கண்மணி இறந்து பதினாறு நாட்கள் கடந்திருக்க, அவளது இறுதி காரியங்களை முடிப்பதற்குள் மொத்தமாக திணறிப் போய் இருந்தாள் காளி. நடுத்தர வீடுகளில் இது ஒரு சாபக்கேடு தானே. 

துக்கமோ சந்தோஷமோ எதையும் முழுதாக அனுபவிக்க விடாமல் பணம் அரக்கத்தனமாக ஆட்சி செலுத்தும் அங்கே.ஏற்கனவே ஒருமுறை பட்டது தான் என்றாலும் கூட, முதல் முறை வலித்த அளவிற்கு இப்போதும் வலி கொடுத்தது காளியின் இழப்பு. 

இதில் அன்னையின் இழப்பை உணராமல் அடிக்கடி கண்மணியை தேடி அழும் அவளது பிள்ளை வேறு. நித்யாவும், வினோத்தும் மாறி மாறி அவனை அரவணைத்து கொண்டாலும்,இரவு நேரங்களில் கண்மணியை பெரிதும் தேடினான் அருண். 

அவனை சமாளிக்கவே அவர்கள் படாதபாடு பட்டுக் கொண்டிருக்க, இதற்குள் என்னென்னவோ திரைமறை காரியங்கள் செய்து காவல் நிலையத்தில் இருந்து வெளியே வந்திருந்தான் ஜெய். 

வினோத் விடாமல் காவல் நிலையம் வரை சென்று விசாரிக்க, “என்னப்பா ஆதாரம் இருக்கு. உன் அக்கா தற்கொலை பண்ணி செத்ததா தான் ரிப்போர்ட். என்ன காரணம்னு விசாரணை நடந்துட்டு இருக்கு. அதுக்குள்ள அவனை எப்படி உள்ளே போட முடியும். விசாரணை முடிஞ்சு நிரூபணம் ஆனா பார்க்கலாம். இப்போ கிளம்பு” என்றனர் அவர்கள். 

“சார் இவனால தான் சார் என் அக்கா செத்தது. சரியான பொம்பளை பொறுக்கி சார் இவன்” என்று வினோத் வாதிட,

“எல்லாம் நம்ம வசதிக்கு சொல்றதுதான். அவன்கூட தான் உன்னையும், உன் அக்காவையும் உள்ளே வைக்க சொல்றான். இப்போதான் உன் வீட்ல ஒரு துக்கம் நடந்து முடிஞ்சு இருக்கு. அதுக்குள்ள, நீயும், உன் அக்காவும் கோர்ட், கேஸ்னு அலையப் போறீங்களா. போப்பா. ஏதாவது தகவல் கிடைச்சா சொல்லி அனுப்புறோம். கிளம்பு.” என்று அவனை விரட்டிவிட்டது காவல்துறை. 

வினோத் செய்வதறியாமல் கலங்கியபடியே வீடு வந்தவன் நடந்ததை காளியிடம் சொல்லி அழ, “இது எதுவும் வேண்டாம் நமக்கு. நீ இதையெல்லாம் விட்டுட்டு உன் படிப்பை பாரு. இனி போலீஸ் ஸ்டேஷன் பக்கம் போகாத” என்று அவனை அதட்டினார் மரகதம். 

“என்னம்மா பேசற நீ. அவனை அப்படியே விட்டுட சொல்றியா” என்று மகன் குதிக்க,

“எல்லாமே உன்னால தான்டா. நீ ஒருத்தன் வாயை மூடிக்கிட்டு இருந்திருந்தா இந்த அளவுக்கு வந்து இருக்காது.” என்று மகனை பழித்தவர், “என்  மகளே என்னை விட்டு போய்ட்டா. இனி எவன் எப்படி போனா நமக்கு என்ன. விட்டுடுடா” என்றார் முடிவாக. 

காளிக்கு மரகதத்தின் பேச்சு பிடிக்கவில்லை என்றாலும், அவரை மறுத்து எதுவும் பேசாமல் எழுந்து தன்னுடைய அறைக்குச் சென்றுவிட்டாள் அவள். என்னவோ, ஆரம்பத்தில் இருந்தே மரகதம் அவளது நிலையை பற்றி அதிகம் யோசிக்கவே இல்லையோ என்று வழக்கம் போலவே இப்போதும் சந்தேகித்தது மனது. 

அன்று கோவிலில் கண்மணியின் வாழ்வை யோசித்து தான் பேசினார் என்று ஏதோ ஒருவகையில் அவள் தன்னை தேற்றிக் கொண்டாலும் கூட, இன்றும் அவர் அதையே பேசுவது என்பதை ஏற்கமுடியவில்லை அவளால். 

ஜெய் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதை தன் தாய் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லையே என்ற ஆதங்கம் என்ன முயன்றும் குறைவதாக இல்லை காளிக்கு. 

இப்படி வீட்டிலேயே அமர்ந்து கொண்டிருந்தால் மெல்ல மெல்ல பைத்தியமாகி விடுவோம் என்று தோன்றியதில் அடுத்தநாள் காலையில் தனது சமையல் வேலைக்கு புறப்பட்டு விட்டாள் அவள். 

மௌனமாக அவளைப் பார்த்தாலும் அப்போதும் மரகதம் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை. எப்போதும் வாய் திறக்கமாட்டார் என்பதால் பெரிதாக கண்டுகொள்ளாமல் தன் போக்கிற்கு கிளம்பிவிட்டாள் அவள். 

எப்போதும்போல சரியான நேரத்திற்கு அவள் உணவகத்தை அடைந்துவிட, அவளிடம் என்ன பேசுவது என்று புரியவில்லை கந்தனுக்கு. 

“வா காளி” என்றவர், “வீட்ல எல்லாரும் இப்போ பரவாய்யில்லையா” என்றார் விசாரிப்பாக. 

“ம்ம்…” என்று தலையசைத்து அவள் உள்ளே சென்றுவிட, அவள் சுபாவம் தெரிந்து அவளை தொந்தரவு செய்யாமல் விட்டுவிட்டார் கந்தன். 

அதற்குமேல் அவள் தனது வேலைகளில் தன்னை மூழ்கடித்துக் கொள்ள, அரைமணி நேரத்திற்கெல்லாம் அரக்கப்பரக்க ஓடி வந்து நின்றான் ஒருவன். 

கந்தனே அவனை அத்தனை விரைவாக அங்கே எதிர்பார்க்கவில்லை என்பது அவரது அதிர்ந்த பாவத்தில் தெரிய, அதையெல்லாம் காற்றில் விட்டு, “காளி எங்கேண்ணா” என்று நின்றான் புகழ். 

அவன் வேகத்தை கண்டு வெளிப்படையாகவே சிரித்துவிட்டார் கந்தன். 

“உள்ளே இருக்கு தம்பி” என்று அவர் தலையசைக்க, 

“தேங்க்ஸ்ண்ணா” என்று கல்லூரி மாணவன் போல ஓடினான் அவன். 

உள்ளே கிரைண்டரில் தீவிரமாக மாவு அரைத்துக் கொண்டிருந்தவள் அவனை கவனிக்காமல் நிற்க, சமையல் மாஸ்டர் கவனித்துவிட்டார். 

கந்தன், “மாஸ்டர்” என்று அழைத்ததில் அவர் அவசரமாக வெளியேறிவிட, அப்போதுதான் பின்னால் திரும்பி பார்த்தாள் காளி. 

அங்கே நின்றிருந்தவனை அந்த நேரம் அந்த இடத்தில் எதிர்பாராமல் அவள் பின்னே நகர, அவள் காலின் கீழே இருந்த பாத்திரம் பெரிதாக சத்தம் எழுப்பிவிட்டது. 

“ஏய்… பார்த்து பார்த்து” என்று புகழ் முன்னே வர, அதற்குள் சுவரில் சாய்ந்து சரியாக நின்றுகொண்டாள் காளி. அவள் சுதாரிப்பில் புகழ் சிரித்துக் கொள்ள, 

“என்ன வேணும்” என்று எப்போதும்போல் மொட்டையாக கேட்டு வைத்தாள் அவன் காதலி. 

“நீதான் வேணும்” என்று சொல்ல துடித்த நாவைக் கட்டுப்படுத்திக் கொண்டவனும், “எப்படி இருக்க?” என்றான் அவளைப் போலவே. 

அவன் கேட்டதில் விரக்தியாக சிரிக்க தோன்றியது காளிக்கு. “எனக்கென்ன. நல்லா தானே இருக்கேன்” என்று பழைய தொனியிலேயே பதில் கொடுத்தாள் அவளும். 

அதற்குமேல் என்ன பேசுவது என்று புரியாமல் புகழ் நிதானிக்க, “இதை கேட்கத்தான் இங்கே வந்தீங்களா” என்றாள் காளி. 

“ஏன் வரக்கூடாதா?” என்ற புகழ், “வேற என்ன கேட்கப் போறேன்னு நினைச்ச நீ” என்று அவளை இடுக்க, 

“நான் எதையும் நினைக்கல. வெளியே போன மாஸ்டரும், என் ஓனரும் என்ன நினைச்சு இருப்பாங்கன்னு யோசிக்கிறேன்” 

“எதையும் யோசிக்க மாட்டாங்க. அவங்களுக்கு உன்னையும் தெரியும். என்னையும் தெரியும்” என்று புகழ் பதில் கூற, 

“இதெல்லாம் எதுக்கு சார்? உங்க வேலையை பாருங்களேன். ஏன் என் பின்னாடி சுத்திட்டு இருக்கீங்க”

“நீ எனக்கு சரியா ஒரு பதிலை சொல்லிடு. நான் உன்கூடவே இருக்கேன்” என்று புகழ் சிரிக்க, அவனிடம் அதற்குமேல் வாதாட விரும்பாமல் குனிந்து அந்த பழைய கிரைண்டரில் இருந்து மாவை வழித்தெடுக்க ஆரம்பித்தாள் காளி. 

“நீ இப்படியெல்லாம் தப்பிக்க முடியாது. நீ சரின்னு சொல்ற வரைக்கும் கண்டிப்பா உன் பின்னாடி சுத்துவேன்” என்று உறுதிபடக் கூறி அங்கிருந்து நகர்ந்தான் புகழ். 

அவன் விலகிச் சென்றதில் நிம்மதி கொண்டாலும், “இருக்கிற பிரச்சனையில இவன் வேற… என் நிலைமை புரியாம என பின்னாடி சுத்தி உசுரை வாங்குறான்.” என்று அவனை வசைபடியபாடியே வேலையைத் தொடர்ந்தாள் காளி. 

அந்த நிமிடம் வரையிலும் கூட அவளிடம் பெரிதாக பாதிப்பு எதுவும் இல்லை. அவளைப் பொறுத்தவரை புகழ், அன்றாடம் அவள் சந்திக்கும் அநேகம் பேர்களில் ஒருவனாகத் தான் இருந்தான் இதுவரை. 

காதல், திருமணம் என்று எதைப் பற்றியாவது யோசித்து இருந்தால்தானே காளி புகழை குறித்து யோசிக்க. அவள் வீட்டில் இருக்கும் சவால்களே அவளை அசையமுடியாதபடி கட்டி வைத்திருக்க, இதில் இதற்கெல்லாம் அவளுக்கு நேரம் ஏது. 

புகழ் கிளம்பிய சில நிமிடங்களில் மாஸ்டர் மீண்டும் சமையல் அறைக்குள் நுழைய, அவரிடம் வாய் கொடுக்காமல் காளி வேலையைத் தொடர்ந்தாள். அந்த மாஸ்டர் பொறுத்துப் பார்த்தவர், பின் அவரே, “ஏதாவது விசேஷமா காளி” என்றுவிட்டார் அவளிடம். 

காளி புரியாமல் பார்க்க, “இல்ல காளி… புகழ் தம்பி உன்கிட்ட பேச வந்துதே” என்று நிறுத்த,

“அட ஏன் மாஸ்டர் நீங்க வேற. என் நிலைமை என்னன்னு உங்களுக்கு தெரியாதா?” என்றாள் காளி. 

“என்னம்மா பெரிய நிலைமை. அதெல்லாம் பார்த்தா மனுஷன் வாழவே முடியாது. நல்ல பையன். யோசி காளி” என்று அவர் கூறிவிட, சிறு சிரிப்புடன் அவரைப் பார்த்து, பதிலேதும் கூறாமல் தன் வேலையைத் தொடர ஆரம்பித்தாள் அவள். 

அந்த மாஸ்டர் அதற்குமேல் என்ன பேசுவது என்று புரியாமல் மௌனமாகிவிட, காளிக்கும் அதுவே போதுமாக இருந்தது. அன்றைய பொழுதை பெரிதாக யாரிடமும் பேசாமல் கடத்தியவள் வேலை நேரம் முடியவும் கோர்ட் வளாகத்தை விட்டு வெளியே வர, வழக்கமான இடத்தில் நின்றிருந்தான் புகழ். 

எப்போதும் போலவே சலனமில்லா நதியாக அவனைக் கடந்து சென்றுவிட்டாள் அவள். புகழுக்கும் அவள் இருக்கும் நிலையில் அவளை நெருக்குவது தவறாக தெரிய, அமைதியாக அவளைத் தொடர்ந்தான் அவன். 

காளி அவள் வழக்கமாக பேருந்தில் ஏறிவிட, சரியாக அவள் இறங்கும் நிறுத்தத்தில் அவளுக்காக காத்திருந்தான் ஜெய். அவனைக் கண்டு எல்லையில்லா ஆத்திரம் கொண்டாலும், அவனை கண்டுகொள்ளாமல் கடந்துவிடவே முயற்சித்தாள் காளி.  

ஆனால், அவனா அப்படி விடுபவன். அவன் காத்திருந்ததே அவளுக்காகத் தானே. வேகமாக காளியின் வழியை மறித்தான் அவன். 

காளி அதிர்ந்து பின்னோக்கி நகர, “என்னடி என் குடும்பத்தை நாசமாக்கிட்டு நீ ஜாலியா ஊர் சுத்த கிளம்பிட்டியா.” என்றான் சத்தமாக. 

அங்கிருந்த சிலரின் கவனம் இவர்கள் மீது படிய, “மரியாதையா வழியை விடு. இல்ல, போலீஸ்ல புகார் கொடுப்பேன்” என்று காளி விரல் நீட்டி மிரட்ட, நீட்டிய அவள் விரல்களைப் பிடித்துக் கொண்டவன் வலிக்கும்படி அவள் விரல்களை நெறிக்க, எதிர்பாரா வலியில், “அம்மா” என்று காளி அலறிய நேரம், ஜெய்யின் முகத்திலேயே குத்தியிருந்தான் புகழ். 

புகழ் அடித்ததில் ஒன்றும் புரியாமல் திணறினாலும், சட்டென சுதாரித்துக் கொண்டு, “யாருடா நீ” என்று ஜெய் புகழின் சட்டையைப் பிடிக்க, அதற்கும் சேர்த்து ஒன்று வைத்தான் புகழ். 

“என்னடி ஆள் செட் பண்றியா. என்ன கொடுத்த இவனுக்கு” என்று காளியிடம் ஜெய் அசிங்கமாக பேச, “நாயே” என்று புகழ் மீண்டும் நெருங்கினான் அவனை. 

இத்தனைக்கும் காளி வாயைத் திறக்காமல் மௌனமாகவே நிற்க, அது இன்னும் ஜெய்யைத் தூண்டிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். 

“ஏய் யார்டா நீ. அவளுக்கும் எனக்கும் நடுவுல நீ ஏன்டா வர்ற” என்று புகழிடம் அவன் வாய்பேச,

“அப்படி கேளு. பதில் சொல்றேன். முதல்ல சார் யாரு? அதுக்கு பதில் சொல்லுடா” என்று புகழ் அவன் வாயின் மீது ஒன்று வைக்க, “அவ தங்கச்சி வீட்டுக்காரன் நான். இவளையும் நான்தான் வச்சு இருந்தேன். அது தெரிஞ்சு தான் அவ தங்கச்சி போய் சேர்ந்துட்டா. போதுமா விளக்கம்?” என்று உண்மையைப் போலவே கூறி வைக்க, அவனது இந்த பேச்சில் குன்றி போனாள் காளி. 

ஆனால், அடுத்த நொடி ஆத்திரம் பெருக, அவள் ஒரு அடி முன்னே எடுத்து வைக்கையில், “ஓ… நீதான் அந்த தங்கச்சி புருஷனா… உன்னைத்தான் தேடிட்டு இருந்தேன். உனக்கு எத்தனை துணிச்சல் இருந்தா, என்கிட்டவே உன் கதையை சொல்லுவ” என்று புகழ் ஓங்கி குத்தியதில் முன்பற்கள் உடைந்து கொட்டியது ஜெய்க்கு. 

அவன் வலியில் அலறியதை கண்டு கொள்ளாமல், அவனது வலது கையைப் பிடித்து பின்னால் மடக்கி ஒடித்து விட்டவன், “பொம்பளை பிள்ளை மேல கையை வைக்கிறதே தப்பு. இதுல அவளைப் பத்தி தப்பு தப்பா வேற பேசுவியா. மூணு மாசத்துக்கு தின்கிறதுக்கும், கழுவுறதுக்கும் ஆள் தேடு. அப்போ தெரியும் பொண்டாட்டியோட அருமை. சாவுடா” என்றவன் அவன் முதுகில் காலை வைத்து மிதித்து நிற்க, “டேய். ஆள் தெரியாம மேல கையை வைக்கிற. உன்னை என்ன பண்றேன் பாருடா” என்று மீண்டும் வாய்விட,

அவன் சட்டையைப் பிடித்து கொத்தாக அவனை தூக்கி நிறுத்திய புகழேந்தி, “புகழேந்தி… ஹைகோர்ட் வந்து லாயர் புகழ்ன்னு சொல்லு. எல்லாருக்கும் தெரியும். எவனை வேணா கூட்டிட்டு வா. எந்த ஸ்டேஷன்ல வேணா கம்ப்ளைண்ட் பண்ணு. மவனே… உன்னால முடிஞ்சதை பாரு. உன்னை நானே உரிக்கிறேன். கோர்ட்டு பக்கம் வா” என்று அவனை உதறித் தள்ளினான் புகழ். 

அத்தனையும் வேடிக்கை பார்த்து நின்ற காளியிடம் திரும்பியவன், “என்கிட்ட வாய் பேசற இல்ல. நல்லா செவிட்டோட சேர்த்து ஒன்னு வைக்க வேணாம். எருமை… எருமை” என்று அவளையும் காய்ச்சி எடுத்தான். 

ஆனால், சம்பந்தபட்டவள் எதையுமே உணராமல் தான் நின்றாள் அந்த நொடிகளில். அவளுக்கு ஜெய் அடிபட்டு எழவே முடியாமல் விழுந்து கிடந்ததே அந்த நொடிகளில் போதுமானதாக இருந்தது. 

மனம் ஏதோ ஒரு ஒரு வகையில் நிம்மதி கொள்ள, அவன் வசைபாடுதலை காதில் வாங்காமல் தான் நின்றாள் காளி. அவளின் நிலை புரியாமல், அவள் பயந்து போயிருப்பதாக நினைத்துக் கொண்டவன், ஒரு ஆட்டோவைப் பிடித்து அவளை ஏற்றிவிட, ஆட்டோவில் ஏறி அமர்ந்தபின்னும் கூட, ஜெய்யின் அடி வாங்கி ரத்தம் வடிந்த முகம் மறக்கவே இல்லை காளிக்கு. 

என்னவோ, மனம் சொல்லமுடியாத அளவுக்கு திருப்திபட்டு இருந்தது. அன்று வினோத் அடித்தபோதும் நிம்மதி தான் என்றாலும், அதன்பின் நிகழ்ந்த கலவரங்களில் எதையும் முழுதாக உணராமல் காயம்பட்ட வேதனையை சுமந்து கொண்டே இருந்த மனம் அல்லவா அவளுடையது. 

இன்று புகழின் நடவடிக்கைகள் உண்மையில் மருந்திட்டது போல் தான் இருந்தது. உணர்ச்சி மிகுதியில் அவள் கண்களில் இருந்து கண்ணீர் வடிய, அதைக்கூட உணராதவளாக அமர்ந்திருந்தாள் காளி. 

ஆட்டோ ஓட்டுனர் சரியாக அவள் வீடு இருந்த தெருவில் அவளை இறக்கிவிட, அப்போதுதான் தான் வழியேதும் கூறவில்லையே என்பது உரைத்தது அவளுக்கு. கூடவே, அவள் பணம் கொடுக்க முற்படுகையில், “சார் கொடுத்திட்டார்மா” என்று நிற்காமல் கிளம்பிவிட்டார் அந்த ஓட்டுனர்.