Advertisement

அத்தியாயம் 09

ஒரு வாரம் ஓடியிருந்தது.

அதன் பின் மீனா குமரனின் கண்ணிலே படவில்லை. இப்போது நலமாக உள்ளாளா? குணமாகிவிட்டாளா? என அறியும் ஆவல் இருந்தது. ஆனால் யாரிடம் சென்று விசாரிப்பான்?

அதிகாலை நேரம் அசோக் வீட்டிற்குச் செல்பவன் மொட்டை மாடியேறி மீனாவின் வீட்டை எட்டிப் பார்த்ததும் உண்டு. அப்போதும் அவள் தரிசனம் கிடைக்கவில்லை, ஆனாலும் ஆறுதலாய் அவள் குரல் கேட்க, அதில் ஒரு நிம்மதி உணர்வை அடைந்தான்.

அதற்கெல்லாம் காரணம் அவன் மனதில் அழுத்திக்கிடந்த அழுத்தம். தன்னால் தான் மீனாவிற்கு இந்த விபத்து ஏற்பட்டதோ? என்ற குற்றவுணர்வு.

அன்று வள்ளியின் வசைபாடலில் ஒன்று புரிந்தது. தன்னைத் தவிர்க்கத்தான் மீனா பிடிவாதமாக வண்டி வாங்கி இருக்கிறாளென.

பட்டாம்பூச்சியாய்ச் சுற்றித் திரிந்தவள் தன்னாலே முடங்கிவிட்டாளோ என்ற பாரம் அதிகமாக அவனை அரித்தது.

அதே போல் மற்றொரு மனமோ அவன் நிலைக்கு வாதிட்டது. அப்படியென்ன நான் செய்துவிட்டேனென என்னை இவ்வளவு விலக்கி வைக்கிறாள்.

என்னைத் தவிர்க்க ஏன் இந்த ஓட்டம்? பேச முயன்றது தவறா? அதற்கான வாய்ப்பையும் தான் அவள் தரவில்லையே? மனம் வெம்பினான்.

கரு மேகங்கள் சூழ, மண் வாசம் மேலெழும்பும் மாலை நேரம். சிறுவர்களுக்குக் கபடி விளையாடக் கற்றுக் கொடுத்தபடி, குமரனும் விளையாடினான்.

மழை பொழியும் என்ற எதிர்பார்ப்பு வர, அனைவரையும் வீட்டிற்கு அனுப்பி விட்டு, அவனும் தோப்பு வழியாக வீடு நோக்கி வந்து கொண்டிருந்தான்.

வள்ளி மாடுகளைப் பால் கறக்கவென வீட்டிற்கு ஓட்டி வந்திருந்தார்.

சில துளி சாரல்கள் விழ, “மீனா, மேய்ச்சலுக்கு இரண்டு கன்னுக்குட்டியை தோப்புல கட்டி விட்டுட்டு வந்தேன்.. மழை வலுக்கிறதுக்குள்ள சீக்கிரம் போய் அவுத்து விட்டு, பத்திட்டிட்டு வா..” எனக் குரல் கொடுத்தார்.

அவருக்குப் பால் வியாபாரி கனகைக் கண்காணிக்கும் முக்கிய பொறுப்பு இருந்தது. வீட்டிற்குப் பின் புறம் சற்று நடக்கும் தொலைவில் தான் தோப்பு இருந்தது.

முழுதாகக் குணமாகியிருந்த மீனாவும் விறுவிறுவெனச் சென்று, கன்றுகளை அவிழ்த்து மண் சாலைக்கு ஓட்டி வந்திருந்தாள். அப்போதுதான் பின்னால் வரும் குமரனைக் கண்டு கொண்டவள் சற்று தாமதித்து நிற்க, நெருங்கி வந்தவனும் அவளைக் கண்டு கொண்டான்.

மெல்ல நடந்தவன், அவளை நெருங்கியதும் கடந்து செல்ல முயல, “கொஞ்சம் நில்லு..” எனக் குரல் கொடுத்தாள். சுற்றும் முற்றும் அவர்களைத் தவிர யாரும் அங்கில்லை என்ற எண்ணம்.

‘என்னடா இது அதிசயம்? இவளா அழைத்தாள்? தன்னையா?’ என்று பிரமித்தபடி திரும்ப, சட்டென மழை சடசடவென கனத்துக் கொட்டத் துவங்கியது. ‘எத்தனைமுறை நான் பேச முயன்றும் அப்போது எல்லாம் விலகி ஓடியிக்கிறாள், இன்று அவளாகப் பேசுகிறாளே?’ என்ற கேள்வியோடு தான் அவள் பக்கம் பார்த்தான்.

அதற்குள் கன்றுகளை ஓட்டிக்கொண்டு ஒரு பெரிய வேப்பமரத்தின் அடியில் நின்றிருந்தவள், அவன் நனைவதைப் பார்த்து கை அசைத்தாள்.

அப்போதும் மெல்ல வந்தவன் மழைக்கு ஒதுங்கி, அவளை விட்டு சற்று தள்ளியும் தான் நின்றான்.

கைகள் வெப்ப மரத்தின் பட்டையைச் சுரண்டிக் கொண்டிருக்க, முதலில் அவளே பேசட்டும் என்றெண்ணத்தில் அவள் முகம் பாராது தவிர்த்து நின்றான்.

‘நிக்கிற தோரணையைப் பாரு, முகத்தைக் கூட பார்க்க மாட்டானோ? இன்னும் ஏன் பார்க்கப் போறான்? அதான்.. அவன் அப்பத்தா அவனுக்குப் பொண்ணு தேடுதே..!’ என காரணமே இன்றி மனதில் கறுவினாள் மீனா.

“அன்னைக்கு செய்த உதவிக்கு தேங்க்ஸ்..” என்றாள் ஒற்றை வார்த்தையாக. இத்தோடு பாக்கி வைக்காது முடித்துக் கொள்வோமே என்ற எண்ணம் அவளுக்கு? இதற்கு முன் மட்டும் என்ன இருந்ததாம்? என்ற யோசனை எல்லாம் இல்லை.

அவள் குரலுக்கு முகம் பார்த்தவன், அவள் உதிர்த்த வார்த்தையை  விடுத்து, அசைந்த இதழ்களில் கவனம் பதித்தான். ஈரம் ஊறிய இதழ் என்னவோ செய்தது. மழைத்துளிகள் முத்து முத்தாய் அழகு முகத்தில் சிதறிக்கிடக்க, நெற்றி, காதோரம் நனைத்த முடிகள் முகத்தோடு ஒட்டிக் கிடந்தது. அந்தத் துளிகளும் கூட, நில்லாது அவளை அளக்கும் எண்ணத்தில் மெல்லிய கோடாய் கீழிறங்க, அவனுக்குள் பெரும் தீயே எரிந்தது.

அந்த மோகன முகம் அவனை மயக்கியது. மொத்தமாக சுயநினைவையே இழந்ததைப் போன்ற நிலை.

மழைக்கு நனைத்து நடுங்கிய கன்றுகள் கூட, கதகதப்பிற்கு அவளை ஒட்டிக்கொண்டு உரசி நிற்க, அவள் கைகளையும் தன்னிச்சியாக அதன் உச்சந்தலை, காதோரம் என வருடிக்கொடுத்துக் கொண்டிருந்தது.

அதற்கு இருக்கும் உரிமையும், சுதந்திரமும் அவனுக்குப் பொறாமையையும் ஏக்கத்தையும் ஒருங்கே தூண்டிவிட்டது.

இதற்கு முன் மீனாவை இப்படிப் பார்த்ததுமில்லை, நினைத்ததுமில்லை. அவனே தலையைச் சிலுப்பித் தன்னை நிலைப்படுத்திக் கொண்டவன், நீண்ட மூச்சை இழுத்து வெளிவிட்டான்.

உறக்கத்திலிருந்து விழித்தவன் போலே, “ஹாங்.. என்ன சொன்ன?” என்றவன் வினவ, உன்னிப்பாகப் பார்த்தாள் அவள்.

‘இவன் என்ன மீண்டும் மீண்டும் என்னை வேண்ட வைக்கிறானோ?’ என்ற சினம் அவளிடம்.

அவள் முறைப்பு புரிய, ஒற்றை விரலால் செவியை குடைந்த குமரன், “காது அடைச்சிக்கிச்சி, திரும்ப சொல்லு..” என்றான்.

உதட்டைச் சிலுப்பிக் கொண்டவள் மீண்டும் நன்றியுரைக்க, அவன் விழிகளில் ரசனை, அதரங்களில் ரகசியப் புன்னகை.

“நன்றி எல்லாம் இருக்கட்டும். என் கேள்வி உண்மையா பதில் சொல்லு?” என்றவன் நிறுத்த, வினாவாகச் சுருங்கிய புருவங்கள் அவனைச் சுட்டது. “ம்ம்..” என்று மிதப்பான உத்தரவு.

“புது வண்டி எதுக்கு வாங்கின? பஸ்ல வரக்கூடாதுன்னா? என்னை அவாய்ட் பண்றியா?” என்றவன் நேரடியாகக் கேட்க, இதை எதிர்பாராதவள் திடுக்கிட்டுப் பார்த்தாள்.

நொடியில் தலையும் மேலும் கீழுமாக அசைய, “சரி தான், உண்மையான ரீசன் இதான்..” என்றவள் ஒப்புக்கொண்டாள்.

மீனாவிற்குப் பொய் சொல்ல வராது, அதிலும் அவனே யூகித்துக் கேட்க, சட்டென ஆமாம் என்று விட்டாள்.

நொடியில் குமரனின் முகம் சுருங்கிப்போனது. நெஞ்சில் சுருக்கென்று நெருஞ்சி தைத்த வேதனை. ஏதோ ஒரு வகையில் அவளை நீ சலனப்படுத்தியதால் தானே தவிர்க்க நினைக்கிறாள்? என அறிவு ஆறுதல் சொல்ல மனதைத் தேற்றினான்.

குமரனின் முகம் கண்ணாடியாய் அவன் உணர்வுகளைக் காட்டியது. அவன் வேதனை வதங்கிய முகத்தில் வெளிப்பட, உள்ளுக்குள் ஒரு வித இயலாமை உணர்வில் தவித்தாள் மீனா.

ஆனால் வெளியிலோ ‘என் தவறு என்ன? அவன் கேட்டான், நான் உண்மையை உரைத்தேன்’ என்ற மிதப்பு.

“என்னால தான் நீ பஸ்ல வர முடியலைன்னா, இனி நான் ட்ரிப்க்கு வராம இருக்கேன். நீ ஸ்கூட்டி எடுக்காதே, நல்லபடியா பஸ்ல போய் எக்ஸாம் எழுது. இனி உன்னைத் தொந்தரவு பண்ண மாட்டேன்” என்றான் குமரன்.

உத்தரவு போலச் சொல்லியவன், அவள் உள்வாங்கி பதில் சொல்லும் முன்பே, இலை தூவும் தூறலைத் தாண்டி நடக்கத் தொடங்கியிருந்தான்.

‘நான் என்ன செய்யணும்னு இவன் ஏன் சொல்லுறான்? இவனுக்கு என்ன உரிமை?’ என உள்ளுக்குள் பொருமினாள் மீனா.

காற்றின் அசைவில் இலையிலிருந்து வழியும் துளிகள், சிறு குளம் போலே தரையில் தேங்கிய பள்ளத்தில் விழ, நீரும் சேறுமாய் இருந்த செம்மண் குழம்பி கலங்கியது, மீனாவின் மனம் போலே!

வள்ளியின் உத்தரவும் அதுவே, “இனி ஒழுங்கா பஸ்ல போ. வண்டி எடுக்காதே. அப்படி வண்டியில தான் போவேன்னு அடம்பிடிச்சா நீ பரீட்சையே எழுந்த வேண்டாம். பார்த்துக்கோ..” என்றார் கடுமையாக.

“சரிம்மா பஸ்லையே போறேன்..” என ஒத்துக்கொண்டவள் மனதில் குமரனின் நினைவு. அன்னைக்கு நிகராக அவனும் மனதில் வந்து நின்றான்.

வள்ளி அத்தோடு மட்டும் நின்று விடாது அசோக்கிடம் சென்று, “மீனாவுக்குப் பரீட்சை இருக்கு, பஸ்ல வருவாள்.. கொஞ்சம் பார்த்துக்கோ அசோக்கு” என்றும் உரைத்தார்.

“சரி சித்தி” எனத் தலையாட்டி வைத்தவனுக்குக் குமரனை சமாளிப்பது எப்படி என்ற பெரும் யோசனை.

ஆனால் அந்த யோசனைக்குத் தேவையே இல்லை என்பது போல், குமரன் பணிக்கு வரவில்லை. வேறு வேலையாட்களை அனுப்பி வைத்தான்.

அனைவரும் சொன்னபடி, சரியெனத் தலையாட்டிய மீனா பேருந்தில் தான் சென்றாள்.

முதல் நாளில் குமரன் நிற்கும் இடங்களில் எல்லாம் அவள் கண்கள் சுற்றி வர, எங்கும் அவனில்லை.

‘பரவாயில்லை சொன்னது போலே நடந்து கொள்கிறானே..’ என மெச்சினாள். ஆனால் மறுநாளும் அவள் கண்கள் தேட, நிம்மதிக்குப் பதிலாக, எங்கும் காணாததால் ஏக்கம் உண்டாயிற்று.

தன்னால் வர இயலாது எனப் பேருந்தைக் கவனிக்கும் பொறுப்பை அசோக்கிடம் கொடுத்திருந்த குமரன், வீட்டிலிருந்தான்.

முதல் நாள் கழிய, இரண்டாம் நாளே வேலுநாச்சி விசாரிக்க ஆரம்பித்து விட்டார்.

“போகலை அப்பத்தா, மில்லுல ஆடிட்டிங் வேலை இருக்கு.. வாடான்னு மருது கூப்பிட்டான். என்னதான் அவனே கவனிச்சிக்கிட்டாலும் நாமளும் ஒரு எட்டிப் போய் பார்க்கணும்ல..?” என்றவன் கேட்க, அவன் பொறுப்புணர்வை எண்ணி உள்ளம் குளிர்ந்து போனார் வேலுநாச்சி.

சுந்தரமூர்த்தியிடம், “உடம்புக்கு முடியலைப்பா.. நீங்க கவலைப்படாதீங்க, நான் ஏறுற வரைக்கும் அடக்கட்டை பொறுப்பா பார்த்துப்பான்..” எனச் சொல்லி வைத்தான்.

பொழுது கழியவென நண்பர்கள் கூட்டத்தோடு வந்து அமர்கையில், “ட்ராவல்ஸ் ஆபிஸ்ல கொஞ்சம் வேலையிருக்குன்னு அப்பா வரச் சொன்னாங்க..” என்றிருந்தான்.

கலகலப்பாக இருக்கும் குமரனின் தற்போதைய வாடிய தோற்றம் அனைவரையும் கேள்வி கேட்க வைத்தது.

ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு காரணத்தை உரைத்தாலும் குமரன் இயல்பாக இல்லை என அனைவருக்கும் நன்கு புரிந்தது.

பெரும்பாலும் தன்னறையில் அடைந்து கிடந்தான். சில நேரம் சோலையின் மெக்கானிக் கடையில் வந்து அமர்ந்திருப்பான். மேலும் சில நேரங்களில் சிறுவர்களுக்குக் கபடி கற்றுத் தர சென்றிடுவான்.

குமரன் அலைபேசி இசைக்க, ஏற்றுப் பேசினான். தந்தையிடமிருந்து அழைப்பு வந்திருந்தது. அலுவலகத்திற்கு அழைத்திருந்தார்.

சுந்திரமூர்த்தி சில மாதங்களாகக் குமரனைக் கவனித்துக்கொண்டு தானிருக்கிறார். ஏனோ இந்தச் சில நாட்களில் இன்னும் வாடியுள்ளது பெற்றவருக்கு நன்கு புரிந்தது.

குமரன் பிறந்ததிலிருந்து அவன் மீது உயிரை வைத்திருந்தார். வளரும் போது ஜெயராணியும் வேலுநாச்சியும் அதிக செல்லம் கொடுத்துக்கொண்டாட, அவன் சேட்டைகளைக் கண்டிப்பது சுந்தரமூர்த்தி.

குமரனும் தந்தை கண்டிக்கையில் தன் தவறைப் புரிந்து கொள்வான், மீண்டும் அந்த தவறைச் செய்வதில்லை. அதிலும் ஜெயராணி இறந்த பிறகு, தாய்ப்பாசத்திற்கு ஏங்கி விடுவானோ என முற்றிலும் கண்டிப்பதில்லை, கூப்பிட்டு அறிவுரை சொல்லுவார் அவ்வளவே!

அதே போல், எவ்வளவு வசதியிருந்த போதும் ஆடம்பரம் காட்டாது எளிமையாக வளர்த்தார், எளிய மக்களோடும் பழகவிட்டார். அவனின் நட்பு, படிப்பு என அத்தனையும் அவன் விருப்பத்திற்குக் கொடுத்தார்.

வளர்ந்து நின்றவன், அவரின் முதல் பேருந்தை அவனே பொறுப்பில் எடுக்க, சற்றே சந்தேகத்தோடு கொடுத்தார். ஆனால் அவன் சிறப்பாக கவனித்துக் கொள்வதைப் பார்க்க, மகனை எண்ணிப் பெரும் பூரிப்பு மனதிற்குள்.

இப்போதும் அவர் மகன் இது வேண்டுமென்று கேட்டால் எதையும் செய்துவிடுவார் பாசமிகு தந்தை.

அலுவலகம் சென்று அமர்ந்தவன், “என்னப்பா..?” என்க, “உடம்பு எப்படியிருக்கு..?” என விசாரித்தார்.

என்ன சொல்வது என்றவன் முழிக்கையில், “வா.. எதுக்கு ஒரு எட்டுப் போய் டாக்டர பார்த்திட்டு வந்திருவோம்..” என்றவர் பாசமாக அழைக்க, “வேண்டாம்பா, நல்லாத் தான் இருக்கேன்” என்றவன் மறுத்தான்.

“அப்புறம் ஏன் ஒரு மாதிரி இருக்க? எதுவும் பிரச்சனையா?” என்றவர் கேட்க, ஒரு நொடி மௌனமான யோசனை.

மீனாவின் மீதான விருப்பத்தைச் சொல்ல ஆசை, ஆனாலும் தந்தை ஏற்பார் என அவனுக்கு நம்பிக்கையில்லை. ஆகையால் சொல்ல வந்தவன் அப்படியே விழுங்கிக்கொண்டான்.

‘எதுவுமில்லை’ என்றவன் தலையாட்ட, “அம்மா சொல்லுற எதையும் மனசுல போட்டு வருத்திக்காதே, வயசானது அப்படித் தான் பேசும். அதுவும் வெறும் வாய் வார்த்தைக்குத் தான் பேசும், மனசுல எதுவும் இருக்காது. நீ செஞ்சதும் நல்லது தான்” என்றவர் தட்டிக்கொடுக்க, “சரிப்பா..” எனத் தலையாட்டினான்.

“சரி வீட்டுக்குப் போ..” என்றவர் அனுப்ப, ‘வேலை இல்லை’ என அங்கே இருந்து கொண்டவன், செட்டில் நிற்கும் வண்டிகளைச் சுற்றிப் பார்த்து வந்து பரிசோதித்தான்.

சரி செய்ய வேண்டியதைக் குறித்து வேலையாட்களிடம் உரைத்தான், அனைவரிடமும் நன்கு பேசினான்.

இரவு இருள் சூழவும் வீட்டுற்குக் கிளம்பிய சுந்தரமூர்த்தி குமரனையும் அழைத்துக் கொண்டு உணவகம் சென்றார். கறிதோசையும் இட்லி மீன் குழம்பும் வாங்கி உண்ண வைத்தார்.

சிறுவயதில் இப்படித் தான் வெகுநேரம் கழித்து வேலை முடிந்து வீடு வருகையில் உணவு பார்சல் வாங்கி வருபவர், மகனை எழுப்பி உறக்கத்திலே உண்ண வைப்பார்.

அப்போது உழைக்கும் தந்தைகளின் பாசமெல்லாம் உணவு பார்சலாகத் தான் பிள்ளைகளை வந்து சேர்ந்தது. 

பழைய நினைவோடு, வயிறு நிறைய உண்ட குமரனுக்கு மனமும் நிறைத்துப் போனது. தந்தைக்கான உணவை இவன் ஆடர் செய்ய, இருவரும் உண்டு முடிந்து ஒன்றாக வீடு வந்தனர்.

அன்று சோலையின் கடையில் வேலையில்லாது அமர்ந்திருக்க, “எள்ளு தான் எண்ணைய்க்குக் காயுது நீ என்னத்துக்குக் காயுற?” என்றபடி குமரனின் எதிரில் வந்தமர்ந்தான் அசோக். அன்று அவனுக்கு விடுமுறை நாள்.

“ஹாங்.. வேண்டுதல்” எனக் குமரன் பல்லைக்கடிக்க, “என்ன.. என்ன.. வேண்டுதல்?” என ராகமிழுத்தான் அசோக்.

“ம்ச்..” என உச்சுக்கொட்டியபடி நிமிர்ந்த குமரன், “ம்ம்.. எல்லாம் நம்ம தொழில் அதிபர் ஓகோன்னு வரணும்னு தான்..” எனச் சோலையை கைக் காட்டினான்.

‘என் பெயரை வைச்சி என்ன ஒரண்டை இழுக்கிறான்’ என்ற அதிர்வோடு சோலை பார்க்க, “போ.. மாப்பிள்ளை, நம்ம தொழில் அதிபருக்கு என்ன குறை? இப்போவே ஓகோன்னு தானே இருக்காரு? அது மட்டுமா.. புதுமாப்பிள்ளை தோரணை வேற?” என்ற கேலியுரைத்த அசோக், சோலையின் பக்கம் திரும்பினான்.

“என்னையா தொழில் அதிபரே, நீங்க எம்புட்டுப் பெரிய கொடை வள்ளல்! உங்க புகழ் பாடியே என் தொண்டை வத்திருச்சே, ஒரு டீ கூட வாங்கித் தரப்படாதா?” என்ற அசோக் பாட, “ஓஹோ.. இதுக்கு பெயரு தான் புகழ் பாடாலோ?” என்றவன் முறைப்போடு கேட்டான்.

சிரித்த குமரன், தனது கணக்கில் வாங்கி வருமாறு சைகை செய்ய, எழுந்து சென்றான் சோலை.

குமரனின் தோளில் தட்டியபடி, “அப்புறம் மாப்பிள்ளை..” என அசோக் கேட்க, “என்ன..?” என்ற குமரனின் குரலில் சுரத்தேயில்லை.

“என்ன? மீனா, உன்னை சொல்லிடுச்சா வேணா?”

“ம்ச்..”

“கண்டெக்டர் மாப்பிள்ளையை இல்லை.. கலெக்டர் மாப்பிள்ளை எதிர்பார்க்கும் டேய் அவ அம்மா”

“செத்த சும்மா இருடா..” குமரன் கண்டிக்க, தேநீரோடு வந்தான் சோலை.

வந்தவன், நேராகக் குமரனிடம் சென்று கொடுக்க, “ஏன்? எங்களுக்கு எல்லாம் இல்லையா?” அசோக் எகிறினான்.

சரியாக உள்ளே வந்த மருதுவும் அவனோடு சேர்ந்து கொள்ள, “என்னையா தொழில் அதிபரே? தலைவர் கணக்குல வாங்கக் கூடக் கஞ்சம் பிடிச்சா எப்படி?” என்றான்.

கடுகடுப்புடன் எழுந்த சோலை, “இவிங்களுக்குச் சேவகம் பண்றதே தொழிலா இருக்கு, இதுல தொழில் அதிபருன்னு பெயருக்கு ஒன்னும் குறைச்சலில்லை..” என முனங்கியபடி சென்றான்.

சிரித்தபடியே, “என்ன மாப்பிள்ளை, இந்தக் கோலிக்குண்டன் போனதுல இருந்து ஒரு போன் கூட பண்ணலையே, உங்க யாருக்கும் பண்ணானா?” என மருது விசாரித்தான்.

அசோக் தனக்குச் சம்பந்தமில்லை என்பது போல் மௌனமாக இருக்க, “அது எப்படிப் பண்ணுவான்? நம்ம கூட பழக்கம் வைச்சதால தான் உருப்படாம இருக்கானாம், அதனால தான் வெளியூருக்கே அனுப்புறாராம். பின்ன, எப்படி நம்ம கூட பேச விடுவாரு?” என்றான் குமரன், குறையாக.

“யாரு அப்படிச் சொன்னது?” அசோக் எகிற, “வேற யாரு, உன் அருமை மாமன் தான். எங்க வீட்டுக்கு வந்த அன்னைக்கு அப்பத்தாகிட்ட சொல்லிருக்காப்ல..” என்றான் குமரன்.

பொங்கிய வேகத்தில் அடங்கிய அசோக், “அந்தாளுக்கு வேற வேலையில்லை. பூரா பொய்யா சொல்லிக்கிட்டுத் திரியும்..” என்க, “அதான், ஆரம்பத்துல இருந்தே அவருக்கும் நம்ம சங்கத்துக்கும் ஆகாதே, பின்ன என்ன? விடுங்க பங்காளிகளா..” சமாதானம் உரைத்தான் மருது.

“விடமுடியாதுடா மல்லு வேட்டி… இந்த வருஷத் திருவிழாவுல ஆறுமுகம் மாமனுக்கு ஒரு அபிஷேகத்தை நடத்துறோம், நம்ம சங்கம் சார்ப்பா சரித்திரம் படைக்குறோம்” என அசோக் புஜங்களை மடக்கியபடி உறுதி கூற, மருதுவும் கை கோர்க்க, குமரன் வேடிக்கையாகப் பொங்கிச் சிரித்தான்.

“இவிங்க வேலைவெட்டியில்லையாம இங்கன்ன வந்து பட்றையைப்போட்டு, எஞ்சீவனை எடுக்குறாய்ங்களே” எனப் புலம்பலோடு வந்தான் சோலை.

இரண்டு டம்பளர் தேநீரை நண்பர்களிடம் கொடுத்துவிட்டு அசோக் அருகில் அமர்ந்தான்.

“அப்புறம் என்ன அடக்கட்டை, போன வாரம் பொண்ணு பார்த்தாங்களையா   என்னாச்சு?” என்றவன் விசாரிக்க, அவனோ வார்த்தையன்றி தோல்வி என கையால் சைகை செய்ய, “யோவ், போற போக்கைப் பார்த்தால், கடைசியில உனக்கு இந்தச் சொப்பன சுந்தரி தான் சோடி ஆகும் போல..?” என்றான் கேலியாக மருது.

“கழுதையைக் கட்டி வைக்க வேண்டியதாம், இரண்டும் ஒன்னாவே ஊருக்குள்ள சுத்திக்கிட்டு திரியும். நானும் புதுப் புருஷன் பட்டத்தை அவனுக்குக் கொடுத்திடுவேன்..” என்ற சோலைச் சிரிக்க, “ஒத்தக் கல்யாணத்தை முடிச்சிட்டோம்னு மிதப்புல பேசுற, இருடி மாப்பிள்ளை.. இரு..” என மிரட்டினான் அசோக்.

“அப்படியே செஞ்சிடு குமரா..” என மருது உரைக்க, “ஆமாம், அப்படியே சீரும் சீதனமும் சரியா இருக்கணும். நாங்க சும்மாலாம் சுந்தரா ட்ராவல்ஸ் பஸ்ஸைக் கட்ட மாட்டோம் குமரா.. பார்த்துக்கோ. சரிதானே பங்காளி?” என்ற சோலை மேலும் வம்பிழுத்தான்.

அனைவரும் சிரிக்க, முறைப்போடு முறுக்கிக்கொண்டான் அசோக்.

“ஒத்த ஓசி டீக்கு உங்களோட சவகாசம் வைச்சேன் பாருங்க, என்னைச் சொல்லணும்..” எனத் தன்னை நொந்து கொண்டு, கோபம் போலே எழுந்து சென்றான் அசோக்.

“கோவிச்சிட்டுப் போனாலும் இங்கத்தான் வரணும்..” எனக் குமரன் குரல் கொடுக்க, “கழுதை எங்கயா போயிறப் போறான்? சொப்பன சுந்தரியை விட்டுட்டுப் போவானோ?” என மருதுவும் சோலையும் சிரித்தனர்.

உண்மையும் அது தான், என்ன தான் கேலி செய்தாலும் குமரனை விடவும் மேலாக அந்தப் பேருந்தின் மீது தனிப்பாசம் உண்டு அசோக்கிற்கு.

Advertisement