Advertisement

அத்தியாயம் 07

உச்சி வெயில் நேரம், சோலையின் கடையில் வேலையில்லாது கூடியிருந்தனர் அனைவரும். அதிலும் சுரேஷ் உடைமைகளோடு இருக்க, அவனை வழியனுப்ப என அனைவரும் வந்திருந்தனர்.

“கொஞ்ச நாளைக்கு அங்கிட்டுப் பாரு, அப்புறமா அப்பாகிட்ட சொல்லி இங்கிட்டு ஏதாவது வேலை ஏற்பாடு பண்ணிறலாம்” எனக் குமரன் ஆறுதலும் நம்பிக்கையும் தர, சுரேஷ் தலையாட்டினான்.

“நம்ம வீட்டுலன்னாலும் வயித்துக் கஞ்சிக்கு வழியில்லைன்னு சொல்லலாம். உங்க அப்பாவுக்கு என்னவாம்? ஒரே பையனையும் அனுப்பி வைச்சிட்டு என்ன செய்யப் போறாரோ?” என மருது புலம்ப,

“ம்ம்.. அத்தையோட டூயுட் ஆடப் போறாராம். போய் என்னன்னு நியாயம் கேட்டுட்டு வர்றீயா?” என்றான் சோலை.

சுரேஷ் அனைத்தையும் வேடிக்கை பார்த்து நின்றான்.

“எதுக்கு அந்த அருவா மீசைக்கு நான் பலியாகவா? தெரியுமைய்யா உன் ஆசை..” என்ற மருது சோலையை மிதிக்க, “பார்த்து பங்காளி புது புருஷன்..” எனக் கேலியோடு சிரித்தான் குமரன்.

“புஷ்பா புருஷனைவிட இந்தப் புதுப்புருஷன் தான்யா ஊரு முழுக்கப் பெயரு வாங்கியிருக்கா..” என மருது மேலும் கிண்டல் செய்தான்.

அதே நேரம் ஒரே சைக்கிளில் வந்து நின்றனர் சிறுவர் இருவர். “சோலையண்ணே.. சைக்கிளுக்குக் காத்தடிச்சி விடு..” என்றனர்.

“என்ன சுரேஷ் அண்ணன் வெளியூருக்கு வேலைக்குப் போற போல இருக்கு? இனி யாரு எனக்கு நீச்சல் சொல்லித் தருவா?” என அரைப்பெடல் கேட்க, “இருக்கு, வருங்காலத்துல ஊருக்குள்ள ஒரு பஞ்சாயத்து இருக்கு..” என முனங்கினான் சின்னச்சாமியார்.

ஊருக்குள் நடக்கும் விஷயங்கள் அனைத்தும் அறிந்தவன், ஆகையால் அவ்வப்போது ஏதாவது வாக்குவிடுவான்.

“என்னச் சொல்லுற..?” என மருது ஆர்வமாய் விசாரிக்க, “ஆளு அரைக்காப்படி சைஸ் இருந்துட்டு பேச்சைப் பாரு.. ஓடுங்கடா..” என விரட்டிய சுரேஷ், சைக்கிளைப் பறிக்க வந்தான்.

நொடியில் உஷாரான இருவரும், சைக்கிளோடு ஓடி விட்டனர்.

“அடேய் அடேய்.. படுபாவிகளா..! வந்த ஒரு கஷ்டமரையும் விரட்டி விட்டுட்டீங்களேடா..” எனத் தலையில் துண்டைப் போட்டு சோலை புலம்ப, அனைவரும் சிரித்தனர்.

சரியாகப் பேருந்து வர, சுரேஷ் சென்று ஏற, அவன் பின்னே சென்ற மருது உடைமைகளைக் கொடுக்க, பேருந்தின் பின் வாசல் வரை வந்து அனைவரும் கையசைத்து விடை கொடுத்தனர்.

அதே வேளை, தெருவிற்குள் இருந்து, தோள் பையோடு ஓடி வந்த அழகு மீனாள் பேருந்தில் ஏற, பேருந்தும் கிளம்பியது.

மறுநொடியே ஓடிச் சென்று குமரனும் தாவினான்.

“டேய், ஏய்.. நீ எங்கப் போற?” இருவரும் குரல் கொடுக்க, “மதுரை வரைக்கும் போய் கோலியை அனுப்பி வைச்சிட்டு வரேன்யா..” எனக் குரல் மட்டும் கொடுத்திருந்தான்.

சுரேஷ் எழ, உக்காருமாறு சைகை செய்தவன். முதல் இருக்கைக்குச் சென்றான். அவனைக் கண்டுகொண்ட, அசோக், “அடேய்! மாப்பிள்ளை உனக்குத் தான் இன்னைக்கு டூட்டி இல்லையே, நீ என்ன இங்க?” என விசாரித்தான்.

அதே நேரம், பின்னிருக்கையில் நடத்துனரோடு பேசியபடி அமரும் சுரேஷையும் கண்ணாடி வழியாகக் கண்டு கொண்டான்.

அசோக்கிற்கு சுரேஷ் தாய்மாமன் மகன். ஆனால் பல வருடங்களாக இரு குடும்பத்திற்குள்ளும் பேச்சு வார்த்தைக் கிடையாது.

அதிலும் முறைப்பையன் அசோக் இருக்க, கடந்த ஆண்டு சுரேஷின் தங்கையை வெளியூரில் திருமணம் முடித்துக் கொடுத்திருந்தனர்.

அந்த பெண் மீது அசோக்கிற்குச் சொல்லாத நேசமிருந்தது.

இரண்டாம் இருக்கையில் அமர்ந்திருந்த அழகு மீனாவைக் கண்ணெடுக்காமல் பார்த்தபடி முதல் இருக்கையில் அமர்ந்த குமரன், “ம்ம், நான் இல்லாத நேரத்துல வொர்கர்ஸ் ஒழுங்கா வேலை பார்க்குறீங்களான்னு கண்காணிக்க வந்தேன்” என்றான்.

அவன் பார்வையின் திசையை வைத்து, “ஓ.. இது தான் உங்க கண்காணிப்பா? சரிதான்..” என்றான் கிண்டலாக அசோக்.

இருக்கையில் அது வரையிலும் அசோக்கை நோக்கி அமர்ந்திருந்த குமரன், லேசாக மீனாவின் புறம் திரும்பி அமர்ந்தபடி, “என்ன அழகு.. மதுரைக்குப் போறியா?” என்க, “இல்லை, ஜப்பானுக்குப் போறாள்..” என அசோக் நக்கலுரைத்தான்.

வாயை மூடுமாறு சைகை செய்த குமரன், “உன் வேலையைப் பாரு..” என்றான் கடுப்போடு.

மீனாவிற்குள் காட்டுத்தீ போலே கோபம் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. முதலில் பார்வையிலே தொடர்ந்தவன், பின்பு பார்த்தால் வம்பு பேசுவான். இப்போது அனைவரும் பார்க்க, தன் பின்னே வரும் அளவிற்குச் சென்றுவிட்டானே. எல்லாம் நான் கொடுக்கும் இடம் தானே? இதில் தனக்குத்தானே பிரச்சனை? என நொந்து கொண்டிருந்தாள்.

மீனாவின் மனம் புரியாது, அவளிடம் பேசிவிடும் முடிவிலிருந்தான் குமரன்.

இப்போது முன் புறம் இவர்கள் மூன்றுபேரும், பின்புறம் அவர்கள் இருவரும் தான். ஆனால் அடுத்த நிறுத்தத்தில் மேலும் பயணிகள் ஏறிவிடுவர் அதன் பின் பேசும் வாய்ப்பில்லையே அவனிற்கு.

“ஏய்.. அழகு..” என மெல்லிய குரல் கொடுக்க, அவள் திரும்பவில்லை.

‘என்னவோ.. இவன் தான் பெயர் வைச்ச மாதிரி கூப்பிடுறான் பாரு..’ என மனதிற்குள் வசை பாடியவள் அலட்சியப்படுத்தினாள்.

அப்போதும் குமரன் விடவில்லை. “அழகு.. மீனா.. இங்க பாருடி, உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்..” என்றான் இன்னும் சற்றே குரல் உயர, கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்தினால் விலகிச் செல்வான் என நினைத்தவளுக்கு ஏமாற்றம்.

கொலைவெறியோடு அசோக்கின் புறம் திரும்பியவள், “என்ன அசோக் அண்ணா, இதெல்லாம் நீ செய்ற வேலை தானா? எங்கம்மாகிட்ட சொல்லட்டுமா..?” என்றாள் சூடாக.

‘ஆத்தாடி.. எங்கிட்ட ஏன் பாயுறா?’ என உள்ளுக்குள் பதறிவன், குமரனைப் பார்த்து முறைப்பாக, “டேய்.. ஏன்? அதான் பேச விருப்பப்படலையே அப்புறம் ஏன் அலப்பறை பண்ற?” என்றான் பாவமாக.

முறைத்த குமரன், “எங்க? விருப்பமில்லைன்னு என்னைப் பார்த்துச் சொல்ல சொல்லு பார்ப்போம்..” என்றான் சவாலாக.

‘நம்ம தலையைத் தான் உருட்டி விளையாடுதுங்க..’ என அசோக் நொந்து கொள்ள, “என்ன? என்ன? என்னப் பேசணும்?” எனக் குமரனிடம் திரும்பியவள் சீறினாள்.

ஒரு நொடிப் பதறிப் பின் வாங்கிய குமரனே, இவளை அமைதியென்று எண்ணியது தன் அறியாமை எனப் புரிந்து கொண்டான்.

“உன் அப்பத்தா முன்னாடி நீ பேசுன லட்சணம் தான் தெரியாது? இன்னும் என்னவாம்?” எனப் பொரிந்தாள்.

அன்று அப்பத்தாவையும் அழைத்து வந்து அமர வைத்து, அவர் கண்ணையும் கட்டிவிட்டு தன் கையைத் தான் பிடித்தான்.

ஒருவார்த்தைப் பேசவில்லையே.. இதிலே தெரியவில்லை இவன் தைரியம்? என இளக்காரமாக நினைத்தாள். உண்மையில் சந்தோஷப்பட்டு விலக, வேண்டிய விஷயத்திற்கு இருமனம் கொண்டு நிலையில்லாது தவித்தாள்.

“இங்க பார், எங்க அப்பாத்தாக்கிட்ட பேச மாட்டேன்னு நினைச்சிடாதே, அதுக்கு முன்ன உங்கிட்ட பேசணும்..” என்றான் ரோசமாக.

வெறுப்போடு முகத்தைச் சிலுப்பியவள், “ஒன்னும் தேவையில்லை..” என வெட்டிவிட்டு எழுந்து, நான்கு இருக்கையில் தள்ளிச்சென்று அமர்ந்தாள்.

எழுந்து அவள் பின்னே செல்ல மனம் வரவில்லை. மிகவும் சோர்வாக உணர்ந்தவன், ஒரு நொடி அந்த இருக்கையிலே சரிவாக அமர்ந்து, தலை சாய்ந்தான்.

கண்ணாடி வழியாக நண்பனைப் பரிதாபமாகப் பார்த்தான் அடக்கட்டை.

மீனா பிறந்த நாளிலிருந்து நன்கு அறிவான் குமரன். முதலில் கொழுக்மொழுக்கென அழகுப்பிள்ளையாக இருக்க, பார்க்கும் அனைவருக்கும் கொஞ்சத் தோன்றும். அதிலும் ஜெயராணி அடிக்கடி வீட்டிற்குத் தூக்கி வர, குமரனும் கொஞ்சுவான்.

ஆனால் அவள் சற்றே வளர வளர, தன் அன்னையிடம் அவள் உரிமை கொண்டாடுகிறாள் என அவள் மீது பொறாமை தான் வந்தது. அதில் வேலுநாச்சி வேறு அவன் பொறாமைக்கு மேலும் தூபமிட்டுக் கொண்டிருந்தார். வளரும் வயதில் எல்லாம் அவளோடு விளையாட விட்டதே இல்லை.

விளையாட்டுப் பிள்ளையாக அவளோடு விளையாட வேண்டுமென்ற ஆசை அவள் வளர்ந்த பின்பு தான் வந்தது.

அவளை வளர்ந்த பெண்ணாக முதல்முறை பார்த்த நாளும் நினைவில் வர, ரசித்தான்.

முகமே இளகித் தகிக்க, விழியிலும் உதட்டிலும் புத்துணர்வு பொழிய எழுந்தவன், சென்று பாட்டை மாற்றினான்.

கவனித்த அசோக், “பாட்டப் போட்டே கரெக்ட் பண்ணிடலாம்னு நினைச்சியோ பாகவதரே..?” என்றான் கேலியாக.

அவன் தோளில் ஒரு அடி வைத்துவிட்டு, “பாகவதரா? இந்த பஸ்ஸுக்கே சூப்பர் ஸ்டார்டா நான்..” என அதே ஸ்டைலில் தலை கோதியபடி குமரன் உரைக்க, கலகலவென வெடித்துச் சிரித்தபடி, “அழகுல பவர் ஸ்டார்க்கும் பாதி இல்லை இந்த இலட்சணத்துல நீ சூப்பர் ஸ்டாராமாம்..” என்றான் அசோக்.

கொலைவெறியில் குமரன் முறைக்க, அவர்கள் உரையாடல் அரையும் குறையுமாக மீனாவின் செவிகளில் விழுந்ததில் அவளும் சிரித்துவிட்டாள்.

அந்தச் சின்ன சத்தத்தில் அவளைக் கண்டுகொண்டவன் மீனாவை நோக்கி நடந்தான்.

மீனா பொண்ணு மீனா பொண்ணு
மாசியில் போட்டா மாராப்பொன்னு

என்ற பாடலுக்கு நிமிராதே என மனம் சொல்லியதும் சட்டென நிமிர்ந்திருந்தாள்.

“ஐயா கண்ணு ஐயா கண்ணு

குமரியைப் பார்த்தா கொஞ்சும் கண்ணு..”

என்ற வரியோடு அவனும் அவளை நோக்கி வர, அத்தனையும் மீறி அவள் முகம் சிவந்து, கண்கள் ரசனையைக் காட்டியது,

‘ஐயோ..’ அவள் மனமே நொந்து கொள்ள, அருகில் வந்தவன் எதுவும் பேசாது அவள் மடியில் டிபன் பாக்ஸை வைத்துவிட்டு பின் இருக்கையை நோக்கிச் சென்றுவிட்டான்.

அன்று அவள் தவறவிட்ட டிபன்பாக்ஸ் தான்.

இதைத் தொலைத்தற்கு அன்னையிடம் ஆயிரம் திட்டுகள் வாங்கியிருந்தாள். கையில் எடுக்கையிலே அதில் கணம் தெரிய, சட்டென திறந்து பார்த்தாள்.

ஒரு டஜன் சிவப்பும், பச்சையுமான கல் பதித்த வளையல்களும் அதற்கு நடுவே ஒரு கை தேன்மிட்டாய்களும் கிடந்தது. பார்த்ததுமே தொண்டைக்குழி ஏறி இறங்க, அடிநாக்கில் நீர் சுரந்தது.

தூக்கியெறிய நினைத்தும் முடியாது போக, சட்டென மூடி, கைப்பைக்குள் எறிந்து விட்டாள்.

அவனுக்குப் பிடித்த ஓலைக்கொழுக்கட்டையோடு சென்ற பாத்திரம் அவளுக்குப் பிடித்த தேன்மிட்டாய்களோடு திரும்பி வந்திருந்தது.

அடுத்தடுத்த நிறுத்தங்களில் பயணிகள் ஏற, அடுத்த இருபதாவது நிமிடத்தில் மதுரையை அடைந்திருந்தனர்.

மீனா திரும்பியும் பாராது இறங்கிச் சென்றுவிட, கண்ணாடி வழியாக ஏக்கமாய் பார்த்த குமரன் நீண்ட பெருமூச்சை விட்டான்.

சுரேஷோடு கீழே இறங்க, சுற்றி வந்த சுரேஷ், “போயிட்டு வரேன்..” என அசோக்கிடம் வந்து நின்றான்.

ஒரே நண்பர்கள் குழுவிற்குள் இருந்தாலும் இருவரும் பேசிக் கொள்வதில்லை. பேசாவிட்டாலும் இவர்களுக்குள் ஒரு பாசப்பிணைப்பு இருந்தது.

“கவனமா போயிட்டு வா..” என்றவன் தன் சட்டைப்பையிலிருந்து ரூபாயை எடுத்து நீட்ட, வேண்டாமென மறுத்த சுரேஷ் சென்றுவிட்டான்.

அடக்கட்டையை நெருங்கிய குமரன், “எங்களுக்கு மேல இருக்கும் போலே உங்க லவ்ஸ்..” எனக் கேலியாகக் கேட்க, “அது.. ஏதோ ஊருக்குப் போறதால சொல்லிட்டுப் போறான்..” என்றான் இளகிய குரலில்.

மதிய உணவு நேரம் நெருங்கியதால், இருவரும் உணவகம் நோக்கி நடந்தனர்,

“கொஞ்சம் கூட பிடிபட மாட்டிக்காளே..” எனக் குமரன் நொந்து போய் புலம்ப, “அதான் மீனான்னு பெயரு வைச்சிருக்காங்க மாப்பிள்ளை..” எனச் சிரித்தான் அசோக்.

“நீயெல்லாம் நல்ல நண்பனா? ஏதாவது ஒரு ஐடியா கொடுக்குறீயா?” எனக் குமரன் சலித்துக்கொண்டான்.

“உன் மாமன் மகள் மீனா,

உன்னைச் சொல்லுறா வேணா,

நீ அலையாத வீணா..!’ எனக் கையுயர்த்தி வரம் தருபவன் போலே உரைத்தான்.

கொலை வெறியான குமரன் கைகளைப் பற்றி முறுக்க, “விடு மாப்பிள்ளை.. விடுடா, முதல்ல வயித்தைக் கவனிப்போம் அப்புறம் வந்து மூளையைக் கசக்கலாம்” என வலியோடு அலறினான் அசோக்.

குமரன் கையை விட, தள்ளிக்கொண்டு உணவகத்திற்குள் வந்தான் அசோக்.

விரித்த வாழை இலையில் தண்ணீரைத் தெளித்தபடி, “தம்பி நல்லா சூடா நாலு பரோட்டாவைப் பிச்சிப் போட்டு, அப்படியே பீஸ் பீஸா அள்ளி வை..” என்றான் வேலையாளிடம்.

அவனும் வைக்க, “எங்கலேய் பீஸக் காணும்?” என அசோக் பதறிப் போக, “என் வாழ்க்கை இங்க பீஸ் பீஸாகப் போகுது, உனக்கு சால்னால பீஸ் இல்லைன்னு கவலையா?” எனக் குமரன் புலம்பினான்.

அதைப் பொருட்படுத்தாது, குமரனக்கும் இலையை விரித்தான் அசோக்.

இளஞ்சூட்டில் நான்கு பரோட்டாவைப் பித்துப் போட்டு ஆவி பறக்கும் மட்டன் சால்னாவை ஊற்றி, கலக்கியும் வெங்காயமும் வைக்க, அத்தனையும் மறந்து உணவோடு ஒன்றிப்போனான் குமரன்.

“இப்போ உன் பிரச்சனை என்ன? மீனா உனக்குப் பேசவே வாய்ப்புத் தரமாட்டிக்கா அதானே? கொஞ்சம் பழைய ஐடியா தான் ஆனாலும் வொர்க்கவுட் ஆகும் கேளேன்..” என்க, “சொல்லு..” என்றான் சுரத்தே இல்லாமல்.

“எப்படியும் சாயந்தரம் நம்ம பஸ்ல தான் திரும்பி வரணும், அதுக்குள்ள உன் மனசுல உள்ளது எல்லாம் ஒரு லெட்டர்ல எழுதி வை. ஒரு பொடியங்கிட்ட கொடுத்து, கொடுக்கச் சொல்லுவோம்..” என்க, குமரன் சந்தேகமாகப் பார்த்தான்.

“நம்ம பஸ்ல பல லவ்ஸ் இப்படிச் சேர்ந்தது தான். நம்பிக் களத்துல இறங்கு, காரியம் ஜெயிக்கட்டும்..” என அசோக் அருள, “நல்லது நடந்துச்சு, பழனி முருகனை வேண்டி, உனக்கு ஒரு மொட்டையைப் போட்டுறேன்..” என்ற குமரன் உற்சாகமாக எழுந்து சென்றான்.

“உன் லவ்வுக்கு நான் ஏன் மொட்டையடிக்கணும்? என்ன இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமாடா? இப்போ தான் ஏதோ பரிதாப்பட்டு எங்க வீட்டுல பொண்ணு பார்க்க ஆரம்பிச்சிருக்காங்க, முருகா நீ தான் என் முடியை காப்பாத்தணும்..” என நொந்து வேண்டினான்.

மாலை நேரப் பேருந்து மக்கள் வெள்ளத்தால் நிறைந்திருந்தது, எப்படியோ மீனாவிற்கும் ஒரு இருக்கை கிடைத்து விட, ஜன்னலோரம் அமர்ந்திருந்தாள், அவள் அருகே மற்றொரு கல்லூரிப்பெண்.

பயணச்சீட்டுத் தருகிறேன் எனக் கடந்து செல்கையிலும் வருகையிலும் ஒரு பார்வை. மற்றபடிப் பாடல்கள் தான் அவளுக்காக ஒலித்துக் கொண்டிருந்தது.

குளிர் தென்றலும் மலையைத் தழுவும் மழை முகில்களும் மங்கும் சூரியனின் ஒளியில் மின்னும் மரகத வயல்கள் என வெளிப்புறத்தை உணர்ந்து ரசித்தபடி வந்தாள் மீனா.

குமரன் கொடுத்தனுப்பிய கடிதத்தோடு அந்த இருக்கைக்கு அருகில் வந்து நின்ற இளைஞன் ரகசியமாக முதலிலிருந்த பெண்ணிடம் கொடுத்துவிட்டு நழுவினான்.

எதிர்பார்ப்போடு அவர்களையே விழியால் சுற்றிய குமரனுக்கு ஏமாற்றம்.

அத்தனையும் அறிந்தும் அறியாது போல இருந்த, மீனாவிற்குள் ரகசியச் சிரிப்பு.

பேருந்து ஊர் வந்து சேர்ந்துவிட, அனைவரும் இறங்கினர்.

அந்த இளைஞனை மட்டும் தனியாகத் தள்ளி வந்த குமரன் விசாரிக்க, “அண்ணே பிரிச்சிப் படிச்சே அண்ணே, கவிதையும் காதலும் அருமை போ. அதுல நீ வேற கடைசியில கையெழுத்துப் போடாம இருந்தியா, அதான் லெட்டரை என் ஆளுக்குக் கொடுத்துட்டேன்” என்றவன் வழிய, கொலை வெறியானான் குமரன்.

“கூல்.. கூல்ண்ணே திரும்பவும் ஒரு லெட்டர் எழுது, நாளைக்குச் சரியா அண்ணிக்கிட்ட கொடுத்திடுறேன்..” என்றவன் தாஜா செய்ய, கடுப்போடு உச்சந்தலையில் நங்நங்கென்று கொட்டிவிட்டுப் போனான் குமரன்.

இளம் தூறல் விழத்தொடங்கிய போதும் யோசனையோடு வீடு நோக்கி மெல்ல நடந்தாள் மீனா.

இதுவரையிலும் வழியை மறைத்து வம்பு பேசியவன், இப்போது அடுத்த நிலைக்குச் சென்று விட்டான். கொடுத்த வளையல்களும் தேன்மிட்டாய்களும் கொடுக்கவிருந்த கடிதமும் அவளைப் பயம் கொள்ளச் செய்தது.

அதை விடவும் தனக்கென்று பார்த்துப் பார்த்துச் செய்ய, நெஞ்சோரம் ஒரு தித்திப்பு வந்து ஒட்டிக்கொண்டது. இளகும் இனிப்பு போலே அவள் மனம் மெல்ல உருகத் தொடங்கியது.

அந்த மாற்றம் அவளுக்கும் புரிந்தது, இதை இப்படியே விடுவதும் சரியாகப்படவில்லை. இதற்கு மேலும் அவனை நெருங்க விடக் கூடாது என்ற உறுதி. அதற்கு என்ன வழியென்ற சிந்தனையோடு வீடு வந்திருந்தாள்.

நிசப்தமான வீட்டிற்குள், “இங்க என்ன பெட்டி பெட்டியா பணம் கொட்டியாக் கிடக்கு? இல்லை உங்க அப்பன் தான் எதுவும் கொள்ளையடிச்சி, பதுக்கி வைச்சிருக்காரா? நாலு நாள் பரீட்சை எழுதப் போறாளாம், அதுக்கு புதுசா வண்டி வேணுமாம்ல வண்டி..” என விழுந்து சிதறும் பாத்திரங்களோடு வள்ளியின் பாடலும் ஒலித்துக் கொண்டிருந்தது.

மீனாவும் ராமநாதனும் கேட்டுக்கொண்டு தான் இருந்தனர், ஆனாலும் மூச்சு விடவில்லை. காரணமோ, விளக்கமோ சொல்ல முயன்றால் இன்னும் கத்துவார் என நன்கு அறிந்தவர்கள்.

மனைவி எதுவும் சொல்லிவிட்டுப் போகிறாள் எனக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு, மகளை அழைத்துச் சென்று, அவள் விருப்பம் போலே வாங்கிக் கொடுத்தார். ஹோண்டா ஆக்டிவாவை கையோடு வாங்கி வந்திருந்தனர்.

வந்ததுதான் தாமதம் மீனாவைக் கையிலே பிடிக்க முடியவில்லை. சொல்ல சொல்லக் கேட்காமல் பெற்றோர்களை வைத்து ஒரு ரவுண்ட் அடித்தவள், தோழியிடம் காட்டி வருகிறேன் என பறந்து விட்டாள்.

“ம்க்கும், என்னவோ இறக்கை முளைத்த மாதிரி இந்த பற பறக்குறா? படிக்கிறதுக்கு லீவ் விட்டால் படிக்காமல் சுத்திகிட்டு இருக்கு கழுதை.. எல்லாம் நீங்க கொடுக்குற செல்லம் தான்..” எனக் கணவரைச் சாடினார் வள்ளி.

‘நீ என்னவும் சொல்லிவிட்டுப் போ, இன்று மகள் முகத்தில் பார்க்கும் சந்தோஷத்திற்கு எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்வேன்’ என்னும் மிதப்பில் இருந்தார் ராமநாதன்.

வைதேகியிடம் காட்டிவிட்டு வந்த பிறகும் அடங்கினாள் இல்லை. மாலை நேரம், அன்று வெள்ளிக்கிழமை. கோயிலுக்குச் சென்று வண்டிக்குப் பூஜை போட்டு மாலை அணிவித்து வருகிறேன்’ என மீண்டும் பறந்து விட்டாள்.

Advertisement