Advertisement

               கணபதியே அருள்வாய்

                       இப்படிக்கு…. உன் இதயம்!

அத்தியாயம் ஒன்று :

மாவிலைத் தோரணம் கட்டி, பந்தலிட்டு, மாக்கோலமிட்டு, அந்தத் திருமண வீடு களை கட்டியிருந்தது. அந்தக் களை வீட்டில் மட்டுமல்ல அங்கிருந்த ஆட்களிடமும் பரி பூரணமாய் இருந்தது. ஆளுக்கு ஒரு புறம் பரபரப்பாய் அங்கும் இங்குமாய் நடந்து கொண்டிருந்தனர். அந்த வீட்டில் பெரியவர் சீதாராமன்.. அவரின் மனைவி கௌரி.. மக்கள் லக்ஷ்மணன், அவரின் மனைவி அனுராதா மற்றும் பரதன் அவரின் மனைவி செல்லமாள் அவர்களுடைய மக்களுடன் வாசம் செய்தனர்.

பெரிய குடும்பம்! கூட்டுக் குடும்பம் கூட, எப்போதும் வீடு ஒரே சத்தாமாக கலகலவென்று இருக்கும். பிள்ளைகளின் சத்தம் மட்டும்மல்ல பெரியவர்களும் அதற்கு சற்றும் குறைவில்லாமல் போடுவர்.  

இதில் லக்ஷ்மணனின் மகள் பூரணிக்குத் தான் திருமணம். இன்னம் ஐந்து நாட்களில்.. அன்று மணப்பெண் பூரணியின் தாய்மாமன் வீட்டினர் நலங்கு வைப்பதாக இருந்தது. அதனால் பூரணி மட்டும் நீராடாமல் இருக்க.. மற்ற அனைவரும் குளித்து பட்டுடுத்தி இருந்தனர். வீட்டின் ஒவ்வொரு இடமும் அதன் செல்வ செழிப்பைப் பறை சாற்றியது.

“பூரணிக்கா..” என்று கத்தியபடி வந்தாள் ஜனனி..

“என்ன ஜனனி?” என்ற பூரணியிடம்,

“எனக்கு பிரெஞ்சு நாட் போட்டு விடு!” என்று தலையைத் திருப்பி நின்றாள்.

“ஹேய் இம்சை, இன்னைக்குக் கூட என்னை ஃப்ரீயா விடமாட்டியா நீ, போனி டெயில் போட்டுக் கோடி”

“அதெல்லாம் முடியாது.. நீ போட்டு விடலை, கல்யாணத்தன்னைக்கு நீ போட்டிருக்குற மாதிரி மேக் அப், ஜுவல்ஸ், நானும் போட்டுக்குவேன்! அப்புறம் நீ தனியா தெரிய மாட்ட, பரவாயில்லையா யோசிச்சு சொல்லு!” என்றாள்.

“அடப்பாவி! இது என்னடி புது ப்ளாக் மெயில்? எப்படி இப்படி உன்னால முடியுது?” என்று பூரணி அதிசயிக்க.

“எஸ்! பிராண்ட் நியூ!  இப்போ தான் க்ரியேட் பண்ணினேன்.. உன்னோட காஸ்டியும்க்கு மேக் அப்க்கு ஜூவல்ஸ்க்குன்னு தேடித் தேடி உனக்கு சொல்ற உன்னோட மாப்பிள்ளையோட டிப்ஸ் எல்லாம் எனக்குத் தான். நான் அழகா தெரியலைன்னாலும் எனக்கு அது சூட் ஆகலைன்னாலும் அதைத் தான் போடுவேன்!” என்று மிரட்டல் விடுக்க, 

“ஆங்!” என்று கௌரி பார்க்க,

“இதுக்குப் பேர் தான் மாத்தி யோசின்னு சொல்றது!”

“ஆத்தாடி ஆத்தா! நீ நேரா யோசிச்சாவே  நான் தாங்க மாட்டேன்! இதுல எதுக்கு நீ மாத்தி யோசிக்கற?”

“சும்மா தான்! எத்தனை நாள் நேராவே யோசிக்கறது!” என்று அவள் சொல்லும் போதே பூரணியின் போன் அலற,

அதன் ரிங் டோன் கேட்டு தலையில் கை வைத்த ஜனனி, “ஏன் பூரணிக்கா, இப்போவே எல்லாம் பேசிட்டீங்கன்னா கல்யாணத்துக்கு பிறகு என்ன பேசுவீங்க? என்று அபிநயத்துடன் கேட்க,

“இதெல்லாம் உனக்குப் புரியாது போ! உனக்கு மாப்பிள்ளை வரும் போது புரியும்!” என்று பூரணி சிரிக்க..

“என்னவோ போ பூரணிக்கா! எனக்கு யாரை பார்த்தாலும் அவங்களோட குறைகள் தான் கண்ணுக்குத் தெரியுது.  யாரையும் பிடிக்கறதே இல்லை.. உனக்கு மாப்பிள்ளை காட்டினாங்க! நீ பிடிச்சிருக்கு சொன்ன! அப்படியே டிவலப் ஆகிடுச்சு. எனக்கு அப்பா காட்டும் போது பிடிக்கலைன்னா? ஒரு வேலை அப்பியரன்ஸ் பிடிச்சு அப்புறம் பேசும் போது பிடிக்காமப் போயிட்டா? நான் என்ன பண்ணுவேன், உனக்கு முடிச்ச உடனே எனக்கு ஆரம்பிச்சிடுவாங்க!” என்று சலித்துக் கொண்டே போகப் போக..

போனில் பூரணி, “ஒரு அஞ்சு நிமிஷம்.. ஜனனிக்கு ஜடை போட்டுட்டுப் பேசறேன்!” என்று போனை வைத்தாள்.

“இல்லைக்கா நீ பேசு!” என்று ஜனனி நகர..

“நீ வாடி!” என்று அருகமர்த்தி பின்ன ஆரம்பிக்க..

“அக்கா உன்னோட மாம்ஸ் திட்டப் போறாங்க என்னை!”  

“அதென்ன உன்னோட மாம்ஸ்! உனக்கு இல்லையா?”

“அவர் எனக்கு அக்காவோட மாம்ஸ் அவ்வளவு தான்.. எனக்கு நீ தான் எப்பவும் முதல்ல! உன் மூலமா தானே அவங்க!” என்று சிரிக்க,

“வில் மிஸ் யு ஜனனி பேட்லி!” என்று பூரணி கண்கலங்கினாள்.

“ஐயோ! அக்கா! என்ன இது? சின்னப் பொண்ணு மாதிரி.. என்னோட தொல்லையில்லாம சந்தோஷமா இரு!” என்றால் பெரிய மனுஷியாக பூரணியின் தலை மேல் கைவைத்து ஆசீர்வதிக்க.

பூரணி சிரித்தாலும் கண்களில் நீர் துளிர்த்தது.

“பெரியம்மா!” என்று அவள் கத்திய கத்தலில், விரைந்து அனுராதா என்னவோ ஏதோ வென்று வர.. “பெரியம்மா! அக்கா அழறாங்க! எனக்கும் அழுகை வருது! பேசாம கல்யாணம் முடிஞ்சு மாப்பிள்ளையை நம்மளோட இருக்க சொல்லிடலாமா” என்று ஜனனி சொல்ல..

“விளையாடாத ஜனனி!”

“நோ பெரியம்மா.. ஐ அம் டெட் சீரியஸ். பொண்ணுங்க மட்டும் ஏன் அவங்க வீட்டுக்குப் போகணும். அக்கா மாப்பிள்ளை இங்க வரட்டும்!” என்று சொல்ல,

“ஐயோ ஆரம்பிச்சிடீங்களா டீ! என்னால முடியாது.. இந்தக் கல்யாணம் நிச்சயம் ஆனதுல இருந்து உங்க அட்டகாசம் தாங்கலை! பூரணி, நீ இஞ்சினியரிங் முடிச்சிட்டு ஒரு சாஃப்ட் வேர் கம்பனில வேலை பார்க்கற!”

“நீ ஜனனி.. ஃபைனல் இயர்ல இருக்க.. கொஞ்சமாவது பொறுப்பு வேண்டாமா, இரு, உங்கம்மாவைக் கூப்பிடறேன்! அப்போ தான் நீங்க சரி ஆவீங்க!” என்று சொல்லி,

“செல்லம்மா!” என்று கூப்பிட்டும் விட..

“என்னக்கா! இவளுங்களுக்குத் தான் வேலை இல்லைன்னா உங்களுக்குமா?” என்று கேட்டபடி தான் அவர் வந்தார்.

“உனக்குத் தெரியுமா, நான் எதுக்குக் கூப்பிட்டேன்னு” என்று அனுராதா கேட்க,

“இவளுங்க இருக்கும் போது நீங்க கூப்பிட்டா எதுக்குன்னு எனக்கு தெரியாதா.. என்ன ஜனனி, பெரியம்மாவை டிஸ்டர்ப் பண்ணின?” என்று கேட்க…..

“அக்கா அழுதா! அதுதான்…” என்று விஷயத்தை சொல்லி ஜனனி செல்லம் கொஞ்ச,

விஷயத்தை கேட்டதும் அதுவும் கோபத்தைக் கொடுக்க, ஜனனி பேசிய விதமும் கோபத்தைக் கொடுக்க, “ஏழு கழுதை வயசாகுது, எப்போ பார்த்தாலும் கொஞ்சிக் கொஞ்சி பேசறது! பேசறதும் அர்த்தமில்லாம பேசறது! முதல்ல நல்லாத் தெளிவா பேசு!” என்று செல்லம்மாள் ஏகத்திற்கும் அதட்டினார்.

அவரை முறைத்த ஜனனி…. பூரணி பின்னிக் கொண்டு இருந்த தலையை இழுத்து….. பின்னிய பின்னலையும் விடுவித்து…. “நீ ஒன்னும் என் கூடப் பேசாத போ! எப்போ சேன்ஸ் கிடைக்கும் என்னை திட்டன்னு பார்த்துட்டியே இருப்பியா” என்று வெளியே விரைந்து விட,

“ஜனனி! இது என்ன அம்மாவை வா போ ன்னு பேசற!” என்று பெரியம்மாவும் அதட்ட,

“எங்கம்மா நான் அப்படித்தான் பேசுவேன்!” என்று கத்திக் கொண்டே விரைந்தாள்.

“அம்மா அவளை உனக்குத் தெரியாதா? ஏன் சித்தி நீங்க வேற?”  என்ற பூரணியைப் பார்த்து..

“என்ன பழக்கம் இது? காலேஜ் முடிக்க போறா! இன்னம் கொஞ்சித் தான் பேசறா, எத்தனை தடவை சொல்றது, ஒரு சொல் பொருக்கறது இல்லை, முகத்தை நாள் முழுசும் தூக்கி வெச்சிக்கறது! வீட்ல எல்லோரும் செல்லம் கொஞ்சி அவளைக்கெடுக்கறீங்க, இப்படியேப் போகற வீட்லயும் எல்லோரும் அவளை கொஞ்சிக்கிட்டே இருப்பாங்களா?” என்று சலிக்க,

“அவ நம்ம கிட்ட தான் அப்படிப் பேசுவா சித்தி, மத்த எல்லார்கிட்டயும் தெளிவாத் தான் பேசுவா!”

“என்னவோ போங்க! நான் என் பொண்ணு கொஞ்சாமப் பேசிப் பார்த்ததே இல்லை!” என்றார் அவர்.

“போங்க சித்தி! அழுதுட்டு இருப்பா!” என்று சொல்லி பூரணி அவரை விரட்ட,

செல்லமாள் சென்ற போது படுக்கையில் படுத்து தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தாள் ஜனனி.

ஆம்! அதுதான் ஜனனி.. சின்ன விஷயத்திற்குக் கூட உடனே அழுது விடுபவள். அங்கே நடந்த பிரச்சனை என்ன ஒன்றுமே இல்லை.. ஆனாலும் யாரும் கடிந்து சாதாரணமாக ஒரு வார்த்தைச் சொன்னால் கூட அழுவாள். செல்லாமாளின் செல்ல மகள்! மிகவும் செல்லமாக வளரக்க்பட்ட மகள், இன்னும் சிறு குழந்தை போல கொஞ்சி கொஞ்சி பேசும் சுபாவம். சிறிய வயதில் தேனாய் இனிக்க விட்டு விட்ட அம்மா இப்போது பேசாதே என்றால் சுபாவம் எப்படி மாறும்.

எத்தனையோ முறை செல்லமாள் நல்ல விதமாகச் சொல்லி, திட்டி , கொஞ்சி , கெஞ்சி , மிஞ்சி , என்று பலவகையாக முயற்சி செய்து விட்டார். ஆனாலும் மாற்றிக் கொள்ள மாட்டாள் என்பதையும் விட மாற்ற முயற்சி எடுக்கவே மாட்டாள். ஜனனி என்னக் கேட்டாலும் அடுத்த நிமிடம் அவள் முன் வைக்க அவளின் தந்தை பரதன் விருப்பப்படுவார்.

“இப்படி அவ கேட்கறது எல்லாம் உடனே வாங்கிக் கொடுக்காதீங்க!  கஷ்டம் தெரியாம பிள்ளைங்களை வளர்க்காதீங்க!” என்று கணவரிடம் பல முறை சொன்னாலும்.

“நான் பாடு பட்டு இப்படி உழைக்கறது எதுக்கு? நம்ம மக்களுக்குத் தானே! அவளுக்குச் செய்யாம நான் யாருக்குச் செய்யப் போறேன்! முதல்ல எதுக்கு அவளுக்கு கஷ்டம் தெரியணும்னு நினைக்கற! அப்படி ஒரு வாழ்க்கை என் பொண்ணுக்கு அமையாது! என்று வாயை அடைப்பார்.

“என்னவோ செல்லமாளுக்கு இன்னும் மகள் பொறுப்பாக இருக்கவில்லை, பக்குவப் படவில்லை, நாளைத் திருமணமாகி செல்லும் வீட்டில் அவளை யாரும் எதுவும் சொல்வார்களோ!” என்ற எண்ணம் தான்.

இருந்தாலும் இப்பொழுது அழுதுக் கொண்டிருப்பவளைப் பார்த்து, “எதுக்கு இப்போ சின்ன விஷயத்துக்கு அழற, எழுந்துரு!” என்று சமாதானம் செய்யவும்,  

“எது சின்ன விஷயம், என்ன நான் கொஞ்சிப் பேசறேன், எப்பவும் நீங்க என்னை அதட்டிக் கிட்டே இருக்கீங்க, அதுவும் பெரியம்மாவும் அக்காவும் இருக்காங்க, பெரியம்மா, பெரியப்பாக் கிட்ட சொல்லுவாங்க! அப்படியே எல்லார் கிட்டயும் சொல்லுவாங்க! எல்லோரும் வண்டி வண்டியா அட்வைஸ் குடுப்பாங்க!” என்று உதடு பிதுக்கி சொன்ன விதம் மீண்டும் செல்லம் கொஞ்சுவது போல தான் அவருக்கு தோன்றியது.

“மா! அக்கா ஏன் அழறா?” என்றபடி வந்தான் அவினாஷ், ஜனனியின் தம்பி, கூடவே வந்தது ரகுலன், பூரணியின் தம்பி, இருவருக்கும் ஒரே வயது, இருவரும் கல்லூரியில் முதல் ஆண்டு பயின்றனர். அவர்களும் இஞ்சியனியரிங் படிப்பே.. ஆக மொத்தத்தில் அந்த வீட்டினில் நான்கு இஞ்சினியர்கள்.

ஆனால் அவர்களின்  தாத்தாவின்  தொழில் பிரிண்டிங் பிரஸ், மிகுந்த பெரிய அளவில். அதில் தான் இரு மகன்களும் இருந்தனர்.   

“ஒரு வார்த்தை அதட்டி பேசினேன், அழறா!”

“அவ தான் ரொம்ப சென்சிடிவ்ன்னு தெரியாதா?” என்று அம்மாவை அதட்டிய அவினாஷ்,

“அக்கா! எழுந்துரு! வீட்ல விஷேஷம், எல்லோரும் வர ஆரம்பிப்பாங்க! இப்போ அழுதா என்ன என்ன கேட்பாங்க, அவங்க போனதுக்கு அப்புறம் கண்டினியூ பண்ணு! இல்லை உன் கண் மை எல்லாம் கரைஞ்சு பேய் மாதிரி இருப்ப!” என்று சொல்ல,

“டேய்! சும்மா இருடா!” என்று அவனை அதட்டிய ரகுலன், “அக்கா! எழுந்துரு!” என்று அவன் சமாதானப்படுத்திக் கொண்டு இருக்க… அப்போது தான் குளித்து முடித்து வந்த பரதன்,

“குட்டிம்மா! அப்போவே குளிச்ச, இப்போ என்ன திரும்ப படுத்திருக்க!” என,

“அப்பா! அக்கா அழறா!”  

உடனே மனைவியிடம் திரும்பியவர், “திட்டுனியா அவளை!” என்றார். அம்மா திட்டினால் தான் உடனே அழுகை வரும் என்று அறிந்தவர்.

“கொஞ்சிக் கொஞ்சி பேசினாத் திட்டினேன்” என,

செல்லம்மாவை முறைத்த பரதன், “நீ எழுந்தரு குட்டிம்மா, இப்போ எல்லோரும் வந்திடுவாங்க, நாம அவங்க போன பிறகு உங்கம்மாவை ஒரு வழி பண்ணிடலாம்!” என்று ஜனனியை ஒருவழியாக கிளப்பினார்.

அம்மாவிடம் பேசாமல் அவள் எழுந்து செல்ல, “ஜடை தான் போடணும் ஜனனி! லூஸ் ஹேர் விடாத” என்றார் செல்லம்மாள் மீண்டும்.

அவரை ஒரு பார்வை பார்த்தவள், சென்று விட,

“நீ சொல்லாம இருந்திருந்தா கூட அவ ஜடை போட்டிருப்பா! இப்போ நீ சொல்லிட்ட தானே, கண்டிப்பா முடியை விரிச்சு போட்டுட்டு நிற்பா, பசங்களை எப்படி ஹேண்டில் பண்றதுன்னு உனக்கு இன்னும் தெரியலை! சும்மா ரூல்ஸ் போட்டுக்கிட்டு! முதல்ல நான் சொல்ற பேச்சை நீ கேட்கறியா!” என்று மனைவியைக் கடிந்து கொண்டே அவர் தயாராக..

அதற்குள் வீட்டிற்கு விருந்தினர் வர ஆரம்பிக்க, தயாராகி அதை கவனிக்கச் சென்றனர்.

அனுராதா இன்னும் பிறந்த வீட்டினர் வரவில்லை என்று வாயிலை பார்த்துப் பார்த்து நின்றார்.

பல வருடமாகத் தொடர்போ போக்குவரத்தோக் கிடையாது பிறந்த வீட்டினரிடம், அதாகப்பட்டது அப்பா, அம்மா, அண்ணியுடன். ஆனால் மற்ற வகை பிறந்த வீட்டின் சொந்தங்களுடன் நல்ல தொடர்ப்பு இருந்தது, அதாகப்பட்டது சித்தப்பா மாமா வீட்டினர் இப்படி.

அவர்கள் எல்லோரும் கூட வர ஆரம்பித்து விட்டனர். அவர்களை வரவேற்று அமர்த்த.. வீட்டின் பிற ஆட்கள் அவர்களைப் பார்க்க,  

பூரணியின் திருமணம் கை கூடி வர அதன் பொருட்டு தான் இப்பொழுது பல வருடங்களுக்கு பிறகு அம்மாவின் வீடு சென்று அவர்களை அழைத்து இருந்தனர். இன்று அவர்கள் நலங்கு வைப்பதாக தொலைபேசியில் அனுராதாவின் அம்மா சொல்லியிருந்தார். 

இன்னம் இவர்களைக் காணோம், தவித்தவர்.. தொலைபேசியை எடுத்துப் பேசலாமா என்றுப் பார்க்க, முடியவே முடியாது! கண்கொத்தி பாம்பாக லக்ஷ்மணன் பார்த்துக் கொண்டு இருந்தார்.

அவரை மீறி ஏதாவது செய்து விட்டால் அவ்வளவு தான், வார்த்தைகளால் குத்தி கிழித்து விடுவார். அவருக்கு சபையில் தாங்கள் பெரிய ஆட்கள் என்று காட்ட வேண்டும்.

பல வருடமாகத் தொடர்பு இல்லாத போதும், திருமணத்திற்காவது சென்று கூப்பிடுவோம் என்று அனுராதா வெகுவாக ஆசைப்பட்டார்.

இதற்கு வேறு வேறு ஊர் கூடக் கிடையாது. எல்லோரும் சென்னை வாசிகளே, இவர்கள் வடபழனி, அவர்கள் தற்போது கே கே நகரில் இருந்தார்கள்.     

“நாமளா போகாம விட்டோம். அவங்க வர்றதில்லை. நம்மளும் நிறுத்திக்கிட்டோம். அப்போவாவது கொஞ்சம் ஏதோ வசதி இருந்தது. இப்போ ஒன்னுமில்லைன்னு கேள்வி, அவங்க என்ன செய்வாங்க, செய்யலைன்னா எனக்கு அசிங்கம்! அவங்களைக் கல்யாணத்துக்குக் கூப்பிடவே வேண்டாம்!” என்று சொல்லியிருந்தார்.  

கணவரின் வார்த்தைகளை மீற முடியாமல் கண்கள் கலங்கியவரைப் பார்த்து,

மாமனார் மாமியாரிடம் ரகசியமாக செல்லமாள் சொல்ல, அவர்கள் தான் “பிறந்த வீட்டினரைக் கூப்பிடாமல் இருந்தால், அது உறவுகளுக்கு இடையே ஒரு சொல் ஆகிவிடும். அவர்கள் வருவதும் வராததும் அவர்கள் விருப்பம் நம் வரை நாம் சரியாக இருக்க வேண்டும். கூப்பிட வேண்டும்”.  என்று பேசி சம்மதிக்க வைத்தார்.

அனுராதாவை மேலும் தவிக்க விடாமல் ஆட்டோ ஒன்று வந்து நிற்க, அதில் இருந்து, அவரின் அப்பா சந்தானம், அம்மா வசந்தி, அண்ணி  ஸ்வாதி இறங்க.. ஆட்டோ டிரைவருடன் அமர்ந்து இருந்த வாசுதேவனும் இறங்கினான்.

“வாங்கப்பா! வாங்கம்மா!” என்று அனுராதா வேகமாக சென்று வரவேற்க,

ஸ்வாதி மாமியாரின் கைகளை பிடித்துக் கொள்ள, வாசுதேவன் தாத்தாவின் கைகளை பிடித்துக் கொள்ள, ஆட்டோ டிரைவர் அவர்கள் பைகளில் கொண்டு வந்திருந்த பொருட்களை இறக்க முற்பட்டார்.

“ரகுலன், அவினாஷ்” என்று அனுராதா குரல் கொடுக்கவும், அவினாஷும் ராகுலனும் வந்து பையை எடுத்துப் போக,

“எவ்வளவு பெருசா வளர்ந்துட்டான் சின்ன கண்ணன் அண்ணி! நாங்க அன்னைக்கு வீட்டுக்கு வந்தப்போ பார்க்க முடியலை!”  என்று அனுராதா ஸ்வாதியிடம் வாஞ்சையாக சொல்ல,

“அத்தையை தெரியுதா வாசு!” என்று பாட்டி கேட்க,

“தெரியுது பாட்டி!” என்று முன்பு பார்த்ததை ஞாபகத்தில் வைத்து சொன்ன வாசுதேவனை தான் அங்கிருந்த மற்ற வீட்டினரும் பார்த்தனர்.

“ப்பா! எப்படி இருக்கிறான் இந்தப் பையன்!” என்று தான் தோன்றியது. நல்ல நிறம், நல்ல உயரம், பொருத்தமான உடற் கட்டு, களையான முகம், அத்தனை வசீகரத்துடன் இருந்தான். அவனை அங்கு யாரும் பார்த்தது இல்லை.

அவனின் வகை உறவுகளே “வாசு! எப்படி இருக்க? பார்த்து ரொம்ப நாள் ஆச்சு!” என்று கேட்க,

“நல்லா இருக்கேன் மாமா!” என்றான் யாரிடமோ.

உள்ளே ஹாலில் நுழைய, அப்போதுதான் லக்ஷமணன் வந்து “வாங்க!” என்று தனது மாமனாரையும் மாமியாரையும் உபசரித்தார்.      ஸ்வாதி அவர் வரவேற்கும் முன்பே அவரைப் பார்த்து வணக்கம் என்பது போலக் கையை குவிக்க, “வாங்க” என்றவர், வாசுதேவனை பார்க்க, “வாசு!” என்ற அம்மாவின் குரலுக்கு அவனும் “வணக்கம்” என்றான்.

“என் மகன்” என்று ஸ்வாதி சொல்ல..

“ஓஹ்!” என்று பார்த்த லக்ஷ்மணனின் பார்வை, வாசு தேவனை சற்று ஆச்சர்யத்துடன் தான் பார்த்தது. இந்தத் தோற்றம் ஸ்வாதியின் வீட்டினரைக் கொண்டு என்று புரிந்தது.

இப்போது வசதி வாய்ப்புகள் இல்லாவிட்டாலும், அந்த மேல் தட்டு மக்களின் தோற்றம் அம்மாவிடமும் மகனிடமும் அப்படியே இருந்தது. அவர்களின் எளிமையான உடைகள் கூட அதைக் குறைக்க முடியவில்லை.     

“பூரணிக்கா! உங்க பாட்டி தாத்தா வந்துட்டாங்க போல!” என்று ஜனனி சொல்லி ரூமின் உள் இருந்து வெளியே வந்தாள். அவசரமாக பூரணியும் மனமகனுடம் பேசிக் கொண்டிருந்த அழைப்பைத் துண்டித்து வர,

“ஹேய்! பூரணிக்கா யார் இந்த பியுட்டி!” என்று ஜனனி ரகசியம் பேச,

“யாரைச் சொல்கிறாள்” என்று பூரணி பார்க்க, அங்கே அவள் கை காட்டிய இடத்தில் பூரணியின் தாய் வழிப் பாட்டியுடன் ஸ்வாதி அமர்ந்து இருந்தார். 

பூரணி “அது எங்க அத்தை!” என்று ரகசியம் பேசினாள்.

“உங்க மாமாவோட மனைவியா? எவ்வளவு அழகா இருக்காங்க!” என்று ஜனனி சொன்ன ஸ்வாதி, உண்மையில் அந்த வயதிலும் அவரின் வயதிற்கு பேரழகி தான், அதனுடைய தாக்கம் தான் அவரின் மகன் வாசுதேவனுக்கும் வந்திருந்தது.

ஜனனி மேலே பூரணியிடம் பேசும் முன், அனுராதா மகளை கண்களால் அழைத்து, பாட்டியிடம் போ என்று காட்ட, பூரணி வேகமாக வந்து “பாட்டி” என்று அவரின் மற்றொரு கையை பற்றி, “வாங்க அத்தை” என்று ஸ்வாதியையும் வரவேற்றாள்.

தாத்தா இரும, “கொஞ்சம் தண்ணி கொண்டு வாங்க அத்தை!” என்று வாசுதேவன் சொல்ல, குரல் வந்த திசையைப் பார்த்த ஜனனி, வாசுதேவனை விழியகற்றாமல் பார்த்தாள்.

“யாரு இது?” என்று தன் தம்பி அவினாஷிடம் ரகசியம் பேச,

“அவங்க பையன்!” என்று ஸ்வாதியைக் காண்பித்து சொன்னான்.

 “அவங்க அப்பா ஒரு பைத்தியம் சொன்னாங்க, இவன் இவ்வளவு சூப்பரா இருக்கான்!” என்று திரும்ப ரகசியம் பேச,

அவினாஷ் சுற்றும் முற்றும் பார்த்தவன், “வாயை மூடு அக்கா!” என்று கோபமாக அதட்டினான், யார் காதிலாவது விழுந்து விடப் போகிறது என்று.

ஜனனி வாயை கப்பென்று மூடிக் கொண்டாலும், வாசுதேவனை பார்ப்பதை மட்டும் நிறுத்தவில்லை.

 

Advertisement