Advertisement

அத்தியாயம் பதினைந்து :

ஆம்! உருகி மருகி தான் நின்றான் வாசு! காதல் சொல்லாத போதும் வீட்டினரிடம் சொல்லி, அதற்கு ஏச்சுகளும் பேச்சுக்களும் வாங்கி, தானும் உடன் நிற்காத சூழலிலும், திரும்பவும் மணம் செய்யக் கேட்டு, அதிலும் உடன் நில்லாத போதும்… பிரிந்தாலும்… ஐந்து நீண்ட நெடிய வருடங்கள் தனக்காகக் காத்திருந்தது, எப்போதும் இருந்ததை விட இன்னும் காதல்  பெருகியது.

பல வருடங்களாக அப்பா நிலை பிறழ்ந்த நாளாக இல்லாத ஒரு மகிழ்ச்சி மனம் முழுவதும். அதை பார்த்த தாத்தா பாட்டிக்கும் அவ்வளவு நிறைவு. பேரனை அவர்கள் இப்படிப் பார்த்ததே இல்லை. அதனால் அவனை விட அவர்கள் இன்னும் சந்தோஷமாக இருந்தனர்.

ஒரு விடுமுறை நாளில் மதியம் உறங்கி எழுந்தவன், ஜனனி எங்கே என்று தேட, பாட்டி சமையல் அறையில் நின்று ஜனனிக்கு சமையல் சொல்லி கொடுத்துக் கொண்டிருந்தார். காலையிலும் இப்படி தான் வாசுவிற்கு சமைக்கிறேன் பேர்வழி என்று சமையல் அறையிலேயே வெகு நேரம் இருந்தாள். உண்டதும் இவன் உறங்கி விட்டான். இப்போது எழுந்து பார்த்தால் திரும்பவும் கடுப்பானவன், 

“அதுதான் ஆள் வருவாங்க தானே பாட்டி!” என்றான் வாசு.

“அப்பா, டேய்! உன் பொண்டாட்டி தாண்டா கேட்டா? நான் ஒன்னும் பண்ணலைடாப்பா!”

“அவ அப்படி தான் பாட்டி கேட்பா? ஆனா யார் சாப்பிடறது?” என அவளை பார்த்து கண்ணடிக்க,

அதற்கெல்லாம் அசராமல் சமைத்தே தான் தீருவேன் என்று ஜனனி  நின்றிருந்தாள். 

“வொய் திஸ் கொலைவெறி?” என்று அருகில் சென்று நின்றான்.  

பாட்டி இவர்கள் என்னவோ செய்துகொள்ளட்டும் என்று வெளியே சென்றார்.

அடுப்பை அணைத்தவன், இரு கைகளாலும் அவளை அலேக்காகத் தூக்கி, ரூம் சென்றவன், “நானே சண்டே தான் வீட்ல இருக்கேன். அன்னைக்கும் நீ போய் சமையல்ன்னு நிற்பியா! இதை மத்த நாள் செய்ய மாட்டியா?” என,

“மத்த நாள் செஞ்சா உடனே டெஸ்ட் பண்ண லேப் எலி இருக்காதுல்ல” என பதிலுக்கு சிரிப்போடு சொல்ல,  

“என்ன? நான் லேப் எலியா?”

“ஓஹ், வேண்டாமா! ஓகே, தவக்களை வெச்சிக்கிவோம்!” என கொஞ்சியவளிடம்,  

“முதல்ல என்னை வெச்சிக்கோ! அப்புறம் எலி தவக்களை எல்லாம் வெச்சிக்குவியாம்” என்று வாசுதேவன் பாவனையாக சொல்ல,  

“இன்னும் நான் தான் வெச்சிக்கணுமா? நீங்க மாட்டீங்களா, இருங்க! என் லீவ் கேன்சல் பண்ணிட்டு நான் ஹைதராபாத் போறேன்!” என முறுக்கியவளிடம்,

“என்ன திரும்ப போவியா? போய் பாரு என்ன பண்றேன்னு?”

“என்ன பண்ணுவீங்க?” என்றவளிடம்,

“நான் லீவ் போட்டுட்டு உன் பின்னாடியே வந்துடுவேன்!” என்றான் அசால்டாய் தோளைக் குலுக்கி,

“அய்யோடா இதுக்கு தான் இந்த பில்ட் அப்பா. முதல்ல இறக்கி விடுங்க. கை வலிக்கப் போகுது”  

மெதுவாக அவளைப் படுக்கையில் விட்டவன், “அம்மா, தாயே! பேசிப் பேசி டைம் பாஸ் பண்ணாத, முதல்ல கிளம்பு!” என்றான்.

“எங்கே?”  

“அது சர்ப்ரைஸ் !முதல்ல கிளம்பு!” என,

“எங்கேன்னு சொன்னா தான் வருவேன்!”  

“அதெல்லாம் சொல்ல முடியாது! கிளம்புடி!” என்று தெலுங்கில் கத்தி சொல்ல,

“ஆவூன்னா தெலுங்குல பேசி டார்ச்சர் பண்ற நீ!” முணுமுணுத்துக் கொண்டே கிளம்பினாள்.

“என்ன பேசற? சத்தமா பேசு!” என ஜனனியை வம்பிழுத்தான்.

“முதல்ல நான் அத்தைக்கிட்ட போய் தெலுங்கு கத்துகிட்டு வர்றேன்” என ரூமை விட்டு வெளியே போகப் போக,

“அதை எதுக்கு அத்தைக்கிட்ட கத்துக்குற, நான் கத்துக் கொடுக்கிறேன்” என ஜனனியை வளைத்துப் பிடித்தான். விடவே மனதில்லை. நேரம் தான் ஓடியது இருவரும் கிளம்பு வழியாகக் காணோம்.

“நீங்க எங்கேயோ போகணும் சொன்னீங்க!” என்று ரகசியம் பேசிய ஜனனியிடம்,

“நீ எங்கேயோ தான் என்னை கூட்டிப் போற!” என்றான் மெல்லிய குரலில் வாசு.

“தாத்தா பாட்டி வெளில இருக்காங்க!” என்று முயன்று விடுபட்டு ஜனனி வெளியில் செல்ல, ஆனாலும் ஒரு மயக்கத்தில் தான் இருந்தான் வாசுதேவன்.

சற்று தெளிந்து அம்மாவை அழைத்தவன், “ஐ லவ் யு மா!” என்றான்.

“இதேவின்ட்டிரா ஜனனிக்கு பண்ண வேண்டிய ஃபோனை தப்பா பண்ணிட்டியா!” என அம்மா வேண்டும் என்றே கிண்டல் செய்தார்.

“அம்மா!” என்று செல்லமாக கத்தியவன், “ஐ லவ் யு!” என்றான் திரும்ப,

“எதுக்குடா?”

“ஜனனியை எனக்கு குடுத்த தானே, அதுக்கு!”  

 “போடா!” என திட்டியவர், “நானே அஞ்சு வருஷம் அவளை தவிக்க விட்டுட்டோம்ன்னு ஒரு கில்டி கான்ஷியஸ்ல இருக்கேன். நீ என்ன லவர் பாய் மூட்ல இருக்க, உன் கூடவே விட்டிருக்க கூடாது! என் கூடவே வெச்சிருக்கணும்!”  

“என்ன அம்மா நீ? அவ இந்த விஷயத்தை விட்டாக் கூட, நீ விட மாட்டப் போல!”  

“எப்படி விடுவேன்? பொண்ணுங்கன்னா தவிக்க விடுவியா நீ?” என்று அவனிடம் எகிறினார்.   

இது ஆகாது என்று புரிந்தவன், “ஜனனி!” என்று அவன் கொடுத்த சத்தத்தில் வேகமாக வந்த ஜனனியிடம் “உனக்கு ஃபோன்” என கொடுத்தான்.

அங்கே ஸ்வாதி அவனை திட்டிக் கொண்டு இருக்க, “அத்தை எதுக்கு கோபம்?” என ஜனனி கேட்க,

“ஓஹ், ஃபோன் உன்கிட்ட குடுத்துட்டானா? அவனை…” என்று கோபப்பட்டவரிடம்.  

போன் வைத்திருந்த ஜனினியின் இடையை மீண்டும் வளைத்துப் பிடித்து, அவளின் தோளில் முகம் வைத்து, “செப்பம்மா” என்று ஸ்வாதிக்கு கேட்குமாறு கத்தினான்.

அவன் கைகளும் முகமும் செய்த ஜாலத்தில் மயங்கினாலும், “இருங்க அத்தை உங்க சார்பா நான் ரெண்டு அடி வச்சிட்டு கூப்பிடறேன்!” என வைக்கப் போக,

“அம்மா! இவ அடிக்கிறா! கேட்க மாட்டியா!” என்று வாசு மீண்டும் கத்தினான்.  

ஸ்வாதியின் முகத்தில் ஒரு மலர்ந்த புன்னகை, இதுதானே அவருக்கு வேண்டும் அவரின் மகனின் மகிழ்ச்சி. இதையெல்லாம் இந்தப் பெண்ணிடம் இவன் வைத்திருக்கும் போது அதை அவனிடம் மட்டும் தேடினால் எங்கே கிடைக்கும் என்று தோன்றியது.

அதனோடே கைபேசியை அணைத்தார்.

“அம்மா கிட்ட பேசும் போது என்ன கலாட்டா?” என்று ஜனனி நிஜமாகவே அவனை மொத்த, அவளுக்கு தான் கைகள் வலித்தன.

“அவ்வளவு தானா” என்று வாசு பார்த்து நிற்க,

“ரொம்பப் பண்றீங்க நீங்க!” என சலித்தவளிடம்,

“அடிச்சது நீ… நான் பண்றேனா, கிளம்பு, கிளம்பு!”

“எங்கே?” என்றவளுக்கு பதிலே சொல்லவில்லை. அவனே டிரஸ் எடுத்துக் கொடுத்தான். ஒரு சிகப்பு நிற புடவை.

“எதுக்கு இப்போ புடவை? அதுவும் இந்த கலர்ல, வெளில போகும் போது சுரிதார் தான் வசதி”

“ஹேய், போடி! நான் எப்படி அப்புறம் உன் இடுப்புல கை போடுவேன். எப்பவும் கவர் பண்ணி வெச்சிக்கிட்டு”

“நான் என்ன இடுப்பைக் காட்டிட்டா புடவை கட்டுறேன்!” என்று அவள் முறைக்க,

“நீயும் காட்ட மாட்ட, நானும் பார்க்க மாட்டேன்! ஆனா என் கை அந்த வேலையைப் பார்த்துக்கும்!” என வாசு ஒரு ரசனையோடு சொல்லவும், 

“ஹய்யோ!” என்று செல்லமாக தலையில் தட்டிக் கொண்டவள், “ரொம்ப கலாட்டா பண்றீங்க!” என்று சலிப்பாக சொல்வது போல சொன்னாலும், பக்கம் வந்து அவனின் கன்னத்தில் முத்தமிட்டு, “நீங்க போங்க, நான் வர்றேன்” என்று வாசுவை வெளியில் போகச் சொல்ல.

“நீ மாத்து! நான் இருக்கேன்!” என்று ஒரு விஷமப் புன்னகையோடு அவன் மீண்டும் அமர,

“நீங்க இங்க இருந்தா அப்புறம் நம்ம வெளில கிளம்பின மாதிரி தான்”  என்று அவனை கைப்பிடித்து இழுத்து, எழுப்பி, வெளியில் தள்ளி கதவை மூடிய போது, முகம் முழுவதும் ஒரு வெட்கப் புன்னகை, கூடவே மனதில் ஒரு நிறைவும்.        

திருமணம் ஆன இந்த இரண்டு மாதத்தில், அவனின் வாழ்வே அவள் தான் என்று எப்போதும் எந்த வகையிலாவது உணர்த்திக் கொண்டே இருப்பான். ஜனனியின் ஐந்து வருட கவலைகள் எல்லாம், இதற்காக இன்னும் எவ்வளவு வேண்டுமானாலும் தாங்கி இருக்கலாம் என்று தோன்றும்.     

தயாராகி வந்தவள், எப்போதும் விட இப்போது இன்னும் நன்றாக இருந்தால், அது வாசு அவளுக்கு கொடுத்த பொலிவு. அதுவுமன்றி உப்பு சப்பற்ற அவளின் வாழ்க்கை முறை, உணவு முறை எல்லாம் மாறி இருக்க, அதுவுமே ஒரு அழகை பொலிவை கொடுத்தது. 

இருவரையும் பாட்டி திருஷ்டி கழிக்க, “எதுக்கு பாட்டி திருஷ்டி அதுதான் நான் இவர் கூடப் போறேன் தானே! அதுக்கு அப்புறம் எதுக்கு தனியா திருஷ்டி!” என,

“லூசு!” என்று முறைத்தான் வாசு,

“என் பேத்திக்கு என்ன? அவ அழகு!” என்று தனியாக வேறு பாட்டி திருஷ்டி எடுக்க,

“பத்திரம் பாட்டி! நாங்க வர ஆறு இல்லை ஏழு மணி ஆகிடும், வந்து பெல் அடிக்கறேன். நீங்க வந்துடுவனொன்னு பாதி தூக்கம் தூங்காதீங்க, நல்லாத் தூங்குங்க!” என்றான்.   

காரில் வந்து ஏறவும், அப்போதும் ஜனனியிடம் பேசவில்லை. அவனின் கோப முகத்தை ரசித்துப் பார்த்திருந்தாள் ஜனனி.

சரியாக மாலை ஐந்து மணிக்கு என் ஹெச் ஐநூற்றி ஒன்பதை பிடித்தனர். அந்த தேசிய நெடுஞ்சாலையில் கார் சீராக செல்ல ஆரம்பித்ததும். 

“எதுக்கு இப்போ கோபம்?” என ஜனனி கொஞ்ச,  

“எத்தனை தடவை உன்னை கீழ இறக்கிப் பேசாதேன்னு சொல்றது” என்று கடிந்தான்.

“அப்போதானே நீங்க என்னை அழகு சொல்வீங்க!” என சிரித்தாள்.

“சொன்னாலும் சொல்லலைனாலும் நீ அழகிடி!” என்றவனின் கைகோர்த்து தோள் சாய்ந்தாள். பிறகு அப்படியே கண்மூடிக் கொள்ள,

“உனக்கு இப்படி எட்டி சாயரது கஷ்டமா இருக்கும். நல்லா பின்னாடி சாஞ்சிக்கோ!”

“இல்லை, எனக்கு இதுதான் வேணும்!” என்று அப்படியே வாசுவின் தோள் சாய்ந்து தான் வந்தாள். அதனால் கார் வேகமெடுத்தாலும் முடிந்த வரை சீராக ஓட்டினான்.

ஜனனியும் அந்தப் பயணத்தை அனுபவித்து ரசித்து, சற்று ஓட்டுவதற்கு சிரமம் என்று புரிந்தாலும் கணவன் தோள் வளைவிலேயே இருந்தாள். அந்த ஐந்து கடினமான வருடங்கள், தற்பொழுது முன் ஜென்ம ஞாபகங்கள் போல தோன்றினாலும், அதைக் கடக்க எவ்வளவு சிரமப் பட்டாள். எவ்வளவு தனிமை. அவளே தனிமைப் படுத்திக் கொண்டாள்.

போயின போயின துன்பங்கள்                                                                                    நின்னை பொன்னென கண்ட பொழுதிலே…                                                                                                                         காற்று வெளியிடைக் கண்ணம்மா                                                                                                              நின்றன் காதலை எண்ணிக் களிக்கின்றேன்

என வாசு மெதுவாக பாடிக் கொண்டே வர,

அவனை நிமிர்ந்து பார்த்தவள், “இது எனக்கா?” என,

“உனக்கு தான், உனக்கு மட்டுமே தான்!” என புன்னைகைத்தான்.

“அப்படியே ஓரமா நிறுத்துங்க!”

“ஏன்? நான் பாடினதுக்கு இறங்கி ஓடிடலாம் தோணுதா!” என்றவனிடம்,

“அச்சோ, நிறுத்துங்க!”

“ஜனனி, இது ஹைவேஸ், எங்கே வேணா நிறுத்த முடியாது!”  

“போ! போ! உனக்கு தான் நஷ்டம்!” என்றாள்.

“எனக்கு என்ன நஷ்டம்?” என்று கேட்டுக் கொண்டே ஓரமாக இடம் பார்த்து நிறுத்தினான்.

நிறுத்திய வுடன், வேகமாக அவனின் இதழ்களில் இதழ் பதித்தாள், எதிர்பாராத வாசு இனிமையாக அதிர்ந்தவன், பின்பு அவளை விலக விட்டால் தானே!

சிறிது நேரம் கழித்தே விட்டவன், அவளை ஒரு புன்னகையோடு பார்க்கவும்,  

“இப்போ எடுங்க, அப்போ அப்போ நிறுத்திக்கலாம்” என்று முகம் மலர்ந்து சிரித்தாள்.

“அச்சோ, தேறிட்ட ஜனனி!” என வாசுவும் மனம்விட்டு சிரிக்க, இப்படியாக அவர்களின் பயணம் கொஞ்சலும் மிஞ்சலுமாக ஆக்ராவை அடைந்தது.

வழியில் உணவுக்கு நிறுத்தி அங்கே அவர்கள் அடைந்த போது இரவு பத்தரை மணி. கிட்ட தட்ட ஐந்து மணிநேரத்திற்கும் மேல் பயணம்.                                       

தாஜ் மஹால்! தூரமாக கண்ணிற்கும் முன் ஒரு அமைதியான அழகோடு நின்றது. 

“ஹோ! இதுதான் அந்த சர்ப்ரைசா!” என ஆர்பரித்தாள்.

“எஸ்! இன்னைக்கு பௌர்ணமி, நிலா வெளிச்சம்! இந்த இரவு இங்க நல்லா இருக்குமாம், அதுவும் இந்த யமுனையோட நதிக்கரையில, ரொம்ப மெஜஸ்டிக்கா இருக்குமாம். மூணு வருஷமா நான் உங்க வந்த நாளா சொல்றாங்க. ஆனா நீயில்லாம எனக்கு வரணும்னு தோணினதே இல்லை. உன்னோட வர்ற நாளுக்காக நான் ரொம்ப நாளா காத்திருந்தேன்”  என்று ஆசையாக பார்த்திருந்தவன்,   

“இன்னைக்கு வந்துட்டோம்!” என்று சாதித்த உணர்வோடு சொல்ல.

மீண்டும் அவனின் கைபிடித்து அவனின் தோள் சாய, “இரு கார் பார்க் பண்ணிடலாம்!” என அவளை இறக்கி, அவன் கார் நிறுத்தி வந்ததும், நடக்கத் துவங்கினார்கள்.

குளிர் ஆரம்பித்திருக்க, வாசுவின் தோளோடு தோள் உரச நடந்து கை கோர்த்துக் கொண்டாள்.

அந்த உலகின் ஏழாவது அதிசயம் அவர்களை கொள்ளை கொள்ள, அதன் வெளிப்புற தோற்றத்தை பார்த்து அப்படியே நின்றிருந்தார்கள். பின்னும் அதன் உள் பார்க்கவோ, அருகில் செல்லவோ ஆர்வமில்லை. சற்று தூரத்தில் இருந்த நீர் பரப்பின் அருகில் அமர்ந்தார்கள்.

அந்த ஏகாந்தத்தை அனுபவித்து, வாசுவின் புஜம் பிடித்து, தோள் சாய்ந்து, எதிரில் தென்பட்ட அந்த அழகை, அந்த தாஜ் மஹாலின் அழகின் பின் சுடர் விட்டு ஒளிர்ந்து கொண்டிருந்த இயற்கை அழகை அதாவது நிலாவினை என ரசித்து அமர்ந்திருந்தாள்.

பேச்சில்லா மௌனம்!!!

சில நிமிடத்துளிகள் கழிந்த பின், “ஜனனி” என்று ரகசியமாக அவன் கூப்பிட,

“என்ன?” என்பது போல தலை நிமிர்ந்து பார்த்தவளிடம் ,

“என் தோள் வலிக்குது!” என்றான்.

வாசுதேவன்  ரகசியமாக அழைத்த பாவனையில் எதையோ எதிர்பார்த்திருந்தவள், இதை எதிர்பாராமல் பக்கென்று சிரித்து விட்டாள்.

“என்ன பண்ணட்டும்?” என்று சிரிப்போடு வினவ,  

“இந்தப் பக்கம் வந்துடு!” என்றான் வாசுவும் சிரிப்போடு.

அவன் பேச்சு தட்டாமல், எழுந்து மறு புறம் போய் அமர்ந்து தோள் சாய, இருவர் மனதிலுமே அப்படி ஒரு நிம்மதி.

“என்ன ரகசியம் சொல்வேன்னு நினைச்ச?” என்றவனிடம்,

“எனக்கு என்ன தெரியும்?” என்றாள்.

“ஐ லவ் யு வா?” என்றவனிடம்,

“ஹய்யோடா? இது ரகசியம் கிடையாது! எல்லோர் கிட்டயும் நான் கத்திக் கத்தி சொல்லியிருக்கேன் ஐ லவ் வாசுன்னு!” என்று சொல்ல,

“இப்போ சொல்லேன்!” என்றான்.

“என்ன இது?” என்று புன்னகை முகமாக கேட்டவளிடம்,  

“சொல்லணும்!” என்று பிடிவாதம் பிடித்தான்.

“ஐ லவ் வாசு!” என்றாள் அவனின் முகம் பார்த்து.  

“இப்படி இல்லை, சத்தமா, உரக்க கத்தி…” என்றான்.

“ஹேய், என்ன நீங்க பைத்தியமா?”

“எஸ்! பைத்தியம்! உன் மேல பைத்தியம்! கத்தி சொல்லு…” என பிடிவாதம் பிடித்து, அந்த ஏகாந்த வேளையில், ஆங்காங்கே ஆட்கள் சிதறி இருந்த போதும் கத்திச் சொல்ல வைத்தான்.

“இந்த காதல் சின்னத்துக்கு நாம் வைக்கிற சல்யூட்!” என,

முகத்தை சுருக்கி, “நிஜம்மா பைத்தியம் முத்திப் போச்சு போல!” என்ற ஜனனியிடம்,

“எஸ், எஸ்! எல்லோரும் தான் காதல் வசப்படுவாங்க, கொஞ்ச பேர் தான் சொல்லிக்குவாங்க, அதுலயும் கொஞ்சம் பேர் தான் எதிர்ப்பு வந்தா எதிர்த்து நிற்பாங்க, அதுலயும் கொஞ்சம் பேர் தான் என்ன எதிர்ப்பு வந்தாலும் சேருவாங்க! இதுலயும் ஒன்னு ரெண்டு பேர் தான், இப்படி நம்ம மாதிரி பெர்மிஷன் கிடைக்க வருஷக் கணக்கா காத்திருப்பாங்க!”

“அப்படி அவங்களை காத்திருக்க வைக்கிறது ஒரு உறுதின்றதை விட, ஒரு பைத்தியக்கராத்தனம் தான்!” என்றான்.

“அப்படியா ஆஃபிசர் சார், ஓகே! ஓகே! நீங்க சொன்னா ஒத்துக்க தான் வேணும்!” என்றாள் கிண்டலாக.   

“நீ என்னவோ கிண்டல் செய்து கொள், ஆனால் இதுதான் உண்மை!” என்ற பார்வை பார்த்தவன், இன்னும் நெருங்கி அமர்ந்து அவளின் இடையில் கையிட,

“ஷ், என்ன இது?” என்று கையை விலக்க முயன்றவளிடம்,

அவளைப் போலவே “ஷ், என்ன பண்றாங்க? ஒன்னும் பண்ணலை!” என்று சொல்லி.. விடாது அவளின் வெற்றிடையில்.. புடவை மறைத்திருக்க, வெளியில் தெரியாமல் அணைத்துக் கொண்டான்.  

“இதுக்கு தான் புடவை” என்று ரகசிய சிரிப்பு வேறு சிரிக்க,

அந்த அணைப்பில் ஜனனியின் உடலும் சிலிர்த்தது, மனதும் மயங்கியது. குளிருக்கும் அந்த அணைப்பு இதமாக இருக்க மெளனமாக தோள் சாய்ந்து கொண்டாள்.

சிறிது நேரம் அந்த நிலையிலேயே எதிரில் இருந்த, அந்த அதிசய அழகை கூடவே தண்ணீரில் இருந்த அதன் பிம்பத்தை என்று ரசித்து இருந்தனர்.  

வாசு திடீரென்று, இரு! அம்மா கிட்ட பேசலாம்!” என்று கைபேசி எடுக்கவும்,

பிடுங்கி வைத்தாள், “மணி பாருங்க பன்னிரண்டு!” என,

“ஆனா அம்மா கிட்ட பேசணுமே!” என்றவன், வாய்ஸ் ரெகார்ட் செய்தான், “மா! ஐ அம் சோ ஹேப்பி, லவ் யு!” என சொல்லி வைத்தான்.

ஒரு மணிக்கு மேல் அங்கிருந்து கிளம்பி, திரும்ப அந்த இரவின் தனிமையை அனுபவித்து ஒரு கார் பயணம். வர வர ஜனனி உறங்கிவிட, கார் இன்னும் வேகமெடுத்தது.

அவனின் இனிய காதலி, இப்போது மனைவியாக அவனின் பக்கத்தில்!!! வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக இருந்த போதும், அம்மாவை தனியாக விட்டிருக்கிறோமே என்ற வருத்தம் மனதின் ஒரு ஓரத்தில் இருந்து கொண்டே தான் இருந்தது.

Advertisement