Advertisement

அத்தியாயம் 13

அசோக்கிற்கு கை கூடாத காதலின் வலி நன்கு தெரியும். அதுவும் அவன் காதல் ஒருதலைக் காதல் தான், அதற்கே அவ்வளவு வலியை அனுபவித்து, கடந்து வந்து, இன்னும் சுவடைச் சுமந்துகொண்டு வாழ்கிறான்.

சுரேஷின் காதலோ இருவருக்குமானது, அவர்களின் எதிர்காலமே அதுதான் என்கையில் அவர்களை சேர்த்து வைத்துவிட வேண்டுமென்ற ஆசை அசோக்கிற்கு அதிகமிருந்தது.

“அவனை விடவும்.. நீ தான் மச்சான் ரொம்பப் பண்ற..” என்றபடி விலக்கிவிட்ட குமரன், “சரி செய்றேன். ஊராங்காதலை ஊட்டி வளர்ந்தாவது என் காதல் வளருதான்னு பார்ப்போம்” என முனங்கிக் கொண்டான்.

“அதெல்லாம் பனமரத்தை விட பல மடங்கு வளரும்.. இப்போ ஐடியா சொல்லு நீ” என அசோக் அவசரப்படுத்த, “அந்தப் புள்ளைக்கு தாக்கல் சொல்லிட்டியா?” என்றான் சுரேஷை நோக்கி விசாரணையாக.

“ம்ம், சொல்லிட்டேன்.. எல்லக்கோயிலுக்கு வரச் சொல்லியிருக்கேன்” என சுரேஷ் கூற, குமரன் சில நொடிகள் மௌனமாகச் சிந்தித்தான்.

அவனின் முகத்திலிருந்த யோசனையையும் தீவிரத்தையும் இருவரும் இமைகொட்டாது பார்த்திருக்க, அதே நேரம் அந்த அறைக்கு வெளியே ஒரு நிழல் உருவம் அவர்களைக் கடந்து சென்றதைக் கவனிக்கவில்லை.

“விளையாட வர வெளியூர் பயலுகளுக்கு நம்ம சொப்பன சுந்தரி தான் ட்ரிப் அடிக்குது. அதனால இந்த நேரம் பஸ்ஸை எடுத்தா யாருக்கும் சந்தேகம் வராது. அடக்கட்டை நீ இவிங்களை பத்திரமா யார் கண்ணுலையும் படாம மதுரைக்கு கூட்டிட்டு வந்துடு..” என்றுரைக்க, “சரிடா மாப்பிள்ளை..” என்றான் அசோக்.

“நான் போய் நம்ம லாயரோடு அசிஸ்டெண்ட் ஒரு பையன் இருக்குறான், அவிங்கிட்ட ஐடியா கேட்குறேன். ஏன்னா கல்யாணம் பண்ணா மட்டும் போதாது அதைச் சட்டப்படி ரிஜிஸ்டரும் செஞ்சா தான் பின்னாடி பிரச்சனை வந்தாலும் கல்யாணம் செல்லுபடியாகும், இவிங்களைப் பிரிக்கவும் முடியாது. அதனால அங்கிட்ட யோசனை கேட்டு, விடியவும் ஒரு கோயில்ல கல்யாணத்துக்கு ஏற்பாடும் செஞ்சிட்டு உங்களுக்குப் போன் பண்றேன்டா” என்ற குமரனின் அறிவுரைக்கு இருவரும் தலையாட்டினர்.

“நீங்களும் விடியிற நேரமா கிளம்புனா போதும், ஏன்னா ஊர்க்காரன் பூரா கிரவுண்ட்ல தான் இருப்பாங்க.. நடுச்சாமத்துக்கு மேல தான் பாதிக் கூட்டம் குறையும் அதுக்கு மேல நீங்க கிளம்புனா சரியா இருக்கும். அது வரைக்கும் கோலி நீ எங்கியும் வெளியே போயிடாத.. உங்கப்பன் கண்ணுல மட்டும் சிக்குன மவனே பிளான் மொத்தமும் க்ளோஸ் தான்” எனக் குமரன் எச்சரிக்க, “அது நான் பார்த்துக்கிறேன்டா..” என நம்பிக்கை உரைத்தான் அசோக்.

“அதுவரைக்கும் வேற வேற கலர் ஜெர்சியா மாத்தி மாத்தி போட்டுக்கிட்டு.. ஸ்கூல்குள்ளயே இருடா கோலி. நம்ம ஊர்க்காரங்க கண்ணுல கூட படக்கூடாது, பத்திரம்! நான் போயிட்டு கால் பண்ணுறேன்..” என அறிவுறுத்திய குமரன் இருவரிடமும் விடைபெற்றுக் கிளம்பினான்.

அது வரையிலும் சுரேஷிடம் மாறி மாறி விசாரித்தவர்கள் அவன் காதலிக்கும் பெண் யாரென்பதை விசாரிக்க மறந்தது தான் விதியின் சதியே!

ஆங்.. அடுத்ததாக பூவசரம்புதூரின் கலக்கல் பாய்ஸ் கபடிக் குழுவினரும் பொன்வயலின் வைகை பாய்ஸ் கபடிக் குழுவினரும் அடுத்த சுற்றிற்குத் தயாராக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்ற கணீர் குரல் ஒலிபெருக்கியில் அதிர்ந்தது.

ஏற்கனவே இரண்டு அணியினர் விளையாண்டிக் கொண்டிருக்க, அடுத்த சுற்றிற்கான அறிவிப்பும் கொடுத்துக் கொண்டிருந்தனர்.

பள்ளி மைதானம் முழுவதும் பளிச்சென்று பகல் போல் ஒளிவீசும் அளவிற்கு மின்விளக்குகளால் நிறைந்திருந்தது.

மைக் செட்களும் சீரியல் லைட்டுகளும் அந்த இடத்தை நிறைந்திருக்கும் ஊர் மக்கள் கூட்டமும்மேலும் அழகுறச் செய்தது.

சுற்றுப்பட்டிகளில் இருந்து விளையாட மட்டுமல்ல, விளையாட்டை வேடிக்கைப் பார்க்கவே பெரும் கூட்டம் வந்திருந்தது. மைதானத்தைச் சுற்றி டீ, வடை போன்ற நொறுக்குத் தீனிகளை விற்கும் கடைகளும் நிறைத்து விட, அவ்விடமே ஜேஜேவென்று இருந்தது.

மேடையில் ஒருபுறம் சிறப்பு விருந்தினர்களும், ஊர் முக்கியஸ்தர்களும் அமர்ந்திருக்க, அவர்களுக்கும் பின் ஆறடி, நான்கடி, மூன்றடி உயரத்தில் என வெவ்வேறு அளவுகளில் வெற்றிக்கோப்பைகளும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.

களத்தில் இறங்கும் அத்தனை வீரர்களுக்கும் அந்த வெற்றிக்கோப்பையை வசமாக்குவதே பெரும் இலட்சியமாக நெஞ்சில் கொண்டு இறங்கினர். ஏனெனில் மீனாட்சிபுரத்தின் கபடிப் போட்டியில் ஜெவித்து விட்டார்கள் என்றால் அது அவர்களுக்குப் பெரிய பெயர், இதற்குப் பின் நல்ல வாய்ப்புகளும் கிடைக்கும்.

அதற்காகவே விளையாடும் ஆசையில் தென்மாவட்டம் மட்டுமின்றி சென்னை, சேலம், ஈரோடு, பாண்டிச்சேரியில் இருந்து கூட விளையாட்டு வீரர்கள் வந்திருந்தனர்.

மோதிப் பார்த்துவிட வேண்டும், இறங்கி விளையாட வேண்டுமென்ற ஆர்வத்தில் துள்ளும் வீரர்களுக்கு தூரமெல்லாம் பெரியதாகத் தெரிவதில்லை.

அதே போல் மதுரை வரை வரும் குழுவினரைத் தங்கள் பேருந்திலே சென்று அழைத்து வருவது, இருவேளை உணவு, தங்குவதற்கு ஏற்பாடு என அத்தனையும் சிறப்பாக குமரனின் குழுவினர் செய்து கொண்டிருந்தனர்.

கண்ணாடியில் முகம் பார்த்துக் கொண்டிருந்த அழகு மீனாள் கழுத்தைச் சுற்றி துப்பட்டாவைப் போட்டுக் கொண்டு, “அம்மா மேட்ச் பார்க்கப் போயிட்டு வரேன்..” எனக் கிம்பினாள்.

“இந்தா.. ஏதாவது வேணும்னா வாங்கிச் சாப்பிட்டுக்கோ..” என்றவர் ஐம்பது ரூபாய் தாளை நீட்ட, வாங்கிக் கொண்டவளுக்குக் கண்ணே கலங்கிவிடும் போல் இருந்து. இவர்கள் தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கை என்ன? தான் செய்யவிருக்கும் காரியமென்ன?

நினைக்கையில் நெஞ்சே கனத்தது. கடவுளை துணைக்கு அழைத்து, தைரியத்தைத் திரட்டிக் கொண்டாள்.

வாசலுக்கு வந்தவள் காலணியை அணிந்து கொண்டிருக்க, “என்ன மீனா கிளம்பிட்டியா? போகலாமா?” என வந்தனர், அசோக்கின் மனைவி நந்தினியும் அன்னை கமலமும்.

“மாசமா இருக்கிற புள்ளை, உண்டு உறங்காம விளையாட்டுப் பார்க்க போகணுமா?” என வள்ளி நந்தினியைப் பார்த்து வெடுக்கெனக் கேட்க, முகம் வாடியவள் பதில் சொல்ல இயலாது நின்றாள்.

“இந்த வருஷம் தானே என் மருமகள் புதுசா வந்திருக்காள், இதுவரைக்கும் மேட்ச் பார்த்ததில்லன்னு ஆசைப்பட்டாள், அதான் நானும் கூடப் போறேனே.. கொஞ்ச நேரம் பார்க்கவிட்டு புள்ளைகளைப் பத்திரமா கூட்டிட்டு வந்துடுறேன் வள்ளி..” என நந்தினியின் ஆசைக்காக இசைந்து வந்தார் கமலம்.

“சரி, பார்த்துக்கோக்கா.. கவனமா போயிட்டு வாங்க..” என்றவர் மகளிடம் திரும்பி, “வெளியூர் பையலுங்க ரொம்ப பேரு இருப்பாங்க கவனமா இருக்கணும்டி, நகை, நட்டு எல்லாம் பத்திரம். பின்னாலையே அப்பாவை அனுப்புறேன் மீனா.. உனக்குத் தூக்கம் வந்தா அப்பாவோடு கிளிம்பி வந்துடு” என்க, சரியெனத் தலையாட்டினாள்.

அனைவரும் கிளம்ப, “பார்த்துப் போங்க.. கூட்டமில்லாத இடமா.. உக்காந்து விளையாட்டைப் பார்க்கிறதுக்கு தோதான இடமா பார்த்து உக்காந்துக்கோங்க..” எனக் குரல் கொடுத்தார் வள்ளி.

வள்ளி என்னதான் பட்டென பேசினாலும் அதில் ஒளிந்து கிடக்கும் அன்பும் அக்கறையும் மீனாவிற்கு நன்கு தெரியும். அவர் பாசத்தை நினைக்கையில் தவறு செய்யவிருக்கும் அவள் மனம் படபடக்க, குற்றவுணர்வும் குத்தத் தொடங்கியது.

வெளியில் வந்த குமரன் யாரிடமும் எதுவும் சொல்லிக்கொள்ளாது, தனது இருசக்கர வாகனத்தை விடுத்து காரை எடுத்தான்.

சரியாக எதிரே வந்த மருது, “எங்க தலைவரே கிளம்பிட்டீங்க? மேட்ச் நடந்துக்கிட்டு இருக்கு?” என்றான் கேள்வியாக.

ஒரு நொடி யோசித்த குமரன், பின் தலையை உலுக்கியபடி, “மதுரைக்கு ஒரு வேலையா அப்பா போகச் சொல்லிருக்காரு.. ஃபைனல் மேட்ச்க்கு எல்லாம் வந்துடுவேன்டா..” என்றான்.

மருது சரியெனத் தலையாட்ட, “டேய் மல்லுவேட்டி, ஒருவேளை நான் போன் பண்ணால் நீ வா..” என்றுரைத்துச் சென்றான்.

முன்னுரையும் முடிவுரையும் இல்லாது ஒற்றை வார்த்தை மட்டுமே சொல்லிச் செல்ல, ‘எங்கு வரச் சொல்கிறான்? என்ன செய்யப் போகிறான்?’ என குழம்பி நின்றான் மருது.

மீனா பக்கத்து வீட்டினரோடு வரும் முன்பாக குமரன் கிளம்பியிருந்தான். அவர்கள் இடம் பார்த்து அமரும் முன்பாக, அவர்களை கண்டுகொண்ட சோலை, விழாக் கமிட்டியினர் அமரும் இடத்திற்கு அழைத்துச் சென்று வசதியாக இருக்கைகளில் அமர வைத்தான்.

அவன் சென்ற சில நிமிடங்கள் கழித்து, சோலை சொல்லியனுப்பியதால் அசோக் வந்திருந்தான். வந்தவன், “நந்து டீ இல்லை காஃபி சாப்பிடுறீயா?” என்றான் மனைவியின் மீது பதித்த பார்வை விலகாது.

“ம்க்கும்..” எனத் தொண்டையை செருமிக் காட்டிய மீனா, “அண்ணே.. நாங்களும் இங்கதான் இருக்கோம். என்ன பெரியம்மா? கொஞ்சம் எங்களையும் பார்க்கலாம்ல?” என அன்னையும் இணைத்துக்கொண்டு கேலியாகக் கேட்டாள்.

அசோக் சிரித்தபடி நகர, நந்தினி வெட்கத்தோடு தலை கவிழ்ந்து கொண்டாள்.

மூவருக்கும் தேநீரும் பிஸ்கட், முறுக்கு, வடையும் என வாங்கிக் கொடுத்துவிட்டுச் சென்றான்.

“எப்படியும் ஃபைனல் மேட்ச் நாளுக்குத்தான் இருக்கும். ரொம்ப நேரம் உக்கார வேண்டாம்.. சீக்கிரம் வீட்டுக்குக் கிளம்புங்க..” என்றுரைத்துச் சென்றிருந்தான்.

குடும்பத்தைக் கவனித்துவிட்டு வந்தவன், நேராக சுரேஷிடம் சென்று நின்றான்.

பள்ளிக்கூடத்தின் ஒரு அறையில் இருந்தவன் உள்புறமாகத் தாழிட்டுக் கொண்டிருந்தான், இருளில் இருப்பதால் பிறருக்கும் அவன் இருப்பதே தெரியாது.

அவனுக்கான இரவு உணவினை ஒரு தட்டில் அசோக் கொண்டு வந்து தர, “இதெல்லாம் வேண்டாம் மாமா..” என்றான் சோர்ந்த குரலில் சுரேஷ்.

“சும்மா சாப்பிட்டுடா.. ஒருவேளை உங்கப்பன் தொரத்திட்டு வந்தால் ஓடத் தெம்பு வேண்டாம்?” என்றவன் கடுப்போடு கேட்க, சிரிப்போடு வாங்கிக் கொண்டான் சுரேஷ்.

“ஏற்கனவே உங்கப்பன் மேல கொலை காண்டுல தான் சுத்திக்கிட்டு இருக்கோம். திருவிழாவுலையே ஒரு சம்பவம் செஞ்சிருப்போம்.. என்ன வாய்ப்புதான் அமையல..” என்ற அசோக் கறுவ, இளம்புன்னகையோடு கேட்டுக்கொண்டே இட்லியை விழுங்கினான் சுரேஷ்.

விளையாட்டுப் போட்டி நான்கு பகுதியில் பல சுற்றுகளாக நிகழந்து கொண்டிருந்தது.

ஆனால் நேரம் நடுநிசியையும் தாண்டி வெகு நேரமாகிவிட, நந்தினிக்குக் கண்கள் தூக்கத்தில் சொருகியது.

அதிக நேரம் உட்காரவும் முடியாது போக, அசோக் விரைவாக வீட்டிற்குச் செல்லுமாறு சொன்னது நினைவில் வர, போதுமென மற்றவர்களையும் கிளப்பிக்கொண்டு வெளியே வந்தாள்.

உள்ளூர், பக்கத்து ஊரென பாதிக்கும் மேலான கூட்டம் தற்போது குறையத் துவங்கியிருந்தது. அத்தனை கூட்டமும் நாளையை இறுதிப் போட்டிக்கு மீண்டும் கூடிவிடும்.

மைதானத்தை விட்டு வெளியே வந்ததும் அவர்களை நிறுத்திய மீனா, “பெரியம்மா.. அந்தா, அங்கிட்டு எங்கப்பா இருக்காப்ல. நான் அவரோட வர்றேன்.. நீங்க போங்க” என்றாள்.

அவளைத் தந்தையோடு வருமாறு வள்ளி சொல்லியது நினைவில் வர, சரியெனத் தலையாட்டிவர் மருமகளை மட்டும் அழைத்துக்கொண்டு நடக்கத் துவங்கி விட்டார்.

மீண்டும் கூட்டத்திற்குள் புகுந்து வெளியே வந்த மீனா, ராமநாதன் முன் சென்று நின்றாள்.

மைதானத்தை விட்டுச் சற்று தள்ளிக் கடைகளுக்கு அருகே வேப்பமரத்திற்கு அருகே நின்று கொண்டிருந்தார்.

“வீட்டுக்குப் போவோமா?” என்றவர் கேட்க, “ம்ம், சரிப்பா. வண்டிச் சாவியை கொடுங்க.. நந்தினி அண்ணிக்குக் கால் வீங்கியிருக்காம், நடக்க முடியலையாம். நான் போய் வீட்டுல விட்டு வந்து உங்களைப் கூட்டிட்டிப் போறேன்” என்றாள்.

குரலிலும் முக பாவனையிலும் உடல் மொழியிலும் கூட வேறுபாடில்லை, நம்பும்படியாக எப்போதும் போலே இருந்தாள்.

ஆனால் அவள் பயம் அவள் தானே அறிவாள்? அதுவும் முதல்முறையாகச் செய்யும் தவறு, அதற்கே இதயம் தடதடவென அடித்துக் கொண்டிருந்தது.

“சரிம்மா, இருட்டு வேற.. அவளும் மாசமா இருக்கிற புள்ளை! பார்த்து மெல்லப் போகணும்” என்ற அறிவுரையோடு சாவியைக் கொடுத்தார்.

தெரிந்தே செய்யும் தவறு, பெற்றோர்களுக்குச் செய்யும் துரோகம் என நினைப்பவள், கனத்த மனதோடு அருகே நிற்கும் வண்டிகளில் உரசிவிடாது லாவகமாகத் தனது வண்டியை எடுத்துக் கொண்டு நகர்ந்தாள்.

இருளில் இறக்கை முளைத்த ஈசலாய் வெளிச்சத்தை நோக்கி ஓடுபவளுக்குத் தெரியாது அவ்வெளிச்சம் விடிவெள்ளியா? சுடர் திரியா? என்று.

சுரேஷ் உண்டு முடிக்க, அவனிடம் மாற்று உடையைக் கொடுத்த அசோக், “இந்த டீ-சர்ட்ட போட்டுக்கோ.. துண்டை தலைப்பாகை மாதிரி தலையில கட்டிக்கோ..” எனக் கொடுத்தான்.

தலையாட்டிய சுரேஷ், உடையை மாற்ற, “அந்தப் புள்ளைக்கு தகவல் சொல்லிட்டியா? இப்போ கிளம்பச் சொல்லு..” என அவசரப்படுத்தினான் அசோக்.

“மெசேஜ் அனுப்பிட்டேன் மாமா..” என்ற சுரேஷ், தலைப்பாகையைக் கட்டத் தெரியாது திணற, வெடுக்கென்று பிடிக்கி அசோக், அவனே கட்டிவிட்டுக்கொண்டே, “இத்தனை வருஷத்துல ஒரு நாளாவது மாமான்னு கூப்பிட்டிருப்பியா? இத்தனைக்கும் எங்க கூடவே சுத்திக்கிட்டு திரிச்ச பையன். காரியமாகணும்னா உறவு வேணும் இல்லை வேண்டாம், அப்படித்தானேடா?” என்றான்.

விம்மிய மனதில் அடைத்துக் கிடந்த ஆதங்கம் அவனையும் மீறி வெளிப்பட்டு விட, “என்ன மாமா? என்னைய அப்படியா நினைச்சிட்ட? பேசாட்டாலும் சின்ன வயசுல இருந்தே எனக்கு உன்னைய ரொம்ப பிடிக்கும் மாமா..

அதான் எங்கப்பாவுக்குப் பிடிக்காட்டியும் இந்தச் சங்கத்துல சுத்திகிட்டு இருந்தேன். நீ பேசுவியோ மாட்டியோன்னு ஒரு தயக்கம் அதுவும் போக, எங்கப்பா மேலையும் கொஞ்சம் பயம்.. அதான்.. என் தங்கச்சி கல்யாணத்துக்குக் கூட உன்னைக் கூப்பிட முடியாம போச்சு..” என வருந்தினான்.

அதுவரையிலும் ஆறுதலாய் இருந்த அவன் வார்த்தை இறுதியில் நெஞ்சை அறுத்தது.

முகமே ஒரு நொடியில் இறுகித் தணிய, “எல்லாம் ஆண்டவன் விதிப்படி தான்டா நடக்கும்..” என சுரேஷிற்கும் தன் மனதிற்கும் ஆறுதல் சொல்லிக் கொண்டான் அசோக்.

மஞ்சள் நிற ஜெர்சியும் தலையில் பாதியை மறைத்தபடி கட்டியிருந்த தலைப்பாகையும் சுரேஷைக் கண்டதும் யாராலும் அடையாளம் காணமுடியாத படி திருப்தியாக இருந்தது.

மின் விளக்குகள் இல்லாத இருட்டுப் பகுதியிலே மறைத்து மறைத்து அழைத்து வந்தான் அசோக்.

யார் கண்ணிலும் படாது வேப்பமரத்தடியில் நின்றிருக்கும் பேருந்தில் அவனை ஏற்றிவிட்டு தானும் ஏறினான். சுற்றுலாப் பயணிகளுக்கான பேருந்து என அனுமதி பெற்ற பெயரோடு தான் அன்று சொப்பன சுந்தரி சுற்றிக் கொண்டிருந்தது.

நீண்ட மூச்சை இழுத்து சுவாசித்த அசோக் எல்லைக்கோயிலை நோக்கி வண்டியை இயக்கினான்.

இவர்களே முன் வந்திருக்க, பேருந்தை சாலையோரம் நிறுத்துவிட்டு இறங்கிக் கோயில் மரத்தடியில் மறைந்து நின்றனர் அசோக்கும், சுரேஷூம்.

திறந்தவெளியில் பெரிய வெள்ளைக் குதிரைகளில் கம்பீரமாக வீற்றிருக்கும் ஐயனார், கருப்பசாமி சிலைகள். மூன்றாம் சாமம் என்பதால் மேற்கு வானை நோக்கி நகரும் நிலவின் ஒளி மட்டுமே துணை.

தரையில் விழும் நிழலும் கூட அச்சமூட்டும் விதமாக இருக்க, மயான அமைதி நிலவியது அவ்விடத்தில்.

“டேய் கோலிக்குண்டா, எவ்வளவு நேரம்டா? விடியப் போவுது, அந்தப் புள்ளைக்குப் போனைப் போடு” என அசோக் அதட்ட, சுரேஷ் தலையை உருட்டுவிட்டு பாதையையே எதிர்ப்பார்ப்போடு பார்த்திருந்தான்.

தாடையைத் தடவியபடி அசோக், “எனக்கென்னவோ அந்தப் புள்ளை உன்னை ஏமாத்திறிச்சின்னு தோனுது..” என்றுரைக்க, சரியாக அதே நேரம், தொலைவில் சிறு வெளிச்சம் தெரிய, “இதோ வந்துட்டா பாரு மாமா..” என்றான் பெருமை மிளிர.

அருகே நெருங்கி வரும் வண்டியை உற்றுக் கவனித்த அசோக், “டேய்.. அது.. அந்தப் புள்ளை அழகு மீனாளா?” என்றான் சந்தேகமாக.

‘மீனாவா?’ பேரதிர்ச்சி அசோக்கிற்கு.

“ஆமாம் மாமா..” என்ற சுரேஷின் குரலில் அசோக்கின் இதயத்தில் இடியே இறங்கியது.

ஒரு நொடி குமரனை எண்ணி வருந்தினான். சுரேஷிற்கு உதவாமல் இப்படியே ஓடி விடலாமா  என்று கூட நினைத்தான்.

சுரேஷூம் மீனாவும் விரும்பியிருப்பர் என கற்பனையிலும் அசோக்கால் நின்னைக்க முடியவில்லை.

மீனாவின் மீது எவ்வளவு காதல் வைத்திருக்கிறான் குமரன்? ஆசையாக அவள் பின்னே அலைந்தானே? கற்பனையிலே காதல் செய்தானே?

அன்னைக்கு அடுத்து அந்த இடைத்தை மீனா தான் நிரப்புவாள் என நம்பியிருப்பவனுக்கு எவ்வளவு பெரிய ஏமாற்றம்? அதைத் தாங்குவானா குமரன்?

இதை அறியாது இவர்களுக்குக் குமரனே திருமண ஏற்பாடுகளைச் செய்கிறானே?

அசோக் நண்பனை நினைத்து பெரிதும் வருந்த, பயமும் பதட்டமுமான மனநிலையிலிருந்த மீனா அவர்களை நெருங்கி வண்டியை நிறுத்தினாள்.

Advertisement