Advertisement

இணை தேடும் இதயங்கள்
                                   அத்தியாயம்  –   3
 
                                                                            “அய்யய்யயோ
                                                         ஆனந்தமே நெஞ்சுக்குள்ளே
                                                   ஆரம்பமே நூறு கோடி வானவில்
                                                                   மாறி மாறி சேருதே
                                                                காதல் போடும் தூறலில்
                                                                தேகம் மூழ்கி போகுதே
                                                                      ஏனோ ஒரு ஆசை
                                                                  வா வா கதை பேச…”
 
  இந்த பாடலை சீட்டி அடித்தபடி வெற்றி தன் தலையை கண்ணாடியை பார்த்து வாரிக்கொண்டிருக்க அதை பார்த்த அவன் ரூம்மேட் மூவருக்கும் கடுப்பாக இருந்தது.. வெற்றிவேல் களையான முகம் , கம்பீரமானவன், எப்போதும் முகத்தில் புன்னகை இருக்கும்.. பார்த்ததுமே எளிதாக பழகத்தோன்றுபவன்..
 
பொறுமைதான் சற்று குறைவு..! தன் தந்தை, அண்ணனை போல நிலத்தில் வேலை செய்ய விரும்பாமல் பட்டணத்தில் இருந்தான்….முக்கியமானது பிடிவாதகாரன், ஒன்றை நினைத்தால் அதையே செய்யவேண்டும் என்று எண்ணிக் கொண்டிருப்பவன் அதனால்தான் தாய் ,தந்தை இருவரையும் அடிக்கடி சென்று பார்த்தால் அங்கேயே இருக்க வைத்து விடுவார்களோ என்று நினைத்துதான் அடிக்கடி செல்வதில்லை..
 
அவன் முகத்தில் இருந்த புன்னகையை பார்த்த அவன் நண்பர்கள், டேய் ஆஸ்திரேலியா போறேன்னு ஓவரா ஆடுற.. உன் காலு தரையிலயே நிற்கல, வானத்தில பறக்குது.” பல்லை கடித்தபடி அவர்கள் அவனை முறைக்க,
 
ஹாஹாஹாஹா என்னங்கடா எங்கயோ வயிறு புகையிற வாசம் அடிக்கிது..” தன் மூக்கிற்கு நேராக கையை வைத்து விரட்டியவன்.. இந்த ப்ராஜக்ட்ல உங்க பேரெல்லாம் இல்லைன்னு காண்டு அது குறையிறதுக்காகத்தானேடா என் செலவுல பார்ட்டி எல்லாம் வைச்சேன். அப்புறமும் புகைஞ்சா என்னடா அர்த்தம்..” மீண்டும் ஒரு பாடலை பாடப் போனவனை மூவரும் அவன் வாயை பொத்தி கட்டிலில் தூக்கிபோட்டு அவனோடு உருள ஆரம்பித்தார்கள்..
 
அங்கு வள்ளி அப்பத்தா தன் மகனை திட்டிக் கொண்டிருந்தார்.. ஏண்டா அந்த எடுபட்ட சிறுக்கி என் பேத்தியை கண்ட கழிசடைக்கும் கட்டிக் கொடுக்க பாக்குறா தெரிஞ்சிருந்தும் நீ பேசாம வந்திருக்க…? ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரிய விரட்டுச்சாம் அதுமாதிரி ஒண்ட வந்தவ என் பேத்திக்கு மாப்பிள்ளை பார்க்கிறாளா அதுவும் அந்த குடிகார மட்டைக்கு என்ன திமிரு இருக்கனும்..!!”
 
அவர் மகன் ராமலிங்கமோ தன் மீசையை நீவி விட்டவர் ,ஆத்தா நீங்க ஏன் கவலை படுறிங்க… என் தங்கச்சி மக கழுத்துல எவனும் தாலிகட்ட முடியாது.. எல்லாத்துக்கும் நேத்தே ஆளை வைச்சிட்டுதான் வந்தேன்.. அங்க என்ன நடந்தாலும் நமக்கு சேதி வந்திரும் .. இந்த வீட்டுக்கு மலருதான் மருமக நான் போய் ஊர்தலைவரை பார்த்துட்டு வர்றேன்...அவர் வெளியே கிளம்பிச் செல்ல,
 
உள்ளே தன் தாய்க்கு மருந்து கொடுத்துவிட்டு தன் உரக்கடைக்கு கிளம்பி வெளியில் வந்த சக்தி வெளியில் அப்பத்தா தன் கன்னத்தில் கைவைத்து அமைதியாக உட்கார்ந்திருக்கவும்,
 
அவரிடம் வம்பிழுக்க எண்ணி,” என்ன அப்பத்தா காலையிலே வேலை இல்லையா சும்மா ஹாயா உக்கார்ந்திருக்க.?”
அவனை பார்த்து கழுத்தை வெட்டியவர் மறுபுறம் திரும்பி அமர அவர் கன்னத்தை பிடித்து தன் புறம் திருப்பியவன் ,”என்ன பியூட்டி ரொம்ப கோபமா இருக்கியா.?”
 
அவன் கையை தட்டிவிட்டவர் ,”டேய் நீயெல்லாம் கபடி விளையாடி ஜெயிச்சா மட்டும் போதாதுடா..!!! உன்ற மொறப்பொண்ண வேற எவனோ கட்டிக்க போறேன்னு சொல்லிட்டு திரியிறானாம்.. நீ போய் அவன தூக்கி போட்டு ரெண்டு மிதி மிதிச்சுட்டு மலர அப்படியே குதிரையில வைச்சு தூக்கிட்டு வருவானா இந்த கிழவிகூட வம்பிழுத்துட்டு இருக்கான்..!! எங்க எம்ஜிஆரப்பாரு எப்ப எந்த பொண்ணுக்கு பிரச்சனை வந்தாலும் அங்க பறந்து வருவாரு நீயும் இருக்கியே..” தன் முட்டுவாயை தோள்ப்பட்டையில் இடித்துக் கொள்ள,
 
சக்திக்கு வாய் கொள்ளாச் சிரிப்பு ,”மொறப்பொண்ணா யாரு? அந்த அரைப்படி உழக்கா இது உனக்கே ஓவராத் தெரியல? அவள நான் தன் கையை காட்டி  இத்துணூண்டா இருக்கும் போது பார்த்தது.. இப்ப அவ எப்படி குண்டோதரி மண்டோதரி மாதிரி இருக்காளோ.. அப்புறம் என்ன சொன்ன குதிரையிலா.. அந்த குதிரை பாவம் அவள பார்க்கவுமே செத்துபோகும்..
 
 நீ எம்ஜிஆர் படம் பார்த்து ரொம்ப கெட்டுப்போயிட்ட அப்பத்தா.. எப்ப பார்த்தாலும் எம்ஜிஆர் அப்புடி செஞ்சாரு, இப்புடி செஞ்சாருன்னு இதுக்கெல்லாம்  நீ வேற ஆளப்பாரு.. போ எனக்கு அவளெல்லாம் வேண்டாம்… நான் வேற பொண்ண பார்த்துத்தான் கட்டப்போறேன்..
 
அடேய் அடேய் அப்புறம் என் வாயில நல்லா வந்திரும்பாரு… அவ இந்த வீட்டு மகாலெட்சுமிடா, என் மக மாதிரி சும்மா தேவதை கணக்கா இருப்பா.. உன் அப்பனுக்கு இருக்கிற துடிப்புக்கூட உனக்கு இல்லையே…தன் கன்னத்தில் கைவைக்க,
 
அப்ப ஒரு பிளான் அப்பத்தா.??”
அவன் புறம் திரும்பி அமர்ந்தவர் ,”என்னடா..?” தன் பேரனை கூர்மையாக பார்த்தவரிடம்,
 உனக்கென்ன அந்த மலருப்புள்ள இந்த வீட்டுக்கு மருமகளா வரணும்? நானும் கல்யாணம் பண்ணிக்கனும் அதானே..? நீ உன்ற மகன வேணா உன் பேத்திய கட்டிக்கச் சொல்லு… நான் வேணா போனா போகுது உன்னை கட்டிக்கிறேன்..!!”
அடேய்ய்ய்ய்…..!!” அங்கு கிடந்த விளக்கமாற்றை எடுக்க போக அவன் தன் வண்டியை நோக்கி ஓடினான்…
 
சக்தி மலரை சிறு வயதில் பார்த்தது.. அத்தை இறந்தபிறகு அவளை பார்த்த நியாபகம் இல்லை.. அவளை பற்றி ஒன்றும் தெரியாவிட்டாலும், பார்க்காவிட்டாலும் அத்தை மகள் என்ற பாசமும் அன்பும் உண்டு.. அதிலும் அவள்  சித்தியிடம் படும்பாடு தெரிந்து திருமணம் செய்து இங்கு அவளை நன்றாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இருந்தான்..
 
அவள் அழகை பற்றியெல்லாம் கவலைப்படவில்லை.. தன் அப்பத்தா, அப்பா பேச்சிற்கு மறுபேச்சு பேசமாட்டான். .மலரை திருமணம் செய்தால் தன் குடும்பத்தினரோடு ஒற்றுமையாக இருப்பாள்.. குடும்பத்தில் எந்த பிரச்சனையும் வராது ..தாயையும் பார்த்துக் கொள்வாள் என நினைத்தான்..
 
 நேற்றே தந்தை தன்னிடமும் திருமணத்தை பற்றி பேசியிருந்தார்.. எப்படியும் திடிருன்னு உனக்கு கல்யாணம் பண்ற மாதிரி இருக்கும் சக்தி..  வெற்றிக்கு போன போட்டு இந்த வாரத்துக்குள்ள வரச் சொல்லு.. இதைவிட அவன் தாய்தான் அவர் இறுதி நாட்களை எண்ணியபடி அவன் திருமணத்தை ஆவலாக எதிர்பார்த்திருந்தார்..
 
சக்தி வெற்றிக்கு போன் செய்து விபரத்தை சொல்ல அண்ணனின் திருமணம் என்றதும் மகிழ்ந்தவன்,” இன்னைக்கே லீவுக்கு அப்ளை பண்றேன்.. டேய் அப்பத்தா பேச்சக் கேட்டு அத்தமகள பார்க்காமகூட கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன்னு சொல்ற.. எதுக்கும் ஒரெட்டு போய் பொண்ணப் பார்த்திருடா..?” வெற்றி சில நேரங்களில் சக்தியை அண்ணன் என்பான் பல நேரங்களில் வாடா போடா என்றும் பேசிக் கொள்வார்கள்..
 
பின் ஏதோ நினைத்து கலகலவென சிரித்தவனின் குரலை கேட்டு சக்திக்கும் புன்னகை வந்தது.. டேய் எதுக்கு இப்ப சிரிக்கிற எனக்கு கல்யாணங்கிறது உனக்கு சிரிப்பா போச்சா..
 
அதில்லண்ணா நான் அந்த மலரை கடைசியா பார்த்தத நினைச்சு பார்த்தேன் ..அப்ப அவளுக்கு நாலு வயசிருக்குமா நம்ம அத்தை  நம்ம வீட்டுக்கு வரும்போதெல்லாம் நான்தானே தூக்கிட்டு அலைவேன்.. அப்ப அவ்வளவு குண்டா இருப்பா கீழே இறங்குடின்னு சொன்னாலும் இறங்காம அழுது அடம்பிடிச்சு என்னைத்தானே தூக்கச்சொல்லுவா.. ஒருதரம் அவள தூக்க முடியாம கீழபோட்டு விழுந்தது நியாபகத்துக்கு வருது..
 
அப்பகூட இந்த அப்பத்தா பேரன் கீழ கிட்டக்கானேன்னு தூக்காம என்னை விரட்டி விரட்டி அடிச்சுச்சே உனக்கு நியாபகம் வருதா.. இப்பவும் அப்படித்தான் இருக்க போறா இப்ப நீ தூக்க முடியாம கீழப்போட்டு அப்பத்தாக்கிட்ட அடிவாங்க போற..?”அந்த காட்சியை நினைத்து பார்த்தவனுக்கு இன்னும் இன்னும் சிரிப்பு வர அடக்க முடியவில்லை…
 
சக்தியோ,” டேய் ரொம்ப சிரிக்காத அப்புறம் நான் அப்பத்தாகிட்ட சொல்லி நம்ம ஊர்ல இருக்கிற  அருக்காணிய பிடிச்சு உனக்கு கட்டி வைக்க சொல்லிருவேன்..
 
அதெல்லாம் உன்னை மாதிரி ஏமாந்த ஆளுகிட்டத்தாண்ணா செல்லும்.. ஐயா ரேஜ்ஜே வேற.. இன்னும் ரெண்டு வருசம் மட்டும் பொருத்துக்க ஐயா வேற லெவல்ல மாறிருவேன்.. நான் வெளிநாட்டுக்கு போயிட்டு வரும்போது பாரு நல்ல வெள்ளபிகரா, ரிச்சு கேர்ளா.சும்மா நச்சுன்னு ஒரு வெளிநாட்டு பிகர கட்டி நம்மவீட்டுக்கு கூட்டிட்டு வந்து நம்ம அப்பத்தாவுக்கு போட்டியா வீட்ல சண்டை போட விடல நான் வெற்றியில்லடா..
 
இப்போது ஹாஹாஹா என்று சிரிப்பது சக்தியின் முறையாயிற்று….
என்னண்ணா…
 
இல்லடா இப்பவே என் கண்முன்னாடி ஒரு வெளிநாட்டு பிகரும் நம்ம அப்பத்தாவும் சண்டை போடுறத யோசிச்சு பார்த்தேன்… சின்னக்கவுண்டர் படத்துல மனோரமாவும் சுகன்யாவும் சண்டை போடுறது நியாபகத்துக்கு வந்திச்சு.. அப்படி அவங்க சண்டை போடும்போது நாம ரெண்டுபேரும் அங்க நிக்குற கவுண்டமணி, செந்தில் மாதிரி யோசிச்சு பார்த்தேன் …. ஹா…ஹா…ஹா… முடியலடா வயிறு வலிக்குது.” இருவரும் அரட்டை அடிக்க
…………………
அங்கு மதுரையில் ரமலிக்கு வந்த கோபத்துக்கு இரு அத்தை குடும்பத்தையும் பளார் பளார் என அறையலாமா என்ற யோசனையில் இருந்தாள்.. தாத்தா இருக்கும் போது சேர்த்திருந்த ஆட்களை எல்லாம் இரு அத்தை கணவர்களும் அவர் மகன்களும் வேலையை விட்டு விலக்கிவிட்டு தங்களுக்கு தேவையான ஆட்களை வேலைக்கு வைத்திருந்தனர்..
 
அவர்கள் உடனடியாக விபரத்தை ரமலியிடம் கூறவும் சற்று பொறுக்கச் சொன்னவள் ஒரு பதினைந்து நாட்கள் மட்டும் விடுமுறை எடுத்துக் கொண்டு மீண்டும் வேலைக்கு வரும்படி சொல்லி அனுப்பினாள்..
 
தந்தை இறந்து பதினைந்து நாட்கள் முடிந்துவிட்டது.. இன்னும் பதினைஞ்சு நாள்தானே இருக்கு என்ன பண்ண… இவளுக்கு கல்யாணத்தில் நம்பிக்கை இல்லை.. அதைவிட ஆண்கள் மேல் ஒரு வெறுப்பு .. தன் தந்தை, மாமாக்கள் அவர்கள் மகன்கள் என அனைவரும் ஒரே மாதிரி இருக்க திருமணம் என்ற வார்த்தையே கசந்தது..
 
 ஆனா இந்த பிரச்சனையை எப்படி சமாளிக்கிறது.. இந்த அத்தை மகன்கள கட்டுறதும், பாழும் கிணத்துல விழுகிறதும் ரெண்டும் ஒன்னுதான்.. அப்படி கண்டிப்பா இவனுகளத்தான் கல்யாணம் பண்ணிக்கனும்னா நாம பேசாம லண்டனுக்கே போயிரலாம் சொத்தாவது ஒன்னாவது அம்மா மட்டும் போதும்..
 
போன் வர அதை எடுத்து காதில் வைத்து இரு நிமிடம் பேசியவள் கண்ணைமூடி  கோபத்தை கட்டுப்படுத்தியபடி வாட்ஸ் அப்பில் வந்த வீடியோவை பார்த்தவள், கடும்கோபத்தில் அஞ்சு நிமிசத்தில அங்க இருப்பேன்..?” வேகமாக தன் காரை ஸ்டார்ட் செய்து அவர்கள் நடத்தும் RV மெட்ரிக்குலேஷன் பள்ளிக்கு சென்றாள்..
 வேகமாக ஆபில் ரூமிற்க்குள் நுழைந்தவள் நுழைந்த வேகத்தில் அனைவரும் அவளை பார்ப்பது தெரிந்தாலும் பளார் பளார் என மூத்த அத்தை மகன் கௌசிக்கின் கன்னத்தில் அறைய ஆரம்பித்திருந்தாள்..
 

Advertisement