Advertisement

அத்தியாயம் பதிமூன்று :

பூரணியின் மகளுக்கு மொட்டை அடித்துக் காது குத்தும் நாள் அன்று, வீட்டினர் பரபரப்பாக கோவிலுக்கு கிளம்பிக் கொண்டு இருந்தனர். ஜனனி அன்று காலையில் தான் வீட்டிற்கு வந்திருந்தாள். அங்கே சென்னையில் இருந்து ஒரு இருபது கிலோமீட்டர் தூரம்.. நாங்கள் வந்து கொள்கிறோம் என்று சொல்லியிருந்தனர். அதனால் பூரணி வீட்டினர் அவர்களின் உறவுகளோடு சென்றிருந்தனர்.

காலையில் அனுராதவிற்கு தொலைபேசி அழைப்பு வர, எடுத்ததும் பேசியது ஸ்வாதி,

“எப்படி அனு இருக்க?” என்ற உச்சரிப்பிலேயே அது சுவாதி என புரிய,

“நல்லா இருக்கேன் அண்ணி, நீங்க எப்படி இருக்கீங்க?” என்ற கேள்வியை வாய்த் தானாக கேட்டாலும், அம்மாவிற்கும் அப்பாவிற்கும் எதுவோ என்ற பயம் நெஞ்சினைப் பிடித்து ஆட்டியது.

“சொல்லுங்க அண்ணி!” என்று கூடவேக் கேட்க.. அனுராதாவின் குரலில் எதோ ஒன்றுக் குறைய,

“ஏன் அனு? நான் ஃபோன் பண்ணினது பிடிக்கலையா!” என,

“ஐயோ, அப்படி எல்லாம் இல்லை அண்ணி” என்று பதறியவர், “நீங்க கூப்பிட்டதே இல்லை, இப்போக் கூப்பிடவும் அப்பா அம்மாவுக்கு ஏதோன்னு பயந்துட்டேன்.. இன்னைக்குப் பூரணி பொண்ணுக்கு வேற மொட்டை அடிச்சு காத்து குத்துறாங்க, அதுக்குக் கிளம்பற பதட்டம் வேற”  

“அப்படியா! சந்தோஷம்…” என்றவர்.. “என்னைக் கூப்பிடமாட்டியா?” என்றும் சொல்ல.. “அச்சோ, வாங்கண்ணி, வாங்க!” என்றார்.

அப்படி ஆரம்பித்தப் பேச்சுக்கள்.. இப்போது கோவிலில் பூரணியின் குழந்தைக்கு மொட்டை அடிக்கப்பட்டுக் கொண்டிருக்க.. குழந்தை, கத்து, கத்து என்று கத்திக் கொண்டு இருந்தாள்.

ஜனனி, குழந்தை அழுவதைப் பார்த்து.. பூரணியிடம் “அழுத்தி பிடிக்கா ஆடிடப் போறா, காயம் ஆகிடும்!” என்று சத்தமாக மிரட்டிக் கொண்டிருந்தாள். ஆம்! குழந்தை வீரிடுவதைப் பார்த்ததும் தானாக வந்தது.

அதுவுமில்லாமல் பூரணி காலையில் அங்கே வந்ததில் இருந்து ஜனனியைக் கூடவே இருத்திக் கொண்டு, இதைச் செய்! அதைச் செய்! என்று அருகில் வைத்து சகஜமாக்கிக் கொண்டு இருந்தாள். பூரணியின் கணவன் அருகிலேயே இல்லை. குழந்தை அழுவதைப் பார்க்க முடியாமல் பெரிய மகனைத் தூக்கிக்கொண்டு, தூரமாகச் சென்று நின்று கொண்டிருந்தான். 

ஜனனிக்குக் குழந்தையிடம் முழு கவனமும் இருந்ததினால், அப்போது புதிதாக சிலர் அங்கே வர, அதில் கவனம் செல்லவில்லை.

மொட்டை அடித்து முடித்ததும், “ஷப்பா!” என பூரணி அப்படியே பின் நகர்ந்து அமர..

“நீ வாடி செல்லம்!” என்று ஜனனி அவளை தூக்கித் திரும்ப.. அவளின் அருகில் வாசுதேவன்.. முன்பே வந்து விட்டான், ஜனனியை பார்த்துக் கொண்டிருந்தான்.

தூசு படிந்த ஓவியமாய் அவனின் கண்களுக்குத் தெரிந்தாள். தூசி தட்ட கைகள் பரபரத்தன.  அணைத்துப் பிடிக்க கைகள் துடித்தன. முயன்று அமைதியாய் காட்டிக் கொண்டு நின்றிருந்தான். 

அவன் மட்டுமல்ல ஸ்வாதி, அவரோடு அனுராதாவின் அம்மா, அப்பா என்று எல்லோரும்.. ஓர் பத்து நிமிடம் முன் தான் வந்திருந்தனர். எல்லோர் பார்வையும் வாசுதேவன் மேல் தான்.. முன்பே அழகன், வசீகரன், கம்பீரமானவன் தான். இப்போது பதவி கொடுத்தப் பொலிவு.. கூடவே வருடங்கள் கடந்து விட்டதால் அந்த வயதுக்குரிய தோற்றம், ஒரு முழுமையான ஆண்மகனாக முன் நின்றான்.

அவனைப் பார்த்ததும் ஜனனியின் கண்களில் ஒரு அதிர்வு.. பின் பாலைவனத்தில் தண்ணீரைப் பார்த்த ஒரு பரவசம். அவசரமாகக்  கண்களில் நிரப்பினாலும் சரியாகத் தெரியவில்லை. கண்களில் தான் நீர் நிறைந்து விட்டதே.. அவளின் இதயம் துடிப்பது அவளுக்குக் கேட்டது.

வாசுதேவன் தேவனாய்த் தெரிய.. ஜனனி அவனுக்குப் பக்கத்தில் காய்ந்த கருவாடாகத் தான் தெரிந்தாள்.. அளவான உயரத்தில், ஒடிசலாக, திருத்தமான முகத்துடன் இருந்தாலும், ஒரு பொலிவு இல்லை, நிறம் வாசுதேவன் பக்கத்தில் இருந்தால் மங்கித் தான் தெரிவாள். உடையில் சிறிதும் கவனம் இல்லை அது இன்னும் ஜனனியை குறைத்துக் காட்டியது.

இது பார்ப்பவர்களுக்கு! ஆனால் வாசுவின் கண்களுக்கு அவள்தானே பேரழகி..

“எப்படி இருக்க ஜனனி?” என்ற வாசுவிற்கு “நல்லா இருக்கேன்!” என்பது போலத் தலையாட்டல் மட்டுமே. பேச முடியவில்லை. பேச்சே மறந்து விட்டது போன்ற உணர்வு. அதற்குள் குழந்தைச் சிணுங்க.. அதைப் பூரணியிடம் கொடுப்பது போல இடத்தை விட்டு நகர்ந்து விட்டாள்.

வாசுதேவனைப் பார்த்த ஜனனியின் வீட்டினர் பிரமித்து தான் பார்த்தனர்.. “சே, சூப்பரா இருக்கான்யா ஆளு!” என்பது போலத் தான்..

அதையும் விட ஸ்வாதியைப் பார்த்த செல்லமாள், “அச்சோ! இந்தம்மா இப்படி இருக்கே.. என் பொண்ணு இது பக்கத்துலயே நிக்க முடியாது போல இருக்கே.. இதுல இவங்க பையன் பக்கத்துல எப்படி நிற்க வைக்கும்!” என்று எண்ணம் தான். சொல்லப் போனால் செல்லமாளின் முகம் பொலிவிழந்து விட்டது.

அனுராதா, அம்மா அப்பாவிடம் பேசிக் கொண்டிருக்க.. லக்ஷ்மணனிடம் பேச ஆரம்பித்த ஸ்வாதி.. “வாசு!” என்று மகனைக் கூப்பிட்டு அருகில் நிறுத்திக் கொள்ள…

பரதன் அவர்களின் அருகில் தான் இருக்க, செல்லமாள் ஸ்வாதியைப் பார்த்தது பார்த்தபடி நிற்க.. அவினாஷும் ரகுலனும்  பூஜைப் பொருள் ஒன்று குறைய, அதை வாங்க அந்த இடத்தில இருந்து சென்றிருக்க.. பூரணியும் அவள் கணவரும் குழந்தையைப் பார்க்க.. அவர்களின் பக்கத்து உறவுகள் சலசல வென்று பேசிக் கொண்டிருக்க..

ஜனனியை கவனிப்பார் யாருமில்லை!!!

ஸ்வாதி சுற்றி வளைக்காமல்.. “அன்னைக்கு என் பையனை பேசிட்டீங்களேன்னு கோபம். நானும் திரும்பப் பேசிட்டேன்.. சாரி! மனசுல வைச்சுக்காதீங்க” என்றவர்..

“உங்கப் பொண்ணை என் மகனுக்கு கொடுக்கறீங்களா?” என்றார் நேரடியாக.

அன்று காலையில் தான் வாசுவும், தாத்தாவும், பாட்டியும் வந்திருந்தனர்.. ஸ்வாதி வாசுவிடம் ஒரு வார்த்தைக் கூடப் பேசவில்லை.. “சாரிம்மா!” என்று ஸ்வாதியின் பின் சுற்றிக் கொண்டிருந்தான்.

“நம்ம ஒரு விஷேஷத்துக்குப் போகணும்!” என்று மாமனாரிடமும் மாமியாரிடமும் சொன்னார் அவ்வளவே.. இங்கு வந்த பிறகு தான் இப்படி என்றே தெரியும்.. வாசுவின் மனம் குதித்தது தான். ஆனால் காட்டும் வழக்கமில்லை.. மனதின் மகிழ்ச்சியே இன்னும் அவனைப் பொலிவாக காட்டியது.

லக்ஷ்மணன் இப்படி ஸ்வாதி நேரடியாகக் கேட்பார், அதுவும் மன்னிப்போடு என்று எதிர்பார்க்கவில்லை.. “நாங்களும் அன்னைக்கு ஜனனி பிடிச்சிருக்கு, இவரைத் தான் கட்டுவேன்னு சொன்னவுடனே, எதுவும் யோசிக்கலை. சாரி!” என்று அவரும் மன்னிப்பு கேட்டவர்..

“அன்னைக்கே பொருத்தமில்லைன்னு சொல்லிட்டுப் போனீங்க, இன்னைக்கு இன்னும் வாசுவோட உயரமே வேற.. திரும்ப இந்த மாதிரி பேச்சு வந்தா, எங்கப் பொண்ணு தாங்க மாட்டா!” என்று அவரும் நேரடியாகச் சொல்ல,

“என் மகனுக்குப் பிடிச்சிருக்குன்றப்போ இந்தப் பொருத்தம் பார்க்கற வேலையே இல்லை.. இனி அந்தப் பேச்சு வராது!” என்றார்.

அப்போது தான் ரகுலன் வந்தவன், “அப்பா! ஜனனி அக்கா மெயின் ரோட்ல ஊருக்குப் போற பஸ் ஏறினா.. நாங்க வர வரத் தான் பார்த்தோம்! அவினாஷ் அப்படியேக் கூட ஏறிட்டான்.. நான் இங்க வந்துட்டேன்!” என்று பரபரப்பாக சொல்ல,

“அச்சோ! என்ன இது?” என்று பெரியவர்கள் பதற..

ஸ்வாதி வாசுவைப் பார்த்து முறைத்தார்.. “ஏன்டிரா நுவ்வு? ஏண்டி நீ லவர் பாய் வாசு!” என்று பாதித் தெலுங்கும் ஆங்கிலமுமாக அவனை திட்டினார்.

“உன்னைப் பார்த்த உடனே ஓடி வந்து ஹக் பண்ணியிருக்க வேண்டாமா, எத்தனை வருஷத்துக்கு அப்புறம் பார்க்கிறா உன்னை பார்த்ததும் ஓடறா, என்ன சொல்ல?”

“அதும்மா! நாங்க பிரிஞ்சிட்டோம்!” என்று அன்னையின் கோபத்தை பார்த்து வாசு உளற,

“போடா!” என்று அவனைத் திட்டியவர்.. “காதலிக்கறது எதுக்கு பிரியறதுக்கா.. உனக்கு லவ் பண்ணவே தெரியலை.. வேஸ்ட் போ!” என..

எல்லோர் முன்னும் என்ன சொல்வது என்று தெரியாமல், “அதிக்காதம்மா!” என பரிதாபமாக விழித்து நின்றான்.  

“ஆ!” என்று அம்மாவும் மகனும் பேசிக் கொள்வதை ஜனனி வீட்டினர் பார்த்து நின்றனர்.

“ஜனனி போய் டென் மினிட்ஸ் ஆகிடுச்சு, நீ எனக்கு எக்ஸ்ப்ளநேஷன் குடுத்துட்டு இருக்க.. டூ பேட்!” என்றவர்.

“நாங்க ஈவ்நிங் வர்றோம்!” என்றவர், ரகுலனைப் பார்த்து, “அவனுக்கு பைக் ஓட்ட தெரியாது நீ கூட்டிப்போ!” என்றவர், திரும்ப இவர்களைப் பார்த்து, “அனுப்பட்டுமா!” என்றார்.

“அனுப்புங்க! அனுப்புங்க!” என்று செல்லமாள் முதலில் பதில் சொல்ல.. அன்னையாய் அவரின் மனம் அங்கே எல்லோருக்கும் புரிந்தது.

“ஏன் வாசு பைக் ஓட்ட மாட்டான்?” என்று லக்ஷ்மணன் பேச்சை இலகுவாக்க..

“அது அவங்கப்பாவுக்கு பைக் ஆக்சிடன்ட் தானே, அதனால எனக்கு ஒரு பயம்.. வீண் பயம்னு தெரியும்.. இருந்தாலும் விட முடியலை..” என்று அமைதியாகப் பேசியவர், “ஏன்? பைக் ஓட்டத் தெரியலைன்னா பொண்ணு குடுக்க மாட்டீங்களா அண்ணா!” என உற்சாகமாகச் சொல்ல..

எல்லோர் முகத்திலுமே புன்னகை.. சூழ்நிலைகளை நிமிடத்தில் மாற்றி கட்டுக்குள் கொண்டுவந்து விட்டார் ஸ்வாதி. மகனுக்காக எதுவும் செய்வார் இதைச் செய்ய மாட்டாரா என்ன?

ஜனனி வீட்டுக்குள் நுழைந்த சமயம்.. இவர்களும் பின்னோடு வந்து விட்டனர்.. ஆனால் பைக் வந்த ஸ்மரணைக் கூட இல்லை.. பஸ்ஸிலேயே கண்களைத் துடைத்தபடி தான் வந்தாள். பணம் ஏதும் இல்லாமல் பஸ்ஸில் ஏறிவிட, பின்னால் அவினாஷ் ஏறியதால் ஆகிற்று. இல்லையென்றால் அவ்வளவு தான், அங்கே சங்கடமாகியிருக்கும் அவளிற்கு.

தன்னுடைய ரூம் சென்றவள், கண்ணாடி முன் நின்று தன்னைப் பார்த்தபடி தேம்பித் தேம்பி அழுதவள், பின் முகத்தை மூடி அழ..

வாசு கதவைத் திறந்து உள் வந்தான்.. அது கூட அவளுக்குத் தெரியவில்லை..

அருகில் சென்றவன், “ஜனனி” என.. நிமிர்ந்து பார்த்தவள், இன்னும் அழ.. “ஷ்! எதுக்கு இப்படி அழற!” என்று அவளை ஆதரவாக அணைக்க.. ஜனனி விலக முற்ப்பட.. அவள் விலக முடியாதபடி இன்னும் இறுக்கி அணைத்து பிடித்தான்.

விலக முடியாததால் வாசு மேலேயே சாய்ந்து, தேம்பி தேம்பி அழுதவள், முகத்தை நிமிர்த்தவே இல்லை.

வந்து விட்டான் என்ற உணர்வு, அது கொடுத்த பரவசம், இனி எப்படியும் தன்னை விட்டுப் போக மாட்டான் என்ற நிம்மதி, வீட்டினரும் விட மாட்டர்கள், இனித் தன் வாழ்க்கை வாசுதேவனோடு என்ற மனதின் மகிழ்ச்சி ஊற்று, உணர்ச்சிகளின் பிடியினில் ஜனனியை சிக்க வைத்து, அழுகையைக் கொடுத்தது.  

வாசுதேவனை அங்கே திடீரென்று பார்த்ததும், ஹைதராபாத்தில் இருந்து நேற்று அவள் வந்த பயணத்தின் போது இருந்த மன சஞ்சலம், என்ன இருக்கிறது வாழ்க்கையில் என்ற பற்றற்ற தன்மை, தனிமையின் பயம், எல்லாம்  சூரியனைக் கண்ட பனியாய் விலகியது.  

யார் முன்னிலையிலும் இதைக் காட்ட பிரியமற்று அந்த இடத்தை விட்டு ஏறக் குறைய ஓடி வருவது போல வந்துவிட்டாள். கூடவே அவளின் உப்பு சப்பற்ற காரணங்கள்.

அழட்டும் என்று விட்டால், அழுது முடிப்பவள் போலத் தோன்றவில்லை.. “என்னை பாரு முதல்ல!” என்று ஒரு கையால் முகத்தை வலுக்கட்டாயமாக நிமிர்த்த.. தேம்பிக் கொண்டே அவனைப் பார்த்தாள்.

“எதுக்கு அழற?’ என்றவனிடம்.. “தெரியலை!” என்றவள், கூடவே விழி விரித்து, “நீங்க இன்னும் அழகாகிட்டீங்க” என முகத்தைச் சுருக்கி சொல்லிய விதத்தில் வாசுவிற்குச் சிரிப்பு வந்தது.

“அதுக்கு எதுக்கு அழற?” என இன்முகமாகவே கேட்டான்.  

“நான் உங்களுக்கு மேட்ச் இல்லை தானே!”

“நீதான் என்னோட மேட்ச் பாக்ஸ் ஜனனி.. நீ மட்டும் தான் என்னை பத்த வைக்க முடியும்!” என சொல்லி வாசு பார்த்த பார்வையில்,

“ங்கே!” என்று தான் ஜனனி பார்த்தாள். வாசுவினது இந்தப் பார்வை, இந்த பேச்சு எல்லாம் புதிது.

ஜனனி விழித்துப் பார்த்த பார்வையில்.. ஈர்க்கப்பட்டு.. அவளின் கண்களின் மேல் பட்டும் படாமல் இதழ் பதிக்க…. ஜனனியின் உடல் சிலிர்த்தது. வாசுவைத் தானும் இறுக்கமாகப் பற்றிக் கொண்டவள்.. “இது தப்பு!” என,

“ஆமாம்! இது தப்பு தான்! இவ்வளவு பக்கத்துல வெச்சிக்கிட்டு கண்ல யாராவது குடுப்பாங்களா?” என்றவனை, “இவனுக்கு இப்படிக் கூட பேச வருமா?” என்று பாவையவள் பார்த்திருக்க,

வாசுதேவன் மையலோடு சொன்னதைச் செயல்படுத்த ஆரம்பித்தான்.. கண்களை விட்டு இதழ்களில் நீண்ட நேரம் இளைப்பாற.. ஜனனிக்கு உடல் நடுக்கமே எடுத்து விட்டது.. வேண்டும் போலவும் இருந்தது, வேண்டாம் போலவும் இருந்தது. அவன் விட்டதும் அவசரமாகக் கதவைப் பார்க்க.. அது வேறு திறந்து இருக்க.. அச்சோ என்ன இது என்பதுப் போல பரிதாபமாகப் பார்த்தாள்.

புது மயக்கம் வாசுதேவனுக்கு. இத்தனை நாட்கள் யாரைப் பார்த்தாலும் தோன்றாத ஆசைகளும், உணர்வுகளும், ஜனனியைப் பார்த்த இந்த மணித்துளிகளில் ஆரம்பித்து இருந்தது.  முன்னிருந்த காலத்தில் திருமணம் வரை சென்ற போதுக் கூட இப்படித் தோன்றியதில்லை. தினசரி வாழ்க்கையில் ஆணையும் பெண்ணையும் காதலர்களாகவோ, கணவன் மனைவியாகவோ, பிள்ளைகளுடன் குடும்பமாகவோ பார்க்கும் பொழுது ஜனனிக்காக ஏங்கித் துடித்த இதயம்.. இப்போது பார்த்த பிறகு இன்னும் வேகமாகத் துடித்தது. 

யாருமில்லா தனியரங்கில்
ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே
எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய்
இப்படிக்கு உன் இதயம்!

ஓ! என்ன சொல்வேன் இதயத்திடம்
உன்னை தினமும் தேடும்
என் பேச்சைக் கேட்காமல் உன்னைத் தேடும்!

இப்படிக்கு உன் இதயம்!

எப்போதும் ஜனனியைக் குறித்து மனதினில் ஒலிக்கும் இனிமையான வரிகள். இசையைக் குறித்து பெரிய ரசிகனெல்லாம் இல்லை அவன். ஆனால் கேட்டது முதல் இது அவனுக்கான வரிகள் போல தோன்றவில்லை.. இது அவனின் வரிகளே தான். எப்போதும் அவனுள் இசைப்பவள் ஜனனியே!  காதலோடு பார்த்திருந்தான்.   

ஜனனியின் பரிதவிக்கும் பார்வையைப் புரிந்தவனாக, “உன் தம்பிங்க ரொம்ப டீசன்ட்,  பார்க்க மாட்டாங்க! இப்போதைக்கு எல்லோருக்கும் உன் சந்தோஷம் மட்டுமே முக்கியம்” என்று சொல்லிப் புரியவைத்தான்.

“நான் என்ன பண்றேன்னு கேட்க மாட்டியா?” என,

“முத்தம் குடுத்தீங்க!” என்று சின்சியராக, எனக்குத் தெரியும் என்பது  போல முகத்தில் செம்மை படர சொல்ல,

“அய்யோடா!” என்பதுப் போல ஒரு லுக் விட்டவன், பின்பு வாய் விட்டுச் சிரித்து, அவளின் தலையோடுத் தலையை செல்லமாக முட்டி, “அட அறிவே! அதை சொல்லச் சொல்லலை, என் வேலையைப் பத்தி கேளு சொன்னேன்?” என,

“என்ன செய்யறீங்க?” என,

“ஐ எஃப் எஸ் ல செலக்ட் ஆகி, வேலைல சேர்ந்து மூணு வருஷம் ஆகப் போகுது. நாடு நாடா சுத்தப் போறேன், நிறையப் பேர் எனக்கு சல்யூட் வைப்பாங்க, வணக்கம் சொல்லுவாங்க, பெரிய ஆஃபிஸர்” என்று வேலையைச் சொன்னவன், என்னோட சம்பளம், அலவன்ஸ்,  மற்றும் வேலையைக் குறித்த இதர பெருமைகளை அடுக்கிக் கொண்டே போனவன், “என்னோட சக்சஸ் உன்கிட்ட ஷேர் பண்ண முடியாம, ஐ வாஸ் மிஸ்ஸிங் யு எ லாட்!” என்று வாசு உணர்ச்சிவசப்பட்டு பேசிக் கொண்டிருக்க..       

திரும்ப அழுகை முட்டியது.. “உங்களை யார் இப்படிப் படிக்க சொன்னா.. திரும்ப உங்கம்மா உங்களுக்கு நான் மேட்ச் இல்லை சொல்லுவாங்க. அழகா ஆகிட்டீங்க, நல்ல பொசிஷன், இப்போ ஹோட்டல் இருக்காமே, ரிச் கூட.. அப்போவே உங்கம்மா ஒத்துக்கலை, இப்போ எப்படி ஒத்துக்குவாங்க?” என்று மீண்டும் அழ,  

இதில் இப்படி ஒரு கோணமா என்று வியந்து போனவன்.. “எப்படி இப்படி யோசிக்கற?” என்று வினவ,

“நான் எப்போவுமே மாத்தி தான் யோசிப்பேன்” என்றாள் தேம்பிக் கொண்டே..

வாசுவிற்கு முகம் கொள்ளாச் சிரிப்பு.. இந்த விஷயங்கள் தானே அவனை ஈர்த்தது.. காதலாக்கியது.. காத்திருக்க வைத்தது.. தற்பொழுது பித்தனாக்கிக் கொண்டிருக்கிறது.

“அட லூசே!” என்று வாய் விட்டே சொன்னவன், “ரொம்ப மாத்தி யோசிக்கிற.. அதுதான் எல்லோரும் காதலிச்சா ஓடிடலாம்னு நினைச்சா, நீ பிரியலாம்னு நினைச்சிருக்க.. பிரியவும் செஞ்சிட்ட! ஐ வாஸ் பேட்லி மிஸ்ஸிங் யு ஜனனி” என்றான் காதலாக.

“நான் கூடத் தான் மிஸ் பண்ணினேன்” என்றவள்,

“நாம கூடத் தானே எல்லோருக்கும் தெரியாமக் கல்யாணம் பண்ணிக்க நினைச்சோம்.. எங்கம்மா என்னை எப்படித் திட்டினாங்க தெரியுமா.. என்ன இருக்குன்னு நீ அவன் பின்னாடி போறக் கேட்டாங்க..” சொல்லும் போது மீண்டும் அழுகை முட்டியது..

“காதலிச்சு கல்யாணம் பண்ணின அவங்க அம்மாக்  கூட உன் காதலை மதிக்கலை, அவ்வளவு கேவலமாவா போயிட்ட கேட்டாங்க!” என்று அன்றைய நாளின் நினைவுகளில் திரும்பத் தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தாள்.

ஐந்து வருடப் பிரிவு .. அதிலும் இந்த வார்த்தைகள் அவளைத் தனிமைப் படுத்திக் கொள்ள வைத்திருக்கும் என்று புரிந்தது. “சாரி! விட்டுடு! மறந்துடுவோம்!” என்றுச் சொல்லி.. பிரிவென்பது இனி கிடையவேக் கிடையாது என்று உணர்த்த, இன்னும் இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.                         

 

Advertisement