Advertisement

அத்தியாயம் 14

உயிர் மூச்சைக் கையில் பிடித்துக் கொண்டு அசோக் பார்த்து நிற்க, வண்டியை நிறுத்திவிட்டு மீனா இறங்கவும் அவளுக்குப் பின்னிருந்து வைதேகி இறங்கினாள்.

மெல்ல சுரேஷை சுரண்டிய அசோக் காதோரம், “ஏன்டா இரண்டு புள்ளைங்களை லவ் பண்ணியா?” என்றான் வியப்பாக.

சுரேஷ் முறைக்க, “இல்லைடா.. சட்டப்படி இரண்டு கல்யாணமெல்லாம் பண்ண முடியுமா?” என்றான் இன்னும் சந்தேகம் விலகாமல்.

“யோவ் மாமா, வைதேகி தான் என் ஆளுயா.. மீனா அவ ஃப்ரண்ட்” என சுரேஷ் விலக்க, “அப்பாடா.. அஞ்சி நிமிசத்துல அடி வயித்துல அணுகுண்டை வைச்சிட்டியேடா” என மொத்தினான் அசோக்.

சுரேஷ், வைதேகி இருவரும் நான்கு வருடங்களாகக் காதலிக்கின்றனர். அவ்வூரின் காதல் கதை வரலாற்றில் பல காதலை வளர்த்துவிட்ட சொப்பன சுந்திரி தான் அவர்கள் காதலுக்கும் ஆதாரம்.

சுரேஷ் கல்லூரி சென்று கொண்டிருந்த நேரம், வைதேகி கணினிப் பயிற்சி வகுப்பிற்குச் சென்று கொண்டிருந்தாள். இருவரும் காலை எட்டரை மணிப் பேருந்திலும் மாலை நான்கு மணிப் பேருந்திலும் ஒன்றாகப் பயணம் செய்யும் வாய்ப்புக் கிடைக்க, அதில் உருவானது அவர்கள் காதல்.

நான்கு ஆண்டுகள் உயிருக்கு உயிராக வளர்த்த காதல். இருவருக்கும் தெரியும் இருவர் வீட்டிலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்களென! போராடித் தான் வெல்ல வேண்டும், அந்தத் தைரியமும் அவர்களுக்கு இருந்தது.

மறுப்பதற்கு முக்கிய காரணம் சுரேஷ், வைதேகி இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதே!

இவர்களால் மற்றியமைக்க முடியாத காரணமும் அவர்களால் ஏற்க முடியாத காரணமும் அது ஒன்று தான். காதலர்களுக்கு அது பெரிதாகத் தெரியவில்லை.

ஆனால் சுரேஷின் தந்தை ஆறுமுகத்திற்கு உயிரை விடவும் பெரியது சாதிப்பற்று தான். அதைக் காக்க என்ன வேண்டுமென்றாலும் செய்யத் தயாராக இருப்பார். மகன் காதலை அறிந்த போது அவரால் வைதேகியை ஏற்க முடியவில்லை.

சாதியிலும் வசதி வாய்ப்பிலும் தங்களை விட கீழானவர் என்றெண்ணத்தில் அவர்களை வெறுத்தார். மகன் காதலை மறந்துவிட வேண்டுமென்ற ஆசைகொண்டவர் சுந்தரமூர்த்தியிடம் வேண்டி, சுரேஷை வேலைக்குத் திருச்சி அனுப்பி வைத்தார்.

தந்தையின் குணம் நன்கு அறிந்த சுரேஷ், தன்னை வேலைக்கு அனுப்பி வைப்பதிலும் ஏதோ உள்நோக்கம் இருக்கும் என்று யூகித்தே சென்றான்.

அவனுக்கு அப்போதைக்கு ஒரு வேலை முக்கிய தேவையாக இருந்தது, அதேநேரம் தந்தையின் பார்வையில் படாது, தனக்குத் தேவையானதை ஏற்பாடு செய்யவும் தோதாக இருந்தது.

திருச்சியில் வேலை செய்த இடத்தில் அங்கொரு நண்பர்கள் கூட்டம் அமைய, அங்கிருந்தே வேறொரு ஊரில் வேறொரு வேலைக்கு ஏற்பாடு செய்தான். அவ்விஷயம் சுந்தரமூர்த்திக்கும் தந்தையின் செவிக்கும் சேராது கவனித்துக் கொண்டான்.

அந்த விஷயத்தை வைதேகியிடம் தெரிவிக்க முயற்சி செய்த போது அவள் எண்ணிற்கு அழைப்புகள் செல்லவில்லை.

என்ன செய்வதென யோசித்த சுரேஷ், மீனாவிற்கு அழைத்தான். ஊருக்குள் அவர்கள் காதல் கதை அறிந்ததும் உதவி செய்யும் ஒரே ஜீவனும் தற்போது மீனா மட்டும் தான். தன் ஏற்பாட்டைத் தெரிவித்து வைதேகியின் நிலை அறிந்து, கூற வேண்டினான்.

படிப்பு படிப்பு என உலகைத் துறந்த துறவி போலே வாழும் மீனாவிற்கு இருக்கும் ஒரே உயிர்தோழி வைதேகி மட்டுமே.

ஆரம்பப் பள்ளியில் ஆரம்பித்தது அவர்கள் நட்பு. இதுவே மீனாவிற்கு இந்நிலை எனில் வைதேகி ஒரு நொடி கூட யோசிக்காது உதவி இருப்பாளே? வள்ளியை நினைத்துத் தான் மீனாவிற்கு சற்று பயம், இருந்தும் சுரேஷ் வேண்டியதற்கு உதவினாள்.

வைதேகி வீட்டிற்குச் சென்று வந்தவள், இவர்கள் காதல் விவகாரம் அவள் வீட்டில் தெரிந்து விட்டது, அலைபேசியைப் பிடிங்கி உடைத்து, அவளையும் அடித்து, விளாசி இருக்கின்றனர்.

இப்போது அவசர அவசரமாக வேறு மாப்பிள்ளை பார்ப்பதாகவும் தெரிவித்தாள்.

சுரேஷ் அங்கே துடிதுடித்துப் போனான். விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்று முடிவு செய்தவன், புதிதாக வேலை கிடைத்திருக்கும் இடத்திற்கு அருகில் ஒரு வாடகை வீட்டையும் ஏற்பாடு செய்து வைத்தான். அதே நேரம், வைதேகி வீட்டினரின் அவசரத் தேடலில் கிடைத்தது ஒரு மாப்பிள்ளை.

நாற்பத்தி நான்கு வயதில் இரண்டு மகன்களோடு இருப்பவனுக்கு வைதேகியை இரண்டாம் தாரமாக மணமுடிக்க ஏற்பாடு.

விஷயம் கேள்விப்பட்ட போது, மீனாவின் நெஞ்சே கொதித்தது. அப்படியென்ன அவர்கள் பார்த்திருக்கும் மாப்பிள்ளையை விட சுரேஷ் குறைந்து போய்விட்டான்? மனிதப் பிறப்பில் ஏது பேதம்? அந்த மாப்பிள்ளையையின் வீட்டில் வேலையாளாய் வாழ்வதை விடவும் சுரேஷோடு ஆசைப்பட்டபடி இன்பமாய் வாழ்வாளே? அவர்களை வாழவிடாத இந்த சாதியின் மீதும் சமூகத்தின் மீதும் வெறுப்பும் கசப்பும் தோன்றியது மீனாவிற்கு.

தன்னைக் காண வந்த தோழியை கட்டிக் கொண்டு, “இந்தக் கல்யாணம் மட்டும் நடந்துச்சு நான் செத்தே போயிருவேன்டி மீனா..” என அழுது கரைந்தாள் வைதேகி.

அவள் நிலை காண மீனாவிற்கும் மனம் தாங்காது, கண்ணீர் ஊற்றெடுத்தது.

அணைத்து ஆறுதல் சொல்லி, தேற்றிவிட்டு வீடு வந்தால், மீனாவிற்குச் சோதனையாக அவளைப் பெண் பார்க்க ஒரு கூட்டமே வந்திருந்தது.

ஏனோ மீனாவிற்கு மனம் வெறுத்துப் போன உணர்வு. தோழியின் நிலையும் பெண் பார்க்க வந்த கூட்டமும் அவளுள் கலக்கத்தை உண்டாக்க, காரணமேயின்றி ஏனோ அந்த நொடி குமரனின் நினைவு தான் வந்தது.

அவனின் நினைவே, அத்தனைக் கலக்கத்தையும் கவலையையும் ஓட்டி, கதகதப்பைக் கொடுத்தது. நினைவே இப்படியென்றால் நிஜம்? ஒரு நொடி, அவள் கட்டுப்பாட்டையும் மீறி குமரனை நோக்கி மனதின் ஆசையோடியது உண்மையே.

வந்தவர்கள் செல்லும் வரை பல்லைக் கடித்துக் கொண்டு பொறுமை காத்தாள். அவர்கள் செல்லவுமே சுரேஷிற்கு அழைத்து தகவல் கூறி விட்டாள்.

சுரேஷிற்கு மனம் தாங்கவே இயலவில்லை. வேறு இனமென தன்னை மறுத்ததைக் காட்டிலும் இரண்டாம் தாரமாக கொடுக்க முடிவு செய்திருக்கின்றனர் என்பது தான் பேரும் கோபத்தைக் கொடுத்தது.

அப்படியென்ன அவனை விட நான் குறைந்து போய்விட்டேன்? என்ற ஆற்றாமை.

யோசனை முழுவதும் வைதேகியே நிறைந்திருந்தாள். ஐயோ.. என் வைதேகி தவித்திருப்பாளே! துடித்திருப்பாளே! என நினைத்து உருகினான்.

இரண்டு நாள் யோசித்தான்.

ஊர்த் திருவிழாவிற்கு வரவில்லை என வீட்டில் சொன்னவன் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் ஊருக்குக் கிளம்பி விட்டான். அங்கு அலுவலகத்திலும் யாருக்கும் தெரியாது, இங்கு ஊரிலும் யாருக்கும் தெரியாது.

ஊருக்கு வரும் போது தான் மீனாவிடம் விஷயம் தெரிவித்து உதவுமாறு வேண்டினான்.

மீனாவைத் தவிர, வைதேகியின் வீட்டிற்குச் சென்று வரும் அளவிற்குப் பழக்கம் யாருமில்லை. மீனாவிற்கு உள்ளுக்குள் சிறிது பயம் தான் ஆனால் அன்று வைதேகி அழுததும் அவள் கண்ணீரும் அவளுக்கு எப்படியாவது நல்லது செய்துவிட வேண்டுமென்ற உந்துதலைத் தந்தது.

வாழ்ந்து முடித்தவர்களின் வெட்டிப் பிடிவாதத்திற்கு முன், வாழ நினைப்பவர்களின் சுயநலம் தவறாகத் தோன்றவில்லை மீனாவிற்கு, ஆகையால் சம்மதித்தாள்.

இங்கு வந்த பின், குமரனிடம் பேசித் திட்டமிட்ட பின், எப்படியாவது வைதேகியை எல்லைக்கோயிலுக்கு அழைத்து வரும் படி மீனாவிடம் வேண்டினான்.

மீனாவின் யோசனையில் கபடிப் போட்டியைக் காண வந்திருந்த வைதேகியை வாய்ப்புக் கிடைக்கவும் யாருக்கும் தெரியாமல் தள்ளிக்கொண்டு வந்திருந்தாள் அழகு மீனாள்.

அழகு மீனாளை, கட்டிக்கொண்டு கண்ணீர் வடித்த வைதேகி, “ரொம்ப ரொம்ப நன்றிடி..” எனத் தேம்பினாள்.

ஆறுதலாக முதுகை தடவிக்கொடுத்த மீனா, சுரேஷை நோக்கிக் கண் ஜாடை காட்டினாள்.

“போதும்மா.. வைதேகி நேரமாச்சு, கிளம்புவோம்” என்ற அசோக்கின் குரலில் விலகி நின்றவள் கண்களைத் துடைக்க, சுரேஷூம் கை கூப்பி நன்றியுரைத்தான்.

மீனாவிற்கும் கண்கள் கலங்கியது.

“மீனா உனக்குத் தைரியம் ஜாஸ்திதான் போ.. வள்ளியாத்தா மகளுன்னு நிரூபிச்சிட்டியே..” என அசோக் பாராட்ட, “அட, போங்கண்ணா, வீட்டுக்குப் போனால் அம்மா வெளக்கமாத்தால வெளுக்கும். நானே பயந்துகிடக்கேன்” என்றாள் சலிப்பாக.

“மீனா.. நீ எப்படி இந்த இருட்டுல தனியா போவ? வெளியூர் பசங்க வேற நடமாடிக்கிட்டு இருக்கிற நேரமா இருக்கே?” எனக் கவலையாக அசோக் தெரிவிக்க, “இல்லைண்ணா, வரும் போதே தைரியமா வந்தாச்சே.. இனி என்ன  வந்த வழியைப் பார்த்து போக வேண்டியதான்..” என்றாள்.

சின்னத் தலையசைப்போடு மூவரிடமும் விடைபெற்றவள் ஊருக்குள் செல்லும் பாதையில் வண்டியைத் திருப்பிக்கொண்டு சாலைக்கு ஏற, சட்டென ஏதோ குத்தியதில் வண்டியை பஞ்சராகி தடுமாறியது.

சுதாரித்தவள், சட்டென காலையூன்றி நின்று விட, பார்த்துக்கொண்டிருந்த அசோக் விரைந்து வந்தான்.

இருளில் நிலவின் மெல்லிய ஒளியில் வண்டியின் சக்கரத்தையும் சாலையும் ஆராய்ந்த அசோக், உஷாரானான்.

சுற்றும் முற்றும் பார்க்க, புதர்களுக்குள் இருந்தும் கோயில் சுற்றுச் சுவரின் மறைவிலிருந்தும் சிலர் கையில் கத்தி, அரிவாளோடு வெளியே வந்தனர்.

அதிலும் சுரேஷிற்குப் பின்னே ஒருவன் வர, “டேய்.. மாப்பிள்ளை..” எனக் குரல் கொடுத்தான்.

சுரேஷிற்கு முன்னே கவனித்துவிட்ட வைதேகி, அவனைத் தள்ளிக்கொண்டு தரையில் விழுந்திருந்தாள்.

அனைவரும் ஆபத்தென உணரும் முன்பாகவே அசோக் உணர்ந்திருக்க, மீனாவின் கைகளைப் பற்றிக் கொண்டு ஓடி வந்தான்.

அதே நேரம், வைதேகி, சுரேஷை நோக்கி ஓடி வருமாறு சைகை செய்ய, அவர்களைத் தாக்க வருபவனிடமிருந்து தப்பித்துக் கொண்டு ஓடி வந்தனர்.

மீனாவை முதலில் பேருந்தில் ஏற்றிவிட்ட அசோக், ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்தான்.

அசோக் வண்டியை இயக்க, சுரேஷும் வைதேகியும் ஓடி வந்து ஏறினர்.

மீனா சென்ற திசைக்கு எதிர்த்திசையில் ஊரை விட்டு வெளியே சொல்லும் பாதையில் பேருந்தை இயக்கினான் அசோக்.

அப்போதும் அந்தக் கும்பல் பின்னாடியே காரில் துரத்தி வந்து கொண்டிருந்தார்.

திடீர் தாக்குதலில் நால்வருமே அதிர்ந்து வெடவெடத்து நடுக்கினர்.

சற்று சுதாரித்து நிதான நிலைக்குத் திரும்பியிருந்தது அசோக் மட்டுமே. ஒருகையில் அலைபேசியை எடுத்தவன் குமரனுக்கு அழைக்க, சிக்கனல் கிடைக்காத அவ்விடத்திலிருந்து அழைப்புகள் செல்லவில்லை.

“எல்லாம் எங்கப்பன் வேலையாத்தான் இருக்கும்..” வைதேகியின் கையை ஆறுதலாகப் பற்றியிருந்த சுரேஷ் உரைக்க, “அப்படி ஒன்னும் முடிவா சொல்லிட முடியாது உன்னையும் தான் வெட்ட வந்தாங்க..” என்றான் அசோக்.

“ஒருவேளை புள்ளையே வேண்டாம்னு முடிவு பண்ணிட்டாரோ என்னவோ? அவருக்கு அவர் ஜாதியும் கௌரவும் தான பெருசு..” என ஆற்றாமையில் வெம்பினான் சுரேஷ்.

இவர்கள் எல்லாம் ஒரே சிந்தனையிலிருக்க, மீனா மட்டும் வேறு உலகிலிருந்தாள். உயிர் பயம் நெஞ்சைக் கவ்வியிருக்க, ஏனோ குமரனின் நினைவு வந்திருந்தது.

அவனைப் பார்த்தே வெகுநாட்களாகி விட்டது, ‘அழகு’ என அன்பொழுக அழைக்கும் குரல் இன்னும் செவியோரம் வருடியது.

கண்ணீரோடு விசும்பிய வைதேகி, “எங்களால தான் உங்க இரண்டு பேருக்கும் பிரச்சனையே..” என்க, “அப்படியெல்லாம் ஒன்னுமில்லைம்மா, நீ தைரியமா இரு..” என ஆறுதலுரைத்த அசோக்கின் கவனமெல்லாம் சாலையிலே இருந்தது.

தொலைவில் ஏதோ டார்ச் லைட் விளக்கொளி மின்ன, அசோக்கின் கண்கள் கூசியது. நெருங்குகையில் தான் சாலையில் வழியை மறித்தபடி காரோடு ஆட்கள் இருப்பது புரிந்தது.

பதறிப்போய், “மாமா..” என்றபடி அசோக்கின் தோளில் கை வைத்தான்.

“விடுடா.. மாப்பிள்ளை இன்னைக்கு நாமளா அவிங்களான்னு பார்த்திடுவோம்..” என சிலுப்புக் கொண்டு வேகம் கூட்டினான் அசோக். ஆனால் மேலும் நெருங்குகையில் மறித்து நின்றவர்கள் கல்லையும் பாட்டில்களையும் வீசினர்.

பேருந்தின் முகப்பு கண்ணாடியை நொறுக்கிக்கொண்டு பறந்து வந்த கல் அசோக்கின் தலையைப் பதம் பார்க்க, சட்டென பிரேக்கிட்டு நிறுத்தினான்.

“ஐயோ.. அண்ணே.. மாமா..” மூவரும் கூவிக்கொண்டு அவனை நெருங்கினர்.

அதற்குள்ளாகப் பின்தொடர்ந்து வந்த கார் பேருந்தில் மோதி நின்றது. முன்னும் பின்னும் செல்ல முடியாது வளைத்திருந்தனர்.

“ச்சு.. ஒன்னுமில்லை..” என நெற்றியில் வழியும் இரத்தத்தைத் துடைத்துக்கொண்டு நிமிர்ந்தான் அசோக்.

வலியில் முகம் சுருக்கியவனுக்குச் சிறிதும் பயமோ பதட்டமோ இல்லை.

“குனிஞ்சி உக்காருங்க. என்ன நடந்தாலும் நீங்க இரண்டு பேரும் வெளியே வராதீங்க புள்ளைங்களா..” என்றபடி, இரும்புக் கம்பியை உருவிக்கொண்டு அசோக் குதித்து கீழிறங்கினான்.

அரிவாளோடு எதிரே வந்தவனின் கையிலே தடுத்து ஒரு அடி வைக்க, பின்னே வந்தவன் அசோக்கின் தலையில் அடித்திருந்தான். பல்லைக் கடித்து வலியை பொறுத்துக்கொண்டு அவனையும் வெளுக்க, மேலும் சிலர் கூடி வந்தனர்.

இறங்கி வந்த சுரேஷூம் அவர்களைத் தாக்க முயன்றான்.

பேருந்திருக்குள் குனிந்து அமர்ந்து கொண்டிருந்த பெண்கள் இருவரும் தலையை மட்டும் உயர்த்தி, எட்டிப் பார்த்தனர்.

நெஞ்சு திக்திக்கென அடித்திக் கொண்டிருந்தது. உயிர்பயம் பிடித்தாட்டியது. தவறு செய்து விட்டோமோ என்ற குற்றவுணர்வும், “கடவுளே காப்பாத்து..” என்ற வேண்டுதலோடு பதைபதைப்பில் இருந்தனர்.

மொத்தம் எட்டு பேர் சூழ்ந்திருக்க, அசோக், சுரேஷ் இருவரால் ஒரு நிலைக்கு மேல் தாக்குப் பிடிக்க முடியவில்லை.

அதிலும் அசோக்கிற்கு சில வெட்டுக்காயங்கள் வேறு, நிற்காமல் இரத்தம் வழிந்து கொண்டிருந்தது.

“நான் எப்படியோ சமாளிச்சிகிறேன்டா.. நீ முதல்ல பஸ்ஸை எடுத்துட்டுப் போ..” என அசோக் உரைக்க, சுரேஷோ, “உன்னை இந்த மாதிரி நிலைமியில எப்படி மாமா விட்டுட்டு போவேன்..?” என மறுத்தான்.

அதற்குள்ளாக சுரேஷிற்குக் காலில் ஒரு பலத்த அடி, அவன் மடங்கி விழ, முதுகிலும் முகத்திலும் சரமாரியாகத் தாக்கினர்.

அதற்குள்ளாக அதைக் கேட்டிருந்த அடியாட்களில் இருவர் காரிலிருந்த பெட்ரோல் கேன்களைத் தூக்கி பேருந்தின் மீது ஊற்ற, பதறிப்போன அசோக் கையில் அரிவாளோடு வந்து அவனை ஒரு வெட்டு வெட்டினான்.

ஆனால் அதற்குள்ளாக ஒருவன் தீக்குச்சியைச் சிதறியிருந்தான். பதறித் துடித்த அசோக் வலியோடு ஓடி அணைக்க முயல, பின்னிருந்து வந்த ஒருவனின் அரிவாள் வீச்சு, சரியாக கழுத்தில் விழுந்தது.

“ஐயோ.. மாமா..” என்ற சுரேஷின் கூக்குரலோடு பின்னந்தலையில் விழுந்த அடியில் கண்கள் சொருக, மயங்கினான்.

அசோக்கின் உடலே துடிதுடித்தது, அதற்குள்ளாக அழகு மீனாளும் வைதேகியும் பதறி எழுந்து வர, பேருந்து முழுவதும் நொடியில் தீப்பற்றி எரியத் துவங்கியது.

அசோக்கிற்கு வலி உயிர் போனது, கண்கள் சொருகுவது போன்றிருக்க, அவன் கனத்த உடல் அவனுக்கே பாரமாகத் தோன்றியது. உடலை இழுத்துக் கொண்டு எரியும் பேருந்திற்குள் ஏறியவன், பத்திரமாக இரண்டு பெண்களையும் அவசரப்பகுதி வழியாக கீழே இறங்கி விட்டான்.

“அசோக் அண்ணா.. அண்ணா..” மீனா பதறித் துடிக்க, “எப்படியாவது ஓடிடுங்க  புள்ளைங்களா..” என்றவன் சாலையில் பொத்தென விழுந்தான். வார்த்தை வராது கையெடுத்துக் கூம்பிட்ட வைதேகி கண்ணீர் வழிய, தேம்பினாள்.

மீனாவோ சட்டென அசோக்கை மடித்தாங்கி காயத்திற்கு கட்டிட முயன்றாள்.

இரத்தம் நிற்காது வழிந்தது, கண்ணில் விழும் பிம்பங்கள் மங்கலாகத் தோன்ற, அசோக்கிற்கு அதற்கு மேலும் பேச முடியாது போக, ஓடி விடுமாறு சைகை செய்தான்.

“நந்தினி.. நந்தினி..” என்ற மெல்லிய முணுமுணுப்பு குரல் மீனாவின் செவியில் விழ, தேம்பினாள்.

அதற்குள்ளாகச் சுற்றி வந்த தடியர்கள் கூட்டத்தில் ஒருவன் மீனாவின் பின்னந்தலையைக் கொத்து முடியோடு பிடித்திருந்தான்.

வைதேகியோ சற்று அருகில் மயங்கிக் கிடக்கும் சுரேஷை நோக்கி ஓடியிருந்தாள்.

மீனா திமிற, திமிற வெடுக்கென இழுத்தவன் எரியும் தீச்சுவாலையின் தகிப்பு வெளிச்சத்தில் அவள் முகத்தை அடியாளம் கண்டு கொண்டு அவள் கன்னத்தில் மாறி மாறி அறைந்து விட்டு, வேறொருவன் கைக்குத் தள்ளி விட்டான்.

வலியோடு மீனா திமிறத் துள்ள, இழுத்துச் சென்ற ஒருவன் பின்னிருந்த காரில் அவளைத் தள்ளினான். அசோக்கின் கண்கள் இயலாமையோடு அவளைப் பார்த்தபடி சொருகியது.

அதே நேரம் மறுபுறமோ, சுரேஷின் உடலை நோக்கி வந்த வைதேகியை எட்டி உதைத்திருந்தான் ஒருவன்.

சற்று தூரம் சில அடிகள் தள்ளி விழுந்தவளை, கன்னத்தில் அறைந்து இழுத்துச் சென்றவர்கள் முன்புறமிருந்த காரில் தூக்கிப் போட்டான்.

மற்றொருவனோ சுரேஷை வந்து தூக்கிக்கொண்டு பின்புற காரில் போட்டான்.

பின்புறக் கார் ஊருக்குள்ளும் முன்புறக் கார் ஊரைவிட்டு வெளியே செல்லும் பாதையிலும் சென்றது.

இரண்டு பெண்களையும் இழுத்துச் சென்றதையும் வலியோடு கண்களில் நீர் வழிய, இயலாமையில் பார்த்திருந்த அசோக்கின் கண்கள் தற்போது நேராகப் பார்த்தது.

பெண்களின் கூக்குரலும் செவியை விட்டுத் தூரம் சென்றிருக்க, கண் முன்னே எரியும் அவனின் சொப்பன சுந்தரியை பார்த்துக்கொண்டே இருந்தான்.

சுந்தரமூர்த்திக்கு நிகராக, குமரனை விடவும் அதிகமாக இந்தப் பேருந்தின் மீது அதிக பாசம் வைத்திருந்தவன் அசோக். கொழுந்துவிட்டு எரியும் பேருந்தைப் பார்த்தபடியே மெல்ல மெல்ல அசோக்கின் கண்கள் மூடியது.

இந்த அநியாயத்தைப் பார்க்க முடியாது நிலவு கூட மறைந்து போக, அத்துவான நிலப் பகுதியில் இயற்கையின் மௌன சாட்சியில் அசோக்கும் சொப்பன சுந்தரியும் மெல்லச் சிதைந்துக் கொண்டிருந்தனர்.

Advertisement