Advertisement

        அத்தியாயம் ஐந்து :

அம்மாவிற்கும் மகளிற்கும் சண்டை அதிகம் ஆகியதே தவிர குறையவேயில்லை.

“இவ என்கிட்டே ஒரு வார்த்தை வெளில போறேன்னு சொல்லலை, பெர்மிஷன் கேட்கணும், இல்லை அட்லீஸ்ட் இன்ஃபார்மேஷனாவது சொல்லணும். எதையும் செய்யலை. ஆனா நீங்க அவளுக்குப் பணம் கொடுத்து இருக்கீங்க! அப்போ நான் யாரு?” என்று செல்லமாள் பரதனிடம் சத்தமிட,

“எதுக்கு சொல்லணும் எதுக்கு சொல்லணும், நேத்து இருந்து என்கிட்டே சண்டை தான் பிடிக்கறீங்க! ஆனா இப்போ வரைக்கும் நீங்க என்ன பண்ணுனீங்க.. ஒரு விஷ் இல்லை ஒன்னுமில்லை… அட எனக்கு விஷ் பண்ணலைன்னா போகுது, ஆனா உங்களுக்கு ஒரு சந்தோஷமில்லை..” என்று மகளும் முறைத்து நிற்க,

“எப்படி சந்தோசம் வரும்.. நீ ஏதோ வந்தவுடனே ஒரு வார்த்தை சொன்னதுக்கு அப்படி இன்சல்ட் பண்ற.. அப்புறம் எப்படி சந்தோசம் வரும்”

அம்மாவிற்கும் மகளிற்கும் இடையில் பரதன் நொந்து விட்டார். அவினாஷ் நடுவில் வரவேயில்லை. இருவரும் பிறகு தன் மீது பாய்வார்கள் என்று புரிந்தவன்.

வீட்டில் மற்றவர்களும் வேடிக்கைத் தான் பார்த்தனர். அம்மாவும் மகளும் சரிக்கு சமமாய் வாய் ஆடும் போது யாருக்கென்று பேசுவர்.

இரண்டு நாட்கள் முறைத்துக் கொண்டு திரிந்தவர்கள்அவர்களாக ஓய்ந்து சண்டையை விட்டனர். ஆனாலும் முறைப்பு ஓயவில்லை.

இப்போதெல்லாம் சில முறை வாசுதேவனின் முகமும் கண்களுக்குள் மின்னி மறைந்தது. எப்போதும் ஜனனி என்ன செய்கிறாள் என்று பார்த்துக் கொண்டே இருப்பவள், என்ன யோசிக்கிறாள் என்று கணிக்கக் கூடியவள் ஒருத்தி மட்டுமே! அவள் பூரணி!

இப்போது பூரணி திருமணமாகி சென்றிருக்கக் கூடிய இந்த தருணத்தில், பூரணி புது வாழ்க்கை, புது இடம், மனதுக்கு மிகவும் பிடித்து விட்ட கணவன், இவ்வாறு இருக்க, அவள் ஜனனியிடம் எப்படி கவனத்தை வைப்பாள். முடியாது! தொலைபேசி அழைப்பு கூட அரிதாகிவிட்டது.

கூட பூரணி இல்லாத போது அம்மாவோ, தம்பியோ, அப்பாவோ இன்னும் கூடுதல் கவனத்தை ஜனனியிடம் வைத்து அவளிடம் எப்போதும் இருக்கும் நெருக்கத்தை விட அதிகப்படுத்தியிருக்க வேண்டும். தவறி விட்டனர் அந்த விஷயத்தில்.

“நீ என்னை விஷ் பண்ணலை!” என்று சொன்ன பிறகாவது செல்லமாள் செய்திருக்க வேண்டும்… எங்காவது வெளியில் அழைத்துச் சென்று, இல்லை இது உனக்காக என்று சமைத்து, எந்த வகையிலாவது காட்டியிருக்க வேண்டும்.

அதை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளாமல் அசால்டாக விட்டு விட்டார்.

“செய்!” என்று சொன்னால் செய்ய மாட்டாள். “செய்கிறாயா!” என்று சொன்னால் யோசிப்பாள், “எனக்காகச் செய்!” என்று அன்போடு ஒரு வார்த்தை சொன்னால், அடுத்த நொடி செய்ய ஆரம்பித்து விடுவாள். அது அவளின் இயல்பு! கனிவான அன்பான வார்த்தைகள் மட்டுமே அவளிடம் ஒரு வேலையைச் செய்விக்க வைக்கும்.

வாசுதேவனைப் பார்த்தும் ஒரு ரசிப்பு இருந்தது ஜனனியிடம் ஆனால் ஈர்ப்பு இல்லை. மூன்றாவது சந்திப்பில், அதுவும் அவனாக வந்து பேசிப் பெயரை தெரிந்து கொள்ள வைத்தான்.

அந்த வாழ்த்து, அவன் சொன்ன விதம், ஜனனியைக் கவர, அதன் பின் தான் வாசுதேவன் கவர்ந்தான்.

ஒரு வேளை வீட்டில் இன்னும் அம்மா, தம்பி என்று அவர்கள் ஆர்ப்பாட்டமாக அவளைப் பாராட்டி வாழ்த்தி இருந்தால் வாசுதேவன் ஜனனியின் கவனத்தில் இவ்வளவு அழுத்தமாகப் பதிந்து இருக்க மாட்டான்.

செல்லமாள் குறை சொல்ல முடியாத அம்மா தான், மகளிடம் சந்தோஷத்தை காட்டா விட்டாலும் அறிந்தவர் தெரிந்தவர் என்று அத்தனை பேரிடமும் பெருமை பேசினார் தான்.. சில சமயம் அதை பிள்ளைகளிடமும் காட்ட வேண்டும். ஆனால் கிரக நிலைகளின் மாற்றமோ என்னவோ இதில் சறுக்கி விட்டார்.

மறுவாரமே இமானின் பிறந்த நாள் வர.. ட்ரீட் என்று சொன்ன நண்பர்களிடம்..   அந்த ஹோட்டல் தான் போக வேண்டும் என்று சொல்லி, ஏற்கனவே அங்கே அந்த பிரச்சனை வேண்டாம் என்று சொன்னவர்களிடம், இல்லை அங்கே தான் போக வேண்டும் என்று ஜனனியைப் பிடிவாதம் பிடிக்க வைத்தது வாசுதேவனைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் மட்டுமே.

அங்கே சென்ற உடனே அவன் எங்கே என்று தேடவும் வைத்தது.

வாசுதேவன் கண்ணில் படாத போது யாரிடம் கேட்பது என்று யோசித்து சுற்றும் முற்றும் பார்வையைச் சுழல விட, “யாரைப் பார்க்கிற?” என்றாள் ரக்ஷா.

“அதான் அன்னைக்குப் பார்த்தோமே அவரை, வாசுதேவன்!” என்றால் தயங்கி தயங்கி.   

“ஓஹ்ஹ்! அதுக்குத் தான் இங்க வரணும்னு பிடிவாதம் பிடிச்சியா”   

“எஸ்!” என்றபடி தலையாட்ட,

அப்போது மெனு கேட்க வந்தவரிடம் “உங்க மேனேஜர் மிஸ்டர் வாசுதேவன், எங்க இருப்பார்” என்று ரக்ஷா கேட்க,

“எங்கயாவது ரௌண்ட்ஸ்ல இருப்பார்”, என்று அவன் சொல்லும் போதே,

“கூப்பிடச் சொல்லேன்!” என்று ஜனனி சைகைக் காட்ட,

“அவரைப் பார்க்கணும்!”

“நீங்க யாருன்னு சொல்ல?”

“ஜனனி சொல்லுங்க!” என்றவளிடம் தலையசைத்துச் சென்றான்.

பிறகு அவர்கள் சொன்ன உணவு வகைகள் வர, அப்போதும் வாசு வரவில்லை.. சொல்லி அனுப்பிய ஆளும் கண்ணில் படவில்லை. ஜனனியின் பார்வை வாயிலை விட்டு அகலவில்லை. எல்லோரிடமும் சகஜமாக பேச முடியவில்லை.. யோசனைகள் வாசுவைச் சுற்றியே இருந்தன. உணவையும் அளந்து கொண்டிருந்தாள்.

பார்க்க வேண்டும் என்ற ஆவல் மிதமிஞ்சி இருந்த போதும், வர சொல்லியதும், ஏதோ தவறு செய்கிறோமே, எதற்கு வர சொல்கிறோம் என்று ஒரு மன சஞ்சலம்.

“ஹேய்! சாப்பிடுடி! உன் ஹீரோ வருவார்!” என்று ரக்ஷா காதை கடிக்க,

“என்னது ஹீரோ வா?” என்ற ஜனனி, “அப்படித்தானோ தனக்கு!” என்று ஒரு புதிய பரிமாணத்தில் சிந்தனையை ஓட்ட,

அவளின் ஹீரோ எனப்பட்ட வாசுதேவன், சரியாக அந்த நேரம் உள்ளே நுழைந்தான்.. “வாவ் ஹீரோ தாண்டி!” என்று ரக்ஷா மீண்டும் ஜனனியின் காதைக் கடிக்க..

ஆம்! அவனின் தோற்றம் அன்று அவ்வளவு வசீகரமாய் இருக்க.. கூடவே அவனின் வேக நடை ஜனனியை இன்னும் ஈர்த்தது.

அவர்கள் நேரம், அந்த ஹோட்டலில் சரியில்லை என்று நிரூபிப்பது போல மீண்டும் ஒரு சம்பவம்..

அந்த சமயம் அங்கே உணவருந்த வந்த நான்கு இளைஞர்களில் ஒருவன் வேண்டும் என்றே ஓரமாக அமர்ந்திருந்த ரக்ஷாவின் தோளின் மீது இடித்துக் கொண்டு சென்றான்.     

“ஹேய்! என்ன பண்ற?” என்று ரக்ஷா உடனே எழுந்து கோபமாக கேட்க,

உடன் இருந்தவர்களுக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை. ஜனனியும் ரக்ஷாவும் வாசுதேவனைப் பார்த்திருக்க.. வாசுதேவனும் அவர்களைப் பார்த்தபடி வந்ததால்.. இதைப் பார்த்து இருந்தான்.

        “வை ஷவுட்டிங், நான் வரும்போது நீ சாஞ்சு என்னை இடிச்சிட்டு என்னை கேட்கறியா!” என..

“என்ன நான் இடிச்சனா?” என்று ரக்ஷாவும் பதிலுக்குப் பேச..

உடனே இமான் எழுந்தவன்.. “என்ன பேசற?” என்றான் அந்த இளைஞனைப் பார்த்து..

அதற்குள் வாசுதேவன் அருகில் வந்திருந்தவன், “மிஸ்டர், சாரி கேளு! நீதான் இடிச்ச, நான் பார்த்தேன்!” என்றான்.

“சாரியா! எதுக்கு கேட்கணும்? நீ யாரு நடுவுல?”

“நான் இங்க மேனேஜர்!”

“இருந்துட்டுப் போ! நான் இடிக்கலை! சாரி கேட்க முடியாது! அப்படியே இடிச்சு இருந்தாலும் பதிலுக்கு இடிக்கச் சொல்லு சரியா போயிடும்!” என்றான் அலட்சியமாக.

அவனிடம் இருந்து வந்த வாடையே அவன் குடித்திருக்கிறான் என்று காட்ட,

இமான் பேச வர.. அவனை கை அமர்த்திய வாசுதேவன்.. “ஒழுங்கா சாரி கேள்!” என்றான்.

“நான் யாருன்னு தெரியுமா?”

“நீ யாரா வேணா இருந்துட்டுப் போ! ஒழுங்கா சாரி கேள்!” என்றான் மீண்டும்.

அதற்குள் ஹோட்டலின் சில பணியாளர்கள் அங்கே கூடி விட, வாசுதேவனின் முகத்தில் இருந்த தீவிரம், எதிரில் உடன் இருந்தவர்களுக்கு ஒரு அச்சத்தை கொடுத்தது.    

“டேய்! சாரி கேளுடா! வீணா பிரச்சனை வேண்டாம்” என்று ஒரு நண்பன் அவனிடம் சொல்ல, இன்னொரு நண்பன் “அவனுக்காக நான் சாரி கேட்கறேன்!” என்று சமாதானம் செய்ய..

“டேய் யாரு இவன்னு சாரி கேட்கறீங்க..” என்று அந்த குடித்திருந்தவன் கத்தினான்.

சுற்றிலும் பார்வையை ஓட்டிய வாசுதேவன் எல்லோரும் இங்கே பார்த்திருப்பதை பார்த்து.. “இவனைக் கூட்டிட்டுப் போங்க!” என்றான் அவன் நண்பர்களைப் பார்த்து,

“நாங்க சாப்பிட்டு தான் போவோம்!” என்று அவன் சட்டமாக அங்கே அமர்ந்துக் கொள்ள..  வாசுதேவன் அதன் பிறகு ஒன்றும் பேசவில்லை..

இவர்களிடம் திரும்பி “சாரி! நீங்க இங்க வரும்போது ஏதாவது அன்வான்டட்  நடக்குது!” என்று மன்னிப்பு கேட்க..

“அப்போ இவங்களை ஒன்னும் பண்ணலையா? இப்படியே விட்டுடுவீங்களா! என்ன மேனேஜ்மன்ட்? என்ன ஹோட்டல்?” என்று கோபப்பட்டவன் ஜனனியிடம் திரும்பி..

“நாங்க இங்க வேண்டாம்ன்னு அப்போவே சொன்னோம் தானே! பாரு திரும்ப!” என்றும் கோபத்தோடு சொல்ல..

எல்லாம் அச்சத்தோடு பார்த்துக் கொண்டிருந்த ஜனனியின் கண்கள் லேசாக கலங்கவே ஆரம்பித்தது.

ரக்ஷா இமானிடம் பாய்ந்தால் “வாயை மூடு, யாரோ பண்ணினதுக்கு…” என்று ஆரம்பிக்கும் போதே,

ஜனனியிடம் கோபத்தைக் காட்டி விட்டோம் என்று புரிந்து “சாரி! சாரி!” என்று இமான் கேட்க ஆரம்பித்தான்.

ஆனால் முகம் தெளியாத ஜனனி “இட்ஸ் ஓகே இமான், சாரி! உன்னோட பர்த்டே என்னால ஸ்பாயில் ஆகிடுச்சு.. நான் கிளம்பறேன்!”  என்று கிளம்பினாள்.  

மனது அவளையேத் திட்டிக் கொண்டு இருந்தது, வாசுதேவனை பார்க்கவேண்டும் என்று என்ன இழுத்து வைத்திருக்கிறாய். மனது திட்ட கண்கள் வாசுதேவன் புறம் செல்ல முயலவில்லை.  

ரக்ஷாவின் கண்கள் இமானை முறைத்த முறைப்பில்.. இருவருக்குள்ளும் நட்பையும் மீறிய ஏதோ ஒன்று என்று புரிய, அதனைக் கொண்டு தான் ரக்ஷாவை இடித்ததற்கு இமான் இப்படி ஜனனியிடம் கூட கோபப்படுகிறான் என்று வாசுதேவனுக்குப் புரிந்தது.

ஜனனியைப் பார்க்க, அவள் பேகை தூக்கிக் கொண்டு வாசுதேவன் புறம் கூட திரும்பாமல் நடக்க ஆரம்பிக்க..

இமான் யோசிக்கவேயில்லை.. ஜனனியின் முன் வேகமாக சென்று மண்டியிட்டு அமர்ந்தவன் கை கூப்பி “சாரி ஜனனி.. தோ அந்த பிசாசை இடிச்சிட்டான்னு ஓவர் ரியாக்ட் பண்ணிட்டேன்” என ரக்ஷவைக் காட்டினான்.  

“ஹேய்! என்ன பண்ற நீ?” என்று ஜனனி இன்னும் பதறி விட்டாள்,

அருகில் வந்த ரக்ஷா “டேய்! இவளை ஏன்டா இன்னும் இன்னும் டென்ஷன் பண்ற, எருமை எழுந்திரு, அவ பயந்துடுவா” என,

அந்த இளைஞன் இடித்த பிரச்சனை போய் இப்போது ஜனனியை எப்படி சமாதனம் செய்வது என்ற கவலை தான் எல்லோருக்கும்,

அப்போதும் இமான் அப்படியே அமர்ந்திருக்க, “ஜனனி, அவனை மன்னிச்சிட்டேன்னு சொல்லு, பர்த்டே பாய்!” என ரக்ஷா சொல்ல,

“எழுந்திரு! எழுந்திரு!” என்றாள் ஜனனி..

திரும்ப இமான் அவளிடம் சாரி கேட்க, ஜனனி அவனுக்கு பதில் சொல்லிக் கொண்டு இருக்க,

பார்த்து நின்ற வாசுதேவனின் அருகில் வந்த ரக்ஷா, “ஹீரோ சார், உங்களால தான் எங்களுக்குள்ள இப்போ பிரச்சனை!” என்றாள் மெலிதாக அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில்.

“நானா?” என்று வாசு பார்க்க,

“பின்னே உங்களை பார்க்கணும்ன்னு தான் அந்த அம்மணி இங்க வரணும்னு அடம் பிடிச்சா?” என்று சொல்ல,

திரும்பி அவளை நேர் பார்வை பார்த்த வாசுதேவன், “சும்மா சொல்லலையே?” என,

“அய்யோங்க! நிஜம்மா!” என..

வாசுதேவனின் முகத்தில் உதித்த புன்னகையைப் பார்த்தவள், வேறு பேசும் முன்.. “எனக்கு ஒரு அவசர வேலை.. நீங்க உங்க ஃப்ரண்ட்ஸ பாருங்க.. ஒரு பத்து நிமிஷம் நான் வர்றேன்.. இந்த அவசர வேலை உங்களுக்காக!” என்று சொல்லி வாசுதேவன் செல்ல..

“இந்தப் பொண்ணு இவனை பார்க்கிறான்னு சொன்னா, இவன் என்னடா உங்களுக்காகன்னு என்னைக் காட்டுறான்” என்று குழம்பிய ரக்ஷா, “ஒரு வேளை என்னை சைட் அடிக்கறானோ? கூடாதே! ” என்று குழம்பியே விட்டாள்.

அதற்குள் இமான் “வா!” என்று அவளிடம் சொல்ல.. இப்போதைக்கு சண்டை முடிந்தது என்று திரும்ப அவர்கள் அமர..

“சர்! இதெல்லாம் ஆறியிருக்கும்னு புதுசா செர்வ பண்ண சொன்னாங்க” என்று முன் இருந்த உணவு வகைகள் எடுத்துப் போக,

சமாதானம் ஆகாத போதும், அமர்ந்த நண்பர்கள் குழாம்.. இப்போது அந்த இடித்த இளைஞனின் புறம் பார்வையைத் திருப்ப..

அங்கே செர்வ் செய்து கொண்டிருந்தவன் எதையோ அவன் மேல் சிந்தி விட, “டேமிட்!” என்று கத்தியபடி அந்த இளைஞன் எழ,

“சாரி சர், சாரி! சாரி!” என்று ஏகத்துக்கும் பணிவாக அந்த சர்வ செய்தவன் மன்னிப்புக் கேட்டு, “சர்! அங்க ரெஸ்ட் ரூம் இருக்கு, வாங்க!” என்று அழைத்தும் போக..

அதற்குள் இவர்களுக்கு மீண்டும் சூடாக வர.. “ப்ளீஸ்டி! அவன் ஒரு லூசு, எனக்காக அவனை மன்னிச்சிடு!” என்று ஜனனியிடம் பேசி அவளை சாப்பிட சொல்லிக் கொண்டு இருந்தாள் ரக்ஷா..

பத்து நிமிடங்கள் கழித்தும் அந்த இளைஞசன் வராததால் நண்பன் ஒருவன் சென்று பார்த்து வேகமாக திரும்பி வந்து “அவன் அடிபட்டு இருக்கான்” என்று கத்த உடன் இருந்த நண்பர்கள் ஓட.. இமான்னும் என்ன என்று பார்க்கப் போனான் ,

அங்கே ரெஸ்ட் ரூமில் அந்த இளைஞன் “யாரோ என்னைத் தள்ளி விட்டாங்க.. அப்புறம் என் முகத்தை மூடி அடிச்சாங்க” என

“நான் இடிச்சவங்களோ”

“இல்லைடா! எல்லோரும் அங்க தான் இருந்தாங்க!” என்று நண்பன் சொல்ல.. வாசுதேவன் வேறு முதல் ஆளாக ஆஜராகி.. பதறி… “நாம போலிஸ் கூப்பிடுவோம்!” என்று சொல்லி போலிசிற்கு அழைக்க வேறு செய்ய.

  தாங்கள் குடித்து இருப்பதால்.. எதுவும் செய்ய முடியாமல் வேறு வழியில்லாமல் “அப்புறம் பார்த்துக்கலாம் வாடா!” என்று நண்பனை கூப்பிட்டு சென்றனர்.

இங்கே இமான் வந்து கதை சொல்ல, வாசுதேவனும் வர, வாசுதேவன் என்று கணித்து “கொஞ்சம் யோசிச்சா இது நீங்க தான் அந்தப் பசங்க கண்டுபிடிச்சிட்டா” என்று ரக்ஷா சொல்ல,

ஜனனி “இவனா?” என்று அதிர்ந்து வாசுதேவனைப் பார்த்தாள்.

“பிடிச்சா, பிடிச்சிட்டு போறாங்க!” என்று வார்த்தைகள் ரக்ஷாவிற்கு பதில் சொன்னாலும் கண்கள் ஜனனியைப் பார்த்தன..

“நீங்களா?” என்ற இமானின் கேள்விக்கு பதில் சொல்ல வில்லை. ஆனாலும் இமானிடம் “நடக்கறது எப்படியும் நடக்கும், அதுக்காக நம்ம அடுத்தவங்களை சொல்லக் கூடாது!” என்றான்.

இமான் புரியாமல் விழிக்க,

“நீ ஜனனியை உன்னால தான்னு சொன்ன இல்லையா அதுக்கு!” என்றாள் ரக்ஷா..

கூடவே ரக்ஷாவைப் பார்த்து, “நீங்க மட்டும் தைரியமா இருந்தா போதுமா, உங்க ஃபிரண்டும் தைரியமா இருக்கணும்.. யாரு இவர்?” என்று இமானைக் காமித்து,

“நீங்க தினமும் பார்க்கறவர், உங்க ஃபிரன்ட், அவர் சொன்னா அப்சட் ஆவாங்களா.. ஒன்னும் அவருக்கு பதில் கொடுக்கணும் இல்லை அவர் ஏதோ டென்ஷன்ல இருக்கார்ன்னு விட்டுடனும் இப்படி கண்ல தண்ணி எல்லாம் விடுவாங்களா?” என்றான்.

“என்ன அழுதாளா?” என்று ரக்ஷா கேட்டு திரும்பவும் இமானை முறைக்க,

“எனக்குத் தெரியாது! அதான் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டுட்டேன்! வேற என்ன பண்ண?” என்றான் இமான் பதறியவனாக,

எதற்குமே ஜனனி எதுவுமே பேசவில்லை.

“டைம் ஆச்சு ரக்ஷா, நான் போகணும்!” என்று சொல்ல,

“ஆரம்பிச்சிட்டா இவ, இன்னும் நிறுத்தவே மாட்டா.. சீக்கிரம் காலி பண்ணுங்கடா” என்று சொல்ல.. வேகமாக உண்டனர். வாசுதேவனை ஜனனி பார்க்கவேயில்லை. ஆனால் வாசுதேவன் ஜனனியை மட்டுமே பார்த்திருந்தான்.

ரக்ஷா வாசுவை பார்த்து.. “இந்த ட்ரெஸ்ல ஏதாவது கொட்டி அவளைத் தனியா அனுப்பட்டா, உங்க டெக்னிக்!” என்று சொல்ல,

“அவங்க ஃபிமேல் ரெஸ்ட் ரூம் போவாங்க, நான் போக முடியாது!” என்று வாசுதேவன் சொல்ல,

  “ஓஹ், ஆமாமில்லை!” என்று ரக்ஷா அசடு வழிய..

அதில் வாசுதேவன் சிரித்து விட்டான்.. அதில் ஜனனி அவனைப் பார்க்க.. கண்களை மூடித் திறந்து, சிரிக்கச் சொல்லி “ஸ்மைல்” என்பது போலச் சிறிய சைகை வாசு செய்ய..

ஜனனியின் முகத்தில் சிரிப்பு வராவிட்டாலும் கண்களில் இருந்த கலக்கம் மறைய அவனைப் பார்த்து இருந்தாள். ஆனாலும் என்னவோ ஒரு தயக்கம் பேச முயற்சிக்க வில்லை, வாசுதேவனும் பேசவில்லை.

அவர்கள் முடித்துச் செல்ல.. ஜனனிக்கு ஒரு சிறு தலையசைப்புடன் விடை கொடுத்தான்.. “ஹல்லோ ஹீரோ சர், திரும்ப இந்த ஹோட்டலுக்கு இப்போதைக்கு நாங்க வரமாட்டோம்!” என்று சொல்லி ரக்ஷா விடை பெற்றவள்..

சிறிது தூரம் சென்று திரும்ப வந்து, “உங்களுக்கு ஜனனி நம்பர் தெரியுமா?”

“இதுவா?” என்று அவன் கைப் பேசியைக் காட்ட, அதில் ஜனனி அவனுக்கு அழைத்து இருந்தாள், அதுவும் ஒரு ஐந்து நிமிடங்களுக்கு முன்னால்..

“இப்போ தான் அவ போன்ல இருந்து கால் குடுத்தேன், அவளுக்குத் தெரியாம!” என்று சொல்ல,

“நாங்க எல்லோரும் அங்க தானே இருந்தோம்!” என்று ரக்ஷா விழிவிரிக்க,

தோளைக் குலுக்கி வாசுதேவன் புன்னைகைத்தான்.

“நீங்க உங்களுக்காகன்னு என்கிட்டே சொன்னீங்களா. நான் கன்ஃபியுஸ் ஆகி பயந்துட்டேன், இப்போ தெளிவாயிட்டேன்”

“பாருடா” என்று கிண்டல் செய்தவன், “உங்களுக்காகன்றதே நீங்க ஜனனி ஃபிரெண்ட்றதுனால தான்!” என்று வாசு சொல்லவும்

“நீங்க சத்தமில்லாம வேலை செய்யறீங்க, டேஞ்சரஸ்!” என்று சொல்லி, ரக்ஷா செல்ல,

“நாம இவனைப் பார்க்கக் கூடாது. அப்பா அம்மாக்குத் தெரியாம இப்படிப் பார்க்கிறது தப்பு”  என்று அவளுக்கு அவளே சொல்லியபடி ஜனனியும் சென்று கொண்டிருந்தாள்.       

 

Advertisement