Advertisement

அத்தியாயம் பத்து :

என்ன பேசியும் வாசுவினால் ஸ்வாதியை சம்மதிக்க வைக்க முடியவில்லை. அவர் எடுத்துச் சொன்ன விதமே, “காதல் தப்பென்று என்னால் சொல்ல முடியாது! ஏனென்றால் அந்தக் காதல் தான் என்னை… உன் தந்தையை இப்படிப் பார்த்துக்கொள்ள வைக்கிறது”

“ஆனால் இது உனக்கு காதல் சொல்லும் வயதும் அல்ல.. ஒரு பெண்ணை பார்த்துக் கொண்டு குடும்பத்தை நிர்வகிக்கும் வயதும் அல்ல.. அதற்கான சம்பாதனையும் உனக்குக் கிடையாது.. முதலில் உனக்கு சம்பாதனையே கிடையாது. படிப்பையே இன்னும் நீ முடிக்கவில்லை. உன்னுடைய எம் பீ ஏ படிப்பின் கல்லூரிக் காலம் முடிவடைந்து விட்டாலும் இன்னும் நீ அரியர் வைத்திருக்கிறாய்” இப்படி நிறைய இருந்தாலும்..

“என்னோட மனசுக்கு சரின்னு பட்டா எதுன்னாலும் பார்த்துக்கலாம் வாடான்னு நானே போய் பொண்ணு கேட்பேன்! ஆனா எனக்கு அந்த பொண்ணைப் பிடிக்கலை!”

“வெளில மாப்பிள்ளை வீட்டுக்காரங்க இருக்கும் போது அம்மா அப்பாக்கு எவ்வளவு நெருக்கடி குடுத்துட்டா .. அதோட இம்பேக்ட் தெரியலை.. முதல்லயே பேரன்ட்ஸ்கிட்ட சொல்லியிருக்க வேண்டாமா.. இப்படி ஒரு பொண்ணு வேண்டாம்” என்றார்.

வாசு “இல்லை! அது ஜனனியால் இல்லை! என்னால் தான்!” என்றெல்லாம் சொல்லி அவரை கன்வின்ஸ் செய்ய முயலவில்லை. அவனுக்கு அம்மாவைப் பற்றி நன்கு தெரியும்..

ஒன்றில் நின்று விட்டால் அதிலேயே தான் நிற்பார், மாற்றிக் கொள்ள முயலவே மாட்டார்.. குதிரைக்கு கடிவாளமிட்டது போலத் தான்.. அதனால் தான் அவனின் தந்தையை சமாளித்து இத்தனை வருடங்கள் அவரால் காலம் தள்ள முடிகிறது.  வாசு அந்த இடத்தை விட்டு எழுந்து செல்ல முயல..

“இல்லை! எனக்கு அவள் தான் வேண்டும்!” என்று சண்டை போடுவான் வாசு என்று ஸ்வாதி எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் இப்படி ஒன்றுமே சொல்லாமல் மகன் எழுந்து போக, என்னவோ வாசு அவரை விட்டு விலகி போவதாக மனதிற்கு ஒரு எண்ணம்.

ஆனாலும் இப்படியே விட முடியாதே “உட்காரு வாசு!” என்றார்.

வாசு மெளனமாக அமர.. “நீ அந்தப் பொண்ணு வீட்டுக்குப் போய் பிரச்சனை பண்ணிட்டு வந்திருக்க… அது தப்பு!” என்றார்.

“என்ன பண்ணனும்?” என்பதுப் போல பார்த்து நின்றான்…

“சாரி கேளு அவங்க கிட்ட!”

“நான் பிரச்சனை பண்ணனும்னு போகலை.. அவங்க தான் நடந்துகிட்டாங்க… ஜனனி, என்னைப் பிடிச்சிருக்குன்னு அப்போ சொல்ற ஒரு நிலைக்கு கொண்டு வந்தது அவங்க தான்!”

“தப்பு கண்ணா! நீ அவங்க அம்மா அப்பா சைட்ல இருந்து பாரு, அவங்க ஃபீலிங்க்ஸ் புரியும்.. லவ் மேரேஜ் பண்ணின என்னாலயே நீ லவ் சொல்லும் போது ஒதுக்க முடியலை! அவங்க எப்படி ஒத்துக்குவாங்க!”

“ஏற்கனவே எனக்கும் உங்க அத்தை வீட்டுக்காரருக்கும் ஆகவே ஆகாது! அதனால் தான் அவங்க இங்க நம்ம வீட்டுக்கு வர்றதே இல்லை.. பூரணி கல்யாணத்துக்கு பிறகு தான் கொஞ்சம் ஸ்மூத் ஆச்சு, இப்போ நீ போய் இப்படி பண்ணிட்டு வந்திருக்க..” என்றவர்,

இஞ்ஜக்ஷனை கையினில் எடுத்தார்.. “அம்மா! இப்போ எதுக்கு அப்பாவை தூங்க வைக்கறீங்க!” என்றான். இவர்கள் இங்கே பேசிக் கொண்டு இருக்க ஜன்னல் வழியாக பாலகிருஷ்ணன் வானத்தை வெறித்துக் கொண்டு இருந்தார்.   

“நாம அவங்க வீட்டுக்குப் போறோம்” என்றார் ஸ்வாதி.

“எதுக்கு?” என்று வாசு கேட்டதற்கு பதில் சொல்லவில்லை. கணவரைத் தூங்க வைத்து, “வா” என்று மகனைக் கூட்டிக் கொண்டு மாமியாரிடமும் மாமனாரிடமும் சுருக்கமாக விஷயத்தை சொல்லிக் கிளம்பினார். 

பெரியவர்கள் இருவரும் நம் வாசுவா என்று மலைத்து பார்த்து இருந்தார்கள்.

“இப்போ வேண்டாம்!” என்று நின்றவனிடம்..

“நீ அவங்க வீட்டுக்குப் போனது தப்பு!” என்று அவனை மிரட்டி அழைத்துக் கொண்டு செல்ல…

“வர மாட்டேன்!” என்று நின்றிருக்க முடியும்.. ஆனாலும் ஜனனியை பார்க்க வேண்டும், திரும்ப அடிக்கிறார்களோ என்று தோன்ற.. சென்றான்.

செல்லும் பொழுது ஸ்வாதியின் முகத்தினில் தெரிந்த உறுதி, கண்டிப்பாக இந்த விஷயத்தை முடித்து விடும் உறுதி தான் என்று தெள்ளத் தெளிவாக புரிந்தது.. ஆனாலும் எதுவும் செய்ய முடியாத நிலையில் இருந்தான்.. என் செய்வான்?

இயலாத சூழ்நிலை என்றாலும்… அதை இயலுமாறு அவனால் மாற்றிக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை இருந்தாலும்… அம்மாவின் நம்பிக்கையை இப்போதைக்கு உடைக்க முடியாது அல்லவா..

அமைதியாக கூடச் சென்றான்.

ஜனனியின் வீட்டிற்குள் இவர்கள் செல்ல அங்கே இவர்களை எதிர்பார்க்கவில்லை என்று அனைவரின் முகத்தினிலும் தெரிந்தது.

“வாங்க!” என்ற வார்த்தை யார் வாயினில் இருந்தும் வரவில்லை. “ஐயோ! பெண் கேட்க வந்து விட்டார்களோ?” என்ற பதட்டம் தான் அனைவரின் முகத்தினிலும்.

“எதுக்குடா திரும்ப வந்தே?” என்று பரதன் ஆக்ரோஷமாக வாசுதேவனைப் பார்த்துக் கேட்க..

“என்ன? என் மகனை ஒருவன் இப்படி டா போட்டு அடிக்க வருவது போல பேசுவதா?” என்ற கோபம் ஸ்வாதியின் மனதினில் கிளர்ந்து எழ ஆரம்பித்தது. அவரின் வீட்டு பக்கம் மக்களுக்கு அவ்வளவு மரியாதை கொடுப்பர். அம்மாயி, பாபு என்ற மரியாதையான அழைப்புகள் மட்டுமே!  

லக்ஷ்மணன் ஒரு படி மேலே போய், “நாங்க உங்க வீட்டுக்குப் பெண் கொடுக்கறதா இல்லை!” என்று ஒரு மாதிரி அலட்சியமாகச் சொல்ல..

ஸ்வாதியின் தன்மானத்தை அது வெகுவாக சீண்டி விட்டது. அமைதியாக மனதை நிலை படுத்தியவர். “உங்க பொண்ணைக் கொஞ்சம் கூப்பிடறிங்களா?” என்றார்.

“எதுக்கு அவ மனசை கெடுக்கவா? அதெல்லாம் முடியாது!” என்று லக்ஷ்மணன் சீற,

ஸ்வாதியின் முக அமைதியைப் பார்த்த சீதா ராமன் “அவங்க என்ன சொல்றாங்கன்னு கேட்போம்! பொறுமையா இரு!” என்று மகனை அதட்டினார்.

வாசுதேவன் அம்மாவின் பின் கை கட்டி நின்றான்.. அவினாஷும், ரகுலனும், மற்ற எல்லோருமே வாசுவைத் தான் பார்த்து இருந்தனர். அவனின் முகத்தில் இருந்து ஒன்றும் தெரியவில்லை! முகம் அவ்வளவு இறுக்கமாக இருந்தது.

“பொண்ணைக் கூப்பிடுங்க! இங்க என்ன நடக்குதுன்னு அவளுக்கு தெரியணும்!”

பரதன் “கூப்பிடு!” என்பதுப் போல, செல்லமாளிடம் ஜாடை காட்ட,

அழுது, அழுது, முகமெல்லாம் வீங்கிப் படுத்து இருந்தால் ஜனனி, “வா! அந்தப் பையனோட அம்மா வந்து இருக்காங்க!” என்று செல்லமாள் சொல்ல, யாரென்று தெரியாததினால் அசையாமல் படுத்து இருந்தாள் ஜனனி.

ரகுலன் “வாசு அத்தான் அம்மா!” என்று எடுத்துக் கொடுக்க, குழப்பத்தோடு எழுந்து அமர்ந்தவள், வெளியே வர..

அங்கே வாசுவின் அம்மா நிற்பதையும் அதன் பின் வாசு கை கட்டி நிற்பதையும் பார்த்தவள், உணர்ந்தது… அவனின் கைகள் மட்டுமல்ல, அவனும் கட்டப்பட்டு இருக்கிறான் என்பதை போலத் தான்.

ஜனனியை நேர் பார்வை பார்த்து நின்றான், “அழாதே!” என்று ஆறுதல் சொல்ல முயன்றன விழிகள்..

“இந்த மாதிரி உங்க பொண்ணை பொண்ணு காட்டுற சமயத்துல இங்க வந்து இந்த மாதிரி பண்ணினது தப்பு! தெரியாம என் பையன் செஞ்சிட்டான்னு என்னால சொல்ல முடியாது! ஏன்னா தெரியாம செய்யற பையன் கிடையாது! தெரிஞ்சு தான் செஞ்சிருக்கான்.. உங்கக்கிட்ட அதுக்காக நான் மன்னிப்பு கேட்கறேன்”

ஒரு திமிரான மன்னிப்பு வேண்டல் அம்மாவிடமிருந்து, புரிந்து பார்த்து நின்றான் வாசுதேவன்.  

“இனிமே இந்த மாதிரி செய்ய மாட்டான்னு வாக்கு கொடுக்கறேன்.. இனி இங்கயோ உங்க  பொண்ணையோ பார்க்க வரமாட்டான்” என, இனி இது வேறா என்பது போல நின்றான் வாசுதேவன்.

அனைவர் முகத்திலும் நிம்மதியின் சாயல். ஜனனி மட்டும் அசையாமல் நின்றிருந்தால்… “நீங்க சொல்றீங்க,  உங்க பையன் சொல்லணுமே?” என்று செல்லமாள் எடுத்துக் கொடுக்க,

“செப்புரா!” என்றார் ஸ்வாதி.

வாசு தேவன் “ஏண்டி செப்பவாளு?” என,

“இப்போ இங்க வந்து இவங்களுக்கு தெலுங்குல பேசலைன்னா என்ன?.. நான் வாங்கின அடியை உனக்கு நான் அப்புறமா கொடுக்காம விடமாட்டேன். எல்லாம் உன்னால தான்!” என்று வாசுவினை நோக்கி முறைத்து பார்த்துக் கொண்டு இருந்தாள் ஜனனி.

“இனிமே அவங்க பொண்ணைப் பார்க்க மாட்டேன்னு செப்பு!” என,

“நான் பார்க்க மாட்டேன்!” என்றான்.

“அதுதானே! இவன் ஏன் பார்க்கப் போறான்! அதுதான் என்னை பார்க்க வைக்கிறானே!” என்று திரும்பவும் ஜனனி மனதிற்குள் கௌண்டர் கொடுக்க.. அவினாஷும் ரகுலனும் அதையேத் தான் நினைத்தனர்.. “நான் பார்க்க மாட்டேன்னு சொன்னா? அப்போ ஜனனியைப் பார்க்க வைப்பாரா?” என, 

   “போதுமா!” என்று செல்லமாளை பார்த்துச் சொன்ன ஸ்வாதி, கிளம்பலாம் என்பது போல வாசுதேவனை பார்த்து தலையாட்டியவர்.. அப்போதும் லக்ஷ்மணனை பார்த்து.. “நீங்க பொண்ணு குடுத்தாலும் நாங்க எடுக்கலை” என்றார்.

“என் பையன் காதலுக்கு எல்லாம் நான் எதிரி கிடையாது.. ஆனா உங்க பொண்ணு என் பையனுக்கு சரி வரமாட்டான்னு தான் நான் வேண்டாம் சொன்னேன்.. என் மகனுக்கு உங்க பொண்ணு பொருத்தமில்லை” என்று சொல்ல…

“என்ன மாதிரியான பேச்சு இது?” என்று வீடே அதிர்ந்தது. ஜனனி உள்ளுக்குள் நொருங்கிப் போனாள்.. “இன்னும் காதல் கூட சொல்லாத இவனிற்காக நான் இங்கே என் வீட்டினரோடு போராட ஆரம்பித்து இருக்கிறேன். இவர் என்ன பேசுகிறார்?” என்று பார்த்திருந்தாள்.

வாசு பதறி, எப்படி ஸ்வாதியை நிறுத்துவது என்று தெரியாமல் பார்த்து இருந்தான். அவனுக்கு அம்மாவை எப்படி நிறுத்துவது என்ற எண்ணமே, இதில் ஜனனியைக் கவனிக்கவில்லை.    

“உங்களை விட நாங்க பல படி இப்பவும் மேல தான்.. நானா வேண்டாம்னு ஒதுங்கி இருக்கேன் அவ்வளவு தான். அண்ட் வாசு என் பையன், அதை மறக்க வேண்டாம்.. மறக்க வேண்டாம் என்ன? ஒரு நிமிஷம் கூட மறக்கக் கூடாது!”

“நாங்க மறக்க என்ன, ஞாபகம் வைக்க வேண்டிய அவசியமேயில்லை.. அவனை எங்க பொண்ணு வழில வராம இருக்க சொல்லுங்க!” என்றார் லக்ஷ்மணனும் விடாமல்.

“வரமாட்டான்!” என்று சொல்லிக் கொண்டே மகனைப் பார்த்தவரின் பார்வையில், “நீ பார்க்கக் கூடாது” என்ற கட்டளை இருந்தது.. விஷயம் கை மீறிக் கொண்டு இருக்கிறது என்று புரிந்தாலும் எதுவும் செய்ய முடியாத இயலாமையுடன் நின்றான்.

இத்தனை பேர் முன் அம்மாவை மறுத்து பேச முடியாதல்லவா?  தனியாகவும் இப்போது இருக்கும் சூழ்நிலையில் பேச முடியாது.    

“இப்படி மரியாதை இல்லாம பேசி, எதோ தேர்ட் ரேட் பொறுக்கி மாதிரி அவனை மிரட்டுற வேலை வேண்டாம்!” என்று திரும்பவும் லக்ஷ்மணனைப் பார்த்து கம்பீரமாக சொன்னார்.

வாசு ஸ்வாதி இப்படி எல்லாம் பேசுவார் என்று எதிர்பார்க்கவில்லை.. அதுவரை ஸ்வாதி பேசுவதையே பார்த்து இருந்தவன், அப்போது தான் ஞாபகம் வந்தவனாக ஜனனியை அவசரமாக பார்க்க.. இப்போதும் ஜனனியின் விழிகள் அவனை முறைத்து பார்த்துக் கொண்டு இருந்தாலும், கண்களில் நீர் நிறைந்து இருந்தது.  

  “அம்மா! நுவு இக்கடஞ்சே ரா!” என்று அம்மாவை கைப் பிடித்து ஏறக்குறைய இழுத்து சென்றான்.

இத்தனை நேரமாக ஜனனி அழுதது கன்னத்தில் வாங்கிய அடிக்காக.. இப்போதும் அழுகை கட்டுக்கடங்காமல் பொங்கியது, அது மனதினில் வாங்கிய அடிக்காக.

“நீ காதலிப்பாயா?” என்று பார்த்திருந்த வீடு, “காதலிக்கக் கூடாது!” என்று சொல்லியிருந்த வீடு.. இப்போது “உனக்கு இது தேவையா?” என்பது போலக் கேவலமாகப் பார்ப்பதாகத் தான் தோன்றியது.

தாளவே முடியவில்லை.. அழுகை, அழுகை, என அழுது கரைந்தாள்.. மகளின் அழுகை பெற்றவர்களை அசைத்துப் பார்த்தது.. இப்படி ஒரு நிலை வருவதற்கா இப்படி அருமை பெருமையாய் வளர்த்தோம் என்று தோன்றியது.

பரதன் “இனி ஜனனி கிட்ட இதைப் பத்தி யாரும் பேச வேண்டாம்.. தனியா விடுங்க!” என்று விட்டார்.. “யோசிக்கட்டும்! அவளே யோசிக்கட்டும்!” என்று விட்டு விட்டார்.

அடித்துத் திருத்தும் வயது அல்ல! அதே சமயம் அடித்துத் திருத்தும் பெண்ணும் கிடையாது ஜனனி!” என்று அவருக்குத் தெரியும்.

வாசுவின் அம்மா “பொருத்தமில்லை” என்று சொன்னதும், மகள் “நீதான் எனக்குப் பொருத்தமில்லை! போடா! என்று வாசுவிடம் சொல்வாள் என்று எதிர்பார்த்தார். ஜனனியும் குணமும் அதுதான்.

ஆனால் காதல் இயற்கையான குணங்களைக் கூட மாற்றி விடும் என்று மறந்து விட்டார்.

“என்ன? நான் பொருத்தமில்லையா! இத்தனை பேர் முன் அவனை தான் பிடித்திருக்கிறது என்று சொல்லிவிட்டேன்! விட்டு விடுவானா என்னை?” என்ற எண்ணம் மனதினில் விதைந்தது.

ஆனாலும் வாசுவைத் தொடர்பு கொள்ள முயலவில்லை. ஜனனியின் வீட்டிலும் கல்யாணப் பேச்சு இப்போதைக்கு வேண்டாம் என்று நிறுத்தி இருந்தனர். 

வாசுவின் நிலையோ நேர் எதிர்! “என்னை விட்டு விடுவானா?” என்று நினைக்க, வாசுவோ “ஜனனி! என்னை விட்டு விடக் கூடாதே!” என்று இடைவிடாது மனதில் வேண்டி இருந்தான்.

ஜனனிக்கு வாசுவின் மீது இருக்கும் தீவிரத்தை விட வாசுவிற்கு ஜனனியின் மீது இருக்கும் தீவிரம் அதிகம்! மிக அதிகம்!! மிக மிக அதிகம்!!!

ஆனாலும் ஒரு கையறு நிலை அவனிற்கு.. எதுவும் அவன் புறம் இருந்து  செய்ய முடியவில்லை. அம்மாவின் பேச்சை ஜனனியின் விஷயத்தில் கடைபிடிக்கும் எண்ணம் அவனுக்குத் துளியளவும் கிடையாது தான். என்ன உடனே மீறுவதற்கு ஒரு தயக்கம்.. கூடவே ஜனனியை அவளின் தந்தை அடித்ததைப் பார்த்து இருந்தான் தானே.. இப்போது மீண்டும் செல்ல, இன்னும் துன்புறுத்தினால்.. அந்த நினைவே அவனை தள்ளி நிறுத்தியது.      

ஒரு மாதம் இப்படியேப் போக.. ஜனனியின் இறுதித் தேர்வுகளுக்கு இன்னும் ஒரு மாதமே இருந்த நிலையில்..  இமானிற்கு அழைத்தான், இவன் பேசும் முன்னே இமான் உற்சாகமாக பேசினான், “ஹலோ பாஸ்! கலக்கிட்டீங்க போல.. பொண்ணு பார்க்க வர்றாங்கன்னு சொன்ன உடனே வீட்டுக்கேப் போயிட்டீங்கப் போல!” என்றான்.

கண்டிப்பாக ஜனனி சொல்லாமல் அவனுக்கு விஷயம் தெரிய வாய்ப்பில்லை என்று புரிய.. மனதிற்கு இதமாக இருந்தது. “ஜனனியை என்கிட்டே பேசச் சொல்றியா” என்றான்.

ஜனனி அப்போது அருகில் தான் இருந்தாள், “ஹல்லோ பாஸ்” என்று இமானின் உற்சாகமான குரலே, யார் என்று கவனிக்க வைத்து, வாசு என்று தெரிந்ததும் முகத்தில் தானாக ஒரு மலர்ச்சியைக் கொண்டு வந்தது.

“ஜனனியா? இங்க தான் இருந்தா! ஆனா இப்போ என் முன்னாடி திடீர்ன்னு ஒரு ஒளி! அதனால் அவ எங்க இருக்கான்னு தெரியலை!” என்றான் இமான்.

ஒரு மாதமாக ஒளியிழந்து, கலையிழந்து இருந்த ஜனனியின் முகத்தில் இப்போது மகிழ்ச்சியைக் காணவும் தான் அந்தப் பேச்சு..

கூடவே ஜனனியிடம் சைகை “உன்னை பேசச் சொல்றாங்க!” என,

“பேசமாட்டேன்!” என்பது போல… தலையை அசைத்துக் காட்டினாள்.

“ஜனனி உன்னோட இருக்காளா?” என்ற வாசுவின் குரலில் இருந்த ஆர்வம் இமானின் பேச்சைத் தேக்க.. அதுவே சொன்னது ஜனனி அருகில் இருக்கிறாள் என்று.

“ஸ்பீக்கர்ல போடு இமான்!” என்றவன், “ஜனனியை என்கிட்டே பேச சொல்லேன், ப்ளீஸ்!” என்று ஜனனிக்குக் கேட்குமாறு சொல்ல,

“எந்த போதி மரத்தடில ஞானம் வந்துச்சாம், ஒரு மாசமா பேசாம இப்போ பேசச் சொல்றாங்க!” என்று ஜனனியும் அவனுக்குக் கேட்குமாறு சொல்லி, “இந்தப் பொருத்தமில்லாதவ கூட எதுக்கு பேசணும்?” என்று சொல்லும் போதே, குரலும் கலங்கியது, மனதும் கலங்கியது.   

என்ன தான் ஒன்றும் நடவாதது போல வீட்டினர் இவளிடம் காட்டினாலும், இவளும் வீட்டினரிடம் காட்டிக் கொண்டாலும், உள்ளத்து வேதனை அவளுக்குத் தானே தெரியும்.

கரையானாய் அவளை அரித்துத் தின்று கொண்டிருந்தது.  என்ன தான் விளையாட்டுப் பெண் என்றாலும், வாசுவை புரிந்து கொள்ளும் தன்மை தானாக இருந்தது, பக்குவமும் இருந்தது. அதனால் தான் பேசினால் உடைந்து விடுவோம் என்று தவிர்த்து நின்றாள்.

தன்னைப் போல அவன் எல்லோரிடமும் கலகலப்பாகப் பேசும் சுபாவம் கிடையாது.. தான் பேசினால் தன்னையே நினைத்துக் கொண்டிருப்பான் என்று தான் இத்துனை நாள் பேசவில்லை.

அப்போதும் பேசும் பொழுது ஆதங்கம் வெளியில் வந்து விட்டது.

இமானிடம் போன் வாங்கி “சாரி! சொல்லக் கூடாதுன்னு நினைச்சேன். ஆனாலும் சொல்லிட்டேன்!” என்று சொல்லும் போது அழுகை வந்து விட்டது.

“யார் சொன்னாலும், வி ஆர் மேட் ஃபார் ஈச் அதர். அழாத ஜனனி ப்ளீஸ்! நான் தான் சாரி சொல்லணும், ஆனா இப்போதைக்கு அம்மாவை மீறி என்னால எதுவும் செய்ய முடியாது, எனக்கு தைரியமில்லைன்னு மட்டும் நினைச்சிடாத..  தைரியத்தைக் காட்ட முடியாத சூழ்நிலைல இருக்கேன்!”

“எப்போ மாறும்?”

“கண்டிப்பா மாறும், வீட்ல உன்னை திரும்ப எதுவும் சொல்லலையே!”

“இல்லை! அதைப் பத்தியே யாரும் பேசலை.. எதுவுமே நடக்காதது மாதிரி, நல்லா பேசறாங்க! எங்கம்மா என்கிட்டே சண்டை போடறதே இல்லை.. திரும்பத் திட்டி இருந்தாலோ? சண்டை போட்டிருந்தாலோ? கண்டிப்பா உங்க கூடப் பேசியிருப்பேன்.. ஏன் உங்களைப் பார்க்க வந்திருப்பேன்.. ஆனா இப்படி நல்ல விதமா நடக்கும் போது அவங்களை மீறி பேசறது தப்பு மாதிரித் தோன பேசலை!”

“ஆனா, எங்க வீட்ல கல்யாணம் பேசினாங்கன்னா கண்டிப்பா உங்க கிட்ட வந்துடுவேன்.. வேற யாரையும் எல்லாம் என்னால பண்ண முடியாது!” என்றாள் ஸ்திரமாக..

    அதன் பிறகு தினமும்… வெகு நேரம்… இப்படி எல்லாம் பேசிக் கொள்ளவில்லை, அவசியமான வார்த்தைகள் எப்போதாவது வாசு பேசுவான்.. ஜனனியும் இமானின் கைபேசியில் இருந்து பேசுவாள்.

 ஜனனியிடம் கைப் பேசி இன்னும் இல்லை! வைத்துக் கொள்ளவில்லை!

இருவருமே பார்க்க முயலவில்லை.

நாட்கள் விரைய, ஜனனி படிப்பை முடித்து, அதன் பின் வேலையில் சேர்ந்தும் ஆறு மாதம் ஆகியிருந்தது. மெதுவாக வீட்டில் திருமணப் பேச்சு எடுக்க,

வாசுவிடம், “நாம இப்போதைக்கு சேர்ந்து வாழறமோ இல்லையோ கல்யாணம் பண்ணிக்கலாம், வீட்ல ஃபோர்ஸ் பண்ணறாங்க, என்னை உட்கார வெச்சு ஆளாளுக்கு அட்வைஸ் பண்றாங்க. எனக்கு பெரிய டார்ச்சரா இருக்கு, என்னால் சமாளிக்க முடியலை”

வாசுவிற்கு வெகுவாக யோசனை தான்.. ஆனால் என்று இருந்தாலும் இதை சந்தித்துத் தானே ஆகவேண்டும்.

“எனக்குத் தெரியும், உன்னால இப்போதைக்கு என்னை கூப்பிட்டுக்க முடியாது, பிரச்சனையில்லை, எங்க வீட்டுக்குப் போறேன். அவங்க வைச்சுக்கலைன்னா ஏதாவது ஹாஸ்டல் போயிடறேன்.. எங்க அப்பாவும் அம்மாவும் என் முகத்தைப் பார்த்துட்டே இருக்காங்க என்ன சொல்வேனோன்ன்னு. என்னால நாம சொல்றவனை நம்ம பொண்ணு கல்யாணம் பண்ணிக்குவான்னு ஒரு பொய் நம்பிக்கையை வளர்க்க முடியாது, எதுன்னாலும் ஃபேஸ்  பண்ணிக்கலாம்” என்றாள்.

“சரி!” என்று முடிவெடுத்து, பதிவுத் திருமணத்திற்க்கான ஏற்பாடுகள் ஒரு மாதம் முன்பிருந்தே செய்து, காலையில் போய் அவள் அந்த அலுவலகத்தில் இமான் ரக்ஷாவுடன் காத்திருந்தாள். எல்லாம் இமான் தான் இருவருக்கும் இடையில் நின்று செய்திருந்தான்.

பெற்றோருக்குத் தெரியாமல் செய்யும் திருமணம் ஒரு புறம் பெரிய படபடப்பை, நெஞ்சில் ஒரு இனம் புரியாத உணர்வை ஜனனிக்கு கொடுத்தாலும், பல மாதங்களுக்கு பிறகு வாசுவைப் பார்க்கும் ஆர்வம், தவிப்பு, எல்லாம் சேர்ந்து அவளை ஒரு வழியாக்கி கொண்டிருந்தது.

கூடவே ரக்ஷாவிடம், “நான் நல்லா இருக்கனா? அவருக்கு மேட்ச் ஆவேனா?” என்ற கேள்வியும்.. வாசுதேவனின் வசீகரம் ஜனனியிடம் குறைவு தான். அதுவும் அவனின் அம்மா சொன்ன பிறகு இன்னும் அழுத்தமாக அது ஜனனியின் மனதினில் நின்று இருந்தது. இப்படி ஜனனி  தவித்து நின்றிருக்க, அந்த பரிதவிப்பு ஒரு முடிவுக்கு வராமல் நீண்டு, நிலைப்பெற்று, அவளுள் நின்று விட்டது.         

வாசுதேவன் வரவில்லை!! வரவேயில்லை!! திருமணம் நடக்கவில்லை!!!

Advertisement