Advertisement

அத்தியாயம் 12

புது மாப்பிள்ளை அசோக் இப்போது வேலைக்கு வருவதில்லை. சுந்தரமூர்த்தி அவனுக்குப் பதினைந்து நாட்கள் விடுமுறை கொடுத்து விட, புது மனைவியோடு விருந்தும் கொண்டாட்டமுமாகச் சென்றது அவன் நாட்கள்.

ஆறுதலுக்கு அசோக்குமில்லாது மீனாவும் கண்ணிலே படாது மிகவும் சோர்ந்து போனான் குமரன்.

சரியாக அவன் சுற்றும் இடங்களும் தன்னை எதிர்பார்த்துக் காத்திருக்கும் இடங்களும் மீனாவிற்குத் தெரியும் என்பதால் மொத்தமாக அவனைத் தவிர்த்தாள்.

மீண்டும் பேருந்தில் பணிக்குச் செல்லத் தொடங்கியிருந்தான் குமரன்.

வேலுநாச்சியின் குமரனுக்குப் பெண் தேடும் படலம் நிறைவடையும் முன் மீனாவிற்கு மாப்பிள்ளை பார்த்திருந்தார் வள்ளி.

நன்கு படித்து, நல்ல சம்பளத்தில் அரசுப் பணியில் இருக்கும் மாப்பிள்ளை. வள்ளியின் அத்தனை எதிர்பார்ப்பிற்குமிருக்க, ஜாதகப் பொருத்தமுமிருக்க பெண் பார்க்க வரச் சொல்லியிருந்தார்.

காலை பதினோரு மணிப் பேருந்து ஊருக்குள் வந்து திரும்புகையில் பளபளக்கும் பட்டும் கழுத்து நிறைய நகையும் அணிந்த பெண்கள் கூட்டமும் வெள்ளை வெட்டி ஆண்கள் கூட்டமும் மொத்தமாக இறங்கினர். ஏறும் போதே கவனித்திருந்தான் குமரன்.

இறங்கி தங்கள் ஊருக்குள் செல்கையில் தான் என்னவோ புரிந்தது. பயணிகள் ஏறும் அந்த சிறு இடைவேளைக்குள் வழக்கம் போல் ஓட்டுநரும் அவனும் தொந்தி மாமா கடையில் தேநீர் அருந்தினர்.

முன்னே வந்த குமரன் குட்டிப்பூனை போலே குறுக்கே ஓடிய சின்னச்சாமியாரின் சட்டையை காலரைப் பிடித்திருந்தான்.

“என்னடா விசேஷம்? ஊருக்குள்ள ஒரு படையே போகுது?” எனச் சிறுவனிடம் கேட்டான் குமரன்.

இந்தச் சின்னச்சாமியார் என்னும் சிறுவன் ஊருக்குள் நிகழும் அத்தனை நிகழ்வுகளும் பேசப்படும் அத்தனை புரளிகளையும் நன்கு அறிந்தவன்.

குமரனின் கைகளிலிருந்து சட்டையை உருவிக்கொண்டவன், “சீனியர், உன் ஆளு மீனாவைப் பொண்ணு பார்க்க வந்திருகாங்கையா.. மாப்பிள்ளை கவுர்ன்மென்ட்டு உஸ்தியோகமாம்..” என்றான் குரல் தாழ, ரகசியம் போலே.

அதைச் சற்றும் எதிர்பாராது, “என்னடா சொல்லுற?” எனக் குமரன் அதிர, “மீனு கருவாடானாலும் உன் காதல் கரையேறாது..” என வாக்குரைத்து விட்டு ஓடிவிட்டான்.

குமரனுக்குள் எரிமலையே கொதித்துக் கொண்டிருந்தது. மீனாவிற்குத் தன்னை பிடிக்காதோ? என்று யோசித்தால் அப்படித் தெரியவில்லை, தான் வாங்கித் தந்த வளையலை அணிந்திருந்ததும் நினைவில் வந்தது.

அவளுக்குத் தன்னை பிடிக்குமோ என யோசித்தால் அதுவும் உறுதியாகத் தெரியவில்லை, எப்போதும் தன்னைத் தவிர்த்து ஓடி விடுகிறாளே?

அன்று தான் விருப்பம் சொன்னதற்கும் அவள் இன்று வரையிலும் பதில் சொல்லவில்லையே? என யோசித்துக் குழம்பினான்.

எது எப்படியோ தனக்கு அவளைப் பிடிக்கும் யாருக்காகவும் அவளை விட்டுக்கொடுக்க இயலாது என்பதில் மட்டும் தெளிவாக இருந்தான்.

திடீரென ஒரு கூட்டமே பெண் பார்க்க வந்ததை மீனா எதிர்பார்க்கவில்லை. வள்ளி எதுவும் அவளிடம் தெரிவிக்காது விட்டுவிட்டார்.

பெற்றவர்களின் சொல்லுக்கும் பெரியவர்களின் மீதான மரியாதைக்கும் பொம்மை போல் வந்து நின்றாள் மீனா.

ஆனால் உயிரும் உணர்வும் கொண்டவள் என்பதை வெளிபடுத்தியது அவளின் பிடித்தமில்லாத முகமும் உடல்மொழியும். முதல்முறையாக இப்படி நிற்பதும் அசௌகரியமாக நெருடலாக இருந்தது.

என்னவோ நெருப்புக் குழிக்குள் நிற்பது போன்று தவித்தாள். மாப்பிள்ளை என்றொருவன் வராததில் சற்று ஆசுவாசம்.

அனைவரும் சென்ற பின் பெற்றோர்களின் முகம் பார்க்க, “சும்மா பார்த்துட்டு தான்மா போறாங்க, உனக்குப் பிடிக்கலைன்னா அப்பா எதுவும் செய்ய மாட்டேன்.. போ” என்றவர் சமாதானம் சொல்ல, “என்ன செய்ய மாட்டீங்க? முதல்ல நல்ல இடமான்னு விசாரிக்க போங்க..” என இடையில் அதட்டியது வள்ளியின் குரல்.

இருவரும் அவரவர் வேலையைப் பார்த்துச் சென்றுவிட, அலைபேசியை எடுத்துக்கொண்டு வீட்டின் பின்புறம் சென்றாள் மீனா.

சுற்றும் முற்றும் பார்த்தவள் யாருமில்லை என்ற உறுதி செய்து கொண்டு ஒரு எண்ணிற்கு அழைத்தாள்.

சில நொடிகளில் மறுமுனையில், “ஹெலோ..” என்றொரு ஆண்குரல் கேட்க, “சுரேஷ்..” என்றழைத்தாள் தவிப்பும் பயமும் கலந்த குரலில்.

“ஊரை விட்டுப் போய் இரண்டு மாசத்துக்கும் மேலாச்சு, இங்க ஒருத்தி கிடக்காங்குற நினைப்பில்லை? என்ன பண்றீங்க சுரேஷ்? இங்க மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க..” என்றாள் தொண்டை அடைக்க.

“கொஞ்சம் பொறு, இப்போத்தான் யாருக்கும் தெரியாம வேற வேலை ஏற்பாடு செஞ்சிருக்கேன். இனி பக்கத்துல தங்குறதுக்கு ஒரு வீடு பார்க்கணும். பார்த்ததும் ஊருக்க வந்து கூட்டிட்டி போய்டுறேன்..” என்றான்.

“இந்தக் காரணத்தை எல்லாம் வீட்டுல சொல்ல முடியுமா என்ன? அவிங்க மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சாச்சு, நம்மகிட்ட அவ்வளவு டைம் இல்லை. ஏதா இருந்தாலும் சீக்கிரம். முதல்ல கல்யாணத்தை முடிக்கணும்..” என்றவள் அவசரப்படுத்த, அவனும் சரியெனத் தலையாட்டினான்.

பின் விடைபெற்று அலைபேசி அழைப்பு துண்டித்தவளுக்கு இதயம் கணக்கும் உணர்வு.

நீண்ட அந்தி வானத்தை வெறித்தவள் நீண்ட பெருமூச்சை விட்டாள்.

வந்த கூட்டமெல்லாம் நான்கு மணி சொப்பன சுந்தரி பேருந்தில் தான் திரும்பினர். அன்று அப்படியொன்றும் கூட்டமில்லை. அவர்களே நான்கு ஐந்து இருக்கைகளை ஆக்கிரமித்திருக்க, அவர்களைக் கண்டுகொள்ளாதவன் போலே முன்னிருக்கையில் அமர்ந்திருந்தான் குமரன்.

பாடல் கூட ஒலிக்காத பேருந்து அத்தனை நிசப்தமாக இருக்க, அலைபேசியை எடுத்து காதில் வைத்தவன், “அப்படியா யாரு பொண்ணு?” என்றான்.

மறுமுனையில் குரல் யாருக்கும் கேட்டிருக்காது, “எது ராமநாதன் மாமா மகளா?” என்றவன் ஓங்கி குரல் கொடுக்கும் போதே, இங்கு சில பெண்களில் செவிகள் கூர்மையானது.

“அவரு ஒரு பைசா சீதனம் தரமாட்டாரே? அந்தக் காலத்துலையே நேர்மையா கவர்மென்ட் உத்தியோகம் பார்த்த மனுஷன், அவர் கல்யாணம் பண்ணும் போதே வள்ளியத்தை ஒரு பொட்டு கூட நகை போட்டுட்டு வரலை, இரண்டு மாட்டோட தானே வந்துச்சு? பொண்ணுக்கு மட்டும் என்ன செஞ்சிடப் போறாரு? அவர் தான் கொள்கையோட இருக்கிற மனுஷனாச்சே! ஒருவேளை வீட்டோட மாப்பிள்ளையா பார்த்திருக்காரோ?” என்றான் கேள்வியாக.

இதைக் கேட்டிருந்த சில பெண்கள் தாங்கள் பார்த்து வந்திருக்கும் குடும்பத்தைப் பற்றி தான் பேசுகிறான் எனப் புரிந்து போக, தங்களுக்குள்ளாக ஜாடை காட்டிவிட்டு இன்னும் உன்னிப்பாக கேட்கத் தொடங்கினர்.

“வீட்டோட மாப்பிள்ளையா வந்தால் தன்மானம் விட்டு அவிங்க வீட்டுக்கு சேவகம் செய்யணும். வள்ளியத்தைக்கு புண்ணாக்கு மூட்டை தூக்கணும். மானமுள்ள நல்ல ஆம்பிள்ளை இதெல்லாம் செய்வானா? நீ வேற கவர்மென்ட் உத்தியோகம்னு சொல்லுறீயே, ஒருவேளை கிம்பளம் எதுவும் வாங்கினான்னு தெரிஞ்சது ராமநாதன் மாமாவே போலீஸ்லபுடிச்சிக் கொடுத்திடுவாறே!” எனக் குமரன் பேசிக்கொண்டிருக்கும் போதே கேட்டுக்கொண்டிருந்த பெண்கள் பதறினர்.

அவர்கள் முகத்தின் தீவிரத்தைக் கண்டு ஆண்களும் செவியைத் தீட்ட, “அதுவும் போக, அந்த மீனா புள்ளை அழகென்ன? அறிவென்ன? கண்டவனும் நம்ம ஊர் பொண்ணுக்கு மாப்பிள்ளையாகிட முடியுமா? அந்தக்காலம் மாதிரி இளவட்டங்கல்லைத் தூக்கணும் காளையை அடக்கணும்னு சொல்லி இப்போ என்ன பரிசோதிச்சா பார்க்க முடியுது?

அதுக்குன்னு நாமளும் அப்படியே சும்மா விட்டுட முடியுமா? வீரானா? சூரனான்னு மாப்பிள்ளை ஊருக்குள்ள வர்ற அன்னைக்கு நம்ம ஸ்டைல்ல பரிசோதிச்சிப் பார்த்திடுவோம். என்னடா?” என்றும் பேசிக்கொள்ள, கேட்டுக் கொண்டிருந்தவர்கள் அரண்டு போனனர்.

குமரனுக்கு ரகசியமான வெற்றிப் புன்னகை. அவன் அலைபேசி இயக்கத்திலில்லை மறுமுனையிலும் யாருமில்லை. வேண்டுமென்ற தான் பேசினான் ஆனால் பொய் பேசவில்லை. அவன் சொல்லியது போலே கொள்கை கொண்டவர் தான் ராமநாதன்.

அரண்டு போய், குழப்பமான நிலையில் இருந்த அவர்களும் குமரன் முன்பு எதையும் காட்டிக்கொள்ளவில்லை. அவர்களுக்குள் ஜாடைப் பேசிக்கொண்டு அமைதியாக ஊருக்குச் சென்றுவிட்டனர்.

தான் செய்தது தவறோ என ஒருநொடி நெருடினாலும் மீனாவின் முகம் நினைவில் வர, அத்தனையும் அவன் அகராதியில் சரியாகிப் போனது.

காதலில் சுயநலம் தவறில்லை, யாரிடமும் மீனாவை விட்டுக்கொடுக்க இயலாது என்பதில் உறுதியாக இருந்தான்.

சென்ற கூட்டம் அதன் பின் எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை.

ஒற்றை மகளுக்கென வள்ளி நிறைய சேர்த்து வைத்திருக்கிறார் என்பதையெல்லாம் வெளியில் விசாரித்துவிட்டு வரதட்சணை ஆசையில் வந்தவர்களுக்கு குமரனின் பேச்சு ஏமாற்றமாகிவிட பின்வாங்கி விட்டனர்.

குமரனின் செயல்தான் என்பதை அறியாது வந்தவர்கள் அப்படியே சென்றதில் மீனாவிற்குப் பெரும் நிம்மதி.

ஆனால் வள்ளி அப்படியே விட்டுவிட்டுடவில்லை, தரகர் மூலம் வேறு வரன் பார்க்கத் தொடங்கிவிட, கையறுநிலையில் இருந்தாள் மீனா.

இதற்கிடையில் ஊர்த்திருவிழா துவங்கியிருந்தது. சித்திரை பௌர்ணமியை ஒட்டி, பத்து நாள் திருவிழா கோலாகலமாய் நிகழ்ந்து கொண்டிருந்தது.

சுரேஷ் திருவிழாவிற்கு வரவில்லை.

அந்த வருத்தம் அவன் நண்பர்களுக்கும் இருக்க, மீனாவிற்கும் இருந்தது.

மல்லுவேட்டியும் வேலைவெட்டியில்லாத சோலையும் படு சுறுசுறுப்பாகச்  சுற்றிக் கொண்டிருந்தனர்.

திருவிழா முடியவும் ஊர் சார்பாகவும் அவர்கள் சங்கம் சார்பாகவும் இணைந்து, வருடா வருடம் கபடி போட்டி நடந்துவது அவர்கள் வழக்கம்.

திருவிழாவை விடவும் ஜேஜேவென திரளாய் மக்கள் கூடுவது இப்போட்டியைப் பார்ப்பதற்கு தான்.

இதில் கலந்து கொள்ள, சுற்றுப்பட்டிகளில் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் வெவ்வேறு பகுதிகளிலிருந்தும் கூட்டம் கூட்டமாக கபடிக் குழுக்கள் வருவார்கள்.

அவர்களை அழைத்து வருவது, தங்க வைப்பது, சாப்பாடு ஏற்பாடு, மைதானத்தை ஏற்பாடு செய்வது, போட்டி நடத்துவது, நடுவர்கள், தலைவர்களை வரவேற்பது, வெற்றிக் கோப்பை வாங்குவது, பரிசுத்தொகை ஏற்பாடு செய்வது எனப் பெரிதும் வேலைகள் இருந்தது.

சரி தலைவரே, எப்பவும் போலே நீயும் அடக்கட்டையும் வசூலுக்குப் போங்க.. நாங்க இங்கிட்டு வேலையைப் பார்க்கிறோம். என்னையா தொழில் அதிபரே?” என குமரனிடம் ஆரம்பித்து, சோலையிடம் முடித்தான் மருது.

“சரிதான்டா மல்லுவேட்டி, புதுமாப்பிள்ளை தலையையே இப்போதான் வெளிய காட்டியிருக்காரு, இவரை வைச்சு நான் என்னத்த வசூலுக்குப் போக?” என்ற குமரன் போலியாக நோவ, முறைத்த அசோக், “ஏன்டா நான் பாட்டுக்கு சிவனேன்னு இருக்கேன், எங்கிட்ட ஏன் ஓரண்டை இழுக்க?” என்றான்.

“அதில்லையா பங்காளி, நீ முதல் காதலியையே மறந்துட்டு புது சம்சார மயக்கத்துல சுத்துறியே அப்போ அவிங்க மேல இம்புட்டு பாசம் வைச்சிருக்கன்னு பெருமையா தான்டா தலைவரு சொன்னாரு” என மருது சமாளித்தான்.

அதேநேரம், மூன்று மணிப் பேருந்து வந்து திரும்ப, அசோக்கின் அன்னை கமலமும் நந்தினியும் இறங்கி நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அவர்களை கண்டுவிட்ட அசோக், பார்வையைக் காட்டி முறைத்தபடி, “எதையும் முழுசாப் பேச மாட்டியாடா? நல்லாயிருந்த குடும்பத்துல கும்மி அடிச்சிட்டியே, இப்போ சந்தோஷமா?” எனப் பதறினான்.

அவர்கள் உரையாடல் அவளுக்கும் கேட்கும்.

கவனித்துவிட்டவர்களில் சோலை, “அதாவது சிஸ்டர், அடக்கட்டையோட முதல் காதலி வேற யாருமில்லை நம்ம சொப்பனசுந்தரி தான்..” எனக் குரல் கொடுக்க, அவர்கள் கடந்து சென்றுவிட்டனர்.

அவனை மொத்திய அசோக், “யோவ், அவ உங்கிட்ட கேட்டாளா? அப்போ கோட்டுச்சோ இல்லையோ? ஆனால் இப்போ நல்லாக் கேட்டிருக்கும்.. நீ சொப்பன சுந்தரின்னு விளக்குனாப்புல நம்ம பஸ்ஸு தான்னு அவளுக்குத் தெரியுமா? ஏன்யா குடும்பத்துல குண்டு போடுற?” என்றான்.

அனைவரும் சிரிக்க, “எதுவும் வேலையிருந்தால் நீ கூடப் போயிருக்க வேண்டியதானே? சங்கத்துக்குத் தலைமை தாங்க உன்னை இப்போ அழைச்சமாக்கும்?” என்ற குமரன் சடைக்க, “பெருசா வேலையெல்லாம் இல்லை ஹாஸ்பிட்டல் போயிட்டு வார, எங்கம்மா தான்துணைக்கு நானே போறேன்னு முந்திக்கிடுச்சி..” என்னும் போதே அவன் முகத்தில் ஒரு மலர்ச்சி, குரலில் ஒரு மகிழ்ச்சி.

“அடேய்.. பங்காளி சாதிச்சிட்டையா..!” என மகிழ்வோடு கையைப்பற்றி குலுக்கிய மல்லுவேட்டியை அசோக் கட்டிக்கொண்டான்.

அனைவருக்கும் முன்பாக அவனுக்குத் தான் முதலில் புரிந்தது.

“என்ன தொழில் அதிபரே! உனக்கு அப்புறம் கல்யாணம் பண்ணி இப்போ அப்பா ஆகிட்டானையா..” என சோலையை வம்பிழுக்க, “அதுக்கென்ன? சந்தோசம் தான்டா..” என சோலையும், குமரனும் மகிழ்வோடு வாழ்த்தினர்.

மனம் நிறைந்த அசோக், உல்லாசமாக நண்பர்களைக் கட்டிக்கொண்டான்.

வரியும் நன்கொடையும் வசூலிக்கும் பொறுப்பை குமரனிடமும் அசோக்கிடமும் விட்டுவிட்டனர்.

சில இடங்களுக்கு எல்லாம் பெரிய வீட்டுப்பையன் குமரன் சென்றால் தான் வேலையாகும். வரி மட்டுமின்றி நன்கொடையும் அள்ளிக் கொடுப்பர், கபடிப் போட்டியை அவர்களின் ஊருக்கு பெருமை சேர்ப்பதாக நினைப்பார்கள்.

அசோக் வேலைக்குத் திரும்பியிருந்தான். சோலையும் மருதுவும் மற்ற வேலைகளைக் கவனிக்க, ஊர் இளைஞர்களும் இறங்கி வேலை பார்க்க, கபடிப் போட்டி ஏற்பாடானது.

அவர்களுக்கு திருவிழாவை விடவும் கொண்டாட்டமும் மகிழ்ச்சியும் கபடிப் போட்டியில் தான்.

அன்று நண்பகலிலிருந்து கலர் கலர் பனியன்கள் அணிந்தபடி வெளியூரிலிருந்து கபடிக்குழுக்கள் வரத் துவங்கியிருந்தனர்.

இரவு தொடங்கும் போட்டியானது மறுநாள் நண்பகல் வரையிலும் நடக்கும். எத்தனை குழுக்கள் வருகிறார்களோ அதைப் பொறுத்துப் போட்டி நேரம்.

அரசுப்பள்ளியின் வாசலில் ஒரு மேசை நாற்காலியை போட்டு அமர்ந்திருந்த குமரன் வரும் அணிகளிடம் நுழைவுக்கட்டணம் வசூலித்து அவர்கள் பெயரை பதிவு செய்து கொண்டிருந்தான்.

அடக்கட்டை அவர்களை உள்ளே அழைத்துச் சென்று அறைகளில் தங்க வைப்பான். சோலையும் சாப்பாடு ஆக்கும் இடத்தில் கவனித்துக் கொண்டிருக்க, மருது மைதானத்தைக் கவனித்துக் கொண்டிருந்தான்.

இருளும் நேரம், அத்தனை அறைகளுக்கும் சென்று மின் விளக்கை போட்டுவிட்டு வந்து கொண்டிருந்த அசோக்கின் கைகளை யாரோ பற்றி இழுக்க, அதிர்ந்து அவன் திரும்ப, “மாமா.. நான் தான்..” எனக் குரல் கொடுத்தான் சுரேஷ்.

“டேய்.. சுரேஷூ..” எனக் கூவ, “உஷ்.. சத்தம் போடாதையா..” என்றான் வேண்டுதலாக.

அவன் உடையைக் கவனித்தவன், “என்னடா இது? ப்ளூ ஜெர்ஸி போட்டுருக்க? ஒருவேளை திருச்சிக்கார பயலுகளுக்கு நீ விளையாட வந்தியா?” என்றான் கோபமாக.

“அடச்சே! அதெல்லாம் இல்லை மாமா? எங்கப்பன் கண்டுபிடிச்சிடக் கூடாதுன்னு டீம் பையலுங்க கூட்டத்தோட கூட்டமா வந்திருக்கேன்” என்க, புரியாது குழப்பமாக, “ஏன்டா?” என்றான்.

வெகு நேரமாகியும் அசோக்கை காணாததால் குமரன் தேடி வந்து கொண்டிருந்தான்.

“பின்ன, நானே ஓடிப் போகப் போறேன். எங்கப்பா என்ன போயிட்டு வாடா மகனேன்னு டாட்டா காட்டுவாரா?”

“ஓஹோ..” எனத் தலையாட்டிய அசோக், “ஓடிப்போறவன் அப்படியே போக வேண்டியதானே? இங்க எதுக்கு வந்த?” என்றான் புரியாது.

நெற்றியில் அடித்துக்கொண்ட சுரேஷ், “உனக்கெல்லாம் கல்யாணாம் ஒரு கேடு! யோவ்.. நான் ஒரு புள்ளையைக் கூட்டிட்டு ஊரைவிட்டு ஓடிப் போகப் போறேனையா..” என்றான் விளக்கமாக.

“என்ன..?” என்றபடி அதிர்வோடு குமரன் வர, அசோக்கோ பேரதிர்ச்சியில் வாயடைத்து நின்றான்.

குமரனைக் கண்டுகொண்ட சுரேஷ், “அண்ணே..” என்றபடி கைகளைப் பற்றிக்கொண்டான்.

“என்ன வேலைடா செஞ்சி வைச்சிருக்க? அதுவும் இத்தனை நாளா எங்க கூட தானே இருந்த? இது எப்போ நடந்தது?” என குமரன் பதற, “ஆமாம், இதுல நம்ம கூட சேர்ந்ததால தான் கேட்டுப் போயிட்டானாம், இவன் அப்பா நம்மளைச் சொல்லுறாரு” என குமைந்தான் அசோக்.

“அந்தக் கதையெல்லாம் சொல்ல இப்போ நேரமில்லை” என்ற சுரேஷ், சுற்றும் முற்றும் பார்க்க, “சரி இப்போ என்ன தான் ஏற்பாடு செஞ்சிருக்க?” என்றான் அசோக்.

“திருச்சியில இருந்தபடியே வெளியூருல வேலையும் தங்குறதுக்கு வீடும் ஏற்பாடு செஞ்சிட்டேன். இப்போ அவளைக் கூட்டிட்டு ஊரைவிட்டுப் போய் கல்யாணம் பண்ணணும், அதுவும் எங்கப்பாவுக்குத் தெரியாமல்..” என்க, “ஓஹோ..” என்றான் அசோக்.

“என்ன ஓஹோ? நான் என்ன கதையா சொல்லிக்கிட்டு இருக்கேன்? நீங்கதான் எப்படியாவது எனக்கு உதவணும்” என இருவரின் கரத்தையும் பற்றிக்கொண்டு வேண்டினான்.

“இவ்வளவு பிளான் பண்ணுனவன் கல்யாணத்துக்கும் ஏற்பாடு பண்ணலையா?” எனக் குமரன் நக்கலாகக் கேட்க, “ஏதோ அவள் வீட்டுல மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க அவரசம்னு சொன்னாள். அண்ணனும் மாமனும் இருக்கிற தைரியத்துல தான் கிளம்பி வந்துட்டேன்..” என்றவன் இறங்கி வேண்டினான்.

“சரி, சரி ஹெல்ப் பண்றோம்..” என அசோக் நம்பிக்கைக் கொடுக்க, குமரன் முறைக்க, “நம்ம பையன்டா.. நம்மளை நம்பி வந்துட்டான். நம்மளை விட்டால் வேற யாரு செய்வ? அதுவும் ஒரு காதலை வாழ வைச்சா, அது உன் பரம்பரைக்கே புண்ணியம் தரும்” எனக் கொஞ்சிய அசோக், குமரனை அணைத்துக் கொண்டான்.

Advertisement