Advertisement

இணை தேடும் இதயங்கள்
                அத்தியாயம்  –  9
 
வெற்றி இரவு தான் ஊருக்கு போவதற்காக துணிகளை பேக் செய்தவன் தன் தந்தையிடம் சென்று ஊருக்கு கிளம்ப போவதாக சொல்ல தன் மனைவி நினைவிலும் மூத்த மகன் நினைவிலும் தன்னுள்ளே உழண்டு கொண்டிருந்தவர் இப்போது வெற்றியும் ஊருக்கு போவதாக சொல்லவும் சற்று மனம் தளர்ந்து போனார்..
 
ஆனால் இவன் அடுத்த இடத்தில் வேலைப்பார்ப்பதால் அதிகநாள் விடுப்பு எடுக்க முடியாது என்பதை உணர்ந்தவர் தன் மனதை சமன்படுத்தி,
 
“ பஸ்ல போக வேண்டாம்பா நீயும் மலரும் ஒரு காரை வாடகைக்கு புடிச்சுட்டு போங்க..??”
 
“மலரா..அவ வரலைப்பா நான் மட்டும்தான் போறேன்..”
 
“நீ மட்டுமா..? சற்று யோசித்தவர்…” ஆமா நீ உன்னோட சினேகிதன்களோடதான ஒரே அறையில தங்கியிருக்க அப்ப தனி வீடு பிடிக்கவும் போன் பண்ணு நான் மலர கொண்டு வந்து அங்கன விடுறேன்..”
 
“இல்லப்பா அதுக்கு அவசியமே இருக்காது இன்னும் ரெண்டு மாசத்தில நான் ஆஸ்திரேலியா போறேன்..”
 
சற்று குரலை உயர்த்தியவர் ,”ஏண்டா இப்படி பொறுப்பில்லாம பேசுற.. கல்யாணம் பண்ணி இன்னும் பத்துநாள்கூட ஆகல அதுக்குள்ள இந்த பொண்ண அம்போன்னு விட்டுட்டு போனா என்ன அர்த்தம்.. அப்ப எப்ப கூட்டிட்டு போற.. அங்கன அந்தநாட்டுக்கு கூட்டிட்டு போ..?”
 
ரமாலிங்கத்தின் கோபக்குரல் கேட்டு அப்பத்தா தன்அறையில் படுத்திருந்தவர் பதறி வெளி முற்றத்திற்கு வர,
 
“ப்பச் சும்மா இருங்கப்பா என்னால எப்பவும் கூட்டிட்டெல்லாம் போக முடியாது..  எல்லாம் அவகிட்ட சொல்லிட்டேன்.. அவ அவங்க வீட்டுக்கு போயிருவா நான் கிளம்புறேன்..”
 
“அவங்க வீட்டுக்கு போறதுக்கு எதுக்குடா கல்யாணம் பண்ணனும்… அறிவு கெட்டவனே..” அவர் சண்டைக்கு தயாராக
 
“நானா கல்யாணம் பண்றேன்னுனு சொன்னேன்.. நீங்க தானே பாடா படுத்துனிங்க..!! நான் வெளிநாட்டுக்கு போறேன்னு சொன்னவனை தாலிகட்ட வைச்சிட்டு அப்புறம் என்னமோ தெரியாத மாதிரி பேசுறிங்க..”
 
அப்பத்தா அவன் அருகில் வந்தவர்..” என்ன பேசுற வெற்றி நாங்க சொல்லி கல்யாணம் பண்ணினாலும் அவதானே உனக்கு பொண்டாட்டி.. நீதானே தாலி கட்டின..?”
 
“நீ சும்மா இரு அப்பத்தா.. சக்திக்கிட்ட இப்படித்தான் பொண்ணக்கூட பார்க்காம கல்யாணம்னு சொன்ன அதான் அவன் வீட்டவிட்டு ஓடிட்டானோ என்னவோ.. இப்ப பாருங்க எங்க போனான்னே தெரியலை..”
 
அப்பத்தாவோ கோபத்தில் பல்லை கடித்தவர் ,”வாயமூடுடா முட்டாப்பயலே யாரப்பத்தி என்ன பேசுறா உங்கண்ணன பத்தி உனக்கென்னடா தெரியும் .. என்ர சாமிக்கு என்ன பிரச்சனையோ எங்கன இருக்கோ இத போய் வாய் புளிச்சுச்சோ மாங்கா புளிச்சுச்சோன்னு வாய்க்கு வந்தத சொன்ன பல்லை கழட்டி கையில கொடுத்துருவேன் பார்த்துக்க.. அவன் நான் வளர்த்த புள்ளைடா..
 
உன்னை மாதிரி பொறுப்பில்லாதவன் இல்ல.. இன்னைக்கு சொல்லுறேன் கேட்டுக்க என்னைக்கிருந்தாலும் என் பேரன் என்னைய தேடி வருவான்.. நான் கும்பிடுற சாமி அவன எங்கனயிருந்தாலும் கூட்டிட்டு வரும் இல்லையா என்பேரன தேடி நான் போவேன்டா..
 
உங்க ஆத்தாவுக்கு உடம்பு சரியில்லை உன்னை சரியா பார்த்துக்க முடியலையேன்னு  ஆஸ்டல்ல விட்டு வளர்த்தோம் பாரு அதான்டா நாங்க பண்ணின தப்பு அதனாலதான் குடும்பம்னா என்ன பந்தம் பாசம்னா என்னன்னு தெரியாம போச்சு.. சொந்த பந்தங்களோட அருமை உனக்கு புரியலை..??”ஆவேசமாக பேசிக் கொண்டிருந்தவர்.. சட்டென அதை அடக்கி,
 
இப்போது கோபப்பட்டால் வேலைக்காகாது என்று நினைத்தவர்  கோபத்தை கைவிட்டு அவனிடம் கெஞ்ச ஆரம்பித்தார்,” தம்பி எப்ப வேணும்னாலும் அந்த நாட்டுக்கு போகலாம்டா.. இப்ப மலரோட நல்லபடியா குடும்பம் நடத்துர வழிய பாரு..”
 
“அதெல்லாம் உங்க இஷ்டத்துக்கு என்னோட முடிவை மாத்த மடியாது நான் கண்டிப்பா போறது போறதுதான்.. நீங்க ரெண்டு பேரும் என் மனசமாத்தலாம்னு நினைக்காதிங்க..”
 
ராமலிங்கம் தன் மகனின் பொறுப்பில்லாத தன்மையை காணவும் வெகுண்டவர் கோபத்தில் கத்த அவன் ஒன்று பேசவென சண்டை பெரிதாகியது.. மலர் இடிந்து போய் ஒரு மூலையில் நின்றிருந்தாள்…  வாயை திறக்கவில்லை..
 
அப்பத்தாவும் அப்பாவும் எவ்வளவு சொல்லியும் தன் பிடிவாதத்தில் இருந்து ஒரு நூலளவுகூட வெற்றி இறங்கவில்லை.. ராமலிங்கம் அவனை அடிக்கவே போய்விட்டார்..
 
மலர் சட்டென அவர் கையை பிடித்தவள்,” விடுங்க மாமா அவங்க போகட்டும்..??” ஒரே வார்த்தைதான் மறுவார்த்தை பேசாமல் அறைக்குள் நுழைந்துவிட்டாள்.. அவளுக்கு வெற்றி சற்று முன் தன்னிடம் பேசியது நியாபகத்திற்கு வந்தது..
 
தனக்கு சாப்பாடு போடவந்தவளை கைகளால் தடுத்தவன் அவள் முகத்தைகூட பார்க்காமல மறுபக்கம் பார்த்தபடி,” இதோ பாரு நான் நைட்டுக்கு ஊருக்கு போறேன்.. அப்படியே இன்னும் இரண்டு மாசத்துல ஆஸ்திரேலியா போயிருவேன்.. இனி எப்பவும் அங்கதான் இங்க வரவே மாட்டேன்.. நீ உங்க அப்பாவோட போயிரு..
 
அன்னைக்கு வேற வழியில்லாமத்தான் தாலி கட்டினேன்…இதெல்லாம் கல்யாணமே இல்ல.. யாருமே இல்லாம அப்பாவும் அப்பத்தாவும் மட்டும்தானே இருந்தாங்க.. எனக்கு இந்த கல்யாணத்தில கொஞ்சம்கூட விருப்பமில்ல.. நீ யார வேணும்னாலும் கல்யாணம் பண்ணிக்கோ ..
 
 உன்வாழ்கைக்குள்ள நான் வந்தத மறந்திரு..  இனி எப்பவும்  உன்னை பார்க்கவோ இங்க வரவோ மாட்டேன்..”சொல்லியபடி அவளின் மனநிலை என்ன அவள் பதிலென்ன எதையும் எதிர்பார்க்காமல் வெளியில் வந்திருந்தான்..
 
அவளெக்கென்று ஒரு மனம் இருக்கும் அதில் தன்னை போலவே ஆசைபாசங்கள் இருக்கும் என்பதை மறந்து விட்டான்.. மலர் அப்படியே அமர்ந்தவள்தான் எழவே இல்லை.. எவ்வளவு நேரம் அப்படியே இருந்தாளோ தன் மாமாவின் குரல் சத்தமாக கேட்கவும்தான் சுற்றுப்புறம் உணர்ந்தாள்..
 
இவள் அறைக்குள் வந்திருந்தாலும்  மாமாவின் குரலும் அம்மாச்சியின் குரலும் வெற்றியிடம் கோபமாக, பாசமாக , கெஞ்சி என பல்வேறு தொனியில் கேட்டுக் கொண்டுதான் இருந்தது.. வெற்றியின் குரலில் கேட்ட பிடிவாதத்தில் அவன் முடிவில் மாற்றமும் இல்லை என்பது அவன் குரலிலேயே தெரிந்தது..
 
சக்தியும் ரமலியும் மதுரைக்கு வந்தவர்கள் கல்யாணத்திற்கு தேவையான துணிகளை வாங்க கடைக்கு வந்திருந்தார்கள்.. இன்று இரவு சக்தி வக்கீலோடு தங்கிவிட்டு நாளை காலை நேரடியாக கோவிலுக்கு வருவதாக முடிவு செய்யப்பட்டிருந்தது.. அதற்குள் ரமலி தன் தாயிடம் திருமணத்தை பற்றி சொல்ல அவகாசம் கிடைக்கும் என நினைத்தாள்..
 
நாளையோடு அப்பா கொடுத்த கெடுநாள் முடிவதால் திருமணத்தை தள்ளிப்போட முடியாது.. வக்கிலை கோவிலுக்கு அனுப்பி தேவையான ஏற்பாடுகளை கவனிக்க சொல்லியவள் சக்தியோடு துணிக்கடைக்குள் நுழைந்திருந்தாள்..
 
இருவருக்கும் தேவையான துணிகளை பார்த்து பார்த்து வாங்கினாள்.. அத்தைகளுக்கு கட்டாயம் சந்தேகம் வரும் அதற்கு இடம் கொடுக்கவே கூடாது என்று நினைத்து நல்ல தரமான முகூர்த்த பட்டுச் சேலையை எடுத்திருந்தாள்..
 
நல்ல இளரோஜா வண்ணத்தில் உடலெல்லாம் கொடி கொடியாக இலைகள், பூக்கள் என வெள்ளியில் ஜரிகை செய்திருக்க பார்க்கவே அவ்வளவு அழகாக இருந்தது..
 
அதை தேர்வு செய்து அவனிடம் காட்ட அதுவரை கடையை சுற்றி தன் பார்வையை சுழல விட்டுக் கொண்டிருந்தவன் அவள் குரலில் திரும்பி பார்க்க தன் தோளில் அந்த புடவையை வைத்து அவனிடம காட்டியபடி நின்றிருந்தாள்.. பளீரென்ற அவள் நிறத்திற்கும் அந்த புடவைக்கும் அவ்வளவு அழகாக இருந்தது..
 
தலை நன்றாக இருப்பதாக ஆட்டினாலும் மனமோ மீண்டும் இந்த பொண்ணு நமக்கா என்ற எண்ணத்திற்குள் மூழ்க துவங்கிவிட்டான்.. அடுத்து அவனுக்கென பட்டு வேட்டி சட்டையை தேர்ந்தெடுத்தவள் அதை போட்டு பார்க்க சொல்லி டிரையல் ரூமிற்கு அனுப்பி வைத்து மற்ற நாட்களில் போடுவதற்காக அவனுக்காக சர்ட் பேண்ட்களை தேர்வு செய்து கொண்டிருந்தவளுக்கு டிரையல் ரூமிலிருந்து வந்த சக்தியை பார்க்கவும் அப்படியே மூச்சடைத்தது..
 
எந்த ஆணையும் இவள் இந்த அளவுக்கு நெருக்கமாக ரசித்ததில்லை.. அவன் உயரத்திற்கும், நிறத்திற்கும், கம்பீரத்திற்கும் இந்த உடை புதுமாப்பிள்ளையாக காட்டியது.. கச்சிதமாக இருந்த வெண் பட்டுச் சட்டை வேட்டி… அவள் எந்த அபிப்ராயமும் சொல்லாமல் அமைதியாக இருக்கவும்,
 
 இது வேண்டாமா..??” தன் குரலால் அவளை கலைக்க அவன் குரலும் அவனை போலவே கம்பீரமாக இருந்தது..
 
இல்ல இல்ல ரொம்ப நல்லாயிருக்கு..இதுவே இருக்கட்டும்..” மற்ற உடைகளையும் போட்டு பார்க்கச் சொல்லி கொடுத்துவிட்டு மற்ற தேவையான உள்ளாடைகளையும் தேர்ந்தெடுக்க சொன்னவள் அமைதியாக அங்கிருந்த சோபாவில் அவனுக்காக பொறுமையாக காத்திருந்தாள்..
 
அவன் எல்லாம் முடித்துவர அடுத்து அங்கு மிகவும் பிரபலமான நகைக்கடைக்குள் நுழைந்திருந்தனர்..அவளுக்கு திருமணத்திற்கு தேவையான நகை அனைத்தையும் பொறுமையாக தேர்ந்தெடுத்து அவனுக்கும் செயின், மோதிரம், கைக்கு உருண்டைகாப்பு என தேர்ந்தெடுக்க வேண்டாம் என மறுத்தவனை வற்புறுத்தி அப்போதே அணிந்து கொள்ளச் செய்திருந்தாள்..
 
தாலி மட்டும் வாங்கவில்லை.. அவளுக்கு என்னவோ சக்தியை ஹாஸ்பிட்டலில் சேர்த்த அன்று அவன் பையிலிருந்ததாக கொடுத்த நகை டப்பாவில் இருந்த மஞ்சள் கயிற்றில் கோர்த்திருந்த தாலியும் அதோடு சேர்த்து பின்னியிருந்த தாலிசெயினையுமே திருமணத்திற்கு வைத்துக் கொள்ளலாம் என தோன்றியிருந்தது..
 
சக்தியின் தந்தை தாலி செய்ய சொல்லும் போதே நகைகடைக்காரரிடம் அதை சாமி பாதத்தில் வைத்து கயிற்றில் கோர்த்து தரச் சொல்லியிருந்தார்.. அவர் மனைவியின் உடல்நிலை தெரிந்ததால்  அவரும் அதே போல பூஜை செய்து அவர்களின் தாயார் கையால்தான் தாலியை கோர்க்க சொல்லியிருந்தார்..
 
இருவரும் திருமணத்திற்கென்று எல்லாம் வாங்கி ஹோட்டலில் தங்கள் உணவை முடித்துக் கொண்டு சக்தியை வக்கீல் வீட்டில் விட்டவள் அவர்களிடம் சொல்லிக் கொண்டு தன் வீட்டிற்கு கிளம்பினாள்.. சக்திக்கே ரமலியை பார்க்கும் போது ஆச்சர்யமாக இருந்தது.. அவளே எல்லாம் பார்த்து பார்த்து செய்தாலும் எந்த இடத்திலும் மரியாதை குறைவோ, அலட்சியமோ, அலட்டலோ, பணக்கார தன்மையோ தெரியவில்லை..
 
 எல்லாவற்றையும் ரசித்து வாங்கி கொடுத்தது போலதான் இருந்தது..  ஒரு ஏடிஎம் கார்டையும் செலவுக்கு பணம் எடுத்து கொள்ள சொல்லி கொடுத்திருந்தாள்.. அவனுள்ளேயும் ரெண்டுபேரும் மனசுக்கு பிடிச்சுதான் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டமோ என்ற எண்ணம் தோன்ற ஆரம்பித்தது..
 
 ரமலியும் இதைத்தான் யோசித்திருந்தாள்..தனக்கு உதவி செய்பவருக்கு தான் எந்த வகையிலும் மன வருத்ததையோ, அவமரியாதையையோ ஏற்படுத்தகூடாது என்பதில் உறுதியாக இருந்தாள்.. தான் செய்வது மிகப்பெரிய தவறுதான் என்பது தெரிந்தாலும் வேறு வழியில்லாததால்தான் இதற்கு சம்மதித்திருந்தாள்..
 
அங்கு அப்பத்தாவின் அழுகுரலில் வெற்றி ஊருக்கு சென்றுவிட்டான் என்பது தெரிந்தது.. மலரின் அறைக்கு வந்தவர் அங்கு கட்டிலில்  படுத்திருந்த மலரின் தலையை தன் மடியில் வைத்து வருடியபடி கண்ணீர் உகுத்துக் கொண்டிருந்தார்..
 
 இந்த கோட்டிபய இப்படி முட்டாத்தனமா யோசிப்பான்னுதானேத்தா வயசு முன்ன பின்ன இருந்தாலும் சக்திக்கு உன்னை கல்யாணம் பண்ணலாம்னு நினைச்சோம்.. இப்ப நான் பயந்த மாதிரி ஆகிருச்சே.. இத பார்க்கவா நான் உயிரோட இருக்கனும்.. இதுக்கு ஒரு துளி விசத்தை வாங்கி  சாப்பிட்டுட்டா இந்த கொடுமை எதுவுமே எனக்கு தெரியாம போயிருமே ..??”தன் ஒப்பாரியை மீண்டும் துவக்க,
 
அவர் மடியிலிருந்து மெதுவாக எழுந்தவள் ,”அம்மாச்சி விசத்தை வாங்கிட்டு வா நானும் குடிச்சிருறேன் ரெண்டு பேரும் ஒன்னா செத்துரலாம்..??”
 
ஆத்தா மாரியாத்தா என்ன வார்த்தை சொல்லிப்புட்ட விட்டேன்னு சொல்லு .. விட்டேன்னு சொல்லு என்று அவள் வாயிலேயே ரெண்டு அடி போட்டவர் ஏத்தா நான் வாழ்ந்து கெட்டவ.. நீ பச்ச மண்ணு இனித்தான் பூத்து காய்க்கனும் இனிமே இப்படியெல்லாம் சொல்லாத..??”
 
ஏன் அம்மாச்சி நான் சொல்லக்கூடாது நாலு வயசில இருந்துதான் நானும் கொடுமையை அனுபவிக்கிறேன்..எங்கம்மா செத்ததிலயிருந்து விபரம் தெரியிற வரைக்கும் பசி பசின்னு திரிஞ்சேன்.. சாப்பாடு கிடைக்காதான்னு என் சித்தி கைய கைய எதிர்பார்த்துக்கிட்டு இருந்தேன்.. அப்புறம் அவங்க புள்ளைகள வளர்க்கிற ஒரு வேலைக்காரிய இருந்தேன்.. அவங்க பண்ணுற தப்புக்கு நான் அடிவாங்கினேன்..  வயசுக்கு வந்ததில் இருந்து இந்த கிரிதரன் மாதிரி ஆளுக்கிட்ட என் மானத்தை காப்பாத்த போராடுறேன்..
 
இன்னைக்கு வந்து எங்கப்பா பெரிய வீரன் மாதிரி என் சித்திய அடிச்சாரு அங்க நான் பட்ட கொடுமையெல்லாம் கண்டும் காணாமத்தானே இருந்தாரு.. அவர் கொடுத்த பணம் நகையெல்லாம் எனக்கெதுக்கு..??
 
 நல்லா படிச்சி பன்னண்டாவதுல ஆயிரத்துக்கு மேல மார்க் வாங்கி வைச்சிருந்தேன்.. எவ்வளவு கெஞ்சினேன் காலேஜ்க்கு போறேன்னு அப்பல்லாம் அந்தம்மா பேச்ச கேட்டு என்ன அனுப்பாம அடிமாடு மாதிரி வீட்டு வேலைக்கு வைச்சிருந்தாங்க..
 
அந்த கிரிதரன் என்னை கட்டாய கல்யாணம் பண்றேன்னு தெரிஞ்சவுடன எங்கப்பா அவன நாலு சாத்து சாத்தி போலிஸ்ல கம்பிளைண்ட் கொடுக்கிறத விட்டுட்டு என்னமோ வேண்டாத பொருளை தள்ளிவிடுறமாதிரி இங்கன போகச் சொல்லிட்டாரு.. இன்னைக்குகூட பாருங்க எவ்வளவு பிரச்சனை வந்தாலும் நீ அங்க மட்டும் வந்திராதன்னு சொல்றாறே தவிர அப்பா இருக்கேன்மா எதுக்கும் கவலைப்படாதன்னு ஒரு வார்த்தை சொல்லல..
 
இந்தா உன் பேரன் இனி இங்க இருக்காத அங்க போயிருன்னு சொல்லிட்டாரு.. அவரு அங்க வராதன்னு சொல்றாரு அப்புறம் போக்கிடம் இல்லாம நான் இருக்கிறதுக்கு உன்னோட சேர்ந்து விசத்தை சாப்பிட்டேன்னு வைச்சிக்கோ எனக்கு நிம்மதியாச்சும் கிடைக்கும்.. அடுத்து எந்த பிரச்சனையும் வராது..
 
அப்பத்தா என்ன சொல்வதென்று தெரியாமல் அப்படியே விக்கித்து போயிருந்தார்.. மலர் பேசியதையெல்லாம் வெளி கயிற்று கட்டிலில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்த ராமலிங்கத்திற்கு உயிரே போனது போல இருந்தது..
 
வேகமாக அறைக்குள் நுழைந்தவர் ,”ஆத்தா தங்கமே உன்ற மாமனும் சேர்ந்து உன் வாழ்க்கைய பாழாக்கிட்டனேத்தா..??” அவளின் தலையை தடவியபடி கண்கலங்கி நிற்க மலருக்கும் தன் மாமனின் குரலில் அழுகையை அடக்கமுடியவில்லை.. இத்தனை வருடங்களாக தான் பட்ட துன்பத்தை எண்ணி கதறி அழ அப்பத்தாவும் ராமலிங்கமும் கண்ணீர் உகுத்தபடி இருந்தனர்..
 
அவளை அழ விட்டவர் சற்று நேரம் கழித்து அவள் முகத்தை துடைத்தபடி,” போதும் மலரு நீ அழுதது இனி உன்னோட மாமன் உயிரோட இருக்கவரை நீ அழக்கூடாது.. தாய்மாமன்னா யாருன்னு நினைச்ச நானும் உனக்கு ஆத்தா மாதிரிதான் உங்க அம்மா இருந்திருந்தா நீ எப்படி சந்தோசமா இருந்திருப்பியோ அதவிட இந்த மாமனோட வீட்ல நீ வாழத்தான் போற.. இனி நீ நினைக்கறது மட்டும்தான் நடக்கும் . இந்த வீட்டு மகாலெட்சுமி இனி எக்காலத்திலயும் அழக்கூடாது..
 
ஆத்தா வாங்க எல்லாரும் சாப்பிடுவோம்..?” தன் தாயையும் மலரையும் அழைத்தபடி வெளியில் வந்தவருக்கு டேய் வெற்றி இந்த பொண்ணையா நீ விட்டுட்டு போற..? இன்னும் ரெண்டு மாசம் இருக்கு நீ அயல்நாட்டுக்கு போக நான் உன்னோட தகப்பன்டா எப்படி உன்னை இங்கன வரவைக்கிறதுன்னு எனக்கு தெரியும் பார்க்கிறேன்டா யாரு ஜெயிக்கிறதுன்னு மனதிற்குள் சூளுரைத்தவர் தன் தங்கை மகளுக்கு தான் செய்ய வேண்டியவற்றையும் பட்டியலிட்டு கொண்டார்..
 
தன் மனைவி இறந்து சக்தியும காணாமல் போனதால் மனது வெறுத்து போயிருந்தவர் இப்போதுதான் தன்னுடைய வாழ்க்கைக்கும் ஒரு அர்த்தம் இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டார்..
 
அழகான காலை பொழுது விடிய வக்கீல் குடும்பமும் சக்தியும் கோவிலுக்கு கிளம்பி வந்திருக்க இன்னும் ரமலியை காணவில்லை.. ஐயர் எல்லா ஏற்பாடும் செய்திருந்தார்.. குடும்பத்தினர் மட்டும்தான் வெளியாட்கள் யாரையும் அழைக்கவில்லை..
 
ரமலி தன் தாயோடு காரில் வந்து இறங்க தேவலோகத்து மங்கை வானிலிருந்து இறங்கி வந்தது போலிருந்தாள்.. ரேணுகாவும் சக்தியை பார்த்து திருப்தியாகி அவனிடம் பேச அவனும் அவர் கேட்ட கேள்விக்கு வக்கீலும் ரமலியும் சொன்னதிலிருந்து தனக்கு தெரிந்த பதில்களை பொறுமையாக சொல்லிக் கொண்டிருந்தான்..
 
ரேணுகாவிற்கு சக்தியை பார்க்கவும் அவன் தோற்றத்திலும் பேச்சிலும் ரொம்பவும் திருப்தி எங்கே மகள் அவசரத்துக்கு அவளுக்கு பொருத்தமில்லாத மாப்பிள்ளைய தேர்ந்தெடுத்து விட்டாளோ என்று பயந்து வந்தவருக்கு இப்போதுதான் மனம் நிம்மதியடைந்தது..
 
 
முதல்நாள் இரவே ரமலி தன் இரு அத்தை குடும்பத்தினருக்கும் போன் செய்து கோவிலுக்கு வரச் சொல்லியிருக்க அவர்களுக்கு முதலில் ஒன்றும் புரியாவிட்டாலும் ஒருவேளை நாளையோட அந்த முப்பது நாள் முடியிறதால சொத்து எல்லாத்தையும் கோவில்ல வைச்சு நம்ம கிட்ட தரப்போறாங்களோ அவர்களுக்கு சந்தோசம் தாங்கவில்லை… அதுதான் காரணமாயிருக்கும் வேறு காரணம்தான் ஒன்னுமில்லையே … சந்தோசமாக பட்டுடுத்தி அமர்களமாக தயாராகி தங்கள் காரில் வந்திறங்கினர்..
 
குதூகலமாக பேசிக் கொண்டு கோவிலுக்குள் நுழைந்தவர்கள் ரமலியை மணமேடையில் பார்க்கவும் அப்படியே ஷாக்கடித்தது போல நின்றிருந்தார்கள்..ஒன்றும் புரியவில்லை.. என்ன நடக்கிது இங்க இவளுக்கு கல்யாணம் அதுவும் வேற மாப்பிள்ளையோடயா..!! அவர்கள் மெதுவாக அருகில் வர முகூர்த்த நேரம் ஆயிற்று என வக்கீலின் மனைவி அவர்களிடம் அட்சதையை கொடுக்க அவர்கள் தங்கள் சுயநினைவுக்கு வரும் முன்னேயே சக்தி ரமலி கழுத்தில் தாலிகட்டி அவளை தன் மனைவியாக்கிக் கொண்டான்…
 
                                                  
                                                   இனி…………….?????

Advertisement