக்கான், இப்போ தான் வீட்டுக்குப் குளிச்சிட்டு வரேன்னு போனான், நேத்து காய்ச்சல்ன்னு காட்ட வந்தவரை அட்மிட் பண்ணிட்டாங்க, அவனே தான் இருந்தான். இன்னைக்கு காலையில தான் நான் வந்தேன், வீட்டுக்குப் போயிட்டு வரேன்னு போனான், வந்துடுவான்” என சிறிது நேரத்திலேயே உணவு எடுத்துக் கொண்டு வாசு வந்துவிட்டான்.

ஜனனியை எதிர்பார்க்கவில்லை, “வாங்க அத்தை” என்று வாய் மொழியாக அனுராதாவிடம் பேசினாலும், ஜனனியைப் பார்த்ததும் முகத்தில் தானாக ஒரு பரவசம்.

ஜனனியின் கண்கள் அவனை ஒரு தயக்கத்தோடு பார்த்தது, கூடவே புன்னகைப்பதா வேண்டாமா என்று யோசனை. 

“என்ன சொல்றாங்க வாசு”  

“ச்செஸ்ட் இன்ஃபெக்ஷன் இருக்காம் அத்தை. ஒரு ரெண்டு நாள் இருந்து ஆன்டிபயாடிக்ல கண்ட்ரோல் வருதான்னு பார்போம்ன்னு சொன்னாங்க”

“ஒன்னும் பயமில்லையே”

“இல்லைதான்னு சொல்றாங்க”

“அப்பா எப்படி இருக்கார்”  

“இருக்கார்” என்பது போல தலை மட்டும் தான் ஆடியது. திரும்பவும் ஒரு மௌனமான சூழல், வாசுவின் முகத்திலும் வருத்தத்தின் சாயல்,

தனக்கு இன்னும் அவன் வீட்டினரைப் பற்றி எதுவும் தெரியாது என்பது ஜனனிக்கு அப்போதுதான் உரைத்தது. வாசுவின் முகத்தில் வருத்தத்தை பார்த்ததும் அதைப் போக்க வேண்டும் என்ற உந்துதல்.

இரண்டொரு வார்த்தைகள் பேசிவிட்டு, “மெடிசின் ஏதாவது வாங்க சொன்னாங்களா பாட்டி” என,

பாட்டி ஒரு சீட்டைக் கொடுக்க, “நான் வாங்கிட்டு வந்துடறேன்” என போனான்.  

“பேசிட்டு இருங்க பெரியம்மா, நான் வெளில உட்கார்ந்து இருக்கேன், ஃபிரன்ட் கிட்ட ஒரு ஃபோன் பேசணும்” என்று சொல்லி ரூமை விட்டு வெளியே வந்து ரூமின் முன் இருந்த ஒரு பெரிய பென்ச் போன்றதில் அமர்ந்து வாசுவிற்காகப் பார்த்து இருந்தாள்.

வாசு வந்தவன், அந்தத் தளத்தில் இருந்த சிஸ்டரிடம் அந்த மருந்தை கொடுத்து, ரூம் நோக்கி வந்தவன், அங்கே ஜனனி அமர்ந்து இருப்பதைப் பார்த்து சற்று இடைவெளி விட்டு அருகில் அமர்ந்தான்.

வாசுவும் பேசவில்லை, ஜனனியும் பேச முயலவில்லை.

திரும்பி அவனை பார்த்தாள், புன்னகைக்க முயன்றாள், ஆனால் வருவேனா என்றது. வாசுவும் அவள் புன்னகைக்க முயல்வதையும் முகத்தில் ஒரு தயக்கம் இருப்பதையும் பார்த்து இருந்தான்.

ஜனனி என்ன செய்யப் போகிறாள் என்பது போல பார்த்து இருக்க, இருபுறமும் கை வைத்து அமர்ந்து இருந்தான் வாசு.

மிகுந்த தயக்கம் தான் கையைத் தொடுவதற்கு, ஆனால் கை பிடிக்க தயக்கம் இல்லை, ஜனனி அவனின் கை மேல் கை வைத்தவள், அதில் நானிருக்கிறேன் என்பது போல ஒரு அழுத்தம் கொடுக்க, எப்போதும் விளையாட்டுப் பெண்ணாய் தெரியும் ஜனனி, அவனின் கண்களுக்கு அப்பொழுது அப்படித் தெரியவில்லை.

நேற்று அவனின் அம்மாவிடம் அவன் ஆறுதல் சொன்ன ஒரு உணர்வை இன்று ஜனனி அவனுக்குக் கொடுத்தாள்.

அவனின் முகம் அப்போதும் தெளியாததை போலத் தோன்ற,

“எப்போ வேணா ஐ லவ் யு சொல்வேன்னு சொன்னீங்க! எப்போ சொல்வீங்க?” என ஜனனி அவனைப் பார்த்து புருவம் உயர்த்தி ஏதோ ஒரு சாதாரண பொருளைக் குடுங்க என்பது போலக் கேட்க,

இப்போது அவளின் முகத்தில் குறும்புத்தனம் அப்படியே மீண்டு இருந்தது.

அதையே வாசு ரசித்துப் பார்த்திருந்தான். மனதில் இருந்த ஒரு அழுத்தம் வாசுவிற்குப் பெரிதாக குறைந்தது. அவனின் முகமும் தெளிய கூடவே ஒரு புன்னகையும் தோன்ற..

ஜனனியின் கண்கள் அவனைப் படமெடுத்தது, “நான் உன்னைப் பார்க்கிறேன்!” என்று கண்கள் அவனோடு மொழிந்தது. 

விழியில் விழி மோதி இதயக் கதவு இன்று திறந்ததே..

இரவு பகலாக இதயம் கிளியாகிப் பறந்ததே..

ஏ.. காதல் நெஞ்சே.. யாரோடு சொல்வேன்..

வந்து போன தேவதை… நெஞ்சை அள்ளிப் போனதே..

நெஞ்சை அள்ளிப் போனதே!!!

 

 

Advertisement