Advertisement

அத்தியாயம் 16

புலரி நேரத்தில் புதுப்பூவாய் அடர் லாவண்டர் வண்ணப்  புடவையில் குளியலறையிலிருந்து வெளியே வந்தாள் அழகு மீனாள்.

தலையைத் துவட்டியபடி கண்ணாடி முன் வந்து நின்றவள் மெல்லியதாய் மின்னி மறையும் அலைபேசித் திரையை ஓரப்பார்வையில் ஒருமுறைப் பார்த்துவிட்டு மீண்டும் கண்ணாடியில் முகம் பார்த்தாள்.

நெற்றியில் துளி குங்குமத்தை தொட்டு ஓட்டினாள், கழுத்தில் ஒற்றைத் தடித்த தாலிக்கொடி கனத்துக்கிடக்க, நீர் சொட்டும் முடிகளோடு சேர்த்துத் துண்டை தலையில் சுருட்டி கொண்டையிட்டுக்கொண்டு கீழே சென்றாள்.

திருமணம் முடிந்த ஏழு மாதங்களாகியிருந்தது. அவளொன்றும் புதுப்பெண் இல்லை, ஆனாலும் பொலிவு குறையாது இருக்கிறாள்.

குமரனின் திடீர் செயலை மீனாவுமே எதிர்பார்க்கவில்லை. வீட்டில் விட்டுச் சென்றவன் அவளிடம் மீண்டும் வர இரு நாட்களானது. மயக்கமும் உறக்கமும் சோர்வுமாகக் கிடந்தவளுக்கு நடந்த அதிர்விலிருந்து வெளி வந்து நிகழ்ந்ததை புரிந்து கொள்ள, இரண்டு நாட்கள் தேவாகிப் போனது.

திடீர் நிகழ்வு தான், இரு குடும்பப் பிரச்சனை என்ற பின், தன் வீட்டிலிருந்து பேச வருவர், அவர்கள் ஏற்றுக்கொண்டால் இருப்போம் அழைத்தால் சென்று விடுவோம் என்ற முடிவில் எதிர்பார்த்திருந்த மீனாவிற்கு ஏமாற்றமே.

எப்படி வருவர்? அவள் காதல் திருமணம் செய்துள்ளாள் என நினைத்திருக்கும் பெற்றவர்கள்.

அந்த இரண்டு நாட்களும் வேலுநாச்சி தான் அக்கறையாகக் கவனித்துக் கொண்டிருந்தார்.

எந்த வார்த்தைகளும் அவர் குத்திக்காட்டிப் பேசாது போக, குமரன் சொல்லி வைத்திருப்பானோ என்ற சந்தேகம். ஆனாலும் அவர் குணம் கொஞ்சம் புரிபட, இத்தனை நாட்களாக அவரை வேட்டைக்காரியைப் போல் எண்ணிப்  பயந்திருந்தது எல்லாம் தன் மடத்தனம் எனத் தோன்றியது.

சமையலறை நோக்கிச் சென்றவள் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து இரண்டு கரண்டி நெய் ஊற்றி முந்திரியை வறுத்தாள்.

அதற்குள்ளாக வாசம் பிடித்துக்கொண்டே அவள் பின்னே வந்த நின்ற வேலுநாச்சி, “ஐயோ.. ஐயோ..” என்று கூவிவிட்டு, “அடியே.. இதென்ன உன் ஆத்தா வீட்டு நெய்யின்னு நினைச்சியா? கை ஒழுக அள்ளி ஊத்துறீயே..?” எனப் பதறினார்.

“இல்லை என் மாமியார் வீட்டு நெய் தான். அதுக்கு ஏன் இப்போ கூப்பாடு போறீங்க? நெய் ஊத்தாம ஸ்வீட் செய்ய முடியுமா?” எனப் பதறாமல் மீனா கேட்டதில், “ஸ்வீட்டா..” உள் நாக்கில் எஞ்சில் ஊற, ராகமிழுத்தார்.

மீனாவின் உதட்டோரம் குறுநகை மிளிர, “இருந்தாலும் இம்புட்டு ஊத்தாதடி.. எனக்குப் பிடிக்தாது..” என்னும் போதே, “நான் உங்களுக்காகச் செய்யலையே..” என்றாள் சட்டென.

“பின்ன?” வெடுக்கென வேலுநாச்சி கேட்க, “என் புருஷனுக்காகச் செய்றேன்..” என்றவள் சிலுப்பிக் கொள்ள, “ஆத்தாடி..” என முனங்கிய வேலுநாச்சி வாயடைத்துப் போனார்.

“சரி தான்டி, செய்.. செய்.. இனி எனக்கு என்ன வேலை?” என முகத்தை வெட்டிக்கொண்டவர் வரவேற்பறையில் சென்று அமர்ந்து கொண்டார்.

ரவையைக் கொட்டுவதும் பாத்திரங்களை உருட்டுவதுமாகச் சத்தம் கேட்க, இறுதியில் கேசரி வாசமும் வந்தது. ஆசைதான் ஆனால் அவளிடம் சென்று கேட்க முடியாதே. சமையலறையை எட்டிப்பார்ப்பதும் வாசலைப் பார்ப்பதுமாக அமர்ந்து விட்டார்.

அழகு மீனா அடியெடுத்து வைத்த நாளிலிருந்து வேலுநாச்சியைச் சமையலறைப் பக்கமே வர விடுவதில்லை.

அவள் செய்வாள் இல்லை, வேலையாட்களை செய்ய வைப்பாள். இப்போதெல்லாம் பாதிக்குப் பதியாக அவர் வேலைகள் அனைத்துமே குறைந்திருந்தது, ஆனால் அதிகாரம் குறையவில்லை.

யாராவது ஏதாவது கேட்டு வந்தால், “இருங்க, ஆச்சிட்ட கேட்டுகிறேன்” என ஒருவார்த்தை கேட்டுவிட்டு தான் செய்வாள்.

சிறிது நேரத்திற்கெல்லாம் காக்கி உடையில் பணி முடித்து வந்தான் குமரன்.

அன்றை இரவின் பேரழிவிற்கு பின் சொப்பன சுந்தரி பேருந்து இன்னும் சரி செய்யப்படவில்லை. புதிய பேருந்து அந்த வழித்தடத்தில் ஓடிக்கொண்டிருக்க, அதில் நடத்துநராகப் பணியாற்றுகிறான்.

சுந்தரமூர்த்தி கூட அலுவலக வேலைகளைக் கவனிக்கும் படி சொல்லிய போதும் அலைந்து, திரிந்து அசதியுற வேலை பார்ப்பது தான் வேண்டுமென்று முடிவாக உரைத்திருந்தான்.

உள்ளே வந்தவன் முகத்தைத் தூக்கிக்கொண்டு அமர்ந்திருந்த வேலுநாச்சியின் அருகே பொத்தென்று அமர்ந்து அவர் தோளில் கைபோட்டு, “இன்னைக்கு என்ன புதுப் பஞ்சாயத்து?” என்றான் சிரிப்பை சிறைப்படுத்தி.

விசாரிப்பானே தவிர, பஞ்சாயத்து செய்யவோ, தீர்ப்பு சொல்லவோ மாட்டான். அவர்களும் அனுபதிப்பதில்லை.

பதிலுக்குப் பதிலகாக அவர்களே முட்டிக்கொள்வர், மாமியார் மருமகள் என்றிருந்தால் கூட இவ்வாறு இருந்திருக்க மாட்டார்கள் எனச் சில நேரம் தோன்றும். அத்தனை கலகலப்பும் வேடிக்கையுமாக இருக்கும் இருவரின் சேட்டைகளும்.

இந்த விஷயத்தில் தந்தையும் மகனும் எட்ட நின்று ரசிப்பதோடு சரி, இவர்கள் உறவுக்கும் இருவரும் வருவதில்லை.

“அது.. உன் பொண்டாட்டி..” என்றவர் ஆரம்பிக்கும் போதே, “குமரா இங்க வா..” எனச் சமையலறையிலிருந்து வெளியே வந்த மீனா, அறைநோக்கி நடந்தபடியே அவனையும் அழைத்திருந்தாள்.

வேண்டுமென்றே சொல்லவில்லை, பழக்க தோஷத்தில் வார்த்தை வந்துவிட, “இந்தாடி.. என் பேரன் என்ன நாய்குட்டியா? நீ வா, போன்னு சொன்னதும் உன் பின்னாடியே வர? உன் புருஷங்கிற மரியாதையில்லை?” என்றவர் குமரனை விடுத்து மீனாவிடம் தாவினார்.

வயதிற்கு மரியாதையை என்றாலும் சரி, கணவனுக்கு மரியாதை என்றும் சுள்ளென கோபமும் வேலுநாச்சியை சீண்டும் எண்ணமும் அவர, அவர்கள் பக்கம் வந்தாள் மீனா.

நின்று கொண்டிருந்த குமரனோடு நெருங்கி நின்றவள், “என் புருஷன் தானே? நான் வாடாம்பேன், கட்டிக்கோடாம்பேன் உங்களுக்கு என்ன வந்துச்சி? வேண்டான்னு சொல்லுவீங்களோ?” என்றபடி குமரனின் இடை சுற்றி கை போட்டபடி அணைத்தாள். 

குமரனுக்கு குறுகுறுப்போடு சுகமாக இருக்க, ஆழ்ந்து மூச்சிழுத்தான். ஒரு சுக மணம் அவனுள் நுழைந்து நிறைத்தது, இறக்கை இல்லாமல் பறந்து கொண்டிருந்தான். ஏனெனில் திருமணம் முடிந்த இந்த ஏழு மாதத்தில் மனைவியின் முதல் அணைப்பு.

இது மட்டும் அவர்கள் அறையாக இருந்திருந்தால் அவன் ஆட்டமே வேறாக இருந்திருக்கும். வரவேற்பறை என்பதால் அனுபவித்து ரசித்தவன் அப்பாவியான முகத்தோடு நின்றான்.

திறந்த வாய் மூடாது வேலுநாச்சி வியப்பாகப் பார்க்க, “ம்கூம்..” என சில்லுபலோடு விலகிய மீனா முன்னே சென்றாள்.

நிகழ்ந்தவை எல்லாம் பெரிய நிகழ்வுகள் தான். ஆனால் வாழ்வின் போக்கில் எளிமையாக ஏற்றுக்கொண்டு வாழும் பக்குவத்தை வளர்த்திருந்தாள்.

“அப்பத்தா..” என்ற கூவலோடு துள்ளி வந்த குமரன், நொடி அவர் கழுத்தைக் கட்டிக்கொண்டு கன்னத்தில் ஒரு முத்தம் பதித்துவிட்டு, சந்தோஷமாக அறைநோக்கி ஓடினான்.

“சரியான ராங்கிக்காரி” என மீனாவைக் குறிப்பிட்டு முனங்கியவரின் முகமே இளகிச் சிவக்க, சந்தோசத்தில் நிறைந்த புன்னகையும் பூத்தது.

மீனாவின் நிழலையே தழுவியபடி அறைக்குள் வந்தான் குமரன்.

உடை அலமாரிக்கும் அவளுக்குமிடையில் இருந்த சிறு இடைவெளியில் நுழைந்து நின்றவன், சட்டென அவளை இழுத்து நெஞ்சோடு அணைத்தபடி, “இதுக்கு பெயர் தான் கட்டிக்கிடுறது, அதுக்கு பெயர் ஒட்டிகிடுறது? உனக்குத் தான் சொல்லிக்கொடுத்திருக்கேனே அழகு?” என்றான் சல்லாபக் குரலில்.

அவனின் திடீர் செயலில் ஒரு நொடி அதிர்ந்தளுக்குக் கன்னக் கதுப்புகள் சூடேற, முகமும் குப்பென சிவந்து போனது.

அவளே மறைக்க நினைத்தாலும் முகம் காட்டிக்கொடுத்து விடுமே? படபடவென அடித்த இதயத்தின் நடுக்கத்தோடு விலகி நின்றாள்.

அவன் உரைத்த விளக்கத்தை விட அந்தக் குரலுக்கு அவளை மயக்கும் வீரியம் அதிகமிருந்தது.

இதற்கு முன்பு கூட எத்தனையோ முறை அணைத்திருக்கிறான் தான், அது ஆறுதலான அணைப்பு, இது புதிது என்னும் வித்தியாசம் மீனாவிற்கு நன்கு புரிந்தது.

ஒருமுறை விதியில் தன் பின்னாலே வந்தவன், இந்த ஒட்டுதலும் உறவும் போதுமா? எனக் கேட்டது இன்னும் நினைவிலிருந்தது.

“அதெல்லாம் நல்லாவே ஞாபகமிருக்கு. இந்தப் பாடமெடுக்கிற வேலையெல்லாம் இராத்திரிப் பாரு.. இப்போ நேரமாச்சு, சீக்கிரம் குளிச்சிட்டு வா..” என்றபடி அவன் முகம் பார்க்காது விலகி அலமாரிக்குள் தலையை விட்டுக்கொண்டவள், அவன் உடையை மட்டும் எடுத்து நீட்டினான்.

உடையோடு அவள் வெல்வட் கரங்களையும் பற்றிக்கொண்டவன், “இன்னைக்கு அழகா இருக்கடி அழகி..” என்றான் காதோரம் மெல்லிய குரலில். காதுமடல்களில் நுனியில் கூட ஒரு சிலிர்ப்பு ஓடியது.

மனதில் பட்டதையெல்லாம் பட்டென சொல்லிவிடுவான் குமரன். மனைவியை பாராட்டுவதிலோ கொஞ்சுவதிலோ கஞ்சத்தனமே இல்லை அவனிடம்.

அன்று,

முன்னிரவில் திட்டப்படி மதுரைக்கு வந்தான் குமரன். தங்கள் வழக்கறிஞரின் ஜூனியரை சந்தித்துக் காலையில் ஒரு பதிவுத் திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு வேண்டியவன் அதன்பின், அசோக்கிற்கு அழைத்துப் பேசினான்.

அவர்கள் அங்கே கிளம்பிவிட்டதைக் கேட்டறிந்து கொண்டான்.

அதன்பின், நன்கு பழக்கப்பட்ட நகை செய்யும் ஆசாரிடம் சென்று அந்த இருள் நீங்காத அதிகாலை நேரமே தங்கத்தாலியும் வாங்கினான்.

விதியின் விளையாட்டை யார் தான் அறிவர்?

வாங்கும் போது அவனிற்குத் தெரியாது அந்தத் தாலி அவனவளையே சேருமென்று.

அதை வாங்கிய பின்னிருந்து மனதில் ஏதோ ஒரு சஞ்சலம். சுறுசுறுக்கென்று குத்திக்கொண்டே இருப்பது போன்ற நெருடல்.

இன்னும் சற்று நேரத்தலில் அசோக்கோடு இருவரும் வந்துவிடுவர். இரண்டு மணி நேரத்தில் விடிந்துவிடும், முதல் முகூர்த்தத்தில் திருமணத்தை முடித்து விட்டு, அவர்கள் ஊர்க்காரர்கள் யாருக்கும் தெரியாது இரயிலில் ஏற்றிவிட வேண்டுமென்ற திட்டமெல்லாம் தெளிவாக இருந்தது.

இருந்தும் ஏதோ குடைச்சல்.

அவர்களே வரும் நேரம் ஊருக்குச் செல்வதா? என யோசித்தான்.

ஆனாலும் ஏதோ ஒரு உள் உணர்வு உந்த, பொறுக்கமுடியாமல் மீண்டும் அசோக்கிற்கு அழைத்தான். அழைப்புகள் ஏற்கப்படவில்லை.

அடுத்தாக, மருதுவிற்கு அழைத்தவன், அத்தனையும் சொல்லி விரைந்து அசோக்கைப் பின் தொடர்ந்து வரக் கேட்டான். ஏனோ அவனுக்கும் மனம் பதற, மீண்டும் ஊர் நோக்கிச் சென்றான்.

எல்லைக்கோயில் என்ற திட்டமெல்லாம் அவனுக்கும் தெரியுமென்பதால் நேராக அதை நோக்கியே சென்றான்.

அவன் நெருங்கும் போதே, உயர எழுந்து கொழுந்துவிட்டு எரியும் தீப் பிளம்புகள் கண்ணுக்குத் தெரிய பதறி ஓடி வந்தான்.

மரத்தில் மோதியபடி நின்றபடி சொப்பன சுந்தரியென பெயரிட்ட அவர்கள் பேருந்து பாதிக்கும் மேலாக எரிந்து முடிந்து அணையும் நிலையில் கனன்று கொண்டிருந்தது.

முதலில் விபத்தோ என்று நினைத்தே பதைபதைப்போடு அருகில் வந்தான்.

அசோக் சாலையில் கிடக்க, மருது அவனைத் தூக்க முயற்சி செய்து கொண்டிருக்க, சட்டென இறங்கி ஓடியவன் தூக்கித் தனது காரில் வைத்தான்.

வெட்டுக்காயங்களையும் வழியும் இரத்தத்தையும் பார்த்தவனுக்கு பெரும் அதிர்ச்சி, ஏதோ விபரீதம் என்பதும் புரிந்தது.

“டேய்.. மச்சான், அடக்கட்டை.. அசோக்கு.. அசோக்கு..” என்ற அழைப்பிற்கும் அசைவிற்கும் அவனிடம் எதிர்வினை இல்லை. ஏற்கனவே முயன்று பார்த்துக் கண்ணீரோடு நின்றிருக்கும் மருது.

“லேட் பண்ணக் கூடாது, ஹாஸ்பிட்டலுக்குக் கூட்டிட்டு போகணும்” என குமரனை விலகிவிட்டு, காரை இயக்கியிருந்தான்.

“நீ அவிங்களுக்கு என்னன்னு பாரு..” என்றபடி மருது பறந்துவிட, கண்ணீர் பொங்கி வழிய, இதயத்தையே பிடிங்கி எடுத்தது போன்று வலித்தது.

பெரிய காரியத்தை அசால்ட்டாக நினைத்து விட்டோமோ? சரியாகத் திட்டமிடவில்லையோ என நினைக்க குற்றவுணர்வு கூறுபோட்டது போன்ற வலியைக் கொடுத்தது குமரனுக்கு.

எரிந்த பேருந்திற்குள் ஏறி முழுவதும் தேடினான். எங்கும் சுரேஷைக் காணவில்லை.

‘ஐயோ! ஆசையா ஆசையாய் அலங்கரித்து தூசி படாது பார்த்துக்கொண்ட சுந்தரி சாம்பலானதே! இதைத் தந்தை எப்படித் தாங்குவார்?’ விம்மினான்.

துடைக்கத் துடைக்க கண்ணீரும் பொங்கி வந்து காட்சியை மறைத்தது.

இறங்கியவன் சுற்று முற்றும் மூச்சிரைக்கத் தேட, கோயிலுக்குச் சற்று தூரத்தில் கிடந்த மீனாவின் ஸ்கூட்டியைக் கண்டுகொண்டான்.

அழகு மீனா.. அழகு.. அழகு இங்கு வந்தாளா? ஏன்? ஐயோ! சுரேஷோடு வந்தாளா? அப்படியெனில் சுரேஷின் காதலியா? சந்தேகம் தோன்றியது.

அடுத்தடுத்து எத்தனை அதிர்ச்சிகளையும் உணர்ச்சிகளையும் தாங்குவான்? இந்த இதயம் தான் வெடித்து விட்டாளும் இந்த அளவிற்கு வலியில்லையே? வெம்பினான்.

இருக்காது, என் அழகு அப்படியெல்லாம் செய்பவள் இல்லையே! இல்லை ஏதோ தவறு இருக்கிறது. சொல்லாவிட்டாலும் என் அழகு மீனாவிற்கு என்னைத் தான் பிடிக்கும். என்னை மட்டும் தானே பிடிக்கும் என்றே சொல்லி தன்னைத் தானே தேற்றினான். 

அதற்கு மேலும் பொறுமையோடு நிற்காது, மருது விட்டுச் சென்ற பைக்கை உதைத்துக் கொண்டு ஊருக்குள் சென்றான்.

சிறுவர்கள் தகவல் சொன்னதால் பஞ்சாயத்திற்குள் சென்றான்.

சுரேஷ் உண்மையிலேயே மீனாவை விரும்பியிருந்தாலும் விட்டுக்கொடுக்கும் மனநிலை சிறிதுமில்லை குமரனுக்கு. ஆகையாலே சுரேஷை தட்டுத்து, இதுதான் சமயமென அவனே தாலியைக் கட்டியிருந்தான்.

அத்தனைப் போராட்டத்திற்கும் வலிக்கும் இடையில் மீனாவிற்காகவே வந்தவன் அவளை அவனவள் ஆக்கிக்கொண்டான்.

இப்படி கைப்பற்றிய காதலை, ஒவ்வொரு நாளும் அவளுக்குப் புரிய வைக்கத் தவறவில்லை குமரன்.

குளித்து முடித்துப் புதுப்பட்டாடை உடுத்தி, “நீயா எடுத்த? என் அளவுக்குச் சரியா இருக்கே?” என்றபடி வெளியில் வந்தான்.

தலைவாரிப் பின்னலிட்டுக் கொண்டிருந்தவள், “இல்லை, மாமாதான் காலையிலே கொடுத்துட்டுப் போனாங்க..” என்றபடி அவன் முன் வந்து நின்றாள்.

முன்பை விடவும் மேலும் திடமாக உரமேறிய உடற்கட்டு, கம்பீரமாக அவனை எடுத்துக்காட்ட, கண் நிறைய நிறைத்துக்கொள்வது போல் பார்த்தபடி இருந்தவள், “ஹேப்பி பர்த்டே..” என்றாள் செப்பு இதழ் திறந்து.

மலர்ந்த முகமும் விரிந்த புன்னகையுமாக ஏற்றவன், “அவ்வளவு தானா?” என்றான் ஏக்கமும் சீண்டலுமாக.

இன்று வந்ததிலிருந்து அத்தனையும் அவனுக்குப் புதிதாக இருந்தது.

இது வரையில் இப்படியெல்லாம் அவனை அவள் கவனித்ததில்லை. இவ்வளவு நெருக்கமும் இருவருக்குள்ளும் இருந்ததில்லை. ஏன் அவளின் இந்தப் பார்வை கூட புதிதுதான் அவனிற்கு.

வெகு நாட்களுக்குப் பின் மனம் இளகி, நிம்மதியும் மகிழ்வுமாக உணர்ந்தான் குமரன்.

அவன் கைக்குள் சிக்காது எட்டி நின்றவள், “கீழ வா விருந்தே இருக்கு..” என்றபடி, நமட்டுச் சிரிப்போடு முன்னே சென்றுவிட, ஏமாற்றமாய் பெருமூச்சு விட்டுக்கொண்டான் குமரன்.

அவள் பின்னோடு வந்தவன், “இன்னைக்கு என்ன எல்லாமே புதுசா இருக்கு? ஆமாம், நீ இன்னும் கிளம்பல?” என்றான்.

அவள் முகத்தில் இருக்கும் மலர்ச்சி, உடை, அலங்காரம் அத்தனையும் புதிது.

“ஆப்டே.. லீவ் போட்டுருக்கேன், மாமா தான் ஒரு எட்டு உன்னைக் கோயிலுக்குக் கூட்டிட்டிப் போகச் சொன்னாங்க” என்றபடி வந்தவள் அவனையும் அமர்த்தி காலை உணவைப் பரிமாறினாள்.

பின் தானும் உண்டு முடித்துவிட்டு, செய்த இனிப்பை ஒரு டிபன்பாக்ஸில் கொஞ்சம் எடுத்துக்கொண்டாள்.

வேலுநாச்சியிடம் விடைபெற்று இருவரும் கிளம்பினர்.

குமரன் வண்டியை இயக்க, அடுத்த சில நிமிடத்தில் தேரடித் தெருவிற்குள் செல்ல, இருவரின் மனமும் கனத்தது.

அதுவரையிருந்த இதமான நிலை மறைய, இறுகிப் போயினர்.

வள்ளி வீட்டின் வாசல் முன் வண்டியை நிறுத்த, முதலில் இறங்கிப் போனாள் மீனா.

“இவளுக்கு இதே வேலையாப் போச்சு..” என்ற புலம்பலோடு அவள் விட்டுச் சென்ற டிபன்பாக்ஸை எடுத்துக்கொண்டு பின்னே சென்றான் குமரன்.

“டிபன்பாக்ஸை மறந்துட்ட?” என்றவன் குறையாகச் சொல்ல, “வேணும்னே தான் விட்டுட்டு வந்தேன்..” என்றாள் அவள்.

மீனாவை நெருங்கி வந்தவன், “இப்போவா? அப்போவா?” என்றான் ஆசையாக.

அவன் முகம் பாராது, கள்ளச்சிரிப்போடு, “எப்பவும்..” என்றவள், அசோக்கின் வீட்டுற்குள் நுழைந்தாள்.

குமரனுக்குள் ஒரு நொடியில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறந்தது, வண்ணம் அள்ளித் தெளித்தது போன்று மின்னினான்.

அன்றே சந்தேகம் தான், தனக்காகக் கொண்டு வந்தாள் என நினைக்கையில் பொங்கிய சந்தோஷத்தில் தலை, கால் புரியவில்லை.

“டேய்.. சின்னச்சாமி..” என கணீர்க் குரலில் குமரன் சுய நினைவுக்கு வர, தெருவில் சைக்கிளில் சென்ற சிறுவனும் நின்றான்.

தன் வீட்டு வாசலில் இரும்பு வாளியோடு நின்றபடி அழைத்தது வள்ளி. “டேய்.. காரைத் தள்ளி நிறுத்தச் சொல்லு, ஏவ்வூட்டு வாசல்ல நிறுத்துனா சாணியைக் கரைச்சி தெளிச்சிப்புடுவேன்” என்றார் ஜாடையாக.

இருவரையும் மாறி மாறிப் பார்த்த சிறுவன், “சீனியர்..” எனக் குரல் கொடுக்க, வாயை மூடுமாறு சைகை செய்தவன், “முடிச்சா கரைச்சித் தெளிங்க மாமியாரே, அதையும் பார்த்திடுறேன்..” எனச் சவாலாக உரைத்துவிட்டு உள்ளே சென்றான் குமரன்.

சொல்லிவிட்டானே தவிர, அவர் அப்படிச் செய்ய மாட்டார் என்றறிவான், ஆகையால் மிதப்பு.

“ச்சே.. மாமியார் மருமகனுக்கு தூது போறதெல்லாம், ஒரு பொழப்பு..” என புலம்பியடி சென்றான் சிறுவன்.

குமரன் உள்ளே வரும் போது, கமலத்தோடு அமர்ந்து மீனா பேசிக்கொண்டிருக்க, சமையலறையிலிருந்து கையில் காபி டம்பளருடன் நிறைசூலியாய் வந்தாள் நந்தினி.

பார்க்கப் பார்க்க மனம் தாங்காது சட்டென பார்வையைத் திருப்ப, மாலையிட்ட அசோக்கின் புகைப்படம் கண்ணில் பட, வேதனையில் முகம் கசங்க, கண்களும் கலங்கின.

Advertisement