Advertisement

இன்பமுறச் செய்தாய்! – மித்ரா

அத்தியாயம் 01

“மதுர மரிக்கொழுந்து வாசம்

என் ராசாத்தி உன்னுடைய நேசம்

மதுர மரிக்கொழுந்து வாசம்

என் ராசாத்தி உன்னுடைய நேசம்…”

என்ற பாடல் அந்த நின்றிருந்த பேருந்திற்குள் ஒலி பெருக்கி வழியாக இசைத்துக் கொண்டிருந்து.

“நூறு பூ இருபது ரூபாம்மா, அம்மா மொட்டு மல்லிம்மா.. நூறு பூ இருபது ரூபாம்மா. வாங்கிக் கொஞ்சம் தலைக்கு வைச்சிக்கோ தாயி..”

“ஒரு கிலோ அறுபது, நல்ல கொய்யா.. சிவப்புக் கொய்யாம்மா.. ஒன்னு வாங்கிச் சாப்பிட்டுப் பாருங்க.. தேனா இனிக்கும். ஒரு கிலோ அறுபது ரூபாய் தாம்மா” என்ற விற்பனையாளர்களின் கூவி கூவி அழைக்கும் குரலுக்குப் போட்டியாக, “தேனி, ஆண்டிபட்டி, சோழவந்தான், வத்தலக்குண்டு..” என நின்றிருக்கும் பேருந்தின் நடத்துநர்களும் கூவிக் கொண்டிருந்தனர்.

பலவித குரல்கள் போலே, பலவித வாசமும் நிறைந்திருக்க, சுட்டெரிக்கும் வெயிலிலும் சுழலும் நாணயங்கள் சிதறியது போலே சுறுசுறுப்பான மக்கள் கூட்டங்களால் நிறைந்திருந்தது, மதுரை பேருந்து நிலையம்.

கொதிக்கும் எண்ணெய்யின் வாசத்தோடு, பாலோடு கலக்கும் டிக்காஷன் வாசமுமென அந்த சின்ன தேநீர்க்கடையில் ஆழ்ந்த மூச்சை உள்ளிழுத்து சுவாசித்தபடி, நடுநாக்கில் சூடாய் இழுக்கும் தேநீரை விழுங்கியபடி நின்றிருந்தான் குமரன்.

அந்த தேநீர் தான் தாகமோ, பசியோ எதுவாயினும், அவனுக்கு மட்டுமின்றி பெரும்பாலான உழைக்கும் வர்க்கத்திற்குச் சோர்வையும் களைப்பையும் நீக்கி உற்சாகம் தருவது. குமரனுக்கு முதல் தேவைகளில் முக்கியமானது அது.

“போலாமா மாப்பிள்ளை? மணி இரண்டே கால்லாச்சுலேய்.. பி.ஆர்.சி-க்காரன் போய் அரைமணி நேரம் ஆச்சில்ல..?” என்றபடி கையைத் துடைத்துக் கொண்டு உணவகத்திலிருந்து வெளியே வந்தான் அடக்கட்டை அசோக்.

சிறு வயதிலிருந்து வண்டியோட்டுபவன், அப்போது உயரம் குறைவாக இருந்ததால், ஓட்டுநர் இருக்கையில் அமர்வதற்கும் வண்டியை இயக்குவதற்கும் தோதாக ஒரு கட்டையைப் போட்டுக்கொள்வான், அப்போதே அதை அவனுக்குப் பெயராக்கி விட்டனர்.

“ம்ம்..” என்னும்படி தலையாட்டிய குமரன், தேநீருக்கான சில்லறையைக் கொடுத்துவிட்டு முன்னே நடந்தான்.

அவன் நடையோடு நளினமாகச் சிணுங்கியது தோள் பையில் குவித்துக் கிடக்கும் சில்லறைகள்.

பின்னே வந்த அடக்கட்டை, சுந்தரம் ட்ராவல்ஸ் என உச்சியில் வண்ண விளக்குகளால் மின்னும் பேருந்தின் ஓட்டுநர் இருக்கையில் ஏறியமற, பின் படிக்கட்டில் ஏறி நின்றிருந்தான் குமரன்.

பார்வையால் ஒருமுறை அலசியவன் ஓரளவிற்கு இருக்கைகள் நிரம்பி இருக்கவே, போதுமென கீழ் உதட்டை மடக்கி விசிலடித்தபடி, “மச்சான்.. ரைட்டு..” எனக் குரல் கொடுத்தான்.

அடக்கட்டையோ கண்ணாடியில் முகம் பார்த்துத் தலைவாரிக் கொண்டிருக்க, “அடேய்! அழகு சுந்தரன்னு நினைப்புத் தானாக்கும் வண்டியை எடுடா..” என பல்லைக் கடித்துக் கொண்டு பின்னிருந்து கத்தினான் குமரன்.

முதல் இருக்கையிலிருந்த இளம் பெண்ணொருத்தி சிரித்துவிட, கடுப்பாகிப் போனான் அசோக்.

“அசோக்கு.. சோக்கா தான் இருக்கு..” என்று ஒருத்தி கேலியைத் துவங்க, “காத்துல கலையப் போற முடியைச் சீவி சிங்காரிக்காட்டி என்னவாம்? அரைக்கிழவனை எந்தக் கிறுக்கி திரும்பிப் பார்க்கப் போறாளாம்?” எனப் பக்கவாட்டில் அமர்ந்திருந்த பாட்டி கேலியாகக் கேட்டார்.

“அது ஆத்தா.. முன்ன விழுந்த வழுக்கையை உச்சி முடியை எடுத்துப் போட்டு மறைக்கிறாரு மச்சினரு..” என்றாள் நடுத்தர வயது, முறைப் பெண்ணொருத்தி.

“அதானாக்கும் அடிக்கடி தலை சீவுற சங்கதி..?” என மூதாட்டிக் கேட்க, மூவரும் சிரித்துவிட, மேலும் கடுப்பானவன், “ஏய் கிழவி, என்னை நம்பித்தான் இந்தப் பஸ்சே இருக்கு. போற வழியில ஓடைக்குள்ள கவுத்துன்னே வை, நேரா உனக்கு மேலோகத்துக்கு டிக்கெட் தான் பார்த்துக்கோ” என்றான் மிரட்டலாக.

எல்லாம் அவர்கள் ஊர்க்கார்கள், பெரும்பாலும் ஒன்றுக்குள் ஒன்றான உறவுகள், தெரிந்தவர்கள் தான்!

“ஆயிசு நூறுன்னு அடிச்சி சொல்லியிருக்கான் ஆண்டிபட்டி ஜோசியன், வைரம் பாய்ஞ்ச கட்டைடா, மடப் பையலே..” என்றவர் பொக்கை வாய் பொங்கச் சிரிக்க, பல்லைக் கடித்தான்.

“ஏய் ஆத்தா! தாத்தன் பெயரு தங்கம் தானே? வைரம் யாரு?” என அவள் கண்சிமிட்டி கிழவியிடம் கேலியாகக் கேட்டாள்.

அதற்குள் மீண்டும், “டேய்ய்ய்…” எனக் குமரன் குரல் கொடுக்க,

“இதோ மாப்பிள்ளை..” எனப் பதில் கொடுத்துக் கொண்டே வண்டியை இயக்கினான் அடக்கட்டை.

“ஸ்டார்ட் பண்ணாலே அரைமணி நேரம் கழிச்சித் தான் அரை இன்ச் நகரும். இத்துப்போன தகர டப்பா பஸ், இதைப் பேரீச்சப்பழத்துக்குப் போட்டா தப்பு! பெயரு மட்டும் சுந்தரம் ட்ராவல்ஸ்ஸாம்! ம்க்கும்.. சுந்தரா ட்ராவல்ஸ்ன்னு வைச்சிருக்கணும், பத்து பொருத்தமும் பக்காவா பொருந்துற பெயர்..!” என வாய்க்குள் முனங்கிக் கொண்டான்.

குமரன் செவி சேராது, வாய்க்குள் முனங்க மட்டும் தான் முடியும் இவனால். குமரனுக்கு அல்ல அவன் தந்தை சுந்தரமூர்த்திக்கு இந்த பேருந்து தான் கடவுள்! அத்தனை பக்தி இதன் மேல்.

குமரனுக்கு அப்படியான எண்ணமில்லை. ஏதோ கொடுத்த பொறுப்பு என்பதால் கடமையோடு கவனித்துக் கொண்டான். மதுரைக்கும் அவன் கிராமத்திற்கும் இடையில் இயங்கும் பேருந்து என்பதால் அப்படியொன்றும் சொல்லிக் கொள்ளும்படியான இலாபமில்லை. அதை விடவும் பழைய வாகனத்தில் தேய்மானம் தான் அதிகம்.

மொத்தமாகப் பேருந்தை மாற்றிவிடக் கேட்டு, தந்தையிடம் ஒன்றிரண்டு முறை, வாங்கிக் கட்டிக் கொண்டான் குமரன். அதன் பின் அது பற்றிய பேச்சை விட்டு விட்டு என்னென்ன புதுமைப்படுத்த முடியுமோ அத்தனையும் செய்து நவீனப்படுத்தினான் குமரன்.

பள்ளி செல்லத் துவங்கிய நாளிலிருந்து துவங்கியது அசோக், குமரனின் நட்பு. நல்ல மதிப்பெண் பெற்ற போதும், குமரனின் தந்தை பெரிய படிப்பு படிக்க வைக்க விரும்பிய போதும், அசோக்கைப் பிரியாது, அவன் தேர்ந்தெடுத்த டிப்ளமோ பிரிவிலேயே சேர்ந்து கொண்டான் குமரன்.

படிப்பு முடித்தும் ஒன்றாகவே இருவரும் ஊர் சுற்றி வர, தந்தை பேருந்தின் பொறுப்பைக் குமரனுக்குக் கொடுக்க, அதில் அசோக்கையும் இணைத்துக் கொண்டான். நகமும் சதையும் போன்றது அவர்கள் நட்பு.

கூட்ட நெரிசலில் அசைந்து வரும் கொழுத்த கோயில் யானை போலே பேருந்து நிலைய வாசல் வரை மெல்ல மெல்ல நகர்ந்திருந்தது சொப்பன சுந்தரி.

சிறுவயதில் ஆயுத பூஜை நாளில் சந்தனம், குங்குமம், மாவிலை, வாழையிலை, ஜிகினா தாள்கள் என சுந்தரமூர்த்தி பேருந்திற்குச் செய்யும் அலங்காரத்தைக் கண்டு அவுல், பொரிக்குச் சுற்றி வரும் சிறுவர்கள் கூட்டம் பேருந்திற்கு வைத்த பெயர் தான் சொப்பனசுந்தரி.

பெரும் குரலில் விசிலடித்த குமரன், பேருந்தின் பக்கவாட்டில் கைகளால் தட்டியபடி, “ஏய் மச்சான், நிறுத்து.. நிறுத்து..” எனக் கத்தினான்.

அவன் குரலுக்கு என்னவோ ஏதோ, எனப் பதறிப் போய் சட்டென பிரேக்கிட, அப்போதும் சிறிது அடிச் சென்று, குலுங்கி நின்றது பேருந்து.

திரும்பிப் பார்க்க, பின் படிக்கட்டில் குமரன் தொங்கியபடி இருக்க, “மாப்பிள்ளை..” எனக் குரல் கொடுத்தான் அசோக்.

அவன் பேருந்து வாசலில் வழி மறைத்தபடி நின்றிருக்க, பின் வரும் வாகனம் ஹாரன் அழுத்த, “ஒரு ஆள் வருதுடா..” எனக் குமரன் குரல் கொடுத்தான்.

பக்கவாட்டு ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தவன், “ஓ.. உன் ஆள் வருதா..?” என முனங்கிக் கொண்டான்.

அதே நேரம், சாலையிலிருந்து தோளில் மாட்டிய பையும், கையில் ஒரு பெரிய பையுமாய் ஓடி வந்த பெண்ணிற்குப் படியிலிருந்து இறங்கி வழிவிட்டான் குமரன்.

மீண்டும் ஒரு விசிலை எழுப்பி விட்டு, அவள் உடைமைகளைத் தாங்கிக் கொண்டவன், ஒரு இருக்கையில் இருந்தவனைக் கண்ணசைவில் எழுச் சொல்லி விட்டு, அங்கே வைத்தான் அவள் பைகளை.

மேல் மூச்சும் கீழ் மூச்சுமாய் வாங்க, கம்பியைப் பிடித்துக் கொண்டு நின்றிருந்தவள் ஒரு பார்வைக்குக் கூட அவன் புறம் திரும்பாது, “பரவாயில்லை, நீங்க உக்காருங்க மாரியண்ணே..” என்றாள் அவள்.

“பின்னாடியொரு சீட் இருக்கு, நீங்க உக்காருங்க பாப்பா..” என்றபடி அவர் நகர, அந்த இருக்கையில் அமர்ந்தாள் அவள்.

“செம்மீனா.. விண்மீனா.. செம்மீனா.. விண்மீனா..

கண்ணோடு வாழும் கலைமானா இல்லை

கண் தோன்றி மறையும் பொய்மானா”

ஒலிபரப்பிக் கொண்டிருந்த பாடல் தடைப்பட்டு, இப்பாடல் இசைத்தது.

“ஏன்டா இப்போ பாட்டை மாத்துன? உன் ஏரியா பின்ன, என் ஏரியா முன்ன.. என் எல்லைக்குள்ள வர்ற உரிமை உனக்கில்லை..” என அசோக் எகிற, “என் வண்டிடா! பாட்டை மட்டுமென்ன, ட்ரைவரைக் கூட மாத்த முடியும்..” என்ற குமரன் நகர்ந்தான்.

“ம்க்கும்.. பஞ்சரான டயரை மாத்தத் துப்பில்லை..” என முணுமுணுத்த அசோக், “மாப்பிள்ளை! அரைக்கிறுக்கு மாதிரி அலையாம டிக்கெட் கிழிக்கிற வேலையைப்பாரும்..” என அதட்ட, அவன் நல்ல நேரம், கண்டு கொள்ளாமல் சென்றான் குமரன்.

புறங்கையால் நெற்றி வியர்வையைத் துடைத்தபடி நிமிர்ந்த அழகு மீனாள் பாட்டு மாறியதில் எதிரே வந்த குமரனை நோக்கி முறைத்தாள். அவனோ சுரணையின்றி ஒரு புன்னகையை விரிக்க, கடுகடுப்போடு உதட்டையும் சுளித்தவள் ஜன்னல் ஓரம் திரும்பிக் கொண்டாள்.

ஒரு நொடி தான், ஆனாலும் யாரேனும் கவனித்திருந்தால் அவள் மனம் படபடவென அடித்துக் கொண்டது.

பயணச்சீட்டு கிழிக்கும் வேலையைத் துவக்கிய குமரன், அவளைத் தவிர, அத்தனை பேரிடமும் சில்லறைப் பெற்று டிக்கெட் கொடுத்துக் கொண்டிருந்தான்.

“ஏத்தா.. வள்ளி மவளே..” என்ற குரலில் திரும்ப, எதிர் இருக்கையில் அமர்ந்திருந்த பெண், “ஊருக்கு வரியாக்கும்..?” என்றாள் முகம் பார்த்து.

“படிப்பெல்லாம் முடிஞ்சதா மருமவளே?” என மற்றொருவர் ஆரம்பிக்க, “இல்லை அத்தை, இது படிக்கிறதுக்குக் கொடுத்திருக்க லீவு, கடைசி பரீட்சை இனித்தான் எழுதணும்..” என்றாள் பொறுமையாக.

சுற்றுப்பட்டி ஊர்க்கார்கள் இருந்தாலும் சிலது அவர்கள் ஊர்க்கார்கள், தெரிந்த முகமும் தான். அவளாகப் பேசாவிட்டாலும் கேட்பவர்களுக்குப் பதில் சொல்லி விடுவாள்.

அருகில் வந்தவன் அவளுக்கான பயணச்சீட்டைத் தர, வாங்கிக் கொண்டவள் பணம் தருகையில் மட்டும் அவன் வாங்காமல் சென்றுவிட்டான்.

முன் இருக்கை, பின்னிருக்கை என குமரன் அருகில் வரும் பொழுதெல்லாம் அழகு மீனாள் ரூபாயை நீட்ட, அவனோ கண்டுகொள்ளாதது போலே கடந்து சென்றான்.

அதில் மேலும் அவளுக்கு முறைப்பும் கடுப்பும் ஏறிப்போக, பல்லைக் கடித்தபடி அமர்ந்திருந்தாள்.

அவள் ஒரு பார்வைக்குத் தவம் கிடக்கும் குமரன், அந்தப் பேருந்தில் பயணம் செய்யும் அத்தனை இளம் மங்கைகளுக்கும் காதல் மன்னன். அத்தை, மதினி என உறவுப் பெண்களும் அவனை உரசாது செல்வதில்லை. ஏதேனும் வம்பிழுப்பர், எப்போதும் வாயடித்துக் கொண்டே இருப்பர்.

குமரனின் ஸ்டைலுக்கு ஒரு ரசிகக் கூட்டம் எப்போதும் உண்டு. உரிமையோடு கேலி, கிண்டல் பேசினாலும் தன் எல்லையில் சரியாக இருப்பான் குமரன்.

ஒவ்வொரு நிறுத்தமாக நின்று, இறுதியாக அவர்கள் ஊர் மீனாட்சிபுரத்தை அடைந்தது பேருந்து. தனது உடைமைகளை எடுப்பது போல் தாமதப்படுத்திய அழகு மீனாள் இறுதியாக எழுந்தாள்.

இறங்கும் முன், குமரன் இருக்கைக்கு அருகில் வந்தவள், சட்டென ஒற்றை ரூபாய் நோட்டை அவன் சட்டைப் பையில் திணித்துவிட்டு இறங்கப் பார்த்தாள்.

அவள் திடீர் செயலில் அதிர்ந்தவன் உடல் சிலிர்க்க, மெய் மறந்தான் ஒரு நொடி.

என்னவோ அந்தச் செயலில் அவனிடம் உரிமை கொண்டாடுவதாகத் தோன்ற, உள்ளுக்குள் குதூகலித்தான்.

அவள் விலகவுமே, “ஏய்.. என்ன புள்ளை.. இது?” என்றவன் கண்டிப்போடு குரல் கொடுக்க, முறைத்தவள், “உங்க அளவுக்கு வசதியில்லாட்டியும் நாங்க ஒன்னும் வக்கத்துப் போயிடலை. உங்க வண்டியில ஓசியா வர, உங்களோட எந்த ஒட்டுமில்லை, உறவுமில்லை..” என்ற சிலுப்பலோடு படிகளில் இறங்கினாள்.

அந்த ஒரு வார்த்தையிலேயே உள்ளம் வாடிவிட்டான். ஒரு நொடி சந்தோஷத் துள்ளல் மறுநொடியே பள்ளத்தில் விழுந்ததைப் போல் வலித்தது. அவ்வளவு தான் ஒரு வார்த்தையில் அந்நியப்படுத்தித் தள்ளி வைத்துவிட்டாள்.

கண்டிப்போடு, “ஓசியாவா..? முதலாளியம்மாவே நீங்க தானே..?” என்றவனின் குரலுக்கு.. பதில் இல்லை, சென்றிருந்தாள்.

ஆவென வாயைத் திறந்தபடி அதிர்ச்சியாக அசோக் நின்றிருக்க, அலட்டிக்கொள்ளாமல் பார்த்தான் குமரன்.

“அடேய்.. அது.. அந்தப் புள்ளை, அழுக்கு மீனு தானே?” என சந்தேகமாகக் கேட்கையிலே முறைத்த குமரன், “அழகு மீனாள்.. என் அழகு..!” என்றான் முகம் விகசிக்க.

குமரனுக்கு மாமன் மகள், அசோக்கிற்கு அடுத்த வீட்டுப்பெண் அழகு மீனாள்.

ஆகையால் சிறுவயதிலிருந்தே நன்கு அறிவான். சில ஆண்டுகளாக விடுதியில் தங்கிப் படித்துக் கொண்டிருக்கிறாள் என்பதும் தெரியும்.

“என்னடா நடக்குது இங்க?”

“என்ன?”

“நீ போற ரூட்டே சரியில்லை..”

“நீ தானே ட்ரைவரு, என்னைச் சொல்லுற?”

“டேய், என்ன லந்தா? உங்க இரண்டு குடும்பத்துக்கும் தான் பேச்சு வார்த்தையே கிடையாதே, அப்புறம் என்ன அந்தப் புள்ளையோட உனக்குப் பேச்சு வேண்டியிருக்கு..?”

“எல்லாம் வேணும் தான், இது வரைக்கும் இல்லை, இனி பேச்சு வார்த்தையை வளர்த்துப்போம்”

“அடேய்.. அவ கண் டாக்டர்..! நீ கண்டெக்டர்..”

“அதனாலே என்ன? ஜோடிப்பொருத்தம் நல்லா தான் இருக்கும்”

“இது மட்டும் உன் அப்பத்தாளுக்குத் தெரிஞ்சது என்ன ஆகும்?”

“உன் தோலை உரிச்சி உப்புக்கண்டம் போட்டுடும்..”

“ம்ம், தெரியுதுல..” என்றவன் தலையாட்டிவிட்டு அதன் பின்னே புரிந்தவனாக, “எதே..! என் தோலை ஏன் உரிக்கணும்? நீயாச்சு, உன் மாமன் மகளாச்சு..! என்னை ஏன் ஊடால இழுக்குற?” என்ற அசோக் பதறினான்.

“என்ன மச்சான், நண்பன் காதலுக்கு இது கூடச் செய்ய மாட்டியா?”

“எது காதலா?” மேலும் அதிர்ந்த அடக்கட்டை தலையில் கை வைத்து அங்கே அமர்ந்துவிட்டான்.

ஏதோ முறைப்பெண் எனக் கேலிக்குப் பேசுவதாகவும், அவள் பேசாமல் செல்வதால் வம்பு வளர்ப்பதாகவும் தான் நினைத்திருந்தான்.

“ம்ம், அமரக்காதல்.. காவியக்காதல்..!”

“அப்போ ஜோலி முடிஞ்சது, போ..”

ஓங்கி முதுகில் ஒரு அடி வைத்தவன், “நல்ல வாக்கு சொல்லணும் மச்சான்..” என்றபடி கழுத்தைக் கட்டிக் கொண்டான்.

தொண்டை நெரிபட, விடுபடப் போராடியவன், “ம்க்கும்.. நிதர்சனத்தைச் சொன்னேன்..” என்றான்.

குமரன் முறைக்க, “என்னவோ போ, இது மட்டும் உன் அப்பத்தாவுக்கு தெரிஞ்சது வேலுநாச்சி வேப்பிலையில்லாம சாமியாடும் நான் சாட்சி” என்றான் அசோக்.

அதைக் கற்பனை காட்சியாகக் காண, குமரன் சிரித்து விட்டான்.

அதற்குள்ளாகப் பேருந்தில் சிலர் ஏறியிருக்க, அடுத்த பயணம் தொடங்க வேண்டி, தனது இருக்கையை நோக்கிச் சென்றான் அசோக்.

அவனுக்கும் தெரியும், இந்த நான்கு ஆண்டுகளில் அழகு மீனாள் ஐந்தாறு முறை இந்தப் பேருந்தில் வந்து சென்றிருப்பாள். அப்போதெல்லாம் குமரனாக ஏதாவது வம்புக்கு வாய் கொடுத்தாலும் அவள் எதுவும் பேசியதில்லை, கண்டு கொள்ளாது ஒதுங்கிச் சென்றிருடுவாள்.

ஆனால் குமரனுக்கு வாழ்விலிருக்கும் ஒரே லட்சியம், கனவு, ஆசை எல்லாம் மாமன் மகள் அழகு மீனாளை மணமுடிப்பது மட்டும் தான்.

அவளை விடவும் வாழ்வின் பெரிய பொக்கிஷமோ மகிழ்ச்சியோ வேறில்லை அவனிற்கு.

‘சரியான திமிரு பிடிச்சவ.. மண்டக் கனம் அதிகம் தான்.. இதுக்காகவே உனக்கு இருக்கு, இருடி..’ எனப் பொருமிக்கொண்டு அலைவான் குமரன். அதைப் பார்க்கையில் ரகசிய சிரிப்பு தான் அசோக்கிடம்.

இன்று தான் முதல் முறையாக இருவரும் பேசிப் பார்த்திருக்கிறான் அசோக்.

இந்த தொடக்கம், எங்குப் போய் முடியுமோ என்ற பதைபதைப்பு அவனுள் தோன்றியிருந்தது.

Advertisement