Advertisement

அத்தியாயம் 05

காலை பதினோரு மணிப் பேருந்து, ஊருக்குள் வந்து திரும்பியது. பரீட்சைக்கான நுழைவுச் சீட்டைப் பெற வேண்டியிருக்க, அன்று கல்லூரிக்குக் கிளம்பியிருந்தாள் அழகு மீனாள். 

பயணிகளோடு பேருந்து திரும்ப, யாரோ குரல் கொடுத்ததில் நிற்க, பின் படிக்கட்டிலிருந்து குமரன் எட்டிப் பார்த்தான். கையில் மஞ்சப்பையோடு வேலுநாச்சி வெடுக்கு வெடுக்கென ஓடி வர, நின்று அழைத்து வந்தவன் மீனாவின் அருகில் அமர, வைத்தான்.

அருகில் அமரும் வேலுநாச்சியையும் அவனையும் ஒரு பார்வைப் பார்த்தவள் வெடுக்கென முகம் திருப்பிக் கொண்டாள். சிறைபட்ட சிரிப்போடு அவன் விலகிச் சென்றான்.

‘ஏன் தன்னருகே இந்தக் கிழவியை அமர வைத்திருக்கிறான்? இன்றென்ன கூத்து கட்டப் போகிறானோ?’ என நினைக்கையில் அவள் மனம் தான் படபடவென அடித்துக் கொண்டது. 

“இந்த அடைக்கட்டைப் பயலுக்கு அப்படி என்ன கொல்லையில போற அவசரமோ? நான் வர்றதுகுள்ள காரை எடுத்துட்டான்..” எனப் புலம்பியவர் முந்திச் சேலையை உருவினார்.

கழுத்தில் வழியும் வியர்வையை முந்தானையால் துடைத்தபடி, நீண்ட மூச்சோடு, அருகிலிருந்த அவளைப் பார்த்தார்.

புத்தம்புது வெண்கலக் குத்து விளக்கு போலே பளிச்சென்று மின்னியவளை முதல் பார்வையிலே பிடித்து விட்டது வேலுநாச்சிக்கு.

அலங்கரித்துக் கொள்ளச் சிரத்தை எடுக்காவிட்டாலும் அழகு மீனாள் இயற்கையிலே நல்ல அழகு. வனப்பான, செழுமையான உடற்கட்டு, களையான முகம். உலக அழகி மேடைகளில் ஏறா விட்டாலும் ஊரில் அழகி என்றால் அவள் தான் முதலில்.

பார்வையை எடுக்காது, இன்முகமாய், “யாரு புள்ளை நீ?” என விசாரணையைத் துவங்கினார்.

பேரனுக்குப் பெண் பார்க்கும் படலத்தை அவளிடமிருந்து தொடங்கும் எண்ணம். பார்க்கும் அழகான பெண் யாராக இருந்தாலும் குலம், கோத்திரம் விசாரித்து விட வேண்டும்.

‘தன்னிடமா கேட்கிறார்!’ என வியப்பில் விழி விரிய முழித்தாள். ‘ஒருவேளை தன்னை அடையாளம் தெரியவில்லையோ?’ எனக் குழம்பினாள்.

உண்மையும் அது தான், சிறு வயதில் பார்த்தது, வெகு ஆண்டுகளுக்குப் பின் பருவப்பெண்ணாகப் பார்த்ததில் அவருக்கு அவளைத் தெரியவில்லை.

படிப்பு பிரதானமாக இருக்க, ஊர்த் திருவிழாவிற்கும் சரிவர வருவதில்லை. வந்தாலும் ஒரே நாளில் திரும்பி விடுவாள்.

“தேரடித் தெரு..” என்றவள் குரலெடுக்க, “அப்பத்தா..” என வந்து நின்றிருந்தான் குமரன்.

“என்னையா..” என்றவர் நிமிர, “இந்தா பிடி..” எனப் பயணச் சீட்டை நீட்டினான்.

வாங்கி, இடுப்போடு கட்டியிருந்த சுருக்குப்பையில் பையில் பத்திரப்படுத்தி வைக்க, “மஞ்சப்பையோடு எங்க கிளம்பிட்ட? காலையில எங்கிட்ட எதுவும் சொல்லலையே?” என்றான் விசாரணையாக.

“போகும் போது எங்க போறேன்னு கேட்குறான் பாரு, மடப்பையன்.. போற காரியம் உருப்படுமா?” என்றவர் திட்ட, மீனா சிரமப்பட்டுப் பொங்கிய சிரிப்பை அடக்கினாள்.

‘மானம் போச்சே..’ மனதில் நொந்தவன், “எங்க போறேன்னு கேட்காம எப்படி நான் இம்புட்டுப் பேருக்கும் டிக்கெட் கொடுக்க முடியும்?” என நியாயம் பேசினான்.

வேலுநாச்சி சிலுப்பிக்கொள்ள, “தண்ணீர் குடிக்கிறீயா?” என விசாரிக்க, அவர் வேண்டாமென மறுத்தார்.

“சரி, எம்.ஜி.ஆர் பாட்டு போடுறேன், நீ படுத்துக்கோ..” என்றவன் பாட்டை மாற்றச் சென்றான், பாட்டியின் விருப்பம் அறிந்தவன்.

ஒரே நொடியில் சுற்றுப்புறம் அத்தனையும் மறந்து போனவர், இருக்கையில் தலை சாய்த்துப் படுத்தார். கண்மூடி கற்பனையிலே எம்.ஜி.ஆர் உடன் ஜோடியாக நடமாடச் சென்றுவிட்டார்.

‘உன் அப்பத்தா முன்ன பேச தைரியம் இருக்கான்னு அன்னைக்குக் கேட்டியே? இப்போ பாரு’ என்னும் படியாக அவன் விழிகள் மொழிய, “டிக்கெட்.. டிக்கெட்..” எனக் குரலோடு மீண்டும் அவர்கள் இருக்கைக்கு வந்தான் குமரன்.

அவன் பார்வையை அவள் படித்த போதும், ‘இவ்வளவு தானா உன் தைரியம்?’ எனும் படியாகப் பார்வையில் மறுமொழி பேசினாள்.

முகமெல்லாம் பாவனை காட்டவில்லை, ஒரு நொடிக்கும் குறைவாக இகழ்ச்சியாய் இதழ் மட்டும் வளைந்ததை அவனும் கண்டு கொண்டான்.

இம்முறை எச்சரிக்கையாக அவள் முதலில் பணத்தை நீட்டினாள். வாங்கியவன், பயணச்சீட்டுத் தருகையில் அவள் கரத்தை இறுகப்பற்ற, அவள் உருவிக்கொள்ள முயன்றாள்.

அவன் விடாது கைகளை நெறிக்க, பல்லைக்கடித்தவள் வெடுக்கென பலத்தோடு உருவினாள்.

அதில் சற்றும் எதிர்பாராது, வேலுநாச்சியின் மீது லேசாய் தாக்கிவிட, சட்டென அவரும் கண்விழித்து எழுந்தார்.

“என்னலேய்..?” என்க, “ஒன்னுமில்லை அப்பத்தா, டிக்கெட் கொடுத்தேன்..” என மழுப்பியவன், பதறி அவ்விடம் விட்டு நகர்ந்தான்.

“என் பேரன் தான். ரொம்ப தங்கமான பையன், அவன் ஆத்தா விட்டுட்டுப் போயி பதினைந்து வருஷமாச்சு. ஒருநாளும் அந்த ஏக்கத்தை எங்க முன்னாடி காட்டுனதில்லை, சின்னதுலே அவ்வளவு பக்குவமா இருந்தான். இப்பவும் பொறுப்பா தொழிலைப் பார்த்துக்கிறான்.

என் மகனுக்கு முடியலை, ஆனாலும் இந்த பஸ்ஸை ஓட்டணும்னு இவனே பார்க்கிறான். மத்தபடி அவனும் காலேஜ் போய் படிச்சி முடிச்ச பையன் தான், பாசக்காரன்..” எனப் பேரனின் புகழ் பாட ஆரம்பித்தார்.

மதுரை வரையிலும் குமரனின் புகழ்பாடல் ஓயாது போக, பேருந்து நிறுத்தம் வந்திருந்தது. மீண்டும் அவளை யாரென்று விசாரிக்க, “தேரடித்தெரு.. ராமநாதன் மகள்..” எனப் பெருமிதத்தோடு எழுந்தாள் மீனா.

பேருந்தின் பின் பகுதியில் இருந்தவன் அழகு மீனாள் இறங்கிச் செல்கையில் கவனித்திருந்தான். அவன் அப்பத்தாவிடம் ஏதோ சொன்னாள், முகத்தில் ஒரு பெருமிதமும், கண்களில் சின்னதாக ஒரு சீண்டலும்.

அவனோ அப்பத்தாவிடம் சென்று என்னவென்க, “ஒன்னுமில்லை.. வழிய விடு..” எனச் சிடுசிடுத்தார்.

“டேய்.. அடக்கட்டை, ஒரு ஆட்டோவை பிடி. ஜோசியரைப் பார்க்கப் போகணும்..” என்றபடி வண்டியிலிருந்து இறங்கினார்.

அவனைத் தவிர்த்து அசோக்கோடு சென்றுவிட, என்னவென்று தெரியாது,  ‘ஏதோ பத்த வைச்சிட்டியே பாதகத்தி..’ என மீனாவைக் கறுவினான்.

அவரும் எழுந்து சென்றபின், அந்த இருக்கையில் ஒரு டிபன் பாக்ஸ் கிடக்க, அதைக் கையில் எடுத்தான். அவன் வீட்டுப் பாத்திரமில்லை என நன்கு அறிவான். அதைத் திருப்பிப் பார்க்கையில் மீனாவின் பெயர் இருப்பதையும் கண்டு கொண்டான்.

“டேய்.. மாப்பிள்ளை, உனக்கும் ஒரு டீ சொல்லட்டுமா?” எனக் குரல் கொடுத்த அசோக், பதில் சொல்லாது சிலையாக நிற்பவனைக் கண்டு விட்டு, உள்ளே ஏறி வந்தான்.

“என்னடா மாப்பிள்ளை டிபன் பாக்ஸ்..?” என்ற கேள்வியோடு வெடுக்கென பிடுங்கியவன் திறக்க, குப்பென ஏலக்காய் வாசம் முதலில் நாசியை நிறைத்தது.

ஏலக்காய், இடித்த பச்சரிசி, கருப்பட்டி, சுக்கு, கரு எள் கலந்து, இதமாய் பிசைந்து, பனைமரத்தின் இளம் குருத்தோலைக்குள் வைத்து அவித்தெடுத்த ஓலைக் கொழுக்கட்டை. ஆவி பறக்க, அதை அவித்தெடுக்கையில் வரும் வாசம் அலாதியானது. அதற்கு வேறெந்த உவமையும் பொருந்தாது. கருப்பட்டியோடு கலந்த ஏலக்காயின் வாசம் நினைக்கையிலே தொண்டையில் எச்சில் ஊறிவிடும்.

“ஐயோ..! ஓலைக்கொழுக்கட்டைடா மாப்பிள்ளை..” என எச்சில் ஊற, சப்புக் கொட்டியவன், சட்டென ஒன்றைப் பிரித்து வாயிலும் போட்டான்.

வாய் நிறைய அடைத்துக்கொண்டு, “வள்ளிச் சித்தி கைப்பக்குவமோ.. பக்குவம் தான்..” எனப் பாராட்ட, பட்டென அவன் கைகளிலிருந்து டிபன் பாக்ஸை பறித்துக் கொண்டான் குமரன்.

அசோக் முறைக்க, “எனக்கு ஓலைக்கொழுக்கட்டை பிடிக்கும்னு அழகு மீனா தான் கொண்டு வந்திருக்கா..” என்றவன் வானில் மிதக்க, “ரொம்ப பறக்காதடா மாப்பிள்ளை, உனக்கு ஓலைக்கொழுக்கட்டை பிடிக்கும் தான், ஆனால் அது எப்படி மீனாவுக்குத் தெரியும்?” என்றான் நக்கலாக.

குமரன் கொலைவெறியில் முறைக்க, “நீ கொன்னாக் கூட பரவாயில்லை. உண்மை இதான், அந்தப் புள்ளை ஏதோ தவறுதலா டிபன் பாக்ஸை விட்டுட்டுப் போயிருக்கு போ.. அப்படியில்லைன்னா நீயும் தான் எத்தனை நாளா அது பின்ன சுத்துற ஒரு நாளாவது உன்னை பிடிச்சிருக்குன்னு சொல்லியிருக்குமா?” என்றான்.

“பிடிக்கலைன்னும் சொல்லலையே மச்சான், ஏதோ சுத்தல்ல விடுற மாதிரி இருக்கு..” எனக் குமரன் மிதப்பாய் கூற, “ஆமாம், இதை வேற வாய்விட்டுச் சொல்லணுமாக்கும், அந்தப் புள்ளை முறைக்கிறது, வெட்டுறது, சிலுப்புறதுலையே தெரியலையாக்கும். அப்படி உனக்குக் காது குளிர கேட்கணும்னா சொல்லு, நானே கூப்பிட்டுச் சொல்லச் சொல்லுறேன்” என்றான்.

சுளீரென அவன் முதுகில் ஒரு அடி வைத்த குமரன், “சகுனிப் பயலே..” என்க, வாங்கிக்கொண்டு சிரித்த அசோக், “போற போக்குல, அப்பாத்தாட்ட ஏதோ கொளுத்திப் போட்டாள் போலே.. அது சரவெடி மாதிரி விடாம வெடிக்குது. வீட்டுக்குப் போடி மாப்பிள்ளைய்.. உனக்கு இருக்கு தீபாவளி” என்றான்.

குமரன் இது எதையும் காதில் வாங்கவில்லை. ஒரு இருக்கையில் அமர்ந்தவன் சாவகாசமாகக் கொழுக்கட்டையை காலி செய்து கொண்டிருந்தான்.

“பார்க்க வைச்சு திக்காதடா.. வவுறு வலிக்கப் போவுது..” என்க, “அப்போ பார்க்காத..” என்றவன் திருப்பினான் இல்லை.

காலை உணவு நேரம், சுந்தரமூர்த்தி அமர்ந்து உணவு உண்டு கொண்டிருக்க, அருகே நின்று அவர் அன்னை வேலுநாச்சி பரிமாறிக் கொண்டிருந்தார்.

குமரனுக்குப் பெண் தேடும் எண்ணத்திலிருந்தவர் மீனாவைப் பார்த்து வந்ததிலிருந்து ஒரே புகைச்சல் தான்.

“என்ன ஏத்தம் அவளுக்கு? நான் யாருன்னு தெரிஞ்சும் பக்கத்துல உக்காந்து பல்லிளிச்சிட்டு, போற போக்குல வள்ளி மகன்னு சொல்லிட்டு போறாள். சரியான கிராக்கிக்காரி, அகராதி பிடிச்சவள், பின்ன வள்ளி மகன்னா சும்மாவா? அதுலையும் நாளு எழுத்துப் படிச்சிட்ட திமிரு வேற..” என இரண்டு நாளாகப் புலம்பல். 

“எங்கிட்டயே சிலுப்பிட்டுப் போனியே, உன்னை விடவும் நல்ல பெண்ணை என் பேரனுக்குப் பார்த்து கட்டிவைக்கிறேன்.. இருடி” என அவராகச் சபதமிட்டுக் கொண்டார்.

“விடும்மா.. அதுவா பேசிச்சா? அழகா இருக்கவும், நீயா தானே யாரு என்னன்னு விசாரிச்சிருக்க?” என சுந்தரமூர்த்தி கூடச் சொல்லிப் பார்த்தார். அப்போதும், வேலுநாச்சியின் மனக்கொதிப்பு அடங்குவதாக இல்லை.

உணவு நேரம், ஊர்க்காரர் ஆறுமுகம் அவர் மகன் சுரேஷோடு வர, வரவேற்று அமர வைத்தவர், என்னவென்று விசாரித்தார்.

“அது ஆத்தா, பையன் படிப்பை முடிச்சுட்டு ஆகாத பயலுகளோட வெட்டியா சுத்திக்கிட்டு இருக்கான். அதான் உங்க ட்ராவல்ஸ்ல ஒரு வேலை ஏற்பாடு பண்ணித் தர முடியுமான்னு அண்ணங்கிட்ட கேட்க வந்தேன்” என்றவர் கேட்க, காத்திருக்க வைத்துவிட்டு உள்ளே சென்றார் வேலுநாச்சி.

உள்ளே சென்று விஷயத்தை சொல்ல, உணவுண்டு முடித்த பின் எழுந்து வந்தார் சுந்தரமூர்த்தி. வருகையிலே மரியாதைக்கு ஆறுமுகம் எழுந்து நிற்க, வரவேற்ற சுந்தரமூர்த்தி அமர வைத்து அவரும் எதிரே அமர்ந்தார்.

என்ன தான் உறவுமுறை சொல்லிக் கொண்டாடிக் கொண்டாலும் சுந்தரமூர்த்திக்கான மரியாதை எப்போதும் தனி தான்!

“அம்மா விஷயத்தைச் சொல்லிச்சு..” என்றவர் ஆரம்பிக்கும் போதே, “அண்ணே, உங்க ட்ராவல்ஸ்ல ஒரு வேலை போட்டுக் கொடுத்தால், உங்க புண்ணியத்துல இவன் பொழச்சிப்பான்..” என்றவர் மீண்டும் வேண்டினார்.

சுந்தரமூர்த்தி யோசனை போலே அமர்ந்திருந்தார். தங்களை நம்பிக் கேட்டு வருபவர்களுக்கு ஒருபோதும் மறுப்பதே கிடையாது.

ஊருக்குள் பெரும்பாலான இளைஞர்களுக்கு அவர் தான் வேலை தந்திருக்கிறார். இங்கில்லை என்றாலும் எங்காவது ஒரு வேலையை ஏற்பாடு செய்திடுவார். ஆகையால் அதீத மரியாதை அவருக்கு!

“என்னண்ணே யோசனை..?” ஆறுமுகம் மெல்லிய குரலில் இழுக்க, “அதில்லை ஆறுமுகம், இங்க வேலையில்லை. திருச்சி ஆபிஸ்ல ஒரு வேலையிருக்கு அவ்வளவு தூரம் போவானா? ஒத்தப்பிள்ளையை விட்டுட்டு நீங்களும் தான் இருப்பீங்களா?” என்றார் மேலும் யோசனையாக.

சுரேஷ் எதுவும் பேசவில்லை. அனைத்தும் மௌனமாகப் பார்த்திருந்தான். தந்தை நல்லதற்குச் செய்கிறாரோ இல்லையோ ஆனால் எப்படியும் ஒரு வேலை அவனுக்கு இப்போதைய தேவையாக இருந்தது.

“அதுக்கென்ன.. இளவட்டப் பையன் நாலு இடம் சுத்தி வைத்தால் தானே உலகம் தெரிஞ்சிக்க முடியும்? அனுப்பி வைக்கிறேன். நீங்க ஆபிஸ்ல சொல்லி வைங்கண்ணே”

“சரிப்பா ஆறுமுகம், உங்க முடிவு. தங்குவதற்கும் ரூம் ஏற்பாடு செய்யச் சொல்லிடுதேன். தம்பியை இன்னைக்கே கிளம்ப சொல்லு..” என நம்பிக்கை தரவும் நன்றியுரைத்தவர்கள் விடைபெற்றுச் சென்றனர்.

அவர்கள் செல்ல, “ஏய்யா சுந்தரம், நம்ம கிட்ட இல்லைனாலும் இங்கனக்குள்ள வேற வேலை ஏதாவது ஏற்பாடு செய்ய வேண்டிய தானே..? எதுக்கு அம்புட்டுத் தூரம்..” என்றார் வேலுநாச்சி.

“இது வேற விஷயம்மா, இந்த பையன் போக்கே சரியில்லை. ஊருக்குள்ள ஒரு பிள்ளை பின்னாடி சுத்திக்கிட்டு இருக்கான் போல.. தோப்புதொரவுல வராத லாபமா? பையலை அவர் எதுக்கு வேலைக்கு அனுப்பக் கேட்குறாரு? இதுக்குத் தான், அதான் கொஞ்ச நாளைக்கு வெளியூருக்கு அனுப்பி வைக்கிறேன்” என்றார் சுந்தரமூர்த்தி.

முதல் நாளே ஆறுமுகம் வந்து காரணம் சொல்லி வேண்டியிருந்தார். தங்கள் சமூகத்தோடும் அந்தஸ்தோடும் ஒத்துவராத பெண் என்பதால் மகனின் போக்கில் அவருக்கு விருப்பமில்லை.

ஆறுமுகம் மனம் அறிய, ஆறுதலும் ஆதரவும் தந்தார் சுந்தரம்.

“ம்க்கும், இதானாக்கும் சங்கதி? இந்த லட்சணத்துல ஆகாத பையலுகளோட சுத்திகிட்டு இருக்கான்னு என் பேரனையில குறை சொல்லிட்டுப் போறான்.. அடுத்த தடவை கண்ணுல படட்டும், இருக்கு அவனுக்குக் கச்சேரி” என்ற சிலுப்பலோடு உள்ளே சென்றார் வேலுநாச்சி.

சுந்தரமூர்த்தி தனது திருச்சி அலுவலக மேலாளரிடம் தகவல் தெரிவித்து விட்டு, அலுவலகம் கிளம்பினார்.

Advertisement