Advertisement

அத்தியாயம் 10

மீனாவிற்குத் தேர்வுகள் முடியும் வரை குமரன் பணிக்குச் செல்லாமல் ஊருக்குள் சுற்றியதில் நிகழ்ந்த தன்மை, ராமநாதன் அவனைப் பார்த்தால் முகம் திருப்பாமல் செல்வது தான்.

எங்குப் பார்த்தாலும், “என்ன மாமா..?” என்றோ, “வணக்கம் மாமா..” என்றோ குரல் கொடுத்து விடுவான்.

முன்பெல்லாம் அவன் பேசமாட்டான், அவரும் கண்டும் காணாது போலே சென்றுவிடுவார். இப்போது நின்று குரல் கொடுப்பதும், டீக்கடைக்குள் நுழைந்தாலே, “வாங்க, உக்காருங்க மாமா..” என எழுந்து மரியாதை கொடுப்பவனை என்ன சொல்ல? நின்று பதில் பேசாவிட்டாலும் ஒரு தலையசைப்பை மட்டும் கொடுத்துவிட்டு ஒதுங்கி விடுவார்.

அதே வேளை, மறுபுறம் வேலுநாச்சியின் ஆசைப்படி குமரனுக்குப் பெண் தேடும் படலமும் அதிரடியாக நடந்து கொண்டிருந்தது. அவர் ஆசைப்படி படித்த, அழகான பெண்கள் குமரனின் படிப்பைக் குறையாக எண்ணி நிராகரித்தனர்.

அதையும் தாண்டி வசதி பார்த்து வரும் சம்பந்தமும் கிராமத்தில் தங்கள் பெண் வாழாது, நகரத்தில் குடித்தனம் வைப்பீர்களா? எனத் தடாலடியாக கேட்டார்கள். இதெல்லாம் கேட்க, வேலுநாச்சிக்கு மனம் ஒப்பவேயில்லை.

“இவ என்ன சினிமாக்காரி மாதிரி பவுடர அப்பி, உதட்டுல சாயம் பூசி..”

“இது என்ன கண்ணாடி போட்டிக்கிட்டு இருக்கா?”

“ச்சே.. தலை முடி மொத்தமும் செம்பட்டை அடிச்சி வைச்சிருக்கா.. தலையை விரிச்சிப் போட்டு நிக்கிறதைப் பாரு, நம்ம குடும்பத்துக்கு ஆகுமா?”

“நிக்கிற தோரணையே சரியில்லை.. பல்லு எத்துனாப்புல தெரியுதே..”

அதற்கும் மேலாக சம்மதித்து வரும் சிலரின் புகைப்படங்களைப் பார்க்கும் வேலுநாச்சிக்குக் குறைகள் மட்டுமே தெரிந்தது, எதுவும் திருப்தியாக இல்லை.

“அம்மா, இந்த காலத்துல பொதுவா படிச்ச புள்ளைங்க எல்லாம் இப்படித்தான் இருக்கும்” என சுந்தரமூர்த்தி சமாதானம் சொல்லிப் பார்க்க, “அதுக்குன்னு இப்படியா வர்ற முன்னாடியே குடும்பத்தைப் பிரிக்காளுங்க?” எனக் கொதித்தார்.

“குமரனுக்கு இஷ்டம்னா மதுரைல வீடு வாங்கி தனிக்குடித்தனம் வைச்சிடலாம். இதெல்லாம் காரணம்னு சொல்லி தட்டிக்கழிக்காம பாரும்மா..” என்ற சுந்தரமூர்த்தியின் வாதத்திற்கு, “அது எப்படி? குமரனுக்குப் பொண்டாட்டியா மட்டும் இருந்தா போதுமா? இந்த வீட்டுக்கு மருமகளாவும் இருக்க வேண்டாமா? எனக்குப் பின்னால இந்த வீட்டை.. உன்னையை பார்த்துக்க ஆள் வேண்டாமா?” எனப் பொருமினார்.

“அப்படின்னா அதிகம் படிச்ச புள்ளையைத் தேடாம, இந்த வீட்டுக்குத் தோதுபடுற புள்ளையாப் பாரு. படிச்ச புள்ளைங்க அவங்க தொழில், வேலை, வாழ்க்கை முறைன்னு நகரத்தைதான் எதிர்பார்க்கும். நம்ம பக்க பழக்க வழக்கமெல்லாம் தெரிஞ்சி வளர்ந்த புள்ளையப் பார்த்தாதான் சரிப்படும்”

யோசித்துப் பார்த்தாள் மீனாவைப் போல் அதிகம் படித்த அழகானப் பெண்ணைத் தேடும் வேலுநாச்சிக்கு அவர் கொள்கையிலிருந்து இறங்கி வரவே மனம் வரவில்லை.

அத்தனையும் குமரன் அறிய, நடந்து கொண்டிருந்தது தான். தனக்குச் சம்மதமே இல்லை என்பது போல் சுவாரஸ்யமாக வேடிக்கை மட்டும் பார்த்திருந்தான்.

“அப்படியெல்லாம் சொல்ல முடியாது, அந்தக் காலத்துலையே நம்ம ஜெயராணி படிச்ச புள்ளைத்தானே? உன்னைக் கட்டிக்கிட்டு இங்க வந்து வாழலையா?” என்க, “அதுக்கு ஜெயராணி மாதிரி பொண்ணுக்கு இப்போ எங்க போவ?” என்றார்.

தன் எதிர்பார்ப்பை நோக்கி வருவதில் குமரனுக்கு உள்ளுக்குள் குதூகலம். மேலும் மௌனமாக வேடிக்கை பார்த்திருந்தான்.

“ஏப்பு, அப்படியென்ன ஒருத்தி கூடவா இல்லாம போயிட்டா?”

“இருக்கும். ஜெயராணி மாதிரி அவள் வீட்டுப் பொண்ணு தான் இருக்கும், அதாவது ராமநாதன் மச்சான் மகள் தான் இருக்கா..” என்ற சுந்தரமூர்த்தியின் பதிலுக்கு, விளக்கெண்ணைய்யையும் வேப்பெண்ணைய்யையும் குடித்ததைப் போல வேலுநாச்சியின் முகம் கோணியது.

குமரனுக்குச் சிரிப்பு வெடித்துக்கொண்டு வந்தது. அதே நேரம், தந்தை தன் ஆசையை அறிந்திருக்கிறாரோ என்ற சந்தேகமும்.

அழகாகவும் படித்தும் அதே போல், இந்த வாழக்கை முறையிலும் வளர்ந்த பெண் என்று பார்த்தால் இறுதியில் மீனாதான் வந்து நின்றாள்.

அவளை மாதிரி வேண்டுமென்று தேடிக்கொண்டிருந்த வேலுநாச்சிக்கு.. அவள் மட்டும் தானென்றால் ஏற்றக்கொள்ள மனம் ஒப்பவில்லை. ஆனால் அவள் யாரென்று அறியும் முன் பேருந்தில் முதல்முறையாகப் பார்த்த போதே பிடித்திருந்தது நிஜமே.

மீனா ஏற்பதில் பிரச்சனையில்லை, அவள் வள்ளியின் மகள் என்பதால் தான் வேலுநாச்சி வெறுத்தார்.

“அதெல்லாம்.. ஒத்து வராதுப்பு..” சட்டென முகத்தை வெட்டி, சிலுப்பலோடு  மறுக்க, “இதை நாம பேசி ஆகப் போறதென்னம்மா? கட்டிக்கிட்டு வாழப்போறது அவன் தானே? அவங்கிட்ட எப்படி பார்க்கணும்னு கேளும்மா..” என இறுதியாக உரைத்தார் சுந்தரமூர்த்தி.

தந்தை சென்றதும், எழுந்து அப்பத்தாவின் அருகில் வந்து நின்றான் குமரன்.

அவன் விருப்பத்திற்கு மாறாக இருவரும் கட்டாயத்தில் எதுவும் செய்திட மாட்டார்கள் என்பதில் அவனுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை.

“பெரியாளுக நாம தான் பார்த்து முடிச்சி வைக்கணும். அவனுக்கு என்ன தெரியும்? சின்னப் பையன்..” என்ற வேலுநாச்சியின் கழுத்தைக் கட்டிக்கொண்டவன், “சின்னப் பையலுக்குக் கல்யாணம் பண்றதெல்லாம் சட்டப்படி தப்பு அப்பத்தா, அப்புறம் புடிச்சி ஜெயில்ல போட்டுடுவாய்ங்க பார்த்துக்கோ..” என்றான் சிரிக்காமல்.

அவனை விலக்கி விட்டவர், “அதெல்லாம் உனக்குக் கல்யாண வயசு வந்துடுச்சுப்பு. உன் கூட்டாளி பசங்க எல்லாம் முடிக்கலையா? இந்தா.. இந்த அடக்கட்டைப் பையலுக்குக் கூடப் பொண்ணு பார்த்து உறுதியாகிருச்சே..” என்றார் பொருமியபடி.

குமரன் குலுங்கிச் சிரிக்க,“எப்படி ராசா பார்க்கட்டும்? உன் ஆசையைச் சொல்லு?” என்றார். அத்தனையும் போகட்டும் அவன் ஆசைப்படி பார்ப்போமே என்ற எண்ணம்.

“ஒரே ஆசை தான். எங்கம்மா மாதிரி இருக்கணும்..” என்றவன் செல்ல, அவன் அன்னை மாதிரி என்றால் அது மீனா தானே என யோசித்தார் வேலுநாச்சி. அத்தனை கோட்டையும் அழித்து முதலிருந்து மீண்டும் கோடு போட வைத்திருந்தான் குமரன்.

விடிந்தால் அசோக்கின் திருமணம்.

முதல்நாள் இரவு பரிசம் போடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. மாலை நேரமே பக்கத்து வீடான மீனாவின் வீட்டில் பாதி உறவுகளும் ஊர் பெண்களும் அமர்ந்து தாம்பூலம் அடுக்குவது, பூக்கட்டுவது, லட்டு பிடிப்பது என வேலையைத் துவங்கியிருந்தனர்.

பெண்கள் கூடிவிட்ட, அந்த இடமே கலகலப்பாக இருக்க, ஊர்க்கதை, உறவுக்கதை எனப் பல கதைகளும் அங்கே பேசப்பட்டுக்கொண்டிருந்தது.

மீனா, விருந்தினருக்குத் தேநீர் வைத்து விட்டு சுத்தம் செய்து கொண்டிருந்தாள்.

அங்கிருக்கும் பெரும்பாலானவர்களை மீனாவின் அழகும் அமைதியும் கவர்ந்திருக்க, வள்ளியிடம் விசாரிக்க ஆரம்பித்திருந்தனர்.

“என்ன வள்ளியத்தா? மீனா புள்ளைக்குப் படிப்பெல்லாம் முடிச்சதா?” என ஒருவர் ஆரம்பிக்க, “சின்ன வயசுல பார்த்தது, ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு வந்திட்டாளே? எம்புட்டு அழகா இருக்கா..!” என வியந்தார் மற்றொருவர்.

“படிப்பெல்லாம் முடிச்சது, இன்னும் இந்த சர்டிபிக்கேட் எல்லாம் வாங்க வேண்டியிருக்கு அம்புட்டுத்தான்..” என வள்ளிப் பதில் சொல்லும் போதே, “இம்புட்டு நம்ம சொந்தப் பந்தத்துல யாரும் பொம்பளைபுள்ளையை இவ்வளவு படிக்க வைச்சதில்லை.. நீ சாதிச்சிட்டடி வள்ளி..” ஒருத்தி பாராட்ட, “ம்க்கும், சமைச்சபுள்ளையை வீட்டுல வைச்சிருக்கிறது அடிமடியில நெருப்பைக் கட்டிக்கிட்டு இருக்கிறதுக்குச் சமானம், சட்டுப்புட்டுன்னு ஒரு கல்யாணத்தைக் கட்டி வைச்சிடுப்டுப்பு” என்றாள் ஒரு கிழவி.

“என்ன மதினி? சொந்தத்துல கொடுக்கிற நினைப்புல இருக்கிங்களா?” என ஒருத்தி தூண்டில் போட, “அப்படியெல்லாம் யாருமில்லை, எல்லாம் பணம் வந்தால் குணம் மாறிப் போயிடுற ஆளுகளோட உறவென்ன வேண்டி கிடக்கு?” என்ற வள்ளி சிலுப்பிக் கொண்டார்.

மீனாவிற்கு அதற்கு மேல் எதையும் காது கொடுத்துக் கேட்க முடியவில்லை. விறுவிறுவென குளித்து முடித்து, ஒரு புடவையைக் கட்டி அலங்கரித்துக் கொண்டு மண்டபத்திற்குக் கிளம்பி விட்டாள்.

“அப்போ மதினி, அசல்ல பார்ப்பிங்க போலிருக்கு?” என்றொருத்தி மேலும் துருவ, “ஆமாம், உன் சொந்த பந்தத்துல அதிகம் படிச்சி, வேலையில இருக்கிற பையன் இருந்தால் சொல்லு.. நல்ல குடும்பமா இருக்கணும். எனக்கு ஒரே ஆசை தான், என் மகள் அழகுக்கும் படிப்புக்கும் குறையில்லாத மாப்பிள்ளைய பார்த்திடணும், இம்புட்டும் அவள் ஒருத்திக்குன்னு தான் சேர்ந்து வைச்சிருக்கேன். இனியும் அவளுக்குத்தான்..” என்றார் எதிர்பார்ப்பும் ஆசையுமாக.

கேட்டிருந்த அத்தனை பெரும் வாயடைத்துப் போனனர்.

ஊரின் மையத்திலிருக்கும் மீனாட்சி அம்மன் கோயில் மண்டபம் அது. தற்போது நவீனமாகக் கோயில் நிர்வாகத்தால் கட்டப்பட்டது. ஊரின் அத்தனை சுபநிகழ்ச்சிகளும் இங்கு தான் நிகழும்.

அசோக்கின் உடன் பிறந்த அக்காளுக்குத் திருமணம் முடிந்து ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டது, ஆறு வயதில் ஒரு பெண் பிள்ளையும் இருந்தாள்.

மாமனான ஆறுமுகத்தின் குடும்பத்திற்கும் அவர்களுக்கும் பேச்சு வார்த்தை இல்லாமலிருக்க, அவர் பெண்ணை வெளியில் கொடுக்கவுமே, அசோக் வீட்டில் இவனுக்குப் பெண் பார்க்கத் தொடங்கிவிட்டனர்.

கடந்து இரண்டாண்டுகளாகவே அசோக்கிற்குப் பெண் பார்த்துக் கொண்டிருக்க, இப்போது தான் அக்காள் சொந்தத்தில் தெரிந்தவர்கள் மூலமாக இந்த இடம் அமைத்திருந்தது.

வாசலில் வாழைமரம், தோரணம் கட்டுவது, வண்ண சீரியல் விளக்குகளும் ஒலிபெருக்கிகளும் வைப்பது என அலங்கார ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது.

மாப்பிள்ளை வீட்டினரில் பெண்ணழைப்பிற்குச் சென்றிருந்தவர்கள் இன்னும் வரவில்லை.

சோலை கவனித்து கொண்டிருக்க, குமரனும் மருதுவும் சேர்ந்து வரவேற்பு பேனரைக் கட்டிக்கொண்டிருந்தனர்.

“ரைட்டுல கொஞ்சம் இழுத்துக் கட்டு பங்காளி.. இன்னும் நல்லா.. அங்கிட்டு இன்னும் நல்லா..” எனக் கீழிருந்தே சோலை உரைக்க, “வர வர நாட்டுல இந்தத் தொழில் அதிபருங்க தொல்லை தாங்க முடியாம போச்சுயா குமரா..” என சலித்துக் கொண்டான் மருது. 

பட்டுவேட்டிச் சட்டையில் உள்ளிருந்து வந்த அசோக் அவனருகில் நிற்க, “ஏய் அசோக்கு, படு சோக்கா.. இருக்கானையா..” என மருது மேலிருந்தே கூவ, “குரங்காட்டம் தாவிக்கிட்டு நிக்கிறதைப் பாரு, விழுந்து கிழுந்து தொலைச்சிடாதீங்க, இறங்குங்கடா” என அசோக் அழைத்தான்.

“என்ன அடக்கட்டை? எப்படி எங்க ஏற்பாடு?” எனச் சோலை தலையாட்டிக் கேட்க, “எப்படி சும்மா தோரணையா இருக்கா?” என்ற கேள்வியோடு, குரங்கு போலே குமரனும் மருதுவும் மேலிருந்து குதித்தனர். நி

மிர்ந்து பார்த்த அசோக்,  “ஏய்.. என்னடா பண்ணி வைச்சிருக்கீங்க..?” எனப் பதறினான். 

ஏனெனில் மணமகன் என்ற இடத்தில் அடக்கட்டை அசோக் என்று அச்சிட்டிருக்க, பெண் வீட்டினர்கள் பார்ப்பார்களே, மானம் போயிற்று என நொந்தான்.

“ஏய்.. ஏய்.. அடக்கட்டைங்கிறது என்ன நான் படிச்சி வாங்கின பட்டமாயா? அதை ஏன்யா பெயரோட சேர்ந்துப் போட்டுருக்கீங்க?” என நோக, “அடக்கட்டை அசோக்.. அதானே உன் பெயரு?” எனப் புதிதாகக் கேட்டான் சோலை.

“அடைமொழியெல்லாம் அவ்வளவு அசால்டா விட்டுறக் கூடாதுடி மாப்பிள்ளை..” எனக் குமரன் பெருமை பேச, “ஐயோ.. நோகடிக்கிறாங்களே..” எனப் புலம்பினான் அசோக்.

“அது சரி, புது மாப்பிள்ளை.. நீ எதுக்கு வாசல்ல வந்து நிக்கிற?” எனக் குமரன் தோளில் தட்டியபடி கேட்க, “பொண்ணு அழைப்பு இப்போ ஆரம்பிச்சு உங்கிட்ட பொண்ணு வர நாளைக்கு சாயந்திரம் ஆகிடும்.. கொஞ்சம் பொறுங்க பங்காளி” என மருது கேலியுரைத்தான்.

“பொறுமையா? மாப்பிள்ளை எப்பவும் டாப் கியர் தான்?” என மேலும் குமரன் சீண்ட, உதட்டில் கட்டுப்படுத்த இயலாத புன்னகையோடு முகம் வெட்கத்தில் மலர்ந்தது அசோக்கிற்கு.

“அலப்பறையைக் கூட்டாம நில்லுங்கடா?” எனக் கண்டிக்க, நினைத்தும் குரல் குழைந்து வர, அதற்கும் அவர்கள் கேலி செய்தனர்.

கண்டுகொள்ளாதது போலே கை கடிகாரத்தில் பார்வையைப் பதித்தான் அசோக்.

“ஏன் பங்காளி? பொண்ணழைப்புக்குச் சுந்தரா ட்ராவல்ஸ்ல பஸ் புக் பண்ணிட்டீங்களா? இம்புட்டு நேரமாகியும் காணும்?” எனச் சோலை சந்தேகமாகக் கேட்க, “சுந்தரா ட்ராவல்ஸா..? கல்யாணத்துக்குப் புக் பண்ணா புள்ளை காதுகுத்துக்குத் தான் வந்து சேரும், போ” என மருது கேலியுரைத்தான்.

குமரன் சிரிப்பும் முறைப்புமாக மருதுவின் முதுகில் ஒரு அடி வைக்க, “பொண்ணே வரலை.. அப்புறம் எங்க புள்ளைக்குக் காது குத்த?” எனச் சோலைப் பரிதாபப்பட, அனைவரும் சிரித்தனர்.

“ஆமாம், புதுமாப்பிள்ளை நீ போய் ரெடியாகாம இங்கென்ன பண்ற?” எனக் குமரன் கேட்க, “டேய், பொண்ணை வரவேற்க அவனே வந்திருக்கான்..” என்றான் மருது சீண்டலாக.

நொந்து போன அசோக், “டேய், போதும்டா.. போய் வேலையைப் பாருங்கடா. குமரா நீ வந்து சென்டு பாட்டிலை எடுத்துக் கொடு” என வேண்டினான்.

“எது? அந்தச் சிங்கப்பூர்… சென்டு பாட்டிலா?” குமரன் ராகமாக இழுக்க, மற்ற இருவரும் சிரித்தனர்.

கையெடுத்து வணங்கிய அசோக், “யோவ்.. அந்த அண்டாவாயன் அரை கிலோ முந்திரியை முழுங்கிடுவாயா.. போய் மாஸ்டரை கவனிங்க” என்க, “விழுந்தே விட்டானடா..” என்ற கேலிச் சிரிப்போடு சோலையும் மருதுவும் கிளம்பினர்.

குமரனின் புறம் திரும்ப, அவன் பார்வை அங்கில்லை. சற்று தொலைவில் கையில் பூத்தட்டோடு வந்து கொண்டிருந்தாள் அழகு மீனாள்.

இளம் பச்சைப்பட்டில் தோளில் ஆடும் மொட்டு மல்லிச் சரமும் கழுத்தில் வெள்ளை, பச்சைக் கற்கள் பதித்த அட்டிகையும் செவ்விதழில் குறுநகையும்  மினுமினுக்க, ஜொலிஜொலிக்கும் அழகோடு வந்தாள்.

மதுரை மீனாட்சியே மரகதப்பட்டில் எழுந்து போல் இருந்தது அழகு மீனாளின் வருகை.

மேனி சிலிர்க்க, குமரன் தன்னை மறந்து பார்த்து நிற்க, அசோக்கும் ஒரு நொடி பிரமித்தான்.

மீனா நிமிர்ந்தும் அவனைப் பாராது, அவர்களைத் தாண்டி உள்ளே சென்றுவிட, மெல்லக் குமாரனைச் சுரண்டிய அசோக், அவன் கைகளைப் பற்றி இழுத்தான்.

“நிம்மதியா சைட் அடிக்கச் சுதந்திரம் இருக்கா..? இவன் மட்டும் புது மாப்பிள்ளையாகிட்டான்” என்ற புலம்பலோடு அசோக்கின் இழுப்பிற்குச் சென்றான் குமரன்.

மீனா உள்ளே வர, எதிரே வந்த பெண் அவள் கையிலிருக்கும் தாம்பூலத்தை வாங்கிவிட்டு, “வாசல்ல ஒரு கோலத்தைப் போட்டுட்டு மீனா, உனக்குத் தான் ரங்கோலி அழகா வருமே?” என்று அனுப்பினார்.

மீனா மீண்டும் வாசல் நோக்கி வர, எதிரே வந்த குமரன் அதைக் கண்டுவிட்டு திரும்ப முயல, அசோக் விடாது பிடித்து இழுத்துக்கொண்டு நடந்தபடி, “அடேய்.. அந்தச் சிங்கப்பூர் சென்டு பாட்டில்தான் இப்போ முக்கியம்..” என்றான்.

தவித்த குமரன், “அதைத்தான் மச்சான் சிங்கபூருக்கே போய் வாங்கிட்டு வரேன்.. கையை விடு..” என நழுவ முயல, அசோக் விடவில்லை.

கடுகடுப்போடு அறைக்குள் வந்து எடுத்துக் கொடுக்க, அசோக் தயாராகத் தொடங்கினான்.

குமரன் அங்கிருக்கும் பால்கனியில் நின்றபடி கீழே முற்றத்தை எட்டிப்பார்த்தான்.

சரியாக அழகு மீனாள் கோலமிட்டுக் கொண்டிருந்தாள். கோலப்பொடியைக் கிள்ளி அள்ளும் பாங்கும், வளைவு நெளிவுகளுக்குச் சுழலும் கரமும் என நின்று நிதானமாக, இமைகொட்டாது ரசித்தான்.

அப்போது தான் கவனித்தான், அவள் அணிந்திருப்பது அன்று டிபன்பாக்ஸில் வைத்து, அவன் தந்த வளையல்கள்.

வீட்டில் பெண்களின் உரையாடல் எல்லாம் மீனாவை ஒருவித எரிச்சலில் கொதிக்கவிட, அதில் எதை அணிகிறோம் என்றும் யோசிக்காது புடவைக்குப் பொருத்தமான வளையல் என்றெண்ணி அணிந்திருந்தாள்.

இந்த நொடி வரை, அவளுக்கு இது குமரன் தந்தது என்ற ஞாபகம் வரவில்லை. ஏனோ இது நாள் வரையும் அவள் அதை அணிந்ததில்லை, அதே போல் அவன் தந்த அன்றே தூக்கிப்போட நினைத்தும் முடியவில்லை.

ஆனால் இதைக் கண்டுவிட்டு இந்த நொடி குமரன் தரையிலில்லை, ஆகாயத்தில் ஆனந்தமாக மிதக்கத் தொடங்கிவிட்டான். மீனாவிற்கும் தன்னைப் பிடிக்கும் என்றெல்லாம் கற்பனையில் உலா வர, முதுகில் தட்டி அழைத்த அசோக், “போதும், ஸ்டாப் வந்துடுச்சி.. இறங்கு ராசா..” என்றான்.

கடுகடுப்போடு திரும்பிய குமரன் முறைக்க, “கடைசியில நீ மட்டும் தான் மாப்பிள்ளை நம்ம சங்கத்துல ஒத்த சாமியார இருக்கப் போற பாரு..” என்றான் அசோக்.

அதற்குள்ளாக, “ஏதாவது நல்ல வாக்கு சொல்லுறீயாடா?” என்றபடி குமரன் மொத்தத் தொடங்க, “டேய்.. டேய்.. புதுமாப்பிள்ளைடா நானு.. சட்டை கசங்கிடும் விடுடா..” என உருவிக்கொண்டான் அசோக்.

குமரன் முகமே தொங்கிவிட, “ஒருவேளை, மீனாவுக்கு உன்னைப் பிடிக்கலையோ என்னவோ?” என அசோக் கேட்டு முடிக்கும் முன்பே, “இல்லையில்லை.. அவளுக்கு என்னைப் பிடிக்கும். என்ன ஒத்துக்கத்தான் மாட்டாள்..” என்றான் குமரன்.

அவன் உதடு மட்டுமில்லை உள்ளிருந்து மனமும் அதைத்தான் சொல்லியது. ஏதோ ஒரு நம்பிக்கை, அது தான் அவனை இயக்கியது.

“அப்போ அவளை விடு..” என்னும் போதே குமரன் கொலைவெறியில் முறைக்க, “சொல்லுறதை முழுசா கேளு மாப்பிள்ளை, அவளை விட்டுட்டு உன் மாமன் பின்னாடி போ.. போய் பொண்ணு கேளு. அப்படியே உங்க வீட்டுலையும் பேசி அரேன்ஜ் மேரேஜா முதல்ல கல்யாணத்தை முடி.. அப்புறம் காதலிக்கிற வேலையைப் பாரு..” என அறிவுறுத்தினான் அசோக்.

அதில் பாதியை கூட செவியில் வாங்காது அறையிலிருந்து குமரன் வெளியேறிவிட்டான். அசோக் எட்டிப் பார்க்க, மீனா வரைந்திருந்த கோலம் முழுமையுற்றிருக்க அவளும் இல்லை அங்கு.

Advertisement