Advertisement

அத்தியாயம் நான்கு:

அவர்களின் சண்டை முற்றிய சிறிது நேரத்திலேயே பரதன் வந்து விட்டார்.. மகள் அவருக்குக் கை பேசி மூலம் நேர்காணலில் தேர்வான செய்தியைச் சொல்லியிருக்க,

ஒரு அழகிய தங்கச் சங்கலியால் ஆன கைக் கடிகாரத்தை மகளுக்கு வாங்கி வந்தவர்… வீட்டில் ஆளுக்கு ஒரு புறம் முகத்தை தூக்கி வைத்திருப்பதை பார்த்து.. மகளிடம் விரைய.. ஜனனி அவரைப் பார்த்ததும் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள்.

பேசவேயில்லை.. அழுகை அழுகை அப்படி ஒரு அழுகை.. “என்னடா குட்டி? அழக் கூடாது!” என்று பரதன் வாய் வார்த்தைகளால் சொன்ன போதும் மகளின் அழுகையைப் பார்த்துக் கலங்கி விட்டார்.

அப்போது தான் சினிமா போய்த் திரும்பிய அவினாஷிற்கும் ரகுலனிற்கும் அப்படி ஒரு திட்டு விழுந்தது..

“என்னடா பண்ணுனீங்க அவளை?” என்று திட்ட,

“ஒன்னுமே பண்ணலை டேடி!” என்று ஜனனியே சொல்லிச் சொல்லி அழ,

“பார்த்தீங்களா” என்றபடி நின்றனர் இருவரும்..

எதற்கும் செல்லமாள் வரவில்லை.. அதன் கொண்டே மனைவிக்கும் கோபம் என்று புரிய..

“ஒன்னும் பண்ணாததுக்கு எதுக்குடா அழற?”

“எங்க காலேஜ்லயே நாலு பேர் தான் செலக்ட் ஆனாங்க! அதுல நான் ஒருத்தி… இவங்க ஒன்னுமே பண்ணலை! கங்க்ராட்ஸ் கூட சொல்லலை.. வெளில எல்லோரும் பண்றாங்க, ஆனா வீட்ல யாருமே பண்ணலை! என்னைக் கிண்டல் பண்றாங்க!” என்று தேம்பியபடி சொல்ல..

பரதன் பார்த்த பார்வையில், “ஐயோ! இத்தனை வருஷம் கழிச்சு இன்னைக்கு அப்பாக் கிட்ட அடி தான் வாங்க போறோம் போல” என்று நினைத்துக் கொண்டான் அவினாஷ்.

ஒரு பார்வை பார்த்தவர்.. “அவனை விடுறா குட்டிமா.. அப்பா பாரு உனக்கு என்ன வாங்கிட்டு வந்திருக்கேன்!” என்று அந்த அழகிய கை கடிகாரத்தைக் கொடுக்க..

“தேங்க்ஸ் பா!” என்று சொல்லி வாங்கிய போது மகள் சற்று சமாதானம் ஆனது போல தோன்ற,

“வா!” என்று செல்லமாள் இருந்த இடம் அழைத்து செல்ல,  செல்லமாள் மகளிடம் முகத்தை திருப்பி, “இவ” என்று ஜனனி மாமியாரிடம் பேசினதை சொல்ல,

    “நீ கூட தான் என்னை எப்பவும் எல்லோர் முன்னாடியும் பேசற, எனக்கு எப்படி இருக்கும், படிச்சிருந்தா நான் எவ்வளவு கஷ்டப்பட்டு செலக்ட் ஆகியிருக்கேன்னு உனக்கு தெரியும், நீ தான் படிக்கவேயில்லையே!” என்று ஜனனி சொல்ல,

“பாருங்க! பாருங்க! எப்படிப் பேசறா, கொஞ்சம் கூட மரியாதையே இல்லை!” என்று செல்லமாளும் சண்டையிட, மீண்டும் அங்கே ஒரு குட்டிப் போர்க்களம். மகளுக்குச் சொல்வதா மனைவிக்குச் சொல்வதா திணறி விட்டார் பரதன்.

ஒரு வழியாக சமாளித்து, உண்டு, உறங்கி, அடுத்த நாள் கல்லூரி சென்றவளிடம், தோழிகள் ட்ரீட் கேட்க.. பொதுவாக வெளியில் இந்த மாதிரி தோழமைகளுடன் செல்வாள் தான், ஆனால் பூரணியும் இருப்பாள்.

இப்போது பூரணி இல்லாமல் தனியாக முதல் முறை, “ஓகே, போகலாம்!” என்று சொல்லி, எங்கே என்று இடத்தையும் அவர்களே தேர்வு செய்யச் சொல்ல.. அவர்கள் தேர்வு செய்தது ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்..

“ஓகே!” என்று அவளும் சொல்லி, அப்பாவிடம் சொல்லி, அக்கௌண்டில் பணத்தை போடச் சொல்லி..

அவினாஷிடம் “என்னை பிரண்ட்ஸ் வீட்ல விட்டுடுவாங்க, அப்படி இல்லைன்னா முடிச்சிட்டு சொல்றேன், என்னைக் கூப்பிட்டுக்கோ, அதுவரை நீ என்னோட வரக் கூடாது!” என்று சொல்ல,

“அக்கா! எனக்கு ட்ரீட் இல்லையா?” என்ற அவினாஷிடம்,

“என் கண் முன்னாடி வராத போ நீ! எனக்கு என்ன கொடுத்த, ஒரு சாக்லேட் கூடக் கொடுக்கலை, ஒரு விஷ் பண்ணலை, போடா!” என்று அவனிடம் கோபத்தைக் காட்டி, கல்லூரியில் இருந்து அப்படியே கிளம்பினார்கள்.

செல்ல்லமாவிடம் ஜனனி சொல்லவே இல்லை!!! அப்பவோ அவினாஷோ சொல்லிக் கொள்ளட்டும் என்று நினைத்து அவர்களிடம் சொல்ல சொல்லிவிட்டாள்.

அந்த ஃபைவ் ஸ்டார் ஹோட்டலுக்கு நண்பன் இமானின் காரில் சென்று.. அங்கிருந்த ரெஸ்டாரண்டில் அமர்ந்து ஆர்டர் செய்து, மெதுவாக உண்ண ஆரம்பித்தனர். ஆண்கள் இருவர் பெண்கள் இருவர் இவளையும் சேர்த்து ஐந்து பேர்.

தோழமைகள் கூடினால் சிரிப்பிற்கும் ஆர்பாட்டதிற்கும் பஞ்சமா என்ன? நல்ல படியாக பொழுது கழிய.. கிளம்பும் பொழுது ஆரம்பித்தது பிரச்சனை.

பில்லில் பிரச்சனை!

பொதுவாக இந்த மாதிரி கல்லூரி மாணவர்கள் வரும் பொழுது பில்லை செக் செய்ய மாட்டர்கள், சொல்வதை கட்டி விட்டுச் சென்று விடுவார்கள்..

ஆனால் முதல் முறை ஜனனி தனியாக நண்பர்களுடன் வருவதால் அவர்கள் பில் கொடுத்ததும் அதனை ஊன்றிப் பார்த்தாள்… என்னவோ மனதிற்கு அதிகமாக இருப்பது போல ஒரு தோற்றம்.

இமானிடம் பில் நாம் உண்டதை விட அதிகமாக இருக்கிறதோ என்ற கேள்வியை எழுப்ப..

“கொடு” என்றவன், என்ன உண்டோம் என்றுக் கேட்டு, அது சரியாக இருக்கிறதா என்று பார்க்க.. உண்ட ஐட்டங்களை ஒன்றிற்கு இரண்டாக சேர்த்துக் கிட்ட தட்ட ஆயிரத்து ஐநூறு ரூபாய் அதிகம்.

“பில் ஏதோ தப்பாப் போட்டு இருக்கீங்க!” என்று ஜனனி நல்ல விதமாகவே அங்கிருந்த பில் கொடுத்தவரிடம் சொல்ல.. நண்பர்களும் ஏதோ தவறி விட்டது என்று தான் நினைத்தனர்.

“இல்லை! நீங்க சாப்பிட்டீங்க! நாங்க பில் தப்பாப் பண்ணலை!” என்று அங்கிருந்த சர்வ் செய்தவன் அடித்துப் பேச.. திரும்ப பேச முயன்ற நண்பர்களிடம்..

“விடு! பணம் தானே! போனாப் போகுது!” என்று ஜனனி சொல்லி பணத்தைக் கொடுக்க முற்பட,

அதோடு பிரச்சனை முடிந்திருக்கலாம்..

“வந்தா என்ன சாப்பிடறோம்ன்னு கூடத் தெரியாம அடுத்தவங்க முகத்தை பார்த்துட்டு, சிரிச்சிக்கிட்டு, உட்கார்ந்து இருக்க வேண்டியது.. என்னவோ பசங்க! பொண்ணுங்க!” என்று அங்கே வெகுநேரமாக அவர்களின் சிரிப்பை பார்த்திருந்த பில் கொடுக்க வந்த ஒருவர்,  பெரிதாக தெரிந்தவர் போல கமண்ட் அடிக்க,   

“இருங்க ஒரு நிமிஷம்!” என்று அவரிடம் சொன்ன ஜனனியின் தோழன் இமான், “யாரு யாரு முகத்தைப் பார்த்தா.. இப்படி என்னன்னு தெரியாம, அடுத்தவங்களை க்ரிடிசைஸ் பண்ணுவீங்களா..?” என்று அவரிடம் கோபப்பட்டவன்,

“நாங்க இதைச் சாப்பிடலை, எக்ஸ்ட்ரா பில் பே பண்ண மாட்டோம்..” என்று திரும்பி அங்கிருந்த இன்சார்ஜிடம் சொன்னவன்..   “பேசறிங்கள்ள யாரு தப்புன்னு இருந்து பார்த்துட்டுப் போங்க!” என்றான் பேசியவரிடம்,

“என்ன? நான் எதுக்குப் பார்க்கணும், அதெல்லாம் முடியாது, நான் போகணும்!”

“அப்போ பேசினதுக்கு சாரி கேளுங்க!” என்று அவனும் பிடிவாதமாக நிற்க..

“விடு இமான்! போகலாம்! பிரச்சனை வேண்டாம்!” என்று ஜனனியும் மற்ற தோழிகளும் சொல்ல..

சிறு சலசலப்பு.. “மேனேஜரை கூப்பிடுங்க!” என்று சொல்ல.. அங்கே வந்தவன் வாசுதேவன்.

“என்ன?” என்றபடி அருகில் வந்தான்.. ஜனனியை கவனிக்கவில்லை.

அந்தப் பேசியவர், “நான் யாருன்னு தெரியுமா? என்னன்னு தெரியுமா? ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ன்னு வந்தா, யாரோ என்னை அதட்டுறாங்க! வாட்ஸ் கோயிங் ஆன்!” என்று பொறும..

“ப்ளீஸ் சர்! வி வில் லுக் இன் டு தி இஸ்யு!” என்றவன் சுற்றிலும் பார்வையை ஓட்ட.. அங்கே கலவரமான முகத்துடன் நின்றிருந்த ஜனனி தான் பட்டாள்.

“இங்கே எங்கே இவள்” என்று பார்த்தவன், உடன் குடும்ப நண்பர்கள் யார் இருக்கிறார்கள் என்று பார்க்க யாரும் இல்லை.. நண்பர்களுடன் வந்திருக்கிறாள் என்று புரிந்தது.

இவனைப் பார்த்ததும் ஜனனி பேச வர… ஒற்றை விரலை வாய் மேல் வைத்து பேசாதே என்பது போல சைகை காட்டியவன்.. பின்பு அவள் புறம் திரும்ப வில்லை. ஆம் ஜனனி தனக்குத் தெரிந்தவள் என்று தெரிந்தால் எதிரில் இருப்பவன் இன்னம் எகிறக் கூடும் என்று புரிந்து தெரிந்தவன் என்று காட்டிக் கொள்ளாமல் பேச ஆரம்பித்தான். 

“என்ன விஷயம்” என மற்றவர்களை பார்த்துக் கேட்க.. இமான் விஷயத்தை சொல்ல..

அந்த பேசியவரிடம் “இவங்க சார்புல நான் மன்னிப்புக் கேட்டுக்கறேன்” என்று அவரிடம் சொல்லி, கூடவே, “என்ன விஷயம்னு நமக்கு தெரியாத போது நம்ம பேசக் கூடாது… இன்னொன்னு யங் ஸ்டர்ஸ்னா இப்படி தான் இருப்பாங்கன்னு நம்மளா நினைக்கக் கூடாது” என்று சொல்ல

“நான் யாருன்னு தெரியாம பேசாதீங்க!”

“நீங்க யாரா இருந்தா என்ன சர்? எங்களுக்கு எல்லா கஸ்டமர்சும் ஒன்னு தான்..” என்று அவன் பேச..

அவர் “நீங்களும் அவங்க ஏஜ் க்ரூப் தானே” என,

கோபம் வரப் பெற்றவன், “சர்! ப்ளீஸ் மூவ்!” என்று பொறுமையாகவே வாயிலை நோக்கி ஒரு ஆளுமையோடு கையைக் காட்டினான்.

“நீ எப்படி இங்க வேலைல இருக்கறேன்னு நான் பார்க்கறேன்!” என்று உறும..

அப்படியே சீரியசாக இருந்த வாசுதேவனின் முகம் புன்னகைக்கு மாறி.. “அப்போ இந்த வேலைல இருந்து உங்களால என்னைத் தூக்க முடியுமா! தயவு செஞ்சு அதை பண்ணுங்க!” என்று சொல்ல,

ஜனனி எல்லாவற்றையும் ஆ என்று பார்த்து நின்றாள். ஏற்கனவே தோற்றம் கவர்ந்து தான் இருந்தது. இப்பொழுது அவனின் பார்வை, நடை, உடை, பாவனை, பேச்சு எல்லாம் கவனத்தை ஈர்த்தது.      

அவனிடம் அதற்கு மேல் பேச முடியாதவராக அவர் சென்று விட்டார்.

அதன் பிறகு பில்லைக் வாங்கி.. இமானிடம் அவர்கள் என்ன அதிகம் சாப்பிடவில்லை என்றும் கேட்டு.. பில் போட்டவரைப் பார்க்க..

“நான் சர்வ் பண்ணினவங்க சொன்னதைத் தான் போட்டேன்!” என்று சொல்ல.. சர்வ் செய்தவன் அவர்கள் சாப்பிடார்கள் என்று சத்தியம் செய்யாத குறையாகச் சொல்ல..

ஜனனியைப் பார்த்தான். தன்னிடம் உறுதிப் படுத்த பார்க்கிறான் என்று புரிந்து ஜனனி “இல்லை” என்று தலையாட்டினாள்.    

“ஒரே நிமிஷம்” என்று நேராக கிட்சன் சென்றவன்.. “இதெல்லாம் இப்போ செஞ்சீங்களா!” என்று அங்கிருந்தவரிடம் கேட்க..

“ஆம்!” என்றார். சிறிது நேரம் யோசித்தவன் ரூம் சர்விஸ் அழைத்து யாருக்காவது ரூமிற்கு போனதா என்று கேட்க,

ஆம்! அங்கே எக்ஸ்ட்ரா இருந்தது சென்றிருந்தது. ரூமிற்கு கொண்டு கொடுத்து அதை பணமாக பில்லில்லாமல் தனியாக வாங்கிக் கொண்டு அதை இந்த பில்லில் சேர்த்து இருந்தனர்.

தவறைக் கண்டு பிடித்து விட்ட போதும்.. ஜனனி மற்றும் நண்பர்களிடம் அதைக் காட்டிக் கொள்ளாமல், “சாரி! சம் மிஸ்டேக்! ரீ பில் போட சொல்றேன்! சாரி பார் தி இன்கன்வினியன்ஸ் அண்ட் தி ஸினாரியோ ஓவர் ஹியர்”, என,

“அதெப்படி!” என்று இமான் ஆரம்பிக்க..

“இமான் ப்ளீஸ் விட்டுடுவோம்!” என்று ஜனனி சொல்ல..

“நீ சொல்றதுக்காக விடறேன், இல்லை..” என்றபடி இமான் நிறுத்த..

“அதென்ன இவளிர்காக விடுவது” என்றபடி வாசு பார்த்து நிற்க.. எல்லோரும் கிளம்பினார்கள்.

ஜனனிக்கு அங்கிருந்து சென்றால் போதும் என்று தோன்றியது.. வீட்டில் வாழ்த்த வில்லை, அங்கே சண்டை. அம்மாவிடம் சொல்லாமல் இங்கு நண்பர்களோடு வந்தால் இப்படி! ஒரு மாதிரி சஞ்சலம் அடைந்தவள், அதே யோசனையில் வெளியேறினாள்.

பார்ப்ப்பளா என்று வாசு பார்க்க..

கதவின் வெளியே போகும் சமயம் ஜனனி திரும்ப வாசுவைப் பார்க்க.. வாசு அவளைப் பார்ததபடி தான் நின்றிருந்தான்.

அவனிடம் சென்று பேசுவோமா என்று ஜனனி நினைத்த போதே.. “ஹேய் வா! என்ன வேடிக்கை பார்க்கற!” என்று தோழி கைப்பிடித்து இழுத்து சென்றாள்.        

சென்ற முறையும் பேசவில்லை, இப்பொழுதுமா என்று தோன்ற “ஒரே நிமிஷம்” என்று கை இழுத்து விரைந்து வாசுவிடம் வந்தவள்,

“இன்னைக்கு தேங்க் யு” என்று நிறுத்தியவள், “அன்னைக்கு சாரி” என்றாள் தலை சரித்து முகத்தை சுருக்கி.

அவள் சொல்ல வந்தது ஒரு உவகையை கொடுக்க, அவளின் பேச்சே கவிதையாய் தோன்ற, “எதற்கு” என்ற கேள்வியை தாங்கி வாசுவின் விழிகள் ஜனனியை பார்த்தது.

“அன்னைக்கு சொல்லாம போயிட்டேன்! நீங்க இங்க தான் வேலை பார்க்கறீங்களா?” என்று கேட்க,

“ஆம்!” என்பது போலத் தலையாட்டினான்.

“நான் கேம்பஸ்ல செலக்ட் ஆனேன், அது செலப்ரேட் பண்ண தான் வந்தோம். இப்படி ஆகிடுச்சு! ஓகே பய்!” என்று சொல்லி விரைந்து போய்விட்டாள்.

காரை பார்க்கிங்கில் இருந்து இமான் எடுக்கும் சமயம், மற்ற மூவரோடும் வெளியே பார்த்தவாறு நின்றிருந்தாள்.

“ஜனனி” என்ற குரல் பின்னிருந்து கேட்க, திரும்பினால், வாசுதேவன் நின்றிருந்தான்.

அவள் திரும்பியதும் “கங்க்ராட்ஸ்” என்றபடி அவளின் முன் ஒரு  ஹோம் மேட் சாக்லேட்ஸ் அடங்கிய ஒரு அழகிய பாக்சை நீட்டினான்.

அதனைப் பார்த்ததும் “ஹேய், உங்களுக்கு எப்படி எனக்கு இது பிடிக்கும்னு தெரியும், தேங்க் யூ!” என்று முகமலர்ந்து அவள் வாங்க,

“எனக்கும் இது பிடிக்கும்! இங்க நடந்த இந்த சின்ன பிரச்சனையை மறந்துடு! மூட் அப்செட் ஆகாதே! திஸ் இஸ் யுவர் ஈவ்நிங் அண்ட் யுவர் டே” என்று சொல்ல,

ஜனனி அவனைப் பார்த்து மீண்டும் “தேங்க் யூ” என்றால், அதை சொல்லும் பொழுது அவளின் மனது பெருமளவு அமைதி அடைந்து இருந்தது.

தோழிகள் வியப்போடு பார்க்க, “என்னோட கசின்” என்றாள்.

“ஹாய் ஹேண்ட்சம்!” என்று ஒரு தோழி புன்னகையோடு சொல்லி, “ஐ அம் ரக்ஷா” என்று சொல்லிக் கை நீட்ட..

ஜனனியைப் பார்த்தவரே கை குலுக்கினான், தன் பெயர் சொல்லவில்லை.

“உங்க பேர் சொல்லலையே?” என்று ரக்ஷா கேட்க..

“ஜனனி சொல்லுவா” என்று சொன்னான், ஜனனிக்குத் தெரியாது என்பதால் தான் அப்படி சொன்னான்.  அவனின் பேச்சும் இயல்பாக ஒருமைக்குத் தாவியிருந்தது.  

“கசின்” என்று சொல்லி விட்டு பெயர் தெரியாது என்றா சொல்ல முடியும்.. வாசுதேவன் ஒரு குறும்புப் புன்னகையுடன் பார்த்திருக்க,

அதே குறும்புத் தனத்துடன், “உங்களுக்கு நானே பேர் வெச்சிடட்டுமா?” என்று ஜனனி கேட்க,

வாய் விட்டு சிரித்தான்.  பின் “வாசுதேவன்” என்று சொல்ல, ஜனனியும் அவனைப் பார்த்து மலர்ந்து சிரித்தாள். இருவர் பார்வையுமே ஒருவரை ஒருவர் விசை கொண்டு ஈர்த்தது.

“ஹலோ சர், பேர் கேட்டது நான்!” என்ற ரக்ஷாவின் வார்த்தை இருவர் காதிலும் விழுந்ததாகவே தெரியவில்லை.

“உள்ள தெரியாத மாதிரி இருந்தாங்க! இப்போ இப்படி பேசறாங்க! என்னடா நடக்குது?” என்று தோழர்களின் மனதினில் ஓட..

சிறு தலையசைப்போடு காரில் ஜனனி ஏறி விடைபெற, வாசுவின் மனதினிலும் ஜனனியின் மனதினிலும் ஏதோ ஒன்று நிலை பிறழத் தான் செய்தது.  

 

Advertisement