Advertisement

 இணை தேடும் இதயங்கள்
                 அத்தியாயம்   –  6
 
ரமலி காரை ஊட்டிக்கு புயல் போல செலுத்திக் கொண்டிருந்தாள்.. அவ்வப்போது திரும்பி சக்தியை பார்த்தாள்..
 
சற்று முன் சக்தி மேல் காரை மோதிவிட்டு தவறு அவன் மேல் என்பதால் கோபத்தில் அவனை கண்டு கொள்ளாமல் காரை எடுத்தவள் சற்றுதூரம் சென்றுவிட்டு ஓட்ட மனதில்லாமல் மீண்டும் ரிவர்ஸில் வந்து  அவன் அருகில் நிறுத்தினாள்..
 
 காரைவிட்டு வேகமாக இறங்கி சக்திக்கு மூச்சு வருகிறதா இதயம் துடிக்கிறதா என அவன் நெஞ்சில் தன் காதை வைத்து கேட்க இதயம் துடிக்கும் ஓசை  அவளுக்கு கேட்டது.. தன் காரில் இருந்து தண்ணீரை எடுத்து அவன் முகத்தில் தெளிக்க எந்த மாற்றமும் இல்லை..
 
ஏதாவது வண்டி வருகிறதா அவர்களிடம் உதவி கேட்கலாம் என காரின் பின் கதவை திறந்து வைத்தபடி காத்திருக்க வேகமாக வந்த ஒன்றிரண்டு வண்டிகளும் அவள் கைகாட்டியதை கண்டு கொள்ளாமல் சென்றுவிட, நேரம் ஆவதை உணர்ந்து அவனை மெதுவாக தூக்க முயற்சி செய்தாள்..
 
ப்பா என்ன இவன் இரும்பு மாதிரி இருக்கான்.. அசைக்கவே முடியலையே ..ச்சே ஒருத்தர்கூட ஹெல்ப்புக்கு வரமாட்டாங்கிறாங்க..?”
 
ஒருவாறு பெரும் முயற்சி செய்து அவனை காரின் பின் சீட்டில் ஏற்றியவள், இவன் உடம்பு சரியானதும் முதல்ல இவன உடம்ப குறைக்கச் சொல்லனும் . ப்பா.. என்ன வெயிட்..!!!” வாய்விட்டு முனுமுனுத்தவள்..  காரை கிளப்ப வக்கிலிடமிருந்து போன்..
 
ம்ம் சொல்லுங்க அங்கிள்..
என்ன ரமலி டைம் ஆயிட்டு இருக்கு.. இங்க போலிஸ் உன்கிட்ட விசாரனை பண்ணிட்டுத்தான் போவேன்னு இருக்காங்க அந்த பொண்ணோட சொந்தகாரங்க வேற பிரச்சனை பண்றாங்க நீ சீக்கிரம் வாம்மா..?”
 
அங்கிள் வர்ற வழியில ஒரு பிரச்சனை..? நான் ஒரு ஆக்சிடெண்ட் பண்ணிட்டேன்..”
பதறியவர்,” யாருக்கும் என்னமும் பிரச்சனையாம்மா..? உனக்கு ஒன்னும் அடிபடலையே..?”
 
நடந்ததை சொன்னவள்,” பக்கத்தில எங்கயும் ஹாஸ்பிட்டல் இருக்கா அங்கிள் நான் வண்டியை பிரேக் பிடிச்சதால ரொம்ப போர்ஸா மோதலை.. ஆனாலும் மோதிட்டேன்.. இவனுக்கு ஒன்னும் ஆகாதுதானே அங்கிள்..?’
 
ரமலியின் கவலை குரலில் இந்த பொண்ணுக்குன்னு பிரச்சனை எங்கிருந்துதான் வருமோ  நீ எங்க இருக்க ரமலி இங்க வர எவ்வளவு நேரமாகும்..?”
தெரியலை அங்கிள் இது பைபாஸ் கொஞ்சதூரம் போனாதான் என்ன ஊர்னு தெரியும்..
சரிம்மா நீ அவர எந்த ஹாஸ்பிட்டல்லயும் சேர்க்க வேண்டாம் முடிஞ்ச அளவு சீக்கிரமா இங்க வரப்பாரு இங்க என்னோட பிரண்ட் ஹாஸ்பிட்டல் வைச்சிருக்கான்.. நான் போன்ல சொல்லிருறேன்..
 
அட்ரஸ் வாட்ஸ் அப்ல அனுப்புறேன்.. மத்த ஹாஸ்பிட்டல்ன்னா கேஸ் அது இதுன்னு பிரச்சனை ஆகும்..
 
ரமலி தன் காரின் வேகத்தை அதிகப்படுத்தியவள் புயல் போல ஓட்டத்துவங்கினாள். சாதாரணமாக கடக்க வேண்டிய தூரத்தை பாதி நேரத்தில் கடந்து அவர் அனுப்பிய அட்ரஸை வந்தடைந்தவள்  அவனை ஐசியுவில் சேர்க்கவும்தான் மூச்சே வந்தது..
 
அதற்குள் மூன்று முறை அங்கிள் போன் செய்திருக்க  தன்னை குனிந்து பார்த்தவள் அவள் உடையெங்கும் சக்தியின் ரத்தகறைகள் அங்கு ஏதாவது தேவையென்றால் தன்னை அழைக்கும் படி தன் போன் நம்பரை கொடுத்தவிட்டு பக்கத்திலிருந்த துணிக்கடையில்  வேறு உடையை வாங்கி மாற்றிக் கொண்டு தன் எஸ்டேட்டை நோக்கி காரை செலுத்தினாள்..
 
இந்த இரவு நேரத்தில சக்தியின் வீட்டில் அப்பத்தாவின் அழுகை ஊரையே சோகத்தில் ஆழ்த்தியது.. இப்படி ஒரு மாமியாரா என ஊரே மெச்சும்படி வாழ்ந்தவர் அவர் .. கீழே விழுந்து அழுது புரள மலருக்கும் அழுகை தாங்கவில்லை..
 
                  நாலு வயசாயிருக்கையில்
                   நடக்கயில வந்த சீக்கு
                 நாலு லட்சம் பணம் கொடுத்து
                    நடந்த அலச்சம் வைத்தியர
                 பணமும் செல்வாச்சு – நாங்க
                    செஞ்ச பாவம் தொலையலம்மா                         
 *                  
                               இலுமிச்சம் பண்ண
                        ஏழு லட்சம் பணம் கொடுத்து
                 இருந்த அலச்சம் வைத்தியர
                           பணமும் செலவாச்சு – நாங்க
                     செஞ்ச பாவம் தொலையலம்மா.. 
 
தனது சோகத்தை ஒப்பாரியாக வைத்துக் கொண்டிருக்க பெண்களும் அப்பத்தாக்களும் சேர்ந்து அவர்களோடு அழுது கொண்டிருந்தார்கள்..
..
சக்தியின் நண்பர்கள் இரவெல்லாம் அந்த ஊரையே ஒரு அலசு அலசிவிட்டார்கள்.. எந்த தடயமும் இல்லை.. ஐஸ்பெட்டியில் தன் தலைமகனின் ஈமைக்கிரிகைக்காக தாயின் உடல் வைக்கப்பட்டிருந்தது..
 
வெற்றிக்கு என்ன செய்ய இது மாதிரி சூழ்நிலையை அவன் எப்போதும் பார்த்ததில்லை.. ஒரே நாளில் நம்ம வாழ்க்கை தடம் புரளுமா.. அண்ணனுக்கு என்னாச்சு மூளைக்குள் ஏதோ வண்டு குடைவது போல இருந்தது..
 
தந்தையின் முகத்தை பார்க்க முடியவில்லை.. சிங்கம் போல இருந்தவர்.. தந்தை தாயின் அன்னியோன்யத்தை அறிந்தவர்கள் அவர்கள்.. சற்று நேரம் கூட விட்டுவிட்டு இருக்க மாட்டார்..
 
தாயால் அதிகம் பேச முடியாவிட்டாலும் இருவரும் மனதால் பேசிக் கொள்வது போல இருக்கும்.. பாதி நேரம் தாயின் கண்ணை வைத்தே அவர் புரிந்து நடந்து கொள்வார்..
 
ஊரே அவர்கள் வீட்டில்தான் இருந்தது.. ஆளாளுக்கு ஒரு வேலையை இழுத்து செய்து கொண்டிருந்தாலும் நொடிக்கொருதரம் பாதையைத்தான் பார்த்திருந்தார்கள்.. சக்தி வருகிறானா என்று விழிமேல் விழிவைத்து காத்திருந்தார்கள்..
 
சக்தியை பொறுத்தவரை அவன்தான் அந்த ஊருக்கு ஹீரோ போல எனலாம் ,, எந்த உதவியாயிருந்தாலும் எந்த நேரத்திலும் செய்வான்.. நண்பர்கள், அறிந்தவர் தெரிந்தவர் என எல்லாரிடத்திலும் நல்ல பேர்..
 
அதோடு அவன் தாய்க்கு செய்யும் உதவியை அறிந்தவர்கள் அவன் மேல் ஒரு மதிப்பை வைத்திருந்தனர்.. தாய்க்கு மட்டும் இல்லை எந்த பெரியவர்கள் என்ன உதவி கேட்டாலும் தட்டாமல் செய்வான்..
 
எந்த அருவருப்பும் படமாட்டான்.. பொறுமை அதிகம் முகம் சுழிக்காமல் அவன் தாய்க்கு செய்யும் உதவிகள் ஏராளம்.. பொறுப்பானவன்..
 பலநாட்கள் இயற்கை உபாதைகளை படுக்கையிலே கழிக்கும் வசந்தாவுக்கு இரவு இரண்டு, மூன்று மணியாயிருந்தாலும் எழுந்து சுத்தம் செய்து உடை மாற்றிவிடுவான்.. அவரின் சிறு முணங்கலிலே அவனுக்கு விழிப்பு வந்துவிடும்..
 
அப்படிபட்டவனுக்கு என்னானதோ ஏதானதோ என அனைவருக்கும் பதைபதைப்பு.. வெற்றியும் தனக்கு தெரிந்த வகையிலெல்லாம் முயற்சி செய்து பார்த்துவிட்டான்.. பலன்தான் பூஜ்யம்.. அப்பத்தா மருமகளுக்காகவும் சக்திக்காகவும் அழுதழுது மயங்கியிருந்தார்..
 
ரமலி எஸ்டேட்டின் உள்ளே நுழையும் போதே ஒரே கூட்டம் தொழிலாளிகள் , போலிஸ் என ஒரே சத்தமாக இருந்தது.. காரை நிறுத்தியவள் ஒருநிமிடம் கண்ணைமூடி ஒரு ஆழ்ந்த மூச்சை வெளிவிட்டவள் சட்டென கார் கதவை திறந்து இறங்க,
 
அவளின் தோற்றம், கம்பீரத்தை பார்க்கவும் அனைவரும் கப்சிப்.. ஒரு மகாராணியை போன்ற நிமிர்ந்த நடையும், அவளின் கூரான பார்வையும் அவசரத்துக்கு கிடைத்த உடைதான் இருந்தாலும் அந்த ஜீன்ஸ் டாப்பில் அப்படி ஒரு கெத்தாக இருந்தாள்..
 
அனைவரையும் ஒரு பார்வை பார்த்தவள் அங்கிருந்த மேனேஜரை கைகாட்டி அழைக்க, அவர் அருகில் வரவும் ஓங்கி ஒரு அறை கன்னத்தில் பளார் என விட்டிருந்தாள்.. எல்லாரும் இரண்டடி பின்னால் வைத்திருக்க,
 
“இந்த எஸ்டேட்ல எத்தன வருசமா வேலை பார்க்கிறிங்க..”
 
கன்னத்தில் பொறிபறந்தாலும் தன் கன்னத்தில கைவைத்த படியே,” பதினைஞ்சு வருசம் மேடம்..”
“எங்க தாத்தா காலத்தில இருந்துதானே வேலை பார்க்கிறிங்க..”
“ஆமாம் மேடம்..”
 
“அப்பல்லாம் இல்லாத பிரச்சனை எப்படி இந்த மூனுமாசத்தில வந்திச்சு அடுத்தடுத்து மூனு பொண்ணுங்க  இறந்திருக்காங்க.. இத எப்படி எங்க காதுக்கு கொண்டு வராம மறைச்சு வைச்சிருக்கிங்க..”
 
அவர் என்ன சொல்வதென்று தெரியாமல் வார்த்தைகளை மென்று முழுங்க அங்கிருந்த போலிஸுக்கும் ஆச்சர்யம்தான் இவ்வளவு நேரம் கொஞ்சம் அமைதியா இருங்கன்னு எவ்வளவு எடுத்து சொன்னோம்..
 
அப்பல்லாம் சத்தமா கத்திட்டு இந்த பொண்ணு விட்ட ஒரு அறைக்கு எல்லாம் கப்சிப்ன்னு அடங்கிருச்சுகளே.. அனைவரையும் திரும்பி பார்த்தவள்,” இன்னும் பத்துநாள்ல இது எல்லாம் என்னோட கன்ரோலுக்கு வந்திரும்..”
 
“என்மேல நம்பிக்கை இருந்தா நாளைக்கு வேலைக்கு வாங்க .. அப்படி இல்லாதவங்க இப்பவே வேலையை விட்டு போயிரலாம்.. இனி இங்க வேலை பார்க்கிற எல்லா பொண்ணுகளுக்கும் நான் தேவையான பாதுகாப்புக்கு ஏற்பாடு பண்ண சொல்றேன்..”
 
இறந்த பெண்களின் குடும்பத்தை தவிர மற்றவர்களை வெளியில் போகச் சொன்னவள் அவர்களை சற்று நேரம் காத்திருக்க சொல்லிவிட்டு போலிசிடம் சென்றாள்..
 
அங்கிருந்த சோபாவில் கால்மேல் கால்போட்டு அமர்ந்து,” ம்ம்ம் சொல்லுங்க ஸார்..”
 
“இல்ல மேடம் அந்த பொண்ணுங்க இறந்ததில எங்களுக்கு உங்க மாமா மேலயும் அவங்க பையன் மேலயும் சந்தேகம் வந்திருக்கு..??”
“அவங்க மூனு பேரும் தற்கொலை பண்ணிக்கிட்டதா சொன்னாங்க..”
“ஆமா… “அவர் ஏதோ சொல்லவர
 
“பின்ன ..சந்தேகத்தை வைச்செல்லாம் அவங்கள அரஸ்ட் பண்ண முடியாது ஸார்.. ஆதாரம் இருந்தா கொண்டுவாங்க.. நான் ஒன்னும் சொல்லாம ஒதுங்கிக்கிறேன்.. இங்க எங்க தாத்தாவுக்குன்னு ஒரு பேர் இருக்கு அத கெடுக்கிற மாதிரி யார் செஞ்சாலும் நான் விடமாட்டேன்..
 
நீங்க எல்லாத்தையும் கரெக்டா பாலோ பண்ணுங்க… என்னோட சப்போர்ட் முழுசா இருக்கு.. அந்த பொண்ணோட போஸ்மார்ட்டம் ரிப்போர்ட் என்ன சொல்லுது..
 
“ஸாரி மேடம் அந்த பொண்ணு இறக்கவும் அவங்க பேரண்ட்ஸ் போலிஸ்ல சொல்லாம அவங்களே எறிச்சிட்டாங்க.. ஆனா எப்பல்லாம் இங்க உங்க மாமாவும் அவர் பையனும் வந்து தங்குறாங்களோ அப்ப இந்த பொண்ணுங்க மூனுபேரும் ஒரு ஒருநாள் வீட்டு வேலைக்கு வந்திருக்காங்க..”
 
“ப்பச்.. என்ன ஸார் இதெல்லாம் ஒரு காரணமா.. போங்க ஸார் .. அப்படி பார்த்தா பாதிநாள் அவங்க இங்கதான் இருந்திருக்காங்க.. நான் எல்லாம் விசாரிச்சிட்டேன்.. சரியான ஆதாரத்தோட வாங்க நான் விலகிக்கிறேன்.. இல்லனா நான் உங்க மேலதிகாரிய பார்க்கிற மாதிரி ஆகிரும்…”
 
அவர்கள் ஒன்றும் சொல்லமுடியாமல் வெளியேற.. “என்ன அங்கிள் இத பேச உங்களுக்கு தெரியாதா உடனே வாவான்னு என்ன படுத்திட்டிங்க..
 உங்களால எனக்கு எவ்வளவு டென்ஷன்.. ஒரு ஆக்ஸிடென்ட் வேற..” வேலைக்காரியிடம் டீ கொண்டுவரச் சொன்னவள் பின்னால் சாய்ந்து அமர,
 
வக்கிலுக்குமே ஆச்சர்யமாகத்தான் இருந்தது.. தன்னால் சமாளிக்க முடியாமல்தானே போன் செய்து கொண்டே இருந்தோம்.. இந்த பொண்ணு ஒரு அறையில எல்லாத்தையும் சரிபண்ணிருச்சே..
 
வெளியில் நின்றிருந்த அந்த பெண்களின் பெற்றோர்களை வரச் சொன்னவள் அவர்களை முறைத்தபடி,” உங்க பொண்ணுங்க தற்கொலை பண்ணிட்டு இறந்ததா இப்ப வந்து சொல்றிங்க..பொய் சொல்றிங்கன்னு எனக்கு தெரியும்..யார் சொல்லி எல்லாம் நடக்குது எல்லாம் எனக்கு தெரியும்..??”
 
அவர்கள் வெலவெலத்து போய் நிற்க..
 
“இப்ப பேசாம இருக்கிற மாதிரி நான் எப்பவும் இருக்கமாட்டேன்.. எங்க தாத்தாவ பத்தி உங்களுக்கு தெரியும்தானே.. அவரோட பேத்தி நான் அப்ப எப்படி இருப்பேன்னு நீங்களே யோசிச்சுக்கோங்க..
இனிமேல் உங்களுக்கு இந்த எஸ்டேட்ல வேலையில்லை.. இத்தனை வருசம் வேலை பார்த்திருக்கிங்க.. “ஆளுக்கு ஐந்து லட்சம் செக் எழுதி கொடுத்தவள் வாசலை நோக்கி கைகாட்ட,
அவர்கள் வேகமாக வெளியில் சென்றிருந்தார்கள்..
வக்கில்,” என்னம்மா உங்க மாமா குடும்பத்த நீ காப்பாத்துறியா..?”
 
பெருமூச்சு விட்டவள்..” இல்ல அங்கிள் அவங்க ஒன்னும் பண்ணல… இதெல்லாம் பக்கத்து எஸ்டேட்காரங்க பண்ற வேலை.. அவங்கி கிளப்பிவிடுற புரளி.. அந்த ரெண்டு பொண்ணுகளுக்கும் மூனு மாசத்துக்கு முன்னாடி டெங்கு பீவர்..
 
இந்த பொண்ணு லவ் பெயிலியரால தற்கொலை பண்ணி இறந்திருக்கா.. இவங்களுக்கு கொஞ்சமா காச கொடுத்து அந்த ஆள் இத இப்படி திசை திருப்பி விட்டிருக்காரு.. போலிஸ்க்கும் அவங்கதான் காசு கொடுத்திருக்காங்க..
 
நான் லண்டன்ல இருந்தாலும் எல்லா நியூஸும் எனக்கு வந்துக்கிட்டே இருக்கிற மாதிரிதான் தாத்தா இங்க ஆளுகள வேலைக்கு வைச்சிருந்தாரு.??”.
 
“அப்ப ஏம்மா வரவும் அந்த மேனேஜர அடிச்ச..??”
“அதுவா அவர் சிலமாசமா எங்க மாமா குடும்பத்தோட சேர்ந்து பலலட்ச ரூபாய கையாடல் பண்ணியிருக்காரு.. அதுக்குத்தான் இது ஒரு சாம்பிள் இனிமேதான் இருக்கு அவங்களுக்கு.. ??”
 
வாய் பேசிக் கொண்டிருந்தாலும் கைகள் ஹாஸ்பிட்டலுக்கு போன் செய்து சக்தியின் உடல்நிலையை பற்றி விசாரித்தது.. இன்னும் ஐசியுவில் டாக்டர் இருப்பதாக சொல்ல வக்கிலோடு ஹாஸ்பிட்டலுக்கு கிளம்பிவிட்டாள்..
 
இவர்கள் ஹாஸ்பிட்டலுக்கு சென்ற போதுதான் டாக்டரும் வெளிவந்திருந்தார்.. அவர்களை அமரச் சொன்னவர் ,”அதிகமா பிளட் லாஸாயிருக்கு.. இப்பதான் ஸ்கேன் ரிப்போர்ட் பார்த்தேன்…
 
 பின்தலையில நல்ல அடி மூளைக்கு போற நரம்பு கொஞ்சம பாதிக்க பட்டிருக்கு.. ஆப்ரேஷன் செய்ற மாதிரி இருக்கும்.. நாளைக்கு ஆப்ரேஷன் பண்ணிறலாம்..”
 
 ரமலி ,”டாக்டர் உயிருக்கு ..”
 “நோ.. நோ பாஸிட்டிவ்வாவே நினைப்போம்.. நீங்க போய்ட்டு காலையில வாங்க இங்க ஐசியுக்கு யாரும் துணைக்கு தேவையில்லை..”
 
“நோ டாக்டர் நான் இங்கயே ஸ்டே பண்றேன் .. அவரிடம் அனுமதி வாங்கியவள்., அங்கிள் நீங்க எஸ்டேட்ல தங்கிட்டு காலையில வாங்க..??” போனை எடுத்து நாளை வருவதாக தன் தாய்க்கு தகவல் சொல்லியபடி கண்ணாடி வழியே சக்தியை பார்த்தவள் அங்கிருந்த சேரில் அமர்ந்தாள்..
 
இரவும் போய் காலையும் புலர்ந்தது.. கிரிதரனும் அவன் அக்காவும் இரவே கிளம்பிவிட்டார்கள்..” இவங்க பொணத்தை தூக்கிட்டு போகட்டும்கா நாம அப்புறம்  பஞ்சாயத்தை வைச்சிக்குவோம்.”. மலரின் தந்தை அங்கேயே ராமலிங்கத்திற்கு ஆறுதல் சொல்லிக் கொண்டு இருந்தார்..
 
அனைவருக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை.. ஊர் பெரியவர்களோ “ராமலிங்கம் எவ்வளவு நேரம்பா உன் மனைவியை இப்படியே வைச்சிருக்க முடியும் ..??
 
உனக்கே தெரியும் இது எத்தனை வருசமா படுத்த படுக்கையா கிடந்த உடம்பு இத இப்படியே போட்டு வைக்காம.. போகும்போதாவது நல்ல நேரத்தில கொண்டு போகனும்..
 
அவர் அப்படியே இறுகிப்போய் அமர்ந்திருக்க, அவர் தோளில் கைவைத்து சமாதானப் படுத்தியவர்கள், இந்த பாருப்பா நம்ம சக்தியோட மனசுக்கு எதுவும் ஆகாது.. பிள்ளைக்கு என்ன பிரச்சனையோ.. சீக்கிரமா வந்திருவான்.. வெற்றிய வைச்சு மத்த வேலைகளை பார்க்க ஆரம்பிக்கச் சொல்லு..
 
அக்கம் பக்கத்து ஊரிலிருந்து கூட்டம் வந்து கொண்டே இருந்தது… சக்தியின் நண்பர்கள் அவன் இடத்திலிருந்து எல்லா வேலையையும் செய்ய ஆரம்பித்தனர்.. முன்னால் பெரிய பந்தல் போடுவது,  குவியும் மாலைகளை ஒழுங்கு படுத்துவது
அக்கம் பக்கத்து பெண்களும் காப்பி டீ போட்டுக் கொண்டு வந்து கொடுத்தபடியே இருக்க அனைவர் முகத்திலும் ஒரு இறுக்கம் தெரிந்தது..
 
கொட்டு தப்பு சத்தம்,  அழுகை சத்தம் என ஊரே ரெண்டு பட்டுக் கொண்டிருக்க வசந்தா பிறந்த ஊரிலிருந்து பிறந்த இடத்து முறையும், அவர் திருமணம் செய்த இந்த ஊரிலிருந்து புகுந்த வீட்டு முறையும் கொண்டு வரப்பட்டது..
 
மலரின் தந்தையோ மகளை அந்த வீட்டில் திருமணம் செய்ததால் சம்பந்தி முறையும் கொண்டு வந்தார்.. பத்துமணிக்குள் அவரை சுடுகாட்டிற்க்கு தூக்க வேண்டும்..
 
வழியை வழியை பார்த்து நேரத்தை கடத்திக் கொண்டிருந்தார்கள்.. ஊரே சக்தியை எதிர்பார்த்திருக்க  அவனுக்கு காலை எட்டுமணிக்கே ஆபரேஷன் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்…
 
வெளியில் சற்று டென்ஷனில் ரமலி அமர்ந்திருக்க வக்கிலும் கொஞ்சம் ஆச்சர்யமாகத்தான் ரமலியை பார்த்திருந்தார்.. இந்த பொண்ணுக்கு என்னாச்சு எவ்வளவு பிரச்சனைகளையும் அசால்டா சமாளிக்குது.. இதுக்கு இவ்வளவு டென்சனா..
 
“ரமலி இன்னும் எட்டு நாள்தான் இருக்கு..?”
“எதுக்கு அங்கிள்..”
“சொத்து உனக்கு கைமாற.. இப்ப அந்த பிரச்சனையை எப்படி சமாளிக்க போற..?”
“பார்க்கலாம் அங்கிள்..” வாய் பேசினாலும் கவனம் ஐசியு வாசலில்தான் இருந்தது..
 
இங்கு வசந்தாவுக்கு ஒவ்வொரு முறைகளையும் வெற்றியும் மலரும்தான்  கீ கொடுத்த பொம்மைபோல மற்றவர் சொல்வதை செய்து கொண்டிருந்தார்கள்..
ஒருவரை ஒருவர் பார்க்ககூட இல்லை.. வெற்றிக்கு அவள் அருகில் இருக்கிறாளா கூட வருகிறாளா தெரியவில்லை
திருமணங்களுக்கு சில சாஸ்திரங்கள் இருப்பது போல இறப்பிற்கும் சில சாஸ்திர சம்பிரதாயங்களை இன்னும் இவ்வூர் மக்கள் கடைப்பிடித்தனர்..
அப்போதுதான் அவர்கள் ஆன்மா சாந்தி அடையும் என்பதில் ரொம்பவும் கண்டிப்பாக இருந்தார்கள்..
ஒவ்வொன்றையும் இம்மி பிசகாமல் செய்து மூத்த மகன் வெளிநாடுகளில் இருந்து வரமுடியாமல் போனால் என்னன்ன சம்பிரதாயங்களை செய்வார்களோ அதையே சக்தி வெளிநாட்டில் இருப்பது போல நினைத்து வெற்றியை செய்ய சொன்னார்கள்..
 
எல்லாம் முடிந்து கடைசியில் தூக்க போகும்போது,” மகன் மருமகள் சீதேவி இறக்க வாங்க..” என்று பெரியவர் கத்த,
 
சில பெண்கள் ,”பரவாயில்ல இந்தக்கா சீதேவி எடுக்க ஒரு மருமகளாயாச்சும் இந்த வீட்டுக்கு கொண்டுவந்தாங்களே..?” என்று முனுமுனுத்து கொண்டிருந்தார்கள்..
 
 வெற்றியும் மலரும் சேர்ந்து ஒரு பெரிய தாம்பாளத்தில் மரக்காலில் நெல் காமாட்சி விளக்கு , நவதானியங்களை சாணியில் சேர்த்து உருண்டையாக உருட்டி வைத்து அந்த தட்டை ஒருவர் கைமேல் ஒருவர் வைத்து ,
 
அந்த தட்டோடு வசந்தாவை மூன்று முறை சுற்றி வந்தவர்கள் அந்த வீட்டின் செல்வம் இறந்தவரோடு போகக்கூடாது என்றும் சீதேவி அந்த வீட்டில் இருக்க வேண்டும் என்பதற்காக வசந்தாவின் கையில் காசை வைத்து அதை மகன் மருமகள் இருவர் கையிலும் எடுத்து கொடுத்தார்கள்
 
அப்பத்தா அங்கு ஒரு சேரில் உட்கார வைக்கப்பட்டிருந்தார்.. எதிலும் பங்கெடுக்க மனதில்லை.. இருந்தாலும் இத்தனை காலம் கஷ்டப்பட்ட வசந்தாவின் ஆத்மா சாந்தி  அடைய என்னன்ன முறைகள் உள்ளதோ அனைத்தையும் சொல்லி செய்ய சொல்லிக் கொண்டிருந்தார்..
 
டாக்டர் ஆப்ரேஷன் முடித்து வெளியில் வந்தவர்,” நல்லவிதமா ஆப்ரேஷன் முடிஞ்சிருச்சு.. போய் பாருங்க இன்னும் மயக்கம் தெளியல ஒன் அவர் ஆகும் ..”
 
சக்தி மயக்கத்திலேயே இருக்க வசந்தாவின் உடலும் இந்த பூமியில் தன் அத்தியாயத்தை முடித்து கொண்டது..
 
                                                  இனி……………???????

Advertisement