Advertisement

இணை தேடும் இதயங்கள்
                   அத்தியாயம்  –  7
 
ரமலியின் அம்மா ரேணுகாவிற்கு காலை எழுந்ததில் இருந்தே நெஞ்சுக்குள் ஒரு மாதிரி படபடப்பாக உணர்ந்தார் .. தன் ஒரே மகளை நினைத்து நினைத்துதான் அவருக்கு கவலை..
 
மாமனாரும் மாமியாரும் கஷ்டப்பட்டுத்தான் இந்த அளவுக்கு முன்னேறினார்கள்.. தொழிலை பார்த்த அளவுக்கு மகனை பார்க்காமல் விட்டுவிட அவர்களால் தன் மகனை கட்டுப்படுத்தவும் முடியவில்லை..
 
மனைவியாவது அவரை தன் வழிக்கு கொண்டு வந்திருக்கலாம்.. பயந்த சுபாவம் கொண்ட ரேணுகா கணவரிடம் அடங்கி போக அவர் கணவரின் ஆட்டம்தான் அதிகமாக இருந்தது.. கர்ப்பப்பை பிரச்சனையால் ரமலிக்கு பிறகு அவர்களுக்கு வேறு குழந்தைகள் பிறக்கவில்லை..
 
ஒற்றை குழந்தையாக வீட்டின் முடிசூடா ராஜகுமாரியாக இருந்தாள் ரமலி.. சிறுவயதில் தந்தை என்றால் உயிர்.. வளர வளர தந்தை குடித்துவிட்டு வந்து அன்னையை அடிப்பது, துன்புறுத்துவது என பல செயல்களில் ஈடுபட,
 
அவரின் நடவடிக்கைகளால் அவரை விட்டு ஒதுங்கியவள் தாத்தாவிடமே  தந்தை அன்பை பெற்றாள்..
 
அவளது பதினைந்தாம் வயதில் ஒருநாள் தாத்தாவும் பாட்டியும் ஊரில் இல்லாத நாளில் வீட்டிலேயே ஒரு  பெண்ணோடு கூத்தடிக்க ஒரு மகளாய் பார்க்க கூடாதவைகளை எல்லாம் பாரத்ததால் அன்று வெறுக்க ஆரம்பித்தவள்தான் … சாகும் வரை அவர் முகத்தில் கூட விழிக்க பிடிக்கவில்லை..
 
அவர் வழியிலேயே அவள் மாமாக்களும், மாமா மகன்களும் நடக்க ஆண்கள் என்றாலே ஒரு வெறுப்பு வந்திருந்தது.. பெண்களின் உடலை மட்டும் ரசிக்கும் ஆண்கள்..!!!  இதுவே அவர்கள் மேல் நல்லெண்ணத்தை தோற்றுவிக்கவில்லை..
     
தன் மகனை வெறுத்தாலும் ரமலி மேல் உயிரையே வைத்திருந்த அவள் தாத்தா அவளுக்கு தேவையான அறிவுரைகளை வழங்கியவர் , தொழிலை எடுத்து நடத்துவதற்கு அப்போதிருந்தே அவளை தயார்படுத்தினார்..
 தந்தையோடு அவளது வெறுப்பையும் ஒட்டாத நிலை உணர்ந்து பாதிநாள் ஹாஸ்டலிலும், கல்லூரி படிப்புக்கு வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டார்..
 
ரமலி தன் தாத்தாவிடம் இருந்துதான் தன்னம்பிக்கையையும், எது வந்தாலும் சமாளிக்கும் திறனையும் கற்றுக்கொண்டாள்..
வெளிநாட்டில் இருந்தாலும்.. இந்த சொத்தின் வாரிசு அவள்தான் என்பதால் மகனை நம்பாமல் பேத்தியின் மேல் நம்பிக்கை வைத்தவர் ,
 
தொழிலின் நிலை, வரவு செலவு இங்கு நடக்கும் எந்த ஒரு சிறுவிசயமும் அவளுக்கு தெரியும் படி செய்திருந்தார்..
 
இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு வாகனவிபத்தில் தாத்தாவும் பாட்டியும் இறந்த போதுதான் ரமலி இந்தியாவிற்கு வந்தாள்.. ஒருமாதம் இருந்தவள்.. தன்னுடைய மேற்படிப்பை முடிக்க மீண்டும் வெளிநாட்டிற்கே வந்துவிட்டாள்..
 
தாத்தா, பாட்டி இறந்ததை ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் அவர்களின் அறிவுரைகளையும், கற்றுத்தந்த தொழிலையும் மறக்கவில்லை..
 
இந்த இரண்டு வருடங்களாக தந்தை போட்ட ஆட்டமும் அவரோடு சேர்ந்து மாமா குடும்பம் செய்யும் அட்டகாசங்கள் தெரிந்தாலும் தன் படிப்பு முடிவதற்காக காத்திருந்தாள்..
 
அதோடு தந்தை முகத்திலும் விழிக்க விருப்பமில்லை.. படிப்பு முடிந்து ஊருக்கு கிளம்ப ஆயத்தமாக இருந்த நிலையில்தான் தந்தை மாரடைப்பால் இறந்த செய்தி வந்தது.. அதிக மது, மாது என்ற உல்லாச வாழ்க்கையில் இருந்தவர் தன் உடல்நிலையை பற்றி கவலைப்படவில்லை
 
மகளாக இறுதி காரியங்களை செய்தாலும் அவள் எதிர்பார்க்காத ஒன்று இந்த உயில் விசயம்தான்.. இதற்கு காரணம் தன் மாமா குடும்பமாகத்தான் இருக்கும் என்பதையும் அறிவாள்..
 
ரேணுகாவோ தன் மகளுக்கு கணவர் கொடுத்த கெடுநாட்கள் குறைய குறைய என்ன செய்ய போகிறாளோ என யோசித்து யோசித்தே உடலை வருத்திக் கொண்டார்..
 
தன் குடும்ப சொத்தை நாத்தனார் குடும்பத்திற்கு விட்டுக் கொடுக்க மனமில்லை.. மாமனார் மாமியாரின் உழைப்பை அருகில் இருந்து பார்த்தவர். அதை பாழாக்க மனதில்லை..
 
ஆனால் அதற்காக பெண்ணை அவர்களின் மகன்களுக்கு கட்டிக் கொடுக்கவும் விருப்பமில்லை.. இதற்கெல்லாம் ஒரு வழிகாட்டு இறைவா என பூஜை அறையே கதியாக கிடந்தார்..
 
காலை எழுந்தவர் குளித்து பூஜை அறையில் இருக்க லேசாக படபடவென வந்து நெஞ்சு வலிப்பதை உணர்ந்து யாரையும் அழைப்பதற்கு முன் அங்கேயே மயங்கியிருந்தார்..
ஏதோ சத்தம் கேட்டு வந்த வேலைக்காரபெண் பதறி சத்தம் போட அவரை ஹாஸ்பிட்டலில் சேர்த்திருந்தனர்..
 
சக்திக்கு ஆப்ரேஷன் நல்லபடியாக முடிந்து அவன் மயக்கம் தெளிவதற்காக வெளியில் காத்திருந்த ரமலிக்கு தாயை ஹாஸ்பிட்டலில் சேர்த்திருப்பதாக  போன் வரவும் பதறியவள் அப்போதே வக்கீலோடு கிளம்பிவிட்டாள்..
 
வக்கீல் தன் நண்பரிடம் தங்கள் நிலையை சொல்லி சக்தியை பார்த்துக் கொள்ளச் சொல்லியவர்கள் தங்கள் காரில் மதுரையை நோக்கி விரைந்தனர்.. எதுவாயிருந்தாலும் போனில் தகவல் சொல்ல சொல்லியிருந்தார்..
 
ஹாஸ்பிட்டலுக்குள் நுழைந்தவள் பதட்டமாக தாயை சென்று பார்க்கும் போது கையில் டிரிப்ஸ் போடப்பட்டு  கண்மூடி படுத்திருந்தவரின் மறுகையை பிடித்தவள் தன் நெஞ்சோடு அணைத்துக் கொள்ள ரேணுகா தன் மகள் ஸ்பரிசத்தில் மெதுவாக கண்விழித்தார்..
 
ரமலிக்கு மளுக்கென்று கண்ணீர் வழிந்தது..” ம்மா.. என்னாச்சு.. எப்படிம்மா இருக்கிங்க.?” அவளுக்கென்று இருக்கும் ஒரே ஜீவன்…!!
 
“நான் நல்லாயிருக்கேன்டா.. லேசான மயக்கம்தான்  நீ எப்ப வந்த..”
“இப்பத்தாம்மா…” அவரை வருடியபடி அமர்ந்திருந்தவளை நர்ஸ் வந்து டாக்டர்  அழைப்பதாக சொல்லவும் அவர்கள் குடும்ப மருத்துவரை பார்க்கச் சென்றாள்..
 
அவளை அமர சொன்னவர் ,” நல்லாயிருக்கியாம்மா..?”
“நல்லாயிருக்கேன் அங்கிள்.. வீட்ல ஆன்ட்டி எப்படி இருக்காங்க..”
 
அவளை பார்த்து புன்னகைத்தவர்,” அவளுக்கென்ன என்னை மாதிரி ஒரு அடிமை கிடைச்சா நல்லா வைச்சு செய்றா..??”
 
ரமலி லேசாக சிரித்து,” இருங்க ஆன்ட்டிய பார்க்கவும் சொல்றேன்.. “அவர்கள் குடும்பத்தை  சிறுவயதில் இருந்தே தெரியும்.. “ அங்கிள் அம்மாவுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே ..?”
 
சற்று நிலைக்கு வந்தவர்..” இப்ப ஒன்னும் பிரச்சனை இல்லை ரமலி ஆனா..அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக் .. இது ரெண்டாவது அட்டாக்.. முதல்ல ஒரு அட்டாக் வந்திருக்கு அது அவங்களுக்கு தெரியலை…”
 
அதிர்ச்சியில் உறைந்திருந்தவளை,” கவலைப்படாத இப்ப காப்பாத்திட்டோம்.. ஆனா இனி ரொம்ப கவனமா பார்த்துக்கனும்.. ரொம்ப கவலைபடுறாங்களோ..??”
 
தன் கைவிரல்களையே பார்த்துக் கொண்டிருந்தவள் லேசாக கண்கலங்கி ,”இருக்கலாம் அங்கிள் என்னை பத்திய கவலையா இருக்கும்..”
 
மெதுவாக அவள் அருகில் வந்தவர்,” நீதான் ரமலி அம்மாவ இனி நல்லா பார்த்துக்கனும்.. இனி ஒரு அட்டாக் வந்தா அத தாங்குற சக்தி அவங்களுக்கு இல்லை..இனி முடிஞ்ச அளவு அதிர்ச்சி தர விசயங்கள் அவங்க காதுக்கு போகாம பார்த்துக்கோ..
 
ரொம்ப கவலைபடவிடாம எப்பவும் சந்தோச மனநிலையில இருக்கனும். உங்கப்பாவால உங்க அம்மாவுக்கு எந்த நிம்மதியும் இல்ல..
 
 நீயும் பக்கத்தில இல்லாம அவங்க ரொம்ப கஷ்டப்பட்டுட்டாங்க.. இருந்தாலும் உன்னோட எதிர்காலத்துக்காகவும் உன் சந்தோசத்துக்காகவும் இத்தனை வருசம் உன்னை விட்டு பிரிஞ்சு இருந்தாங்க.. இனி எல்லாம் நீ பார்த்துக்கனும்..
 
“கண்டிப்பா அங்கிள் நான் எல்லாம் பார்த்துக்கிறேன்..அவங்க சந்தோசம்தான் இனி எனக்கு முக்கியம்.. அம்மாவ எப்ப அங்கிள் வீட்டுக்கு கூட்டிட்டு போக..?”
 
“அவங்க ரொம்ப வீக்கா இருக்காங்க.. ரெண்டு நாள் என்னோட அப்சர்வேஷன்ல இருக்கட்டும்.. அப்புறம் வீட்டுக்கு கூட்டிட்டு போம்மா..”
 
“ம்ம்ம் ஓகே அங்கிள் ..”அவரிடம் விடைபெற்று தன் தாயின் அறையை நோக்கிவர ஊட்டி ஹாஸ்பிட்டலில் இருந்து போன் இப்போதுதான் தான் ஹாஸ்பிட்டலில் சேர்த்த நபரை பற்றியே அவளுக்கு நினைவு வந்தது..
 
மணியை பார்க்க மாலை 5 காலையிலயே மயக்கம் தெளிஞ்சிருக்குமே..” டாக்டர் அவங்க இப்ப நல்லாயிருக்காங்களா..??” தன்னை விட கண்டிப்பா வயது பெரியவனாத்தான்  இருப்பான் அவன் என்று சொல்ல போனவள் அவங்க என மாற்றி அவரை பேசவிடாமல்
 
“டாக்டர் நான் இப்ப அங்க வரமுடியாது.. எத்தனை நாள் வைச்சிருக்கனுமோ நல்லா கியூரானதுக்கப்பறம் அவங்கள டிஸ்ஜார்ஜ் பண்ணிருங்க.. அவங்க பில்லை எனக்கு அனுப்பி வைச்சிருங்க.. அங்கிள்..??”
 
 இவள் பேசி முடிக்கும் வரை பொருத்திருந்தவர் ,”அதுல கொஞ்சம் பிராபளம் ரமலி..?”
“என்னாச்சு அங்கிள்….”
“அவருக்கு மயக்கம் மட்டும்தான் தெளிஞ்சிருக்கு.. மூளை நரம்புல அடிபட்டதால பழைய நினைவுகள் வர்றதுல கொஞ்சம் பிரச்சனையா இருக்கு..”
 
“மைகாட் என்ன சொல்றிங்க ??”
 
“ஆமாம்மா அவருக்கு பழைய நினைவுகள் வரலை.. ஆனா இந்த ஆப்ரேஷனால சீக்கிரமே நினைவு திரும்பிரும்னு எனக்கு தோனுது.. “
 
சற்று யோசித்தவள்,” ஓகே அங்கிள் நான் ரெண்டு நாளுல அம்மாவ வீட்டுக்கு டிஸ்சார்ஜ் பண்ணிட்டு அங்க வர்றேன் மத்தத நேரா பேசிக்கலாம்.. கொஞ்சம் பார்த்துக்கோங்க அங்கிள்..” பேசிமுடித்தவள் அன்னையை பார்க்கச் சென்றாள்..
 
மயக்கம் தெளிந்த சக்திக்கு ஒன்றும் நியாபகத்தில் இல்லை.. டாக்டர் கேட்ட எந்த கேள்விக்கு பதில் தெரியவில்லை.. மூளை அப்படியே ஒன்றும் எழுதாத வெள்ளை காகிதம் போல இருந்தது..
 
தன் பெயர், ஊர் ,சொந்தங்கள் எதுவும் தெரியவில்லை.. தன்னிலையை தானே வெறுத்தவன் ஏதேதோ யோசிக்க தலை கிண்கிண்ணென்று வலித்தது.. நர்ஸ் தன்னை ஒரு பெண் கொண்டு வந்து இங்கு சேர்த்ததாக சொல்ல யாராயிருக்கும் ..யோசித்து யோசித்து அவன் தலைக்குள் வண்டுகள் குடைவது போல இருந்தது..
 
இன்றோடு வசந்தா இறந்து மூன்று நாட்கள் முடிந்துவிட்டது.. சொந்தங்கள் அனைத்தும் மூன்றாம்நாள் காரியம் முடிந்து ஊருக்கு கிளம்பியிருந்தார்கள்
 
அங்கு கபிலனும் அவன் நண்பர்களும் மிகுந்த கவலையில் இருந்தார்கள்..” ஏண்டா அவன அங்கதான அடிச்சு போட்டுட்டு வந்தோம்.. இப்ப காணலைன்னா எங்கடா போயிருப்பான்..??”
மற்றவர்களோ,” ஏண்டா உயிருக்கு என்னமும் ஆபத்து வந்திருக்குமோ..?”
 
கபிலன் கவலையுடன்,” கொஞ்சம் அவசரப்பட்டுட்டோம்னு நினைக்கிறேன்டா.. அவங்க அம்மாவோட கடைசி காரியம்கூட பண்ணவிடாம பண்ணிட்டோம்.. அவன் அம்மா மேல வைச்சிருந்த பாசம் நம்ம எல்லாருக்கும் தெரியும்..
 
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கலை.. கோபம் என் கண்ண மறைச்சிருச்சு.. அன்னைக்கு அவனோட பிரண்ட்ஸ் எல்லாம் அவன காணாம எப்படியெல்லாம அழுது புலம்பினாங்க..
 
நாமளும்தானே அவங்க அம்மா இறந்ததுக்கு போயிருந்தோம்.. அவங்க அப்பத்தா என்னோட காலை கட்டி புடிச்சிட்டு அழும்போது என்னால தாங்கமுடியலைடா..
 
பேரனுக்கு என்னாச்சோன்னு அவங்க அழுத அழுகை இன்னும் என்னோட காதுக்குள்ள கேட்டுட்டே இருக்கு..
எங்க என்னையும் அறியாம நான்தான் அவன அடிச்சேன்னு உண்மைய சொல்லிருவனோன்னு எனக்கே பயமாயிருச்சுடா..
 
அவங்க விளையாட்ட விளையாட்டா பார்த்திருக்காங்க.. நான் என்னோட பர்சனலா பார்த்திட்டேன்… எந்த பொண்ணோ என்னை வேணாம்னு சொன்னதுக்கு அவன் என்ன பண்ணுவான்..
 
நானும் ரெண்டு நாளா என்னோட மனசு கேட்காம  ஊருல ஒரு இண்டு இடுக்கு விடாம  தேடிட்டேன்.. பக்கத்தில இருக்கிற ஹாஸ்பிட்டல் ஒன்னுவிடாம போய் பார்த்துட்டு வந்திட்டேன்..
 
அவன் எங்க எப்படி மாயமா மறைஞ்சிட்டான்னு தெரியலை.. அவன எப்ப நேரா பார்த்து மன்னிப்பு கேட்கிறோனோ அப்பத்தான் எனக்கு  நிம்மதி கிடைக்கும்டா.. இல்ல என்னோட மனசாட்சியே என்னை மன்னிக்காது..
மனசாட்சிய விடு அவங்க அம்மாவோட ஆத்மா என்னை நிம்மதியா இருக்க விடாது.. இப்பவே தூங்குனா அவங்களோட உருவம்தான் என் கண்முன்னாடி வருது…
 
அவனை போலத்தான் அவன் நண்பர்களும் நினைத்தார்கள்.. வசந்தாவின் மறைவு அவர்கள செய்த தவறை யாரும் சொல்லாமலே அவர்களை சுட்டி காட்ட துவங்கியிருந்தது..
 
..  வெற்றி பக்கத்தூர் போலிஸ் ஸ்டேசனுக்கு போயிருந்தான்.. போலிஸில் ஏற்கனவே புகார் கொடுத்திருந்தான்
 
தினமும் அண்ணனை பற்றிய விபரம் எதுவும் தெரியுமா என கேட்ட காலை மாலை இருவேளையும் அலைந்து கொண்டிருந்தான்..
 
மலரின் அப்பா தினமும் வந்து மகளை பார்த்துவிட்டு சென்றார்.. இன்றும் இப்போதுதான் வந்தவர் ராமலிங்கத்தின் மனதை கொஞ்சம மாற்ற அவரை அப்படியே சற்று வெளியில் அழைத்து சென்றிருந்தார்..
 
 அப்பத்தா உள்ளறையில் படுத்திருக்க மலருக்குத்தான் தன் வாழ்க்கையின் அடுத்த நிலை என்ன என்று தெரியாமல் விட்டத்தை பார்த்தபடி அமர்ந்திருந்தாள்..
 
வீட்டில் அனைவரும் ஒரு மாதிரி இறுக்கத்தோடு இருந்தனர்.. அப்பத்தாவிற்கு மருமகள் என்றொரு ஜீவன் வீட்டில் இருந்ததே அவ்வளவு பலமாக இருந்தது போல இன்று என்னவோ வசந்தா இல்லாமல் இந்த வீடே ஒரே வெறுமை..!!
 
அதைவிட சக்திக்கு என்னாச்சோ என்பதுதான் அவருக்கு இப்போது பெரும் கவலை .. சிறுவயதில் இருந்தே ஒருநாள் கூட அவனை விட்டு பிரிந்ததில்லை.. குழந்தை பெற்றது மட்டும்தான் வசந்தா அவனை தாலாட்டி சீராட்டி வளர்த்து எல்லாம் இவர்தான்..
 
பேரனின் எல்லா செயலுக்கு பின்னாலும் அவருடைய வளர்ப்பு இருக்கும்… இருவரும் அப்படி ஒரு பாசபிணைப்பில் இருப்பார்கள்.. எங்காவது வெளியில் சென்றுவிட்டு வந்தால் முதலில் தாயை பார்த்துவிட்டு அடுத்து அவன் வருவது அப்பத்தாவிடம்தான்..
 
தந்தை அப்பத்தாவை எதாவது கோபமாக பேசினால் அவருக்கு முழு சப்போர்ட் இவன்தான்.. அப்பத்தாவுக்கு படத்துக்கு காசு கொடுப்பது, வெளியில் சென்று வரும்போது அவருக்கு பிடித்த திண்பண்டங்களை வாங்கி கொடுப்பது,
 வெற்றிலை, பாக்கு , என அவருக்கு மட்டுமில்லாமல் அக்கம் பக்கத்தில் இருக்கும் எல்லா தாத்தா,  அப்பத்தாக்களுக்கும் செல்லப்பிள்ளை இவன்தான்,,
 
வளர வளர தாயின் உடல்நிலையை நன்கு அறிந்து கொண்டவன் அப்பத்தாவின் முதுமையையும் கணக்கில் கொண்டு அவர் அறியாதது போலவே எல்லா வேலையையும் செய்து வைப்பான்..
 
தண்ணீர் பிடித்து வைப்பது, பாத்திரம் துலக்குவது, அவருக்கு பிடித்த பதார்த்தங்களை சமைப்பது அம்மாவின் துணிகளை துவைக்கும் போது அப்பாத்தாவின் உடைகளையும் துவைத்து, மடித்து வைப்பது என எதையும் யோசிக்காமல் செய்து முடிப்பான்..
அப்பத்தாவுக்கு சக்தி என்றால் உயிர் …இப்போது அவனை காணாமல் அன்னம் தண்ணீர் இறக்காமல் இருந்தார்.. இங்கு பணத்துக்கு முக்கியத்துவம் இல்லை .. பாசத்துக்குத்தான் முதலிடம்…
 
வீட்டில் ஒரு பெரியவர் இருப்பது இப்போதெல்லாம் சுமையாக தோன்றுகிறது.. ஆனால் நாமும் ஒருநாள் பெரியவர்கள் ஆவோம் என்பதை இப்போதுள்ளவர்கள மறந்து விடுகிறார்கள்..
 
சக்திக்கு நல்ல வருமானம்தான் தன் உரக்கடையில்..  அது போக விவசாயம் , வெற்றி அனுப்பும் பணம், தந்தையின் சேமிப்பு, தாத்தாவின் நிலபுலன்கள், கடையின் வாடகைகள் என நல்ல வசதிதான்.. வேலைக்கு பத்து ஆட்களை கூட வைத்துக் கொள்ளலாம்.. எனினும் எளிய வாழ்க்கையே வாழ்ந்தார்கள்..
 
இந்த இரண்டு நாட்களாக மலரின் கைக்கு இந்த வீடு வந்திருந்தது.. அவள்தான் ஒவ்வொருவரையும் பார்த்து பார்த்து கவனித்துக் கொண்டிருந்தாள்..  வெற்றியின் முகத்தை பார்க்கும்போதுதான் மலருக்கு பயமாக இருந்தது..
 
முரட்டு தனமாக தன்னை இழுத்ததில் அவன் பெரிய முரடனாக இருப்பானோ , மாமாவும் அப்பத்தாவும் எவ்வளவோ கெஞ்சி கேட்டும் முதலில் திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளாமல் இருந்ததால் மிகவும் பிடிவாதகாரனாகவும் , கோபக்காரனாகவும் இருப்பானோ என்றும் நினைத்தாள்..
 
இதுவரை அவன் முகத்தை நேருக்கு நேராக பார்க்கவில்லை .. காப்பி கொடுக்கும் போதும் சாப்பாடு போடும் போதும் குனிந்த தலை நிமிர்த்தவே இல்லை.. அவன் முகமும் இறுகிப்போய் என்ன அவன் மனதிற்குள் ஓடுகிறதென்று தெரியவில்லை..
 
மாமன் மகன் தாயை இழந்தவன் என்ற பரிதாபம் எழுந்தாலும் அவனின் குணமும் இந்த  இறுக்கமும்  அவனிடம் எதுவும் கேட்கத் தோன்றாது..
 
அனைவரும் சக்தி சக்தி என சொல்லும் போது மூத்த மாமன் மகனை நினைத்தவள் அவங்களுக்கு என்னாச்சோ என்ற பதைபதைப்பும் அவளுக்குள் இருந்தது.. என்னவோ இன்று காலையில் இருந்தே வெற்றியின் முகம் இன்னும் இறுக்கமாக இருப்பது போல, தன்னிடம் ஏதோ சொல்லவந்து பின் ஒன்றும் பேசாமல் போனது போல இருந்தது..
 
ரமலி இரண்டு நாட்கள் கழித்து தன் தாயை டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அழைத்து வந்தவள் தன் இரு அத்தைகளின் குறுகுறு பார்வையை உணர்ந்தாலும் கண்டு கொள்ளாமல் இருந்தாள்..
 
இன்னும் சில நாட்களில் சொத்து முழுவதும் தங்கள் இரு குடும்பத்தின் கைக்கு வரும் நாளுக்காக ஆசையுடன் காத்திருப்பது தெரிந்தாலும் வாயை திறந்து எதுவும் பேசவில்லை..
 
ரமலி தங்கள் மகனில் ஒருவனை கட்டிக் கொள்வாள் என்ற நம்பிக்கை இப்போது இவர்களுக்கு இல்லை… பாதி சொத்து கைக்கு வருவதே சந்தோசமாக நினைத்தனர்.. ஒன்றா இரண்டா பலகோடி ரூபாய் சொத்து..
 
தன் முகத்தையே பார்த்து கொண்டிருக்கும் தாயை பார்த்து புன்னகைத்தவள்,“என்னம்மா புதுசா பார்க்கிற மாதிரி பார்க்கிறிங்க..?”
 
அவள் கன்னத்தை தடவியவர்,” இல்லடா இன்னும் ரெண்டு நாள்தானே இருக்கு நீ என்ன முடிவு எடுத்திருக்க.?”
 
தாயின் அருகில் அமர்ந்தவள்,” நான் என்ன முடிவு எடுத்தா உங்களுக்கு சந்தோசம் கிடைக்குமோ அந்த முடிவுதான்மா எடுத்திருக்கேன்.. ?”
“அம்மு.. “அவளை ஆச்சர்யத்துடன் பார்க்க..
 
“அம்மா இப்ப ஒரு முக்கியமான வேலையா நான் ஊட்டி வரைக்கும் போற மாதிரி இருக்கு முடிஞ்சா இன்னைக்கு.. இல்ல நாளைக்கு காலையில இங்க இருப்பேன்.. வரும்போது ஒரு நல்ல நியூஸோடுதான் வருவேன்…”
 
வேலைக்காரர்களிடம் அதிக கவனத்துடன் பார்த்துக் கொள்ள சொன்னவள் தான் வரும்வரை ஒரு நர்ஸை வீட்டோடு ஏற்பாடு செய்துவிட்டுதான் ஊட்டிக்கு கிளம்பினாள்..
 
இந்த நான்கு நாட்களாக சக்தி அந்த டாக்டரை ஒருவழியாக்கிவிட்டான்… எதுவும் நியாபகம் வராமல் அவரை கேள்விமேல் கேள்வி கேட்க வக்கீல் அனைத்தையும் தான் வந்து பார்த்துக் கொள்வதாக சொல்லியிருந்ததால் டாக்டரும் ஒன்றும் சொல்லாமல் ஏதேதோ சொல்லி மழுப்பியிருந்தார்….
 
கதவு திறக்கும் சத்தம் கேட்டு டாக்டரா என நிமிர்ந்து பார்க்க வாசலில் ஒரு அழகிய பெண் இருப்பதை பார்த்தான்.. நல்ல சிவந்த நிறம் மெரூன்நிற சல்வார் போட்டு தலையை குதிரைவால் போட்டிருந்தவள்.. காதுகளில் ஏதோ வைரம் போல பளிச்சிட்டது..
 
மற்றபடி வேறு எந்த நகையும் இல்லை.. நல்ல உயரம் பார்த்தாலே பெரிய பணக்கார தோரனை… அவனுக்கு  யார் என்ற அறிமுகமற்ற பார்வை அவளையே பார்த்தபடி இருந்தான்..
 
ரமலியும் அவனைத்தான் நோட்டமிட்டபடி இருந்தாள்.. அன்று இருட்டுக்குள் உடலெல்லாம் ரத்த கரையோடு பார்த்தது.. அவன் உயரமும் உடற்கட்டும் தெரிந்ததுதான் ஆனால் முகத்தை இப்போதுதான் நன்றாக பார்த்தாள்..
 
நல்ல களையான முகம் .., தீர்க்கமான கண்கள், மீசையை முறுக்கிவிட்டு முகத்தில்  ஐந்து நாள் தாடி தலையில் கட்டுப்போட்டிருந்தாலும் அவன் பொலிவு குறையவில்லை… மாநிறம்.. ஒரு ராஜகுமாரனை போலத்தான் இருந்தான்..
 
அறைக்குள் நுழைந்தவள்,” இப்ப எப்படியிருக்கு பரவாயில்லையா..??”
 
இந்த பொண்ணு யாராயிருக்கும்.. இது கலருக்கும் தோரணைக்கும் நம்மள எப்படி தெரியும்..!! அவன் மூளைக்குள் மீண்டும் கேள்விகள் உற்பத்தி ஆக துவங்கிவிட்டன..
 
ஒன்றும் சொல்லாமல் தன்னையே பார்ப்பதை உணர்ந்தவள்.. “என்ன பார்க்கிறிங்க என்னை தெரியலையா..?”
 
அப்போதும் பேசாமல் தலையை இல்லையென ஆட்ட…. ப்பா இவன் என்ன இப்படி பார்க்கிறான்.. இதுவரை அவளை பார்க்கும் ஆண்களின் கண்கள் எப்போதும் அவள் உடலைத்தான் மொய்க்கும்..
 
முதல் முதலாக கண்ணைப்பார்த்து பேசும் ஒரு ஆண்.. சக்தியோ நம்மள ஒரு பொண்ணு இங்க கொண்டுவந்து சேர்த்துச்சுன்னு சொன்னாங்களே அதுவா இருக்குமோ நம்ம பத்தி இவங்களுக்கு எதுவும் தெரியுமா..
 
இந்த நான்கைந்து நாட்களாக சக்தி தான் யார் என்ற கேள்வியை தனக்குள்ளேயே கேட்டு கேட்டு ஒரு மாதிரி டென்சனில் இருந்தான்.. மற்றவர்கள் பேசுவது புரிகிறது.. ஆனால் மற்றது எதுவும் நியாபகத்திற்க்கு வரவில்லை..
 
அவளையே பார்த்தவன்… “என்னோட பேர் என்ன..?”
 
ரமலியோ ஐயோ இவங்க பேர் என்னவாயிருக்கும்.. அங்கிள் என்னமோ பேர் சொன்னாங்களே ம்ம்ம் அது என்ன ஹான்,” என்ன சரண் என்னை தெரியலையா..?”
 
சரணா…” சரண்..” என ஒரு முறை சொல்லிப்பார்த்தவன்..
“என்ன சரண் ரொம்ப யோசிக்கிறிங்க.. எழுந்திருங்க இன்னைக்கு நம்ம வீட்டுக்கு போறோம்..”
 
நம்ம வீட்டுக்கா அப்ப இந்த பொண்ணு நம்ம சொந்தகாரப்பொண்ணா.. தங்கச்சியா இருக்குமோ.. ஆனா இந்த பொண்ணு இருக்கிற கலருக்கு நாம கிட்டக்கூட போக முடியாது போல.. பார்த்தா ரத்தசொந்தம் மாதிரி தெரியலை..
 
 ஒருவேளை இந்த பொண்ணுக்கிட்ட நாம வேலைப்பார்க்கிறமோ யாராயிருக்கும் சக்தி தன் கேள்வி பதில்களை மனதிற்குள்ளேயே கேட்டுக் கொண்டிருக்க,
 
அவன் அருகில் சென்று அங்கிருந்த சேரில் அமர்ந்தவள்,” என்ன சரண் பார்க்கிறிங்க நாளைக்கு உங்களுக்கும் எனக்கும் கல்யாணம்..?”
சட்டென எழுந்து அமர்ந்தவன்..” க..கல்யாணமா..!!!”
 
ஆமா அவள் கைப்பையிலிருந்த தாலியை எடுத்து காட்டியவள்..” இத வாங்க போகும் போதுதான் உங்களுக்கு ஆக்ஸிடென்ட் ஆயிருச்சு..??” அவன் ஊரில் வாங்கியிருந்த அந்த தாலியை கொடுக்க அதை கையில் வாங்கியவனுக்கு ஏதோ மனதிற்குள்  சொல்லனா ஒர் உணர்வு….
 
                                              இனி…………………??????

Advertisement