Advertisement

அத்தியாயம் 20

ஊரே வந்து வாழ்த்தி விருந்துண்டுச் செல்ல, வராதது ஆறுமுகத்தின் குடும்பம் மட்டும் தான்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஆறுமுகத்தின் மனைவி தவறி விட, மகளும் சொத்து மொத்தத்தையும் புகுந்த வீட்டிற்கு எழுதி வாங்கிக்கொண்டு சென்று விட்டாள்.

அதில் மிகுந்த வேதனையோடு மனமுடைந்து போன ஆறுமுகம் படுத்த படுக்கையாகி விட்டார்.

இப்போதெல்லாம் அடிக்கடி மகனின் நினைவு வர, ஏங்கிக் கிடந்தார்.

எப்போதாவது தள்ளாடி வாசலுக்கு எழுந்து வருபவர் குமரனைப் பார்த்தால் மட்டும், கையெடுத்துக் கும்பிட்டு, சுரேஷ் எங்கு இருக்கிறான்? அவனை வரச் சொல்லேன் என வேண்டுவார்.

பார்க்கப் பரிதாபமாக இருந்தாலும் பாவக்கணக்கு இன்னும் தீரவில்லையே!

குமரனும் என்ன செய்வான். அவனுக்குத் தெரிந்தால் தானே? வழக்கையும் நடத்த விடாது முடித்தது அவர் தானே? அப்புறம் நான் செய்ய என்ன இருக்கிறது என்ற பரிதாபம் அவனிற்கு.

அன்று மருத்துவமனயில் சுரேஷை சேர்த்த பின், அனைவரும் அசோக்கின் இழப்பிற்குச் சென்றுவிட, மாலை வரை கோபமாக இருந்த ஆறுமுகம் அதன் பின் தான் தேடி வந்தார்.

அவர் வர, சுரேஷ் அங்கில்லை.

பதறிவர், பண்ணை வீட்டிற்குச் செல்ல, காவலை மீறி அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த வைதேகியையும் காணவில்லை.

யாரும் உதவினரோ? இல்லை அவனாகவே அவளை அழைத்துச்சென்று விட்டானோ? இருவரும் எங்கு சென்றனர்? எப்படிச் சென்றனர் என யாருக்கும் தெரியாது.

இத்தனை வருடங்கள் கழித்த பின்னும் அவர்களைப் பற்றிய தகவலும் எதுவுமில்லை. அந்த ஊர்க்குள் தீராத மர்மங்களின் பட்டியலில் அவர்களைக் காணவில்லை என்ற செய்தியும் சேர்ந்து கொண்டது.

மகனின் காதல் விவகாரம் தெரிந்ததுமே அவனை வெளியூருக்கு அனுப்பி, வைதேகியின் வீட்டினரை மிரட்டித் தான் அவளுக்குத் திருமணம் ஏற்பாடு செய்ய வைத்தார்.

அவர்களும் அவசர அவசரமாக பொருந்தாத மாப்பிள்ளையைப் முடிவு செய்ய, வைதேகி வீட்டை விட்டு ஓடி விட்டாள்.

எப்படியும் ஆறுமுகத்திடமிருந்து மிரட்டல் வரும் இருபுறமும் பதில் சொல்ல வேண்டியிருக்கும் என்ற பயத்தில் அன்று இரவே அவர்களும் இரவோடு இரவாக ஊரை விட்டுச் சென்றுவிட்டனர்.

அசோக்கைக் கொன்று, காதலர்களைப் பிரித்து, பஞ்சயாத்தைக் கூட்டி, மகனை மருத்துவமனையில் படுக்க வைத்த பின்னும் கூட அவர் திட்டமும் தீவிரமும் வெற்றியடையாது போனது.

ஆரம்பத்திலிருந்து குமரன் சும்மா விடுவதாக இல்லை.

அவன் பேருந்தும் எரிந்து சாம்பலாகி இருக்க, வழக்குப் பதிவு செய்தான். அவர்கள் வழக்கறிஞர் கூட, விபத்து என பதிவு செய்தால் விரைவில் பேருந்தை எடுத்து விடலாம், உடன் பேருந்திற்கும் அசோக்கின் குடும்பத்திற்கு காப்பீடு கிடைக்கும் என்றும் வழக்கு என்று சென்றால் பல வருடங்கள் ஆகும், அது முடியும் வரை பேருந்தை எடுக்க முடியாது என அறிவுறுத்தினார்.

ஆனால் குமரன் கேட்கவில்லை, நண்பனின் இழப்பிற்கு நீதி வேண்டுமென்று பிடிவாதமாக நின்றான்.

ஆனால் அசோக்கின் பெற்றோர்கள் வழக்குப் பதிய மறுத்து விட்டனர்.

வழக்கு என்றால் காணாமல் போன, சுரேஷும் வைதேகியும் கூட சாட்சியாக மீண்டும் ஊருக்கு வர வேண்டியிருக்கும். அவர்கள் எங்கேயாவது வாழ்ந்து கொள்ளட்டும் என்று தானே உயிரைக் கொடுத்து அசோக் உதவினான், பின் வழக்குப் பதிவு செய்து அதை வீணடிக்க அவர்கள் விருப்பவில்லை.

பேருந்து விபத்தென்று குறிப்பிட்டு அப்படியே விட்டுவிட்டனர்.

அதில் அவர்களோடு குமரனுக்கு மனஸ்தாபம் தான், மீனாவும் சுந்தரமூர்த்தியும் தான் அவனைத் தேற்றினர்.

அசோக்கும் அப்பேருந்தும் அவ்வூரின் அடையாளங்களுள் ஒன்று. அவ்விரண்டும் இல்லாது போனதில் அவருக்கும் பெரும் வேதனை.

சட்டம் மௌனமானாலும் கடவுள் கண்ணை மூடிக்கொள்வதில்லை. இரும்பை யாராலும் அழிக்க முடியாது போனாலும் அதன் சொந்தத் துரு சிறிது சிறிதாக அரித்து, அழிந்து விடும்.

அது போலத் தான் குற்றவுணர்வு ஆறுமுகத்தைக் கொன்று கொண்டிருந்தது.

குற்றவுணர்வுவை விட கொள்ளும் சிறந்த ஆயுதம் எதுவுமில்லை.

செய்யக் கூடாத அத்தனை பாவத்தையும் செய்து விட்டு, பாவச்சுமை தாங்காது படுக்கையில் விழுந்து தாங்கிக்கொண்டு கிடந்தார் ஆறுமுகம்.

இரவு உணவிற்கு பின், சுரேந்தர் வேலுநாச்சியுடன் கதை கேட்டபடி உறங்கிவிட, அறைக்குள் வந்த மீனாவைச் சட்டென இழுத்து அணைத்தான் குமரன்.

நேற்று தான் இருவருக்குள்ளும் ஒரு வாக்குவாதம் முடிவுற்றுள்ளது. அதைத் தணிக்காது அணைக்க, திமிறிக் கொண்டு நின்றாள் மீனா.

ராமநாதன் ஒரு நிலம் வாங்குதாக இருக்க, அதை மீனாவின் பெயரில் பதியக் கேட்டார்.

மீனா அதைக் குமரனிடம் தெரிவிக்க, அவனோ வேண்டாமென்று மறுத்து விட்டான்.

முதலீடு என்றெண்ணத்தில் சுந்தரமூர்த்தி மீனாவிற்குச் சொந்தமாக கிளினிங் வைத்துக் கொடுத்திருக்க, குமரனும் இப்போது ட்ராவல்ஸை முழுமையாக கவனித்துக் கொண்டிருந்தான்.

புதிய ஊழியர்களை வைத்துக்கொண்டு ட்ராவல்ஸோடு இணைத்து சுற்றிலா ஏஜென்சியும் துவங்கி, கவனிக்க, தொழில் நன்றாக சென்று கொண்டிருந்தது.

வள்ளிக்கும் வேலுநாச்சிக்கும் இடையில் மட்டும் இன்னும் உறவு சரியாவதாக இல்லை.

சுரேந்தரை வளர்ப்பதிலும் வாரிசுகளுக்குச் செய்வதிலும் இருவருக்கும் போட்டி.

அதில் பெருமையும் மகிழ்ச்சியும் கொள்வதும், செல்லும் இடமெல்லாம் சொல்லி வைப்பதுமாக இருந்தனர்.

அவர்கள் போட்டியை முடித்து வைக்க, முயன்று குமரன் வேண்டாமென்க, தன் பெற்றோர்களின் அன்பை ஒதுக்க முடியாது மீனா வேண்டுமென்க இருவருக்கும் நன்றாக முட்டிக்கொண்டது நேற்று.

“விடுடா.. நேத்து சண்டையே இன்னும் சமாதானம் ஆகலை, அதுக்கு முன்னகிட்ட வராத போ” என்றவள் விலக்கிவிட, “இவிங்க பஞ்சாயத்துக்குள்ள நான் வரலை. உன் இஷ்டம் போல செய்யுடி. அதான் காலையில சமாதானத்துக்குத் தேன்மிட்டாய் வாங்கி வைச்சிட்டுப் போனேனே..” என்றான், மீண்டும் இழுத்து இறுக்கி அணைத்தபடி.

“தேன்மிட்டாயா? எங்க நான் பார்க்கலை? பொய் சொல்லாத நீ..” என மிரட்டியவள், அவன் கன்னம் கடித்தாள்.

மெல்லிய வலியோடு தாங்கியவன், “இங்க தான், நீ குளிச்சிட்டு இருந்த போது டேபுள்ல தான் வைச்சிட்டுப் போனேன். வேலைக்குக் கிளம்புன அவசரத்துல நீ கவனிக்கலையோ என்னவோ?” என்றவன் உருக, தான் எடுக்கவில்லை என்றாலும் வைத்த இடத்தில் இருக்க வேண்டுமே? என்ற யோசனையில் இருந்தாள் மீனா.

அவனோ அவள் கழுத்தில் இதழ் உரச, முகம் புதைத்தபடி மூழ்கப் போக, “அப்புறம் எப்படி காணாம போகும்?” என்றாள் விசாரணையாக.

“எனக்கு எப்படித் தெரியும்?” சோர்வோடு குமரன் புலம்ப, “ஆச்சி..” எனக் கூவினாள்.

“ஆச்சி.. வேலுநாச்சி, சரியான திருட்டுப்பூனை அவங்க தான் எடுத்திருப்பாங்க..” எனச் சிணுங்கினாள்.

“சரி விடு, ஏதோ ஆசைக்கு எடுத்திருக்கும்..” என்றவன் சமாதானம் சொல்லும் போதே, “அதெல்லாம் முடியாது என் மிட்டாய் எனக்கு வேணும்..” என்றாள் சிறுபிள்ளை போலே பிடிவாதமாக.

“சரிடி வாங்கித் தரேன்..” எனக் குமரன் கொஞ்சிக்கொண்டு வர, “இப்போவே வேணும்..” என்றாள் இன்னும் அடமாக.

“இந்த ராத்திரியிலையா..?” என்ற கேள்வியோடு தலையில் கை வைத்துவிட்டான் குமரன்.

அவளின் பிடிவாதம் நன்கு அறிந்தவன்.

ஆகையால் ஊருக்குள் இருக்கும் ஒரு பெட்டிக்கடையின் உரிமையாளரை எழுப்பி, மகன் அழுகிறான் வேண்மென்று வாங்கி வந்தான்.

மனமோ ‘எவ்வளவு பெரிய ஆளு, என்னடா இது சில்லறைத்தனமான வேலையை பார்க்கிற?’ எனக் கேலி செய்ய, அதை சுரணையே இல்லாது எட்டி வைத்தான்.

அதற்குள்ளாக மீனா படுத்துவிட, அவளை எழுப்பி அவள் முன் நீட்ட, அப்படியே சிறு பிள்ளையின் குதூகலத்தில் மலர்ந்த அவள் முகத்தைப் பார்க்க பார்க்க ஆசையாக இருந்தது குமரனுக்கு.

இதற்காகச் சிகரைத்தையே ஏறி இறக்கச் சொன்னாலும் செய்யலாமே என மையலோடு நினைத்தான். 

“அழகுடி..! என் அழகி..!” என முனங்கினான்.

அழகு மீனாள் உண்டு முடிக்க பொறுத்தவன், “சரி, நீ தான் தின்னுட்டியே? இப்போ என் மிட்டாய்?” எனக் கேட்டபடி அவள் இதழில் இதழ் பதிக்க, அப்படியே அவனோடு மூழ்கிப்போனாள் மீனா.

நாளுக்கு நாள் அவள் மீதான அன்பு குமரனுக்கு அதிகரித்துக்கொண்டே போக, அவனுக்கு ஈடாக தன் அன்பைக்காட்டி சுகமாகத் தாங்கியவள் மோதல், காதல் என எதிலும் அவனை விட்டுக்கொடுக்காது தாங்கிக்கொள்வாள். இதிலே அவர்கள் இல்லறம் நல்லறமாகி இன்பமோடு சென்றது.

வயலில் வேலை செய்யும் பெண்கள் கருமேகம் சூழ வானை நிமிர்ந்து நோக்கினர்.

கூடிய மேகக்கூட்டங்கள் ஒன்றுசேர ஒரு பேருந்து போலே உருவத்தைக் காட்டிவிட்டு கண்ணீர் விடுவது போலே மழைச் சாரலை தூவியது.

பஞ்சாயத்து மரத்தடி, தார்ச்சாலைகள், வயல்வெளிகள், கல்லூரி இளசுகள் மட்டுமின்றி அந்த ஊரைச் சுற்றி வரும் தென்றல் காற்றிற்குக் கூட, அனைவரையும் இன்பமுறச் செய்துவிட்டு இல்லாத போன அசோக் மற்றும் சொப்பனசுந்தரி என்னும் பேருந்தின் நினைவுகள் எப்போதும் உண்டு.

அந்த நினைவுகளும் சுகமானதாக, இன்பமானதாகவே எப்போதும் இருக்கட்டும்.

*****

Advertisement