Advertisement

அத்தியாயம் பதினேழு :

“விடு! விடு! உன்கிட்ட சொல்லக் கூடாது! உன் அம்மாக்கிட்ட தான் சொல்லணும், தேங்க்ஸ் செல்லமா! இப்படி ஒரு பொண்ணை பெத்து என் பையனுக்கு குடுத்ததுக்கு!” என்றார்.

குரலில் அப்படி ஒரு நெகிழ்ச்சி!

ஸ்வாதியின் நெகிழ்ந்த மனநிலையை பார்த்தவள், “டேய் லூசு! எதையோ பேசப் போய், என்னத்தையோ பண்ணிட்டடா நீ!” என்று அவினாஷை முறைத்தாள் ஜனனி.

“ஜனனிக்கா நான் உங்க லவ் ஸ்டோரி தான் கேட்டேன்!” என்றான் பரிதாபமாக.

“அவங்க லவ் பண்ணியிருந்தா சொல்லிருப்பாங்க! இங்க சொல்ற மாதிரி ஒண்ணுமில்லை! என்கிட்டே இவன் சொல்லவேயில்லை” என்று ஸ்வாதி நொடித்தவர்,

“ஏன்ட்ரா பாபு, நீ லவ் ஸ்டோரி செப்பு கண்ணா” என மீண்டும் ஸ்வாதி ஓட்டவும்,

இரு நான் சொல்றேன் என்பது போல அம்மாவை ரோஷமாக பார்த்தவன், “அதுவாம்மா பூரணிக்கு நலுங்கு வைக்கப் போனப்போ, இவ உன்னையே பார்த்துட்டு இருந்தாம்மா. அப்புறம் என்னையும் பார்த்தா. எதுக்கு இவ இப்படிப் பார்க்கிறான்னு எனக்கு அன்னைக்கே ரொம்ப யோசனை! கொஞ்ச நாள் கழிச்சு லைப்ரரில பார்த்தேன், அப்போவும் என்னையே பார்த்தா!”

“என்ன பார்க்கறீங்கன்னு கேட்டா? அவளுக்கு என்னை தெரியவேயில்லை! எங்கயோ பார்த்த மாதிரி இருக்கு அதுதான் யோசிக்கறேன்னு சொல்றா! சரி எங்கே பார்த்தோம்னு நானா சொன்ன பிறகு, ஞாபகம் வந்து உங்கம்மா ரொம்ப அழகுன்னு சொல்றா. அதனால தான் எனக்கு அவளைப் பிடிச்சது. அப்புறம் ஹோட்டல்ல பார்த்தோம்! அப்போ கூட என் பேர் கேட்கலை!”

“என்னடா என் பேர் கூட கேட்கலைன்னு எனக்கு ரொம்ப கஷ்டமா போச்சு!”  

“அப்புறம் அவளோட ஃபோன் நம்பர் அவளுக்குத் தெரியாம எடுத்து, தினமும் ஃபோன் செஞ்சு, அவளை என்னை நினைக்க வெச்சு, திரும்ப இப்ப ஐ லவ் யு சொல்ற நிலமையில நான் இல்லைன்னு புரிஞ்சு, நீ பேசாத அப்புறம் ஐ லவ் யு சொலிடுவேன்னு அவகிட்ட பேசாம இருந்தேன்”

“அப்போ கூட லவ் எல்லாம் சொல்லலை அத்தை, சொல்லிடுவேன் தான் சொன்னாங்க!” என்று சிரிப்போடு ஜனனி சொல்ல,

“அப்போ இவன் தான் என் பொண்ணு மனசை கெடுத்தானோ!” என்று செல்லம்மாள் பார்த்திருந்தார்.    

“அவளுக்கு என்னை காதலிக்கிற ஐடியா எல்லாம் இல்லைம்மா, பொண்ணு பார்க்க வர்றாங்கன்னு சொன்னவுடனே நான் டென்ஷன் ஆகி அவ கிட்ட ஐ லவ் யு சொல்லலாம் போனா, எனக்காக அவங்கப்பா அம்மா கிட்ட என்னைப் பிடிச்சிருக்கு சொல்றா!” என்றான்.

“அய்யே, உங்களுக்காக ஒன்னும் சொல்லலை!” என்று வாசுவிடம் பலிப்பு காட்டியவள்,

“எனக்கும் பிடிச்சிருந்தது அத்தை!” என்று ஸ்வாதியிடம் ஒப்புக் கொண்டாள்.

அன்றைய நாளின் நினைவுக்கு எல்லோரும் போய் விட..

செல்லம்மாளிடம் திரும்பியவர், “எங்க வாசு அந்த நாள்ல ரொம்ப டல்லா இருப்பான். எதுலையும் இன்ட்ரஸ்ட் இருக்காது யாரோடையும் பேசக் கூட விரும்ப மாட்டான், எக்ஸாம்ல பதில் தெரிஞ்சாலும் ஒன்னுமே எழுதாம வெறும் பேப்பர் கொடுத்துட்டு வருவான்”

“நான் என்ன பண்ணினாலும் ஒரு சோர்வு அவனுக்குள்ள இருந்துக்கிட்டே தான் இருந்தது. ஜனனி வந்ததுக்கு அப்புறம் தான் அது மாறிச்சுன்னு நினைக்கிறேன்”

“ஏன் நினைக்கிறேன்னு சொல்றேன்னா, எனக்கு அது தெரியவேயில்லை, இவன் என்கிட்டே சொன்னதேயில்லை. உங்க வீட்டுக்கு வந்து நான் பேசிட்டு வந்ததுக்கு அப்புறம் ஜனனியைப் பத்தி அவன் பேசினதேயில்லை. அவன் கல்யாணம் பண்ண போனது எல்லாம் எனக்கு தெரியாது”

“எப்படி ஒரு சூழல்ல ஒரு பொண்ணை நிறுத்தியிருக்கான், எனக்கு தெரியவேயில்லை..” என்று சொல்லும் போது கண்கள் கலங்கிவிட,

“மா” என்று அருகில் வந்து அணைத்தவாறு அமர்ந்து கொண்டான்.

“சாரி ஜனனி!” என்றார் ஸ்வாதி மீண்டும்.

“அச்சோ, அத்தை!” என்று அவினாஷ் அமர்ந்த வாக்கில் அவர் காலில் படுத்துக் கொண்டான்.

“விட்டுடுங்க அத்தை விட்டுடுங்க, இல்லை ரூம் போட்டு என்னை ஜனனி அடிப்பா!” என்றான் அலறியபடி.

அவனின் அந்த செயலில் இருந்த சூழல் மீண்டும் லகுவாக, எல்லோரும் மனம் விட்டு சிரித்தனர்.  

“அம்மா! உன் கால்ல விழுந்திருக்கான்!” என்று வாசு எடுத்துக் கொடுக்க… அவன் சொன்னதின் அர்த்தம் புரிந்து,

ஸ்வாதி சிரித்துக் கொண்டே “நல்லா இரு!” என்று ஆசீர்வதித்தவர், “எழுந்திரு, ஜனனி ஒன்னும் பண்ண மாட்டா! நான் கியாரண்டி!” என்றவர்,

அவினாஷ் எழவும்,  “குனி அவினாஷ்” என,

“எதற்கு?” என்று புரியாமல் அவன் குனிய, அவரின் கழுத்தில் இருந்த ஒரு சங்கிலியைக் கழட்டி அவனின் கழுத்தில் போட்டவர்,

“கால்ல விழுந்தா சும்மா ஆசீர்வாதம் செய்யக் கூடாது!” என்றார்.

“ஆங்!” என்று விழித்த அவினாஷ், “அத்தை” என்று அவசரமாக அதைக் கழற்ற முற்பட,

“ஹேய் அவினாஷ், விடு!” என்று அதட்டினான் வாசு.

“அது என்ன அவனுக்கு மட்டும் அத்தை!” என்று சண்டை பிடித்தாள் ஜனனி.

எதற்கு சண்டை பிடிக்கிறாள், அவளுக்கோ என்று மற்றவர்கள் நினைக்க…  அவளை அறிந்தவனாக “ரகுலன், அம்மா கால்ல நீயும் விழு!” என்று வாசு சொல்லவும்,  

“விளையாடாத ஜனனி!” என்று செல்லம்மாள் அதட்டினார்.

“இதுல என்ன விளையாட்டு? விழு!” என்று ஸ்வாதி சொல்லி ரகுலனிற்கும் கழுத்தில் சங்கிலி போட்டார். அப்போது கழுத்தில் இருந்த இரு சங்கிலியையும் ஸ்வாதி போட்டு விட்டதால், வாசு அவன் கழுத்தில் இருந்ததை அம்மாவிற்கு உடனே போட்டு விட்டான்.  

அனுராதாவிற்கும் செல்லம்மாளிற்கும் பொறாமையாக தான் போய் விட்டது. பின்னே மனைவி வந்த பிறகும் அவரின் மக்களும் இப்படி பார்த்துக் கொள்வார்களா என.

வாசு ஸ்வாதி வந்ததில் இருந்து அவருடன் ஜனனியின் அருகில் கூட வரவில்லை. ஜனனியும் அதை ரசித்து தான் பார்த்திருந்தாள் எதுவும் தொந்தரவு செய்யவில்லை.  இந்த புரிதல் தங்கள் மகனுக்கும் வரப் போகும் மருமகளிற்கும் வருமா?. அவர்களின் மனதில் வெகுவாக யோசனைகள்.

பின்பும் தாஜ் மஹாலை ரசித்து வந்தனர், வீடு திரும்பிய போது காலை ஏழரை மணி.

முதல் நாள் போல எல்லாம் ஜனனி உறங்கவில்லை. காரில் வரும் உறங்கியது தான். அவள் உறங்கவேயில்லை. வீடு மொத்தமும் உறக்கத்தில் இருக்க, வாசுவும் இரண்டு நாட்களாக கார் ஓட்டியதால் உறங்க தான் வேண்டும் என்று கட்டாயப் படுத்தி உறங்கச் செய்து, இவள் வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தாள்.

சமையல் செய்ய வருபவர், நார்த் இந்தியன் சமையல் செய்து போக, இவள் அங்கே அம்மா வீட்டின் சமையல் சிலவற்றை செய்து வைத்தாள்.

காலையில் பத்து மணிக்கு மற்றவர்கள் எழுந்து வந்த போது, எல்லாம் தயாராக இருந்தது.

அனுராதா வெகு நாட்களுக்கு பிறகு அம்மா வீடு சொந்தம் கொஞ்சினார்.

வாசு எழுந்தவன் “அம்மா! நான் லீவ் தான், கொஞ்சம் வேலை இருக்கு ஆஃபிஸ் போயிட்டு மதியம் போல வந்துடறேன்” என்று சொல்லி கிளம்ப, அப்போது பார்த்து பக்கத்துக்கு வீட்டு பெண் வந்தாள்.

எப்போதும் போல ஒரு டைட் ஷார்ட்ஸ், ஸ்லீவ் லெஸ் என்று இருந்தவள், “எங்கே தீதி உங்களை ரெண்டு நாளா பார்க்க முடியலை! உங்க வீட்ல கெஸ்ட்டா?” என்று வர,

அவளிடம் ஒரு தலையசைப்போடு வாசு தேவன் நின்று விட,

“திஸ் இஸ் மை மாம்” என்று ஆரம்பித்து அம்மா, பெரியம்மா, அத்தை, அவினாஷ், ரகுலன் என்று எல்லோரையும் அறிமுகப்படுத்தினாள் ஜனனி.

வாசுவின் அம்மாவை முன்பே பார்த்திருந்தாலும் வாசு அறிமுகம் எல்லாம் செய்து வைத்ததில்லை.

“ஹாய் ஆண்ட்டி” என்று ஆங்கிலம் தெரிந்த அவருடன் அந்தப் பெண் பேச ஆரம்பித்தாள்.

அவினாஷும் ரகுலனும் அந்த பெண்ணை ஆர்வமாகப் பார்த்திருக்க, அவர்களின் அருகில் சென்றாள் ஜனனி.

வாசுவும் அருகில் தான் இருந்தான், “டேய், அது உங்க அத்தானோட சைட், நீங்க பார்க்கக் கூடாது தம்பிங்களா” என,

இருவரும் வாசுவை ஜனனி என்ன சொல்கிறாள் என்று விழி விரித்துப் பாத்தனர்.  

“ஜனனி, நீ அடங்கவே மாட்டியா?” என்ற வாசுவிற்கு பொறுமை பறந்தது.

“இரு, உங்களுக்கு டவுட்டா, அவ கிட்டயே கேட்போம்!” என்று ஜனனி கிளம்ப,

“ஜனனி!” என்று மீண்டும் வாசு டென்ஷன் ஆனான். 

கலகலவென்று என்று சிரித்தவள் ஓட ஆரம்பிக்க, வாசு துரத்த ஆரம்பித்தான். வீடே “ஆங், இது என்ன?” என்று வேடிக்கை பார்த்தது, அவர்களுக்கு இதெல்லாம் பழக்கமே இல்லை.

கணவனும் மனைவியும் துரத்தி விளையாடுவதா என பார்த்திருந்தனர்.  

என்ன விளையாட்டு இது தாத்தாவும் பாட்டியும் இருக்கும் பொழுது என்பது போல ஸ்வாதியும் பார்க்க, அவளிடம் பேசிக் கொண்டு இருந்த பக்கத்துக்கு வீட்டு பெண், “அவங்க எப்பவுமே இப்படித் தான் ஆண்ட்டி தனியா எக்சர்சைஸ் வேண்டாம், இப்படி தான் பண்ணுவாங்க!” என்று சகஜமாக சொல்லி பேச,

பாட்டியும் தாத்தாவும் கூட தங்களுக்கு இது பழக்கம் என்பது போல தான் பார்த்திருந்தனர்.

அவர்கள் தவறாக நினைக்கவில்லை எனும் போது என்ன இருக்கிறது ஸ்வாதிக்கு அவரும் திரும்ப அந்தப் பெண்ணிடம் பேச ஆரம்பித்து விட்டார்.

சிறிது நேரத்தில் உள்ளே வந்த ஜனனி, “அவங்க லேட் ஆச்சுன்னு என்னை பிடிக்காம போயிட்டாங்க!” என்று தோளைக் குலுக்கி எதோ வெற்றி பெற்றவள் போல சொல்ல..

“ஜனனி!” என்று பரிதாபமாகப் பார்த்த அவினாஷ், “உனக்குக்கூட பொறுப்பு வந்துடுச்சோன்னு நினைச்சேன்!” என்று ராகம் படித்தான்.

“நீ நினைச்சா… அதுக்கு அவங்களா பொறுப்பு, அத்தான் தெய்வமடா!” என்று கையெடுத்து கும்பிட்டு ரகுலன் ஒரு பாவனை கொடுக்க,

“டேய்! டம்மி பீசுங்களா, என்னை கிண்டல் பண்றீங்களா?” என்று இப்போது அவர்களை துரத்தப் போக, “அத்தான் தான் ஓடுவாரு, நாங்கல்லாம் ஓட மாட்டோம், அடிச்சிக்கோ!” என்று சொல்லி அமர்ந்திருக்க,

“போங்கடா!” என்று பேருக்கு ஒரு அடிவைத்து போனாள்.

இப்படியாக மூன்று நாட்களும் ஆட்டம், பாட்டம், ஆர்பாட்டம், மகிழ்ச்சி, என கரை புரண்டு ஓடியது.  எவ்வளவு விளையாட்டுத்தனம் இருந்தாலும் ஜனனி வேலைகளை மிகவும் பொறுப்பாக செய்தாள், எல்லோரையும் பார்த்துப் பார்த்து கவனித்தாள்.

ஸ்வாதி திரும்பவும் “உனக்கு பொறுப்பு கிடையாது, விளையாட்டுத்தனம் அதிகம், நீ என் மகனுக்கு செட் ஆகமாட்டேன்னு சொன்னேன். அஞ்சு வருஷம் பிரிஞ்சும் இருந்தீங்க. உனக்கு என் மேல் கோபமே இல்லையா?” என்றார் திரும்ப.

“ஐயோ அத்தை! மறுபடியும் முதல்ல இருந்தா!” என்று சலித்தாள். “ஆனாலும் நீங்க சொன்னது நிஜம் தானே அத்தை. நான் அவருக்கு மேட்ச் இல்லை தானே!” என்றவள்,

“ஆனா நான் இப்படி சொன்னா… நீ தான் என் மேட்ச் பாக்ஸ், நீ தான் என்னை பத்த வைக்க முடியும்னு இவர் சொல்வார்!” என்றும் சொல்ல,

வீட்டில் எல்லோருக்கும் அப்படி ஒரு சிரிப்பு, அவினாஷும் ரகுலனும் விழுந்து விழுந்து சிரித்து, “அச்சோ அத்தான்!” என்று வாசுவை பரிதாபமாகப் பார்த்தனர்.

அனுராதாவும் செல்லம்மாளும் “அடி பொண்ணே!” என்று ஜனனியை பார்க்க,  

“அம்மா!” என்று வாசு பரிதாபமாக விழித்தவன், “நீ இவ கிட்ட தயவு செஞ்சு பேசாத! என் மானத்தை மொத்தமா வாங்கிடுவா!” என்று அசடு வழிய நின்றான்.  

“இல்லை அத்தை, எனக்கு அப்போ அப்போ தோணும், ஆனாலும் இவர் என் பின்னாடியே சுத்துவாறா. அப்போ நான் சரியாகிடுவேன்! ஜனனியும் எதோ பார்க்கற மாதிரி இருக்கா போல, இவருக்கு மேட்ச் ஆவா போலன்னு!” என்று ஜனனி சீரியசாக சொல்லவும்,

அவளின் பாவனையில் எல்லோரும் சிரிப்பை கைவிட்டார்கள், “அக்கா உனக்கு என்ன குறை சொல்லு, நீ ரொம்ப அழகு!” என்றான் அவினாஷ்.

ஆளாளுக்கு “நீங்க பொறுத்தம்!” என்று சொல்ல, அப்போதும் அரைமனதாய் வாசுவை பார்த்திருந்தாள். “நீ அடி வாங்கப் போற!” என்று வாசு பார்வையால் மிரட்டி பார்த்திருந்தான்.  

 

Advertisement