Advertisement

அத்தியாயம் 04

இரண்டு மூன்று வாரங்களில் எல்லாம் ஜெயராணி நோயுற்று படுக்கையில் விழுந்திருந்தார்.

அந்த நாட்களில் அத்தையைப் பார்க்காது மீனா தவித்துப் போனாள். ஜெயராணியின் வீட்டருகே சிறுவர்களோடு விளையாடிக் கொண்டிருந்த மீனா, வேலுநாச்சி வெளியில் செல்வதைக் கண்டு கொண்டாள்.

 வீட்டில் அந்த நேரம் வேறு யார் இருப்பர் என்றெல்லாம் அவளுக்கு யோசிக்கத் தெரியவில்லை.

அத்தையைப் பார்க்கும் ஆசை, பதுங்கி பதுங்கி வீட்டிற்குள் சென்றுவிட்டாள்.

அறையில் கட்டிலில் நலிவுற்ற தோற்றமாய் அத்தையைக் கண்டவள் விம்மி அழ, அவளைப் பார்த்து விட்ட சந்தோஷத்திலே முகம் மலர்ந்தார் ஜெயராணி.

அவளை அழைத்து ஆறுதல் சொல்லிக் கொஞ்சியவர், “நல்லா படிக்கணும் மீனு, படிப்பு ஒன்னு தான் நம்மளை உசத்தும். படிப்பு தான் நமக்கு அடையாளம், நம்ம வாழ்க்கைக்கு ஆதாரம்.. நல்லா படிப்பியா?” என்றவர் கேட்க, என்ன புரிந்ததோ பெரிதாகத் தலையாட்டினாள்.

வாழ்நாட்களை எண்ணிக் கொண்டிருந்த ஜெயராணி நினைத்துப் பார்த்தால், படிப்பைத் தவிர எந்த வித குறையுமில்லை. நிறைவான வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார். அந்த ஏக்கம் மீனாவிடம் அப்படிச் சொல்லி வைத்தார்.

வெகுநேரம் ஆகிவிட்டது என மீனாவை அனுப்பி வைக்க, சரியாகக் கையில் குச்சி ஐஸோடு வந்த குமரன் அவளைக் கண்டுவிட்டு, “ஏய்.. நீ எதுக்கு எங்க வீட்டுக்கு வார? நாம அப்பா தான் அன்னைக்குச் சண்டை போட்டுக்கிட்டாங்களே? எங்க வீட்டுக்கெல்லாம் நீ வரக் கூடாது, போ..” என விரட்டினான்.

மூக்கு விடைக்க, ரோசம் பொங்க, “அத்தையை பார்க்கத் தான் வந்தேன்..” என்றாள்.

“உங்களால தான் எங்கம்மாவுக்கு நோவு வந்துச்சாம்.. நீ அவங்களைப் பார்க்கக் கூடாது போ, அவங்க என் அம்மா.. உனக்கு ஒன்னும் அத்தையில்லை போ..” என்றவன் அவள் கரங்களையும் பற்றிக் கொண்டு வெளிவாசல் வரை இழுத்து வந்திருந்தான்.

குமரன் மீனாவை விட நான்கு வயது மூத்தவன். அதிகம் அவன் வேலுநாச்சியின் கவனிப்பிலே இருக்க, மீனாவுடன் சாதாரணமாகக் கூட விளையாட விட்டதில்லை அவர்.

ஜெயராணியின் மீது அதிகம் பாசம் கொண்டவன், அன்றைய பிரச்சனைக்குப் பிறகே அன்னைக்கு உடல் நலன் சரியில்லாது போக, இவர்கள் தான் காரணமெனச் சொல்லி வைத்திருந்தார் வேலுநாச்சி.

திடமான குமரனின் பலத்திற்கு முன், நோஞ்சானான மீனாவால் நிலையாக நிற்க கூட முடியாது போக, தடுமாறி விழுந்தாள்.

அப்போதும் அவன் விடுவதாக இல்லை, “நீ எங்க வீட்டுக்கு வரக் கூடாது போ..” என விரட்டியபடி, அவளை குண்டுகட்டாகத் தூக்கி வந்து வெளிவாசலில் விட, சரியாக உள்ளே வந்தார் வேலுநாச்சி.

அந்தக் காட்சியைப் பார்த்தவர், “ஏய் குமரா..! என்னையா செய்ற? விடு அவளை..” என்று அதட்டல். அந்தக் குரலில் அவளை அப்படியே வாசலில் விட்டுவிட்டு வீட்டிற்குள் ஓடி விட்டான்.

மீனாவை நோக்கி திரும்பியவர் வெறுப்போடு, “ஏன்டி மினுக்கி, உங்க ஆத்தா சொல்லி அனுப்புனால? என்னத்தைக் களவாண வந்த?” என்றார்.

மீனா தேம்பி தேம்பி அழுது கொண்டிருந்தாள்.

குமரனின் செயலில் பெரிதும் காயம்பட்ட உணர்வில் இருந்தவளால் பேச இயலவில்லை. முகம் கூம்பிச் சிவந்து, பெரிதும் ரோசத்தோடு மூக்கு விடைக்க நின்றாள்.

மீனாவின் அழுகையை பொருட்படுத்தாதவர் அவள் ஜடையைப் பிடித்திழுத்து, அவளை நோக்கி, “இந்த வயசுலையே என் பேரனை வளைக்கப் பார்க்குறீயா..? சரியான கைகாரி.. இங்க பாரு, அத்தை நொத்தைன்னு வீட்டுப்பக்கம் நோட்டம் விட வர்றது, குமரன், மாமான்னு அவன் கூட விளையாடுறது, சுத்துறது இந்த சோலியெல்லாம் இனி இருக்கக்கூடாது, என்ன புரிஞ்சதா?” என்றார் மிரட்டலாக.

அத்தனை வெறுப்பையும் ஒன்று திரட்டி அழுகையோடு அவரை முறைத்தவள், வெடுக்கென ஜடையை உருவிக் கொண்டு சென்றுவிட்டாள்.

ஒன்பது வயதில் அவளுக்கு என்ன புரிந்ததோ! ஆனால் அவர் வார்த்தை மனதில் அச்சடித்தது போன்று பதிந்து போனது.

அன்றைய நாளிலிருந்து அவர்கள் இருவரையும் அவள் திரும்பிப் பார்த்ததில்லை. பின்னர், வளர வளர விவரம் தெரிகையில் நினைத்துப் பார்ப்பாள்.

மீனா இயல்பிலே மிகுந்த மான, ரோசம் பார்ப்பவள். அமைதி போலத் தான் தெரியும் ஆனால் பிடிவாதம் அதிகம். சரியான அழுத்தக்காரி.

‘இவன் என்ன பெரிய இவன்? அவர் என்ன சொல்வது? அவனே பின்னே, வந்தாலும் தன் வாழ்வில் குமரன் மட்டும் வேண்டவே வேண்டாம்’ என்ற உறுதியிலிருந்தாள்.

அதே நேரம் வீட்டில் வள்ளியும் ராமநாதனும் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்.

“நீ மனசுல என்ன வன்மம் வைச்சிருந்தியோ? என்ன வாக்கு விட்டியோ? உன்னால தான் ஜெயா தீரா நோவு கண்டு படுத்துட்டாள்..” என தங்கையின் மீதுள்ள பாசத்தில் மனைவியைக் குற்றம் சாடிவிட்டார்.

பிறர் சொன்னாலே தாங்க இயலாத வார்த்தையைக் கணவன் சொல்லிவிட, வள்ளி கொதித்துப் போனார்.

“நான் என்ன செஞ்சேன்? அவிங்க செஞ்ச பாவத்துக்குக்கு அவள் அனுபவிக்கிறாள், கடவுள்னு ஒருத்தன் எல்லாத்தையும் பார்த்துக்கிட்டு தானே இருக்கான்”

“நீ என்ன செஞ்சியா? நல்லா வாழ்றாங்கன்னு விசனப்பட்டியே.. உன் வயித்தெரிச்சல் தான் அவளை எரிச்சிப்புடுச்சு.. மனசுல எப்பவும் நல்ல எண்ணம் இருக்கணும் வள்ளி..” என்றவர் சென்று விட்டார்.

விளையாடி வரும் மகளுக்காகப் பின்கட்டு விறகு அடுப்பில் வெந்நீர் வைத்திருக்க, அந்த வெந்நீரை விட வள்ளியின் நெஞ்சம் அடங்காது கொதித்துக் கொண்டிருந்தது.

அந்த வேளை, முகம் வீக்கிச் சிவக்க, கண்ணைக் கசக்கிக்கொண்டு அழுகையோடு வந்தாள் மீனா.

பார்த்தவர் பதறிப் போய் என்னவென்று விசாரிக்க, கொண்ட காயத்தில் ஆறுதல் தேடி அனைத்தையும் சொல்லிவிட்டாள் குழந்தை. அதிலும் இன்னும் ஏங்கி ஏங்கி தேம்பி அழுதாள்.

வள்ளிக்கு நெஞ்சு பொறுக்கவில்லை, அருகில் கிடக்கும் சுள்ளியை எடுத்து, “அவிங்க வீட்டுக்குப் போவியா? என்ன சேட்டை உனக்கு? நான் தான் போகக்கூடாதுன்னு சொல்லி இருக்கேன்ல? குமரன் வீட்டுக்குப் போவியா? போக மாட்டேன்னு சொல்லுடி..” என்றபடி அடித்து விளாசிவிட்டார்.

மீனாவின் பாவாடை முட்டி வரைக்கும் மட்டுமே இருக்க, அவர் அடித்ததில் முட்டிக்கும் கீழாக ஒரு குச்சி சதையை கிழித்ததில் இரத்தமே வந்துவிட்டது.

அவர்களும் விரட்ட, அன்னையும் அடிக்க, என்னவோ செய்யக் கூடாத தவறை செய்துவிட்டதாக வெம்பினாள், குற்றவுணர்ச்சி பிடித்தாட்டியது.

குழந்தையை அடித்துவிட்டுப் பெற்றவளும் நெஞ்சு விடைக்க, விம்மி அழுதாள்.

வலியவர்கள் எப்போதும் தன்னை விட எளியவர்கள் மீது தான் வன்மத்தைக் காட்டுவர். அதிலும் பெரும்பாலான பெற்றோர்களின் இயலாமை குழந்தைகளின் மீது தான் வன்முறையாக வெடிக்கும். குழந்தைகளின் மீதான வன்முறை பெரும் கொடூரம், பாவச்செயல்.

அந்தக் காயத்தின் வடுவும் நினைவும் அப்படியே பதிந்து போனது மீனாவிற்கு. அதிலே அரண்டவள், மௌனமாய் ஒடுங்கிப் போனாள்.

மறுநாள் காய்ச்சல் வந்து, சுயநினைவையே இழந்து போனாள்.

தன்னால் தானோ என வள்ளி பயந்து பதறினார். பிள்ளையைத் தூக்கிக்கொண்டு மருத்துவமனை சென்றுவிட்டார்.

அதே நேரம் ஜெயராணி தவறிவிட, பிறந்த வீட்டுக்கோடி எடுத்துப் போட்டார் ராமநாதன். அண்ணன் முறைக்கு அவர் மட்டும் சென்று வந்தார். பிறந்ததிலிருந்து அந்திமம் வரைக்கும் தங்கைக்குச் செய்ய வேண்டிய அத்தனையும் முறையாகச் செய்தவருக்கு அவர் மீதான பாசத்திலும் குறைவில்லை.

சரியாகி வந்த மீனா வெகுநாட்கள் அத்தை படுக்கையில் இருப்பதாக நினைத்திருந்தாள். அந்நாளிலிருந்து அவள் விளையாடப் போவதில்லை. முழு நேரமும் படிப்பு மட்டும் தான்.

‘அப்படி என்ன நான் குறைந்து போய்விட்டேன் என என்னைப் பேசுகிறார்கள்? நான் யாரெனக் காட்டுகிறேன் பாருங்கள்’ என்ற வெறி, வேகம்.

வாழ்வில் உயரப் படிப்பு மட்டுமே வழியென ஜெயராணி சொல்லியது மனதில் வேத வாக்காகப் பதிந்து போனது. அன்றிலிருந்து வெறி கொண்டு படித்தாள். படிப்பு மட்டுமே அவள் நினைவில் எப்போதும் இருக்கும்.

சில வாரங்களுக்குப் பிறகு, ராமநாதனின் வீட்டுவாசலில் வந்து நின்றார் சுந்தரமூர்த்தி.

ஒரு பை நிறையப் பணத்தை வைத்தவர், “இதுல நீங்கக் கொடுத்த பணம் வட்டியும் முதலுமா இருக்கு, எடுத்துக்கணும்..” என்றார்.

“இது நான் என் தங்கச்சிக்குச் செஞ்சது” என ராமநாதன் மறுக்க, “அதான், அந்தத் தங்கச்சியே இல்லையே.. இன்னும் என்ன உறவு? நீங்கத் தரும் போதே கடனா நினைச்சி தான் வாங்கினேன். இதுக்கும் மேல கொடுக்காம இருக்கிறது ஏதோ பாவத்தைக் கூட வைச்சிருக்கிற மாதிரி இருக்கு..” எனச் சென்றிருந்தார்.

தங்கள் பணம் தானே பெருகி வந்துள்ளது என்ற எண்ணத்தில் எடுத்துக் கொண்டார் வள்ளி.

ராமநாதன் கலங்கி நிற்க, “அதான் தெளிவா சொல்லிட்டுப் போயிட்டாரே.. இனி எந்த ஓட்டும் உறவுமில்லைன்னு.. அப்புறம் ஏன் நிற்கிறீங்க? ஜெயராணியை வைச்சுத்தான் அவர் உறவு, இப்போ அவளே இல்லைங்கிற பிறகு உறவும் இல்லை தானே? போங்க, போய் வேலையைப் பாருங்க..” என அதட்டினார்.

அனைத்தையும் புரிந்தும் புரியாமலும் பார்த்து நின்றாள் மீனா. அவள் அத்தை தற்போது இல்லை, என்பது மட்டும் அவளுக்குத் தெள்ளத்தெளிவாய் புரிந்தது. அதில் வருந்தி உழன்றவள், படிப்பின் மீதான ஆசையை மேலும் அதிகரித்துக் கொண்டாள்.

பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண், பனிரெண்டாம் வகுப்பில் மாநிலத்திலே மூன்றாம் இடம், மாவட்டத்தில் முதல் இடம் பிடித்தாள். மேலும் படிக்க ஆசை, பெண்கல்வி முக்கியமென நினைத்த ராமநாதன் சம்மதிக்க, வள்ளி தடையிட்டார்.

பெரும்பாலும் அங்கு, பத்து அல்லது பனிரெண்டு வரை தான் பெண் கல்வி.

எங்காவது ஒருசில வீட்டில் பெண்பிள்ளைகள் கம்யூட்டர் கோர்ஸ் படிப்பர் அதற்கும் மேல் அரிதாக ஒரு டிப்ளமோ அல்லது ஒரு டிகிரி. அவ்வளவு தான், அதுவும் அங்கு அத்தனை எளிதாகக் கிடைத்து விடாது.

“இவளைப் படிக்க வைச்சா, இவ தகுதிக்குத் தக்கன மாப்பிள்ளைப் பார்க்கணுமே? அப்போ என்ன செய்வீங்க? நம்மதுல அப்படியெல்லாம் படிச்ச பையன் எங்க இருக்கான்? பெரிய இடத்துல வரன் பார்க்க என்ன வக்கு இருக்கு உங்களுக்கு? அதுக்குப் படிக்க வைக்கிற காசுக்குக் கூட கொஞ்சம் நகை சேர்த்திடலாம், நீங்க பேசாம இருக்க..” என்றார் வள்ளி.

“அம்மா.. எனக்கு நகையே வேண்டாம். அதுக்குப் பதிலா படிக்க வைம்மா..” என மகள் பேரம் பேசி கெஞ்சினாள்.

“நீ வேண்டாம்னு சொல்லி என்ன பிரோஜனம்? நாளைக்கு உன்னைக் கட்டிக்க போறவன் அப்படிச் சொல்லுவானா? அது மட்டுமா, படிக்க அனுப்புனா இந்த ஊர் என்ன பேசும்? இந்த ஊர்க்காரன்களைப் பத்தி தெரியாது உங்களுக்கு?”

“ஊர் ஆயிரம் பேசும், பேசுறவங்க வீட்டுல இருந்து நாளைக்கு எனக்கு மாப்பிள்ளை வரப் போறதில்லையே? பின்ன ஏன் நான் யாரையோ பத்தி எல்லாம் யோசிக்கணும்?”

“ஊரை விடு, நீயே நாளைக்கு காதல், கீதல்னு பண்ணிட்டு வந்து நின்னா? நம்ம குடும்பம் மான மரியாதை என்னாவுறது? உங்கப்பா ஊருக்குள்ள தலை நிமிந்து நடக்க முடியுமா? என்ன வளர்ப்புன்னு என்னைப் பேசமாட்டாங்களா?”

“இல்லாத ஒன்னுக்கு ஏன்மா இவ்வளவு பேசுற?” என்றவள் துடிதுடித்தாள்.

“ஏன்டி சின்ன பிள்ளைகிட்ட என்ன சொல்லணுங்கிற விவஸ்தை இல்லையா உனக்கு?” என ராமநாதன் கண்டிக்க, “பின்ன, அப்படி எதுவும் நடக்காதுங்கிறதுக்கு என்ன உத்தரவாதம்?” எனச் சீறினார் வள்ளி.

சட்டென உச்சந்தலையில் கை வைத்துக்கொண்டு அன்னையின் முன் வந்து நின்றவள், “சத்தியமா சொல்லுறேன்மா, என்னை படிக்க மட்டும் வைங்க.. அதுக்கு அப்புறம் நீங்க சொல்லுற யாரா இருந்தாலும் நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்..” எனச் சத்தியம் செய்தாள்.

அந்த வாக்குறுதியை நம்பிய பிறகு தான் வள்ளி இறங்கி வந்து சம்மதம் தெரிவித்தார்.

அதிலும் பேருந்தில் போக வர, அலைச்சல் வேண்டாம். ஊரார் பார்வைக்குக் காட்சியாகவும் வேண்டாமென விடுதியில் சேர்த்தும் விட்டனர்.

மீனாவும் சொல்லியபடி தான் இருந்தாள். இப்போது வரையிலும் படிப்பைத் தவிர, மனதில் எந்தவித சலனத்திற்கும் இடம் கொடுத்திடவில்லை.

தற்போது கவனம் தடுமாறியதில் மனம் விம்மினாள், கட்டுப்படுத்த முடியாது கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.

இந்தப் படிப்பு அவளுக்கு அத்தனை முக்கியம். அதுவும் சாதாரணமாகக் கிடைத்து விடவில்லை. பெரிதும் போராடிப் பெற்றதற்கு இந்தக் குமரன் நிகராகவே மாட்டான்.

குமரனின் மீது வெறுப்பில்லை, ஆனால் வேலுநாச்சியின் வார்த்தைகளின் மீது பயம் இருந்தது. அதை மறைத்துக் கொண்டிருந்தாள்.

விரிந்து கிடந்த புத்தங்கள் காற்றிலாடி, அவள் கவனம் கலைத்தது. இறுதி பரீட்சை, தற்போது இதில் மட்டுமே கவனமிருக்க வேண்டுமென்று நினைத்தாலும் மனம் தடுமாறிக் கொண்டே இருந்தது.

அதில் ஒன்ற முடியாது போக, புத்தகத்தை மூடி வைத்த மீனா எழுந்தாள்.

அப்போது தான் அவள் தந்தை, ராமநாதனின் வண்டிச் சத்தம் கேட்க, எழுந்து வாசலுக்கு வந்தாள். தனது எக்ஸ்.எல் வண்டியிலிருந்து பருத்தி விதை மூட்டையை இறக்கி திண்ணையில் வைக்க, அதற்குள்ளாக செம்பில் தண்ணீர் கொண்டு வந்து நீட்டினாள் அழகு மீனாள்.

“அம்மா எங்கம்மா..?” என்னும் போதே, “அம்மா வடக்குப்பக்கம் மேய்ச்சலுக்குப் போயிருக்கு, நீங்க வரவும் உங்களை வரச் சொன்னுச்சுப்பா. இன்னைக்கு வெள்ளிக்கிழமை கோயிலுக்குப் போகணுமாம்” என்றாள்.

“சரிம்மா..” என்றவர், “செத்த நேரம் மனுஷனை சும்மா விட மாட்டாளே, இவளைக் கட்டுன நாள்ல இருந்து எனக்கு ஓய்வே இல்லை..” என்ற புலம்பலோடு வண்டியை நிறுத்துவிட்டு, நடந்தார்.

ராமநாதன் நில அளவையராக அரசுப் பணியிலிருந்துவிட்டு, ஓய்வு பெற்றவர். அவருக்கு உலகமே, மனைவியும் மகளும் தான். தற்போது, எட்டு மாடுகளை வைத்துக்கொண்டு வள்ளி பால் வியாபாரம் பார்க்க, அதற்குத் தேவையான தீவனம், வீட்டுத் தேவைக்கான தானிய வகைகளைப் பயிரிடுவது என விவசாயம் செய்து வருகிறார் ராமநாதன்.

வள்ளி திருமணம் முடித்து வரும் போதே பிறந்த வீட்டுச் சீராக இரண்டு கறவை மாடுகளுடன் வந்தவர். அப்போதே பால் வியாபாரத்தைத் துவங்கி விட, கணவர் நன்கு சம்பாதித்த போதும் அவர் தொழிலை விட்டார் இல்லை.

ஏதோ வீட்டுத் தேவைக்கு ஆயிற்று, மகளுக்குச் சேர்க்கிறேன் என அவரால் இயன்றதையும் சிறுகச் சிறுக சேமித்து வைத்துக்கொண்டிருக்கிறார்.

Advertisement