Advertisement

அத்தியாயம் 15

அதிகாலை நேரம் சூரியன் புலர்ந்து புது வெளிச்சம் பாய்ச்சிக் கொண்டிருக்க, மீனாட்சியம்மன் கோயில் மண்டபத்தில் பஞ்சாயத்து கூடியிருந்தது.

பாஞ்சயத்து என்றால் நடுவர்கள், பெரியவர்களில் அனைவருமிருப்பர், புகார் கொடுத்தவரின் சமூகத்தினர் மட்டுமே கூட அனுமதி. அதிலும் வெளியூர்க்காரர்களுக்கு அனுமதியில்லை.

காவல் நிலையத்திற்குச் செல்ல வேண்டிய பிரச்சனையைத் தங்களுக்காகப் பேசி முடிக்க விரும்புவர்கள் பஞ்சாயத்திற்கு வருவர்.

கூட்டத்தில் ஒருபுறம் நின்றிருந்த வள்ளிக்கும் ராமநாதக்கும் நெஞ்சம் படபடவென அடித்தது. இரவில் இருந்து மகளைக் காணவில்லை, இருவரிடமும் வெவ்வேறு விதமாகப் பொய் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறாள் என அப்போது தான் புரிந்தது.

காணாமல் போனால் தேடலாம், ஓடிப்போனவளை எங்கே தேட? எதுவும் புரியாது, இருவரும் கலங்கிப் போய் தான் நின்றிருந்தனர்.

அவர்களுக்கு எதிர்ப்புறம் சுரேஷின் தந்தை நின்றிருக்க, “என்னப்பா ஆறுமுகம் என்னாச்சு?” எனப் பெரியவர் ஒருவர் ஆரம்பித்தார்.

வேலையாள் ஒருவன் உதவியோடு தளர்ந்த நடையில் சுரேஷ் கூட்டத்தை விலக்கிக்கொண்டு உள்ளே வந்து நின்றான்.

அனைவரின் பார்வையும் அவன் மீதே இருக்க, “அழகு மீனா கார்ல இருக்கா..” மெல்லிய குரலில் சுரேஷ் உரைக்க, சில பெண்கள் சென்று, கிட்டத்தட்ட பாதி மயக்கத்தில் கிடந்த மீனாவை எழுப்பி, அழைத்து வந்தனர். பாதி மயக்க நிலையில் நடக்கவே ஜீவனில்லாது இருந்தவளை பெண்கள் தாங்கிப்பிடித்து கூட்டி வந்திருந்தனர்.

அங்கு கூடியிருந்தவர்களுக்கு எல்லாம் என்னவோ புரிவது போலவும் இருக்க, அனைவரும் அமைதி காக்க, மீனாவை நெருங்கிய வள்ளி, “பாவி.. படுபாவி.. என்ன காரியம்டி செஞ்சிருக்க? எங்கிருந்துடி உனக்கு இந்த தைரியம் வந்தது? இதுக்குத் தான் உன்னைப் பெத்து, வளர்த்து, படிக்க வைச்சேனா? சத்தியமெல்லாம் பண்ணியே, இப்படிச் செஞ்சிட்டு வந்திருக்கியேடி.. இதுக்கு மேலையும் நீ உசுரோட இருக்கணுமா?” என்றபடி மொத்தினார்.

அன்னை சொல்லவதைப் புரிந்து கொள்ளும் முன்பாக, அவர் அடித்ததில் ஒடிந்த கொடியாக, சரிந்த மீனா மயங்கியே விழுந்திருந்தாள்.

அப்போதும் வள்ளியின் மனம் ஆறவில்லை, ஒப்பாரி வைத்துத் தன் தலையிலும் நெஞ்சிலும் அடித்துக்கொண்டு அழுதார்.

“ஏத்தா வாயாடி கொஞ்சம் அமைதியா இரு.. ஏதா இருந்தாலும் பேசித் தீர்த்துப்போம்” என நடுவிலிருக்கும் பெருசு அதட்டலிட, சில பெண்கள் வள்ளியை பிடித்திழுத்து அடக்கி வைக்க, கீழே விழுந்துவிட்ட மீனாவை சோலையின் மனைவி தாங்கித் தன் மடியில் போட்டுக் கொண்டாள்.

அனைத்தையும் பார்த்திருந்த ராமநாதனுக்கு வாய்விட்டுக் கதற தான் முடிவில்லை, நொடிந்து போய் நின்றிருந்தார்.

நடுவர்கள் ஆறுமுகத்தைக் கேள்வியாகப் பார்க்க, “என் மகனும் மீனாவும் ஒருத்தருக்கு ஒருத்தர் காதலிச்சிருக்காங்க. இதுவரைக்கும் அந்த விஷயம் எனக்குத் தெரியாது, அந்தப் புள்ளைக்கு ராமநாதன் மச்சான் வேற இடத்துல மாப்பிள்ளை பார்க்கவும் இரண்டுபேரும் கல்யாணம் பண்ணிக்கத் திட்டம் போட்டு ஊரைவிட்டு ஓடிப் போயிருக்காங்க. இதுல என் பையன் ஊருக்கு வந்ததும் தெரியாது, அந்தப் புள்ளையைக் கூட்டிட்டுப் போனதும் எங்களுக்குத் தெரியாது.

ஆனால் இவிங்க போகும் போது ஊர் எல்லையிலே வண்டி ஆக்சிடன்ட்டாகியிருக்கு. சின்னக் காயம் தான். அடிபட்டவங்களை என் தோட்டத்து வேலைக்காரன் மாணிக்கம் பார்த்துக் காப்பாத்திப் பத்திரமா கூட்டிட்டு வந்திருக்கான்” என்றார்.

கதையைக் கேட்ட அனைவரும் தங்களுக்குள் சலசலத்துக்கொள்ள, சுரேஷ் கூனிக்குறுகி நின்றான்.

“இந்த விஷயத்ததை யாருக்கும் சொல்லாம மறைச்சி, பஞ்சாயத்துக்குக் கொண்டு வராமல் முடிச்சிருக்கலாம் தான். ஆனால் என் மகன் ஆசைப்பட்டுட்டான், இவ்வளவு நடந்த பிறகு நம்மளாலையும் வேற என்ன செய்ய முடியும்? எங்க தகுதிக்கு இல்லாட்டாலும் மீனாவை மருமகளா ஏத்துக்கிறேன்.

ராமநாதன் மச்சானுக்குச் சம்மதம்னா சொல்லச் சொல்லுங்க, இப்போவே என் பையன் தாலியைக் கட்டட்டும் கையோடு எங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப் போயிடுறேன்..” எனக் கொஞ்சம் மிதப்பும் பகட்டுமாக ஆறுமுகம் உரைத்தார்.

கேட்டிருந்த அத்தனைப் பேருக்கும் அதுவே சரியென்றும் தோன்ற, ஆறுமுகத்தின் பரந்த மனதை மெச்சுதலாக நினைத்தனர்.

அவர் மீதான மரியாதையும் அதிகரித்தது. ஆனால் பெரியவர்களின் கூட்டத்தோடு அமர்ந்திருந்த சுந்தரமூர்த்திக்கு மட்டும் இது நம்பும்படியாக இல்லை, என்னவோ நெருடியது.

ஆறுமுகத்தின் கோக்குமாக்கான குணம் நன்கு அறிந்தவர், மகனுக்கு வேலை கேட்கும் போது சொல்லியதும் நினைவில் வர, யோசனையாக இருந்தார்.

அதற்குள்ளாக, “என்னப்பா ராமநாதா? நீ என்ன சொல்லுற?” எனப் பெரிய மீசைக் கேட்க, ராமநாதனுக்குத் தொண்டையோடு நெஞ்சும் அடைக்கும் உணர்வு.

என்னவென்று பதில் சொல்லுவார்? மனம் கனக்க, மயங்கிக்கிடக்கும் மகளையும் அழுது கரையும் மனைவியையும் ஒரு பார்வை பார்த்தவர் சம்மதமாக தலையசைத்தார். அது தவிர, வேறு வழியுமில்லை அவருக்கு.

வள்ளிக்கு மனம் கொதித்தது. நல்ல மாப்பிள்ளை பார்த்து எப்படியெல்லாம் நடத்த ஆசைப்பட்ட மகளின் திருமணம் இப்படியானதே! தன் வாழ்நாள் கனவே சிதைந்ததில் இதயம் வெடித்துப் போகும் அளவிற்கு விம்மினார். மகள் மீது கோபம் கனன்றது.

“இதுக்கு தான் பொம்பளைப் புள்ளையை அதிகம் படிக்க வைக்க வேண்டாம், சட்டுபுட்டுன்னு கல்யாணத்தை முடிச்சி அனுப்பிடணும்னு சொல்லுறது..” என்றும், “என்னவோ இவள் மட்டும் தான் புள்ளை பெத்திருக்கிற மாதிரி அருமை பெருமையா எப்படி வளர்த்தாள்? நம்ம சொல் கேட்டாளா? இப்போ அனுபவிக்க வேண்டிய தான்..” என்றும் அவர்கள் காது படவே கிசுகிசுக்க, இன்னும் வேதனையில் வெந்தனர் மீனாவின் பெற்றோர்கள்.

“அப்புறம் என்னப்பு? அதான் சம்மதம் சொல்லிட்டானே.. அடுத்து ஆக வேண்டியதைப் பாருப்பு. ஒரு நல்லநாள் பார்த்து, மண்டபம் பிடிச்சி கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணிடுப்பு” எனப் பெரியவர் சொல்ல, ஆறுமுகம் அதிர, “எதுக்கும் சம்பந்தப்பட்ட புள்ளைங்களை ஒரு வார்த்தை கேட்டுக்கலாமே தலைவரே..” என எடுத்துக்கொடுத்தார் சுந்தரமூர்த்தி.

“அதுவும் சரி தான்..” என மற்றொருவர் பின் பாட்டுப்பாட, “என் மகனை நம்பி வீட்டை விட்டு ஓடி வந்த புள்ளையை எப்படித் திருப்பி அனுப்ப முடியும்? அது என்ன மரியாதை? இனி அவ எங்க வீட்டு மருமகளா எங்க வீட்டுக்குத் தான் வரணும். இன்னைக்கு நல்ல நாள், இதுவே காலங்காத்தால முதல் முகூர்த்த நேரம் தானே? இப்போவே தாலியைக் கட்டிட்டி கூட்டிட்டிப் போயிக்கிறோம். அப்புறமா ஒரு நாள் ரிஷப்ஷன் வைச்சிக்கிறேன்..” என்ற ஆறுமுகம் அவசரப்படுத்தினார்.

சுரேஷ் உயிரோடு செத்துக் கொண்டிருந்தான். உதவி செய்த மீனாவிற்குத் தான் எவ்வளவு பெரிய அநியாயம் செய்கிறேன்? நினைக்க நினைக்க நெஞ்சம் விம்மியது.

தன்னையே புழுவை விடவும் கேவலமாகப் பார்த்தான். கையில் ஆயுதமிருந்தால் பெற்றவரையே வெட்டி விளாசும் வெறி இருந்தும் இயலாமை கையைக் கட்டி விட்டிருந்தது.

பெரியவர்களும் இருவீட்டார் விருப்பம் என்றுவிட, ஐயரை அப்போதே தாலி எடுத்து வரச்சொல்லிவிட்டார் ஆறுமுகம்.

பூஜித்துத் தாம்பூலத்தில் தாலியை எடுத்து வர, “ஏத்தா.. கொஞ்சம் தண்ணீயை தெளிச்சி அந்தப் புள்ளையை எழுப்புத்தா..” என்றார் ஒரு பெரியவர்.

அதன் படி பெண்கள் மீனாவை எழுப்ப முயல, ஆறுமுகம் வேண்டியபடி தாலியை எடுத்து சுரேஷ் கையில் கொடுத்தார் ஊர்த்தலைவர்.

வாங்கிக்கொண்ட சுரேஷின் கைகள் நடுங்கியது, இப்படியே எறிந்துவிட்டு ஓடிவிடலாமா? என்றொரு நொடி யோசிக்க, மனமோ, ‘வைதேகி.. வைதேகி..’ என ஏங்கிப் புலம்பியது.

கையறு நிலையில் செயலற்று நின்ற சுரேஷ், பரிதாபமாகத் தந்தையைப் பார்க்க, அவரோ முறைப்பாய் பார்த்து, “அப்பா சொல்லுறதை செய் சுரேஷ், அதான் உனக்கு நல்லது..” என்றார் நல்வாக்கு போலே.

அந்த மறைமுக மிரட்டலில் சுரேஷ் இயலாமையில் தவித்தான்.

தாலியோடு மீனாவை நெருங்க, அப்போது மயக்கம் தெளிந்து, தளர்ந்து எழுந்து நின்ற மீனா, என்ன நடக்கிறது என இன்னும் புரிபடாமல் மலைக்க விழித்தாள்.

ஒரு நொடி பின்னே நகர, அவள் தள்ளாடுவதாக நினைத்து அருகிலிருந்த பெண்கள் அவளைத் தாங்கிப்பிடிக்க, சுரேஷ் தாலியோடு அவளின் முன் நின்றிந்தான்.

கண் விழித்தவள் முதலில் பார்க்கும் காட்சி இதுவாக இருக்க, அவள் மறுத்துப் பேசும் முன்பாக சுரேஷ் தாலி கட்ட முயல, சட்டென கூட்டத்திற்குள் புகுந்த குமரன் அவனை எட்டி உதைத்திருந்தான்.

சில அடிகள் தள்ளிச் சென்று விழுந்த சுரேஷால் எழவே முடியவில்லை அப்படியே கிடந்தான். அவர் பார்வை மட்டும் பாவ மன்னிப்பு வேண்டியபடி குமரனை நோக்கியிருந்தது.

“குமரா என்னையா செய்ற?” என அவன் தந்தை முதல் ஆளாகக் கண்டித்தபடி, முன்னே வர, “டேய் குமரா..” எனச் சீறினார் ஆறுமுகம்.

“யோவ்.. நீங்க எல்லாம் பெரிய மனுஷங்க தானே? என்ன? எதுன்னு சரியா விசாரிக்க மாட்டீங்களா? இது தான் நீங்க பஞ்சாயத்துப் பண்ற லட்சணமா?” எனக் கத்தினான்.

அவன் குரலிலும் சீற்றத்திலும் அனைவருமே ஒருநொடி பின் நகர, கண் நிறைந்த கண்ணீரோடு மீண்டும் தள்ளாடி விழவிருந்த மீனாவை சட்டென தன்னோடு தாங்கி நிறுத்திக்கொண்டான் குமரன்.

அனைவரும் அதிர்வாகப் பார்க்க, ராமநாதனுக்கு மட்டும் மழைச்சாரல் மனதில் வீசியது.

“என்னையா குமரா?” மீண்டும் அவனை நோக்கி கேள்விகள் வர, “ச்சு.. எல்லாரும் நல்லாக் கேட்டுக்கோங்க.. உண்மையில காதலிச்சது நானும் மீனாவும் தான். எங்க குடும்பத்துல ஒத்துக்க மாட்டாங்கன்னு ஊரைவிட்டுப் போய் கல்யாணம் பண்ணிக்க முயற்சி பண்ணதும் நாங்க தான். சுரேஷ் எங்களுக்கு உதவி செஞ்சான், மீனாவை மதுரைக்குக் கூட்டிட்டு வரச் சொல்லி நான் தான் கேட்டுக்கிட்டேன். மத்தபடி அவனுக்கும் மீனாவுக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை” என்றான் உரத்த குரலில் உறுதியாக.

“அப்படியா? ஆறுமுகம் வேற ஏதோ சொன்னாப்புல?” என்றொரு குரல் கூட்டத்திலிருந்து சந்தேகமாக வர, “என்ன.. என்ன சொன்னாரு? சம்பந்தப்பட்ட இவிங்க இரண்டு பேரும் அப்படிச் சொன்னாங்களா?” எனக் குமரன் வாதிட்டான்.

கூட்டம் மொத்தமும் இருவரையும் கேள்வியாய் பார்க்க, அந்தப் பார்வையை தாங்க இயலாத மீனா வார்த்தை வராது மேலும் ஒடுங்கி நிற்க, அவள் தோள் சுற்றி உரிமையாகக் கை போட்டுக்கொண்டான் குமரன்.

சுரேஷோ எழ முடியாது, “எங்கப்பா மிரட்டுனதால தான் தாலி கட்டப் பார்த்தேன். மத்தபடி நாங்க லவ் பண்ணலை.. மீனா எனக்குக் கூடப் பிறக்காட்டாலும் தங்கச்சி மாதிரி தான்” எனக் கை குவித்தபடி சத்திய வாக்காக உரைத்தான்.

வலியில் துடித்த சுரேஷை சோலையும் சில இளைஞர்களும் தூக்கிச்செல்ல, பதட்டமின்றி நின்றிருந்த ஆறுமுகத்தை நோக்கியது கூட்டம்.

“இப்படின்னு எனக்கும் தெரியாது, இரண்டு பேரையும் நடுராத்திரி ஊருக்கு வெளியே தனியாப் பார்க்கவும் மாணிக்கம் இப்படி நினைச்சிட்டான் போல, யாரா இருந்தாலும் அப்படித்தானே நினைக்க முடியும்? எங்கிட்ட சொல்லவும், நானும் பையன் ஆசையை ஏன் தடுக்கணும்னு இப்படிப் பண்ணிட்டேன்” என்றவர் கை கூப்பிவிட்டு விலகிக் கொண்டார்.

“என்ன மனுஷனையா நீ..?” என்றும் “சரியான அவசரப்புத்திக்காரனப்பு..”

“கிறுக்குப்பையன்.. அவசரப்பட்டு ஒரு பொம்பளப்புள்ளை விஷயத்துல பஞ்சாயத்தைக் கூட்டிப்புட்டானே..” என்றெல்லாம் குரல் கூட்டத்திற்குள் கேட்க, “ஆள் மாத்திச் சொன்னாளும் புள்ளைங்க ஓடிப் போனது நிசம் தானே?” என்றொரு குரல் வர, “அப்புறம் ஓடிப்போறவங்களைக் கூட்டிட்டு வந்து பஞ்சாயத்துல நிறுத்தாம, டாட்டா காட்டி அனுப்பவா முடியும்?” என்றெல்லாம் ஆளாளுக்கு குரல் கொடுத்தனர்.

“என்ன இருந்தாலும் மீனா ஓடிப் போனது, ஓடிப் போனது தானே..?” என்ற குரல் கேட்ட நொடி, மீனாவை நிலையாக நிற்க வைத்த குமரன், தன் சட்டைப்பையிலிருந்த தாலியை எடுத்து அவள் கழுத்தில் கட்டினான்.

“இனி யாரும் எதுவும் இவளைப் பத்தி பேசக்கூடாது..” என அனைவருக்குமாக கணீர்க் குரலில் அறிவுறுத்தியவன், தந்தையை நோக்கி, “அபராதம் கட்டச் சொன்னா கட்டிட்டி வாங்கப்பா..” என்றுவிட்டு மீனாவின் கரம் பற்றி அழைத்துக்கொண்டு வெளியேறி விட்டான். 

“இனி இது, எங்க குடும்பத்துக்கான பிரச்சனை.. நாங்க பார்த்துக்கிறோம். யாரும் பேச வேண்டாம்” என சுந்தரமூர்த்தி சொல்லிவிட, அனைவரும் அமோதிப்பாய் தலையசைத்துவிட்டு கலைந்து சென்றனர்.

கொதித்துக் கிடந்த மனதில் மழைச்சாரல் வீசியதைப் போலே ராமநாதன் நிம்மதியுற, கண்ணீரைத் துடைத்துக்கொண்டு முடியைச் சுருட்டி கொண்டையிட்ட வள்ளியின் மனதின் கொதிநிலையைச் சொல்ல இயலாது.

குமரன், அசோக், சுரேஷ் மூவருமாக பள்ளிக்கூடத்தில் திட்டமிடும் போதே தகவல் ஆறுமுகத்திற்கு வந்துவிட்டது. அவர்கள் ஒரு திட்டமிட, அதை அறிந்திருந்த ஆறுமுகம் அவர் ஒரு திட்டமிட்டார்.

கபடிப் போட்டி நடக்கும் நேரம் வெளியாட்களின் நடமாட்டம் இருப்பது அவருக்கு தோதாகி விட, வெளியூரில் இருந்து சட்டென கூலிப்படையை வரவழைத்து விட்டார்.

அவர்களைப் பொறுத்திருந்து மடக்குவோம் எனக் காத்திருந்த தடியர்களுக்கு, உடன் மீனாவும் சிக்க, ஆறுமுகத்திற்கு தகவல் தெரிவித்திருந்தனர்.

வைதேகியைப் பிடித்த கூட்டத்திடம் அவளைத் தனியாகப் பண்ணை வீட்டில் அடைத்துப் பாதுக்காகச் சொல்லிவிட்டு, சுரேஷ் மற்றும் வைதேகியின் தோழியை ஒன்றாக அழைத்து வரச் சொல்லியிருந்தார்.

அசோக்கை ஓட்டுநர் என்றே நினைத்தவர்களுக்கு அவன் அத்தனை முக்கியமாகத் தெரியவில்லை.

அடிபட்ட மீனாவின் இரண்டு கன்னமும் தீயாய் எரிய, படபடவென அடித்துக் கொண்டிருந்த இதயத்தோடு சுரேஷை எழுப்ப முயல, தடியர்கள் மிரட்டினர்.

திமிறியவள் வண்டியிலிருந்து குதிக்க முயல, ஒருவன் உள்ளே இழுத்து பளாரென கன்னத்தில் மீண்டும் அடித்திருக்க, அந்த அதிர்ச்சியிலும் வலியிலும் தான் மயங்கிச் சரித்தாள்.

மயங்கும் முன்பே வண்டி ஊருக்குள் செல்கிறது என்பதை உணர்ந்திருந்தாள்.

விடியும் நேரம், மெல்லிய வெளிச்சம் பரவிக்கொண்டிருக்க, ஆறுமுகத்தின் தோப்பில் வண்டியை நிறுத்தி விட்ட தடியர்கள் வேறு வண்டியில் தப்பி, காடுப்பாதை வழியாகவே ஓடிவிட்டனர்.

சுரேஷூம் மீனாவும் மயக்க நிலையில் ஒன்றாகக் கிடக்க, சட்டென அவருக்கொரு யோசனை தோன்றியது.

உடனடியாக பஞ்சாயத்தைக் கூட்டும்படி வேலையாள் மாணிக்கத்திடம் சொல்லியனுப்பியவர் சுரேஷை மட்டும் தண்ணீர் தெளித்து, தட்டி எழுப்பினார்.

பெற்றவராயிற்றே! ஒரு ஓரம் பதைபதைக்க மகனின் காயங்களையும் ஆராய்ந்தார்.

விழித்த சுரேஷ் வலியோடு முனங்க, தன் மார்பில் சாய்த்துக்கொண்டு கொஞ்சம் தண்ணீர் புகட்டினார்.

சுயநினைவோடு எழுந்தவனோ, “வைதேகி.. வைதேகி..” எனப் புலம்பியபடி அவளைத் தான் தேடினான்.

“சொல்லுறேன்டா.. அதுக்கு முன்ன நான் சொல்லுறதை நீ கேளு..” என்க, தாங்க முடியாது தந்தையின் சட்டையைப் பிடித்திருந்தான் சுரேஷ்.

அசராத அசால்டு ஆறுமுகம், வைதேகி உயிரோடு இருக்க வேண்டுமென்றால் தான் சொல்வதைச் செய்ய வேண்டுமென்று மிரட்டினார்.

முதலில் பணிய மறுத்தாலும் வைதேகியை பணையப் பொருளாய் வைப்பதை சுரேஷால் தாங்க முடியவில்லை, சுரேஷிற்கும் வேறு வழியில்லை.

மீனா தானாக வந்து வலையில் சிக்கிவிட, தங்கள் இனமான அவளை எப்படியும் கட்டி வைத்து விட்டால் அதன் பின் சுரேஷால் எதுவும் செய்து விட முடியாது. யாரோ வேறு இனமான வைதேகியை விட, தங்கள் இனமான மீனா மகனுக்குச் சரியான தேர்வாகத் தோன்றினாள்.

தங்கள் வீட்டு மருமகளாக, தன் மகனுக்கு மனைவியாக வேற்று சமூகத்துப் பெண்ணை அவரால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை.

என்ன தான் மிரட்டினாலும் சிறை செய்தாலும் மகன் வைதேகியை நோக்கி ஓடி விடுவான், மீனாவை கட்டி வைப்பது மட்டுமே காலுக்கு இடும் விலங்காக இருக்குமென மட்டமாக யோசித்தார்.

தந்தையின் மிரட்டலுக்காகப் பஞ்சாயத்துக்கு வந்து விட்ட சுரேஷிற்கு அவர் விட்ட கதையைக் கேட்ட பிறகு தான் அவர் திட்டமே புரிந்தது.

தன் வாழ்க்கை மட்டுமில்லாது மீனாவின் வாழ்க்கையையும் சேர்ந்து அழிக்க அவனுக்கு விருப்பமே இல்லை.

இதற்கு பதில் உயிரை விடச் சொல்லியிருந்தாலும் செய்திருப்பான் ஆனால் அவர் கெடு வைத்ததோ வைதேகியை என்பால் அவனால் தந்தையை மீற முடியவில்லை.

ஆனால் ஆறுமுகத்தின் ஆசையெல்லாம் சரியான நேரத்தில் உள்ளே வந்த குமரனால் தவிடுபொடியானது.

மீனாவை அவன் மனைவியாக்கிக் கொண்டதில் அவன், அடித்த வலி கூடத் தெரியாது, நால்வர் வாழ்வையும் காப்பாற்றிவிட்ட நிம்மதி தான் சுரேஷிற்கு.

அதே நேரம் ஆறுமுகத்திற்கு பெரும் ஏமாற்றம், குமரன் குறுக்கே வருவானென சிறிதும் எதிர்பார்க்கவில்லை, எரிமலையாய்க் கனன்றார்.

இருவரின் பெற்றோரும் அங்கே இருக்க, யார் முகமும் பார்க்கவில்லை, யாரிடமும் விருப்பமோ அனுமதியோ கேட்கவில்லை.

நொடியில் தாலியைக் கட்டிய குமரன் கையோடு மீனாவை அழைத்துச் சென்றுவிட்டான்.

Advertisement