Advertisement

அத்தியாயம் ஆறு :

இமானும் ரக்ஷாவும் ஜனனியை வீட்டில் விட்டுக் கிளம்ப, “போனவாரம் தான் ட்ரீட்ன்னு போன, திரும்ப இந்த வாரமும் போற என்ன பழக்கம் இது, எப்போவாவது போகலாம் தப்பில்லை, இப்படி அடிக்கடி போறது சரியா?” என்று செல்லமாள் கோபமாக வினவ,

எப்போதும் திரும்ப பேசும் ஜனனி ஒன்றும் பதில் சொல்லவில்லை சண்டையும் இடவில்லை. அவளுக்கே மனதில் இப்படி வாசுவைக் கொண்டு தான் அங்கே போக வேண்டும் என்று தோழர்களுடன் பிடிவாதம் பிடித்துப் போனது தவறு என்று தோன்ற அமைதியாக இருந்தாள்.

அவினாஷும் ரகுலனும் அங்கே தான் இருந்தனர். ஜனனி பதில் பேசாமல் போனது அவனுக்கும் ஆச்சர்யமே!

“அம்மா! அக்கா ஒன்னும் பேசாம போறா!”

“நான் ஒரு வாரமா சரியா பேசலை தானே! அதனால சண்டை வேண்டாம்னு நினைச்சு பயந்திருப்பா!” என்று செல்லமாள் பெருமையாக சொல்ல,

“அக்காக்கு பயமா? நீங்களும் உங்க புத்திசாலித்தனமும்!” என்று ரகுலன் சொல்ல.. அவினாஷும் “என்னமா நீங்க?” என்று அவரிடம் முறைத்து விட்டு ஜனனியின் ரூம் சென்றான்.

“அக்கா இமான் பர்த்டே தானே, எங்க போயிருந்தீங்க?”

ஜனனி ஹோட்டலின் பெயரைச் சொல்ல..

“ட்ரீட் நல்லா போச்சா!” என்று ஜனனியின் வாயைத் துருவ.. சாதாரண நேரமாக இருந்தால் உள்ளே நுழைந்ததில் இருந்து வெளியே வரும் வரை நிகழ்ந்ததை காட்சி மாறாமல் அப்படியே விவரித்து இருப்பாள்.

இப்போது வாசுதேவனைப் பற்றிய நினைவுகள் ஓடியதால் “நல்லா போச்சு!” என்றதுடன் நிறுத்திக் கொண்டாள்.

“என்ன சாப்பிட்டீங்க?” என்று கேட்க,

“நீ என்ன என்னை இன்டர்வியு எடுக்கறியா? உனக்கு இப்போ என்ன தெரியணும்!” என்று அவினாஷிடம் முகத்தைக் காட்ட, எப்போதும் இருக்கும் விளையாட்டுத்தனம் கிஞ்சித்தும் முகத்தில் இல்லை.

எப்போது இருந்து ஜனனி இப்படி மாறினாள் என்று பார்த்து இருந்தான்.

அவினாஷ் தன்னையே பார்த்து இருப்பதை புரிந்து, நைட்டியை எடுத்துக் கொண்டு உடை மாற்ற குளியலறையில் புகுந்து கொண்டாள்.

வேலைக்குத் தேர்வான உடனேயே அக்கா இன்னும் விவரமாக ஆகிவிட்டாளோ? விளையாட்டுத்தனத்தை குறைத்துக் கொண்டாளோ? என்று தான் தோன்றியது.

மனதில் ஏதோ சலனம் என்று தோன்றவில்லை.. ஜனனியின் மனம் யார் புறமாவது செல்லக் கூடும் என்ற நினைவே யாருக்கும் இல்லை. இவர்கள் ட்ரீட் கிளம்பும் பொழுது கூட இமானிடம், “அண்ணா பத்திரமா வீட்லயே விட்டுடுங்க!” என்று சொல்லி அவினாஷ் தானே கார்க் கதவையே மூடினான். அங்கே சென்று யாரையாவது பார்க்கக் கூடும் என்று எப்படி தெரியும்.

யோசித்தவாரே அங்கே தான் அமர்ந்து இருந்தான். ஜனனி குளியலறைக் கதவை திறக்கவும் அவளின் போனில் மெசேஜ் டோன் வரவும் சரியாக இருந்தது.

“என்ன?” என்று அவினாஷ் எடுத்துப் பார்க்கப் போக..

“டேய்! அது என் ஃபோன்! என் ஃபிரண்ட்ஸ் ஏதாவது மெசேஜ் பண்ணியிருப்பாங்க! போனை எடுக்காத!”

“ஏன் உன் ஃபிரண்ட்ஸ்து நான் ஏன் பார்க்கக் கூடாது!” என்று ஃபோனை எடுக்க..

“டேய் மடையா, ஏதாவது கேர்ள்ஸ் டால்க் இருக்கும்!” என்று கத்த,

“ஓஹ்!” என்றபடி எடுத்த இடத்தில் போனை வைத்துச் சென்றான்.

பின்னே ஒரு முறை ஜனனியின் போனை எடுத்துப் பார்த்துவிட்டு “நீங்க பொண்ணுங்க இப்படி எல்லாம் பசங்களை பத்தி பேசுவீங்களா?” என்று கேட்டு இருக்கிறான்.. அது முன்பு எப்போதோ! அதிலிருந்து ஜனனி, “என்னோட மெசேஜஸ் பார்க்காதே!” என்று சொல்லி இருக்கிறாள். ஆனாலும் எப்போதாவது அவன் பார்ப்பது தான்.

இன்று எடுக்கவும் ஏதோ ஒரு கடுப்பில் தான் கூறினாள், அப்படி ஏதாவது அவன் பார்க்கக் கூடாத மாதிரி இருக்கும் என்று சொல்லவில்லை.

இப்போது அவள் எடுத்துப் படிக்க, “ஐயோ, இதை அவினாஷ் பார்த்திருந்தால் என்னைக் கேள்விகளால் துளைத்து எடுத்து இருப்பான்” என்று தோன்றியது.

ஆனாலும் முகத்தில் அதைப் படிக்கும் பொழுது ஒரு மெல்லிய முறுவல், மனதில் ஒரு இனிய சாரல்.

“ஹாய்! நான் வாசுதேவன், வீட்டுக்குப் போய் சேர்ந்துட்டீங்களா!” என்று ஒரு மெசேஜ்.

அப்போது தான் ஒரு மணிநேரத்திற்கு முன் இவனைப் பார்க்கக் கூடாது, தள்ளி இருக்க வேண்டும் என்று நினைத்தோம் என்று நினைத்ததே மறந்து போனது.

“எப்படி உங்களுக்கு என் நம்பர் தெரியும்?” என்று பதில் மெசேஜ் அடித்த பொழுது அவளின் குறும்புத்தனம் முகத்தில் மீண்டு இருந்தது.

 “நீ தானே என்னைக் கூப்பிட்ட” ஒருமைக்கு தாவி இருந்தான்.  

“நான் கூப்பிட்டேனா? எப்போ?”

“உன் போன்ல இருந்து” என்று வாசுதேவன் மெசேஜ் செய்ய,

“நானா! இல்லை!” என்று அவள் பதில் மெசேஜ் செய்ய,  

இப்படியாக அரை மணிநேரம் மெசேஜ் செய்து.. முற்றிலுமாக பேலன்ஸ் தீர்த்தாள் ஜனனி.

“எங்கேடா பேசிக் கொண்டு இருந்தோம், திரும்ப சத்தமில்லை!” என்று நினைத்து வாசுதேவன் அவளை கைபேசியில் அழைக்க,

“பேலன்ஸ் போய்டுச்சு! இனி ரீசார்ஜ் பண்ணனும்!” என்றாள் எடுத்த வுடனே,

“வாட்ஸ் அப் வந்திருக்கலாம் தானே!”

“அதுவும் நெட் பேக் தீர்த்துட்டேன்!” என,

அதற்குள் எங்கே உள்ளே சென்ற பெண் காணவில்லை என்று செல்லமாள், “ஜனனி!” என்று கூப்பிட,

“அம்மா கூப்பிடறாங்க பை!” என்று போனை வைத்து விட்டாள்.

இப்போதுதான் பேசினால் அதற்குள் வைத்து விட்டாளே என்று வாசுதேவனுக்கு ஏமாற்றமாக இருந்தது. என்னவோ ஜனனியிடம் பேச வேண்டும் என்ற ஆர்வம் அலைகடலென பொங்கியது. அவளைப் பார்க்கும் போதே மனதில் இருந்த கவலைகள் எல்லாம் பின்னுக்கு ஓடியது.

ஜனனி ரூமில் இருந்து வெளியே வந்தவள் “என்னமா?” என்றாள் இயல்பாக, முகத்தை தூக்கிக் கொண்டு இருந்தவள் இப்போது இயல்பாக பேசவும், செல்லமாளும் பேச.. நேரம் ஓடியது.

ஆனாலும் அன்றிலிருந்து வாசு அவளுக்கு மெசேஜ் செய்வதும் அவளும் பதிலுக்கு செய்வதும் பின்னர் கைபேசியில் உரையாடுவதும் சகஜமாக இருவருக்குள்ளும் ஆரம்பித்தது.   

என்ன பேசுகிறாள் என்று கேட்டால் ஜனனிக்கு சத்தியமாக சொல்லத் தெரியாது.. ஆனாலும் வாசுவோடு பேசும் ஒவ்வொரு நிமிடத்தையும் எதிர்பார்த்தாள், ரசித்தாள்.. மனதிற்கு மிகவும் இனிமையாக உணர்ந்தாள்.

ஆனாலும் இதுவரை அவன் என்ன படிக்கின்றான்? என்ன செய்கின்றான்? என்று கேட்டதில்லை. யார் என்று தெரியும் அவ்வளவே! இந்த ஹோட்டலில் வேலை செய்கிறான் தெரியும் அவ்வளவே!

ஜனனிக்கு அப்படி ஒன்றும் விவரம் தெரியாது இதை கேட்கும் அளவிற்கு என்பது போலக் கிடையாது. அவனிடம் பேசாத பொழுது கேட்க வேண்டும் என்று தோன்றும். ஆனால் பேசும் பொழுது எதுவும் ஞாபகத்தில் நிற்காது.     

ஆனால் வாசு நன்கு உணர்ந்தான். இன்னும் தன்னைப் பற்றி அவள் எதுவும் தெரிந்து கொள்ள முயலவில்லை என்று. அவள் கேட்காத பொழுது, உன் வீட்டில் யார் யார் என்ன செய்கிறார்கள் என்பது போல பேச்சுக்கள் வாசுவிடம் இருந்தும் வரவில்லை.

பேச்சுக்களை ஒவ்வவொரு நொடியும் பேசும்போது ரசித்தாள், பேசியவனையும் மனம் ரசித்தது, நேரில் காண விழைந்தது. ஆனால் எப்படி சொல்லுவாள். உங்களைப் பார்க்க வேண்டும் என்றா?

வாசுதேவனிற்கு இதற்கு பெயர் தான் காதல் என்பது தெளிவு, ஆம் அவனுக்குத் திண்ணமே! அவனுக்கு ஜனனியைப் பிடித்திருக்கிறது.. அவளோடு அவன் வாழ்க்கை அமைய வேண்டும் என்று.

ஜனனி மிகவுமே அவனை ஈர்த்தாள்!!!

பேசினாலும் பார்க்க முற்படவில்லை வாசு.. ஒரு வேளை இது ஈர்ப்பு மட்டுமே என்றால் பார்க்காத பொழுது இது குறையவோ மறையவோ செய்யும் என,

ஆனால் குறையவும் இல்லை மறையவும் இல்லை.. ஜனனியோடு பேசும் மணித்துளிகள் மட்டுமே அவனை உற்சாகமாக வைக்கிறது என்பது போல உணர ஆரம்பித்தான்.

இதே உணர்வு, ஈர்ப்பு, பிடித்தம், அதையும் மீறி காதல், ஜனனியிடம் இருக்கிறதா என்று தெரியவில்லை. தெரிந்து கொள்ள ஒரு ஆவல் மனதில் எப்போதும் இருந்து கொண்டே இருந்தது.

ஜனனிக்கு நேர் எதிர் வாசு. அதனால் தான் அவனைக் காந்தமாய் இழுத்தால் ஜனனி.. வாசு மிகவும் பொறுப்பான, கஷ்டங்களை உணர்ந்து, அனுபவித்து, வளர்ந்த பிள்ளை. அதனால் தான் விளையாட்டு பிள்ளையான ஜனனியை அவனுக்கு மிகவும் பிடித்தது.  

ஜனனி கவலை என்பதே என்னவென்று தெரியாமல் வளர்ந்தவள்.  

ஜனனியின் குறும்பான பேச்சு, அவளுடைய விளையாட்டுத்தனம் எல்லாம் அவனை அணு அணுவிலும் ஈர்த்தது. அதே சமயம் பயம் கூட, இவ்வளவு விளையாட்டுத்தனம் நிறைந்தவள், என்ன உணர்வோடு தன்னிடம் பேசுகிறாள். வெறும் நட்பு மட்டுமேயா… இது காதல் அல்லவோ.. என்னைப் பற்றி இதுவரை எதுவுமே கேட்டது இல்லையே..     

அதே சமயம் சொல்லிக் கொள்வது போல என்னிடம் என்ன இருக்கிறது.. அதுவுமே ஒரு பயம்.. காதல் சொல்லும் அளவிற்கு உனக்கு தகுதி இருக்கிறதா என்று ஒரு கேள்வி.

இந்த உணர்வுகள் மனதினில் ஓட.. ஒரு இரண்டு நாட்கள் ஜனனிக்கு மெசேஜ் போடவும் இல்லை, அழைக்கவும் இல்லை.. முதல் நாள் அவளிடம் இருந்தும் எந்த மெசேஜும் இல்லை.

எப்பொழுதும் இவன் போடும் மெசேஜிற்கு பதிலாகத் தான் ஆரம்பிக்கும் அவளின் மெசேஜ்.

அடுத்த நாள் “வாசு உங்க மெசேஜ் காணோம்” என்று காலையிலேயே மெசேஜ் செய்தாள்.

அதற்கு பதில் இல்லை.. சரி, ஆர்டினரி மெசேஜ் செய்தால், பார்த்தானோ இல்லையோ என்று தோன்ற வாட்ஸ் அப் மெசேஜ் செய்தாள்.

அதில் பார்த்த குறியீடும் வந்தது, ஆனால் பதில் இல்லை. அதுவரையிலும் ஒன்றும் தெரியவில்லை. ஆனால் பார்த்த பின்பும் ஏன் பதிலில்லை என்று மண்டையைக் குடைய ஆரம்பித்தது.

எதிலும் அவளின் கவனம் செல்லவில்லை. மாலைவரை நிமிடத்திற்கு ஒரு முறை மெசேஜ் வந்து விட்டதா என்று பார்த்துக் கொண்டு இருந்தாள்.

அதற்கு மேல் தாளாமல் வாசுவிற்கு அழைத்தாள். வாசு அந்த அழைப்பை பார்த்துக் கொண்டு தான் இருந்தான். ஆனால் எடுக்க முயலவில்லை.

பலமுறை அழைத்து விட்டாள், ஆனால் வாசு எடுக்கவில்லை.

“உடம்பு ஏதாவது சரியில்லையா? வீட்டில் யாருக்காவது சரியில்லையா? ஏதாவது பிரச்சனையா? மெசேஜ் பண்ணுங்க வாசு!” என்று திரும்பத் திரும்ப பல மெசேஜ்கள்.

அடுத்த நாள் காலை கல்லூரி வந்ததும் திரும்பவும் தன்னுடைய தொலைபேசியில் இருந்து அழைத்தாள், எடுக்கவில்லை. உடனேயே இமானிடம் ஃபோனை வாங்கி வாசுவின் நம்பரை அழைத்தாள்.. இரண்டு ரிங்கிலேயே எடுக்கப்பட்டு “ஹலோ!” என்ற வாசுவின் குரல் கேட்க,

அப்பொழுது தன்னைத் தான் தவிர்க்கிறான் என்பது புரிய, மளுக்கென்று கண்களில் நீர் நிறைந்தது.

ஏனென்று தெரியவில்லை..

“ஹலோ, யாருங்க!” என்று வாசு திரும்பவும் கேட்க,

“இது இமானோட ஃபோன்!” என்றாள் ஜனனி.

அந்தப் புறம் பேச்சே இல்லை!

“ஏன் என் ஃபோன் மட்டும் எடுக்கலை? நான் எதுவும் உங்களை சண்டை போடலை, திட்டலை, எதுவுமே பண்ணலை, ஏன்? எனக்கு தெரியாம ஏதாவது பேசும்போது ஹர்ட் பண்ணிட்டேனா?” என்று கேட்டாள், கேட்கும் போதே குரலின் நெகிழ்வு நன்கு தெரிந்தது.

கலங்குகிறாள் என்று புரிந்தது. வாசு பொய் சொல்லவோ காரணம் சொல்லவோ விழையவில்லை.. “வேண்டாம்னு தான் எடுக்கலை!” என்றான்.

“என்ன வேண்டாம்?”

“உன்னோட பேசறது!”

“ஏன் என்ன பண்ணினேன் நான்?” என்றாள் கலக்கமாக.

“எப்பவும் உன்னோட பேச்சைக் கேட்கணும் போல இருக்கு! உன்னைப் பார்க்கணும் போல இருக்கு! அதுதான் அவாய்ட் பண்றேன்!” என்றான் ஆழ்ந்த குரலில்..

கலக்கம் இன்னும் அதிகமாக…. அவளின் இதயம் துடிக்கும் ஓசை அவளுக்கே கேட்டது. என்ன சொல்ல வருகிறான் என்று புரியாத அளவிற்கு முட்டாளா என்ன ஜனனி?

அதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் ஜனனி மௌனம் காக்க..  

“அதுதான் எடுக்கலை! சாரி! உன்னை ஹர்ட் பண்ணியிருந்தா! பட் நாம பேச வேண்டாம்! பேசினா நான் ஐ லவ் யு ஜனனின்னு எப்போவேணா சொல்வேன்!” என..

“என்ன? ஐ லவ் யூ வா!” மனது பட படவென்று அடிக்க ஆரம்பித்தது. பதட்டத்தில் ஜனனி எதுவும் பதில் சொல்ல முயலாமல் போனை கட் செய்தாள்.

அந்தப் புறம் வாசு போனை வெறித்தான்! வைத்து விட்டாளா? அவ்வளவு தானா!

வேறு என்ன சொல்ல வேண்டும் என்று நீ எதிர்பார்க்கின்றாய்? ஐ லவ் யு என்றா.. அவள் சொல்வாளா? சொன்னாலும் இது நடக்குமா என்ன? நீ! உன் வீடு! உன் சூழல்! உன் அப்பா, அம்மா! இதை நினைக்கவில்லையா.. உன் வயதென்ன? இப்போது போய் காதல் என்று உன் அம்மாவின் முன் நிற்க முடியுமா..

பொறுப்புகள் அதிகமாக, உன்னை நீ பெரியவனாக உணர்ந்தாலும் இது நீ திருமணம் செய்யும் வயதில்லையே.. நீ பூரணியை விடவும் சிறியவன்.  

மனநிலை பிறழ்ந்த உன் அப்பாவோடு நித்தமும் உன் அம்மா போராடுவது உனக்குத் தெரியாதா.. அவருக்கு ஒரு நிம்மதி சாந்தி இல்லாத பொழுது, இப்படிக் காதல் என்ற ஒரு வார்த்தை உன்னிடம் இருந்து வரலாமா? மனது உணர்ந்தாலும், வாய் வாக்கியமாக வரலாமா?

இதுதானா நீ வாசு? மனது கேள்வியாய் கேட்க,

ஐயோ! நான் ஜனனியிடம் இதைப் பேசாமல் இருந்திருக்கலாமோ? மனது அடித்துக் கொண்டது. இப்போது அவள் காதலிக்கிறேன் என்று சொல்லி விட்டால் என்ன செய்வாய்?    

அம்மா! அம்மாவை எப்படி மறந்தாய்!!

ஸ்வாதி ரெட்டியாக பிறந்தவர், ஸ்வாதி பாலகிருஷ்ணன் ரெட்டியாக மாறிய பின் தானே நீ பிறந்தாய்.. காதல் எங்கே இருந்தவரை எங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.

சுந்தரத் தெலுங்கு பெண்ணான அவர் பெற்றவர்களை எதிர்த்துத் தமிழ் மண்ணின் மகனான உன் தந்தையைக் காதலித்து திருமணம் செய்திருக்கலாம்..

செல்வச் சீமாட்டியான அவர், அவருடன் ஒப்பிடும் பொழுது சாதாரண நிலையில் இருந்த உனது தந்தையுடன் நன்றாக பத்து ஆண்டு காலம் வாழ்ந்தும் இருக்கலாம்.. 

அதன் பின் ஒரு விபத்தில் உன் தந்தைக்கு அடிப்பட்டு மனநிலை பிறழ்ந்த நாளாக.. ஒரு குழந்தையை போல இத்தனை வருடங்களாக இன்னும் பார்த்துக் கொண்டிருக்கிறார்.  அவர் என்ன சாதாரண குழந்தையா இல்லை சங்கிலியால் கட்டி வைத்து பார்த்துக் கொள்ளும் நிலையில் இருப்பவர்.

அவரை மட்டுமல்ல அவரின் அப்பா அம்மாவை கூடவும்..   

இப்படி வாழ்க்கையை போராட்டங்களோடு வாழ்ந்து கொண்டிருப்பவரோடு தோள் கொடுக்காமல், காதல் சொல்வாயா?

 

Advertisement