Advertisement

இணை தேடும் இதயங்கள்
                            அத்தியாயம்  –  5
 
வாசலில் கார் நிற்கும் சத்தம்.. அப்பத்தாவின் பேச்சுக் குரல் சத்தமாக கேட்டு பின் அழுகையாக மாறியிருக்க , அப்பா உள்ளே ஓடிவரும் சத்தம் கேட்டது.. வெற்றி அப்படியே அமர்ந்திருக்க ராமலிங்கம் தன் மனைவியின் அருகில் வந்தவர்,
 
கண் மூடிப்படுத்திருந்த தன் மனைவியை பார்க்க அவர் மூச்சுவிடும் சத்தம் அப்படியே கீசுமூசுவென சத்தமாக கேட்டது.. எப்போதையும்விட அவர் மனைவி மூச்சுவிட மிகவும் சிரமப்படுவதை பார்த்தவர் மெதுவாக அருகில் சென்று,” வசந்தா என கன்னத்தை தொட,
 
கணவரின் குரலில் லேசாக கண்திறக்க முயல அவரால் முடியவில்லை.. பெரும் முயற்சி செய்து கண்திறந்து பார்த்தவரின் கை மெதுவாக உயர்ந்து தன் கணவரின் கண்ணீரை துடைத்தது..
 
மனைவியை பூப்போல தூக்கியவர் கை அவரை மென்மையாக அணைத்துக் கொண்டது.. அவர் தன் மனைவி மேல் உயிரையே வைத்திருந்தார்.. அவரின் அன்புதான் வசந்தாவை இத்தனை வருடங்கள் உயிரோடு வைத்திருந்ததோ..!!
 
இருவரும் மனம் ஒன்றி வாழ்ந்தவர்கள்.. மனைவி சில நாட்களாக படும் அவஸ்தையை பார்க்க முடியாமல் உள்ளுக்குள் ரத்தக்கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தார்..
 
தன் அருகில் கேட்ட மாமியாரின் பெரும் அழுகை குரலில் அவரை பார்த்தவர் அருகில் நின்ற மலரை பார்த்து  கணவரை பார்க்க அவர் கண்ணை மூடித் திறக்கவும் மெதுவாக மலரை நோக்கி கையை நீட்டினார்..
 
மலர் சத்தியமாக இப்படி ஒரு சூழ்நிலையை எதிர்பார்க்கவில்லை.. அத்தை இந்த நிலைமையில் இருப்பார் என்று அவளுக்கு தெரியாது.. இப்படி படுத்த படுக்கையாக உடலில் ஒன்றுமே இல்லை அப்படியொரு மெலிவு கைகாலெல்லாம் குச்சி குச்சியாக ..
 
மெல்ல அருகில் சென்றவள்,” அத்தை என கையை பிடிக்க லேசாக புன்னகைக்க முயன்றவர் அவள் கையை தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டார்..
 
பஸ்ஸில் வந்து கொண்டிருந்த சக்தியை பார்க்கவும் அவனுக்கு இரண்டு சீட் பின்னால் அமர்ந்திருந்த ஒருவன் தன் நண்பனுக்கு போன் செய்தான்..
 
டேய் கபிலா நம்மள கபடில தோற்கடிச்சான்ல அந்த சக்திபய மட்டும் அவனுக கூட்டாளி யாருமே இல்லாம தனியா பஸ்ஸில வர்றாண்டா இன்னைக்கு நல்ல சான்ஸ்டா அவன ஒருவழியாக்க..”
 
அந்த பக்கம் சிறிது யோசித்தவன்,” அப்படியா சொல்ற.. அந்த பஸ்ல வேற யாரும் அவங்க ஊரக்காரங்க இருக்காங்களா பாரு..”
பஸ்ஸை நோட்டமிட்டவன் எண்ணி பத்தே பேர் அதில் சக்தியை தவிர மற்றவர்கள் அனைவரும் தங்கள் ஊர்காரர்கள்,” இல்லடா அவன் மட்டும்தான் இருக்கான்..
அப்ப ரொம்ப நல்லது.. இப்ப பஸ் எங்க வருது அவங்க ஊர் வர எவ்வளவு நேரமாகும்?”
டேய் இன்னும் இருபது நிமிசத்தில அவங்க ஊர் வந்திரும்..
 
அப்ப ஓகே நாங்க வந்திருறோம்.. நீ பஸ்ஸை விட்டு இறங்க வேணாம்.. அவனுக்கு சந்தேகம் வந்திரும் .. நீ ஊருக்கு போயிரு நம்ம மேல எந்த சந்தேகமும் யாருக்கும் வரக்கூடாது.. எல்லாத்தையும் நாங்க பார்த்துக்கிறோம்..
 
பக்கத்தூரில் இருந்த கபிலனுக்கு சக்தி ஊரில பெண் பார்க்க அந்த மணப்பெண்ணோ இவனை கல்யாணம் செய்துக் கொள்ள மாட்டேன் என சொல்லி கபடியில் தோற்றதை சொல்லி அசிங்கப்படுத்த அன்றிலிருந்து அந்த கபடி குழு தலைவனாயிருந்த சக்தியை ஒருவழியாக்க நேரம் பார்த்திருந்தார்கள்..
 
கண்ணை மூடி பஸ்ஸில் அமர்ந்திருந்த சக்திக்கு மனதில் ஏதோ ஒரு உணர்வு.. பயமா , மகிழ்ச்சியா , குழப்பமா, சோகமா ,கவலையா என்னவென்று பகுத்தறிய முடியவில்லை.. இதயம் வேகமாக துடிப்பது போல இருந்தது..
 
யாருக்காச்சும் என்னமாவது பிரச்சனை வந்திருக்குமா.. அடுத்த ஸ்டாப் இறங்கனும் தன் போனை எடுத்து பார்க்க ஜார்ஜ் இல்லாமல் ஸ்விட்ச் ஆப் ஆகியிருந்தது.. அதை எடுத்து மீண்டும் ஆன் செய்து பார்க்க சுத்தமாக ஆனாகவில்லை..
 
யாரிடமாவது போனை கேட்போமா தன்னை சுற்றி பார்க்க பாதிபேர் குடிமகன்களாக முழுபோதையில் இருந்தார்கள்.. மற்றவர்கள் தூங்கி கொண்டிருக்க,
 
ம்ம்ம் ஊர்வரப்போகுது வீட்டுக்கே போயிருவோம்.. கண்டக்டர் விசில் கொடுக்க அந்த பைபாஸில் சக்தி இறங்கினான்.. பஸ் வேகமெடுத்து அடுத்த ஊர் நோக்கிச் செல்ல இருட்டு கரும்கும்மென்று இருந்தது..
 
மணி பார்க்கக்கூட முடியவில்லை.. அரை கிலோமீட்டர் நடந்தால் அவர்கள் ஊர் விளக்கு ரோடுவரும் கிளைபாதை பிரிந்து ஊருக்குள் செல்ல வேண்டும் .. வேட்டியை மடித்து கட்டியவன் தன் நடையை துரிதபடுத்த பின்னால் தடதடவென சத்தம் திரும்பி பார்ப்பதற்குள்,
 
 பெரிய உருட்டுக் கட்டையை வைத்து யாரோ பின் மண்டையில் அடித்திருந்தார்கள்.. எதிர்பார்க்காதவன் தடுமாறி பின்னால் சாய மறுஅடி அடிப்பதற்குள் இருட்டில் கையை துலாவி அந்த கட்டையை பிடித்திருந்தான்..
 
தலை கிண்ணென்று இருந்தது.. கண்ணைக்கட்டி மயக்கம் வருவது போல இருக்க கட்டையை பிடித்தபடி தன்னை அடிக்க வந்தவனை ஓங்கி ஒரு மிதி மிதிக்க அவன் தூரப்போய் விழுந்தான்..
 
இருட்டில் அவனுக்கு ஒன்றும் தெரியவில்லை.. சக்தி வெள்ளை சட்டை போட்டிருந்ததால் வெள்ளை உருவம் போல் நிற்பது அந்த இருட்டிலும் அவர்களுக்கு தெரிந்தது..
 
அனைவரும் தன் கைகளில் இருந்த கட்டைகளால் அவனை தாக்க ,ஆனால் சக்திக்கு அவர்கள் எங்கு நின்று தன்னை தாக்குகிறார்கள் என்பதே தெரியாமல் ஒரு குத்துமதிப்பாக  அவர்களை தடுத்துக் கொண்டிருந்தான்..
 கபிலனோ இந்த சக்தியோட அழகு , வீரம் , கம்பீரத்தை பத்திதானே அந்த பொண்ணு புகழ்ந்திச்சு அவன இல்லாம ஆக்கிட்டா….அவனுக்குள் ஒரு வெறி வந்திருந்தது..
 
அவர்கள் ஐந்தாறு பேர் இவன் ஒரு ஆள் அவர்களோடு முடிந்த அளவு போராடியவன் தன் கையில் அகப்பட்டவர்களை  அடித்துக் கொண்டிருந்தான்..அவன் பின்தலையில் மீண்டும் அடித்தவர்கள்,
 
தூரத்தில் எங்கோ வெளிச்சப்புள்ளி தெரிய,” டேய் வாங்க ஏதோ வண்டி வருது ஓடிருவோம்..??” அடித்தவர்கள் ஓட சக்தியால் நிற்க முடியவில்லை.. மயக்கம் வருவது போல இருந்தது..
 தன்னை நோக்கிவரும் காரை கையை காட்டி உதவிக் கேட்கலாம் என நினைத்து கையை காட்ட  காரை புயல் போல ஓட்டி வந்த ரமலி திடிரென சக்தி கையை காட்டியபடி குறுக்கே வரவும் இதை எதிர்பார்க்காமல் காரை பிரேக் இட்டு நிறுத்த…
 
கிரீச்ச்ச்ச்… என்ற சத்தத்தில் வண்டி நிற்பதற்குள் அவன் மேல் மோதி தூக்கி வீசப்பட்டிருந்தான்… புல்சிட்.. ஸ்கௌண்ட்ரல்.”. காரின் சீட்டை ஓங்கி ஒரு குத்துவிட்டவள்,
 எவன் இப்படி இருட்டுக்குள்ள பைபாஸ்ல கைய காட்டுறான்..?”
வண்டியை நிறுத்தி ஹெட்லைட் வெளிச்சத்தில் கண்ணாடி வழியே பார்க்க ரத்த வெள்ளத்தில் சக்தி மயங்கியிருந்தான்.. அவன் மேலதானே தப்பு.. ஸ்டுப்பிட்..” திட்டியவள் அவனை கண்டு கொள்ளாமல் காரை கிளப்பியிருந்தாள்..
 
அங்கு டாக்டர் வசந்தாவை பரிசோதித்தவர்.. இன்னும் பத்து இருபது நிமிசம்தான்.. அதுக்குள்ள அவங்ககிட்ட என்னமும் பேசறதா இருந்த பேசிக்கோங்க..” நேரத்தை குறித்துவிட்டு செல்ல,
 
குடும்பத்தினருக்கு இதயம் துடிக்கும் ஓசை அவர்களுக்கே கேட்டது.. வெற்றி அப்படியே தன் தாயின் அருகில் அவர் காலை பிடித்துக் கொண்டு அமர்ந்திருக்க யாராலும் யாரையும் நிமிர்ந்து பார்க்கவே முடியவில்லை..
 
வசந்தா மெதுவாக கண்விழித்தவர் பேசமுடியாமல் தன்னை சுற்றி பார்வையை ஓட்ட தன் குடும்பத்தில் சக்தியை மட்டும் காணவில்லை… தன் கணவரின் கையை பிடித்தவர் மூச்சு இரைத்தலுடன்,” ச..ச..சக்…சக்தி..” ஒரு வழியாக மகன் பேரை சொல்லிமுடிக்க,
 
ராமலிங்கம் வெளியில் திரும்பி பார்த்தார்.. சக்தியின் அனைத்து நண்பர்களும் நின்றிருக்க அவர் பார்வையை உணர்ந்து ,”அப்பா சக்தி போன் ஸ்விட்ச் ஆப்ன்னு வருதுப்பா.. நம்ம பசங்களும் விளக்கு ரோடுவரைக்கும் போய் பார்த்துட்டு வந்திட்டாங்க.. சக்திய காணோம்..
ராமலிங்கம் கவலையுடன் ,”அந்த பஸ்லதானே வர்றதா சொன்னான்..
ஆமாப்பா அந்த பஸ்லதான் வந்திருக்கான்.. இப்பத்தான் கண்டக்டர்க்கிட்ட போன்ல கேட்டேன்.. விளக்கு ரோட்ல இறங்கியிருக்கான்..
ஆனா எங்க போனான் தெரியலை பத்து பேர் தேடிப் போயிருக்காங்கப்பா.. அவர்கள் குரலிலும் கவலையே தொனித்தது.. நண்பனின் பிரச்சனை தங்களின் பிரச்சனையும் தானே..
 
வசந்தா தன் மாமியாரை பார்க்க அப்பத்தா அப்படியே மனமுடைந்து அழுது கொண்டிருந்தார்..வசந்தாவுக்கு அவர் ஒரு தெய்வமாகவே தெரிந்தார்.. தான் திருமணமாகி வந்த இத்தனை வருடங்களில் பெற்ற தாய்கூட செய்ய யோசிக்கும் அனைத்து உதவிகளையும் அவர் செய்திருந்தார்..
 
இந்த குடும்பத்தின் அச்சாணியே அவர்தான்.. அவரை இப்படி சோர்ந்து போகவிடக்கூடாது..
 
மெதுவாக அவரை நோக்கி கைகாட்டியவர் தன் கணவரை பார்க்கவும் அப்பத்தாவை தவிர மற்றவர்கள் அனைவரும் வெளியில் வந்திருந்தனர்.. மெல்ல மருமகளிடம் வந்தவர் அவர் தலையை தன் மடியில் வைக்க.
 
அ… அத்.. அத்தை.. நா..நான் க..கண்..கண்ணை மூ..மூடுற..துக்குள்..ள இந்..த.. வீட்..டுக்.கு  ம..ருமகள… பா..பார்க்..பார்க்கனும்..
வசந்தாவின் நெஞ்சை நீவிவிட்டவர்,” நீ கொஞ்சம் அமைதியா இருத்தா.. சக்தி இன்னும் வரலை அவனுக்காகத்தான் காத்துக்கிட்டு இருக்கோம்.. பாரு உன் மருமகளக்கூட கூட்டிட்டு வந்திட்டோம்.. இவன இன்னும் காணலையேத்தா… ?”அவர் சக்திக்காக கவலைப்பட,
 
அ..அத் ..தை.. ந..ம்ம… வெ..வெற்..வெற்றிக்கு.. ம..மல..மலர…!!” பேசமுடியாமல் கைகளால் கல்யாணம் என சொல்ல,
தன் நெஞ்சி கைவைத்தவர் அதிர்ச்சியாகி,” என்னத்தா சொல்ற வெற்றியா..!! அவனுக்கா..!! நம்ம சக்திதானே மூத்தவன்.. இவனுக்கு ரெண்டு வருசம் போகட்டும்த்தா.. நீ பேசாம இரு.. இப்ப சக்தி வந்திருவான்..
 
தன் தலையை அசைத்தவர் அவரை கையெடுத்து கும்பிட்டு,” இ..இல்லத்தை.. ச..சக்தி… உ..உங்கள வி..ட்டு.. எங்க…யும்.. போ..க மா..ட்டா..ன்… ..இ..வன்.. நான்.. இ..ருக்..கும்.. போதே ..வர..மா..ட்டான்.. .நா..ன் செ..த்தா..??”பேசமுடியாமல் தவித்தவருக்கு இன்னும் ஒரு மாதிரி இழுக்க ,
 
அதற்கு மேல் தன் மருமகள் படும் வேதனையை பொறுக்க முடியாமல் அவளது கடைசி ஆசையாவது நிறைவேறட்டும் என நினைத்து தன் மகனை அழைத்து மகனின் மடியில் மருமகள் தலையை வைத்தவர் உள் பூஜை அறைக்குள் செல்ல,
 
கணவரின் மடியில் தலை இருந்தாலும் பெரிய மகனை தேடிய தாய் மனம் அங்கு மாட்டப்பட்டிருந்த சக்தியின் பெரிய புகைப்படத்தையே பார்த்துக் கொண்டிருந்தது.. அதுவரை அண்ணனின் போனுக்கு முயற்சி செய்து ஓய்ந்தவன்,
தாயின் பார்வையை உணர்ந்து அந்த படத்தை கொண்டுவந்து அன்னையின் கையருகே வைத்தான்.. அதற்குள் அப்பத்தா ஒரு மஞ்சள் கயிற்றில் மஞ்சளை கட்டிக் கொண்டு வர வெளியில் கிரிதரனின் குரலும் அவன் அக்காவின் குரலும் சத்தமாக கேட்டது..
 
சத்தமான பேச்சுக்குரல்கள் அந்த இடமே கலவரமாக மாறிக் கொண்டிருக்க, அப்பத்தா ஓடிப்போய் கதவடைத்தவர் அந்த தாலிக்கயிறை கொண்டு வந்து மருமகளிடம் கொடுக்க, அதுவரை அத்தையின் நிலையை நினைத்து அழுது கொண்டிருந்த மலர் வெளியில் சித்தியின் குரல் கேட்கவும் அவள் கால் தன்னை அறியாமல் அம்மாச்சியிடம் வந்திருந்தது..
 
வெற்றியை கண்ணால் அழைத்தவர் தன் கையிலிருந்த தாலிகயிறை அவன் கையில் கொடுக்க அவன் வாங்கவே இல்லை.. முதலில் அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.., நம்ம கையில எதுக்கு..?? அம்மா நம்மள சக்தின்னு நினைச்சிட்டாங்களா..
 
அம்மா நான் வெற்றிம்மா..?” ராமலிங்கத்துக்குமே ஒன்றும் புரியவில்லை..
 
கண்ணை மூடித்திறந்தவர் மீண்டும் இரும ஆரம்பிக்க கண்களெல்லாம் மெல்ல உள்ளே போனது போல தெரிந்தது.. கையை இறக்காமல் மகன் பக்கமே நீட்டியபடி இருக்க அப்பத்தாதான் மருமகளின் விருப்பத்தை மகனிடமும் பேரனிடமும் கூறினார்..
 
அங்கு வெளியில் கதவை தட்டும் சத்தமும் அனைவரின் பேச்சுக்குரலும் ஓங்கி கேட்டது..
ராமலிங்கமும் மனைவின் விருப்பத்தை உணர்ந்து வெற்றியிடம் தாலிக் கட்டச் சொல்ல,  இப்போது வெளியில் போனால் சக்தி இல்லாமல் திருமணமும் நடக்காது.. அதோடு அவர்களோடு மலரை கண்டிப்பாக அனுப்பி வைக்க நேரிடும் என்பதையும் புரிந்து கொண்டு மகனை அவசரப்படுத்த,
 
மகன் பிடிவாதமாக தாலியை கையில் வாங்கவே இல்லை.. முடியாதுப்பா நான் இன்னும் மூனுமாசத்துல வெளிநாடு போறேன்.. என்னால முடியாது..??”
 
மலருக்கு தன் நிலைமையை நினைத்து தனக்கே பிடிக்கவில்லை.. நாம என்ன கடையில் விக்கிற துணியா வேண்டாம் வேண்டாம்னு ஒதுக்க.. ஒரு தாய் இல்லைன்னா அந்த பொண்ணுக்கு இந்த நிலைமையா.!!பேசா மடந்தையாகிப் போனாள்..
 
அப்பத்தாவும் அப்பாவும் ஏதேதோ சொல்லி அவன் மனதை மாற்ற முயற்சி செய்ய ம்கூம் ஒரு பலனும் இல்லை..சொல்லி சொல்லி பார்த்த வெற்றியின் அப்பாவுக்கு கொஞ்சம் கொஞ்சமாக கோபம் வர சத்தமும் உயர்ந்து கொண்டிருந்தது.. அப்பத்தாவும் கெஞ்சிக் கொண்டிருந்தார்..
 
வெற்றி மட்டும் தன் பிடிவாதத்தை விடவே இல்லை.. வசந்தா தன் மகனை பார்த்து ஒன்றும் பேசமுடியாமல் அவன் பிடிவாதத்தை உணர்ந்து வீட்டை இந்த முதியவர் கையில் விட்டு போறோமே.. மருமகள்னு ஒருத்தி இந்த வீட்டுக்கு வரமாட்டாளா.. தன் மகன் சக்தியை நினைத்து  கண்களில் நிராசையோடு கண்ணை மூடி தன் ஆசையை விழுங்க கண்ணில் இருந்து நீர் கரகரவென ஊற்றியது..
 அப்பத்தா பேரனென்றும் பார்க்காமல் அவனிடம் மருமகளின் கடைசி ஆசையை நிறைவேற்றும்படி கையெடுத்து கும்பிடப்போனார்.. ராமலிங்கத்திற்கோ தன் மனைவியை பார்த்து வெற்றியின் மேல் கொலைவெறியே வந்திருந்தது..
 
வசந்தாவிற்கோ அதற்கு மேல் முடியாமல் ஒரு மாதிரி இழுக்க ஆரம்பித்துவிட்டது.. ஆனால் அவர் கையை மட்டும் இறக்காமல் இருக்க அவர் நிலையை உணர்ந்து,” ஐயோ என பதறியவன் தாயின் கையில் இருந்த தாலியை சட்டென வாங்கி மலர் முகத்தை  நிமிர்ந்து கூட பார்க்காமல் அவள் கையை பிடித்து தன் புறம் இழுத்தான்..
 
 அவன் இப்படி திடிரென இழுப்பான் என நினைக்காதவள் தடுமாறி அவன் மேலேயே மோத, அவளை பிடித்து நிறுத்தியவன் தாயின் முகத்தை பார்த்தபடியே அவள் கழுத்தில் மூன்று முடிச்சிட்டான்..
 
கண்ணீரோடு பார்த்திருந்த வசந்தாவின் கண்களில் ஒரு ஒளி..!! மெல்ல சக்தியின் போட்டோவை பார்த்தபடி அவன் முகத்தை தடவ அவர் உயிர் பிரிந்திருந்தது.. அப்படியே அனைவரும் ஸ்தம்பித்து நிற்க, அப்பத்தாதான்  பெரும்குரலெடுத்து தன் அழுகையை தொடங்கியிருந்தார்..
 
 அப்பத்தாவின் அழுகுரலில் அனைவரின் பதட்ட குரலும் கேட்க கதவும் உடைக்கப்படுவது போல தட்டப்பட மெல்ல எழுந்த ராமலிங்கம் கதவை திறந்துவிட்டார்..உள்ளே ஓடிவந்த பெண்கள் அனைவரும் அப்பத்தாவையும் மலரையும் கட்டிக் கொண்டு அழ,
 
 கிரிதரனும் அவன் அக்காவும் மலரின் கழுத்தில் இருந்த தாலியை பார்க்கவும் அதிர்ச்சியில் சிலையாய் நின்றிருந்தனர்..மலரின் அப்பா இப்படி ஒரு சூழ்நிலையை எதிர்பார்க்கவில்லை..
 
தன் தாயின் உயிர் போனதுகூட தெரியாத சக்தியோ தன் வாழ்க்கையே மாறியது கூட தெரியாமல் மயக்கத்தில் உணர்விழந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில்..?? இந்த கார் பயணம் தன் வாழ்க்கையையே மாற்றப்போவது தெரியாமல் மயக்கமாகியிருந்தான்.. பின்சீட்டில் படுத்திருந்த சக்தியை திரும்பி பார்த்த ரமலி முன்பைவிட காரை வேகப்படுத்தினாள்..
 
இருவரும் ஒருவரை ஒருவர் அறியாமல், ஊர் தெரியாமல், பேர் தெரியாமல் ஊட்டியை நோக்கி தங்கள் பயணத்தை துவங்கியிருந்தனர்..
 
                                                இனி……………………???????

Advertisement