Advertisement

அத்தியாயம் 06

மீனாவை விட நான்கு வயது பெரியவன் குமரன்.

சிறுவயதிலிருந்து இருவருக்குள்ளும் அப்படியொன்றும் பிணைப்பில்லை. இயல்பாகக் கூட மீனாவோடு விளையாட அனுமதிப்பதில்லை வேலுநாச்சி.

சதா, ஜெயராணி மீனாவைக் கொஞ்சிக்கொண்டே இருக்க, வேலுநாச்சி பேரனை கவனித்துக் கொண்டார்.

மருமகளைக் குறை சொல்ல இயலாது, அவ்வப்போது வேலுநாச்சி, “பெத்ததோட சரி, உங்கம்மா அப்படியே உன்னை விட்டுட்டா. அவளைப் போய் சீவிச் சிங்காரிச்சி கொஞ்சிக்கிட்டிருக்காள், பெத்த பிள்ளையை விடவும் அவள் மேல தான் பாசம் பொங்கும் உங்க அம்மாளுக்கு” என்றும் முனங்கிக் கொள்வார்.

சிறுவயதிலே கேட்டிருந்த குமரன், தன் அன்னையிடம் தன்னை விட அதிகம் உரிமை கொண்டாடுகிறாள் மீனா என்றெண்ணி வெம்பினான்.

இதில் இரு குடும்பத்திலும் பிரச்சனை வர, ஒரே வாரத்தில் ஜெயராணியும் படுக்கையில் விழ, அனைத்திற்கும் அவர்கள் சட்டையிட்டது தான் காரணமென வசைபாடினார் வேலுநாச்சி. அதுவும் அப்படியே அவன் மனதில் பதிந்து போனது.

ஆகையால், ஆசையில் அன்னையைப் பார்க்கவென வந்த மீனாவைத் திட்டியும் அனுப்பி விட்டிருந்தான். அதன் பின்னரே, ஜெயராணி விசாரித்துக் கண்டித்து மீனாவின் மீதான பாசத்தையும் புரிய வைத்தார்.

ஆனால் அவள் தான் அத்தனை தன்மானம் பார்ப்பவளாயிற்றே.. அதன் பின் வீட்டுப் பக்கமே வரவில்லை.

சிறுவர்கள் விளையாடும் இடங்கள் அத்தனையும் சுற்றி வந்து தேடிவிட்டான், எங்கும் அவளைக் காண முடியவில்லை.

ஒருமுறை பள்ளியில் விளையாட்டு மைதானத்தில் வைத்து அவளைப் பார்த்தவன், “மீனா.. நில்லு..” என்றழைக்க, அவள் நில்லாது ஓடி விட்டாள்.

ஒன்பது வயது பிள்ளைக்கு வெறுப்பும் வன்மமும் வளர்த்துக் கொள்ளும் விவரமில்லை.

ஆனால் வேலுநாச்சி முடியைப் பிடித்திழுத்ததும் திட்டியதும் நினைவிலிருக்க, அவர் மீதும் அன்னையின் மீதும் பயம் மட்டுமே அதிகமிருந்தது.

அப்படியிருக்க, ஒருமுறை பள்ளியிலிருந்து வருபவளின் சைக்கிளைத் தொடர்ந்து வந்து, குமரன் அழைக்க, “இங்க பாரு.. உங்ககூட எல்லாம் பேசக்கூடாதுன்னு எங்கம்மா சொல்லிருக்காங்க..” என்க, “ஏன்? ஏன்? அன்னைக்கு நான் திட்டினதுக்கா? அது எங்கம்மாவுக்கு உடம்புக்கு முடியலை, இல்லையா! அது உனக்கும் வந்திரக்கூடாதுன்னு தான் விரட்டினேன்…” எனப் பொய்யுரைத்தே தாஜா செய்தான்.

சற்று வளர்ந்திருந்தான் கொஞ்சம் விவரம் புரிபட, பொறாமை கொண்டு விரட்டியது எல்லாம் சிறுபிள்ளைத் தனம், தன் தவறு என உணர்ந்திருந்தான். அவளோடு பேசிவிட வேண்டும்.

“ம்கூம்.. பேசினா எங்கம்மா அடிக்கும்..” என்றவளின் பார்வை அவள் காலின் தழும்பையும் சுட்டிக்காட்ட, குமரனுக்குப் பெரும் கவலையாகிப் போனது.

அந்தக் குரலில் அப்போதும் வலியிருப்பதை உணர, அவளின் கசங்கிய முகம் அதற்கு மேலும் அவளைப் பின் தொடர விடவில்லை.

ஏன்? என்னவென்று புரியவில்லை என்றாலும் தன்னோடு பேசினால் அவளை அடிப்பர் என்பது புரிய, அப்படியே விலகிப்போனான்.

பல வருடங்கள் கடந்தும் பல முறை பார்த்திருந்தும் அதன் பின் பேசியதில்லை.

பள்ளிப்படிப்பு எல்லாம் முடிந்து அவன் கல்லூரி சென்று விட, பார்க்கும் வாய்ப்பற்றுப் போனது.

அப்போது தான் மீனா பெரிய பெண்ணாகியிருந்தாள். ஊரையே கூட்டி வெகு சிறப்பாக அவளுக்குச் சடங்குச் செய்தனர் வள்ளியும் ராமநாதனும்.

அதற்குப் போகாத ஒரே குடும்பம் குமரனின் குடும்பம் மட்டும் தான்.

போகக் கூடாது என்ற கங்கணமில்லை, அவர்கள் அழைக்கவில்லை. சுற்றுப்பட்டிகளிலே எந்த விசேஷம் என்றாலும் சுந்தரமூர்த்தி அழைத்து மரியாதை செய்யாமல் யாரும் விட்டுவிடுவதில்லை.

அவ்வளவு பெரிய மனிதன், தன்னை அழைக்காததில் மனம் விட்டுப்போனது சுந்தரமூர்த்திக்கு.

அழைக்கவில்லை என்றாலுமே ஜெயராணி இருந்திருந்தால் அத்தை முறைச் சீரோடு சென்றிருப்பார். ஒருபோதும் அவர்கள் குடும்பத்தை விட்டுக்கொடுத்திருக்க மாட்டார், அதைத் தாண்டியும் மீனாவின் மீது தனி பாசம். ஜெயராணி இல்லாததால் உறவே விட்டுப்போனது என்பது அவர்கள் ஒதுக்கி வைத்துக் கொண்டாடுகையில் தான் உணர்ந்தனர்.

“சும்மாவே செவத்தக் கழுதை வேற, இப்போ குமரியாவும் ஆகிட்டாளா..? இனி கையில பிடிக்க முடியுமா? ம்க்கும்.. அதான் ஆத்தாக்காரி ஊரையே கூட்டி விழா வைக்கிறாளே, அவ்வளவு பவுசு ஏறிப்போச்சு அந்த வள்ளிக்கு? இருக்கட்டும் பார்த்துக்கிறேன்” என இரண்டு நாளுக்கும் மேலாகத் தன் பாட்டிற்குப் பொருமிக்கொண்டிருந்தார் வேலுநாச்சி.

அதைக் கேட்கத் தாங்காது, நண்பர்கள் கூட்டத்தைக் காணச் சென்றால் அங்கும் அதே அக்கப்போர் தான் குமரனுக்கு.

“அடேய், விசேஷ வீட்டுல சாப்பாடு நல்லா இருந்ததுல?” என மருது ஆரம்பிக்க, “அது மட்டுமா? மீனா தாய் மாமனுங்க நிறைச்ச சீர்ல ஊரே மலைச்சுப் போச்சுல..” என வியந்தான் சோலை.

“அது எப்படிடா.. மஞ்சளைப் பூசி, தாவணியை சுத்துனதும் பொம்பளைப் புள்ளைங்க பெரிய பிள்ளையாகிடுறாங்க.. மீனா எம்புட்டு அழகா இருந்தா தெரியுமா?” என பிரமிப்பாக, சுரேஷ் விழிகளை விரித்தான்.

“அது எப்படி உனக்குத் தெரியும்? குச்சியில இருக்கிற பிள்ளையை நீ பார்த்தையாக்கும்?” என மருது கேட்க, அவன் உடனே பெரிதாகத் தலையாட்ட, “ஏய்.. இவன் கதை விடுறான்லே..” என அசோக் கேலியாச் சிரித்தான்.

“ஆமாம்லே தம்பி, பெருமைக்கு வெறும் உரலுலை இடிக்காத, நாங்க கண்டுபிடிச்சிடுவோம்..” சோலையும் கலகலவெனச் சிரிக்க, ரோஷப்பட்டு முகத்தைச் சுருக்கிய சுரேஷ், “இல்லை, அன்னைக்கு அலங்காரம் முடிச்சி, வெளிய கூட்டிட்டு வந்து தாய்மாமா கால்ல விழச் சொன்னாங்கல்ல அப்போ பார்த்தேன்” என்றான்.

அவர்கள் மேலும் மேலும் பேசிக்கொண்டிருக்க, குமரனுக்கு உள்ளுக்குள் பொறாமை கொழுத்துவிட்டு எரிந்தது. என்ன இருந்தாலும் அவள் எனக்குத் தான் மாமன் மகள் என உரிமை கொண்டாடிக் கொண்டான்.

அதற்கு மேலும் ஒரு வாரம் அவர்கள் பக்கமே வரவில்லை குமரன். நாட்கள் செல்ல மீனாவைப் பார்க்கவேண்டுமென்ற ஆசை இருந்தது, ஆனால் வாய்ப்பில்லை, அவனும் முயலவில்லை.

அசோக்கின் பெற்றோர்கள் புதிதாக வீடு கட்டிக்கொண்டிருந்தனர். பெரும்பாலான மண் வீடுகளும் ஓட்டு வீடுகளும் சிமெண்ட் மாடி வீடுகளாக மாறிக் கொண்டிருந்த நேரம் அது. அனைவருக்கும் அப்போது அது பெரும் ஆசையாகவும் கனவாகவும் இருந்தது.

மீனாவின் வீடு, பழைய மண் சுவரும் ஓடும் வெய்த மச்சி வீடு தான். ராமநாதனுக்கு புதிதாகக் கட்டிவிட ஆசை இருந்தது. வள்ளி தான் வேண்டாமென மறுத்துவிட்டார்.

பழைய வீடாக இருந்தாலும் நல்ல நிலையில் இருக்கும் வீடு. தங்கள் காலத்திற்குப் போதும், மகளோ திருமணம் முடித்தாள் வேறு இடம் செல்ல இருப்பவள்.. பின் ஏன் புதிதாகக் கட்ட வேண்டும்? அந்தப் பணத்திற்கு மகளுக்கு மேலும் நகைகள் சேர்ப்போம் எனச் சேமிக்க தொடங்கிவிட்டார்.

பெரிய செலவு, சின்ன செலவு என்றில்லை ஒரு ரூபாய் செலவாக இருந்தாலும் இது இருந்தால் மகளுக்கு நகை சேர்க்கலாமே என்று தான் எப்போதும் வள்ளியின் எண்ணம் இருக்கும்.

ஒற்றை மகளை நல்ல இடத்தில் மணமுடித்துக் கொடுத்திட வேண்டுமென்ற வைராக்கியம் வள்ளிக்கு.

மறுநாள் அசோக்கின் புது வீட்டின் கிரகப்பிரவேசம் இருந்தது. அசோக்கிற்கும் அவன் நண்பர்களும் அன்றிரவு அத்தனைக் கொண்டாட்டம்.

வாழைமரம் கட்டுவது, சீரியல் விளக்குகளைக் கட்டுவது, பேனர் கட்டுவது, வெடி வெடிப்பது என அத்தனை கொண்டாட்டங்களையும் முடித்து விட்டு அவ்வீட்டின் மொட்டை மாடியிலே அனைவருமாக உறங்கி விட்டனர்.

நண்பர்களோடு அரட்டை அடித்துவிட்டு வெகு தாமதமாகப் படுத்த போதும் விடியலில் எழுந்து விட்டான் குமரன்.

புது இடமும் அவன் தலையணையும் மெத்தையும் இல்லாததில் தூக்கமே நெருங்காது போனது.

தன் மீது அழுத்திக்கிடக்கும் சோலையின் கால்களையும் அசோக்கின் கையையும் தூக்கிப் போட்டுவிட்டு எழுந்தான்.

சோம்பல் முறித்தபடி கிழக்கு வானைப் பார்த்து நிற்க, கீழே மெல்லிய சத்தம்.

முழுதாகப் புலராத அரையிருள் நேரம். அப்போது தான் எழுந்து வந்து முகம் கழுவிக் கொண்டிருந்தாள் அழகு மீனாள்.

அசோக்கின் வீட்டு மாடியில் நிற்கும் குமரனை அவள் நிமிர்ந்து பார்க்கவில்லை, பார்த்தாலும் அந்த இருள் நேரத்தில் சரிவரத் தெரியாது.

அந்த மெல்லிய கொலுசு சத்தமும், தண்ணீரை இறைத்து முகம் கழுவுவதையும் கண்டுவிட்டவன், இன்னும் தைரியமாக நின்று பார்த்தான்.

திரும்பிச் செல்ல வேண்டுமென்ற எண்ணமெல்லாம் இல்லை, அப்படி என்ன அனைவரும் சொல்லும்படி அழகு? அதையும் தான் பார்த்துவிடுவோமே? என்ற ஆராய்ச்சி. 

வெளிர் முகம், பளீரென நீர்த் துளியோடு இருளில் மின்னியதில், “அழகு தான், அழகி..!” எனப் பெருமிதம் கொண்டான்.

அவளோ கழுவிய முகத்தைத் துடைக்கக் கூட இல்லை, பின் கட்டு திண்ணையில் சம்மணமிட்டு அமர்ந்தவள், பாடப்புத்தகத்தைப் பிரித்துப் படிக்க ஆரம்பித்து விட்டாள்.

“அடேங்கப்பா.. பெரிய படிப்ஸ்ஸா இருப்பா போல இருக்கே?” என வியப்பும் மலைப்பும் குமரனுக்கு.

பின் கட்டில் வேப்பமரத்தடியில் கல் தொட்டிகளும் பிளாஸ்டிக் குடங்களும் நீரால் நிரம்பி இருந்தது. ஒரு ஓரம் குளியலறையும் பெரிய மாட்டுத் தொழுவமும், சுற்றி இரும்பு முள் கம்பி வேலியும் வேய்ந்திருக்க, அதில் கொடி முல்லைப் படர்ந்திருந்தது.

சிறு வயதில் அவன் பார்த்த ஞாபகமிருக்க, இன்னும் பழமை மாறாத அப்படியே இருந்தது.

 வருடங்கள் மட்டும் ஏன் இத்தனை வேகமாக ஓடிவிட்டது என்ற வருத்தம்.

“மீனா.. மீனா.. அடியே மீனா..” என்ற குரலுக்குப் புத்தகத்திலிருந்து தலையை உயர்த்தியவள் சுற்றும் முற்றும் பார்த்தாள்.

முள் வேலிக்கு வெளியே நின்று கையசைத்து அழைக்கும் வைதேகியைக் கண்டுவிட்டு எழுந்து சென்றாள் மீனா.

“என்ன வைதேகி..?” என்னும் போதே, “இந்தாப் பிடி” என்றபடி சிறு இடைவெளியில் கையை நுழைத்துச் சுருட்டிய பேப்பரை நீட்டினாள்.

வாங்கியவள் ஆர்வமாகப் பிரித்துப் பார்க்க, தேன்மிட்டாய்களும் ஒரு பொரி உருண்டையுமிருந்தது.

“மீனா அடுத்த வாரம் இங்கிலீஷ் எக்ஸாம்ல எனக்குப் பேப்பர் காட்டணும், சரியா?” என வைதேகி பேரம் பேசிக்கொண்டிருக்க, கைகள் பரபரக்க, நாவில் எச்சில் ஊற, ஏறி இறங்கியது மீனாவின் தொண்டைக்குழி.

அதற்குள் நொடியும் பொறுமையில்லாது தேன் மிட்டாயில் ஒன்றை எடுத்து ஒரு ஓரம் கடித்துவிட்டு உள்ளிற்கும் ஜீராவை ஆசையாக உறிஞ்சிக்கொண்டிருந்த மீனா, தலையாட்டியிருந்தாள்.

‘அடி கூட்டுக்களவாணிகளா.. இந்த வயசுலையே இலஞ்சமா?’ என பொறுமலோடு முறைத்த குமரன் அமைதியாக வேடிக்கைப் பார்த்திருந்தான்.

“மீனா, மீனா ஏமாத்திற மாட்டியே? உன்னைய நம்பி தான்டி இருக்கேன்” என வைதேகி கெஞ்ச, “சரிடி. அதான் பேப்பர் காட்டுறேன்னு சொல்லியிருக்கேன்ல? தைரியமா இரு” என்றாள் இவள்.

அதில் தைரியம் வர, விடைபெற்றுச் சென்றவள் மீண்டும் வேகமோடு ஓடி வந்து, “மீனா.. இன்னைக்கு உங்க பக்கத்து வீட்டுல பால்காய்ச்சி தானே, ஸ்கூல்க்கு வரும் போது பாயசம் வாங்கிட்டு வாடி..” என்று விட்டுச் செல்ல, இவளும் தலையாட்டி வைத்தாள்.

வளரும் வயதில் அவளோடு ஒரு தோழமையாக இல்லாமல் போனோமே என ஏங்கினான். தங்கள் உறவு முன்பு போலே சரியாக இருந்திருக்கலாமே என்ற உணர்வு எழுவதைத் தடிக்கமுடியவில்லை.

அவனுக்கு அவளோடு தோழமையாய் பழகும் ஏக்கமும் ஆசையும் எழுந்தது.

குமரனுக்கு அர்த்தம் விளக்காத புன்னகை. மனம் இளகி மென்மையுற்ற உணர்வு. அன்று பந்தி பரிமாறுகையில் பாயசம் வாளியை மட்டும் அவன் வைத்துக்கொண்டு யாருக்கும் தரமாட்டேன் எனப் பிடிவாதம், குமரனே பரிமாறட்டும் என்று நண்பர்களும் விட்டுவிட, வள்ளியோடு வந்திருந்தாள் மீனா.

உணவு உண்டவள் பாயசம் உண்ணாமலே இலையை மூடிவிட்டு எழுந்து விட்டாள்.

தனியாக வந்து வாங்கிக்கொள்வாள் என எதிர்பார்ப்போடு அவள் கண் எதிரே சுற்றிச் சுற்றி வர, அவள் குமரனைக் கண்டுகொள்ளவில்லை.

அவள் செயல் முகத்தில் அறைந்தது போன்றிருக்க, அப்படியொரு கோபம் அவனிற்கு. அதன் பின் யோசிக்க, அவள் தன்னைத் தவிர்க்கிறாள் என்பது உரைத்தது. இத்தனை வருடங்கள் ஆன போதும் இன்னும் எதுவும் மாறவில்லை என்பது புரிய, வருத்தம் தான்.

அதே நேரம், வீம்பும் வீராப்பும் பொங்கி வர, “சரி தான் போடி..” என முறுக்கிக்கொண்டு சென்றான்.

ஆனால் அதன் பின்பு தான் அவளைப் பார்க்கும் எண்ணம் அடிக்கடி வந்தது. மனதை கட்டுப்படித்த முயன்றும் முடியவில்லை, அவ்வப்போது அசோக்கின் வீட்டு மாடியிலிருந்து அவளைப் பார்த்தான்.

மீனா பள்ளிப்படிப்பை முடித்துப் போராடி கல்லூரி சேர்ந்திருக்க, கல்லூரிப்படிப்பை முடித்திருந்த குமரன் சென்னைக்குச் சென்றுவிட்டான். சுந்தரம் ட்ராவல்ஸின் முதன்மை அலுவலகம் மதுரையிலிருந்த போதும், சென்னையில் ஒரு மண்டல அலுவலகம் உண்டு. அங்கிருந்து முழு நிர்வாகத்தையும் கவனித்தான்.

மீனாவைப் பார்க்கும் எண்ணமே வரக் கூடாது அவளை மறக்க வேண்டுமென்று வந்தவனுக்கு அது சோதனை காலம்.

வெளியூர் வந்த பிறகு தான் சொந்த ஊரின் அருமையும் பெருமையும் புரிய, அதை ஒட்டியே அவள் நினைவும் ஓடி வந்துவிடுகிறது.

காற்றாய் பறக்கும் மனதைக் கட்டி வைக்கும் வழியுமில்லை, வலிமையுமில்லை குமரனிடம்.

ஏன் மீனாவின் மீது மட்டும் இவ்வளவு ஆசை? யோசித்தவனுக்கு கண்முன்பே தோன்றி மறைத்தது எல்லாம் கிண்கிணியாய் சிரிக்கும் மீனாவின் முகம் தான்.

ஏதோ ஒரு கோணத்தில் அந்தச் சிரிப்பிலோ முறைப்பிலோ அவன் அன்னை ஜெயராணியின் சாயல் தெரிவதாக எண்ணினான். உண்மையில் தெரிந்ததோ இல்லையோ ஆனால் அப்படியொரு வலுவான காரணத்தையும் வைத்து மீனாவின் மீதான நேசத்தைக் கூட்டிக்கொண்டானோ?

காரணங்களை இவனாக அடிக்கிக் கொண்டாலும் அதற்கு முன்பாக மீனாவைப் பிடித்திருக்கிறது என்பது நிஜம்.

வளர்ந்த பையன் தானே.. அன்னையில்லையே என்ற ஏக்கமில்லை. ஆனாலும் அந்த வெற்றிடம் யாராலும் நிரப்பப்படாமல் இருந்தது அவன் வாழ்வில். மீனாவால் மட்டுமே நிரப்ப முடியும் என்ற நம்பிக்கை அவனிற்கு.

எண்ணங்கள் எங்குச் சுற்றினாலும் மையப்புள்ளியில் இருந்து வரும் விசையாக மீனாவின் நினைவு தான் இயக்கிக்கொண்டிருந்தது.

அதிகம் அதையே யோசித்தவன் குடும்பப் பிரச்சனை சரி செய்வதற்கும் யோசிக்கத் தொடங்கியிருந்தான்.

வள்ளி அத்தை பெருமை பாடியது ஒருபுறம் என்றால், அப்பத்தா வேலுநாச்சி செய்ததும் தவறு தான் என்பது பக்குவம் வந்த வயதில் யோசிக்கையில் புரிந்தது.

வெளிப்புறமிருந்து பார்பவர்களுக்குப் புதிதாக வசதி வரவும், உறவுகளை ஒதுக்கி விட்டனர் என்று தானே தோன்றும்?

அதுவும் உண்மை தானே? பழக்க வழக்கங்களில் புதிதாகச் சிலர் சேர்ந்திருப்பதும்.. பல உறவுகள் பல ஒதுங்கி விட்டதும் புரிந்தது.

அத்தனையும் கையாளுவது வேலுநாச்சி தான். பணம் வரவும் குணம் மாறவில்லை, அவர் அனுபவத்தில் அட்டை போல் ஒட்டிக்கொண்டு உறிஞ்சும் உறவுகளைத் தள்ளி வைத்திருந்தார்.

குமரனுக்கு அவ்வளவு புரியவில்லை, ஆனால் பல உறவுகள் ஒதுங்கி வைத்து விட்டது தெரியும், அது போலத்தான் மீனாவின் குடும்பத்தையும் பிரித்து விட்டாரோ என்ற உறுத்தல். அவனும் தானே அப்போது அவளை விரட்டினான். இன்னும் அந்த நினைவு அவள் மனதில் காயமாக இருப்பதைக் குமரன் அறிந்திருக்கவில்லை.

ஜெயராணி இருந்திருந்தால் உறவு நிலைத்திருக்குமே என்ற ஏக்கம்.

ஒரு வருடம் காலத்தை ஓட்டியவன், அதற்கும் மேல் தாக்குப்பிடிக்க முடியாது ஊருக்கு ஓடி வந்திருந்தான். ஆனாலும் அவன் பொல்லாத நேரம், மீனா ஊரில் இல்லை, விடுதியில் தங்கிப் படித்துக் கொண்டிருந்தாள்.

அனைவரும் என்னவென்று விசாரிக்க, அசோக்கை விட்டுவிட்டு இருக்க முடியவில்லை எனக் காரணம் சொன்னவன் அவனைக் கட்டிக்கொண்டான்.

“இப்போ ஏன் நீ என்னை வம்புல இழுத்து விடுற?” என்றவன் கேட்க, குமரன் விடுவதாக இல்லை. தந்தையிடம் பேசி, அவரிடமிருந்த பேருந்தை தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டு அசோக்கையும் உடன் இணைத்துக் கொண்டான்.

இந்த மூன்றாண்டுகளில் மீனா ஊருக்கு வரும் வேளை அவன் பணியிலிருந்தால் மட்டுமே பார்க்கும் வாய்ப்பு.

அப்படி நான்கு ஐந்து முறை பார்த்திருக்கிறானே தவிர, பேசியதில்லை. முயலவுமில்லை.

அவள் படிப்பு முடியும் வரையிலும் எந்த வகையிலும் அவன் தொந்தரவு செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தான்.

இப்போதும் அவளைத் தொந்தரவு செய்யவோ, தன் மனதைப் புரிய வைக்கும் எண்ணமோ இல்லை. அவள் மனதைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றே அவளிடம் பேச முயல, அவள் பிடிகொடுக்காது நழுவிக் கொண்டிருந்தாள்.

வெறும் குடும்பப் பிரச்சனைக்காகவோ அம்மா அடிப்பார் என்றோ பயம் கொள்ள, மீனா இப்போது ஒன்றும் சின்னப் பெண் இல்லை.

வளர்ந்த, படித்த, பக்குவமான பெண் தவிர்ப்பதற்கான காரணமென்ன எனத் தெரியாத போதும், அச்செயல் குமரனை வதைத்தது.

Advertisement