Advertisement

அத்தியாயம் 02

மீனாட்சிபுரம், ஊரின் மையத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில். அதைச் சுற்றிக் குடியிருப்புக்கள், அதைச் சுற்றி வயல்வெளிகள், தோப்புகள் எனப் பசுமை விரிப்பு, அதைச் சுற்றி உயர்ந்த மலைமுகடுகள்.

வைகையின் கொடையால் செழித்த, அழகான கிராமம். அதன் அழகு சிதையாது அவசியத்திற்குச் சிறிது நவீனத்தையும் புகுத்திக்கொண்டனர்.

காலை நேரம், அவ்வீட்டின் பின்புறம் மாட்டுத் தொழுவத்தில் கன்றும் கறவையும் கனைத்துக் கொண்டிருந்தது. பால்காரன் முதலில் பாலைக் கறந்து முடித்து, வீட்டம்மாள் வள்ளியின் முன் அளந்து கொண்டிருந்தான்.

“அடே! கண்ணுகெட்ட கனகுப் பயலே! பாலை உன் வாளிக்குள்ள சிந்தாம ஊத்துலேய்..” என்றொரு அதட்டலோடு கன்றுகளை அவிழ்த்து விட்டுக் கொண்டிருந்தார்.

“என்னக்கா நீ? நிறைய நிறைய ஊத்துனா தானே உன் மாடு மடி நிறையும்..” என மழுப்ப, “ஏன்டா, அதுக்குன்னு என் கண்ணு முன்னாடியே களவாணித்தனம் பண்ணுவ.. பார்த்துட்டு சும்மா இருக்கணுமாக்கும்? கணக்குல கரெக்ட்டா இருப்பாள்ள இந்த வள்ளி! என்னைய ஏமாத்துனது பத்தாம, தண்ணீயை கலந்து தானே டவுனுக்குள்ள போய் விக்கப் போற, அப்புறம் என்ன? விலகு..” எனச் சீறினார்.

அவன் கையிலிருந்த லிட்டர் அளவையை வெடுக்கென்று பறித்தவர், அவரே அளந்து பால் கேனில் ஊற்றினார்.

வள்ளியிடம் கொள்ளையடிக்க முடியாது வாய்க்குள் முனங்கியபடி அனைத்தையும் வேடிக்கைப் பார்த்திருந்தான் பால்வியாபாரி.

ஆனால் வள்ளியின் வாய் தான் ஓய்ந்தபாடில்லை, கைகள் பாலை அளந்து கொண்டிருந்தாலும், “ஒத்த சைக்கிளும், ஒத்த பால் கேனுமா சுத்துன பயலுக்கு என் எட்டு மாட்டுப் பாலையும் கொடுத்து, டவுன்ல வித்துட்டு வாடான்னு சொல்லி அனுப்பியும் வைச்சேன். என்னால வளந்த பையன் நீ, என்னையே ஏமாத்தப் பார்க்குறீயா?” என சீறிக் கொண்டிருந்தார்.

“எக்கா, என்ன இப்படிச் சொல்லுற? நான் அப்படிப்பட்ட ஆளா?”

“ஆமாம், ஆமாம்.. நீ எப்பேர்ப்பட்ட ஏமாத்துக்காரன்! டேய்.. போன மாசம் பால்காசு இன்னும் வரலைன்னு கேட்டதுக்குப் பிள்ளைக்கு சுவமில்லைன்னு சொல்லிட்டு புதுசா எக்ஸ்.எல் வண்டி வாங்கி பவுசால சுத்திக்கிட்டு இருக்க? என்னையவே ஏமாத்த நினைச்சியோ? இன்னையில இருந்தது உனக்கு பால் இல்லை, வீட்டுப் பக்கம் வராத கிளம்பு” என விரட்டினார்.

அவரைச் சார்ந்தே அவன் தொழில் ஆகையால் பதறிப் போனான்.

பாதி விலைக்குப் பால் கொள்முதல் செய்பவன் இரண்டு மடங்கு விலையோடு, தண்ணீர் கலந்தும் டவுனில் உள்ள டீக்கடைகள், உணவகங்களில் விற்கும் வியாபாரி அவன்.

தண்ணீர் கலக்காத சுத்தமான பால் கிடைக்கும் என்பதால் சிலர் வீட்டிற்கே வந்து வாங்கிச் செல்வர், ஆகையால் வள்ளியிடம் சில்லறை விற்பனையும் உண்டு.

“எக்கா வண்டி என் மச்சான் வண்டிக்கா, இதோ உனக்குக் கொடுக்கத் தான் காசு கொண்டு வந்திருக்கேனே..” என தன் சட்டைப்பையில் இருந்து பணத்தை எடுத்துத் தரவுமே பால் கேன்களை எடுக்க விட்டார் வள்ளி.

தன்னால் தான் அவன் பிழைப்பு என்பதில் எப்போதும் ஒரு மிதப்பு அவருக்கு.

தன்னைச் சார்ந்து இருப்பதாக வந்தால் அள்ளி அள்ளி செய்யும் குணம். அதே வேளை, தன்னை மீறினால் சொல்லிக் காட்டவும் தயங்க மாட்டார்.

எதிலும் சற்று உயர்வாகப் பெருமை பேசும் ரகம் வேறு. வள்ளி சாதாரணமாகப் பேசுவதே உச்சத்தொனியில் தான், அவர் குரலும் கணீர் குரல் வேறு. இதில் சண்டையிட்டார் எனில், எதிராளி யாராயினும் வாயடைத்துப் போவர். ஆக ஊருக்குள் அவர் பெயருக்கு அடைமொழியே வாயாடி வள்ளி. 

அதிகாலையிலே எழுந்து அதுவரைக்கும் படித்துக் கொண்டிருந்தாள் அழகு மீனாள்.

இந்தக் கலவரமான சத்தத்திற்கு எழுந்து வந்து பின் வாசலில் நிற்க, கையிலிருந்த பால் பாத்திரத்தை அவளிடம் கொடுத்தவர், “போய் காஃபியைப் போடு, போ.. வயக்காட்டுப் பக்கம் போன மனுஷனை இன்னும் காணும்..” என்றார் புலம்பலாக.

தலையாட்டியவள், “அம்மா, வைதேகி வீடு வரைக்கும் போயிட்டு வரட்டுமா?” என்றாள் ஆசையும் எதிர்பார்ப்புமாய்.

அதற்குள்ளாகத் தொழுவத்தைச் சுத்தம் செய்யத் துவங்கியிருந்த வள்ளி, “காலங்காத்தாலே அடுத்தவ வீட்டுல போய் நிற்பியா? சாப்பிட்டு அப்புறம் போ” என்றார்.

உதட்டைச் சிலுப்பியவள், “அப்புறம் தான்..” என்று உள்ளே சென்றாள்.

கண் மருத்துவம் இறுதி வருடம் பயில்கிறாள். பள்ளிப்படிப்பு வரை கிடைத்த நட்பின் கதகதப்பு விடுதியில் சேர்ந்த பின் குறைந்திருந்தாலும் விட்டுப் போகவில்லை.

ஊருக்கு வரும் போதெல்லாம் தோழி வைதேகியை ஒரு முறையாவது சென்று பார்த்து வந்துவிடுவாள் மீனா.

காலை உணவு நேரம், சுந்தரமூர்த்தி அமர்ந்து உணவுண்டு கொண்டிருக்க, அன்னை வேலுநாச்சி பரிமாறிக் கொண்டிருந்தார். சுந்தரமூர்த்தியின் மனைவி ஜெயராணி தவறி பத்தாண்டுகளுக்கும் மேலாகி விட்டது. பெற்ற மகனும் பெயர் சொல்லும் தொழிலும் போதுமென அப்படியே இருந்து விட்டார்.

“அம்மா, குமரன் இன்னைக்கு இறங்கிடுவான். முனியன்கிட்ட சொல்லியிருக்கேன் இளம் ஆட்டுக்கறி கொண்டு வருவான், வாங்கி மதியத்துக்குக் குழம்பு வைச்சிடு..” என்றார்.

“ம்க்கும், காலம் போன காலத்துல நான் சமைச்சிப் போட்டுத்தான் அவன் சாப்பிடப் போறானாக்கும்?” என்றவர் நொடிந்து கொள்ள, “இப்போ என்ன செய்யணுங்கிற..?” என்றார்.

“ம்ம்.. வீட்டுக்கு ஒரு மருமகள் வேணுங்கிற..?

“இப்போ என்ன? இரண்டாம் கல்யாணம் செய்யணுங்கிறையா?”

“ம்க்கும்.. ஆசை தான் உனக்கு..!” என்றபடி உச்சி மண்டையில் நங்கென்று கொட்டு வைத்தார்.

சுந்தரமூர்த்தி தலையைத் தடவிக் கொள்ள, “ஜெயராணி போன இரண்டாம் வருஷமே உன்னைக் கேட்டேன், நீ தான் மாட்டேனுட்டையே..” என வருந்தியவர், “குமரனுக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணிப் பார்க்கணுலேய்” என்றார் ஆசையாக.

உணவில் கவனமாய் இருந்தவர் தலையை மட்டும் ஆட்ட, “அவனும் தான் எவ்வளவு பொறுப்பா இருக்கான். ஒரு கல்யாணத்தைக் கட்டி வைக்கலாம்ல..?” என்றார் வேலுநாச்சி.

“வைக்கலாம், வைக்காலம்.. பொண்ணு..?”

“நீ.. ம்ம்னு சொல்லு.. நானே பார்க்கிறேன்..”

வேலுநாச்சி ஒன்றை நினைத்துவிட்டார் அது நடக்கும் வரை யாரையும் அத்தனை எளிதில் விடுவதில்லை.

அன்னையை நன்கு அறிந்தவர் சுந்தரமூர்த்தி.

“ஏதோ உன் விருப்பம், உன் பேரன் விருப்பம்.. நீங்க தான் கூட்டாளியாச்சே, நீங்களே பாருங்க. ஆனால் கல்யாணம் சித்திரைத் திருவிழா முடிச்சி வைகாசியில தான் வைக்க முடியும் பார்த்துக்கோ..” என்றவர் உண்டு முடித்து எழுந்தார்.

இந்தச் சம்மதமே வேலுநாச்சிக்குப் போதுமானதாக இருந்தது. சுந்தரமூர்த்தி அன்னையிடம் சொல்லிவிட்டு ட்ராவல்ஸ் அலுவலகம் கிளம்பினார்.

சுந்தரமூர்த்தியின் சுந்தரம் ட்ராவல்ஸின் முதல் பேருந்து சொப்பனசுந்தரி. அதை வாங்கிய பின் அனைத்தும் அசுர வேக வளர்ச்சி.

இன்று தமிழகம் முழுவதும் அவர்கள் ஆம்னி பேருந்துகள் இயக்கிக் கொண்டிருக்க, தென் தமிழகத்தில் பெயர் சொல்லும் படியான அடையாளம் அது.

அதைத் தொட்டு சுந்தரமூர்த்திக்கு மரியாதையும் பெயரும் புகழும் பெரிய மனிதன் என்ற அடையாளமும் கிடைத்தது.

சில ஆண்டுகளுக்குப் பின் இந்தப் பேருந்து பழுதாகி விட, அப்படியே நிறுத்தி வைத்தார், ஆனால் சில மாதங்களிலே தொழில் சரிய, கலங்கிப் போனார்.

மீண்டும் பழுது நீக்கி இப்பேருந்தை இயக்கவும், தொழிலில் நல்ல முன்னேற்றம் வரத் துவங்கியது. அதன் பின், முதலாக வாங்கிய இப்பேருந்து இயக்கினால் தான் தனக்குத் தொழில் நிலைக்கும் என்னும் நம்பிக்கை அவருள் வேரூன்றிப் போனது.

வேலையாட்களை நம்பி ஒப்படைப்பதில்லை. வசதி வந்த போதும், வயதான போதும் அவரே அதை இயக்கிக் கொண்டிருந்தார்.

கோயில் போன்று சுத்தமாக வைத்திருப்பதும், சிறு பழுது என்றாலும் உடனே சரி செய்வதுமாய் பிள்ளை போன்றே கவனித்துக் கொண்டார்.

மூன்றாண்டுகளுக்கு முன் குமரன் இந்த பேருந்தை தன் பொறுப்பில் எடுக்க, அதன் பின்னே சுந்தரம் அலுவலகத்தில் அமர்ந்தார்.

அப்போதும் மகனை முழுதாக நம்பவில்லை, அன்னை சொன்ன வார்த்தைக்குக் கொடுத்தாலும் எப்போதும் ஒரு கண் அவருக்கு அவன் மீது இருக்கும்,

புத்தகப் பைகளோடு பள்ளி செல்லும் சிறுவர்கள் சென்று கொண்டிருக்க, அந்த அரசமரத்தடியில் பயணிகள் நின்றுகொண்டிருந்தனர். விதவிதமான கூடை, உணவு பைகளோடு பக்கத்து நகரத்திற்குக் கூலி வேலைக்குச் செல்லும் மக்கள், வண்ண வண்ண உடைகளில் கல்லூரி செல்லும் இளசுகள் தான் பெரும்பாலும்.

சரியாகச் சுந்தரம் பேருந்து வந்து நிற்கிறது என்றால் மணி காலை எட்டு முப்பது. பயணிகள் இறங்க, இறுதியாகக் குமரன் இறங்கினான்.

தொடர்ந்து இரண்டு நாள் ட்ரிப் எடுத்தால் மூன்றாம் நாளான இன்று குமரனுக்கும் நாளை இவன் திரும்பியதும் அசோக்கிற்குமென, ஒரு நாள் விடுமுறை. மற்ற வேலையாட்கள் இருந்த போதும், பேருந்து இவர்கள் இருவரின் பொறுப்பில் தான்.

இறங்கிய குமரன் சுற்றி வந்து ஓட்டுநர் இருக்கைக்கு நேராக வெளிப்புறம் நின்றபடி, “டேய், அடக்கட்டை என் பையை எடுத்துப் போடு..” எனக் கேட்க, உள்ளே ஏறி வரும் கல்லூரிப் பெண்களின் மீதிருந்த அசோக்கின் கண்கள் திரும்பவில்லை.

மீண்டும் மீண்டும் அழைத்ததில், குமரனின் குரலுக்குப் பெண்கள் சிரிக்க, அதில் கலைந்த அசோக், “இந்தா பிடி, இந்த அழுக்குப் பையை எவனும் ஆட்டையைப் போடப் போறதில்லை..” எனத் தூக்கி எறிந்தான்.

“ஐந்து நாளா இந்த அழுக்குப் பையைத்தான் அஞ்சலி அஞ்சலின்னு கட்டிப் பிடிச்சிட்டு தூங்குன..” என்ற கேலியோடு குமரன் கிளம்ப, அதிர்ந்தான் அசோக்.

அப்போ அஞ்சலி வந்தது எல்லாம் கனவா என்ற ஏமாற்றத்தோடு சட்டென நினைவு வந்தவனாகத் தன் சட்டையும் நுகர்ந்து பார்த்துவிட்டு, வாசம் தாங்காது மூக்கைச் சிந்த, அவன் செயலில் அதற்கும் பெண்கள் சிரித்தனர்.

இரண்டு நாட்கள் கடுமையான வேலையால் களைப்பு. அவன் வேலையில் உடல் சூடு அதிகம் பிடித்துக் கொள்ளும். ஆகையால், வீட்டிற்கு வந்ததும் எண்ணெய் செய்து குளித்து முடித்தான். பின், அப்பத்தா வேலுநாச்சியின் கையால் உணவு உண்டு விட்டுத் தான் படுக்கையில் விழுந்தான்.

இரவு எல்லாம் பேருந்தில் படுத்தாலும் சரி வர, உறக்கம் வராது. அவனுக்கு அவன் தலையணையும் அமைதியான இடமும் வேண்டும் நிம்மதியான உறக்கத்திற்கு.

மஞ்சள் வெளிச்சம் பொழியும் மாலை நேரம் சோம்பல் முறித்தபடி எழுந்தான். சற்று வெளியில் செல்லலாம், நண்பர்களைப் பார்த்து வரலாம் என்ற எண்ணத்தில் ஊருக்குள் சென்றான்.

அலைபேசியில் ஒரு பார்வை வைத்தபடி தெருவிற்குள் நடந்து சென்று கொண்டிருக்க, சற்று முன்னதாக பக்கவாட்டு வீதிக்குள் செல்லும் அழகு மீனாளைக் கண்டு கொண்டான்.

தோழி வைதேகியைப் பார்த்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தாள் மீனா.

அந்த வீதிக்குள் ஆள் நடமாட்டமே இல்லை. பெரும் அமைதியாக இருக்க, தான் செல்லும் பாதையை விடுத்து, அவள் பின்னால் சென்றான் குமரன்.

“அழகு.. இந்தா புள்ள..” என்றவன் அழைக்க, அப்போது தான் அவள் நடையின் வேகம் கூடியது.

அவள் திரும்பவேயில்லை, அவனைக் காணாவிடினும் அவன் குரல் என அடையாளம் கண்டு கொண்டாள்.

‘அடி குள்ளச்சி.. கூப்பிடக் கூப்பிட வேகமா போற? இரு உனக்கு..’ என முனங்கியவன் விரைந்து வந்து அவள் வழியை மறைத்தபடி நின்றான்.

அப்போதும் நிமிர்ந்து பார்த்தாள் இல்லை, விலகிச் செல்லப் பார்த்தாள்.

சுவாரஸ்யமான பார்வையோடு, “கூப்பிடுறேனே.. செவிடு மாதிரி நீ பாட்டுக்குப் போற? ஏன் என்னைப் பார்த்தால்அவ்வளவு பயமா?” என்றவன் ஏற்றமாகக் கேட்க, நிமிர்ந்தவள் அலட்சியமாய் பார்த்தாள்.

“பயமா? எனக்கென்ன பயம்? யாருன்னு தெரியாதவங்ககிட்ட எல்லாம் எனக்கு என்ன பேச்சு வார்த்தை வேண்டி கிடக்குன்னு விலகிப் போறேன். வழியை விடுங்க..” என்றாள் சிடுசிடுப்புடன்.

‘அடேங்கப்பா..’ என மனதில் நினைத்துக் கொண்டான். மூக்கு விடைக்க, ஒரு அடி முன்னேறியவன், “ஏதே? யாரோவா நானு?” என்றான், குரலே கொஞ்சம் தாழ, உரிமைக் கொஞ்சியது.

வெடுக்கென சிலுப்பிக்கொண்டு, “ஆமாம், அதான் நேத்தே சொன்னேனே உங்களுக்கும் எங்களுக்கும் எந்த ஒட்டுமில்லை, உறவுமில்லைன்னு..” என்றவள் அவனைத் தாண்டி நடக்கத் தொடங்கினாள்.

அவள் பேசிய வார்த்தையும் தன்னை அலட்சியப்படுத்திச் சென்றதில் ஒரு கோபமும் வர, விறுவிறுவென அவள் அருகே சென்றவன் அவள் தோள் ஒட்ட உரசியபடி, நடைக்கு ஈடாய் நடந்தான்.

அவள் அனலாய் எரித்தபடி விலகப் பார்க்க, “இந்த ஒட்டும், உறவும் போதுமாடி? இல்லை இன்னும் ஒட்டவா?” என்றிருந்தான்.

இடப்புறம் இடுப்பில் கை வைத்து முறைத்தவள், “என்ன லந்தா? இந்தக் கேலி கிண்டலுக்கெல்லாம் வேற ஆளைப் பாரும்..” என்றாள் விரல் நீட்டி.

அந்த அழகை மனதில் ரசித்தவன், இளம் புன்னகை சிந்த, “மாமன் மகன்னு எனக்கு நீயொருத்தி தானே இருக்க..?” என்றான் விடாக்கண்டனாக!

இது வரையிலும் இப்படியெல்லாம் வழிய வந்து பேசியதில்லையே இவன்? இப்போது மட்டும் என்ன? என்ற யோசனை.

அது மட்டுமின்றி, வேறெந்த பெண்ணுடனும் இவன் இவ்வாறு பேசியதில்லை என்பதையும் அறிவாள்.

குமரனின் சிரிப்பிலிருந்த குறும்பு அவளை எரிச்சலுறச் செய்ய, “உறவா? அதான் எதுவுமில்லைன்னு ஆச்சே! இரண்டு குடும்பத்துக்குள்ள குறைந்தபட்ச பேச்சு வார்த்தைக் கூட இல்லையே?” என்றாள்.

அவ்வளவு தான் பேச்சு வார்த்தை முடிந்தது என்பது போன்ற உறுதி அவளிடம்.

முகம் சுருங்க, “இது வரைக்கும் பேச்சு வார்த்தை இல்லைன்னா என்ன? இனி நாம வளர்த்துப்போம்..” என்றான் சட்டென.

அவளுக்கு உள்ளுக்குள் மெல்லிய அதிர்வு இருந்தும் அவனிடம் வெளிக்காட்டிக் கொள்ளாது, மேலும் நிமிர்ந்து நின்றாள்.

“எப்படி? எப்பவுமே ஆளில்லாத இடத்துல ரகசிய பேச்சுவார்த்தையா?” என்க, குமரன் அடிபட்டப் பார்வை பார்க்க, “ஏன் உங்க அப்பத்தா காதுக்கு இந்த விஷயம் போகக் கூடாதுன்னா? அவ்வளவு தைரியசாலியா நீங்க?” என்றாள்.

குமரன் வார்த்தை வராது வாயடைத்து நிற்க, சைக்கிள் வரும் சத்தம் கேட்டதில், சட்டென நடக்கத் தொடங்கியிருந்தாள் அழகு மீனாள்.

Advertisement