Advertisement

அத்தியாயம் 11

குழந்தைகள் அங்குமிங்கும் விளையாடிக் கொண்டிருக்க, சில உறவுகள் ஆளுக்கொரு வேலையைக் கவனித்துக் கொண்டிருந்தார்.

இன்னும் மணப்பெண் அழைத்து வரவில்லை. ஆகையால் ஊர்க்கார்களும் அதன்பின் தான் வருவார்கள்.

குமரனின் கண்கள் மண்டபம் முழுவதும் சுழல, வரவேற்பில் நின்றிருக்கும் பெண்களிடம் பேசிக்கொண்டிருந்த மீனாவை கண்டுகொண்டான்.

சுற்றும் முற்றும் பார்த்தவன், “டேய் அரைபெடலு, இங்க வா” என்றழைத்தான்.

அருகே வந்த சிறுவனிடம், “மாப்பிள்ளை ரூம்ல தாம்பூத்தட்டுல மாலை இருக்காம், அதை எடுத்துட்டு வந்து கொடுக்கச் சொல்லி மீனாகிட்ட சொல்லு.. போ” என்றான்.

அவன் ஏற்ற இறக்கமாய் நம்பாது பார்க்க, “டேய், தேவி அக்காதான்டா சொல்லுச்சு.. போய் சொல்லு..” என்றான்.

மாப்பிள்ளை அறைக்கு அருகிலே நின்று கொண்டு மீனா தான் எடுத்துத் தர வேண்டுமென்று அழைத்தால் அவனுக்குப் புரியாதோ?

“வாளமீனுக்கும் விலாங்குமீனுக்கும் கல்யாணம்
அந்த சென்னாகுனி கூட்டம் எல்லாம் ஊர்கோலம்
அந்த நடுக்கடலில் நடக்குதய்யா திருமணம்.. ஓஓ..”

என உடன் இருந்த சின்னச்சாமியார் பாட, அரைபெடலும் ஆடியபடியே சென்றுவிட்டான்.

‘நட்டுச் சிண்டுக வரைக்கும் என் மேட்டர் புரிஞ்சிருக்கு, இவ மட்டும் தெரிஞ்சும் தெரியாத மாதிரி ஓடுறா..! இன்னைக்கு இரண்டுல ஒன்னு தெரிஞ்சிக்காம அவளை விடப்போறதில்லை’ என மனதில் உருப்போட்டுக் கொண்டே இருந்தான்.

தயாராகிவிட்ட அசோக் மணமேடைக்குச் சென்றுவிட, அறைக்குள் சென்ற குமரன் கதவின் பின் மறைந்து நின்று கொண்டான்.

ஆள் யாருமில்லை என்ற எண்ணத்தில் தாழிடாது, மூடியிருந்த கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தாள் மீனா.

அலமாரியிலிருக்கும் தாம்பூலத்தை எடுக்கச் சென்றவள் தன் பின்னே நெருக்கத்தில் அரூபம் உணர, சட்டெனத் திரும்பினாள்.

குமரன் நின்று கொண்டிருக்க, அவளுக்கு திக்கென்று நெஞ்சே அடைத்து விட்ட உணர்வு. மூச்சே நின்றுவிட, கண்கள் விரிய, சுவரோடு ஒட்டியபடி சிலையாக நின்றாள்.

“என்ன அழகு? எக்ஸாம் எல்லாம் எப்படி எழுதுன?” என்றவனின் இதழோடு, விழியும் குறுநகையில் மின்னியது.

அப்போதே உணர்வு வரப் பெற்றவள், “கையிட்டா தான் எழுதுனேன்..” என்றாள்.

கலகலவென சிரித்தபடி, “பாருடா, என் மாமன் மகளுக்கு கேலி, கிண்டலெல்லாம் அதிகம் தான்..” என்றான் ரசனையாக.

மூக்கு விடைக்க முறைத்தவள், “அன்னைக்கு என்னவோ பெருசா சொல்லிட்டுப் போன இனி தொந்தரவே செய்ய மாட்டேன்னு? இப்போ மட்டும் ஏன் பின்னாடி வார?” என்றபடி விலகப் பார்த்தாள்.

இன்னும் அவள் இதயம் தடதடவென அடித்துக் கொண்டிருந்தது.

மீண்டும் பின்னே வருவதால் வந்த எரிச்சலோ? இல்லை இத்தனை நாட்களாகக் காணாத தவிப்போ? எதுவோ அவள் மனம் மட்டுமே அறிந்த ரகசியம். முகத்தில் எந்தவிதப் பாவனைகளும் வெளிப்படவில்லை.

அவள் முயற்சி புரிய, சட்டென சுவரில் அவளுக்கு இருபுறமும் கையூன்றி அவளைச் சிறை செய்தவன், “அந்த வாக்குறுதியெல்லாம் உன் எக்ஸாம் முடியிற வரைக்கும் மட்டும் தான். மொத்தமா உன்னை விட்டுப் போகணும்னா அது, இந்த உடம்பை விட்டு உசுரு போனால் தான் உண்டு..!” என்றான் உளமார.

அத்தனை எளிதாக குமரன் தன்னை விட்டுவிட மாட்டான் என்ற எண்ணம் எப்போதும் அவள் அடிமனதில் அழமாக இருப்பதுதான்.

இப்போது அவனே சொல்லிவிட, அவளால் ஏற்க முடியவில்லை.

அவன் கைச்சிறையிலும் பேச்சிலும் பதறியவள் நிமிர்ந்து பார்க்க, அறையின் கதவு உள்புறமாகத் தாழிடப்பட்டிருந்தது.

பார்க்கும் இடங்களில் மட்டும் வம்பு பேசும் குமரன் இப்படிச் செய்வான் என கனவிலும் நினைக்கவில்லை. ஒருவிதப் பய உணர்வு தொண்டையைக் கவ்வ, உள்ளங்கையும் முகமும் வியர்க்கத் துவங்கியது.

“ஏய் என்ன பண்ற நீ?” என்றவள் அதட்ட, “ம்ம்.. லவ் பண்றேன்..” என்றான் இன்னும் நெருங்கி.

இவ்வளவு நெருக்கத்தில் இப்போது தான் முதல் முறையாக அவன் முகம் பார்க்கிறாள். முத்து முத்தாய் வியர்த்த முகத்தோடு கண்களில் ஒரு மின்னல் சீற, “கையை எடு, வழியை விடு..” என்றாள்.

எப்போது பேச முயன்றாலும் நழுவி ஓடி விடுவாள், ஆகையால் இன்று எப்படியும் பேசிவிட வேண்டுமென்ற எண்ணத்திலிருந்தவன், அவள் ஓட முயன்றதால் சிறை செய்தான்.

“இப்படி சும்மா விடுறதுக்குத் தான், கஷ்டப்பட்டு உன்னை வர வைச்சேனாக்கும்..?” என்றவன் கேட்க, மருண்டு விழித்தாள் மீனா.

இன்னும் பயம் நெஞ்சைக் கவ்வியது. குமரன் ஒன்றும் செய்துவிட மாட்டானென அவளுக்குத் தெரியும், ஆனால் வேறு யாராவது இப்படி இருவரையும் பார்த்து விட்டால்? அச்சமே அவளைப் பிடித்தாட்டியது.

அதிலும் அவர்கள் இருப்பது மணமகன் அறை, குமரனை எதுவும் சொல்ல இயலாது தன்னைத்தானே குறைவாகப் பேசுவர் என நினைக்கும் போதே நெஞ்சு விம்மியது.

அவள் மருண்ட பார்வை அவன் மனதைத் தைக்க, ‘பயப்படாதே..!’ என்பது போல் ஆறுதலாக ஒற்றைக் கையால் வலது தோள்பட்டையைப் பற்றினான்.

வெடுக்கென அவன் கைகயைத் தட்டிவிட்டவள், “குமரா நீ தப்பு பண்ற..” என எச்சரித்தாள், ஒற்றை விரல் நீட்டி.

பட்டென அந்த விரலை மடக்கிப் பிடித்தான்.

அந்தப் பிஞ்சு விரல்களின் மென்மை அவனைச் சுகமாகச் சிலிர்க்கச் செய்தது. ஆனால் மீனா ஒருபோதும் அவன் தொடுகையில் வித்தியாசம் உணர்ந்ததில்லை, கோபத்தில் முகம் சிவந்தாள்.

அந்தச் சிவந்த முகம் அவளை மேலும் அழகாக்க, ரசித்தவன், “இந்த நொடி வரை உங்கிட்ட எனக்கு எந்தவித தப்பான எண்ணமுமில்லை, பயப்படாத அழகு..” என்றான் மென்குரலில்.

அந்தக் குரல் அவளை என்னவோ செய்தது. ஏதோ மாயக்கட்டுக்குள் அவளை இழுப்பது போன்ற பிரம்மை, ஒரு நொடி மயங்கினாள். அவனுக்கு இசைவது போல் அவள் தலையும் அசைந்தது.

தலை தரை தாழ, அழகு ஓவியம் உயிர்பெற்றது போன்ற நின்றவளைப் பார்க்க, அவனுக்கும் மயக்கம், “அழகி..!” என்றான், இன்னும் குரல் தேனாய் இளகி இனித்தது.

உறக்கத்திலிருந்து திடுக்கிட்டு எழுபவள் போல் மயக்கத்திலிருந்து தெளிந்தவள், பலமோடு அவன் நெஞ்சில் கை வைத்து அவனைத் தள்ளிவிட்டு விலகினாள்.

ஒரு நொடி மையலில் கவனக்குறைவாக நின்றதால் அவள் நழுவிவிட, இறுதியாக விடாது அவள் கரத்தைப் பற்றினான்.

அதையும் அவன் உருவ முயல, அவன் பிடியின் அழுத்தம் கூடியது. தரையில் கால் பதியாது, கைகளை உருவ முயன்று மீனா திமிறிக்கொண்டிருக்க, அவளைச் சாமாளிக்க முடியாது, தவித்த குமரன் பற்றியிருந்த கரத்தை தன்னை நோக்கி இழுத்தான்.

அவனின் திடீர் செயலில் நிலையில்லாது தடுமாறியவள் வாரி வந்து அவன் நெஞ்சில் விழுந்தாள்.

நொடிப்பொழுதில் அவள் இடையைத் தன்னோடு அழுத்தமாக அணைத்துக்கொள்ள, இனி எங்கும் அவளால் நழுவ இயலாதே!

அதுவரையிலும் விளையாட்டு செயலாக நினைத்திருந்த மீனாவிற்கு அப்போது தான் ஏதோ விவரீதமாகத் தோன்றியது. உடல் விறைக்க நிமிர்ந்து நின்றவள் பளார் பளாரென அவன் நெஞ்சிலும் கன்னத்திலும் அடித்தபடி, “என்ன காரியம்டா செய்ற?” என விம்மினாள்.

அவள் தாக்குதலைத் தாங்க இயலாது மறுகையால் அவள் இரு கரைத்ததையும் அழுத்தப் பற்றினான்.

இடையிலும் அவன் பிடியின் அழுத்தம் கூட, “விடுடா வலிக்குது..” எனத் திமிறினாள் மீனா.

இடம், பொருள், சுற்றம் இருவரும் நிற்கும் நிலை என எதுவும் குமரனின் கருத்தில் பதியவில்லை, அவனுக்குச் சொல்ல வந்ததைச் சொல்லி விட வேண்டும். ஆனால் மீனாவிற்குச் சுற்றமும் தன்னிலையும் மட்டுமே நினைவிலிருக்க, அவன் சொல்ல வருவதைக் காது கொடுத்துக் கேட்கும் நிலையில் அவளில்லை.

அவள் முயற்சியெல்லாம் விலகி ஓடிவதில் இருக்க, அவன் முயற்சி மொத்தமும் விடாது, பிடித்து வைப்பதில் இருந்தது.

மேலும் அவளுக்குப் பயம் தான் கூடியது இந்நிலையில் யாராவது பார்த்துவிட்டால்? தன்னைத் தானே குறைவாகப் பேசுவர். அதிலும் இவன் அப்பத்தா அந்தச் சிறுவயதிலே என்னை என்ன பேசினார்? இப்போது சொல்லவும் வேண்டுமா? யோசிக்கவே மாட்டார் தன்னைத் தானே கீழ்த்தனமாக பேசவார்.

அன்னைக்கு வேறு சத்தியம் செய்து கொடுத்துள்ளேனே.. இனி தன்னை நம்புவாரா? ஊர்க்கார்கள் எல்லாம் பேசுவார்களே!

எத்தனை படித்து, எவ்வளவு வளர்ந்தென்ன பயன், இந்தக் கீழான சமூகத்தை மாற்றும் வலிமையோ, இல்லை அவர்கள் எதிர்கொள்ளும் தைரியமோ தனக்கில்லாது போனதே.. விம்மியது மனம்.

இந்தச் சமூகம் பெண்ணின் நடத்தையை எப்போதும் கேள்விக் குறியாக்கும், அவளுக்கே ஒழுக்கக் கட்டுப்பாடுகளை விதிக்கும், அவள் மீதே கௌரவ பாரங்களை சுமத்தும்!

அவள் எண்ணமோ பயமோ அறியாத குமரன், அவள் முகத்தைத் தன்னை நோக்கித் திருப்பி, “உன்னை இப்படிக் கட்டாயப்படுத்தணும்னு எனக்கு ஆசையும் இல்லை.. சத்தம் போடாம, துள்ளாம உக்காரு..” என்றபடி மெல்ல விடுவித்து, கட்டிலில் அமர்த்தினான்.

உடல் நடுங்கி அடங்கியது, சிவந்த முகம் வெளிரிக் கூம்பியது, கண்கள் கலங்கி உடைப்பெடுத்தது.

“இங்க பார் அழகு..” என்றவன் அழைக்கும் போதே, உடைந்தவள் கால்களை கட்டிக்கொண்டு தாடையை பதித்தபடி அவனை ஒரு குற்றப்பார்வையில் முறைத்தாள். அந்த முறைப்பையும் தாண்டி கண்களில் கண்ணீரும் வழியத் தொடங்கியது.

ஏன் கரைகிறாள் என்றே தெரியவில்லை, ஆனாலும் அவள் கண்ணீர் தீயாச்சுட்டது.

அவள் முன் மண்டியிட்டு அமர்ந்தவன் அவள் முகம் நிமிர்ந்தி கண்ணீரைத் துடைத்தபடி, “எனக்கு உன்னைக் கட்டிக்கிடணும் ஆசை அழகு. உனக்கு விருப்பமான்னு சொல்லு.. நம்ம குடும்பத்தைப் பத்தியெல்லாம் யோசிக்காதே, உன் மனசுல உள்ளதைச் சொல்லு..” என்றான். 

குமரன் கேட்கும் போதே வெளியில் கதவு தட்டப்பட்டது.

மீனா திடுக்கிட்டு விழித்தாள். தொண்டை அடைக்க, விம்மியவளுக்குக் கண்ணீர் மேலும் பொங்கி வழிந்தது. குமரனுக்கு அப்போது தான் தன் செயல் உரைத்தது.

சட்டென அவளை தூக்கிவிட்டு அழைத்து வந்து குளியறைக்குள் விட்டவன், “உள்பக்கமா பூட்டிக்கோ அழகு, நான் சொல்லுற வரைக்கும் திறக்காதே” என்றவன் கதவை சாத்திவிட்டுச் சென்றான்.

மீனாவிற்கு நெஞ்சு கொத்தித்தது.

பயந்தது போலவே ஆயிற்றே? தவறே செய்தாது தனக்கொரு அவப்பெயரா? அவளால் தாங்கவே முடியவில்லை.

சிறு வயதிலிருந்து இது ஒன்றிற்குத் தான் பயந்தாள், விலகி விலகி ஓடினாள். பெற்றவள் கூட இதற்காகத் தான் படிக்க வைக்க மறுத்தாள், அந்தப் படிப்பையும் எவ்வளவுப் போராடிப் பெற்றாள்?

இறுதியில் இதிலே விழுந்துவிட்டாளே? தன் ஒழுக்கத்தைப் பிறர் கேள்வி கேட்பதை ஒரு போதும் மீனாவால் அனுமதிக்க இயலாது.

ஆனால் இன்று தன் நிலை? எல்லாம் குமாரனால் தான் என்றெண்ணியவள் கோபத்தில் ஒருபுறம் தகித்தாள்.

ஒருமுறை குளியலறைக் கதவு மூடியிருப்பதை உறுதி செய்துவிட்டு திரும்பி அறைக் கதவை திறந்தான் குமரன்.

வெளியே வள்ளி நின்றிருந்தார். சற்றும் எதிர்பாராதவன் திடுக்கிட, அவரோ அவனைக் கண்டு முகத்தைச் சுளித்தார்.

“என்னத்தை என்ன விஷயம்?” என்றவன் விசாரிக்க, அவனை ஒரு பொருட்டாகவே மதிக்காதவர் கடந்து உள்ளே வந்தார்.

குமரனின் இதயம் திக்திக்கென்று அடித்துக்கொண்டிருந்தது. மீனாவைக் கண்டுபிடித்தால் தன்னை என்ன சொல்வாரோ? ஆனால் கண்டிப்பாக அவளை அடித்து விளாசி விடுவார். அதை அவனால் தாங்க இயலாதே!

உள்ளே வந்த வள்ளியின் பார்வை அறை முழுவதும் சுழல, “என்னத்தை? எதையும் தேடுறீங்களா?” என்றவன் குறுக்கே வந்தான்.

குமரனுக்கு இப்போது என்ன செய்து வைத்திருக்கிறோம் என நன்கு புரிந்தது.

மீனாவிற்கு தான் எவ்வளவு பெரிய அநியாயம் செய்து வைத்திருக்கிறோம் என்பது புரிய, குற்றவுணர்வில் குறுகினான்.

அவனைக் கேட்டால் ‘ஆமாம், அப்படித்தான்! அழகு மீனாளை விரும்புகிறேன்’ என தயங்காது உரிமையோடு சொல்லிவிட்டுவான்.

ஆனால் அவளால் அவ்வாறு சொல்ல இயலாதே, சொல்லவும் மாட்டாளே! ‘ஐயோ..!’ நெற்றியில் அறைந்து கொள்ள வேண்டும் போலிருந்தது.

அவனின் அத்தை என்ற உரிமையான அழைப்பு வள்ளிக்குப் பிடிக்காது போக, முகத்தை சிலுப்பியவர் விலகிச் சென்றார்.

அவள் கேள்விக்குப் பதில் சொல்லாது உதாசீனப்படுத்தியவர் நிச்சியதார்த்த மாலையை எடுத்துக்கொண்டு வெளியேறினார்.

பின்னே சென்றவன் மறுநொடியே கதவை மூடினான். அதன் பிறகே சீரான சுவாசம் வந்தது. சென்று குளியலறைக் கதவைத் தட்டி, “அழகு வெளியே வா..” என்றழைத்தான்.

அது வரையிலும் குமுறி அழுதவள், வந்து சென்றது தன் அன்னைதான் என்பதும் புரிய, மேலும் நொடிந்து போனாள்.

கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்த மீனா விறுவிறுவென வாசல் கதவை நோக்கி நடந்தாள்.

சட்டென அவள் கரைத்தைப் பற்றியவன், “சாரிடி அழகு.. இப்படியாகும்னு நான் எதிர்பார்க்கலை.. உங்கிட்ட பேசணும்னு மட்டும் தான் நினைச்சேன்” என வேண்ட, கொலைவெறியாக ஒரு பார்வையில் முறைத்தாள்.

சட்டென கையை உதறியவள் கண்களையும் முகத்தையும் துடைத்தபடி அறையிலிருந்து வெளியேறி விட்டாள்.

தலையில் அடித்துக் கொண்ட குமரன் தோய்ந்து போய் கட்டிலில் அமர்ந்தான். அவள் திட்டினாளோ அடித்தாளோ கூடத் தாங்கியிருப்பான் ஆனால் பேசாது சென்றது நெஞ்சைக் குத்திக் கிழித்தது.

அவள் ஒரு பார்வை அவனை ஒரு கேள்வி கேட்டது. ‘எந்தத் தவறும் செய்தாத தன்னைக் குற்றவுணர்வில் தள்ளிவிட்டாயே?’ என்றவள் பார்வை கேட்கையிலே தன் முட்டாள்தனம், மடத்தனத்தை எண்ணி நொந்தான்.

வெகுநேரம் அப்படியே அமர்ந்திருந்த குமரனை சோலையும் மருதும் தேடி வந்து அழைத்துச் சென்றனர்.

மணமகன் அசோக்கும், மணப்பெண் நந்தினியும் மேடையில் அமர்ந்திருக்க, அவர்கள் பெற்றோரும் தாய் மாமன்களும் உறவுகளும் ஊர்ப்பெரியவர்களும் இருபுறம் அமர்ந்து நிச்சியம் பேசி, தட்டு மாற்றினார்.

கீழே வந்து நண்பர்களோடு இருக்கையில் அமர்ந்துவிட்ட போதும் குமரன் நிலையில்லாது தவித்துக் கொண்டிருந்தான்.

அவன் கண்கள் நாலாபுறமும் சுழன்றது மீனாவைத் தேடியது. அவன் தேடல் வெற்றி பெறவே இல்லை, எங்கும் அவளில்லை. வள்ளியும் ராமநாதனும் கூட அங்கிருந்தனர் ஆனால் அவளை மட்டும் காணவில்லை.

குமரனுக்கு ஒருமாதிரி மனம் கனத்துப் போனது. அதே போல் அவளும் என்ன நிலையில் இருப்பாளோ என்ற தவிப்பும் கூடியது.

அணைத்து ஆறுதல் சொல்லிவிட வேண்டும், தன்னிலையை விலக்கிட வேண்டுமென்று தவியாய் தவித்தான். ஆனால் அதற்கான வாய்ப்பில்லாது போக, நொந்து போனான்.

மறுநாள் அதிகாலை திருமணம் இருக்க, அப்போதும் முதல் ஆளாக வந்து மீனாவைத் தான் தேடின குமரனின் கண்கள். ஏதாவது எடுத்து வரச் சொல்கையில் அசோக்கின் வீட்டிற்குச் செல்பவன் மாடியிலிருந்து மீனாவின் வீட்டையும் நோட்டம் விட்டான், அப்படியும் அவன் பார்வையில் சிக்கவில்லை அவள். என்னவோ? ஏதோ? என்ற தவிப்பும் குற்றவுணர்வும் அதிகமாகியது.

அசோக் – நந்தினியின் திருமணம் நிறைவாக நடந்து முடிந்தது.

நந்தினி, நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த பட்டதாரிப்பெண். ஒருவித சாந்தமான முகமும் அமைதியான குணமும் அழகும் பார்பவர்களுக்குப் பிடித்துவிடும் அவளை.

அசோக்கிற்கும் முதல்முறைப் பார்த்ததிலே பிடித்துவிட சம்மதம் சொல்லிவிட்டான். அசோக்கின் அக்காள் தேவியின் உறவினற்கு அறிந்தவர்கள் என்று தான் அறிமுகமானது.

பெண்பார்க்கச் சென்ற போதே அவள் முடிவையும் கேட்டறிந்து கொண்ட பின்பு தான் வீடு திரும்பினான் அசோக்.

இருவருக்கும் பிடித்துப்போக, இரு குடும்பத்திற்கும் நிறைவாக இருக்க, திருமணம் பேசி, ஊரையும் உறவையும் கூட்டி சிறப்பாகத் திருமணத்தை நிகழ்த்தினர்.

அசோக்கின் திருமணத்திற்குப் பின் மீனா என்னவோ போல் இருக்க, பெற்றோர்கள் என்னவென்று விசாரிக்க ஆரம்பித்து விட்டனர்.

மீனாவிற்குள் இன்னமும் அந்த நிகழ்வின் தாக்கமும் அதிர்வுமிருந்தது. அதே நேரம், தனக்கொரு அவப்பெயர் வராது காப்பாற்றிய குமரனின் அன்பும் புரிந்தது. அதிலிருந்து தெளியவே அவளுக்குச் சில நாட்களானது.

மலர்ந்த முகமும் கலகலப்பான பேச்சுமில்லாது அந்த வீடே கலையிழந்து போனது.

வள்ளியோடு அளந்து பேசுபவள் தந்தையிருந்தால் எப்போதும் வளவளத்துக் கொண்டே இருப்பாள். அவள் சிரிப்பும் குரலுமில்லாது அந்த வீட்டிற்கே உயிரற்றுப் போனது போன்றிந்தது.

இரண்டே நாட்களில் அந்த வித்தியாசம் நன்கு தெரிந்துவிட, இருவரும் மாறி மாறி விசாரிக்கத் தொடங்கி விட்டனர். அதிலும் வள்ளி விடவேயில்லை,

பூசாரி வீட்டிற்கு அழைத்துச் சென்று வேப்பிலை அடித்து விபூதி பூசி அழைத்து வந்தார்.

ராமநாதனும் மகளுக்கு பிடித்ததை எல்லாம் வாங்கி வந்தார்.

மீனா, “எனக்கு ஒன்னுமில்லை..” என்றபோதும் அவர்கள் நம்பவில்லை. இது தான் நேரமென, “அப்பா நான் மேல படிக்கலாம்னு நினைக்கிறேன், அப்ளே பண்ணட்டுமா?” என்றாள். எது என்றாலும் நேரடியாக தந்தையிடம் தான் கேட்டுப் பழக்கம்.

அவர் பார்வை இந்தமுறை மனைவியைப் பார்க்க, “இங்க பாரு, உன்னைப் படிக்க வைச்சா நான் பார்க்கிற மாப்பிள்ளையைக் கட்டிக்கிறேன்னு சொன்னியே?” என வந்தார் வள்ளி.

“இப்பவும் அது தான்மா சொல்லுறேன், என்னைப் படிக்க மட்டும் வைங்க.. நீங்க சொல்லுற மாப்பிள்ளை யாரா இருந்தாலும் கட்டிக்கிறேன்” என்றாள்.

“இல்லையில்லை, கல்யாண வயசு வந்திட்டுச்சு.. இதுக்கு மேல படிக்க வைச்சிகிட்டு இருந்தால் ஊரு என்ன பேசும்? நான் மாப்பிள்ளையைப் பார்க்கிறேன், கல்யாணத்தை முடிச்சிட்டு அப்புறம் படி.. இல்லை உன் இஷ்டம் போல என்னவேணாலும் செய்” என்றார் முடிவாக.

அதற்கு மேலும் அவரோட பேச இயலாது என நன்கறிந்தவள் தந்தையைப் பார்க்க, “எங்களுக்கு இருக்கிறதே நீ ஒரு பொண்ணு தானேம்மா? நாங்க திடமா இருக்கும் போதே உனக்கொரு கல்யாணத்தை முடிச்சி வைச்சிட்டால், நிம்மதியா இருப்போம். கவலைப்படாத கண்ணு, நீ படிக்கிறதுக்குச் சம்மதம் சொல்லுற மாப்பிள்ளையைத் தான் அப்பா பார்ப்பேன்” என்றார் வாஞ்சையாகத்  தலை தடவி.

அதற்கு மேலும் இனி அவர்களோடு பேச இயலாது எனப் புரிந்தவள் மௌனமாகிப் போனாள்.

வேலைக்குச் செல்ல அனுமதிக்க மாட்டார்கள் என நினைத்துத் தான் மேற்படிப்பிற்கு கேட்டாள்.

படிக்கச் சென்றுவிட்டால் சில காலம் குமரனிடமிருந்து தப்பிக்கலாம் என்ற எண்ணம். தன் மீதான விருப்பத்தில் அவன் இவ்வளவு தீவிரமாக இருப்பானென அவள் கனவிலும் நினைத்ததில்லை.

குமரனின் காதலும் அன்பும் புரிந்த போதும் அவளால் ஏற்க இயலவில்லை. இப்போதும் விலகி ஓடிவிடத் தான் துடித்தாள்.

சிலந்தி வளைக்கும் தவறுதலாக சிக்கிக்கொண்டு தவிக்கும் பூச்சி போன்றானாள்.

அவள் தப்பிப்பதும் சிலந்திக்கு இரையாகிச் சிதைவதும் காலத்தின் விளையாடல்.

Advertisement