வியாசர்பாடியின் மார்க்கெட் ஏரியா ஒன்றில் அமைந்திருந்தது அந்த சிறிய அசைவ உணவகம். உணவகத்தின் வெளியே ஒருபக்கம் அத்தோ, பேஜோ என்று பர்மா உணவுகள் இடம்பிடித்து இருக்க, மறுபுறம் ஃப்ரைடு ரைஸ், நூடுல்ஸ் என்று துரித உணவுகள் வெகு துரிதமாக தயாராகிக் கொண்டிருந்தது.
இதை தாண்டி உள்ளே இட்லி, தோசை, இடியாப்பம், பரோட்டா, சப்பாத்தி என்று பலவித உணவுகளும், அதற்கு தோதான அசைவ குழம்பு வகைகளும் என்று சகலமும் கிடைக்கும் அங்கே.
அந்த உணவகத்தின் உரிமையாளர் சரோஜா. பணம் படைத்தவரோ, செல்வாக்கு மிக்கவரோ கிடையாது. மாறாக நிரம்ப தைரியம் மிக்க பெண்மணி. வாய் சற்று கூடுதலாக இருந்தாலும், அதுவும் கூட கணவரை இழந்த அவருக்கு பாதுகாப்பாக தான் நின்றது.
இல்லையென்றால், இருபத்து மூன்று வயதில் கணவரை இழந்து தனியாக வீட்டின் வாசலில் இட்லிகடை வைத்து பிழைப்பை நடத்தியிருக்க முடியுமா அவரால். அதுவும் கையில் இரண்டே வயதான அவரின் பிள்ளை புகழேந்தி வேறு.
அவனுக்கே இன்று இருபத்தொன்பது கடந்திருக்க, தனியாக அவனை வளர்த்து ஆளாக்க அவர் எத்தனை பாடுபட்டிருப்பார் என்பது அவருக்கே வெளிச்சம்.
இன்றும் அவர்கள் வசிக்கும் பகுதியில் அவருக்கான மரியாதை என்பது தனி தான். அதுவும் புகழேந்தி வழக்கறிஞரான பின், சரோஜா அக்கா என்ற வார்த்தை மாறி, “புகழ் தம்பியோட அம்மா” என்று இன்னமும் மரியாதை கூடி இருந்ததில் பெருமை தான் அவருக்கு.
இருக்காதா பின்னே? அத்தனைப் பொறுப்பாக வளர்த்தி இருந்தாரே அவர் மகனை. அவர் பட்ட துன்பங்கள் அத்தனைக்கும் பதிலாகத் தான் வளர்ந்து நின்றான் மகன்.
பதினைந்து வயதில் இருந்தே கிடைக்கும் சிறுசிறு வேலைகளை விடாமல் பிடித்துக் கொண்டு தாய்க்கு உதவியபடியே தன் படிப்பையும் பார்த்துக் கொண்டவன் புகழ்.
சமையல் கேட்டரிங், கூரியர் சர்வீஸ், ஆட்டோ ஓட்டுவது, கார் ஓட்டுவது, காய்கறி மூட்டை சுமப்பது, துணிக்கடையில் மூட்டை இறக்குவது என்று அத்தனை தொழிலும் தெரியும் அவனுக்கு.
இந்த “சரோஜா இட்லிகடை” கூட அவனது யோசனைதான். படித்து முடித்து நிலையாக ஒரு வேலையை ஏற்படுத்திக் கொண்ட கணமே சரோஜாவிடம் கடையை மூடிவிடும்படி தான் கூறினான் புகழேந்தி.
சரோஜா ஒப்புக் கொள்ளாமல் போக, அவரின் விருப்பத்தை மதித்து அவன் வைத்துக் கொடுத்தது தான் இந்த உணவகம். அதுவும் நெருப்பில் வெந்து கொண்டிருந்த தாயை இங்கே ஒரு வேலையும் செய்ய விடாமல் கல்லாவில் அமர்த்திவிட்டான். அங்கு அத்தனை வேலைகளுக்கும் ஆட்கள் இருக்க, அவர்களை அதட்டி, மிரட்டி வேலை வாங்குவது மட்டும்தான் சரோஜாவின் தற்போதைய வேலை.
கல்லாவில் அமர்ந்தபடியே, அவர் வேலையாட்களையும் கவனித்துக் கொண்டிருந்த நேரம் தான் வந்து நின்றான் அவரது மகன் புகழேந்தி.
“என்னடா தினம் ஒரு நேரத்துக்கு வர்ற? எங்கே ஊரை சுத்திட்டு வர்ற?” என்று அவர் மகனைக் கேட்க,
“ஏம்மா.. என்னைப் பார்த்தா ஊரை சுத்துறா மாறி தெரியுதா உனக்கு. வக்கீலும்மா நான். வேலை இருக்காதா?”
“என்னா பெரிய கலெக்டர் உத்யோகமா.. அந்த வெளங்காத கோர்ட்டுல லொங்கு லொங்குன்னு கத்தூற வேலை தான? அதுக்கு ஏண்டா இவ்ளோ பில்ட்அப்பு”
“என் நேரம்மா. வந்த பிள்ளையை சாப்பிட்டியா, காபி வேணுமா ஒண்ணும் கேட்காத. வந்த ஒடனே ஸ்டார்ட் பண்ணிடு” என்று புகழ் அலுத்துக் கொள்ள, அதற்குள் அவனுக்கு சூடான காபியும், சிக்கன் பக்கோடாவும் வந்து சேர்ந்துவிட்டது.
“தேங்க்ஸ் அண்ணா.” என்று புன்னகைத்தவன், “பாரு. கோபால் அண்ணாக்கு இருக்க அக்கறை கூட உனக்கு இல்லை” என்றான் தாயிடம்.
“உன்னை வாசல்ல பார்த்ததுமே, அக்கா தான் குரல் கொடுத்துது தம்பி” என்றார் அந்த கோபால்.
புகழ் பல்பு வாங்கியவனாக அன்னையைப் பார்க்க, “மூடிட்டு குடிடா” என்றார் சரோஜா.
“மூடிட்டு எப்படி குடிக்க?” என்று மீண்டும் பேசியவனுக்கு சத்தமில்லாமல் ஒரு முறைப்பு தான் பதில்.
“சும்மா முறைக்காதம்மா”
“ஏன் நாயே இந்த பொழைப்பு. நீ படிச்ச பிகாம்க்கு எங்கேயாவது ஒரு கணக்கெழுதுற வேலைக்கு போகலாம்ல. இல்ல, உனக்கு இருக்க அறிவுக்கு ஒரு ஆடிட்டருக்கு படிக்கலாம்ல. எதுவுமே இல்லாம இந்த ஒண்ணுக்கும் உதவாத கோட்டை மாட்டிக்கிட்டு ஜிங்கு ஜிங்குன்னு இங்கே கிடக்குற பொறுக்கி பசங்களோட சுத்த தான் பிடிக்குது உனக்கு.” என்று மகனை வாய்க்கு வந்தபடி பேசி வைத்தார் சரோஜா.
மகன் சிரித்தபடியே பக்கோடாவை முழுங்கி கொண்டிருக்க, “ஏண்டா ஒருத்தி நான் பாட்டுக்கு கத்திட்டு இருக்கேனே. ஒரு வார்த்தை உனக்கு துணையா கடையில இருக்கேன். அவனுங்க கூட ஊர் சுத்த போவ மாட்டேன்னு வருதா உன் வாயில.” என்று மகனின் தலையிலேயே அடித்தார் சரோஜா.
“சாப்பிடும்போது அடிக்காதம்மா. உடம்புல ஒட்டாது”
“அதான் ஆறடிக்கு வளர்ந்து இருக்கியே. இனி ஒட்டுனா என்ன? ஒட்டலன்னா என்ன”
“தாயாம்மா நீ”
“புள்ளையாடா நீ”
“உன் முன்னாடி சாப்பிட உட்கார்ந்தேன் பாரு. என்னை சொல்லணும்.”
“உன்னை தாண்டா சொல்லணும். ஊர்ல இல்லாத வக்கீலுன்னு இப்படி சோறு தின்ன கூட நேரம் இல்லாம சுத்திட்டு, கருவாடு மாறி வந்து நிற்கிற பாரு. உன்னைத்தான் சொல்லணும்.”
“இப்போ இன்னா தாம்மா உன் பஞ்சாயத்து.” என்று மகன் குரல் உயர்த்த,
“உனக்கு கல்யாணம் பண்ணி வைக்க துப்பில்ல. அதுக்கு என்னை ஏன் குறை சொல்ற.”
“நல்லா வந்திடுமடா என் வாயில. வக்கீல்னு சொன்னாலே மேலயும் கீழயும் பார்க்கிறானுங்க பொண்ணு வீட்ல. எனக்கு தான் துப்பு இல்லையே. நீயே எவளையாச்சும் இழுத்துட்டு வர வேண்டியது தானே.”
“எங்கே… நானும் முயற்சி பண்ணிக்கிட்டே தான் இருக்கேன்.”
“ம்மா… ம்மா.. ஏன்ம்மா. உன் வாயில நல்ல வார்த்தையே வராதம்மா.”
“நீ எங்கெடா என்னை நல்ல வார்த்தை பேச விடற. உருப்படாதவனே..” என்று கத்தினார் சரோஜா.
“நீ ரொம்ப பேசறம்மா..” என்று மகன் சலிக்க,
“இந்த வாய் இல்லன்னா உன்கிட்ட பொழைக்க முடியுமா” என்றார் அதற்கும்.
மகன் பேசாமல் அன்னையை பார்க்க, “ஒழுங்கா எனக்கு அவ வீட்டை காட்டு. நல்லதோ கெட்டதோ நானே பேசி முடிச்சு கட்டி வைக்கிறேன். ஒழுங்கா நீயும் உன் பொண்டாட்டியும் சேர்ந்து கடையை பார்த்துக்கோங்க.” என்ற சரோஜாவை மகன் நக்கல் சிரிப்புடன் பார்க்க,
“பார்க்கலாம்டா” என்ற சரோஜாவை முறைத்தபடியே புகழ் எழுந்துகொள்ள, கடைக்கு வருவோர், போவோர் என்று அத்தனைப் பேரும் தாயையும், மகனையும் வேடிக்கை பார்த்தபடி தான் கடந்து சென்றனர்.
ஆனால், யாரைப் பற்றியும் கவலைப்படாமல் தாயும், மகனும் அவர்கள் வேலையைப் பார்த்தபடியே பேசிக் கொண்டிருக்க, இதோ தாயிடம் வாய் கொடுத்து மீள முடியாத புகழ் தப்பித்து ஓடிவிட்டான்.
அதே நேரம் இங்கே தன் வீட்டில், தனது அறையில் அமர்ந்தபடி தைத்து முடித்த ரவிக்கை ஒன்றிற்கு கொக்கி கட்டிக் கொண்டிருந்தாள் காளி.
அருண் வேகமாக அவளை நெருங்கி கட்டிக்கொண்டதில், லேசாக அசைந்து பின் இயல்பாக அவள் அமரவும், அவளது தங்கையின் கணவன் ஜெய் அந்த அறைக்குள் நுழையவும் சரியாக இருந்தது.
காளி அணிந்திருந்த சேலை குழந்தை கட்டிக் கொண்டதில் லேசாக விலகியிருக்க, அதில் தெரிந்த அவளது அங்கங்களை வெளிப்படையாக நோட்டமிட்டபடியே வந்து நின்றான் அவன்.
அவனை பார்த்ததுமே சட்டென சேலையை சரிசெய்து கொண்டவள் அருவருப்பை முகத்தில் தேக்கியபடி எழுந்து கொள்ள, “எப்படி இருக்கீங்க அண்ணி” என்று அத்தனைப் பற்களும் தெரியும்படி சிரித்தான் அவன்.
அவனது சிரிப்பு காளியின் கண்களுக்கு விகாரமாகவே தெரிய, அவள் முகத்தில் கோபம் முழுதாக பரவி படர்ந்தது. “ஏன் ஏன் இப்போ முறைக்கிறீங்க அண்ணி. அப்படி என்ன பண்ணிட்டேன் நான்?” என்று அவன் தொடங்கும் போதே,
“வெளியே போடா” என்று காளி அமைதியாக அதட்ட,
“உனக்கு நான் ரொம்ப அதிகம்டி. உனக்கு நான் கொடுக்கறது வாய்ப்பு. இதுக்கு மேல நீ எங்கே கல்யாணம் பண்ணி, குடும்பம் நடத்தி… ம்ம்.. வாய்ப்பே இல்ல. அதுதான் நான் வாழ்க்கை கொடுக்கறேன்னு சொல்றேன்.” என்றவனை கொன்று போடும் அளவிற்கு கோபம் தான். ஆனாலும், பெரிதாக அவனை எதுவும் செய்ய முடியாதே என்று தன் விதியை நொந்துகொண்டு நின்றிருந்தாள் அவள்.
அவள் அமைதியாக நிற்க கண்டவன், “என்ன உன் தங்கச்சியை நினைச்சு பயமா இருக்கா. என்னை மீறி யாரும் எதுவும் செய்ய முடியாது. நீ மட்டும் நான் சொல்றத கேளு. எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன்.” என்றவன் காளியின் கையைப் பிடிக்க வர,
“இதுக்கு மேல உனக்கு மரியாதை இல்ல. ஒழுங்கா வெளியே போயிடு”என்று பின்னால் நகர்ந்து கொண்டாள் காளி.
ஜெய் அவளை நோக்கி ஒரு அடி எடுக்கையில், வெளியே அவன் மனைவி கண்மணியின் குரல் கேட்டது. சட்டென முகத்தை மாற்றிக்கொண்டு காளியைப் பார்த்து ஒரு குரோத புன்னகையை செலுத்தியபடியே நின்றான் ஜெய்.
இது எதையுமே அறியாமல் அந்த அறைக்குள் நுழைந்த கண்மணி, “என்னங்க.. அக்காவை கூப்பிட வந்தீங்க. ஆளையே காணோம்” என,
“அதை பத்தி தான் பேசிட்டு இருந்தேன் கண்மணி. உன் அக்கா தான் நான் சொல்றத கேட்கல”
“என்னக்கா.. அருணுக்கு மூணு வயசு முடிய போகுதே. இன்னும் எத்தனை நாளைக்கு காது குத்தாம இருக்க முடியும். நானும் பலமுறை அம்மாகிட்ட பேசிட்டேன். அங்கே என் மாமியார் வாய்க்கு வந்தபடி பேசுறாங்க. அதுதான் உங்ககிட்ட கூட சொல்லாம நாங்களே நாள் குறிச்சுட்டோம். வர்ற வெள்ளிக்கிழமை எங்க குலதெய்வம் கோவில்ல பண்றோம். வந்திடுக்கா.” என்றாள் உடன் பிறந்தவள்.
காளிக்கு இவள் புரிந்து தான் பேசுகிறாளா என்பதே சந்தேகமாக இருந்தது. இந்த மாதத்தின் தொடக்கதில் தான் அவர்கள் வீட்டு கடைசி தங்கை நித்யாவை கல்லூரியில் சேர்த்திருந்தது. அதற்கே காளி வேலை செய்யும் கடையின் முதலாளி கந்தனிடம் தான் பணம் வாங்கி இருந்தாள்.
இப்போது கண்மணியும் அவள் சௌகரியத்திற்கு நாள் குறித்துக்கொண்டு வந்திருக்க, பற்றிக்கொண்டு வந்தது காளிக்கு. ஆனாலும், அருகே நிற்கும் காமுகனை நினைத்து அவள் வாயை இறுக்கமாக மூடிக் கொண்டிருக்க,
“நீங்க எதை நினைச்சும் கவலைப்படாதீங்க அண்ணி. நீங்க சரின்னு சொன்னா எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன்.”என்று எல்லாத்தையும் என்ற வார்த்தையை மட்டும் அழுத்திச் சொன்னான் ஜெய்.
எதிரில் நின்று கொண்டிருந்த இருவரையுமே ஈனப்பிறவிகளாக பாவித்தவள் ஒருவார்த்தைக் கூட வாய் திறந்து பேசினாளில்லை. கண்மணியை மட்டும் கூர்பார்வை பார்க்க, அதற்கெல்லாம் அசராமல், “நீங்க வாங்க. அக்கா வந்திடும்” என்று கணவனை கையைப் பிடித்து அழைத்துச் சென்றுவிட்டாள் கண்மணி.
அவர்கள் இருவரும் வெளியேறவும் தான் அந்த அறையில் ஆக்ஸிஜன் நிறைந்தது போல ஒரு உணர்வு எழுவதை தடுக்க முடியவில்லை காளியால்.
நன்றாக மூச்சை இழுத்து வெளியேற்றியவள் தன் அறையில் இருந்த தந்தையின் புகைப்படத்தைப் பார்த்தபடி அமர்ந்துவிட்டாள்.
சொந்த தங்கையின் கணவன். கேட்க ஆள் இல்லாத துணிச்சலில் அவளிடம் அத்துமீற, அவனை ஏதும் செய்ய முடியாத தன்னை நினைத்தே கழிவிரக்கம் சுரந்தது அவளுக்கு. என்ன செய்து விட முடியும் அவளால்? முதலில் அவள் இதை வெளியே சொன்னால், அவள் தங்கையே நம்பமாட்டாள் அவளை என்பதும் புரிந்திருக்க, ஏதும் செய்யும் வாய்ப்பற்றவளாக அமர்ந்திருந்தாள் காளி.
வினோத் அப்போது தான் வீட்டிற்கு வந்தவன் தமக்கையை தேடி அவள் அறைக்கு வர, அவன் கண்டது அழுது கொண்டிருந்த காளியைத் தான்.
“அக்கா.. என்னக்கா” என்று பார்த்த நிமிடம் அவன் பதறிவிட,
“ஒன்னும் இல்லடா” என்று கண்களைத் துடைத்துக் கொண்டாள் காளி.
“சொல்லுக்கா. என்கிட்ட சொல்லமாட்டியா” என்று விடாப்பிடியாக நின்றான் வினோத்.
“ஒன்னுமில்ல வினோ. அப்பா நியாபகம். பசிக்குது வா சாப்பிடலாம்” என்று அவனை அழைத்துச் சென்றுவிட்டாள் காளி.
வினோத்துக்கு தமக்கை எதையோ மறைப்பது புரிய, அவளை வற்புறுத்தி கேட்கும் துணிவும் இல்லை. தந்தை இறந்துவிட்ட போதே பெரிதாக அவள் அழுது அவன் பார்க்கவில்லை. அதன் பின்பும் நேற்றுவரை எதற்கும் அழுதவள் இல்லையே.
அப்படிபட்ட அக்கா இன்று ஏன் ஆழ வேண்டும் என்று அதையே யோசித்தபடி தான் உண்டு முடித்தான் வினோத். அவள் சரியாக உண்ணவும் இல்லை என்பதை மனம் குறித்துக்கொள்ள, காளியைப் பற்றிய யோசனையில் இரவெல்லாம் உறக்கம் கொள்ளவில்லை அவனுக்கு.
காளி அப்படியில்லையே. அத்தனை சிக்கல்களுக்கு இடையிலும் இரவு எப்போதும்போல் உறங்கி எழுந்தவள் காலையில் இயந்திரம் போல் தனது வேலைகளை கவனிக்க தொடங்கிவிட்டாள். சரியான நேரத்திற்கு கிளம்பி அவள் வேலைக்கும் வந்துவிட, அவளின் கெட்ட நேரமாக அன்றைக்கும் பாண்டி வந்து சேரவில்லை.
இதுவும் ஒருவகையில் நல்லது தான் என்று எண்ணியபடியே அவள் வேலைகளை இழுத்துக் கொள்ள, நிற்க கூட நேரமில்லை அவளுக்கு.
இதில் கந்தன் அரைமணி நேரத்தில் வந்துவிடுவதாக கூறி வெளியே செல்ல, வடை, போண்டா என்று கேட்பவர்களுக்கு எடுத்துக் கொடுத்தபடி, காசையும் அவளே வாங்கி போட்டுக் கொண்டு அவள் சுழன்று கொண்டிருந்த நேரம் தான் மூர்த்தி அவள் அருகே வந்தது.
கையிலிருந்த பணத்தை கல்லாவில் போட்டு விட்டு திரும்பியவள் அத்தனை அருகாமையில் அவனை எதிர்பார்க்கவில்லை. அவனும் அந்த நீதிமன்றத்தில் பிரபலமான ஒரு வழக்கறிஞன் என்ற வகையில் அவனைத் தெரியும் அவளுக்கு.
ஆனால், இப்படி இத்தனை அருகில் வந்து நிற்பது சரியாகப்படாததால் சட்டென அவள் விலகி நிற்க, ரெண்டு வடை, சூடா ஒரு டீ என்றபடியே அவளைத் தாண்டிச் சென்று அங்கிருந்த ஒரு இருக்கையில் அமர்ந்தான் அவன்.
அந்த நேரம் வெளியே சென்றிருந்த கந்தன் வந்துவிட, அதற்குமேல் தாமதிக்காமல் வேகமாக சமையல் அறைக்குள் நுழைந்து கொண்டாள் காளி.
மாஸ்டரிடம் “நீயே பார்த்துக்கோ சாமிண்ணா”என்று அவரை வெளியே அனுப்பிவிட, அதற்குமேல் எதுவும் செய்ய தோன்றாமல் அமர்ந்து கொண்டாள்.
அன்று முழுவதுமே அவள் சமையல் அறை வேலைகளை மட்டுமே பார்த்தபடி நேரத்தை கடத்திவிட, அவளைத் தேடி இரண்டு முறை புகழேந்தி கடைக்கு வந்து சென்றது தெரியாது அவளுக்கு.
அவனும் மேலோட்டமாக பார்வையை சுழற்றி அவளைத் தேடிவிட்டு அமைதியாக விலகிச் சென்றிருக்க, இருவருமே ஒருவரை ஒருவர் பார்க்கவில்லை.
காளிக்கு இருந்த மனஉளைச்சல் கொஞ்சமும் குறையாமல் இருக்க, கை போன போக்கில் வேலைகளை செய்து முடித்து அன்றைய கூலியை வாங்கிக்கொண்டு அவள் வெளியே வர, என்றும் போல அன்றும் காத்திருந்தான் புகழேந்தி.
காளி அவனை கவனிக்காமல் தன் போக்கில் நடந்தவள் வந்த பேருந்தில் ஏறிவிட, ‘என்னடா ஆச்சு இவளுக்கு’ என்று நொந்தபடியே அவளைப் பின்தொடர்ந்தான் புகழேந்தி.
வழக்கம்போல் மின்ட் பேருந்து நிலையத்தில் இறங்கியவள் சாலையைக் கடந்து எதிர்ப்புறம் மாற, அவளிடம் பேசிவிடும் தீவிரத்தில் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு அவளைத் தொடர்ந்து அவள் அருகில் வந்து நின்றான் புகழேந்தி.
சட்டென அருகில் வந்து நின்றவனை கொஞ்சமும் எதிர்பாராமல் அதிர்ந்து போனவள் கோபத்துடன் நகர, “காளி ப்ளீஸ். அஞ்சு நிமிஷம் பேசணும் உன்கிட்ட” என்றான் புகழேந்தி.
நேற்றிலிருந்து பட்ட காயங்கள் ஆறாத ரணமாக இருக்க, “என்னடா வேணும் உங்களுக்கு. நிம்மதியாவே விட மாட்டீங்களா எங்களை. பொம்பளையா பொறக்கவே கூடாதாடா” என்று அவனிடம் கத்திவிட்டாள்.
அவள் கோபமாக கத்தியதில் அருகில் இருந்த சிலர் திரும்பி இவர்களைப் பார்க்க, அவர்கள் பார்வை அவமானமாக இருந்தது புகழுக்கு. ‘என்ன நினைக்கிறாள் இவள்’ என்று கோபம் கொண்டவன் “ஏய் என்ன பண்ணேன் உன்னை. அஞ்சு நிமிஷம் உன்கிட்ட பேசணும்ன்னு சொன்னதுக்கு இப்படி பஜாரி மாறி கத்துவியா” என்று அடக்கிய கோபத்துடன் புகழ் அதட்ட, அவன் பார்வையும், பேச்சும் காளியை மேலே வாய் திறக்க விடவில்லை.
“உன்கிட்ட போய் பேச வந்தேன் பாரு. போடி” என்று சட்டென அவளைத் திட்டிவிட்டு அங்கிருந்து விலகிச் சென்றுவிட்டான் அவன்.
செல்லும் அவனை கோபத்துடன் பார்த்தபடி ஐந்து நிமிடங்கள் நின்றவள் பேருந்துக்காக கூட காத்திருக்க மனமில்லாமல் தன் வீடு இருக்கும் திசையை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.