Advertisement

இணை தேடும் இதயங்கள்
                    அத்தியாயம்  –  8
 
ரமலி சக்தியின் கையில் தாலியை கொடுக்க அதை வாங்கி பார்த்தவனுக்கு நெஞ்சுக்குள் படபடவென அடித்தது.. இவ்வளவு நேரம் இல்லாத ஒரு உணர்வு நெஞ்சை அடைப்பது போல இருக்க அதை பார்த்தபடியே இருந்தான்..
 
அதை கையில் வைத்தபடியே ரமலியை பார்க்க மனதிற்கு ஒரு சந்தேகம் இந்த பொண்ண கல்யாணம் பண்ண நாம எப்படி ஒத்துக்கிட்டோம்..என்னவோ இருவரும் எதிர் எதிர் துருவங்கள் போல ஒரு எண்ணம் தன்னை அறியாமல் வந்தது..  
 
என்னை எப்படி உங்களுக்கு தெரியும்.. என்னோட அம்மா அப்பா…??”
 
ரமலியோ இவன முதல்ல அங்கிள் முன்னாடி கொண்டு போய் விட்டுரணும்.. நமக்கு ஒழுங்கா பொய் சொல்ல வருமா…?? சக்தி தன்னேயே துளைப்பதை போல பார்ப்பதை கண்டவளுக்கு இவன்  நம்மள பாக்கிறத பார்த்தா நாம சொல்றத நம்புவான்னு தோனலை..
 
லோசாக சிரித்தவள் ,”முதல்ல வீட்டுக்கு போயிரலாம்.. அங்க உங்களுக்கு எல்லாம் விளக்கமா சொல்றேன்..” எழ சிரமப்படுவானோ என அவனை நோக்கி  தன் கையை நீட்ட,
 
அவன் அதை பிடிக்காமல் மெதுவாக எழுந்தவன் அவளோடு நடந்து வர தோளை  உலுக்கிக் கொண்டாள்..!! நல்லாயிட்டான் போல, ஹாஸ்பிட்டல் பில்லை செட்டில் பண்ணியவள் தன் கார் கதவை அவனுக்காக திறந்துவிட்டாள்..
 
இருவரும் தங்கள் எஸ்டேட்டிற்குள் நுழைய அங்குதான் வக்கீல் அவர்களுக்காக காத்திருந்தார்..இருவரும் ஒன்றாக சேர்ந்து வருவதை பார்த்தவருக்கு இந்த பையன்தான் ரமலிக்கு ஏற்றவன் என்ற உணர்வு நூறு சதவீதம் வந்திருந்தது..
 
அவனை சோபாவில் அமரச் சொன்னவள் வேலைக்காரர்களிடம் அவனுக்கு பாலும் தனக்கும் வக்கீலுக்கும் டீ கொண்டுவரச் சொல்லிவிட்டு,” அங்கிள் சரணுக்கு எல்லா டீடெய்ல்ஸும் தெரியுனுமாம்.??”. அவரிடம் எல்லாவற்றையும் சொல்லுங்கள் என்பது போல கண்ணைக் காட்டியவள் சோபாவில் அமர்ந்து இயல்பாக கால்மேல் கால்போட்டு அமர,
 
எதிர் சோபாவில் அமர்ந்திருந்த சக்திக்கோ பார்வை முழுதும் ரமலி மேல்தான் இருவரும் காரில் வரும்போது இயல்பாய் அவளருகில் அமரமுடியவில்லை.. அவள் மேலிருந்து வந்த மனமும் அவளின் அண்மையும் அவனை தொல்லை படுத்தியது.. ஆனால் அது அவனுடைய இயல்பை பாதித்தது போலவும் தெரிந்தது..
 
பக்கவாட்டில் தெரிந்த ரமலியின் தோற்றம் ,அவள் அழகு சாதாரணமாக அமரும்போதே அவள் இயல்பான கம்பீரம் இதுபோல ஒரு பெண் நம்ம வாழ்க்கையிலா..!! என்னவோ இன்னுமும் அவன் மனது அவளை ஏற்றுக்கொள்ளவில்லை.. தன்னை சுற்றி பார்த்தவன் அங்கிருந்த ஆடம்பர பொருட்கள் இவைகளும் புதிதாக தெரிந்தது..
 
வக்கீல் தன்னையே பார்ப்பதை உணர்ந்தவன் இந்த நான்கு நாட்கள் செய்ததை போல கண்ணை மூடி ஒருவரின் வாயிலிருந்து வரும் தன் நிலை, தன்னுடைய வாழ்க்கை வரலாறு என்ன என்பதை அவர்கள் சொல்வதை ஏற்றுக் கொள்ள தயாரானான்.. தன்னை சமன்படுத்தி அவர்களை பார்க்க இருவரும் அவனைத்தான் பார்த்திருந்தார்கள்..
 
வக்கீலுக்கு இரண்டு நாட்களுக்கு முன் நடந்தது நியாபகத்திற்கு வந்தது.. ரமலியோடு மதுரை போனவர் மீண்டும் வேறு வேலையாக ஊட்டி வந்திருந்த போதுதான் ரமலி ஹாஸ்பிட்டலில் சேர்த்த பையனை ஒருஎட்டு பார்த்துவிட்டு செல்லலாம் என நினைத்து ஹாஸ்பிட்டலுக்கு வந்தார்..
 
அப்போது ரமலியின் இரு மாமா குடும்பத்தினரும் போன் செய்து தங்களுக்குள் சொத்துக்களை பட்டியலிட்டு பிரித்துக் கொண்டு அது வேண்டும் இது வேண்டும் என சொல்லி இருவரும் விரும்புவதை போல இரண்டு பங்காக பிரித்து எழுத சொல்லி  போனில் சொல்லிக் கொண்டிருந்தனர்…
 
இவருக்கு அவ்வளவு கோபம் மனசாட்சியே இல்லாம ஒரு சின்ன பொண்ண ஏமாத்த  ரெண்டு குடும்பமும் இப்படி அலையிறாங்களே..இதுக்கு நான் துணை போகனுமா..?? அவங்க தாத்தா எவ்வளவு நல்லவர் இவங்களுக்கு தேவையான எல்லாம் பார்த்து பார்த்துதானே பிரிச்சு கொடுத்தார்.. இன்னுமா ஆசை அடங்கள..
 
அவர்களிடம்  முப்பது நாள் முடிஞ்சாதான் சொத்த பத்தியே பேசமுடியும் அதுவரைக்கும் அந்த உரிமை எதுவும் தனக்கில்லை என்பதை சொல்லி போனை கட் செய்தவர் சக்தியை பார்க்க உள்ளே சென்றார்..
 
அவன் நல்ல உறக்கத்தில் இருக்க அவன் முகத்தையே சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு உறக்கம் கலையாமல் வெளியில் வந்து ஒரு முடிவோடுதான் டாக்டரை பார்க்கச் சென்றார் .. அவரோடு அரைமணி நேரம் பேசியவருக்கு ஒரு நம்பிக்கை ஒளி தோன்றியது.. ஏதோ இந்த சின்ன பொண்ணுக்கு நம்மளால முடிஞ்ச உதவி..
 
வெளியில் வந்தவர் அருகிலிருந்த பார்க்கில் சென்று அமர்ந்து சற்று நேரம் யோசித்துக் கொண்டிருந்துவிட்டு பின் ஒருமுடிவோடு ரமலிக்கு போன் செய்ய,
 
லாப்டாப்பில் ஏதோ வேலை செய்து கொண்டிருந்தவள் போன் வரவும் தாய்க்கு தொந்தரவில்லாமல் வெளியில் வந்தாள்.. சொல்லுங்க அங்கிள்..??”
 
அம்மா எப்படிமா இருக்காங்க..?”
பரவாயில்ல அங்கிள் இப்பதான் சாப்பிட்டாங்க.. மாத்திரை போட்டுட்டு படுத்திருக்காங்க..”
இன்னும் உங்கப்பா கொடுத்த கெடுமுடிய நாலுநாள்தானே இருக்கு என்னமா செய்ய போற…?”
 
ம்ம்ம்ம் இப்பதான் அங்கிள் லண்டன்ல இருக்க என்னோட பிரண்ட்ஸ்க்கிட்ட பேசினேன்.. நான் அம்மாவோட அங்கயே போகலாம்னு முடிவு பண்ணிட்டேன்.. ஜாப்க்கு ஏற்பாடு செஞ்சிட்டேன்.. அம்மா வீட்டுக்கு வரவும் பாஸ்போர்ட் விசா இந்த வேலையை மட்டும் கொஞ்சம் பார்க்கனும் அங்கிள்..
 
அந்த பக்கம் அதிர்ச்சியானவர் ,”எ.. என்ன சொல்ற ரமலி ஊருக்கு போறியா அப்ப சொத்து..?”
 
எதுவும் வேணா அங்கிள்..!! எனக்கு அம்மாவோட நிம்மதியும் ,சந்தோசமும் முக்கியம்.. இங்கயிருந்தா நிச்சயமா அம்மாவுக்கு அது கிடைக்காது.. அதோட சொத்துக்காக பொம்பள பொறுக்கிகள எல்லாம் என்னால கல்யாணம் பண்ண முடியாது..
 
அம்மா என்ன சொன்னாங்க ஊருக்கு வர ஒத்துக்கிட்டாங்களா..?”
 
இல்ல அங்கிள் அவங்ககிட்ட இன்னும் அதப்பத்தி பேசலை.. கண்டிப்பா வரலைன்னுதான் சொல்லுவாங்க.. இது தாத்தா கஷ்டப்பட்டு சம்பாரிச்சது நீதான் அந்த தொழிலை நல்லா இன்னும் முன்னுக்கு கொண்டுவரனும்னு சொல்லிக்கிட்டே இருக்காங்க.. பத்தாததுக்கு இப்ப புதுசா நீ இத்தனை வருசம் லண்டன்ல இருந்திட்டு ஏன் அங்கயே ஒரு பையன பார்த்து கல்யாணம் பண்ணாம வந்தன்னு எக்ஸ்ட்ரா ரெண்டு கேள்வி சேர்த்திருக்காங்க..
 
ஏம்மா அம்மாவுக்கு இப்ப இருக்கிற உடம்பு சூழ்நிலைக்கு இத ஏத்துக்குவாங்களா..?”
 
பெருமூச்சு விட்டவள்,” கொஞ்சம் கஷ்டம்தான் அங்கிள்.. ஆனா இப்ப அவங்க மனசு கஷ்டப்படாம எப்படி சொல்றதுன்னுதான் யோசிச்சுட்டு இருக்கேன்..டாக்டர் வேற அதிர்ச்சி தர்ற மாதிரி எந்த நியூஸும் சொல்லக்கூடாதுன்னு சொல்லியிருக்காரு என்ன பண்றது..
 
நீ எதுவும் பண்ண வேணாம் ரமலி நான் சொல்றத கொஞ்சம் கேளு..தன் திட்டத்தை சொல்ல,
 
அதிர்ச்சியில் அப்படியே வாயடைத்திருந்தவளை.. அரைமணி நேரம் பேசி பேசியே  கரைத்தவர் கடைசியில் அவளை ஒத்துக் கொள்ள செய்துவிட்டார்..
 
எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு அங்கிள்.. இதெல்லாம் சாதாரண விசயம் இல்லை.. ஒரு பொய் சொல்ல ஆரம்பிச்சா அத தொடர்ந்துக்கிட்டே இருக்கனும்.. ஒருத்தரோட வாழ்க்கையை வேற நான் பாழாக்கின மாதிரி ஆயிருமோன்னு பயமாயிருக்கு..
 
அந்த பக்கம் வக்கீல் ஏதோ கேட்க,
 
இல்ல அங்கிள் கண்டிப்பா எனக்கு எப்பவும் கல்யாணம் பண்ற ஐடியா இல்ல.. எப்பவுமே.. ஆனா சொத்துக்காக இப்படி பண்றது… சற்று யோசித்தவள்.. ஓகே அங்கிள்  அம்மாவ வீட்ல விட்டுட்டு அங்க வர்றேன்….
 
தன்னுடைய நினைவலையில் இருந்தவரை சக்தியின் குரல் தடைசெய்தது.. சொல்லுங்க ஸார்.. வக்கீலை பார்த்தவன் தன் கேள்வியை ஆரம்பிக்க
 
என்ன சரண் ஸார்ன்னு சொல்ற அங்கிள்ன்னு உரிமையா கூப்பிடு அவன் அருகில் அமர்ந்தவர் அவன் தோளில் கைப்போட்டு நீ எனக்கு தெரிஞ்ச பையன்தான்பா..
 
என்னோட அம்மா அப்பா..
உங்க பேரண்ட்ஸ் பத்தி எனக்கு தெரியாது.. அதைபத்தி நான் உன்கிட்ட கேட்டதிலல.. என்கிட்ட நீ வேலை கேட்டு வந்திருந்த ..நாம நாலைஞ்சு முறை மீட் பண்ணியிருக்கோம்.. நான்தான் ரமலி வெளிநாட்ல இருந்து வரவும் அவக்கிட்ட உனக்காக வேலைக்கு ரெக்கமண்ட் பண்ணலாம்னு இருந்தேன்..
 
சக்தியின் மண்டைக்குள் இவங்க வெளிநாட்டுல படிச்சவங்களா. அப்ப வேலைதேடி இவங்ககிட்ட வந்திருக்கோம்.. அப்புறம் எப்படி  கல்யாணம்னு சொல்றாங்க.
 
என்ன சரண் வேலைக்குன்னு சொல்லிட்டு கல்யாணம்னு யோசிக்கிறிங்களா.. ரமலிக்கு உன்கிட்ட பேசிப்பார்த்ததுல உன்னை பிடிச்சு போச்சு அதான் ரெண்டுபேரும் பேசி ஒரு முடிவெடுத்து நாளைக்கு கல்யாணம்னு முடிவு பண்ணியிருந்திங்க.. அதோட இவ அம்மாவுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை.. அதான் கல்யாணத்தை உடனே நடத்தலாம்னு முடிவு செஞ்சோம்..
 
சக்தியோ சட்டென,” நீங்க ரெண்டு பேரும் சொல்றத உண்மைன்னு நான் எப்படி நம்புறது..எனக்கென்னமோ நீங்க ரெண்டு பேர் சொல்றதும் உண்மைன்னு தோனலை..” அவர்களை பார்த்து எதிர் கேள்வி கேட்க, சக்திக்கு என்னவோ அவர் சொன்னதில் ஏதோ ஒன்று தவறாக இருப்பதாக பட அது என்னவென்று புரியவில்லை..
 
ரமலி அதுவரை ஏனோதானோவென்று போனை பார்த்தபடி அமர்ந்திருந்தவள்  நிமிர்ந்து அவனை கூர்ந்து பார்த்தாள்.. தன்னை மறந்த நிலையிலும் என்னமா யோசிக்கிறான்..
 
அப்ப நீங்களே சொல்லுங்க நாங்க ஏன் பொய் சொல்லப்போறோம்..” அவனை பார்த்து கேட்டவளிடம்,
 
அதான் எனக்கும் நியாபகத்துக்கு வரலை..??” அவனுக்குள் யோசனை இவங்க சொல்றது உண்மைதானோ.. நம்ம உள்ளுணர்வு சொல்றமாதிரி இவங்க பொய் சொல்லலையோ… சக்தியின் நிலை ஒரு பரிதாபகரமான நிலையாக இருந்தது..
 
சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள் என்று அவன் மனது சொன்னாலும் சொல்வதை நம்ப வேண்டாம் என உள்ளுணர்வு சொல்லியது.. நம்மகிட்ட பொய் சொல்ல இவங்களுக்கு என்ன அவசியம் இருக்கும்..
 
மறுபடி அவனுக்கு தலைவலிக்க ஆரம்பித்தது.. ஏற்கனவே டாக்டர் அவனிடம் ,”அதிகம் யோசிக்க வேண்டாம்.. அப்படியே விட்டுருங்க சீக்கிரமே நினைவு திரும்பிரும்..” என்று சொல்லியிருந்தார்.. கண்மூடி பின்னால சாய்ந்து அமர்ந்தான்..
 
ரமலிக்கும் அவன் நிலையை பார்த்து தன் மேல் கோபமும் அவன் மேல் பரிதாபமும் தோன்றியது.. அதோடு ஆண்களையே வெறுக்கும் தன்னால் எப்படி இவனோடு  ஒன்றாக ஒரே வீட்டில் இருப்பது, அம்மாவிடம் எப்படி புரியவைப்பது, அத்தை குடும்பத்தை எப்படி சமாளிப்பது என ஏகப்பட்ட கவலைகள்..
 
வக்கீலுக்கும் உள்ளுக்குள் உதறலாகத்தான் இருந்தது…. ஒருவேளை இந்த பையனுக்கு ஏற்கனவே கல்யாணம் நடந்து மனைவி குழந்தைகன்னு இருந்தா ரெண்டு பொண்ணோட வாழ்க்கையை கெடுக்கிற மாதிரி இருக்கும்..
 
அதோடு ரமலி டாக்டரிடம் பலமுறை கேட்ட ஒரு கேள்வி இவங்களுக்கு நினைவு வந்தா இப்ப நடக்கிறது நியாபகத்துக்கு வருமா இல்லையா என்பதுதான்.. இதற்கு பதில் அவரிடம் இல்லை.. சில பேருக்கு நியாபகம் இருந்தது பல பேருக்கு நினைவு இல்லை.. அது நினைவு வந்த பிறகே சொல்ல முடியும் என சொல்லிவிட்டார்..
 
ஆளாளுக்கு ஒரு மனநிலையில் திருமணத்தை எதிர்நோக்க ஆரம்பித்தார்கள்..
 

Advertisement