Advertisement

அத்தியாயம் பன்னிரண்டு :

காலையில் வேகமாக கிளம்பிக் கொண்டு இருந்தாள் ஜனனி.. அன்று ஒரு கான்ஃபரன்ஸ் கால் இருந்தது.. இருபத்தி ஆறு வயது முடிய இன்னும் ஒரு நான்கைந்து மாதங்கள் இருந்தன..

அவள் இருப்பது ஹைதராபாத்தில்.. ஆம்! அவள் பணி அங்கே தான் இந்த இரண்டு மாதங்களாக.. முதலில் சேர்ந்த பொழுது சென்னை வாசம்.. பிறகு நிகழ்ந்த பிரச்சனைகளுக்குப் பிறகு சில மாதங்களில் புனேவில் ஒரு வாய்ப்பு வர அங்கே மாற்றிக் கொண்டாள்.. பிறகு ஆன்சைட் என்று அமெரிக்காவில் மூன்று வருடங்கள்.. இப்போது திரும்பவும் இந்தியா..

வந்து இரண்டு மாதங்களே ஆகிறது.. வந்த போது சென்னை வீட்டிற்குச் சென்றது தான்.. திரும்பச் செல்லவில்லை.. அம்மாவும் அப்பாவும் சென்ற மாதம் வந்து பார்த்துப் போனர்.. திரும்ப அவினாஷ் வந்தான்.. திரும்ப ரகுலன் வந்தான்.. சென்ற வாரம் பெரியம்மாவும் பெரியப்பாவும் வந்து சென்றனர்.. பூரணி அக்காவின் மகளுக்குக் காது குத்து கண்டிப்பாக வரவேண்டும் என்று சொல்லிச் சென்றனர். நாங்கள் உன்னுடன் இருக்கிறோம் என்று அப்பா அம்மா மட்டுமல்ல எல்லோருமே உணர்த்திக் கொண்டே இருந்தனர். அதுவும் அவினாஷ் காலையில் ஆரம்பித்து இரவு உறங்கும் நேரம் வரை இரண்டு ஃபோன் கால்கள், ஒரு இருபது மெசேஜ்கள் என்று போட்டு விடுவான். இப்போது மட்டுமல்ல புனே சென்ற போது ஆரம்பித்தது, இப்போது அமெரிக்கா, பின்பு ஹைதராபாத் எனத் தொடர்கிறது.  

போவதா? வேண்டாமா? என்ற பெரியக குழப்பம்.. இத்தனை நாட்கள் எந்த விஷேஷத்திற்கும் சென்றதில்லை… ஏன் பூரணியின் வளைகாப்பு, பின் முதல் குழந்தை பிறப்பின் போது இந்தியாவில் தான் இருந்தாள், அது அவர்களின் வீட்டு விஷேஷம் கூட.. அதற்கும் செல்லவில்லை.. வேலை பாது காப்பு அரணாய் யாரையும் பார்க்க வேண்டிய அவசியம் இன்றி பார்த்துக் கொண்டது. பின் அமெரிக்க சென்று விட்டதால் எதற்கும் செல்லவில்லை.

இந்த முறை வந்த பெரியம்மா, “பூரணி பார்க்கணும் சொல்றா.. வந்துடு ஜனனி.. வராம இருந்துடாத..” என்று பலமுறை சொல்லிச் சென்றார்.

இப்படிச் சொந்த பந்தங்களின் ஞாபகங்கள், அப்பா அம்மாவின் ஞாபகங்கள், எதுவும் மனதில் உலா வர அனுமதிப்பது இல்லை தான்.. இதிலிருந்து பயந்து ஓடி, வேலை வேலை என்று தன்னை மூழ்கடித்துக் கொள்ள.. உத்தியோகத்தில் நல்ல உயர்வு, கூடவே நல்லச் சம்பளம், இங்கு இந்தியச் சம்பளம், அங்கு டாலரில் சம்பளம்.. அதைச் செலவு செய்வதே இல்லை. அத்தியாவசிய செலவுகள் மட்டுமே! ஆர்வமாக எதையுமே வாங்கியது இல்லை, தேவைக்கு உடைகள், அவ்வளவே! அணிமணிகள் என்று இந்த ஐந்து வருடங்களில் எதையும் வாங்கியதும் கிடையாது, இருப்பதை அணிவதும் கிடையாது. செல்லமாள் போராடிப் பார்த்து விட்டார். அசைக்க முடியவில்லை. கழுத்தில் ஒரு மெல்லிய சங்கிலி.. கையினில் வாட்ச் அவ்வளவே…

அவளாக ஏதாவது செய்து உண்டு கொள்ளுவாள்.. உப்பு காரம் எல்லாம் மிகவும் குறைவாக. எப்போதாவது அலுவலக நிமித்தம் டின்னர்.. என்று சென்றால் தான் ருசியான உணவே! 

நாக்கினை ருசிகளில் இருந்து தள்ளி வைத்திருந்தாள்!

காரணம் ஒன்றே! வாசு வேண்டும் என்று மனது கேட்டுவிடக் கூடாது என்பது தான்… நினைக்காமல் இருப்பது என்பது முடியாது. ஆனால் வேண்டும் என்று கேட்காமல் இருக்க வேண்டும் அல்லவா?

என்ன செய்கிறான்? என்ன வேலை? எங்கிருக்கிறான்? எதுவும் தெரியாது. இப்போது வந்த போது பெரியம்மா கூடப் பேச்சு வாக்கினில் “வாசு” என்று ஆரம்பிக்க..

“அந்தப் பேச்சு வேண்டாம் பெரியம்மா!” என்று ஸ்திரமாக மறுத்து விட்டாள். இப்போது அவளின் வீட்டினில் எதிர்ப்பு எதுவும் இல்லை.. யாரோடும் திருமண பேச்சு எடுக்க விடுவதில்லை ஜனனி… இந்த ஐந்து வருடங்களாக மிகவும் போராடி விட்டனர் வீட்டினர்.

யாரோடும் திருமணம் முடியாது என்று நிற்கின்றாள். இந்த முறை அமெரிக்காவில் இருந்து வீட்டிற்கு வந்த போது “வாசுவையாவது கல்யாணம் பண்ணிக்கோ!” என்று பெற்றோர் ஆரம்பிக்க..

வாசுவைப் பற்றி பேச்சே கூடாது என்று விட்டாள். அப்போது அவனைத் தான் செய்து கொள்ள வேண்டும் என்று பிடிவாதம். இப்போது வேண்டாம் என்று பிடிவாதம். பெற்றவர்கள் நொந்து தான் போய்விட்டனர்.

வீட்டினில் மகன்கள் பேச்சும் அவர்களால் தாள முடியவில்லை. “எல்லாம் உங்களால தான்.. சும்மா காதல் சொன்னா என்ன ஏதுன்னு அலசி ஆராயாம அப்படியேத் தப்பு சொல்லிடுவீங்களா.. நீங்க கொண்டு வர்ற மாப்பிள்ளையை விட அவர் எந்த வகையில குறைவு.. இப்போ நல்ல வேலை, நல்ல பொசிஷன் கூட… தேடினாலும் இப்படி ஒரு மாப்பிள்ளைக் கிடைக்காது… உங்களால தான் அக்கா தானா கல்யாணம் பண்ற முடிவுக்கேப் போனா… இப்போ தனியா நிக்குறா!”

“அவங்கம்மா தாண்டா வேண்டாம் சொன்னாங்க!”

“அது நீங்க அவங்க பையனை அப்படிப் பேசினீங்க, நாங்க யாருக்கும் குறைஞ்சவங்க இல்லைன்னு காட்டிட்டுப் போயிட்டாங்க.. உறவுக்காரங்கன்னு கூட இல்லாம மரியாதையில்லாம நடத்தினா.. அவங்க உங்களை விட்டு பொண்ணை பேசிட்டுப் போயிட்டாங்க.. இதுவே காதல்.. இதுல பொருத்தமில்லைன்னு எப்படி வரும்?”

“எப்படியோ சந்தோஷமா இருந்தவள.. இப்படி ஆக்கிடீங்க…” என்று இரண்டு நாட்களுக்கு ஒரு முறையாவது இந்த இரண்டு வருடங்களாக பேசிக் கொண்டு இருந்தனர்.

வயதாகிறது ஜனனிக்கு என்ற கவலை எல்லோருக்கும்.. அவளின் வயதில் இருந்த உறவுப் பெண்கள் அனைவருக்குமே திருமணம் முடிந்து ஏன் குழந்தைகள் கூட இருந்தது.

தாத்தாவும் பாட்டியும் ஒரு படி மேலே போய், “நாங்க வேணா மருமகளோட அம்மா அப்பாக்கிட்ட பேசட்டுமா?” என்றனர்.

“எனக்கும் அப்பா அம்மாவைப் பார்க்கணும் போல இருக்கு. நிறைய வருஷம் ஆச்சு!” என்றார் அனுராதாவும் இதுதான் சாக்கென்று…

“பெரியம்மா! அவங்களை நம்ம பூரணிக்கா விஷேஷத்துக்கு கூப்பிடலாம்” என்றான் அவினாஷ்.

“அவங்க வாசு கூட இருக்காங்க.. இப்போ கூப்பிட்டா இங்க அண்ணியையும் கூப்பிடணும்!” என்றார் அனுராதா.. மீண்டும் ஒரு தயக்கம் வந்தது எல்லோரிடமும்..

ஒன்றுமில்லாத போதே வீடு தேடி வந்து தைரியமாய், “உன் மகள் பொருத்தமில்லை” என்று சொல்லிச் சென்றவர்.. இப்போது ஸ்வாதி இருக்கும் உயரமே வேறு.. வசதியிலாகட்டும்.. ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலின் நிர்வாகியாகட்டும்.. அது மட்டுமா… அவரின் மகன்.. என்ன ஒரு பதவி.. மிகுந்த உயர் பதவி.. இளவயது, இன்னும் எட்டும் தூரங்கள் எத்துனை.. என்ன சொல்ல?         

அனுராதா இங்கிருக்கும் அனைவர் வீட்டிற்கும் விசேஷத்திற்கு செல்வார் தான், ஸ்வாதியும் வருவார் தான்.. ஆனால் ஒரு தலையசைப்போ, “வாங்க அண்ணி” என்ற பேச்சோ, “வா அனு!” என்ற பேச்சு மட்டுமே இருவரிடமும். வேறு பேச்சுக்கள் இல்லை. ஆளுக்கு ஒரு புறம் அமர்ந்து விடுவர். இப்படியிருக்க, இப்போது வசதி வாய்ப்பு வந்ததும் பெண் கொடுக்க நினைக்கிறார்கள் என்று நினைத்து விடக் கூடாது இல்லையா?

“முதல்ல பூரணி விஷேஷத்தை நல்ல படியா முடிப்போம்!” என்று அப்போதைக்கு பரதன் முற்றுப்புள்ளி வைக்க.. திரும்பவும் ஆரம்பித்த இடத்திற்கே வந்து நின்று விடுவதா? நொந்து விட்டார் செல்லமாள்.

வாசு அப்போதுதான் அலுவலகத்தில் இருந்து வந்திருந்தான். பாட்டியும் தாத்தாவும் அங்கே குவார்டசின் லானில் அமர்ந்து இருக்க.. அவர்களோடு சென்று அமர்ந்து கொண்டான்.

பாட்டி உடனே காபி ஃபிளாஸ்க் எடுக்கப் போக.. அப்போது வந்த பக்கத்துக்கு குவார்டர்சில் இருக்கும் மற்றொரு ஆஃபிசரின் மகள்… “ஹல்லோ வாசுதேவன்!” என்றபடி வந்தாள். டைட் ஷார்ட்ஸ் முட்டியை கூட தொடாமல் இருக்க, ஸ்லீவ் லெஸ் பனியன் சிறிது இடுப்பைக் காட்ட என இருக்க.. பாட்டியின் முகம் என்ன உடை என்பது போல சுழித்தது.

பாட்டி எழவும்.. “தாதிம்மா! க்யா சாஹியே? ஹம் லேகர் ஆத்தே ஹை!” எனவும்..

பாட்டி முழிக்க, “காஃபி பிளாஸ்க்”  என்றார் தாத்தா… அவள் உள்ளே செல்ல..

“என்ன உடுப்போ?” என்று பாட்டி சொன்ன விதத்தில் வாசுவின் முகத்தில் தானாக முறுவல் மலர்ந்தது. “பாட்டி! அது அவங்களுக்குத் தப்பான ஒரு விஷயம் கிடையாது. அது இங்க ரொம்ப சகஜம்! பழக்கம் கூட!” என்றான்.

“என்னவோ போ! இந்த கன்றாவி எல்லாம் பார்க்கணுமா!” என,

“ஏன் கிழவி? இது கன்றாவியா? அழகு!” என்று தாத்தா சொல்லி, பாட்டியிடம் ஒரு முறைப்பை பரிசாகப் பெற… வாசு வாய் விட்டுச் சிரித்தான்.

ஆம்! வாசுவுடன் இருக்கும் இந்த வாழ்க்கையை அந்த பெரியவர்கள் அனுபவித்தனர்.. மகனில்லை என்ற குறையே தெரியாமல் கவனமாக பார்த்துக் கொண்டான் வாசு.

“நான் கிழவியா?”

“பின்ன குமரியா? மருமக தெலுங்குப் பொண்ணு வந்துட்டா.. பேரனோட மனைவி இந்தி காரியா வந்துடுவாளோ?” என்று சொல்ல,

“இந்தி காரி வந்தாலும் பிரச்சனையில்லை.. ஆனா இந்த மாதிரி உடுப்பு போடறவ வேண்டாம்!” என்று சொல்ல..

வாசுவின் முகம் புன்னகையோடு இருந்தாலும்.. அதில் இழையோடிய வருத்தம் பெரியவர்களுக்கு புரிந்தது. வாசு எழுந்து உள்ளே போகப் போக,

“இரு வாசு! அவ வரட்டும்!” என்று சொல்லி அந்தப் பெண் வந்த பிறகு, இப்போ உள்ளேப் போ!” என்பது போலச் சைகை செய்ய.. அவன் எழவும்..

“கொஞ்சம் நேரம் பேசிட்டு இருக்கலாம்னு தான் வந்தேன்!” என்று ஆங்கிலத்தில் ஆர்வமாகச் சொன்னவளிடம்,

“நோ, ப்ளீஸ்! ஹெட் ஏக்” என்று சொல்லிச் சென்றான். அந்த பெண்ணின் முகம் சுருங்கி விட்டது. அது புரிந்தாலும், அங்கே ஒருவள் இதயமே சுருங்கிக் கிடக்க, முகம் சுருங்குவதற்கு என்ன செய்ய முடியும்?” என்று நினைத்தவாறேச் சென்றான்.

இரவு ஸ்வாதியின் அழைப்பு வர, பேசிக் கொண்டு இருந்த வாசுவிடம், “பேசிட்டு குடு!” என்று ஃபோன் வாங்கிய தாத்தா.. “வாசுக்கு கல்யாண வயசாகிடுச்சு! ஏன் இன்னும் எதுவும் பார்க்கலை?” என்பது போலப் பேச்சை ஆரம்பித்தார்.

“நான் இப்போ சிக்ஸ் மந்த்ஸா கேட்கறேன் மாமா! அவன் கொஞ்ச நாள் போகட்டும் சொல்றான்!” என்றார்.

“இன்னும் சிக்ஸ்டி இயர்ஸ்க்கு அப்புறம் கேட்டாலும் அப்படித்தான் சொல்லுவான்.. நீதான் அவனுக்குப் பிடிச்ச பொண்ணை வேண்டாம் சொல்லிட்டியே!” என்றார் நேரடியாக.   

“அது பொருத்தமில்லைன்னு தான்..” என்று அவரும் நிமிர்வாகவே சொல்ல,

“உங்க அப்பா அம்மா செஞ்ச தப்பை நீயும் செய்யாதம்மா.. அவங்க ஆசீர்வாதம் இருந்திருந்தா என் மகனும் நல்லா இருந்திருப்பானோ என்னவோ? இந்த உலக நினைப்பே இல்லாத எங்க மகனை அவ்வளவு நல்லாப் பார்த்துக்கிட்ட உன் மகனை விட்டுடுவியா?” என,

“மாமா என்ன பேசறீங்க..?” என்று அவரின் குரல் இறங்கிப் போக…

“அந்தப் பொண்ணையேப் பாரேன்!” என்றனர்.

“அந்தப் பொண்ணுக்கு கல்யாணம் ஆகியிருக்கும்! இனி என்ன பண்ண?”

“என்னமா நீ?” என்றவர்.. “கல்யாணம் ஆகியிருந்தா இவ்வளவு நேரம் உன்கிட்ட எப்படிப் பேசுவோம்.. இன்னும் ஆகலை, நல்லாத் தெரியும்!” என்றார்.

“ஓஹ்!” என்றார், இன்னம் அவருக்கு வாசு திருமணம் வரை போனது தெரியவே தெரியாது. இவர்கள் பக்கத்தில் யாருக்கும் தெரியாது. அங்கே ஜனனியின் வீட்டிலும் குடும்பத்திற்குள் மட்டுமே, பூரணிக்கு மட்டுமே வெளியில், அவளும் அவளின் கணவனுடன் கூடப் பகிரவில்லை. ஒரு வேலை திருமணம் வரை சென்றது தெரிந்திருந்தால் ஸ்வாதி அதை விட்டிருக்க மாட்டார்.. அவருக்குத் தெரியவேயில்லை!

ஜனனி ஒரு சிறு கண்ணசைவு காட்டியிருந்தாலோ, இல்லை பேசியிருந்தாலோ, வாசு அம்மாவிடம் திரும்பப் பேசியிருப்பான்.. அவள் தள்ளி நிற்கவும்.. ஒன்றும் செய்ய முடியவில்லை.

சமீப நாட்களாக ஒரு முறை பார்ப்போம் ஜனனியை, பேசுவோம், என்று மனதில் ஓடிக் கொண்டே இருந்தது. இமானிடம் பேசிய பொழுது யு.எஸில் இருக்கிறாள் என்று தெரிய வர, வருவதற்காகக் காத்திருந்தான்.

வந்துவிட்டாள் என்றும் தெரிந்து கொண்டான்… நேரில் போய் நிற்பதா? அம்மாவிடம் பேசலாமா? இல்லை திரும்ப அவள் வீட்டினரிடமே பேசலாமா? என்று ஓடிக் கொண்டிருக்க.. இன்று தாத்தா அம்மாவிடம் பேசவும் விட்டு விட்டான்.

“மாமா! வாசு கிட்ட குடுங்க!” என.. வாங்கியவனிடம் “இன்னும் நீ அந்தப் பொண்ணோட பேசறியா?” என்றார்.. “இல்லைம்மா அவ பேசறது இல்லை”

“ஏன்?” என்றவரிடம்,  “நாங்க பிரிஞ்சிட்டோம்!” என்றான்.

“அப்படின்னா நீ இப்போ அந்த பொண்ணை லவ் பண்ணலியா?”

“ப்ச்!” என்று உச்சுக் கொட்டியவன், “நாங்க பிரிஞ்சிட்டோம் மா! அப்படின்னா பேசறது இல்லை, பார்க்கறது இல்லை, கல்யாணம் பண்ணப் போறது இல்லை!”

“அப்போ தாத்தா ஏன் அப்படிச் சொல்றார்!” என்றார் புரியாதவராக.

“ஏன்னா? நான் வேற பொண்ணைக் கல்யாணம் பண்ண மாட்டேன் இல்லையா?”

“வாசு! தெளிவா பேசு!” என்று தெலுங்கில் கத்தினார்.  

“அப்பா இறந்த அன்னைக்கு நானும் ஜனனியும் ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ற மாதிரி இருந்தோம். ஆனா என்னால போக முடியலை, நின்னு போச்சு.. திரும்பவும் நான் பார்க்கப் போனப்போ.. இத்தனை பேரைக் கஷ்டப்படுத்தி நாம ஏன் கல்யாணம் பண்ணிக்கணும், பிரிஞ்சிடலாம்னு சொல்லிட்டா!” என,

இது முற்றிலும் புதிய செய்தி. “என்ன?” என்று அதிர்ந்து போனார். வாசு இவ்வளவு தீவிரமாக இருந்தான் என்பது எள்ளவும் அவருக்குத் தெரியாது.. ஜனனியைப் பற்றிய பேச்சு அம்மாவிற்கும் மகனிற்கும் எப்போதும் வந்தது இல்லை. வாசுவாகப் பேசாத போது ஸ்வாதி எப்படி பேசுவார். ஆனாலும் மகன் அப்படியே விடுவான் என்று நினைத்தது இல்லை, மறக்க நாள் எடுக்கிறான் போல என்று தான் நினைத்து இருந்தார். இந்தத் தீவிரம் அவருக்குத் தெரிய வரவேயில்லை.. ஏதோ தவறு செய்து விட்டது போன்ற உணர்வு தான், ஸ்வாதியின் மனதினில் பிரவாகமாகப் பொங்கியது.

“என்கிட்டே ஒரு வார்த்தைக் கூட சொல்லலை நீ.. என் பையன் இப்படி ஒரு விஷயத்தை என்கிட்டே இருந்து மறைச்சு இருப்பான்னு நான் நினைக்கவேயில்லை.. நானே காதல் கல்யாணம் தானே பண்ணினேன்.. நீ ஏன் ஒரு தடவை கூடப் புரியவைக்க முயற்சி செய்யலை.. அவ்வளவு கெட்ட அம்மாவா நான்?” என்று அவர் கேட்கும் போது குரல் தளுதளுத்து. சுலபத்தில் அழுபவர் அல்ல ஸ்வாதி..

“மா ப்ளீஸ், சொல்லக் கூடாதுன்னு இல்லை.. ஜனனி திரும்ப என்கிட்டே பேசலை மா.. அதுக்கான சந்தர்ப்பமே அவ வரவிடலை”ஆனாலும் மகனது இந்தச் செயல் ஜீரணிக்கவே முடியவில்லை, ஐந்து மிகப் பெரிய வருடங்கள், ஒரு சிறு கோடி கூடக் காட்டினது இல்லை. திருமணம் வரை சென்றிருக்கிறான். பின்னர் வேண்டாம் என்று பிரிந்திருக்கின்றாள். அந்தப் பெண் எவ்வளவு வேதனைகளை கடந்திருப்பாள். நினைக்க நினைக்க தாள முடியாமல், பதில் பேசாமல் தொலைப்பேசியை வைத்து விட்டார்.

Advertisement