கண்மணி காலை எட்டு மணிக்கு காது குத்துவதாக மரகதத்திடம் கூறி இருக்க, காலை ஏழு முப்பது மணிக்கே பிள்ளைகளை அழைத்துக் கொண்டு ஜெய்யின் குல தெய்வ கோவிலுக்கு வந்துவிட்டார் மரகதம்.
ஆனால், கண்மணியும், அவள் குடும்பமும் ஒன்பது மணியாகியும் இன்னும் கோவிலுக்கு வராமல் இருக்க, காளி கொஞ்சம் கொஞ்சமாக பத்திரகாளியாக மாறிக் கொண்டிருந்தாள்.
மரகதத்தை வெட்டவா குத்தவா என்று கண்களால் கேட்டபடி அவள் அமர்ந்திருக்க, வினோத் கையைப் பிசைந்து கொண்டிருக்கும் அன்னையைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான்.
மரகதத்திற்கு இது தேவைதான் என்ற எண்ணம் அவனுக்கு. அவர்கள் வேலைக்கே அவர்களது காலை நேரம் போதாமல் இருக்க, இதில் சீக்கிரம் கிளம்ப வேண்டும் என்று மரகதம் ஓயாது விரட்டி கொண்டிருந்ததில் அரக்க பரக்க வேலைகளை முடித்துக் கொண்டு ஓடி வந்திருந்தனர் அக்காவும், தம்பியும்.
அத்தனை அவசரத்திற்கு தேவையே இல்லை என்பது போல, இன்னும் ஒருவரும் வராது இருக்க, அன்னையை கடித்து குதரிவிடும் வேகத்தில் இருந்தவன், இப்போது அக்கா முறைக்கவும், “எங்கேம்மா உன் பொண்ணு? இன்னிக்கு தான காது குத்து” என்றான் நக்கலாக.
மரகதம் அவனிடம் திரும்ப, “போனை போடு” என்று மீண்டும் நக்கல் குறையாமல் கூறினான் வினோத்.
காளியும் ஆமோதிப்பது போல அமர்ந்திருக்க, வேறு வழியில்லாமல் மகளுக்கு அழைத்தார் மரகதம். கடைசி ரிங்கில் அழைப்பை ஏற்றவளோ, “சொல்லும்மா” என்று சாவகாசமாக கேட்க, மரகதத்திற்கே சற்று கோபம் வந்தது இப்போது.
“எங்கேடி இருக்க?” என்று அவர் குரல் உயர,
“வந்துட்டே இருக்கோம்மா” என்றாள் மகள்.
“மணி என்ன ஆகுது கண்மணி. நேரத்துக்கு வர்றது இல்லையா?”
“எங்க சின்ன மாமியார் வர கொஞ்சம் லேட் ஆகிடுச்சும்மா. இன்னும் அரைமணி நேரத்துல வந்திடுவோம்” என்றவள் ஒருமணி நேரம் சென்ற பிறகே வந்து சேர, அவளும், அவள் மாமியாரும் தேடி தேடி பூஜை பொருட்களை எடுத்து அடுக்கிக் கொண்டிருந்தத்தில் நல்ல நேரம் போய் ராகு காலம் பிறந்து விட்டிருந்தது.
மேலும் ஒருமணி நேரம் கழிந்த பின்பே காது குத்த முடியும் என்றாகிவிட, காளி மரகதத்திடம் தான் கிளம்புவதாக கூறிவிட்டாள்.
“அதெப்படி காளி. அதெல்லாம் நல்லா இருக்காது. அமைதியா இரு. இன்னிக்கு ஒருநாள் லீவு சொல்லு.” என்று மரகதம் காளியின் வாயை அடைத்து அமர வைத்துவிட்டார்.
காளி அவரை முறைக்கவும், சின்ன மகள் அழைப்பதற்கும் சரியாக இருக்க, காளியிடம் இருந்து தப்பித்தால் போதும் என்று ஓடிவிட்டார்.
நித்யா அருணை கவனித்துக் கொண்டிருக்க, வினோத் அவனது அலைபேசியில் எதையோ பார்த்துக் கொண்டிருந்தான். கண்மணியின் புகுந்த வீட்டு உறவுகள் மீது எப்போதுமே பெரிதாக மரியாதை எல்லாம் கிடையாது காளிக்கு.
பணத்தாசை பிடித்தவர்கள் என்பது ஒரு காரணமாக இருந்தாலும், காளியின் மீது படியும் அவர்கள் பார்வையில் இருக்கும் பரிதாபத்தை அவள் விரும்புவதே இல்லை என்பதால் பெரிதாக யாரையும் நெருங்க விடமாட்டாள்.
ஆனால், அதற்கும் “இந்த வயசுல இப்படி நிற்கும்போதே இவளுக்கு இத்தனை திமிரு.” என்றுதான் பேச்சுக்கள் ஓடும். பழகிப் போனது என்றாகி விட்டதால், அதையும் காளி காதில் போட்டுக் கொள்வதே இல்லை.
சுற்றி இருந்த உறவுகள் யாருடனும் நெருங்காமல் அமர்ந்து இருந்தவள், ‘கோவிலையாவது சுற்றிவிட்டு வருவோம்’ என்று நினைத்தவளாக எழுந்து நடக்க தொடங்க, யாரின் கவனத்தையும் கவராதபடி அவளைப் பின்தொடர்ந்தான் ஜெய்.
கோவிலின் பின்புறம் யாருமில்லாத இடத்தில் காளியை ஜெய் வழிமறிக்க, உள்ளூர சற்று பயம் இருந்தாலும், ‘இவனால் தன்னை என்ன செய்து விட முடியும்’ என்று நிமிர்ந்தே நின்றாள் காளி.
“நம்ம பிள்ளைக்கு எப்போ காதுகுத்து காளி” என்றவனை காளி நிதானமாக பார்த்திருக்க, கொஞ்சம் கூட கூசாதவனாக நின்றிருந்தான் ஜெய்.
“வழியை விடுடா” என்றவள் நகர முற்பட,
“அட இரும்மா. நான் அருணை பத்தி தான் சொன்னேன். நீ என்ன நினைச்ச” என்று காளியின் கையைப் பிடித்துவிட்டான் ஜெய்.
அவன் கையைப் பிடித்ததில் வெகுண்டு போனவள் அவன் கன்னதில் ஒரு அறைவிட, அவன் ஸ்தம்பித்து நின்ற நேரம் அவன் சட்டையைப் பிடித்துவிட்டாள்.
“புறம்போக்கு நாயே. நீயெல்லாம் நல்ல குடும்பத்துல பிறந்தவனாடா. இப்படி நடக்க அசிங்கமா இல்ல உனக்கு.” என்று அவள் கத்த,
“என்னடி பத்தினியா.” என்று நக்கலாக கேட்டபடி தனது சட்டையில் இருந்த அவள் கைகளை உதறித் தள்ளிய ஜெய் காளியைப் பிடித்து தள்ளிவிட, அவள் சுதாரித்து நிற்பதற்குள் அவள் தலைமுடியை கொத்தாக பற்றியிருந்தான்.
வலி தாங்காமல், “விடுடா நாயே” என்றவள் அவன் முகத்தில் கீறிவிட முயற்சிக்க, “யாருகிட்ட உன் வேலையை காட்ற”என்றவன் அவள் கழுத்தில் கையை வைக்க முற்படவும், நிஜத்திற்கும் காளியாகி விட்டாள் அவள்.
இரண்டு கைகளாலும் அவன் கழுத்தை பற்றியவள் தன்னால் முடிந்த அளவு அழுத்தம் கொடுக்க, அதற்குள் காளியைத் தேடி அங்கு வந்திருந்தான் வினோத்.
அவன் கண்ணில் பட்டதெல்லாம் காளியின் கலங்கிய முகமும், அவள் தலை முடியை பிடித்திருந்த ஜெய்யும் தான். அவனுக்கு வந்த ஆத்திரத்தில் அவன் அக்காவின் கணவன் என்பதெல்லாம் மறந்துபோக, அவன் வேகத்திற்கு ஒன்று வைத்து காளியின் தலைமுடியைப் பற்றியிருந்த ஜெய்யை விலக்கி நிறுத்தினான் வினோத்.
“யாரு மேலடா கையை வைக்கிற” என்று ஜெய் எகிற,
“நீ யார் மேலடா கையை வைச்ச” என்றவன் மீண்டும் ஜெய்யை போட்டு புரட்ட தொடங்க,
“உன் அக்கா தான் என் கையைப் பிடிச்சு இழுத்தா. அவளைக் கேளுடா”
“யாரைப்பத்தி யாருகிட்ட சொல்ற. அசிங்கம் பிடிச்சவனே” என்ற வினோத் அடிப்பதை மட்டும் நிறுத்தவில்லை.
அங்கு நடப்பதை தடுக்கும் சக்தியற்றவளாக தொய்ந்து போய் அமர்ந்துவிட்டாள் காளி. அவளுக்கு நடந்த நிகழ்வில் இருந்து வெளியே வருவது அத்தனை சுலபமாக இல்லை.
“எந்த தைரியத்தில் இவன் தன்னிடம் இப்படி அத்துமீற முயன்றான்” என்பது புரியவே இல்லை அவளுக்கு. அதுவும் சுற்றி இத்தனைப் பேர் இருக்கையில், பொது இடத்தில் தன் மீது கைவைக்கும் துணிவு எங்கிருந்து வந்தது? அப்படி ஒரு பாதுகாப்பற்ற சூழலிலா நான் இருக்கிறேன்” என்று கழிவிரக்கம் கொண்டுவிட்டாள் காளி.
பெண்களை பெரிதும் உடைத்துப் போடுவதே இந்த சுயபச்சாதாபம் தான் என்பதை யார் அவளுக்கு சொல்வது. அதுவும் அவள் அனுபவிக்க வேண்டிய இன்னல்கள் இன்னும் நிறைய நிறைய இருக்கையில் இதற்கே சோர்ந்து போனால் என்னாவது.
இவள் தன்னிரக்கத்தில் மூழ்கிப் போவதை தடுக்கவோ என்னவோ, அவசரமாக அங்கே ஓடி வந்தனர் உறவுகள். இதற்குள் வினோத் கச்சிதமாக தன் கை வரிசையை காட்டி இருந்ததில் வாய் உடைந்து முகம் வீங்கி ரத்தம் கசிந்தபடி தான் நின்றிருந்தான் ஜெய்.
தொப்பையும், தொந்தியுமாக வயதுக்கேற்ற உடற்பயிற்சிகள் ஏதுமில்லாமல் தின்றே கொழுத்துப் போன அவன் எங்கே? தினம் நான்கு பேர் வேலையை ஒருவனாக செய்து உடல் இறுகிப் போய் நின்ற வினோத் எங்கே? வினோத்தின் முதல் நான்கு அடிகளுக்கே சுருண்டு விட்டான் ஜெய்.
ஜெய்யின் காயங்களை கண்டதுமே துடித்துப் போனவளாக அவனை நெருங்கினாள் கண்மணி. “என்னங்க” என்று கண்ணீருடன் அவள் நிற்க,
“உன் தம்பி தான் மணி” என்றுவிட்டான் ஜெய்.
ஏன் எதற்கு என்று எதையும் ஆராயும் பொறுமை இல்லாதவளாக வினோத்தை கண்மணி அறைந்துவிட, “அந்தாளு என்ன பண்ணான் கேளுடி” என்று பதிலுக்கு கத்தினான் வினோத்.
“அவர் என்ன வேணா பண்ணி இருக்கட்டும். சின்னபையன் நீ எப்படிடா அவர் மேல கையை வைப்ப?” என்று அவள் அதிலேயே நிற்க,
“மணி அந்தாளு நம்ம அக்காகிட்ட தப்பா நடக்க பார்த்தான்டி. அங்கே பாரு. அக்காவை பாருடி” என்று வினோத் அவளது இரு கைகளையும் பிடித்து உலுக்க, ஒருநொடி சிலையாக நின்றுவிட்டாள் கண்மணி.
“மணி உன் தம்பி பொய் சொல்றான். அவனை நம்பாத. உன் ஜெய் அப்படி செய்வேனா. உன் அக்காதான் என்னை இங்கே வர சொன்னா. அண்ணி கூப்பிடுறாங்களேன்னு நான் வந்தேன்.”
“இங்கே வந்தா அவ என் பக்கத்துல வந்து என்கிட்ட தப்பா” என்று கூறும்போதே, “டேய்”என்று மீண்டும் அவன் சட்டையை பிடித்துவிட்டான் வினோத்.
“கையை எடுடா” என்று ஜெய்யின் தந்தை வினோத் சட்டையின் பின்காலரை பிடித்து இழுக்க, அவரது வயதை மதித்து அவர் இழுப்புக்கு வந்தான் வினோத்.
“அக்காவும் தம்பியும் சேர்ந்து ஆள் பிடிக்க பார்த்துட்டு, மாட்டிக்கிட்டதும் என் மகன் மேல பழியைப் போட பார்க்கிறீங்களா?” என்ற அவர் வார்த்தையில் மரியாதையை கைவிட்டவன், “எடுய்யா கையை” என்றான் முறைப்பாக.
“ஏய் என்னடா மரியாதை இல்லாம பேசற. அவர் வயசென்ன உன் வயசென்ன” என்று ஜெய்யின் அன்னை முன்னே வர,
“கல்யாணமாகி பிள்ளை பெத்த பிறகும், ஊர் மேயுற பிள்ளையை பெத்து வச்சுட்டு, அவனுக்கு சப்போர்ட் பண்றான் இந்த ஆளு. இவனுக்கெல்லாம் என்ன மரியாதை” என்றவன் யாரையும் மதிப்பதாக இல்லை.
ஜெய்யின் தாய் மரகதத்தை அர்த்தமாகப் பார்க்க, அந்த பார்வையின் அர்த்தம் உணர்ந்து மகனை வேகமாக நெருங்கினார் மரகதம்.
“வாயை மூடு வினோத். உன் அக்கா அங்கே தான் வாழனும். மறந்துட்டியா. பெரியவங்க, சின்னவங்கன்னு இல்லாம எல்லார்கிட்டேயும் மரியாதை இல்லாம பேசிட்டு இருக்க” என்று அவர் மகனை அடக்க,
“அங்கே உட்கார்ந்து இருக்கா பாரு. அவளும் உன் பொண்ணு தான். ஞாபகம் இருக்கா” என்று வினோத் அன்னையிடமும் அதே தொனியில் பேச,
“எனக்கு எல்லாம் ஞாபகம் இருக்கு நீ வாயை மூடுடா” என்றாலும் அவரால் மகனை அடக்கவே முடியவில்லை.
“நான் ஏன் வாயை மூடனும். ஏய் மணி. இவன்கூட நீ வாழவே வேணாம். வாடி நம்ம வீட்டுக்கு போவோம்.” என்று வினோத் மணியின் கையைப் பிடிக்க, பட்டென அவன் கையை உதறிக்கொண்டாள் அவனது சகோதரி.
அதில் அதிர்ந்தவனாக அவன் மணியை வெறிக்க, “எனக்கு என் புருஷன் மேல நம்பிக்கை இருக்கு. அவர் பொய் சொல்லமாட்டார்” என்றாள் அந்த உத்தமி.
“அப்போ அக்காவை பத்தி அவன் சொல்றது எல்லாம் உண்மைன்னு சொல்றியா நீ?”
“யாருக்கு தெரியும்? இத்தனை நடந்தும் அமைதியா தானே உட்கார்ந்து இருக்கா. எந்த பதட்டமும் இல்லையே” என்றவளின் கழுத்தை வினோத் பிடித்துவிட,
“என் மருமக மேல இருந்து கையை எடுடா” என்று அவன் கையை தட்டிவிட்டார் ஜெய்யின் தந்தை.