Advertisement

அத்தியாயம் 17

ஊரில் பஞ்சாயத்து நடைபெற்றுக் கொண்டிருந்த அதே நேரம். சுறுசுறுப்பான காலை நேரம், மதுரை அரசு மருத்துவமனை இன்னும் பரபரப்பாக இருக்க, அனைவரையும் ஒரு நொடி அதிரச் செய்தது, கூக்குரலாய் ஒரு பெண்ணின் வலி நிறைந்த அழுகுரல்.

அது நந்தினியின் கதறல், பார்த்திருந்த அனைவரையும் கலங்கச் செய்தது.

மருது அசோக்கை அழைத்து வந்து மருத்துவமனையில் சேர்க்க, காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்துவிட்டு, பரிசோதித்த மருத்துவர் உயிரியில்லை என கைவிரித்தார்.

மருது தான் ஊருக்குத் தகவல் சொல்லி அசோக்கின் குடும்பத்தை வர வைத்தான். அன்று மருத்துவமனையில் அவர்கள் கதறியது அவனையும் உலுக்கியிருந்தது. அங்குதான் சுரேஷை சிகிச்சைக்கு அனுமதித்திருந்த சோலை, விஷயம் அறிந்து ஓடோடி வந்தான்.

மருத்துவமனையின் அனைத்து நடைமுறைகளும் முடிந்து உடல் ஊருக்குக்கொண்டு வரப்பட்டு இறுதிச் சடங்குகள் அனைத்தும் முடிய, ஆன இரண்டு நாட்களும் குமரன், மருது, சோலை என மூவரும் ஆகாரமின்றி முழுதாய் அசோக்கின் வீட்டில் தான் கிடந்தனர்.

வந்தவர்கள் எல்லாம் அசோக்கின் நிலைக்கு அழுததை விட, நந்தினியை எண்ணி ஒப்பாரி வைத்தது தான் அதிகம். உடலிருந்தும் உயிரில்லை என்பது போல் தன்னிலையே மறந்துதான் கிடந்தாள் நந்தினி.

அழுதழுது கரைந்ததில் கண்ணீர் வற்றி, வாடிப் போனாள்.என்ன வாழ்க்கை வாழ்ந்து விட்டாள்?திருமணம் முடிந்த மூன்று மாதம், வயிற்றிலோ இரண்டு மாத சிசு!

இப்படி பாதியில் விட்டுச் சென்றானே மகராசன் அத்தனை பேரின் அழுகையும் இதைச் சுற்றித் தான் இருந்தது.

பதினாறாம் நாள் காரியத்திற்கு வந்திருந்த அவள் பெற்றோரும் அண்ணன்களும் அனைத்தும் முடிய, அவளை வீட்டிற்கு அழைத்தனர்.

வயிற்றிலிருக்கும் கருவையும் அழித்து விட்டு கொடுத்த சீரை வாங்கிக்கொண்டு அவளை அழைத்துச் செல்வதாக உரைத்தனர்.

மறுமணம் செய்து வைக்க விரும்பியவர்களின் எண்ணம் புரிய, அசோக்கின் பொற்றோரும் அனுப்பி வைக்கத் தயாராக இருந்தனர்.

அவர்கள் வாரிசு தான், அது அவர்களுக்கு முக்கியமும் தான். ஆனால் பெற்ற பிள்ளையே சென்றுவிட்ட பிறகு, வாழ வேண்டிய பெண்ணின் வாழக்கையை கெடுப்பதா? என்ற வேதனை.

ஏதோ நந்தினிக்கு ஒரு நல்லது நடந்தால் போதுமென்பதே அவர்கள் மனநிலையாக இருக்க, அசோக்கின் சொந்தத்தில் ஒரு பங்கைக் கூடத் தரத் தயாராக இருந்தனர்.

அவள் வாழ்க்கைக்கான முடிவுகளை யார் யாரோ எடுக்கப் பார்த்திருந்த நந்தினிக்கு அழுகையும் ஆத்திரம் வெடித்துக்கொண்டு வந்தது. மூன்று மாதம் மட்டுமே அவனுடம் வாழ்ந்தாலும் எப்படி வாழ்ந்தாள் என்பதும் எவ்வளவு நேசம் வைத்திருந்தனர் என்பதும் அவர்களுக்கு மட்டும் தானே தெரியும்?

அனைவரும் பேசி முடிய, இறுதியாக நலிந்த குரலில் பிடிவாதமாகச் செல்ல மறுத்தாள் நந்தினி.

தனக்குத் தன் பிள்ளை வேண்டும், அது பிறக்கும் வரை இங்கு தான் இருப்பேனென உறுதியாகச் சொல்லிவிட, அவள் பிறந்த வீட்டினர் சண்டையிட்டு, கோபித்துக் கொண்டு சென்றுவிட்டனர்.

அசோக்கின் பெற்றோர்களுக்கு ஒருபுறம் ஆறுதலாகவும் மறுபுறம் பரிதாபமாகவும் இருந்தது. அன்றிலிருந்து அவர்கள் மருமகளை மேலும் பாசத்தோடு கவனித்துக் கொள்கின்றனர்.

மேலும் உள்ளம் துடிக்க, கலங்கிக் கண்ணைத் துடைத்துக்கொண்டு உள்ளே வந்தவனை, “வாயா குமரா..” எனக் கமலம் வரவேற்றார்.

அசோக்கின் தந்தை வீட்டில் இல்லாதிருக்க, பிறந்தநாளென மனைவியோடு சேர்ந்து கமலத்தின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினான்.

“நல்லாயிருப்பய்யா.. நல்லாயிருப்ப..” என்றபடி கன்னம், தோள்பட்டையென தொட்டுத்தடவ, ஆறுதலாய் அணைத்துக் கொண்டான் குமரன்.

தன் தோளுக்கும் மேலாகத் தன் முன்பே, திடகாத்திரமான செழுமையாய் வளர்ந்து நிற்கும் குமரனைப் பார்க்க, நெஞ்சோரம் ஏக்கமாய் இருந்தது.

குமரனுக்கும் அது அவ்வளவு வேதனை!

அசோக்கில்லாது என்னவோ தன்னிலே பாதியைத் தொலைந்தது போன்றிருந்தது குமரனுக்கு.

இன்னுமே அவன் இழப்பிலிருந்து வெளியே வர முடியாது தவிப்பவன் சுற்றி இருப்பவர்களுக்காக வெளிகாட்டிக் கொள்ளாது இருக்கிறான். ஆயிரம் நண்பர்கள் இருந்தாலும் அசோக்கின் இடத்தை யாராலும் குமரனிடம் நிரப்ப முடியாது.

“பிறந்தநாள் அதுவுமா அண்ணனை அழ வைக்கலாமா அத்தை?” என்ற மென்குரலில் கேட்டபடி அருகே வந்தாள் நந்தினி.

அவளிடமிருந்து தட்டை வாங்கிய மீனா, “நீங்க ஏன் இந்த வேலையெல்லாம் செய்றீங்க அண்ணி?” என்றபடி அவளை அமர வைத்தாள்.

சிறிது நேரத்திற்கு அமர்ந்து ஆறுதலாய் பேசினர் இருவரும்.

“இதோ வருகிறேன்..” என மீனா எழுந்து மாடிக்குச் சென்றாள்.

இன்னும் சில நாட்களில் நந்தினிக்குப் பிரசவதேதி வரவிருக்க, எந்த நேரமென்றாலும் கூப்பிட வேண்டினான் குமரன்.

மீனாவை அழைத்தும் அவள் வராதிருக்க, அவனும் மாடியேறினான். அவன் நிற்கும் அதே இடத்தில் நின்று அவள் வீட்டைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

“ஓய்..” என்ற குரலோடு அவளின் தோளில் கைபோட்டு நின்றான் குமரன்.

மீனாவின் பார்வை அவள் மாட்டுத் தொழுவத்தில் இருக்க, வள்ளி தொழுவத்தைச் சுத்தம் செய்து கொண்டிருந்தார்.

அழகு மீனாவிற்கு வெளியே சொல்ல முடியாது நெஞ்சை அரித்து, வேதனையுறச் செய்வது இரண்டு விஷயம் தான். ஒன்று நந்தினியின் எதிர்காலம், மற்றொன்று வள்ளியின் கோபம்.

அவள் சொல்லாவிட்டாலும் அதை நன்கு அறிந்திருந்தான் குமரன்.

எங்க லட்சுமிக்கும் இது நிறை மாசம்..” என்றாள், ஒரு பழுப்புநிற மாட்டின் மீது பார்வை பதித்தபடி, ஆசையாக.

“ஹோ..” என்ற மென்குரலோடு நெருங்கி நின்றவன், “அத்தை.. மாமியாரே..” என வள்ளியை அழைத்தான்.

ஏதோ குரல் கேட்க, சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு நிமிர்ந்து மேலே பார்த்தார் வள்ளி.

அவரை நோக்கி குமரன் கையசைக்க, இருவரும் ஜோடியாக நிற்பதைக் காண இயலாது வெட்டிக்கொண்டு முகம் திருப்பினார்.

“இங்கிருந்து இப்படி லுக்கு விட்டுத்தான் உங்க மகளை லவ் பண்ணேன்..” என்றவன் கை காட்ட, “எம்புட்டுச் சொல்லு உனக்கு வெக்கம், மானமே கிடையாது.. சொரணைக் கெட்ட மாடு. உரசிக்கிட்டு உறவென்ன வேண்டி கிடக்குத் தள்ளிப் போ..” என ஜாடையாக மாட்டைத் திட்டியவர், கூடையைத் தூக்கிக்கொண்டு சென்றுவிட்டார்.

ஏழு மாதங்களாக அவரும் பார்க்கிறார் வழிய வந்து வம்பு பேசுவதும் உறவு கொண்டாடுவதுமாக இருக்கிறான். அதுவும் வள்ளியிடம் மட்டும் தான் ராமநாதன் எல்லாம் எப்போதோ ராசியாகிவிட்டார்.

அன்று திடீரென தாலியை கட்டி அழைத்துச் சென்றுவிட, இரண்டு மாதங்கள் கழித்து வெகு விமர்சையாக வரவேற்பு விழா ஏற்பாடு செய்திருந்தார் சுந்தரமூர்த்தி.

அதிலும் மணமகளின் பெற்றோர் என இவர்களது பெயரை அச்சிட்டு முதல் பத்திரிக்கையும் வைத்து அழைத்திருந்தார் சுந்தரமூர்த்தி.

மகன் மீதுள்ள பாசத்தில் அவன் விருப்பத்திற்கும் மகிழ்ச்சிக்காகவும் சுந்தரமூர்த்தி செய்ய, ராமநாதனும் மகள் மீதான பாசத்தில் இறங்கி வந்தார்.

ஊரையே கூட்டி வெகுக் கொண்டாட்டமும் கோலாகலமுமாக விழா நடக்க, ராமநாதன் மட்டும் வந்து மருமகன், மகளை ஆசீர்வதித்து பரிசளித்திருந்தார்.

வள்ளி வரவில்லை என்றாலும் கணவர் செய்யும் போது, அவர் தடுக்கவில்லை.

அன்றிரவு அன்னையை நினைத்து மீனா அழுத அழுகை குமரனின் நெஞ்சைப் பிழிய, எப்படியும் அத்தையின் கோபத்தைக் குறைத்து மனைவியுடன் பேச வைத்து விட வேண்டுமென்று உறுதி கொண்டான்.

முன்பு மீனாவிடம் வழிய சென்று உறவாடியதைப் போல் தற்போது மாமியாரிடம் பேச முயற்சி செய்ய, அவரோ பிடி கொடுப்பதே இல்லை. சுருக்கென ஜாடை மாடையாகத் திட்டிவிட்டுச் சென்றிடுவார்.

வள்ளியால் என்ன முயன்றாலும் மகள் செய்த துரோகத்தை மன்னிக்க முடியவில்லை. எவ்வளவு நம்பினேன்? எவ்வளவு ஆசையோடு இருந்தேன். இப்படிச் செய்துவிட்டாளே பாவிமகள்!

அதுவும் எங்களை விட அவன் தான் முக்கியம், நாங்கள் தேவையில்லை என்று தானே சென்றாள், போகட்டும், இப்போது மட்டும் என்ன உறவு வேண்டியிருக்கு? என்ற வீம்பு வீராப்பில் தான் அவர்களை ஏற்காது விலக்கி வைத்தார் வள்ளி.

அவன் கையை விலக்கிவிட்டுச் சிரிப்போடு திருப்பிய மீனா, “இது தேவையா?” என்றபடி முன்னே நடந்தாள்.

“என் மாமியாரைத் தவிர, யாருக்கு இந்த உரிமையை இருக்கு..?” என உறவாடினான்.

“சரிதான், பூரா பொய்யா சொல்லிட்டுத் திரி..” என்றவள் உதட்டைச் சிலுப்பிக்கொள்ள, “பொய்யா? எது பொய்?” என்றான் குரல் எகிற.

“இங்கிருந்து என்னை லவ் பண்ணேன்னு சொன்னது?” என்றவள் இடுப்பில் கை வைத்து முறைப்பகாக் கேட்க, இழுத்து அணைத்தவன், “நிசம் தான்டி.. எத்தனையோ நாள் இங்கிருந்து உன்னைக் காலங்காத்தால பார்த்திக்கிறேன் தெரியுமா? எப்பவுமே புக்கும் கையுமா தான் இருப்ப.. சரியான படிப்ஸ்டி.. உனக்குத் தேன்மிட்டாய் பிடிக்குங்கிறதும் இப்படித் தான் தெரிஞ்சிக்கிட்டேன்..” என கண்ணடித்துக் கொஞ்சினான்.

நம்ப இயலாது விழி விரிய, அதிர்ந்து நிற்பவளின் கன்னங்களில் பட்டென இரு முத்தத்தைப் பதிக்க, அதில் சுயநினைவு பெற்றவள், “யாராவது பார்க்கப் போறாங்க..” என்றபடி அவனை விலக்கி விட்டு நின்றாள்.

“யாரு பார்ப்பா? என் மாமியாரைத் தவிர..” என்றவன் கலகலச் சிரிப்போடு முன்னே சென்றான்.

நாளுக்கு நாள் அவன் காதல் புதிது புதிதாகத் தோன்ற, இன்ப மழையில் சுகமாக நனைந்தாள் மீனா.

விடைபெற்று கிளம்பியவர்கள் நேராகச் சென்று மதுரை மீனாட்சி அம்மனை வணங்கினர். பின் அவளை மருத்துவமனையில் விட்டுவிட்டு, தந்தையை காணச் சென்றான்.

அழகு மீனாள் மதுரையில் பிரபலமான தனியார் மருத்துவமனையில் கண் மருத்துவராக பணிபுரிகிறாள்.

திருமணமான புதிதிலே மேற்படிப்பு வேண்டுமென்றால் படிக்குமாறு குமரன் உரைத்தான், சுந்தரமூர்த்தியோ தனியாக கிளிங் வைத்துத் தருவதாக உரைத்தார்.

ஆனால் மறுத்த மீனாவோ வேலையில் அனுபவம் வேண்டும், சில வருடம் வேலைக்குச் செல்கிறேன் என முடிவு செய்தாள். ஆகையால் தற்போது நிர்வாக மேலாண்மை படித்துக்கொண்டு பிரபலாமான மருத்துவமனையில் வேலையும் பார்த்துக்கொண்டிருக்கிறாள். 

குமரனின் வீட்டில் அனைவருமாக அமர்ந்து இரவு உணவு உண்டு கொண்டிருக்க, மீனா அனைவருக்கும் பரிமாறினாள்.

இறுதியாக என்றால் ஜெயராணி இருக்கும்போது தான் இதுபோலே உண்டது, தற்போது மீனா அறிந்தோ அறியாமலோ அவர் இடத்தை நிரப்புகிறாள் எனப் புரிந்தது சுந்தரமூர்த்திக்கு.

வந்த புதிதில் குமரன் செயலுக்கு அவன் சார்ப்பாக மன்னிப்புக் கேட்டவள், “என் மேல எதுவும் கோபமில்லையே மாமா?” எனக் கேட்டிருந்தாள்.

“இல்லம்மா எனக்கு நடந்தது எல்லாம் தெரியும். அதுக்கும் முன்ன என் மகன் ஆசையும் தெரியும்” என்றார் ஒரே வார்த்தையாக.

மனதுக்கு பிடித்த துணையோடு வாழ்க்கையை ரசித்து வாழ்வதில் இருக்கும் சந்தோஷமும் அவர் இல்லாத வெறுமையும் வலியுமென இரண்டையும் உணர்ந்தவர் சுந்தரமூர்த்தி.

அந்த வலியை மகனுக்குத் தர விருப்பமில்லாதவர், குடும்ப வாழ்க்கையின் சந்தோஷத்தை மகன் விருப்பம் போலே அனுப்பவிக்கட்டுமே! வாழ வேண்டியவர்கள் வாழட்டும் என நினைத்தார்.

பொதுவாக குமரனின் நியாயமான ஆசைகளை சுந்தரமூர்த்தி மறுப்பதேயில்லை.

மீனா இன்னும் தெளியாது பார்க்க, “இல்லம்மா, உன் மேல ஏன் கோபப்படப் போறேன்? அதுவும் என் ஜெயராணிக்கும் குமரனுக்கும் பிடிச்ச புள்ளை எனக்குப் பிடிக்காம போகுமா? வருத்தமெல்லாம் உங்க அம்மா மேல தான். அதுவும் எங்காலத்துக்குப் பின்ன அவனுக்கு நாலு சொந்தப் பந்தம் வேணும்னு நினைக்கும் போது அந்த வருத்தமும் இல்லை” என்றவர் அவள் மனதை குளிர்வித்துச் சென்றிருந்தார்.

அவர் முதல் பேருந்து ஓடாததில் தொழில் இப்போது சிறிது சரிந்து தடுமாறிக் கொண்டிருந்தது.

தொழில் நன்றாகப் போகும்போது எப்படி வள்ளியின் கை ராசி என ஏற்றுக்கொள்ள முடியவில்லையோ அது போலே சறுக்கும்போது மட்டும் மீனா வந்த ராசியென எப்படிச் சொல்வது?

அவருக்கு இயன்ற வரை அந்தப் பேருந்தை விரைவில் சரி செய்து இயக்க வேண்டும், அதுதான் இப்போதைய குறிக்கோள்.

தொழிலில் நஷ்டம் வருகையிலே சுதாரித்த வேலுநாச்சி கோடாங்கி கருப்பை பார்க்கச் சென்றான்.

அவரோ, “மீனா தான் வீட்டிற்கு வந்திருக்கும் அதிர்ஷ்டலட்சுமி.. அவளால் செல்வமும் சுபிக்ஷமும் மட்டுமின்றி வேலுநாச்சியின் ஆயுசே கூடும்” என்றிட, திருப்தியாக வீடு வந்தார்.

இதை முன்பே யூகித்திருந்த குமரன், சோலை, மருதுவின் யோசனைப் படி கோடாங்கி கருப்பை கொஞ்சம் கவனித்து வைத்திருந்தான். 

வயிறோடு மனமும் நிறைந்து போக, “சாப்பாடு ரொம்ப அருமையா இருந்ததும்மா..!” என்றார் சுந்தரமூர்த்தி மருமகளிடம் பாராட்டுதலாக.

நேரடியாகக் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது அவ்வாறு சொல்ல, “ம்க்கும்.. என்னத்தை? காலையில கேசரி கிண்டுனாளே.. இனிப்பே இல்லாத ஒரு கேசரி..! உப்புச்சப்பில்லாத உப்புமா மாதிரி..” என குறை கூறினார் வேலுநாச்சி.

ஓர விழியால் முறைப்போடு ஒரு பார்வை பார்த்த மீனா, ஒன்றுமே பேசவில்லை.

“ஏம்மா? கேசரியில இனிப்பில்லைன்னு உனக்கு எப்படித் தெரியும்?” என சுந்தரமூர்த்தி குறுக்கு விசாரணைக்கு வர, “அப்பத்தா.. திருடித்தின்னியா? உனக்குத் தான் சுகர் இருக்கே.. நீ இனிப்பே திங்கக்கூடாதுன்னு டாக்டர் சொல்லியிருக்காங்கல்ல?” எனக் குமரன் அதட்டினான்.

“இப்போ சொல்பேச்சுக் கேட்கலைன்னா, பின்ன நீ தானே அவதிப்படணும்?” என சுந்தரமூர்த்தி சடைத்துக்கொள்ள, மாறி மாறிக் கேள்வி கேட்டதில் வேலுநாச்சி மாட்டிக்கொண்டு திருட்டு முழி முழித்தார். அழகு மீனாளுக்கோ கடை இதழோரம் அடக்கப்பட்ட நமட்டுச் சிரிப்புத்தான்.

“ம்ச்..ஆச்சி பாவம் திட்டாதீங்க மாமா.. இப்போ என்ன பத்து நாளு பாவக்காய் ஜூஸ் குடிச்சா சரியாப் போகுது..” என மீனா மருத்துவம் போலே உரைக்க, “ம்ம்.. அதையே செய்ம்மா..” என்றார் சுந்தரமூர்த்தி முடிவாக.

பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு, “ஐயா.. ராசா.. நான் வயசானவையா..” என்றவர் கெஞ்ச, “உன் நல்லத்துக்கு தானே சொல்லுறாங்க.. மீனா டாக்டர்ல அவ பேச்சை கேளு அப்பத்தா..” என்றான் குமரன்.

‘அடேய்..! கண் டாக்டருக்கும் சுகர் பெசண்ட்டுக்கும் என்னடா சம்பந்தம்? அநியாயத்துக்கு இரண்டு பேரும் அவளுக்கு ஜால்ரா அடிக்கிறீங்கடா..’ என மனதில் குமைந்தவர் ‘எல்லாம் என்னால, என்னோட இந்த வாயால.. கொஞ்சங்கூட கன்ரோலே இல்லை..’ என இறுதியில் தன்னையே நொந்து கொண்டார்.

அனைவரும் சென்றுவிட, ஒரு வெற்றிச்சிரிப்பு சிரித்த மீனா, வேலுநாச்சியிடம் குனிந்து அழகு காட்டிவிட்டு, அவர் கையோங்கும் முன் ஓடி விட்டாள்.

மீனா வந்ததிற்குப் பிறகுதான் அந்த வீட்டில் கலகலப்பும் சந்தோஷமும் கூடியிருப்பதை உணர்ந்திருந்தார் வேலுநாச்சி.

கோடாங்கிக் கருப்பு சொல்லியது சரி தான் என நினைத்தார்.

மீனாவை வீட்டில் வந்து விட்ட, நாளிலே வேலுநாச்சியிடம் தனியாக அனைத்தையும் சொல்லியிருந்தான் குமரன். அதுவும் போக, அழகு மீனாள் தான் அவனின் உயிர் என்றிட, அவளை ஏற்பதைத் தவிர வேறு வழியில்லை வேலுநாச்சிக்கு.

முன்பே அவளை வீட்டு மருமகளாக்கும் ஆசை அவருக்கு இருந்ததுதானே? குடும்பத்துக்கு வாரிசு தருவாளென எதிர்பார்ப்பும் ஆசையும் இப்போது அவள் மீது.

Advertisement