Advertisement

அத்தியாயம் 08

ஊர் நடுவே இருக்கும் மீனாட்சியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை சிறப்புப் பூஜையிருக்கும், வெகு விசேஷம். தங்கள் ஊர் மட்டுமின்றி பக்கத்து ஊர் முதல் பெரும்பாலான பெண்கள் அங்கு தான்.

உடன் வைதேகியும் அழைத்து வந்திருந்தாள். வைதேகி பள்ளிப்படிப்பு வரை மீனாவுடன் ஒன்றாகப் பயின்ற உயிர்த்தோழி. பின் அவள் கம்யூட்டர் கோர்ஸ் முடித்துவிட்டு, தையல் பயிற்சிக்கும் சென்று கற்றுக் கொண்டாள்.

அதே ஊரில் வடக்கில் இருந்தது அவள் வீடு. அவள் தந்தை சமையல் மாஸ்டர், தாய் கூலி வேலைக்குச் செல்பவர், கடந்த ஆண்டு தான் அவள் அக்காவிற்குத் திருமணம் முடிந்திருக்க, இன்னும் ஒரு வருடத்தில் இவளுக்கு வரன் பார்க்கும் முடிவிலிருந்தனர் அவர்கள் வீட்டில்.

தோழியின் கையில் எலும்பிச்சம் பழத்தை கொடுத்து, “பரீட்சையை நல்லபடியா எழுதணும்னு வேண்டிட்டு விளக்கு ஏத்திட்டு வா மீனா..” என்ற வைதேகி கோவிலுக்குள் சென்றுவிட்டாள்.

நவக்கிரகங்களுக்கு முன்னிருக்கும் கல் மேடையில் எலுமிச்சம்பழத்தை நறுக்கிப் பிழிந்து, மஞ்சள், குங்குமம் வைத்து நல்லெண்ணெய் ஊற்றித் திரியிட்டு, விளக்கு ஏற்றினாள்.

அங்கிருந்த வேலுநாச்சி சரியாக அவளைக் கண்டுகொண்டார். சில நாட்களுக்கு முன் பார்த்தது நினைவில் இருக்க, அழகு மீனாள் என அடையாளம் கண்டுகொண்டதும் அலட்சியமாக முகம் திருப்பினார்.

“நாச்சியம்மா.. உங்க பேரனுக்கு பொண்ணு பார்க்கணும்னு சென்னீங்களே? மேலூர்ல என் சொத்தத்துல ஒரு பொண்ணிருக்கு. அழகா, பார்க்க அம்சமா இருப்பாள், படிப்பும் டிகிரி முடிச்சிருக்காள். அந்த ஊருலையே அவளைப் போல வேற யாரும் படிச்சதில்லை.. நீங்க வந்தால் ஒரு எட்டுப் போய் பார்த்துட்டு வந்திடுலாம்” என எதிரே வந்த பெண்மணி ஒருவர் அழைத்தார்.

வேலுநாச்சியின் பார்வையோ மீனாவின் மீதிருந்தது.

“படிப்பை வைச்சு ஆகப் போறதென்ன? இல்லை அழகுதான் முக்கியமா? காசு தான் காசு, கழுதைக் கூட பவுடரை அப்புன்னா பளபளன்னு இருக்கப் போவுது! எங்க வசதிக்குத் தகுந்த இடமா? குடும்பம் எப்படி? வளர்ப்பு எப்படி? பொண்ணு நல்ல குணமான்னு சொல்லு..” என்றார் குத்தலும் நக்கலுமாக.

தான் அவர்கள் தகுதிக்கு இல்லையென்றும் தங்களை மட்டம் தட்டி, ஜாடையாகப் பேசுகிறார் என்றும் மீனாவிற்கு நன்கு புரிந்தது.

மேலும் மேலும் அவர் பேச, காது கேளாதவள் போல் கண்டு கொள்ளாமல் இருந்தாலும் உள்ளுக்குள் பொருமல் தான்.

‘அவன் அப்பத்தா தான் அவர்கள் வசதிக்கு இடம் பார்க்கிறதாமே.. பின் ஏன் இவன் என் பின்னால் வருகிறானாம்? இனியொரு முறைப் பின் வந்தால் நன்றாக உரைக்கும் படி நாலு கேள்வி கேட்க வேண்டும்..’ எனக் குமரனை மனதிற்குள் வறுத்தாள்.

விளக்கேற்றியவள் மௌனமாகச் சென்றுவிட, ஆச்சரியமாகத் தான் பார்த்திருந்தார் வேலுநாச்சி.

இதே நேரம், இவ்விடத்தில் வள்ளி நின்றிருந்தால் போர்க்களம் ஆகியிருக்கும்.

ஆனால் அழகு மீனாள் அமைதியாகச் சென்றுவிட அப்போதும் நல்லெண்ணம் தோன்றவில்லை. நின்று வாயாட மாட்டாளோ? சரி தான், அதிகம் படித்திருக்கும் திமிர் என்றே குமைந்தார்.

ஆனால் மீனாவிற்கு ‘நான் நின்று பேசும் அளவிற்கு எல்லாம் நீங்கள் தகுதியில்லை’ என்ற செருக்கு.

அவள் உருவம் மறையவும், அருகே இருந்த பெண்ணிடம், “இந்தா போறாளே இவளை விடவும் அழகான, அதிகம் படிச்ச பொண்ணா தேடுடி..” என்றார்.

“என்ன நாச்சியம்மா, இப்போத் தான் படிப்பு, அழகு தேவையில்லைன்னு சொன்னீங்க, அதுக்குள்ள இப்படிச் சொல்லுறீங்க..” என அந்தப் பெண் புரியாது கேட்டாள்.

“சொன்னபடி செய்டி..”  என அதட்டியவர் சிலுப்பியபடி உள்ளே சென்றார்.

வேலுநாச்சி வர, கோயிலுக்குள் உள் வாசல் அருகே ஒரு பெண்ணிடம் நின்று பேசிக்கொண்டிருந்தாள் மீனா.

“ஏன் சரஸ்வதிக்கா ஒரு மாசம் பால்காசு இன்னும் நீங்க தரவில்லையாமே? எங்க அம்மா பார்த்தால் கேட்கச் சொல்லுச்சு..”

“எங்க மீனா? நட்சியம்மா வயலுக்கு வேலைக்குப் போனேன். ஒரு வாரமாச்சு.. அது இன்னும் சம்பளம் தரலையே, பெயரு தான் பணக்காரங்க, ஆனால் சில்லறைக்கும் கணக்குப் பார்க்கிறாங்க..”

“அடேங்கப்பா..! உங்க முதலாளியம்மா கணக்கு வழக்கு எல்லாம் பார்க்குதா..?” எனக் கையை விரித்து நீட்டி தாடையில் வைத்தவள் போலியாய் வியப்புக் காட்டினாள்.

“அவிங்களுக்கு கணக்கு வழக்குப் பார்க்கத் தெரியலைன்னு தான் இந்த அக்கப்போர். கணக்குப்பிள்ளை வெளியூர் போயிருக்கானாம். அவன் வந்து கணக்குப் பார்த்துச் சொன்னால் தான் சம்பளம்னு ஒரு வாரம் எங்க வயித்தை வாடப்போட்டுருச்சு..”

“இதுக்குத் தான் படிக்கணும்னு சொல்லுறது.. அத்தனை சொத்து சேர்த்து என்ன செய்ய? அதைக் கட்டிக்காப்பத்த நாலு வார்த்தை எழுதப்படிக்கத் தெரிய வேண்டாமா? கணக்கு வழக்குப் பார்க்கத் தெரிய வேண்டாமா? எதுக்கும் நீங்க எண்ணிப் பார்த்தே சம்பளம் வாங்குங்க சரஸ்வதிக்கா.. அப்புறமா பால் காசு கொடுங்க, அம்மாகிட்ட நான் சொல்லிடுறேன்..” என்றாள்.

“என்ன புள்ளை பேசுற..? நாச்சியம்மா வர்றாங்க பாரு.. வா..” என அதட்டிய வைதேகி, மீனாவை இழுக்க, “வரட்டுமே.. என்ன செய்திடுவாங்க..?” என்றாள் மிதப்பாக.

அத்தனையும் உள்ளே வரும் வேலுநாச்சியின் செவி சேரத்தான் உரைத்தாள். அவளைப் பேசினாலும் பொறுப்பாள்.. கல்வியைக் குறைவாகப் பேசியதை அவளால் பொறுக்க முடியவில்லை.

அதே சமயம், நேருக்கு நேராக நின்று வார்த்தைக்கு வார்த்தை பேசி சண்டைபோடவும் இஷ்டமில்லை மீனாவிற்கு. ஆக அவர் பாணியிலே அவருக்குத் திருப்பிக் கொடுத்திருந்தாள்.

‘அடேங்கப்பா.. இவ லேசுப்பட்டவள் இல்லை..’ என மிரட்சியாப் பார்த்தார் வேலுநாச்சி.

மனதோரம் அவள் மீது சிறு ஈர்ப்பு, ஆனாலும் அதை ஒத்துக்கொள்ளவோ வெளிக்காட்டவோ அவர் செருக்கு இடம் கொடுக்கவில்லை.

இளம் மாலை நேரத்திலே கருமேகங்கள் படையெடுப்பில் மெல்லிய இருள் சூழ்ந்திருந்தது. தார்ச்சாலை தான் ஆனால் ஜல்லிகள் பெயர்ந்து பல ஆண்டுகள் கடந்துவிட்டது.

ஆகையால் தற்போது பெய்யும் மழைநீரோடு மண்ணும் கலந்து செம்புலம் பெயல் நீராகிப் பெருகி இருந்தது.

“அடியேய்.. நாலுமணிக் கார் வந்துடுச்சி, மழை முப்பா இருக்கு. வேலை பார்த்தது போதும் கரையேறுங்கடி..” என்ற ஒரு பெண்ணின் குரலுக்கு வயலில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் கூட வேலையை முடித்துவிட்டு முன்னெச்சரிக்கையாக வீடு நோக்கிச் சென்றிருந்தனர்.

அன்று காலையில் அழகு மீனாள் தோழியின் திருமணத்திற்காக அழகாக கிளம்பிச் சென்றிருந்தாள். கடல் நீல வண்ணப் புடவை, அவளின் அழகைக் கூட்டி, கண்ணைக் கவர்ந்தது.

திருமணம் முடிய, தோழிகளோடு சிறிது நேரம் கலகலப்பாகப் பேசிச் சிரித்து, விருந்துண்டு கொண்டாடிவிட்டுக் கிளம்பினாள்.

தனது புதுக் ஸ்கூட்டியில் பிராதான சாலையிலிருந்து அவள் கிராமத்திற்குச் செல்லும் சாலையில் திரும்பியிருந்தாள். அவளுக்கும் பின்னால் சில பயணிகளோடு வந்து கொண்டிருந்தது மாலை ஐந்தரை மணி சுந்தரம் ட்ராவல்ஸ்.

சேறும் சகதியுமான அந்தச் சாலையில் மீனாவின் வண்டி இழுக்கவே சிரமப்பட, முடிந்த அளவிற்கு முயன்று முடியாது வண்டி வழுக்கி விட்டதில் இடதுபுறமாகக் கவிழ்ந்திருந்தாள்.

அந்தச் சிறு சாலையின் பாதியை அடைத்து அவளும் அவள் வண்டியும் கிடக்க, அவர்களைத் தாண்டி பேருந்து செல்ல வழியில்லை.

அசோக்கால் அதற்கு மேல் வண்டியை இயக்க இயலாது போக, “மாப்பிள்ளை என்னன்னு போய் பாருடா, பெரிய அடி எதுவுமில்லைன்னா கொஞ்சம் வண்டியைத் தூக்கிவிட்டு ரூட்டைக் கிளியர் பண்ணு..” என்றான்.

குமரனும் யாரோ என்றெண்ணியே, தூறலில் இறங்கிச் சென்றான். மெல்லிய இருளில் யாரென்ற அடையாளம் தெரியவில்லை. ஸ்கூட்டியின் முகப்பு விளக்கு எரிந்து கொண்டிருந்ததால் அடக்கட்டைச் சுதாரித்தான்.

குமரன் அருகில் செல்ல, ஒரு பெண்ணின் முனங்கல் ஒலி மட்டுமே கேட்டது.

அந்த வேளை, வெட்டிய ஒரு மின்னல் ஒளியில் வலியில் வதங்கிய மீனாவின் முகத்தை நொடியில் கண்டு கொண்டான். பதறி நெருங்கியவன், வண்டியைத் தூக்கி ஓரம் நிறுத்துவிட்டு அவளைப் பார்த்தான்.

மெல்ல கைகொடுத்து அவளைத் தூக்கிவிட்டவன், பார்வையால் ஆராய, அவள் வலியில் அனத்திக் கொண்டிருந்தாள்.

வண்டியையும் குமரனையும் பிடித்தபடி நின்றிருந்தவளால் ஒரு காலை சிறிதும் ஊன்ற முடியவில்லை. கைகளில் இரத்தக்காயம் வேறு.. வலியில் சுணங்கிக் கொண்டிருந்தவளின் பாதி உடையும் முகமும் செம்மண் சேற்றில் தோய்ந்திருந்தது.

மீனாவிற்குச் சின்ன வலியைக் கூட தாங்கிப் பழக்கமில்லை, சிறிது வேலையென்றாலும் அவளுக்கு அது பெரிது தான்.

மீனா வலியில் துடிப்பத்தைக் குமரனால் காணச் சகிக்கவில்லை. என்னவோ அந்த வலியை அவனும் உணர்ந்தான், துடிதுடித்தான்.

“வலிக்குதா? பின்ன, சுகமாவா இருக்கும்? ஒழுங்கா வண்டியோட்ட தெரிஞ்சா வண்டி எடுக்கணும். நம்ம ஊர் ரோட்லையே உனக்கு ஓட்டத் தெரியலையே.. நீயெல்லாம் டவுன்குள்ள எப்படி ஓட்டுவியாம்? முதல்ல உனக்கு வண்டி வாங்கிக் கொடுத்த அருமை மாமனைச் சொல்லணும்” எனக் கடுகாய் வெடித்தான்.

மனதிலிருந்த ஆதங்கம், உரிமையோடு திட்டிக்கொண்டிருக்க, அந்த வலியிலும் முகம் சுருக்கியவள் அவனிடமிருந்து விலகி நிற்க, முயன்றாள்.

அதை உணர்ந்தவன், “மறுபடியும் விழணும்னு வேண்டுதலா?” என்ற கண்டிப்போடு அவள் இடையில் கரம் கொடுத்துத் தாங்கியபடி தன்னோடு நிறுத்திக் கொண்டான்.

அதற்குள்ளாக அசோக்கும் சில இளைஞர்களும் உதவிக்கு இறங்கி வந்திருந்தனர்.

அவள் விலகப்பார்த்தும் அவனிடமிருந்து சிறிதும் நகர முடியவில்லை. வலிவேறு உயிரைப் பிடுங்கியது.

என்னைத் திட்டுகிறான்? என்ன உரிமை? ஏன் இப்படி ஒட்டியும் உரசியும் நிற்க வேண்டும்? அவன் அப்பாத்தா தான் அவனுக்குப் பெண் பார்க்கிறதாமே.. போக வேண்டியது தானே? என மனதில் பொருமல். அந்த வலியிலும் இந்த நினைவும் சேர, மேலும் அவள் முகம் கடுமையைக் காட்டியது.

அதே நொடி அலைபேசியை எடுத்தவன் மருதுவிற்கு அழைத்து உடனடியாக அவர்கள் வீட்டிலிருந்து காரை எடுத்து வரச் சொன்னான்.

ஒருவன் சாலையிலிருக்கும் வண்டியை ஒரு ஓரம் நிறுத்த, அசோக் வந்து நலம் விசாரிக்க, “எனக்கு ஒன்னுமில்லைண்ணா.. விடுங்க, நான் வீட்டுக்குப் போயிடுவேன்..” என்றாள்.

குமரனிடம் சொல்ல வேண்டியதை தான் நேரடியாக அவனிடம் சொல்லமுடியாது அசோக்கைப் பார்த்து உரைத்தாள்.

“அப்போ பஸ்ல வாம்மா, வண்டியை பையலுங்க யாராவது கொண்டு வந்து வீட்டுல நிறுத்தச் சொல்லிடுறேன்..” என அசோக் அழைக்க, “இல்லைண்ணா நானே போயிடுவேன்..” என்றாள் யோசனையும் அடமுமாக.

கடுப்பான குமரன், “ஆமாம், இவ பச்சைக்கிளி.. இரண்டு இறக்கை வைச்சிருக்காள்.. அப்படியே பறந்து போயிடுவா பாரு..” என்றான் நக்கலாக.

முறைக்க முயன்றாள், முடியாது வலியோடு கண்ணீர் தான் பெருகி வந்தது.

அதே நேரம், மருது காரோடு அவர்களை நெருங்கியிருக்க, அருகில் நின்று கொண்டிருந்த, நம்பிக்கையான கல்லூரி இளைஞனிடம், “ஒரு ட்ரிப் பார்த்துக்கோடா..” எனத் தோள் பையைக் கொடுத்தான்.

மருது காரை நிறுத்தியதும், மீனாவின் வீட்டில் தகவல் தெரிவித்துவிட்டு, வண்டியை எடுத்துச் செல்லுமாறு உரைத்தான்.

அவளை மெல்ல நடத்தி வந்து காரின் பின் இருக்கையில் அமர வைத்தான்.

அவளோ, “இல்லை வேண்டாம், விடுங்க..” என மெல்லிய குரலில் முனங்க, “ஏய்.. பேசாம உக்காருடி.. நான் ஒன்னும் உன்னைக் கடத்திட்டுப் போய் கல்யாணம் பண்ணலை..” என்றவன் அதட்ட, அடங்கினாள்.

‘அனைவருமிருக்க இப்படிப் பேசுகிறானே?’ ஒரு நொடி வியந்தவள், ‘ரொம்பத் தான் அதிகாரம் தூள் பறக்குது’ என மனதில் பொருமினாள்.

இவர்கள் கார் நகரவும், பேருந்தையும் வண்டியையும் மருதுவும் அசோக்கும் ஊர் நோக்கி இயக்கிச் சென்றனர்.

குமரனின் உதவியை ஏற்கவும் இயலாது, மறுக்கவும் வழியின்றி, வலியோடு தன் இயலாமையும் நினைக்க, மீனாவிற்குக் கண்ணீர் பெருகி வந்தது.

“அழகு.. ரொம்ப வலிக்குதா? கொஞ்சம் பொறுத்துக்கோ.. இப்போ ஹாஸ்பிட்டல் போயிடலாம்..” என்றான் மெல்லிய குரலில் குமரன். இப்போ தான் குரல் இறக்கிப் பேசுகிறான்.

ஒரு மென்மையான வருடலும் கதகதப்பான அணைப்பும் தரும் ஆறுதலை அந்தக் குரல் அவளுக்குத் தர, உள் வாங்கிக்கொண்டவள் மெல்லக் கண்களை மூடிக் கொண்டாள்.

அடுத்த சில நிமிடங்களில் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்திருந்தான்.

அவளைச் சிகிச்சைக்கு அனுமதித்தவன், சோலைக்கு அழைத்து தகவல் சொன்னான். அவன், மீனாவின் பெற்றோரிடம் தெரிவிக்க, இருவரும் பதறிப் போய் கிளம்பினர்.

மீனாவிற்குப் பெரிதாகக் காயமில்லை. கைகளில் சிராய்ப்பும் காலில் சின்னதாகத் தசைப்பிடிப்பும் அவ்வளவு தான்.

அந்த வலியை பொறுக்க முடியாது அனத்திக் கொண்டிருந்தாள். வலிக்கு மருந்து கொடுத்து, காயத்திற்கு கட்டுக்கட்டிக் கொண்டிருக்க, ராமநாதனும் வள்ளியும் வந்திருந்தனர்.

குமரனைக் கண்டுவிட்டு மீனாவின் நலம் விசாரிக்க, ராமநாதன் தவித்தார்.

அதற்குள் சிகிச்சை முடிந்து செவிலியர் உதவியுடன் மீனா வெளியே வர, வள்ளி சென்று மகளைத் தாங்கிக் கொண்டார். ஒரு இருக்கையில் அமர வைத்தவர்கள், அவளின் நலம் விசாரித்தனர்.

வெளியேறிய குமரன், ஒரு வாடகைக்காரை அழைத்திருந்தான். பெரியவர்கள் கூடத் தேவையில்லை அவனே வீட்டிற்கு அழைத்துச் சென்றிடுவான்.

ஆனால் இருவரும் ஒன்றாகச் சென்றால் அக்கம்பக்கத்தில், ஊருக்குள் அதுவே பேச்சாகிவிடும் என்பதாலே அவர்கள் பெற்றோரை வர வைத்தான்.

சில நிமிடங்களில் மூவரும் வெளியே வந்தனர். “ஏன்டி, சின்னதா அடி தானே? நேரா வீட்டுக்கு வந்திருக்க வேண்டியதானே? இல்லை அங்கேயே எங்களுக்குத் தகவல் சொல்ல வேண்டியதானே? இவனோடு ஹாஸ்பிட்டல் வரைக்கும் வருவியா? நாளைப்பின்ன இந்த விஷயம் ஊருக்குள்ள தெரிஞ்சா என்ன பேசுவாங்க. கொஞ்சங்கூட உனக்குக் கூறே இல்லை மீனா..” என வள்ளித் திட்டிக்கொண்டே வர, “உதவி தானே செய்திருக்கான், ஏன் இப்படி பேசுற?” என ராமநாதன் கடித்தார்.

ஒன்றைக்காலை மட்டுமே ஊன்றி ஊன்றி அன்னையைத் தாங்கிக்கொண்டு வந்தாள் மீனா. பெரிதாக அடி இல்லை என்றாலும் அவளை இவ்வாறு காண என்னவோ மனம் வலித்தது குமரனிற்கு.

“எல்லாம் உங்களால தான்! அதிகமா செல்லம் கொடுக்காதீங்க, வண்டி வேணாம், வேணாம்னு தலைப்பாடா அடிச்சிக்கிட்டேன் கேட்டீங்களா? இப்போ பாருங்க கீழ விழுந்து வந்திருக்காள். இவளுக்கு என்ன அப்படியொரு பிடிவாதம்? எந்த சாமி புண்ணியமோ சின்னக் காயத்தோட போச்சு, இதுவே வேற ஏதாவதுன்னா தாங்க முடியுமா? இல்லை கை, கால் போன பிள்ளையைத் தான் எவன் கட்டிப்பான்? அப்பன், மகளுக்கும் பட்டாலும் புத்தி வராதே..”

மருத்துவமனை என்றும் பாராது வள்ளி ஒப்பாரி வைத்துக்கொண்டே வர, “பேசாம வா வள்ளி, வீட்டுல போய் பேசிக்கலாம்” என ராமநாதன் அதட்டினார்.

குமரன் வாடைக்காரை கைகாட்ட, பெண்கள் இருவரும் ஏறி அமர்ந்தனர். அவனைத் தாண்டிச் சென்று அமரும் முன், யாரும் அறியாது ஓர விழியால் மீனா ஒரு பார்வை பார்த்தாள். அதைக் குமரனால் மட்டும் நன்கு உணர முடிந்தது.

உயிருக்கு உயிரான ஒற்றைப்பிள்ளையையும் காப்பாற்றியுள்ளான் என்பதில் நெஞ்சம் நெகிழ, கண்கள் கலங்க அவனை நோக்கி கரம் குவித்தார் ராமநாதன். அதிலும் தொண்டை அடைபட்டதில் வார்த்தை வரவில்லை.

அவனுக்கும் வார்த்தை வரவில்லை. கூப்பிய கைகளை ஆறுதலாய் தட்டிக்கொடுத்து இறங்கிவிட்டான். அவர் தொட்டுத் தூக்கி தோளில் போட்டு வளர்த்த தங்கை மகன். இன்று வளர்ந்து நிற்கும் முழு இளைஞனாய் பார்க்க, நெஞ்சுக்குள் பாசம் ஊறியது.

ஆனாலும் வீண் வீம்பு விட்டுக்கொடுக்க விடாது தடுக்க, சிறுத்த முகத்தோடுச் சென்றுவிட்டார்.

அவர்கள் முன்னே செல்ல, பின் தொடர்ந்தபடி வந்தான் குமரன்.

அன்றிரவு குமரனுக்கு உறக்கமே வரவில்லை. இத்தனைக்கும் அவன் வீட்டில், படுக்கையில் தான் உருண்டு கொண்டிருந்தான்.

வெகு நாட்களுக்குப் பின் அழகு மீனாளின் அழுத முகம் அவன் நெஞ்சைத் தைத்து, நிம்மதியைக் கெடுத்தது.

“ஏன் ராசா, ஊர் உலகத்துல இப்படித் தான் எல்லாருக்கும் உதவி செஞ்சிட்டுத் திரியிறியா? எந்தக் கழுதையும் சேத்துல விழுகுது இல்லை ஆத்துல விழுகுது, நீ போய் உதவணுமாக்கும்? வாய் கொழுப்புக்காரி என்னவோ அவள் மகள் தங்கம் மாதிரியும் நாம உரசி சுரண்டிட்ட மாதிரியும்ல பேசுவா? இந்த பேச்செல்லாம் உனக்குத் தேவையா ராசா?” எனக் குமரன் உள்ளே வரும் போதே பல்லவியைத் தொடங்கியிருந்தார் வேலுநாச்சி.

“அப்பத்தா உதவிங்கிறது கஷ்டத்துல இருக்கிறவுங்களுக்குச் செய்றது, யார் என்னன்னு தகுதி தராதரம் பார்த்துச் செய்றதுக்குப் பெயர் உதவியில்லை..” என விளக்கம் கொடுத்த குமரன் விறுவிறுவென மாடியேறி தன் அறைக்கு வந்திருந்தான்.

என்னதான் பதில் கொடுத்தாலும் அவர் பாடல் இப்போதைக்கு நிற்காது, அதைக் கேட்கும் மனநிலையும் இப்போது தனக்கில்லை என்றெண்ணினான்.

குமரன் சென்று விட்ட போதும், “அதுக்குச் சொல்லலைய்யா.. அன்னைக்கு கோயில்ல என்னைப் பார்த்து என்ன சொன்னாள் தெரியுமா? எழுதப்படிக்கத் தெரியாதுன்னு ஜாடைப் பேசுறா? அதிகம் படிச்சிருக்க திமிரு அவளுக்கு, புதுசா வண்டி வாங்கியிருக்கேன்னு என்ன பவுசுல சிலுப்பான தெரியுமா? அவளுக்கு நீ உதவணுமா?” என்றவர் கொதிக்க,

பின்னே வந்த சுந்தரமூர்த்தி, “விடும்மா, நாம செஞ்சா தானே நாலு சொந்தபந்தம் நாளைக்கு நம்ம புள்ளைக்கும் செய்யும்?” என்றுரைத்து விட்டுச் சென்றார்.

Advertisement