Advertisement

அத்தியாயம் 19

காலை நேரம், வேப்பங்குச்சியில் பல் தேய்த்தபடி பின்கட்டில் ராமநாதன் உலாத்திக் கொண்டிருந்தார்.

தொழுவில் பால் வியாபாரி அளந்து பாலைக் கேனில் ஊற்றி முடிக்க, ஒரு தூக்குவாளியைக் கொண்டு வந்து அவனிடம் நீட்டினார் வள்ளி.

“நம்ம லட்சுமி கண்ணு போட்டுருக்குல்ல.. அந்தச் சீம்பால் இதுல இருக்கு. மீனா வீட்டுல பால் ஊத்தும் போது கொடுத்துடுடா கனகு” என்றார். மகளுக்குச் சீம்பால் என்றால் அவ்வளவு பிடிக்கும்.

ஊரில் பெரும்பாலானர்வர்கள் வள்ளியிடம் பால் வாங்க, அவரிடம் பால் வாங்கி விற்கும் வியாபாரியிடம் பால் வாங்குவார் வேலுநாச்சி.

கனகு வீட்டிற்கே வந்து பால் ஊற்றி விடுவான்.

அனைத்தையும் பார்த்திருந்த ராமநாதன், “அப்படியே தினமும் இரண்டு லிட்டர் தண்ணீர் கலக்காத பாலை வாங்கிட்டுப் போய் அவ வீட்டுல கொடுத்திடுயா கனகு” எனக் குரல் கொடுத்தார்.

வள்ளி எதுவும் சொல்லுவார் திட்டுவார் என ராமநாதன் எதிர்பார்க்க, அவரோ அமைதியாக மறுநாளிலிருந்து பாலும் கொடுத்துவிட, ராமநாதனுக்கு சந்தோசம்.

பொதுவான விருப்பு வெறுப்புகள் குடும்ப விஷயங்கள் நட்புகளைப் பற்றிய உரையாடல் எப்போதும் இரவில் அவர்கள் அறையிலிருக்கும்.

பல நேரம் கருத்து வேறுபாட்டிலும் பழைய கசப்பான நிகழ்வுகளிலும் மனஸ்தாபங்கள் வருவதுண்டு. அதிலும் மீனா சட்டென வார்த்தையை விட்டுவிடுவாள், குமரன் தான் பொறுத்துக்கொள்வான்.

மறுநாள் காலையில் எதுவுமே நிகழாத போன்று முகம் கொடுத்துப் பேசுபவனைப் பார்க்கையில் அவன் மீதான பிடித்தம் கூடிப் போகும். ஆனால் இந்த முறை என்னவோ அவன் முகம் திருப்பிச் செல்ல, மீனாவால் தாங்கவே முடியவில்லை.

இரண்டு நாளுக்கு ஓர் இரவு தான் வீட்டில் அவன் வாசம். அதிலும் நேற்று காலையில் தான் பணிக்குச் சென்றிருக்கிறான், அதுவும் அவள் எழும் முன்பே சென்றுவிட, அவன் நினைவும் ஏக்கமுமாக இருந்தது அவளிற்கு.

பேசக்கூடாது என்ற வீம்போ வீராப்போ கிடையாது குமரனுக்கு. பேசினாலே இறுதியில் தன்னைத்தான் காயப்படுத்துகிறாள்.

அவனும் எத்தனை முறைதான் வலிக்காதது போலே இருப்பது? வலித்தாலும் பொறுத்துக் கொள்வது?

கொஞ்சம் விலகித் தானிருந்து பார்ப்போமே என்ற எண்ணம்.

மீனாவிற்குத் தன்னைப் பிடிக்காதோ? தாலி கட்டியதாலே தன்னோடு இருக்கிறாளோ? எந்த இடத்திலும் தன்னைப் பிடிக்குமெனக் காட்டியதில்லையே? கட்டாயத்தில் பிடித்து வைக்கும் உறவு எத்தனை நாள் நிலைக்கும்? என யோசிக்கும் போது நெஞ்சை அடைக்கும் உணர்வு. வேதனையில் வெம்பினான்.

மாலை நேரத்தில் குமரனின் அலைபேசி இசைக்க, அதுவும் மீனாவின் எண் என்பதால் ஆசையாக எடுத்தான்.

எடுத்ததுமே, “நந்தினி அண்ணிக்குப் பையன் பிறந்திருக்கான்..” என்றாள் மகிழ்வாக.

அந்தச் சந்தோஷம் அவனையும் தொற்றிக்கொள்ள, “எப்போ? எந்த ஹாஸ்பிட்டல்ல?” என்றான் ஆர்வமாக.

தனது அடக்கட்டை அசோக் தன்னிடமே வந்துவிட்டதில் அவ்வளவு சந்தோஷம் குமரனுக்கு. அசோக்கை இழந்து வாடும் அத்தனை உள்ளங்களுக்கும் கடவுள் தந்த பரிசாக நினைத்தான்.

பெரும் பொறுப்பு தன்னிடம் வந்ததில் அளவில்லாத மகிழ்ச்சி.

“எங்க ஹாஸ்பிட்டல்ல தாங்க. இரண்டு மணி நேரம் முன்ன பெயின் இருக்குன்னு கால் பண்ணாங்க.. மருது அண்ணாவைக் கூட்டிட்டு வரச் சொல்லிட்டு, இங்க எல்லா ஏற்பாடும் செஞ்சி வைச்சிருந்தேன். இப்போ தான் குழந்தை பிறந்தது..” என்றாள் மீனா.

இருவரின் நலமும் கேட்டறிந்து கொள்ள, அங்கே செவிலியர் அழைப்பதால் அழைப்பைத் துண்டித்து விட்டுச் சென்றாள் மீனா.

அந்த நடையை முடித்துக்கொண்டு இரவு உணவு நேரம் மருத்துவமனைக்குச் சென்று பார்த்துவிட்டு வந்தான் குமரன்.

அந்த நேரம் மீனாவோ பணி முடிந்து வீட்டிற்குச் சென்றிருந்தாள்.

மீனாவிற்கு அழைத்துப் பேச மனம் துடித்தது. ஆனாலும் அசதியில் தூங்கியிருப்பாள் என்றெண்ணி விட்டுவிட்டான்.

நாளைக்குத் தான் வீட்டிற்குச் சென்றுவிடுவோமே பார்த்துக்கொள்வோம் என்று நினைத்தான்.

மறுநாள் பணி முடிந்த ஓய்வு நேரத்தில் நந்தினியின் அறைக்குச் சென்றாள் மீனா.

என்னவோ குழந்தையைப் பார்க்க பார்க்க அவ்வளவு ஆசையாக இருந்தது. சிறிது ஓய்வு நேரம் கிடைந்தாலும் குழந்தையும் பார்க்கும் ஆசையில் ஓடி வந்து விடுவாள்.

மீனா அறைக்குள் வர, அங்கே வள்ளியும் இருந்தார். குழந்தையையும் நந்தினியையும் பார்க்க வைந்திருப்பார் போலிருக்கு, அமைதியாக அறைக்குள் ஒரு ஓரம் நின்றுகொண்டாள் மீனா.

வள்ளியைப் பார்க்க ஒரு புறம் ஏக்கமாகவும் இருந்தது. மீனாவிற்குத் தெரியும் அவர் மனதை அதிகம் காயம்பட்டு இருக்குமென. அவருக்குச் செய்த துரோகம் சென்று மன்னிப்புக் கேட்கக் கூட தகுதியற்றுப் போனதாக நினைத்து வெம்பிய மீனா விலகியே இருந்தாள்.

குழந்தையையும் நந்தினியையும் பார்த்து நலம் விசாரித்துவிட்டு வள்ளி கிளம்ப, வந்தவருக்கு ஒரு தேநீர் கூட வாங்கித்தராது அனுப்ப மனமில்லாத கமலம், “மீனாம்மா, கேன்டீன் கூட்டிட்டுப் போய் டீ வாங்கிக் கொடுத்துடேன்” என வேண்டினார்.

அவருக்கு வேலையிருப்பதை அறிந்திருந்த மீனா, சரியெனத் தலையாட்டி விட்டு முன்னே சென்றாள். வள்ளியும் விடைபெற்று பின்னே வந்தார். தன்னை மறுத்துவிட்டுச் செல்வார் என நினைத்த மீனாவிற்கு இன்பமான ஏமாற்றம்.

அவரை இருக்கையில் அமரக் கை காட்டிவிட்டு தேநீரும் ஸ்நாக்ஸும் வாங்கச் சென்றாள்.

மீனாவை இன்று தான் முதல் முறையாக மருத்துவ உடையோடு பார்க்கிறார் வள்ளி. மகள் விரும்பியது போலே மருத்துவராகி விட்டாள்.

வள்ளிக்கு பட்ட கஷ்டமெல்லாம் பெரிதாகத் தெரியவில்லை. தன் வளர்ப்பு என்பதில் பெருமையாக இருந்தது.

முதல்முறை பார்த்து வந்திருந்த ராமநாதனும் இப்படித் தான் தன் மகளை நினைத்து சிலாகித்து, பெருமையாக உரைத்தார். எந்த நேரம் மகளைப் பார்க்க வேண்டுமென்று தோன்றினாலும் நேராக மருத்துவமனைக்கு வந்துவிடுவார் ராமநாதன்.

மீனா வாங்கி வந்தவைகளை முன் வைக்க, அமைதியாக எடுத்துக்கொண்டார் வள்ளி.

அவர் உண்ணத் துவங்க, மன்னிப்புக் கேட்டுவிடுவோமா? மன்னிப்பாரா? பொது இடமென்றும் பாராது திட்டி அடித்துவிட்டால்…? வாங்கிக்கொள், தவறு செய்தாய் தானே? என மனதிற்குள் பட்டிமன்றமே நடந்திக்கொண்டு பதைபதைப்போடு அமர்ந்திருந்தாள் மீனா.

“ஏன்டி மீனா?” என்ற அன்னையின் குரலில் அவள் பதறி நிமிர, “சின்ன வயசுல நடந்ததை எல்லாம் எங்கிட்ட வந்து சொல்லுவ, தப்புப் பண்ணாலும் மறைக்காம உண்மையை சொல்லுவியே அது மாதிரி இப்பவும் சொல்ல வேண்டியதானே? அம்மா என்ன அடிக்கவா போறேன்?” என்றார்.

நடப்பது நிஜம் தானா? என நம்ப இயலாது அதிர்வில் அமர்ந்திருந்தாள் மீனா.

“எல்லாம் குமரன் தான் வந்து சொன்னான். நீயும் தான் இருக்கியே? தப்பு செஞ்சா அதை ஒத்துக்கவும் ஒரு தைரியம் வேணும்டி. தங்கமான புள்ளை, வேலுநாச்சி வளர்ப்புன்னு பெருமையா சொல்லிக்கும். நாங்களே தேடுனாலும் இப்படியொரு பையன் அமைய மாட்டான். என்ன, அவன் அளவுக்கு வசதியாப் பார்த்திருப்பேன், ஆனால் அவன் அளவுக்கு உன் மேல பாசம் வைக்க எவனும் கிடைக்க மாட்டான். சந்தோஷமா வாழுங்க இரண்டு பேரும்.. அது போதும்..” என்றவர் மனம் நிறைந்து வாழ்ந்த, நெஞ்சுருகிப் போனாள் மீனா.

வார்த்தையே வரவில்லை. சந்தோஷத்தில் எழுந்து வந்து அன்னையைக் கட்டிக்கொள்ள, முதுகை வருடி, தலையைத் தடவிக் கொடுத்தார் வள்ளி.

இவ்வளவு இதமான அணுகுமுறையை அன்னையிடம் மீனா எதிர்பார்க்கவே இல்லை. செய்த தவறும் குற்றவுணர்வும் கூடக் காணமல் போனது.

மீனாவை விலக்கியவர், “ஒரு நாள் குமரனோட வீட்டுக்கு வா மீனா.. உங்க அப்பாவும் உங்களைப் பார்த்தா சந்தோஷப்பாடுவாரு.. என்னவோ எனக்காகத்தான் விலகி இருக்கிற மாதிரி சரியான நடிப்பு” என்றழைத்தவர், கணவரையும் சடைத்துக்கொண்டார். 

சரியென மீனா தலையாட்ட, நிறைந்த மனதோடு விடைபெற்றுக் கிளம்பினார் வள்ளி.

அம்மா தன்னை மன்னித்து விட்டார், தன்னோடு பேசிவிட்டார் என்ற சந்தோஷத்தை குமரனிடம் பகிர்ந்து கொள்ள அவள் மனம் பரபரத்தது.

அத்தனைக்கும் காரணம் அவன் தானே என நினைக்கும் போது அவன் மீதான நேசம் மேலும் மேலும் அதிகரித்தது.

அவன் கொட்டும் அன்பிற்கு முன் அவள் காட்டும் அன்பு ரொம்ப ரொம்ப குறைவு தான்.

ஆனால் குமரனை மட்டும் திருமணம் செய்யக்கூடாது என்ற உறுதியிலிருந்தவளை அவனை தவிர யாரையும் ஏற்க இயலாது என்னும் நிலைக்கு மாறியிருந்தது மீனாவின் மனம்.

அவளுக்கே வியப்புதான், அவ்வளவு மாற்றத்தையும் ஏற்படுத்தியது அவனின் அளவில்லாத காதல்! எந்தவித எதிர்பார்ப்புமில்லாத தூய அன்பு எவ்வளவு உயர்வானது என்பதை உணர்ந்திருந்தாள்.

தன்னை அழைத்து வந்த நாளிலிருந்து ஒவ்வொன்றையும் தனக்காகப் பார்த்து பார்த்துச் செய்கிறானே? தந்தையோ, அப்பத்தாவோ எதுவும் குறைவாகப் பேச விடாது, அவர்களும் தன்னை ஏற்குமாறு செய்தானே?

தனக்காக தான் அன்னையிடம் பேசியிருப்பான். குமரன் வழியச் சென்று பேச முயலும் போதெல்லாம் வள்ளி ஜாடை மாடையாகத் திட்டிவிட்டுச் செல்வதை பொறுத்துக் கொண்டதும் தனக்காகத் தான் என்பதும் அறிவாள் மீனா.

இப்போதிருக்கும் சந்தோஷத்தில் குமரன் எதிரே இருந்தால் இறுக்கி அணைத்து ஆயிரம் முத்தம் பதித்திருப்பாள். இல்லாது அத்தனை ஆசைகளையும் அடக்கிக்கொண்டு நாளை காலையில் வருபவனுக்காகக் காத்திருந்தாள்.

இரவு உணவிற்குப் பின் படுத்தவள் அசதியில் உறங்கிவிட்டாள்.

அதிகாலையில் பாதி உறக்கத்தில் புரண்டு படுக்கும் போது தான் அருகே படுத்திருக்கும் குமரனைக் கவனித்தாள்.

‘இவன் எப்போது வந்தான்? இரவே வந்துவிட்டானா?’ என்ற யோசனை மூளையில் ஓட, அனிச்சை செயலாக நகர்ந்து வந்து அணைத்துக் கொண்டவள் சுகமாக நெஞ்சில் முகம் புதையப் படுத்துவிட்டாள்.

அந்த இதமான அழுத்தத்திலும் அணைப்பிலும் சற்று உறக்கம் கலைந்த குமரன். ஆராய்ச்சியாக அவளைப் பார்த்தான்.

இது வரையிலும் உடலோ மனமோ சரியில்லை என்றால் தான் அவளாக வந்து அடைக்கலாமாய் அவனை ஒட்டிக்கொள்வது.

அந்த யோசனையிலே அவன் மூச்சடைக்க கேள்வியாகப் பார்க்க, அதை உணர்ந்தவள் நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள்.

அந்த விடிவிளக்கின் மெல்லிய மின்சார ஒளியில் அவன் கண்களை ஆழ்ந்து பார்த்தவளுக்கு அதில் மின்னும் காதலை பொய்யென்று யாராலும் சொல்லிவிட முடியாது. அந்த அன்பு தனக்கே தனக்கு மட்டுமானது என்பதில் பெருமிதம். நினைக்கும்போது ஏதோ பாக்கியம் பெற்றவள் நான் என்ற எண்ணம்.

அவன் பார்வையின் கேள்வி புரிந்தவள், “ஒன்னுமில்லை. நல்லா தான் இருக்கேன்” என்றவிட்டு மீண்டும் அவன் மார்பில் புதையப் போனாள்.

சட்டென நான்கு விரலால் அவள் தாடையை நிமிர்த்தி, தன் முகம் காணச் செய்தவன், “உனக்கு என்னைப் பிடிக்குமா அழகு?” என்றான்.

எத்தனையோ நாட்களாக கேட்கத் துடித்த கேள்வி, அவள் இல்லை என்றால் தாங்க இயலாதே என்ற யோசனையிலே கேட்காது உள்ளுக்குள்ளே போட்டு உழன்று கொண்டிருந்தான்.

இன்றோ எதையும் யோசிக்காது சட்டென அவனையும் மீறி அந்தக் கேள்வி வந்திருந்தது.

மீனாவோ பதிலின்றி அவன் கையை விலக்கிவிட்டு அவன் மீதே ஏறிப்படுத்து அணைத்துக்கொண்டாள்.

அவள் கொஞ்சும் மொழியே அவளின் விருப்பம் சொல்லியது, ஆனாலும் குமரனுக்கு அது போதவில்லை. மீனாவின் வாய் வார்த்தையாகக் கேட்டால் தான் திருப்தி என்ற நிலையில் இருந்தவன், பதில் வேண்டி இடையை அழுத்தமாக இறுக்கினான்.

மேலும் ஊர்ந்து முன்னேறியவள் தன் கைகொண்டு அவன் கண்களை மூடிவிட்டு நொடியில் அவன் இதழில் தன் இதழைப் பதித்திருந்தாள்.

பதித்தது மட்டும் தான் அவள் அதைச் சிறை செய்ததும் அழுத்த முத்தமிட்டதும் குமரனே.

பேசினாலே அது என்னவோ இறுதியில் வாக்கு வாதத்தில் தான் முடிகிறது, பேச வேண்டாமென நினைத்தாலும் அவனோ கேள்வி கேட்டு துருவுகிறான்.

அவளுக்கும் அவள் சந்தோஷத்தைப் பகிரும் பரபரப்பு இருந்தது.

கேள்வி கேட்டவனோ பதில் வேண்டுமென்பதையே மறந்து மயங்கிப் போனான். அவள் ஒரு முத்தம் மொத்தமாக அவனை சிந்ததனை இழக்கச் செய்யது.  

மூச்சுமுட்டத் திணறியவள் அவனை அழுத்தும் போதே, மெல்ல இதழ் பிரித்தவன், மீண்டும் கன்னங்களில் இதழ் பதித்துக் கொண்டான். கைகளோ அவள் உடையைத் தளர்த்தும்திருட்டுத்தனங்களைத் தொடங்கியிருந்தது. 

கன்னத்தோடு போட்டியிட்டுட்டு மேனியே சிவக்க, சட்டென அவன் கைகளைப் பற்றித் தடுத்தாள்.

அதிலே ஆசைகள் அணைய, முகம் சுருங்க, “ஏன் பிடிக்கலையா? என்னைப் பிடிக்கலையா?” என்றான் வேதனையாக. 

அவன் குரலிலிருந்த வேதனை அவளையும் சுட தங்காது, அவனுள்ளே புதைவது போல் மேலும் இறுக்கி அணைத்தாள்.

Advertisement