Advertisement

அத்தியாயம் இரண்டு :

ஜனனி வாசுதேவனைப் பார்த்திருக்க..  சுற்று புறத்தில் கண்ணை ஓட்டிய வாசுதேவனுக்கு தன்னையே பார்த்துக் கொண்டிருந்த ஜனனி கண்ணில் பட்டாள்.

வாசுதேவன் விரைந்து பார்வையை திருப்பிக் கொண்டாலும், சில நொடிகள் விட்டுப் பார்க்க அப்போதும் பார்த்திருந்தாள்.

பக்கத்தில் நின்றிருந்த அவினாஷ் ஜனனியிடம், “எதுக்கு இப்படி பார்க்குற அக்கா, யாராவது பார்த்து வைக்கப் போறாங்க! உள்ள போ!” என்று அக்காவை உள்ளே தள்ளிச் சென்றான்.

தன்னைப் பார்ப்பதால் அவினாஷ் அவளை இழுத்துச் செல்வது வாசுதேவனுக்கு புரிந்தது.

அதற்குள் பூரணியை மனையில் அமர வைக்க ஏற்பாடுகள் நடக்க, வாசுதேவன் அதில் கவனத்தை திருப்பினான்.

ஜனனியை உள்ளே இழுத்து சென்ற அவினாஷ் “என்ன பண்ணிட்டு இருக்குற நீ! அவரை விடாமா பார்த்தா யாராவது தப்பா எடுக்க மாட்டாங்க!”

“எதுக்குத் தப்பா எடுப்பாங்க?” என்று ஜனனி திரும்ப வேறு கேள்விக் கேட்க,

“ஏய் மக்கு! நீ சைட் அடிக்கறன்னு நினைப்பாங்கடி” என்று அவினாஷ் விளக்கம் சொல்ல.  

“ஆங்! சைட்டா! நானா! மூஞ்சி முகரையெல்லாம் பேத்துடுவேன் உன்னை! ஒரு பொண்ணு ஒரு பையனைப் பார்த்தா அதுக்கு பேர் சைட்டா?” என்று வழக்காடினாள்.

“வேற என்ன பண்ணின நீ?” என்றான் அவினாஷும் கடுப்பாக.  

“அதுவா, ரசிச்சேன்!” என்றவளை, குத்தவா வெட்டவா என்று அவினாஷ் பார்க்க,

“என்ன தப்பு அதுல? நல்லா இருக்காங்க தானே! இப்போ பூரணிக்கா மாப்பிள்ளை வந்தப்போ கூட இப்படித் தான் பார்த்தேன், பூரணிக்காக்கு பொருத்தமா இருப்பாங்களான்னு, அந்த மாதிரி அவங்கம்மாவும் அழகு பையனும் சூப்பரா இருக்காங்க, அவங்கப்பாவை மட்டும் ஏன் பைத்தியம் சொல்றாங்க, யோசிச்சிட்டு இருந்தேன்!” என்றாள் குரலை தழைத்து.

“ஜனனி!” என்று அதட்டிய அவினாஷ், “நமக்கு தேவையில்லாத விஷயம் எப்பவும் நாம அலசவும் கூடாது, பேசவும் கூடாது, புரிஞ்சதா!” என்று அதட்டினான்.

மிகுந்த கோபம் வந்தால் தான் ஜனனி என்று அதட்டுவான் என்று புரிந்தமையால் திரும்பவும் கப் பென்று வாயை மூடி கொண்டால் ஜனனி.

அப்பாவிடம் அம்மாவிடம் மற்ற எல்லோரிடமும் எதிர்த்து பேசும் ஜனனி அவினாஷிடம் எப்போதும் பேச மாட்டாள்… ஏனென்றால் அவள் வெளியே இழுத்து வைக்கும் பிரச்சனைகள் வீடு வரை வராமல் எப்போதும் காப்பது அவினாஷ் தான்.  இருவருக்கும் மூன்று வருட வித்தியாசம் ஆனால் எப்போதும் அவினாஷ் தான் பெரியவன் போல தோன்றும். ஜனனி சிறு பெண் போல தான் தெரிவாள். தோற்றத்திலும் சரி! நடை உடை பாவனைகளிலும் சரி!

ஒடிசலாக உயரமாக குழந்தைத்தனம் மாறாத முகம் தான் ஜனனிக்கு. அழகி தான், என்ன ஒரு குறை மாநிறம், கூடவே சதைப் பற்று தேவையான அளவு கூட இருக்காது. கூடவே நை நை என்று எப்பொழுதும் ஏதாவது பேசிக் கொண்டே இருக்கும் சுபாவம்.

வீட்டில் பிள்ளைகள் நால்வரும் ஒரே பள்ளி.. பின்பு கல்லூரியும் ஒன்றே.. அதனால் அங்கேயும் யாராவது அவளைப் பார்க்க இருப்பர்.        

அவினாஷ் வெளியே போக… “நானும் அக்காவுக்கு நலங்கு வைக்கிறதைப் பார்க்கட்டுமா?” என்று கொஞ்சிக் கேட்க,

“வா!” என்று அதட்டலாக சொன்னவன்… “ஆனா! திரும்ப அவரைப் பார்க்கக் கூடாது! இப்படி அவங்கப்பாவுக்கு ஏன் அப்படின்னு யாரையும் கேட்டு வைக்கக் கூடாது.. கேட்ட தொலைச்சிடுவேன்!” என்று மிரட்டி அழைத்துப் போனான்.

அங்கே யார் தம்பி? யார் அக்கா? என்றே தெரியாது. எப்போதும் அவினாஷ் தான் ஜனனிக்கு இதைச் செய்யாதே அதைச் செய்யாதே என்று சொல்லுவான்.

அதுவும் கூட ஜனனி செல்லம் கொஞ்சுவதற்கு காரணம்! அவளை பெரிய பெண்ணாக யாரும் பார்ப்பது கிடையாது.

நன்றாக சுயமாக சிந்திக்கும் பெண்ணை, இப்படிச் செய், அப்படிச் செய் என்று எப்போதும் கூட இருந்து, இருந்து, எதற்கு சிந்திப்பது என்பது போல அவளும் செல்லம் கொஞ்சியே காலத்தைத் தள்ளுகிறாள் என்பது தான் உண்மை.

பூரணிக்கு நலங்கு வைத்து, தலைக்கு ஊற்றி, ஸ்வாதி பார்த்து பார்த்து தேர்ந்து எடுத்து இருந்த பட்டுப் புடவையில் மீண்டும் அவள் மனையில் அமர்ந்த பொழுது  எல்லோருக்கும் திருப்தி..

எந்த அனாவசிய பேச்சு வார்த்தைகள் இன்றி நன்றாக நடந்தது. திரும்பவும் நலங்கு வைக்க.. ஸ்வாதி தன்னுடைய மாமியாரிடம் ஒரு தங்க ஆரத்தைக் கொடுக்க.. அதைப் பூரணிக்கு அணிவித்தார்.

எல்லோருக்குமே ஆச்சர்யம்! இப்போது அவர்கள் இருக்கும் நிலைக்கு ஒரு பவுன் சீர் செய்வது என்பதே அதிகம்.. அது எப்படியும் ஒரு ஐந்தாறு பவனாவது இருக்கும்.

இப்போது தான் லக்ஷ்மணன் முகத்தில் சற்று திருப்தி.

அனுராதாவிற்கு இதற்காக எவ்வளவு சிரமப் பட்டார்களோ என்று மனது கலங்கியது. அப்பா அம்மாவிடம் எதுவும் இல்லை என்று தெரியும், நிச்சயம் இது ஸ்வாதியின் ஏற்பாடு தான் என்று தெரியும். இன்னம் வாசு வேலைக்கு போகவில்லை என்றும் தெரியும்.  

அண்ணியிடம் “எப்படி ஏற்பாடு செய்தீர்கள் அண்ணி” என்றோ, “நான் கொடுக்கட்டுமா” என்றோ கேட்டு விட முடியாது. சொல்லப் போனால் அனுராதாவிடம் என்ன இருக்கிறது என்று கூட லக்ஷமணனுக்குத் தெரியாது.

அனுராதா எப்போதும் ஏதாவது நகை வாங்கியேயிருப்பார். அவரிடம் புதிதாக உள்ளதை கொடுத்தாலும் யாருக்கும் தெரியாது. ஆனால் ஸ்வாதி வாங்குவது என்பது இரண்டாம் பட்சம், இந்தப் பேச்சை கூட அவரிடம் எடுத்து விட முடியாது. ஒன்றும் செய்ய முடியாத நிலையில் இருந்தார் அனுராதா.     

பின்பு வேகமாக காலை உணவு பரிமாறப்பட.. உண்டவுடன் அவர்கள் கிளம்பி விட்டனர். “இன்னும் கொஞ்ச நேரம் இருங்க அண்ணி” என்று ஸ்வாதியிடம் சொன்னதற்கு,

“இல்லை அனு, அவரைத் தனியா விட்டுட்டு வந்திருக்கோம், வாசு ஃபிரண்ட் தான் கூட இருக்கிறான். நாங்க போகணும்!” என்று சொன்ன பிறகு வேறு பேச முடியாதல்லவா.

அப்பா அம்மாவிடம் சென்ற அனுராதா, “நீங்க இருங்கப்பா கல்யாணம் முடியறவரை, இல்லை இன்னைக்கு சாயந்தரம் வரையாவது இருங்க! நான் கொண்டு போய் விட்டுடறேன்” என

ஸ்வாதியும் “இருங்க!” என்று சொல்ல,

“இல்லை அனு! கல்யான வேலை இருக்கும் உனக்கு.. அதைப் பாரு! நாங்க எங்க போயிடப் போறோம்! அப்புறம் பார்க்கலாம்!” என்று கிளம்பி விட்டனர்.

வாசு வந்த போது ஓரிரு வார்த்தைகள் பேசியதுடன் சரி, அதன் பிறகு நடப்பவைகளை ஒரு மௌனப் பார்வையாளராகப் பார்த்திருந்தான் அவ்வளவே. அதில் அவன் அதிகம் பார்த்தது ஜனனியை, முதலில் தன்னை பார்த்ததும், அவினாஷ் அவளை இழுத்துச் சென்றதும், பின்பு தன்னையும் பார்ப்பதும் தன்னை விட அம்மாவை அதிகம் பார்ப்பதும் புரிய.. எதற்கு இப்படி இந்தப் பெண் பார்க்கிறாள் என்று யார் கவனத்தையும் கவராமல் அவளைப் பார்த்து இருந்தான்.  

கிளம்பும் போது எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பினான் அவ்வளவே.

அவினாஷ் ஜனனியை அந்த இடத்தில் அதிகம் இருக்க விடவில்லை. “எதற்கு வம்பு! அக்கா எதாவது பேசி, யார் காதிலாவது விழுந்தால் மனது சங்கடம்” என்று ஜாக்கிரதையாக இருந்தான்.

ஜனனி வாசுதேவனைப் பார்த்ததை விட ஸ்வாதியைப் பார்த்தது தான் அதிகம். அதன் காரணம் ஒன்றுமில்லை அவரின் இளமையான முகம் மற்றும் உடல் வாகு.

இங்கே அவர்களின் வீட்டில் அனுராதா குண்டாக இருப்பார், பூரணிக்கும் பூசினார் போல தான் உடல் வாகு, செல்லம்மாளும் சற்று சதைப் பிடிப்போடு தான் இருப்பார்.

“இவங்களுக்கு மட்டும் எப்படி இடுப்பு இவ்வளவு ஒல்லியா இருக்கு! எப்படி அழகா இருக்காங்க.. நாம் இப்போ ஒல்லியா இருக்கோம், பின்னால இப்படி நம்மலும் மெயிண்டெயின் பண்ணனும், அம்மா மாதிரி குண்டு ஆகிடக் கூடாது!” இது மட்டுமே அவளின் எண்ணம்.

அதன் பின்னர் திருமண விஷயங்களும் நிகழ்வுகளும் இழுத்துக் கொள்ள எல்லாம் மறந்து விட்டாள்.

திருமணமும் மிகவும் அமோகமாக, விமரிசையாக மூன்று தினங்கள் நடந்தது.

அது மிகவும் பெரிய கூட்டம் என்பதால் ஜனனிக்கு பார்க்க நிறைய பேர் இருந்தனர். திருமணதிற்கு ஸ்வாதியோ வாசுதேவனோ வந்தார்களா என்று கவனிக்க கூட நேரமில்லை.

வேளாவேளைக்கு அவள் போடும் உடைகளும் நகைகளும் மேக் அப்பும் அவளை இழுத்துக் கொண்டன. கூடவே எப்போதும் இருக்கும் உறவுகள், இளவட்டங்கள். அதுவும் ஜனனியின் பேச்சுக்கும் கிண்டலுக்கும் பெரிய ரசிகப் பட்டாளமே இருக்க… பொழுதுகள் வேகமாக ஓடி விட்டன.

திருமணம் முடிந்ததுமே அவளின் செமெஸ்டர் எக்ஸாம் இருந்தது, அதன் பிறகு கேம்பஸ் இண்டர்வ்யூக்கள் இருந்தது… வரும் செமஸ்டரில் ப்ராஜக்ட் மட்டுமே.. அதனால் செமஸ்டர் முடித்து இன்டர்வியூவிற்காக தயாரானாள்.

அவளின் தாத்தா சீதாராமன் கூட “எதுக்குடாம்மா இவ்வளவு வருத்திப் படிக்கற” என,

“நான் வேலைக்குப் போறனோ இல்லையோ தாத்தா செலக்ட் ஆகலைன்னு வரக் கூடாது. இது உங்களுக்கு புரியாது தாத்தா!” என்று விட்டாள்.

“ஏன் புரியாது?”

“வேலை என்னை செலக்ட் பண்ணக் கூடாது தாத்தா! நான் தான் அதை பண்ணனும்! நான் பெஸ்டா இருந்தாதான் அந்த வேலை வேண்டாம்னு சொல்லும் போது எனக்கு ஒரு மரியாதை” என,

“முதல்ல புரிஞ்சது! இப்பப் புரியலையே!” என்று நொந்து கொண்டார் சீதாராமன்.

இதை கேட்டிருந்த செல்லமாள் கூட “இப்போ நீ என்ன சொல்ல வர்ற? வேலைக்கு போறேன்னு சொல்றியா? இல்லை போகமாட்டேன் சொல்றியா?”

“எதுக்கு உன்கிட்ட சொல்லணும்! போறேன்னு சொன்னா.. நீ ரொம்ப விளையாட்டுத்தனமா இருக்க! பொறுப்பா இருக்கணும்! உன்னை எப்படி வேலைக்கு அனுப்பன்னு சொல்லுவ!”

“போகலைன்னு சொன்னா… வர்ற வேலையை வேண்டாம் சொல்வியா.. அதுக்கு எதுக்கு படிக்கணும்… கொஞ்சம் கூட பொறுப்பு இல்லை விளையாட்டுத்தனமா இருக்கேன்னு சொல்லுவ!”

“மொத்ததுல ரெண்டுக்கும் அதைத் தான் சொல்லுவ! நான் ஏன் சொல்லணும்!” என,

செல்லமாள் வாய் பிளந்து பார்த்தார்.

“அக்கா! நீ எங்கயோ போயிட்ட!” என்று ரகுலன் சொல்ல, அவினாஷ் “நீயா பேசியது! என் அக்கா நீயா பேசியது!” என்று பாட,

அவளின் பாட்டி கௌரி “என்ன ஜனனி சொல்ற?” என,

“அச்சோ அத்தை! அவகிட்ட கேட்டு, திரும்ப அவ விளக்கினானா அவ்வளவுதான்! செல்லம்மா மயக்கம் போட்டுடுவா!” என்று அனுராதா சொல்ல..

அங்கே ஒரு சிரிப்பலை..

ஜனனி எல்லோரையும் முறைத்து.. திரும்ப படிக்க சென்று விட்டாள்.

“அக்கா! கொஞ்சம் புத்திசாலி ஆகிட்டாளோ!” என்று ரகுலன் சொல்ல..

“கொஞ்சம் இல்லை ரொம்ப.. ஆனா  எப்போ எதுல சொதப்பி வைப்பான்னு சொல்ல முடியாது!” என்று அவினாஷ் சொல்ல..

எங்கிருந்தோ ஒரு தலையணை அவன் மேல் பறந்து வந்து விழ.. “டேய்! எஸ்கேப்!” என்று சொல்லி அவினாஷ் ஓட ஆரம்பிக்க.. ஜனனி துரத்த ஆரம்பித்தாள்.

அன்றும் அப்படித்தான் படிக்கிறேன் பேர்வழி என்று கன்னிமாரா லைப்ரரிக்கு போக வேண்டும் என்று பிடிவாதம் செய்ய..

அவினாஷ் அவளை அழைத்துச் சென்று விட்டு, “முடிச்சிட்டு ஃபோன் பண்ணு! அப்பா வந்து அழைச்சிட்டு போவாங்க!” என்று பல முறை சொல்லிப் போக…

“ஏன்? எனக்கு போகத் தெரியாதா? நான் சின்னப் பொண்ணா?” என்று மனதிற்குள் நினைத்தவள், “நான் தனியாகத் தான் போவேன்!” என்று நினைத்துக் கொண்டாள்.

லைப்ரரி உள் நுழைந்து உடல் மொழி ( body language ) சம்மந்தமாக புத்தகம் தேடி எடுத்து ஓரிடம் அமர்ந்தவள்.. எதிரில் தலை நிமிர்ந்து பார்க்க, அங்கே வாசுதேவன் புத்தகம் படித்துக் கொண்டிருந்தான்.

ஜனனியைக் கவனிக்கவில்லை.

ஜனனிக்கு எங்கே இவனைப் பார்த்தோம் என்று ஞாபகத்தில் இல்லை… ஆனால் எங்கோ பார்த்திருக்கிறோம் என்று தோன்ற, முகமும் வசீகரிக்க எங்கே பார்த்தோம் என்று பார்த்தபடியே இருந்தாள்.

யதேச்சையாக வாசுதேவன் தலையை தூக்கிப் பார்க்க, தன் பெரிய கண்களுடன் பார்த்திருந்த ஜனனி பார்வையில் பட, அவனுக்குப் பார்த்ததுமே, அங்கே அத்தை வீட்டில் பார்த்த பெண் என்று தெரிந்து விட்டது.

அன்றும் இப்படித் தான் பார்த்தாள், இன்றும் இப்படித் தான்  பார்க்கிறாள் என்று அவனும் பார்க்க,

இப்போது பார்ப்பதா? பார்வையை விலக்குவதா? என்ற மில்லியன் டாலர் கேள்வி ஜனனி முன்.

பின் உடனே பார்வையைத் திருப்பினால், நான் சைட் அடித்தேன் என்று இவன் நினைத்து விட்டால் என்ன செய்ய என்று பார்த்திருக்க,

வாசு புருவம் உயர்த்தி “என்ன” என்றான் பாவனையாக..

யோசிக்கவேயில்லை, “என்ன, என்ன?” என்றாள் திரும்ப ஜனனி.

“எதுக்கு என்னை இப்படி பார்க்கறீங்க”, என்று வாசு கேட்க,

“அதுவா?” என்றவள், கேட்கவா? வேண்டாமா? என்று நகம் கடிக்க.

“என்ன இது, நகம் கடிச்சிக்கிட்டு. கெட்டப் பழக்கம். விரலை எடுங்க!” என்றான் வாசு. அதட்டலாக எல்லாம் சொல்லவில்லை.. ஒரு மாதிரி சிறு குழந்தைக்குச் சொல்வது போலப் பொறுமையாக சொல்ல..

அந்த பாவனை ஜனனியை ஆகர்ஷித்தது.   ஆனாலும் சொன்னவுடன் கேட்டால் அது ஜனனி அல்லவே… திரும்பவும் அதையே செய்ய…

“படிக்கறது body language, ஆனா நகம் கடிக்கறீங்க!” என்றான் திரும்ப,

இப்போது கையை எடுத்துக் கொண்டாள்.

“இப்போ சொல்லுங்க! எதுக்கு என்னைப் பார்க்கறீங்க? அன்னைக்கும் பார்த்தீங்க! இன்னைக்கும் பார்க்கறீங்க!”

“என்னைக்குப் பார்த்தேன்!” என்றாள் ஜனனி.

“அதுதான் அன்னைக்கு விஷேஷத்துல நலங்கு வைக்கும் போது, அத்தை வீட்ல” என்று வாசு சொல்ல,

“எஸ்!” என்று கை முஷ்டி செய்து காண்பித்தவள், “ஹப்பா! இன்னைக்கு நைட் நல்லா தூங்குவேன்!” என்றாள்.

அவளின் பாவனையில், கூட ஒலித்த வார்த்தைகளில், என்ன பேசுகிறாள் இவள் என்று வாசு பார்க்க..

புன்னகையுடன் “அதுவாங்க, உங்களை எங்கயோ பார்த்த மாதிரி இருந்தது. ஆனா எங்கன்னு தெரியலை, என் ஞாபகத்துல வரலைன்னா நான் அதையே யோசிப்பேனா! அப்புறம் எப்படி தூக்கம் வரும்!” என்று ஜனனி கேட்க,

மெல்லிய புன்னகை வாசுவின் முகத்தில்.

“சரி! இன்னைக்கு ஞாபகம் வரலைன்னு பார்த்தீங்க! அன்னைக்கு எதுக்குப் பார்த்தீங்க”, என்றான் அவனும் விடாமல்.

“அதுவா நீங்க ஹேண்ட்சமா இருக்கீங்க தானே அதனால.. ஆனா உங்களை விட உங்கம்மா இன்னும் அழகா இருக்காங்க!” என்று ஜனனி நேரடியாகச் சொல்ல..

அந்த வார்த்தைகளைக் கேட்ட வாசுதேவனுக்கு ஜனனியைப் பிடித்துப் போனது.

“ஹேண்ட்சமா இருக்கேன்னு சொல்றீங்க! அதனால பார்த்தேன்னு  சொல்றீங்க! ஆனா உங்களுக்கு என்னை ஞாபகமே இல்லையே!” என்று கேட்க,

“எஸ்! you are right,  இந்த body language முடிச்சிட்டு , how to improvise memory  ன்னு ஏதாவது புக் இருக்கான்னு பார்க்கணும்!” என்று ஜனனி சீரியசாகச் சொல்ல..

வாசுதேவனுக்குத் தானாக ஒரு சிரிப்பு மலர, சிரித்தும் விட, “ஹச்சோ மூச்! இது லைப்ரரி!” என்று வாய் மேல் விரலை வைத்து மிரட்டிய ஜனனியை இன்னும் பிடித்துப் போனது. 

Advertisement