Advertisement

அத்தியாயம் 03

வாழ்வே மாயம் என்னும் நிலையில் சோகமாய் நடந்து வந்து கொண்டிருந்த குமரனை, “தலைவரே.. தலைவரே..” “அண்ணே” என இருவித அழைப்பில் இருவித குரல்கள் அவனை இழுத்திருந்தது.

அங்கு குமரனின் தலைமையில் ஒரு இளைஞர் கூட்டம் உண்டு. அதை அவர்களே சங்கமென்று அறிவித்துக்கொள்ள, குமரனைத் தலைமை பொறுப்பிலும் அமர்த்திவிட்டனர்.

பொழுது போகவே சிறுவயதில் கபடி விளையாடித் திரிந்தவர்கள், தற்போது அதை அவர்கள் அடையாளமாகவும் மாற்றிக் கொண்டனர். சுற்று வட்டாரத்தில் எங்கு கபடி போட்டி நடந்தாலும் அவர்கள் ஊரின் பெயர் சொல்லும் படியாக ஒரு குழு அங்கிருக்கும். நிறையப் போட்டிகளில் வெற்றியும் கோப்பைகளையும் அள்ளி வந்து, பிறந்த ஊருக்குப் புகழ் சேர்ந்திருந்தனர்.

இவர்களின் முக்கிய வேலை, ஊர்த்திருவிழாவை நடத்துவது, இவர்கள் சார்ப்பாக வருடம் ஒருமுறை கபடிப் போட்டி நடத்துவது, அடுத்த தலைமுறை பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுப்பது. அதில் சிறப்பாத் தேறி வருபவர்களை, சுந்தரம் தனியாக அழைத்துச் சென்று பெரிய பெரிய ஸ்போர்ட்ஸ் அகாடமியில் முறையாகப் பயிற்சி பெறச் சேர்ந்து விட்டுள்ளார்.

“என்னயையா தலைவரே.. கப்பல் கவுந்தது கணக்கா கண்டுக்காம போறீரு..” என மல்லுவேட்டி மருது ஆரம்பிக்க, “முதல்ல இப்படி உக்காருண்ணே..” எனப் பிடித்து மரத்தடி திண்டில் அமர வைத்திருந்தான் கோலிக்குண்டன் சுரேஷ்.

குமரனின் உடன் பயின்றவன் மருது. மீசை அரும்பும் வயதில் ஊர்த்திருவிழாவில் முதல்முறையாக வேட்டி கட்டி வந்த அன்றே ராக்கெட் வெடியை விட்டுவிட, சட்டென வேட்டியை அவிழ்த்து முக்காடிட்டுக் கொண்டான். அன்றிலிருந்தே மல்லுவேட்டி மருது என அடைமொழியும் சூட்டிவிட்டனர்.

தற்போது சுந்தரமூர்த்தியின் மில்லில் தான் கணக்காளராக வேலை பார்க்கிறான். அவ்வப்போது கிடைக்கும் ஓய்வு நேரங்களில் நண்பர்களைப் பார்க்க ஓடி வந்து விடுவான்.

அநேகம் பேர் வெளியூரில் வேலைக்குச் சென்று விட்ட போதும், மருது ஊரை விட்டுச் செல்வதில்லை என ஊர்ப்பாசத்தோடு இங்கே கிடத்த வேலையைச் செய்து கொண்டிருக்கின்றான்.

கோலிக்குண்டன் சுரேஷ், குமரனை விட ஒரு வயது இளையவன். அசோக்கின் உறவினன், ஆகையால் சிறுவயதிலிருந்து இவர்களை ஒட்டியே வளர்ந்தவன்.

சிறுவயதில் ஒன்றாக விளையாடுகையில் கோலிக்குண்டை வாய்க்குள் போட்டு மறைத்துத் திருடிவிடுவான், கண்டு பிடித்த நாளிலிருந்து அவனுக்கு இப்பெயரே தண்டனையானது.

இப்போது படிப்பை முடித்து விட்டு பொறுப்பாகச் சங்கத்து மரத்தடியைக் காவல் காத்துக் கொண்டிருப்பவன்.

குமரன் சோர்ந்து அமர்ந்திருக்க, இருவரும் சுற்றி நின்று விசாரிப்பதை கவனித்த, எதிர் கடைக்காரன் சோலை எழுந்து இவர்களை நோக்கி வந்தான்.

இவர்கள் சங்கத்தில் அவனும் உறுப்பினரே! குமரனை விட மூன்று வயது மூத்தவன் தான் என்றாலும் பள்ளிப் படிப்பில் தோல்வியுற்றுத் தோல்வியுற்று அவர்களுடனே படித்தவன். பள்ளிப்படிப்பு முடிய, போதுமென தந்தையோடு சிறிது காலம் விவசாயத்தில் உதவிக்கொண்டு சுற்றியவன் தற்போது ஒரு மெக்கானிக் செட் வைத்து முதலாளியாக அமர்ந்து விட்டான்.

“என்ன.. என்னாச்சு.. பங்கு..?” என்றவன் அவர்களை நெருங்கி வர, “ச்சூ.. ஒன்னுமில்லை. அதுக்கு ஏன்யா என்னியச் சுத்தி ஒப்பாரி வைக்கிறீங்க?” என்ற குமரன், தெளிந்து அமர்ந்தான்.

“என்ன தொழில் அதிபரே..” என மருது சோலையை அழைக்க, அவன் எங்கு வருவான் எனத் தெரிந்ததால் நழுவப் பார்த்தவனை பிடித்துக் கொண்டான் சுரேஷ்.

“நம்ம தொந்தி மாமா கடையில, நாலு டீ சொல்லுறது..” என மருது கேட்க, கைலியை உருவினாலும் பரவாயில்லை என சுரேஷ் பிடியிலிருந்து சோலை நழுவப் பார்க்க, குமரன் சிரித்து விட்டான்.

“டேய்.. டேய்.. கைலியை உருவிப்புடாத.. அவனே ஒரு கஞ்சப் பையன், உள்ளே ஒன்னுமிருக்காது” குமரன் கேலியுரைக்க, “ஆமாம், ஆமாம்.. மானம் போச்சேன்னு புலம்புவான். அப்புறம் புதுப் புருஷனை வீட்டுக்குள்ள விடாது அவன் சம்சாரம்..” என்றான் மருது கேலியாக.

சோலைக்குச் சொந்தத்திலே பெண் கொடுத்திருக்க, திருமணம் முடிந்து இரண்டு மாதங்களாகிறது.

“நீ சிரிக்காத.. பார்க்கச் சகிக்கலை..” எனச் சோலை குமரனை கறுவ, “ஆமாம், புதுப்புருஷனுக்கு ஐஸ்வர்யா ராயே வந்தாலும் சம்சாரத்தைத் தவிர யாரும் அழகாத் தெரியாதுல, அப்படித்தானையா?” என்றான் மருது.

“ஐயோ.. போதும் விட்டுங்கடா என்னிய..” என்றவன் வேண்ட, “கையை எடுத்துக் கும்பிடுயா விட்டுடுறோம்..” எனக் குமரன் கள்ளச் சிரிப்போடு உரைத்தான்.

“எதுக்குக் கைலியை உருவவா..? போங்கடா, உங்க சங்காத்தமே வேண்டாம்..” எனக் கோபித்துக் கொண்டவன், திமிறிக் கொண்டு தன் கடை நோக்கிச் சென்றான்.

“சரி, சரி கோவிச்சிக்காதையா, இங்க வந்து உக்காரும்..” எனக் குமரன் கொஞ்சலாக அழைக்க, மருதுவும் சுரேஷும் குண்டுக்கட்டாகத் தூக்கி அமர வைத்திருந்தனர். 

சோலையில் தோளில் தட்டியபடி கழுத்தைக் கட்டிக்கொண்டவன், “யோவ்.. ஒரு நாலு டீ வாங்கித் தரமாட்டியா? அப்படியா நாம பழகியிருக்கோம்?” எனக் குமரன் சீண்டினான்.

“நான் என்ன வைச்சிக்கிட்டா வஞ்சகம் பண்றேன் பங்காளி..? என் கடைப்பக்கம் ஒரு ஈ, காக்கா கூட வர்றதில்லை. நானே ஒத்த டீக்கு பாதி நேரம் தொந்தி மாமா கடையில தான் பொட்டலம் போட்டுக்கிட்டு கிடக்கேன்..” என்றவன் சலித்துக்கொண்டான்.

“மீதி நேரமெல்லாம் வீட்டுக்கு ஓடிடுவியோ?” என மருது கேலிக் கேட்க, “அடேய்.. என்ன பேச்சு? புதுமாப்பிள்ளைக்கு ஆயிரத்தெட்டு சோலி இருக்காதா?” என்றான் குமரன்.

“ஏய் மல்லுவேட்டி, குமரா.. உங்களுக்கும் கல்யாணம் ஆகும்ல அப்போ வைச்சிக்கிறேன் கச்சேரியை..” என்றவன் மிரட்ட, “செலவு மிச்சம்னு நினைச்சுப்போம் என்ன மாப்பிள்ளை..” என்ற இருவரும் கலகலவென சிரித்தனர்.

சிரிப்புடனே, “டேய் கோலி.. சங்கம் சார்ப்பா டீ சொல்லு..” என்றான் சுரேஷை நோக்கி.

அவனோ தன் முன்னே சைக்கிளில் செல்லும் சிறுவனை நோக்கி, “அடேய்.. அரைப்பெடலு.. உங்க அப்பா கடையில நாலு டீ வாங்கியாடா..” எனக் குரல் கொடுத்தான்.

தன்னைவிடவும் உயரமான சைக்கிளில் பெடல் போட்டே ஓட்டிக்கொண்டு திரியும் சிறுவன், “அதெல்லாம் சரி, காசு..?” என்றான்.

“பாருண்ணே.. உஷாரு..” என முனங்கிக்கொண்ட சுரேஷ், “நம்ம சங்கத்துக்கு கணக்குல எழுதச் சொல்லு..” என்றான்.

நின்று பேசாது அதே இடத்திலே சைக்கிளில் வட்டமடித்துக் கொண்டே, “சங்கமே சங்கு ஊதிக்கிட்டு கிடக்கு. பாக்கியே இன்னும் வசூல் ஆகலை. இதுக்கு மேல ஒத்த டீத் தர முடியாது பார்த்துக்கோங்கையா..” என்றான் தோரணையாக.

‘நம்ம சங்கத்துக்கு வந்த சோதனையா?’ மனதில் குமைந்து கொண்ட சுரேஷ், “யாரு சொன்னது? தொந்தி மாமாவா?” என்றான் விசாரணையாக.

“எங்க அப்பா இல்லை, நான் தான்..” என்றான் சிறுவன் இன்னும் உயர. “அடேய்.. இரு.. இரு, நீச்சல் கத்துக்கணும்னு எங்கிட்ட தானே கம்மாய்க்கு வருவ? தண்ணீக்குள்ள தலைகீழ முக்கிப்புடுறேன் இரு..” என மிரட்டினான்.

இவர்கள் வாக்குவாதங்களைக் கவனித்திருந்த குமரன், “அரைப்பெடலு..” என அழைத்தான்.

அப்போது தான் நின்று அவனைக் கவனித்த சிறுவன், “வணக்கம் சீனியர்..” என்றான் உற்சாகமாக.

விடுமுறை நாட்களில் கோயில் திடலில் அடுத்த தலைமுறை பிள்ளைகளுக்குக் கபடி கற்றுத் தருவான் குமரன்.

குறுநகை பூத்த குமரன், “இப்போ போய், டீ வாங்கிட்டு வாங்க ஜூனியர்..” எனச் சட்டைப்பையிலிருந்து பணத்தை எடுத்துக்கொடுத்து அனுப்பி வைத்தான்.

இந்த காரணத்தினால் தான் குமரனுக்குத் தலைவர் பதவி.

“ஊருக்குள்ள வெட்டியா இருக்கேன்னு நண்டுச் சிண்டு கூட நம்மை மதிக்கிறதில்லை..” என்ற புலம்பலோடு குமரனின் மறுபுறம் வந்து அமர்ந்தான் சுரேஷ்.

“அடேய் கோலிக்குண்டா..! அதான் நம்ம தொழில் அதிபர் இருக்காருல்ல.. அவருக்கு அப்ரண்டீஸா சேர்ந்துக்க..” என்ற மருது சோலையை வம்பிழுத்தான்.

“ஆணியே புடுங்க வேணாம்..” என்ற சுரேஷ் சுளித்துக்கொள்ள, மற்ற இருவரும் உரக்கச் சிரித்தனர்.

குமரனின் நோக்கி, “ஏண்ணே, நம்ம ட்ராவல்ஸ்ல எதுவும் வேலை கிடைக்குமா?” என்றான்.

அவன் தோளில் கைப்போட்டுக் கொண்ட குமரன், “அதுக்கு என்னடா கோலி? தாராளமா வாங்கிக்கோ.. நாளைக்கு ஆபிஸ்ல போய் அப்பாவைப் பாரு. நானும் ஒரு வார்த்தைச் சொல்லி வைக்கிறேன்” என்றான்.

இருள் சூழ்ந்து ஏழுமணி பேருந்து வந்து திரும்பும் வரை, தேநீரோடு சிநேகம் கொண்டாடியவர்கள் பின் கலைந்து சென்றனர்.

இரவு புரண்டு புரண்டு படுத்துப் பார்த்தும் உறக்கம் வர மறுத்தது மீனாவிற்கு. குமரன் விளையாட்டுப் பேச்சு, முறைப்பெண் என்ற கேலிக்கு மட்டும் பேசுவதாகத் தெரியவில்லை. இத்தனை வருடமில்லாது இப்போது புதிதாக உறவு சொல்லி பின் வருவதும், உறவை வளர்க்க எண்ணுவதிலும் ஒரு தீவிரம் தெரிந்தது.

ஒருவேளை இவ்விஷயம் அவன் அப்பத்தா காதிற்கோ, அல்லது தன் அன்னை காதிற்கோ சென்றால்? அந்நிலையை நினைத்துப் பார்க்கவே சற்று பயமாகத்தான் இருந்தது. அவனை என்ன சொல்வார்களோ தெரியாது, ஆனால் தன்னைக் கண்டிப்பாகக் குறை சொல்வார்கள் என்பது அவளுக்குத் தெரியும்.

பயம் என்றில்லை, சண்டை சச்சரவுகளையோ அதிரும் படியான வார்த்தைகளையோ கூட அவளால் தாங்கிக்கொள்ள முடியாது.

இந்நிலையில் அவன் செழுமைக்குத் தன்னைத் தானே குறைவாகச் சொல்வார்கள் என்றெண்ணம் தோன்ற, இன்னும் அவனிடமிருந்து விலகிக் கொள்ள வேண்டும் என்ற உறுதி அதிகமானது.

குமரனின் அன்னை ஜெயராணி. ராமநாதனுக்கு ஒன்றுவிட்ட தங்கை. சிறுவயதில் அவர்கள் வீட்டிலே வளர்த்து சுந்தரமூர்த்திக்கு மணமுடித்துக் கொடுத்திருந்தனர். உடன்பிறந்த தங்கை போலே பாசம் வைத்திருந்தார் ராமநாதன்.

அப்போது ராமநாதன் அரசுப்பணியில் இருக்க, கையில் கொஞ்சம் காசு சேமிப்பில் இருந்தது. சுந்தரமூர்த்தி ட்ராவல்ஸ் தொடங்கும் நேரம் மனமுவந்து தம்பதியினராக அவர்களுக்குக் கொடுத்தனர்.

சுந்தரமூர்த்தி பேருந்து வாங்கிய நேரம், அவர் உழைப்பு, மற்றும் ராமநாதனின் நல்ல மனதால் தொழில் நன்கு பெருகியது.

ஊருக்குள் அரசுப்பேருந்து கூட அதுவரை வந்ததில்லை, முதல் முதலாக வந்த பேருந்து சுந்தரம் ட்ராவல்ஸ் தான்.

விவசாயிகள் தங்கள் விளைச்சலை, நகரத்திற்கு எடுத்துச் சென்று விற்பனை செய்ய, விவசாய வேலைக்கான நேரம் போக, மற்ற காலத்தில் கூலி வேலைக்குச் செல்லும் மக்கள், பத்தாவது வரை மட்டுமே என நின்ற கல்வி கல்லூரியை நோக்கிச் சென்றது எல்லாம் ஊருக்குள் உலா வரும் இந்தப் பேருந்தால் தான்.

ஊர் மக்கள் அனைவருக்குமே அது அத்தனை முக்கியமாகவும் உபயோகமாகவும் இருக்க, சுந்தரமூர்த்திக்குத் தொழில் மேலும் மேலும் பெருகியது.

நகரங்களைச் சார்ந்து கிராமப் பொருளாதாரம் முன்னேறிய காலமது. அந்த நேரம், அவர் தொழில் தொடங்கியதால் அடுத்த பத்தாண்டில் அபரிவிதமான தொழில் வளர்ச்சி கண்டார். 

அதே நேரத்திற்குள் மலிவு விலைக்கு வரும் தோப்பு, வயல், அரிசி ஆலைகள் என வாங்கிப் போட்டுச் சொத்தும் சேர்த்து வைத்தார்.

அழகு மீனாள் பிறந்திருந்த நேரம், வள்ளிக்கு ஒத்தாசையாக இருந்தார்  ஜெயராணி.

பெண்பிள்ளை என்றும் அண்ணன் மகள் என்றும் பிறந்ததிலிருந்து மீனாவின் மீது அவருக்குக் கொள்ளைப்பிரியம்.

ஜெயராணி அடிக்கடி குழந்தையைத் தூக்கி வந்து விட, வள்ளியை விடவும், அழாது சமத்தாக அத்தையின் மடியிலிருந்து கொள்வாள் மீனா.

மருமகளின் எண்ணைப்போக்கை நன்கு புரிந்துகொண்டார் வேலுநாச்சி. ஆரம்பத்திலே அவர்கள் ஒட்டுதல் பிடிக்காது போக, அந்த வெறுப்பு மீனாவின் மீது தான் இறங்கியது.

இதைத் தவிர மருமகளின் மீது வேறெந்த குறையுமில்லை வேலுநாச்சிக்கு. ஜெயராணியை ஒரு வார்த்தை சொல்லிவிட சுந்தரமூர்த்தி அனுமதிப்பதில்லை.

அதே நேரம், வள்ளியின் வாயும் சும்மா இருக்கவில்லை.

உனக்கு விஷயம் தெரியுமா? இந்தக் கனகவேல் ரைஸ் மில்லை, என் நாத்தனார் தான் வாங்கியிருக்கா.. எல்லாம் முதல் பஸ் வாங்கின நேரம்! அதுக்கு நாங்க கொடுத்த பணமும் என் கைராசியும் தான் காரணம்..” எனப் பக்கத்து வீடுகளில் பெருமை பேசுவார். பெருமையும் பூரிப்பும் சந்தோஷமும் பொங்கியிருக்கும்.

பக்கத்து வீடுகளில் ஆரம்பித்த இந்தப் பேச்சு அப்படியே, அவர்கள் உறவுகளுக்குள்ளும் விசேஷ வீடுகளிலும் சென்று சேர்ந்தது.

பிறர் சொல்வது ஒருபுறம் பரவ, வள்ளியே, “எங்களால தான் சுந்தரம் ட்ராவல்ஸ்.. ஆரம்பிச்சதே. நாங்க பணம் கொடுத்து தான் அவிங்க முன்னேறி வந்தாய்ங்க. எல்லாம் என் கைராசி..” என்றே தற்பெருமை பொழிந்தார்.

அது மெல்ல மெல்ல சுந்தரமூர்த்தி வீட்டினர் செவிகளையும் அடைய, மனம் சுணங்கினர்.

சுந்தரமூர்த்தி உழைப்பைப் பெரிதும் மதிப்பவர், கடின உழைப்பாலே முன்னேறியவர்.

“இந்த வள்ளிக்கு வாய் நீளம் தான், போற இடத்துல எல்லாம் மாப்பிள்ளை இவர் தான், இவர் போட்டிருக்கிற சட்டை என்னதுன்னு சொல்லற மாதிரி எல்லா இடத்துலையும் சொல்லி வைச்சிருக்காள்..” எனத் திருமண வீட்டிற்குச் சென்று வந்த வேலுநாச்சி பொரிந்தார்.

“நான் உழைக்கிறேன், நான் சொத்து சேர்க்கிறேன். இதில் இவர்களுக்கு என்னவாம்? கொஞ்சம் காசு கடனா கொடுத்திட்டு அவங்க பிச்சையில தான் நாம வாழ்கிற மாதிரி எல்லா இடத்துலையும் சொல்லி வைக்கிது..” என சுந்தரமூர்த்தியும் அவர் ஆதங்கத்தை அன்னையிடம் தான் கொட்டினார். மனைவியிடம் எதுவும் சொல்லிக் கொள்வதில்லை.

“இது தான் இருக்க இடம் கொடுத்தால், படுக்க மடத்தைப் பிடிக்கிறதுன்னு சொல்லுவாங்க.. அதுக்குத் தான், இவிங்களை எல்லாம் வைக்க வேண்டிய எடுத்துல வைக்கணும்னு சொல்லுறது. நீ ஓவரா இடம் கொடுத்த, அவ உரிமை கொண்டாடுகிறாள்..” என மகனைக் கடித்தார்.

அது வரையிலும் நிலபுலலென எது வாங்கினாலும் ராமநாதனிடம் கலந்தாலோசித்து, தெரிவித்து வந்த சுந்தரமூர்த்தி அதன் பின் அந்த பழக்கத்தை நிறுத்திவிட்டார். பேச்சு வழக்கும் சற்றே குறைந்தது.

ஏற்கனவே அதிகமாகத் தன்மானம், கெளரவம் பார்ப்பவர், புதிதாகச் சேர்ந்த பணமும் செழுமையும் அதற்காகவே மற்றவர்கள் தரும் மரியாதையில் கொஞ்சம் செம்மாப்பில் இருந்தார்.

அந்த மாற்றம் புரிபட, வசதி வரவும் அன்பும் உறவும் விலையற்றுப் போனதாக வெம்பினார் ராமநாதன். இதையும் அடிக்கடி வள்ளியிடம் சொல்லி வருத்தப்பட்டார்.

இது எதையும் அறியாத, புரிந்து கொள்ளாத இரண்டு ஜீவன்களான ஜெயராணியும் மீனாவும் தங்கள் பாச வளைக்குள் வெளியுலகம் மறந்திருந்தனர்.

இதற்கிடையில் சுந்தரமூர்த்தி ஊரிலே பெரியதாக் கட்டியிருந்த வீட்டின் வேலைகள் முடிவுற்று புதுமனைப் புகுவிழாவும் வந்தது.

ஊரையே கூட்டி வெகு விசேஷமாகக் கொண்டாடுவதால் ராமநாதன் குடும்பத்தையும் அழைத்திருந்தனர்.

உறவுகளும் ஊரும் கூடியிருந்தது. உறவுகளிடம் பேசிக் கொண்டிருந்த வள்ளி, “நாங்க தான் தொழில் தொடங்க பணம் கொடுத்தோம், என் கையால முதல் முதல்ல அண்ணன் வாங்கிட்டுப் போனார். என் கைராசி, நான் கொடுத்த நேரம், இன்னைக்கு இம்புட்டுப் பெரிய வீட்டைக் கட்டுற அளவுக்கு வசதி சேர்ந்திருக்கு..” எனப் பெருமை பேசினார்.

பின் நீண்ட மூச்சை இழுத்து விட்டுக் கொண்டவர், “வசதி வந்தால் வாழ்க்கை தான் மாறும், மனுஷங்களும் மாறிடுவாங்கன்னு இப்போ தான் புரிஞ்சிகிட்டேன். செய்த உதவிக்குக் கொஞ்சமும் நன்றியில்லை. அட நன்றி இல்லை பரவாயில்லை, செய்ததையே மறந்துடுறாங்களே..” என அங்கலாத்துக் கொள்ள, சரியாக அந்தப் பக்கம் வந்த வேலுநாச்சியின் செவிகளில் விழுந்தது.

“என்னடி நன்றி மறந்துட்டோம் நாங்க? முறையாகப் பட்டெடுத்துக் கொடுத்து, முதல் பத்திரிக்கை வைச்சி, பந்தியில விருந்தும் வைக்கலையாக்கும்?” என வேலுநாச்சி வரிந்து கொண்டு எகிறினார்.

“இது தான் உங்க நன்றியா? நான் ஒன்னும் ஐநூறு ரூபாய் பட்டுக்கும் ஒரு வேளைச் சாப்பாட்டுக்கும் உங்க வீட்டுக்கு வரலை, காக்காசா இருந்தாலும் கவர்மென்ட்ல சம்பளம் வாங்குறார் என் புருஷன்.. கூப்பிட்டீங்களேன்னு வந்ததுக்கு நல்ல மரியாதை தான். அதான் சொல்லிக் காட்டிட்டீங்களே?” என்ற வள்ளியும் விடுவதாயில்லை.

“ஆமாம், நீ மட்டும் என்ன? இம்புட்டு நாளா சொல்லிக்காட்டித் தானே திரிஞ்ச? கைராசி, கண்ணுல தூசின்னு பெருசா பேச வந்துட்டா..”

“பின்ன சும்மாவா? எம்புட்டுக் கொடுத்தோம், எல்லாம் என் கைராசி தான்.  வாங்கும் போது இல்லாத ரோசம், சொல்லும் போது மட்டும் வருதோ?”

“வார்த்தைய அளந்து பேசு, என்னடி உன் கைராசி? நீதான் ரிப்பன் வெட்டித் திறந்து வைச்ச பாரு..? கைராசியாம் கைராசி.. ம்க்கும், என் மகன் மாடா உழைக்கிறான், காசு சேர்க்கிறான். நீ என்னச் செஞ்சிக் கிழிச்சிட்ட? எண்ணிப் பத்தே நாள்ல கொடுத்த காசை வட்டியோட வாங்கிக்கோடி..” என்ற வேலுநாச்சி கொதித்துப் போனார்.

வள்ளியும் சும்மா விடவில்லை, பதிலுக்குப் பதில் பேசிவிட, பெரிதாக வாக்குவாதமானது. ஆண்களும் உள்ளே வர, உறவு முறிந்தது.

“செஞ்ச நன்றியையும் மறந்துட்டு இப்படி எங்களை கூப்பிட்டு வைச்சி அவமானப்படுத்துறீங்ளே.. நீங்க எல்லாம் நல்ல இருப்பீங்களா? நல்லாவே இருக்க மாட்டீங்க” என்ற வசையோடு தான் வள்ளி கிளம்பினார்.

கோபத்தோடு ராமநாதன் குடும்பம் வீட்டைவிட்டு வெளியேற, “அத்தை அத்தை..” என அழுத மீனாவின் முதுகில் ஒன்று வைத்து, “இனி அத்தை சொத்தைன்னு அந்த வீட்டுப் பக்கம் போன.. தோலை உரிச்சிப்புடுவேன் பார்த்துக்கோ..” என மிரட்டியபடி இழுத்து வந்தார் வள்ளி.

Advertisement