Advertisement

அத்தியாயம் பதினான்கு :

சற்று நேரத்தில் தெளிந்து விலகியவளிடம், “நம்ம பிரிவு நமக்கு மனக் கஷ்டத்தைக் குடுத்திருக்கு தான் .. ஆனா லைஃப்ல நம்ம ரெண்டு பேருமே நல்லா ஷைன் பண்ணியிருக்கோம் .. நம்ம வேலைல, அதே சமயம் வாழ்க்கையில கூட. அந்த சமயம் கல்யாணம் பண்ணியிருந்தா இவ்வளவு சக்சஸ் இந்த நேரத்துக்கு வந்திருக்காது. இன்னும் நேரமாகியிருக்க வாய்ப்பிருக்கு.. அதையும் விட இந்த மரியாதை கிடைச்சு இருக்குமா நம்ம ஆளுங்கக்கிட்ட தெரியாது”

“அம்மா ரொம்ப கோபிச்சிக்கிட்டாங்க நான் சொல்லலைன்னு, ஆனா எப்படிச் சொல்லியிருக்க முடியும்.. நான் அந்த நேரத்துல வேலை வெட்டி இல்லாதவன்.. அதையும் விட.. அப்பா அப்படி ஒரு நிலைமையில இருக்கும் போது எப்படிப் புரியவைக்க முடியும்.. இல்லை, அப்பா இறந்த சமையத்துல அதைப் பேசியிருக்க முடியுமா.. முடிஞ்சிருக்காது!”

“நீ என்னைப் புரிஞ்சிக்கிற தானே.. என்கிட்டே நம்ம காதலுக்காக எந்த ஹீரோயிசமோ சாகசமோ கிடையாது.. சொல்லப் போனா அந்த சமயத்துல தைரியமா நீ தான் என்னைப் பிடிச்சிருக்குன்னு அத்தனை பேர் முன்னாடி சொன்ன.. அதுக்காகவே நான் என்னை உயர்த்திக்கணும் இல்லையா.. ரொம்ப உழைச்சேன்.. ஒரு நிலைமைக்கு வராம காதல்ன்னு சொன்னா அந்தக் காதலுக்கு ஒரு அங்கீகாரமோ, மரியாதையோ, கிடைக்காது”

“ரொம்ப, ரொம்ப, தேங்க்ஸ்! எனக்காக இவ்வளவு வலியைத் தாங்கிட்டு காத்து இருந்ததுக்கு” என்றவனைப் பார்த்தது பார்த்தபடி நின்றாள்.

“என்ன?” என்று வாசு பார்க்க, “ஆனாலும் நீங்க ரொம்ப ஹேன்ட்சமா ஆகிட்டீங்க!” என்றாள்.

“நான் பேசினதை நீ கவனிச்சியா இல்லையா?” என்று அதட்டியவனைப் பார்த்து, ஏதோ தூக்கத்தில் இருந்து விழித்தவள் போல, “ஆங்! என்ன பேசினீங்க?” என்றாள்.

“சுத்தம்!” என்றவனைப் பார்த்து, “கதை பேசாதீங்க, என்னை சைட் அடிக்க விடுங்க!”

“என்னது? எவ்வளவு எமோஷனலா பேசிட்டு இருக்கேன், கதை பேசறனா?” என்று வாசு முறைக்க..

“பின்ன! ஐ ஹேட் அட்வைஸ்.. ஒரு ஒருத்தரோட வெற்றியும், ஒரு ஒரு மாதிரி.. எல்லோருக்கும் ஒன்னே கிடையாது.. புரிஞ்சதா?” என்றாள்.

“எப்போ நான் உனக்கு அட்வைஸ் பண்ணினேன்?”

“ஓஹ், பண்ணவே இல்லையா? அப்போச் சரி! இனிமே பண்ணப் போறதுக்கு இதை அட்வான்சா வைச்சிக்கோங்க!” என கண்ணடித்து சிரிக்க.. பழைய ஜனனி எட்டிப் பார்க்கத் துவங்கி இருந்தாள். 

“வா! வெளில போகலாம்! ரொம்ப நேரமா அவனுங்க வெயிட் பண்றாங்க!” என,

வெளியே வந்து பார்த்தால், ரகுலன் அசதியில் உறங்கியிருக்க, அவினாஷ் ஜனனியை நினைத்தவாறு, அங்குமிங்கும் நடை பயின்று கொண்டிருந்தான். அதைப் பார்த்த ஜனனி, “என்னடா நீ, டெலிவரி ரூம்க்கு வெளில நிக்கற கணவன் மாதிரி உலாத்திகிட்டு இருக்க!” என,

“ஆ!” என்று அசந்து நின்றவன், இவ்வளவு நேரமாக பஸ் என்றும் பாராமல் தேம்பிக் கொண்டே வந்தது என்ன? இப்போது பேசுவது என்ன?  “ஜனனிக்கா பேக் டு பெவிலியன்!” என்று சந்தோஷமாகக் கத்த.. அவன் கத்திய கத்தலில் என்னமோ ஏதோ என்று அடித்துப் பிடித்து எழுந்தான் ரகுலன்.

எழுந்தவன், “என்ன? என்ன?” என.. அதைப் பார்த்து “ஹ, ஹ” என்று ஜனனியும், அவினாஷும் சத்தமாகச் சிரித்தனர்.

வாசு புன்னகை முகத்தோடு பார்த்து இருந்தான்.. “ஜனனிக்கா, என்ன?” என்ற ரகுலனைப் பார்த்து.. “அது ஒன்னுமில்லைடா, நான் அஞ்சு வருஷத்துக்கு முன்ன, உங்க வாசு அத்தானைப் பார்த்து அவுட் ஆனதை இப்போ கத்திச் சொல்றான்” என்றாள். ஒரு கலகலப்பு அங்கே திரும்பியது.

மாலையில் அங்கே ஸ்வாதி வருவதாக சொல்லியிருந்ததினால், தன்னைப் பார்த்து பார்த்து அலங்கரித்து கொண்டாலும்.. ரொம்ப சுமாராக இருப்பது போலத் தோன்ற.. ஜனனியின் முகம் இன்னம் சுருங்கித் தான் இருந்தது. என்ன தான் வாசு சமாதானம் செய்தாலும் பொருத்தமில்லை என்று அவர் சொல்லிச் சென்ற வார்த்தை காதுகளில் வலம் வந்தது.

மாலையில் ஸ்வாதி வர.. அவரோடு சென்று வாசு அமர்ந்து கொள்ள பார்த்த ஜனனிக்கு இன்னும் ஒரு பதட்டம். பின்னே ஸ்வாதி இன்னும் அழகாகி விட்டாரே!

ஸ்வாதி அனுராதாவின் அப்பா அம்மாவை அங்கே இருக்கச் சொல்லி, “நாங்க கொஞ்ச நேரம் வெளியேப் போயிட்டு வர்றோம், பெர்மிஷன் குடுக்கறீங்களா?” என்று கேட்க..

“இன்னும் என்ன?” என்று கவலையாகப் பார்த்த செல்லமாளிடம், “தனியா ரொம்ப மனசுக்கு கஷ்டப்பட்டிருப்பா தானே.. கொஞ்சம் பேசிட்டு வர்றேன், இங்கே முடியாது, எல்லோரும் இருக்காங்க!” என்று சொல்ல,

சொன்ன ஒரு வார்த்தையைச் சரி படுத்த, அந்தப் பெண்மணி எடுக்கும் எல்லா முயற்சிகளும் புரிய, “தேங்க்ஸ்” என்ற செல்லமாள்.. தான் கூட இப்போது நல்ல விதமாக நடந்தாலும், அன்று சொன்ன வார்த்தைகளுக்காக என்றுமே மன்னிப்பு கேட்டதில்லை என்று புரிய.. “மகளின் வாழ்க்கையில் எல்லாம் சரியாகிட வேண்டும்!” என்று இடைவிடாது பிரார்த்திக்க ஆரம்பித்தார்.

ஸ்வாதி எங்கும் செல்லவில்லை.. அவர்களின் ஹோட்டலுக்கு செல்ல.. ஜனனிக்கு மலரும் நினைவுகள் தான் அதைப் பார்த்தவுடன். “நீ இங்க வந்திருக்கிறியா ஜனனி” என்று சகஜமாகப் பேச்சை ஆரம்பித்தார்.

“வந்திருக்கிறேன்!” என்று சொல்லி, பின்னே என்ன வார்த்தை போடுவது என்று தெரியாமல் தடுமாற.. “அத்தைன்னு சொல்லு!” என்றார்.

“வந்திருக்கிறேன் அத்தை!” என்று அவசரமாகச் சொல்ல, ஜனனி சொல்லிய விதத்தில் ஒரு விரிந்த புன்முறுவல் ஸ்வாதியின் முகத்தில்.. அதையே ஜனனி பார்த்திருக்க..

ஜனனியைப் பார்த்திருந்த வாசுதேவன், “அம்மா! நீ வந்ததுல இருந்து உன்னையேப் பார்த்துட்டு இருக்கா!” என்றான்.

“உனக்கு ஏன்டா பொறாமை?” என தெலுங்கில் ஸ்வாதி சொல்ல,

“என்னது, பொறாமையா? இதுதான் அம்மா ஜனனிக்கிட்ட என்னை முதல்ல அட்ராக்ட் பண்ணினது.. முதல்ல அவளுக்கு என்னைத் தெரியலை.. நானா அவங்க வீட்ல பூரணி ஃபங்க்ஷன்ல பார்த்ததை பெரிய இன்ட்ரோ கொடுத்தேன், உடனே சொன்னா, நீங்க அழகா இருக்கீங்க, உங்கம்ம்மா அதை விட அழகுன்னு!” என்று சொல்லிச் சிரித்தான்.

“எனக்குத் தான் இப்போ ஜனனியைப் பார்த்து பொறாமையா இருக்கு. இப்படி என்னால உன்னை சிரிக்க வைக்க முடியலைதானே! இப்போ இவளைப் பார்க்கவும் தானே, உனக்குச் சிரிப்பு வருது!” என்று ஆதங்கமாகச் சொல்ல,

“ஏண்டிம்மா நுவ்வு?” என்று அம்மாவை அணைவாகப் பிடிக்க..

“நீ வேண்டாம் போ! நான் என் மருமகக்கிட்ட டீல் போட்டுக்கறேன்!” என்றவர், “நீயே சொல்லு ஜனனி! இவன் ரொம்ப அழுத்தக்காரன்! என்கிட்டே உன்னை லவ் பண்றதை அப்போவும் சொல்லலை இப்போவரைக்கும் சொல்லலை!” என,

“அத்தை! நான் ஒன்னு சொல்லடுமா?” என்றால் தயங்கித் தயங்கி, அவள் சொன்ன விதத்தில் “என்னமா?” என பரிவாகக் கேட்க, “என்கிட்டே கூட இதுவரைக்கும் சொல்லலை!” என்றாள்.

கிண்டல் செய்கிறாளோ என்று ஸ்வாதிப் பார்க்க.. “இல்லை அத்தை, நிஜமா சொல்றேன்!” என,

“ஆமாம்மா, சொன்னதில்லை!” என்று சொல்லிக் கொண்டே வாசு காலரை உயர்த்தி சத்தமாகச் சிரித்தான்.

முதலில் திகைத்த ஸ்வாதி, “உன்னை!” என்று அடிக்க வருவது போல பாவ்லா காட்ட.. இரு கைகளையும் உயர்த்தி சரண்டர் என்பது போலக் காட்டியவன், “இப்போ சொல்லட்டுமா?” என்றான் ஜனனியைப் பார்த்து.

“அம்மா முன்னாடி ஐ லவ் யு சொல்ற ஒரே பையன் நீங்க தான்!” என்று ஜனனியும் சொல்லிச் சிரித்தாள்.

“அப்போக் கூட சொல்லட்டுமா கேட்கறான், சொல்றானில்லை! அவனுக்காக நீ இப்படி வெயிட் பண்ணிட்டு இருக்க, டூ பேட் ஜனனி!” என்று ஸ்வாதி சொல்ல..

“அம்மா! எதோ ஊர்ல ஒரு பொண்ணு என்னைப் பார்க்குது, கெடுக்காதீங்க!”  

“என்ன? ஒரு பொண்ணா! ஏன்டா பொய் சொல்ற? உன் பக்கத்துக்கு வீட்ல ஒரு பொண்ணு, எப்பவும் ஷார்ட்ஸ்ல இல்லை மினி ஸ்கர்ட்ல தான் உன் முன்னாடி சுத்துமாமே!” என,

“நீங்க எப்போ பார்த்தீங்க, டெல்லி வந்தப்போவா?” என்று வாசு கேட்டு விட்டு “அச்சோ!” என்பதுப் போல நாக்கைக் கடிக்க,

ஜனனி, “இது என்ன புதுக் கதை?” என்பதுப் போல முறைத்துப் பார்த்தாள். “மாட்டினாயா!” என்று ஸ்வாதி சொல்ல, “அம்மா!” என்று வாசு பரிதாபமாக சொல்ல,

“ஹப்பா! இன்னைக்கு நான் நல்லாத் தூங்குவேன்!” என்று வேலை முடிந்தது என்பது போல ஸ்வாதி கைத்தட்டிச் சிரிக்க..

இப்போது ஜனனி வாசுவை விட்டு, “நீங்க மட்டும் இல்லை அத்தை, உங்கப் பேச்சும் அழகு, உங்க இன்னர் சென்ஸ் கூட அழகு!” என்று ஜனனி சொல்ல,

“அவளை என்னை பார்க்க விடமாட்டீங்களா அம்மா!” என்றான் வாசு.

“அச்சோ, பார்த்துட்டாலும்! சரியான முசுடு அத்தை இவர்!” என்ற வாசுவை நோக்கிப் பழிப்புக் காட்டிய ஜனனியை அணைத்துப் பிடித்தவர்.. “அன்னைக்கு பேசினதுக்கு சாரி, அப்போ உன்னை இவ்வளவு சின்செயரா லவ் பண்ணுவான்னு தெரியாது! வாசு பண்ணினாலும் பண்ணலைன்னாலும் நான் அப்படிச் சொன்னது தப்பு” என,

“எதுக்கு சாரி எல்லாம்!” என்றவள்.. “எங்க அப்பா அம்மா என்னை செல்லமா வளர்த்தாலும், சில விஷயம் என்னால இப்படி நீங்களும் இவரும் பேசற மாதிரி பேச முடியாது. சோ! அவங்க பாயிண்ட்ல அவங்க பண்ணினது அவங்களுக்குச் சரி, நானும் கொஞ்சம் ரொம்ப ஓவர் தான் அப்படி பட்டுன்னு சொன்னேன், அப்புறம் தெரியாமக் கல்யாணம் வரைக்கும் போனேன். எல்லாம் பேசற சுதந்திரம் இருந்தாலும், இது பேசற சுதந்திரம் எனக்கு இல்லை!”

“ஆனா, இவர் உங்கக்கிட்ட எல்லாம் ஃப்ரீயா பேசறார், சோ அன்னைக்கு நடந்த தப்புக்கு இவர் தான் காரணம், இவர் உங்களுக்கு புரிய வைக்க ட்ரை பண்ணியிருக்க மாட்டார்!” என்று அப்படியேச் சொல்ல.

ஸ்வாதிக்கு கண்கள் கலங்கி விட்டது.. “எஸ்! இவன் அப்போ மட்டுமில்லை, அப்புறமும் புரிய வைக்க முயற்சி பண்ணலை!”  

“அம்மா!” என அருகில் வந்த வாசுவைப் பார்த்து, “கிட்ட வராத போடா!” என்று கோபிக்க..

“விடுங்க அத்தை! விடுங்க!” என்று பெரிய மனுஷியாகப் பேசியவள், “அவர் வேண்டாம் உங்களுக்கு, நாம ஒரு டீல் போட்டுக்கலாம்!” என்றாள் சீரியசாக.

“என்ன டீல்?” என்று ஸ்வாதிக் கேட்க…  “உங்கப் பையனை நீங்க எனக்குக் குடுத்துடுங்க! நான் என் பையனை உங்களுக்கு கொடுத்துடறேன்!” என,

வாசுவின் முகம் மீண்டும் விரிந்த சிரிப்பை பூசியது. சரியாகப் புரியாமல் ஸ்வாதி பார்க்க.. “ஆனா கொஞ்சம் லேட் ஆகும்! இன்னும் ஒரு வருஷம் ஆகும்! அதுவும் நீங்க உங்கப் பையனை எனக்குக் குடுத்தா தான் ஆகும்!” என்று ரைமிங்காக பேச,   

“ஆங்!” என்று பார்த்த ஸ்வாதி சிரிக்க ஆரம்பிக்க.. வாசுதேவனும் சிரிக்க..

“இந்த ரகசியத்தை உங்க கிட்ட மட்டும் வெச்சிக்கோங்க. எங்க அப்பா அம்மா கிட்ட சொல்லிடாதீங்க! அப்புறம் விளையாட்டுத்தனமா இப்படி பேசக் கூடாதுன்னு என் காது ஜவ்வு கிழியற அளவுக்கு அட்வைஸ் பண்ணுவாங்க!” என்றாள். 

இதை எல்லாம் ஜனனி சிரிக்காமல் சொல்லிக் கொண்டிருக்க, கேட்டுக் கொண்டிருந்த அம்மாவிற்கும் மகனிற்கும் அப்படி ஒரு சிரிப்பு.

“எப்படி என் செலக்ஷன்?” என்று ரகசியமாக வாசு அம்மாவிடம் கேட்க.. “சூப்பர் போ!” என்று தெலுங்கில் சொல்லி, ஜனனியை  நெட்டி முறித்தார். “இவ கூட இருந்தா நேரம் போறதே தெரியலைடா, மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு, நிறையச் சிரிக்க வைக்கிறா!” என்று மகனிடம் மீண்டும் தெலுங்கில் சொல்ல,  

“எனக்கும் கொஞ்சம் கொஞ்சம் தெலுங்கு வரும். அதுக்கு தான் ஹைதராபாத் போனேன்!” என்று ஜனனி பெருமையாகச் சொல்ல,

ஸ்வாதிக்கு மிகுத்த மன நிறைவு.

மூன்று மாதங்களுக்குப் பிறகு வெகு விமரிசையாக ஜனனி வாசுதேவனின் திருமணம் நடக்க.. ஜனனி பரதன்னாக இருந்தவள் மிஸர்ஸ் ப.ஜனனி வாசுதேவனாக பெயரில் புலம் பெயர்ந்தாள். ஜாகையையும் டெல்லிக்கு மாற்றினாள்.

வாசு வரும் நேரம் லானில் தாத்தாவும் பாட்டியும் அமர்ந்திருக்க, ஜனனியும் அமர்ந்திருக்க.. வாசு வந்ததும், ரகசியப் பார்வை ஒன்றை ஜனனியை நோக்கி வீசியவாறு பாட்டியின் அருகில் அமர.. “காஃபி எடுத்து வா ஜனனி!” என்று சொல்லியப் பாட்டி, அடுத்த நொடி “நீ போகாத! போகாத!” என்றார் அவசரமாக.

பார்த்தால், பக்கத்துக்கு வீட்டுப் பெண் வந்து கொண்டிருந்தாள். ஒரு மினி ஸ்கர்ட், மற்றும் டைட் டீ ஷர்ட்டில் இருந்தாள்.

முகத்தை சுழித்தார் பாட்டி, அருகில் வந்தவள், ஜனனியை பார்த்து “இன்னும் காஃபி டைம் ஆகலையா தீதி!” என்று கேட்டவாறு உள்ளே ப்ளாஸ்க்கில் இருந்த காஃபியை யாரும் சொல்லாமலேயே எடுக்கச் செல்ல,

அவள் சென்றது “ஹ! ஹா!” என்று ஜனனி சிரிக்க ஆரம்பிக்க, எதற்கு என்று புரியாமல் எல்லோரும் பார்த்தனர்.

“பாட்டி! இருந்தாலும் நீங்க உங்கப் பேரனை, அந்தப் பொண்ணு பார்க்கற மாதிரி இந்த பில்ட் அப் கொடுக்ககூடாது. அவ காஃபி சாப்பிட வர்றா பாட்டி!” எனச் சொல்லி, குலுங்கி குலுங்கி சிரிக்க..

“உன்னைப் பாட்டி கேட்டாங்களா?” என்றான் கிண்டலாக வாசு.

“கேட்கலைன்னாலும் நாங்க எங்க வீட்டுக்காரரோட அருமை பெருமை எல்லாம் சொல்லுவோம்ல!” என்று கெத்தாக சொல்லுவது போல மீண்டும் வாசுவை வாரினால்.

“அடிங்க, உன்னை!” என்று வாசு எழ.. ஜனனி எழுந்து ஓட ஆரம்பித்தாள்.

திரும்ப அவள் வீட்டுக்குள் ஓட, அதற்குள் பக்கத்துக்கு வீட்டு பெண் வெளியில் வந்திருக்க,

“யு கீப் தேர்! வி வில் ஜாயின் யு இன் டென் மினிட்ஸ்!” என்று வாசு சொல்ல, “ஓகே!” என்று சொன்ன அவளின் முகத்திலும் அப்படி ஒருச் சிரிப்பு.

அங்கே சென்று டேபிள் மேல் வைத்தவள், “அவங்க இப்போதைக்கு வரமாட்டாங்க தாதிம்மா. நான் கொஞ்சம் குடிச்சிக்கறேன்!” என்று சொல்லி, காஃபி சிறிது ஊற்றி, அந்த டெல்ஹியின் வானிலையை அனுபவித்தவாறு குடிக்க,

“ஜனனி சொன்னது போல, இவ காஃபி குடிக்கத் தான் வர்றா போல, நாமத் தான் தப்பா நினைச்சிட்டமோ” என்ற நினைத்த பாட்டி, தமிழில் எதோ கேட்க அதை ஆங்கிலத்தில் தாத்தா மொழிபெயர்க்க.. இத்தனை நாட்கள் பார்த்தாலும் பேசினாலும் உருவாகாத ஒரு நட்பு, அப்போது அழகாக உதயமானது,

உள்ளே சென்ற வாசு, அவளைப் படுக்கையில் நகர விடாதபடி அழுத்திப் பிடித்திருந்தான். அப்போதும் சிரித்துக் கொண்டிருந்தாள் ஜனனி. சிரிக்கிறாயா நீ என்று முறைத்து பார்த்தாலும், சிரித்துக் கொண்டிருந்த மனைவியின் அழகு ஈர்க்க, சிரிக்கும் இதழ்களில் ஒரு முற்றுகைப் போராட்டம் நடத்தினான். சற்று அடங்கியவளாக அதை அனுபவித்தாள்.   

மெதுவாக ஜனனியை விடுவித்தவன், அவளின் செம்மையுற்ற முகத்தை ரசித்தவாறு, “அவ ஒன்னும் காஃபி குடிக்க வரலை.. இத்தனை நாள் நம்ம பார்த்தும் திரும்பிப் பார்க்காதவன், இந்தப் பொண்ணுக்கிட்ட என்ன பார்த்து கல்யாணம் பண்ணியிருப்பான்னு பார்க்குமா இருக்கும்!” என்றான் சரசமாக.

“என்ன பார்த்தாராம்?” என்றாள் ஜனனியும் அவனைப் போலவே சரசமாக.

“சரியா ஞாபகமில்லை.. அரியர் வெச்சு, அரியர் வெச்சு, பாஸ் பண்ணின பையன், கொஞ்சம் வீக், மறுபடியும் ஞாபகப்படுத்தணும்” என,

“என்னது அரியரா? பிச்சி புடுவேன் பிச்சி!” என்று மிரட்டியவள்.. “உங்களை நம்பி நான் டீல் வேற போட்டிருக்கேன் அத்தைக்கிட்ட!” என்று மிரட்டலாக பேசினாள்.

சிரித்தவன் “லவ் யு ஜனனி, லவ் யு மச் டீ!” என்று எழ,

“இப்போ எதுக்கு எழறீங்க?”

“ஹேய்! அவ என்னை நக்கலா பார்த்துட்டு போனா! வா! கொஞ்ச நேரம் வெளில போகலாம்!”  

“உங்களுக்கு அவளை மினில பார்க்க ஆசைன்னு சொல்லுங்க!”

“ஆமா! அவ அழகா இருக்கால்ல.. இத்தனை நாள் எனக்குப் பார்க்க சான்ஸ் கிடைச்சாலும் மனசே இல்லை.. இப்போதான் நீ என் பக்கத்துல இருக்க இல்லை, தைரியமா பார்க்கலாம்!” என,

இப்போது “அடிங்க!” என்று ஜனனி வேகமாக எழ, வாசு வெளியில் ஓட, ஜனனி துரத்த,

“தாதிம்மா! தேக்கியே, அவங்க ரெண்டு பேரும் ஓடி ஓடி எக்சர்சைஸ் பண்றாங்க!” என்று சொல்லி அந்த யுவதி சிரிக்க..

“கம்! ஜாயின் அஸ்!” என்று ஜனனி அவளைப் பார்த்து ஓடிக்கொண்டே கத்தினாள். “நீ சும்மாவே இருக்கமாட்டியா?” என்று வாசு ஜனனியை பார்த்து கடிய,

“நோ தீதி! யு என்ஜாய் வித் ஹிம்! ஐ அம் என்ஜாயிங் யுவர் பில்டர் காஃபி!” என்று அந்த யுவதியும் பதிலுக்கு கத்தினாள்.

வாசுவைப் பார்த்து “எப்படி” என்பது போல ஜனனி கண்ணடித்து பொங்கி பொங்கி சிரித்தாள். சிரித்ததினால் ஓட முடியாமல் தேங்கி நிற்க, கையெட்டும் தூரத்தில் இருந்தாலும் பிடிக்காமல், பதிலுக்கு வாசுதேவன் ஜனனியைப் பார்த்த பார்வைச் சொன்னது,

ஊரு அழகி உலக அழகி யாருமில்ல உனைபோலே
வாடி நெருங்கி பாப்போம் பழகி,
உன் அழகில் என் இதயம் தன் நிலையை மறந்து மறந்து
கொஞ்சிடவும் கெஞ்சிடவும் மருகுதே உருகுதே
உன் வழியில் என் பயணம் வந்தடைய நடந்து நடந்து
அஞ்சிடவும் மிஞ்சிடவும் சிதறுதே பதறுதே
உன் அழகில் என் இதயம் தன் நிலையை மறந்து மறந்து
கொஞ்சிடவும் கெஞ்சிடவும் மருகுதே உருகுதே  

       

 

Advertisement