“ச்சீ பொண்ணாடி நீ எல்லாம். நீ எல்லாம் மனுஷ ஜென்மத்துல சேர்த்தியே கிடையாது. போ… அவனை நம்பியே அவன் கூட போ. உன்னை கூட எவனாவது கேட்டா அனுப்பி வைப்பான் போ” என்றவனை மரகதம் அடித்துவிட, இதுதான் சாக்கு என்று ஜெய்யும் சேர்ந்து கொண்டான். 

மரகதத்திடம் அடிவாங்கி கொண்டவன் ஜெய்யின் கையைப் பிடித்துவிட, அதற்குள் ஜெய்யின் உறவுக்காரர்கள் சிலரும் அவனது உதவிக்கு வந்து நின்று கொண்டனர். 

மீண்டும் ஒருமுறை வினோத் அடிதடியில் இறங்குவதற்குள் சிலையாக நின்றவளுக்கு உயிர் வந்துவிட, வேகமாக வந்து தம்பியை பிடித்து தன் பக்கம் நிறுத்திக் கொண்டாள் அவள். 

ஜெய் அவள் மீது மீண்டும் கையை ஓங்கி இருந்தவன், அவளது ஒரே பார்வையில் கையை கீழே இறக்கிவிட, அங்கிருந்த அத்தனைப் பேரையும் பொதுவாக ஒரு பார்வை பார்த்து, தங்கையின் அருகில் வந்து நின்றாள் காளி. 

“அப்போ என்ன சொன்ன நீ” 

“ஏன் உண்மையை தானே சொன்னேன். பதட்டமே இல்லாம அவனை அடிக்கவிட்டு வேடிக்கை தானே பார்க்கிற நீ. உனக்கு சும்மாவே என் புருஷனை பிடிக்காது. இப்போ சாக்கு கிடைக்கவும் சொல்லவா வேணும்” 

“இந்த வயசு வரைக்கும் கல்யாணம் ஆகாம இருந்தா, இதெல்லாம் தான் நடக்கும்” என்று கண்மணியின் மாமியாரும் சேர்ந்து கொள்ள,

“வேண்டாம் சம்பந்தியம்மா. இந்த பிரச்சனையை இதோட விடுங்க. யாரும் எதுவும் பேச வேண்டாம்” என்று மரகதம் கையெடுத்து கும்பிட, 

“அதெப்படி விட முடியும்? என் மகனை அடிச்சு இருக்கான் அந்த பொடியன். அப்படியே விடனுமா. அவன்கிட்ட மன்னிப்பு கேட்க சொல்லுங்க” என்று ஜெய்யின் தந்தை நிற்க,

“என் தம்பி யார்கிட்டேயும் மன்னிப்பு கேட்க மாட்டான். வினோத் போலீஸ்க்கு போன் பண்ணு. இவன் என்கிட்ட தப்பா நடக்க முயற்சி பண்ணதா நான் புகார் கொடுக்கிறேன். அவங்க சொல்லட்டும் யார் மன்னிப்பு கேட்கணும், யார் உள்ளே போகணும்னு” என்று காளி காளியாகவே நிற்க,

“என் வாழ்க்கையை நாசமாக்காம விடவே மாட்டியாடி நீ” என்று வாய்க்கு வந்தபடி கண்மணி கத்த, 

“உன் புருஷன் தான் உத்தமன் ஆச்சே. அப்புறம் போலீசுக்கு போனா உனக்கென்ன. தப்பு பண்ணவங்க உள்ளே போறோம்” 

“சும்மா இரு காளி. போலீஸ் அது இதுன்னு. என்ன நடந்ததோ, தெய்வம் பார்த்துக்கட்டும். நீ வா நாம போவோம்” என்று மரகதம் மகளை இழுக்க,

“ஏன் உன் மருமகன் உள்ளே போகணும்னு பயமா இருக்கா” என்றாள் அவரிடமும். 

“கண்மணியை பாரு. வா வீட்டுக்கு போவோம்” என்று அவர் மகளை மட்டுமே அடக்க, அந்த வார்த்தையிலேயே அடிபட்டு போனாள் காளி என்பவள். 

‘என்னை யாருமே பார்க்கவில்லையே’ என்று மனம் கிடந்து அடித்துக் கொள்ள, அதற்குமேல் அங்கு நிற்காமல் தம்பியின் கையைப் பிடித்துக் கொண்டு வெளியேறி விட்டாள். 

மரகதம் அங்கிருந்தவர்களிடம், “மன்னிச்சிடுங்க சம்பந்தி. நீங்க உங்க வீட்டு விசேஷத்தை பாருங்க” என்றுவிட்டு நித்யாவையும் கையில் பிடித்துக் கொண்டு கிளம்பிவிட்டார். 

வீட்டை அடைந்த நிமிடமே யார் முகத்தையும் பார்க்க விரும்பாமல் தனது அறையில் சென்று அடைந்து கொண்டாள் காளி. வினோத் ஒருபக்கம் அமர்ந்துவிட, அவனையும் தன்னை நெருங்க அனுமதிக்கவில்லை காளி. 

“எதுவும் பண்ணமாட்டேன் வினோ. என்னை கொஞ்சநேரம் தனியா விடு” என்றவள் அறையின் கதவை அடைத்துவிட்டு தேம்பியழ துவங்கினாள். 

அரைமணி நேரம் அவள் அழுது முடித்தபின் மரகதம் அவளது அறையின் கதவைத் தட்ட, “என்னை தனியா விடும்மா” என்று கத்தியவள் காதுகளை பொத்திக் கொண்டாள். 

“தங்கம் அம்மா சொல்றத கேளும்மா” என்று மரகதம் மீண்டும் கதவை தட்ட, ஒரு முடிவுடன் தனது கைப்பையையும், போனையும் எடுத்துக்கொண்டு வெளியில் கிளம்பிவிட்டாள். 

“நில்லுடி” என்று மரகதம் ஓடி வந்ததை ஒரு பொருட்டாகவே கருதாதவள், தம்பியிடம், “நான் வேலைக்கு போறேன்டா” என்றுவிட்டு நிற்காமல் சென்றுவிட, மரகதம் தலையில் அடித்துக் கொண்டு அழுது கொண்டிருந்தார். 

“எதுக்கு இப்போ இந்த நாடகம். அதுதான் உன் பொண்ணு நல்லா இருக்கா இல்ல. அவ எப்படி போனா உனக்கு என்ன? விடும்மா” என்று ஏளனமாக கூறிவிட்டு தானும் எழுந்து சென்றுவிட்டான் வினோத். 

எப்போதும் மௌனம் சாதிக்கும் நித்யா கூட, “அக்கா பாவம்மா. கண்மணி வீட்டுக்காரர் தான் ஏதோ பண்ணி இருக்கணும்” என்றுவிட, மரகதத்திற்கு தெரியாதா அவர் மகளை. 

யாருக்கும் பேச முடியாதபடி அவரை கட்டி வைத்திருப்பது கண்மணியின் வாழ்க்கை மட்டுமே. மேலும், ஏற்கனவே காளிக்கு திருமணம் ஆகாமல் இருக்க, இதில் அவளும் இங்கே வந்து அமர்ந்துவிட்டால் காளிக்கு திருமணமே நடக்காமல் போய் விடுமோ என்ற பயத்தில் தான் மகளை அழைத்துக் கொண்டு வந்துவிட்டார் அவர்.

சற்றுநேரம் இடிந்து போனவராக அமர்ந்திருந்தவர் அதன்பின் அடுதடுத்த வேலைகளை கவனிக்க தொடங்கிவிட, இங்கே அவரது மகளும் அதையே தான் செய்து கொண்டிருந்தாள். 

தாமதத்திற்காக திட்டுவதற்கு வாய் திறந்த கந்தன் கூட அவளது முகத்தை பார்த்துவிட்டு எதையுமே பேசாமல் மௌனமாக தலையசைத்து விட்டார். 

பின்னே கண்ணும் முகம் அழுதழுது வீங்கி போய் இருந்ததே. 

அவளும் யாரிடமும் பேசாமல் சமையல் அறையில் சென்று நின்றுவிட, அத்தனை வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டாள். 

அவளைப்பற்றி தெரிந்தவர் என்பதால் மாஸ்டரும் எதுவும் கேட்டுக் கொள்ளாமல் தனது வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். 

இதில் காலையில் இருந்து மாலை அவள் சமையல் அறையை விட்டு வெளியே வரும்வரை அவளை மட்டுமே நினைத்து புலம்பிக் கொண்டிருந்தவன் புகழேந்தி ஒருவன் தான். 

காலையில் காளி கடைக்குள் நுழைந்த நேரம் அவனும், பிரபுவும் அங்குதான் இருந்தனர். காளியின் முகத்தைப் பார்த்து உள்ளுக்குள் வருந்தினாலும், வெளியில் எதுவும் கேட்க முடியாமல் நின்றிருந்தான் அவன். 

ஏற்கனவே ஒருமுறை அவளிடம் வாங்கி இருந்ததும் நினைவில் இருக்க, மீண்டும் ஒருமுறை அசிங்கப்பட வேண்டுமா என்றெல்லாம் அஞ்சவில்லை அவன். 

ஆனால், அவளது பிரச்சனை என்னவென்று சொல்வாளா? என்று தான் யோசித்து நின்றான். 

மாலை வேலை முடிந்து கிளம்பும் நேரம் கூட அவள் முகம் தெளியாமலே இருக்க, அதற்குமேல் பொறுமை இல்லாமல், துணிவே துணை என்று அவளை நெருங்கிவிட்டான் புகழ். 

எடுத்த எடுப்பில், வெகுநாள் பழக்கம் போல, “ஏன் இப்படி இருக்க நீ” என்று அவன் கேட்டு நிற்க,

‘யாருடா நீ’ என்றுதான் பார்த்திருந்தாள் காளி. 

“ஏன் இப்படி பார்த்து வைக்கிற. ஒரு வருஷத்துக்கும் மேல உன் பின்னாடி அலைஞ்சுட்டு இருக்கேன். இப்படி முன்ன பின்ன தெரியாத மாதிரி பார்க்கிற நீ” என்று புகழ் அலுக்க,

“வழியை விடுங்க” என்று விலக முற்பட்டாள் காளி. 

“ஏய்… நான் பேசியாகனும். நில்லு.” என்று புகழ் அதட்டலாக கூற,

“யார் நீ. நீ பேசி நான் என்ன கேட்கணும்? வழியை விடுய்யா” என்று வழக்கமான அலட்சியத்துடன் காளி பேச,

“உன்னை லவ் பண்ணி தொலைச்சுட்டேனே. உன்கிட்ட தான் பேசியாகனும்.” என்று புகழ் அலுத்துக் கொண்டதில் நெஞ்சுவலி வந்தவளாக நின்றுவிட்டாள் காளி. 

நெஞ்சை பிடித்துக் கொண்டு அவள் நின்ற விதத்தில், “தப்பா ஒண்ணும் சொல்லலையே நான்” என்று அவளிடமே கேட்டான் புகழ். 

“உனக்கு மண்டை கிண்டை குழம்பி போகல இல்ல” 

“ஏன் உனக்கு இந்த சந்தேகம்?”

“யோவ்… நீ வக்கீலு. நான் 400 ரூபா சம்பளத்துக்கு எச்சி தட்டு கழுவி கொடுக்கறவ. சந்தேகம் வராம என்ன செய்யும்?”

“ஏன் சமையல்காரியை எல்லாம் லவ் பண்ண கூடாதா”

“சின்ன பொண்ணா பார்க்க லட்சணமா இருந்தா கூட பரவால்ல. என்னை ஏன்ய்யா” என்றவளுக்கு அவன்மீது இருந்த பயம் போய் இப்போது சிரிப்புதான் வந்தது. 

“ஏன் உன் லட்சணத்துக்கு என்ன?”

“என்னவா… 28 முடிய போவுது. இங்கே பார்த்தியா? முன்னாடி எல்லாம் நரைச்சு போச்சு. இது மட்டும் இல்ல. இன்னும் நிறைய இருக்கு. அதெல்லாம் விலாவாரியா உன்கிட்ட சொல்லிட்டு இருக்க முடியாது. போ. ஆகுற கதையை பாரு” என்று காளி ஒரு அடி எடுத்து வைக்க, 

“கல்யாணம்ன்னு ஒன்னு நடந்தா உன்கூடத்தான். அதுக்கு என்ன பண்ணட்டும். அதை சொல்லிட்டுப் போ” என்று அவள் கையைப் பிடித்து இருந்தான் புகழேந்தி. 

“கையை விடுய்யா.” என்று கையை உதறிக் கொண்டவள், “எனக்கு கல்யாணத்து மேல நம்பிக்கையும் இல்ல. ஆசையும் இல்ல. நீ லவ் பண்றதுக்காக எல்லாம் உன்னை கட்டிக்க முடியாது போய்யா” என்றுவிட்டு நகர, 

“என்னக்கா” என்றபடியே அவள் அருகில் வந்து நின்றான் வினோத். 

“ஒண்ணும் இல்லடா. வா போகலாம்” என்று காளி தம்பியை அழைத்துக் கொண்டு நடக்க, அவளை முன் எப்போதையும் விட அதீத காதலுடன் பார்த்து நின்றான் புகழேந்தி.