Advertisement

இணை தேடும் இதயங்கள்
 
                                             அத்தியாயம்  –  24
 
சக்தியை தனியாக அழைத்த அவன் தந்தை, தம்பி இப்பத்தான் நீ ரொம்ப சூதானமா இருக்கனும்.. மருமக பொண்ணோட மாமன்காரனுக கொஞ்சம் வில்லங்கம் புடிச்சவனுங்க போல,  சொத்துகாக பிரச்சனை பண்ணுறவனுகளையெல்லாம் இவ்வளவுதூரம் வளர விடவே கூடாதுப்பா.. அதோட ரெண்டு மூனுதரம் உனக்கு குறிவைச்சதா உன் பொண்டாட்டி சொன்னுச்சு..
 
அந்த பொண்ணோட நிலையும் பாவம்தான்.. தன்னோட சொத்த அனுபவிக்கவிடாம வில்லங்கம் பண்ணுறவங்க என்ன பண்ண வேணும்னாலும் யோசிக்க மாட்டாங்க.. எப்பவும் எதிரின்னு தெரிஞ்சிட்டா அவனுகள வளரவிடக்கூடாது.. சதுரங்க ஆட்டத்தில வர்ற மாதிரி எந்த பக்கமும் போக விடாம செக் வைச்சிரனும்.. உன் கட்டுப்பாட்டுக்குள்ள கொண்டு வந்திரு..
 
நீ மட்டும்தான் அங்க வீட்ல ஆம்பள மத்தவங்களுக்கு சின்ன கீரலும் விழாம பாத்துக்கனும்.. முன்னவாவது இவங்கதான் எதிரின்னு உனக்கு தெரியாம இருந்திச்சு இப்பத்தான் கண்ணுக்கு முன்னாடி இருக்காங்களே.. ரொம்ப நாள் அவங்கள வளரவிடாம அடக்கி வைக்கனும்.. எப்பவும் உனக்கு ஒரு குடும்பம் இருக்கு நீ எங்களுக்கு எவ்வளவு முக்கியம்னு உன் மூளையில பதிஞ்சு வைச்சுக்கோ.. ஒருதரம் உன்னை தொலைச்சிட்டு நாங்கபட்ட பாடே போதும்பா..
 
உனக்கு நான் இவ்வளவு சொல்லனும்னு தேவையில்ல இருந்தாலும் சொல்றேன்.. உன் பொண்டாட்டி பார்க்கத்தான் ரொம்ப வீரமா தெரியிறா.. ஆனா மனசுக்குள்ள உனக்கு ஏதாச்சும் ஆயிருமோன்னு பயம இருந்துக்கிட்டே இருக்கு.. உனக்கும் புள்ள குட்டி ஆகுறதுக்குள்ள இந்த பிரச்சனையை சரிபண்ணு.. அந்த பொண்ணு முகத்துல எப்பவும் சந்தோசம் தெரியிற மாதிரி வைச்சிக்கோ.. என்ன சக்தி..??”
 
புரியிதுப்பா.. எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன்..” தந்தை சொன்ன உபதேசகங்களை கேட்டுக் கொண்டவன் அடுத்து என்ன செய்வதென்றும் முடிவெடுத்து கொண்டான்..
 
ஒரு நான்கைந்து நாட்கள் கழிந்திருக்கும் ராமலிங்கத்திற்கு தன் மகனை பார்க்கும் போது சிரிப்பாக இருந்தது.. வெற்றிதான் ஏதோ தேவதாஸை போல இருந்தான்.. வரவேற்பு முடிந்து ரமலி ஊருக்கு செல்லும்போது மலரையும் வற்புறுத்தி அழைத்துச் சென்றிருந்தாள்.. வர மாட்டேன் என மறுத்தவளை சக்தியும் ரேணுகாவும் மேலும் மேலும் வற்புறுத்த இவளுக்குத்தான் வேறு வழிதெரியவில்லை.. இவள் பதில் சொல்லாமல் வெற்றியையே பார்க்க,
 
அப்பத்தாத்தான், நீ வாத்தா அவன ஏன் பார்க்கிற.. போனா வந்தாத்தான உறவு வளரும்..” என வெற்றியின் முடிவை கேட்காமலே அவளை அழைத்துச் சென்றிருந்தனர்..
 
அங்கு போனதிலிருந்தும் அவளை ஊரைச்சுற்றி காட்ட, ஷாப்பிங் , அவர்களின் தொழிற்சாலைகள், பள்ளி என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்திற்கு அழைத்துச் செல்ல அங்கு வெற்றியின் நிலைதான் பரிதாபம்.. இதற்கு இடையில் அவர்களின் தொழிற்சாலைகளுக்கு அருகேயே புது ஹோட்டல்கள் திறப்பதற்கு வெற்றியிடம் ஐடியா கேட்ட அவன் தன் தந்தையை கைகாட்டியிருந்தான்..
 
அவரிடம் முதல் முடிவை கேட்டுவிட்டு சொல்ல சொல்லியிருந்ததால் அவரும் அங்கு சென்று தங்க வெற்றி மட்டும்தான் இங்கு.. இப்போதுதான் தனிமை அவனுக்கு குடும்பத்தின் அருமையை உணர்த்தியது.. மலர் இல்லாமல் வீடு வீடாகவே இல்லை.. அவள் சமையல், அவள் அருகாமை என ஏங்கவே ஆரம்பித்திருந்தான்.. பகலில் அவளோடு போனில் கூட பேசமுடியாமல் மலர் ரொம்ப பிசியாக இருக்க இரவில்தான் அவளோடு பேசமுடியும் அதிலும் அப்பத்தா போனை வாங்கி ஊர் கிழவிகள், பக்கத்துவீட்டில் மாடு கன்று போட்டது, பூனை குட்டி போட்டது என விசாரிக்க வெற்றிக்குதான் காண்டாக இருந்தது..
 
இந்த அம்மு போன அந்த பக்கம் கொண்டு வரக்கூடாதா.. இந்த அப்பத்தா இருக்கே.. எப்போதாவது மலர் மாட்டும்போது அவளிடம் திட்டி தீர்த்துவிடுவான் இல்லை முதலில் திட்டுவது போலத்தான் ஆரம்பித்து கெஞ்சி கொஞ்சி என அவளை உடனே வரச் சொல்லி கேட்க,
 
மலர் ,”ஸாரித்தான் நான் எப்படி தனியா வர்றது.. பெரியத்தானும் அக்காவும் இன்னும் ரெண்டுநாள் இருந்துட்டு போச் சொல்றாங்க.. அவங்கள மீறிக்கிட்டு நான் எப்படித்தான் வர்றது..
 
ஏய் போடி போனை கடுப்பில் கட்செய்தாலும் அவனால் மனைவி இல்லாமல் இருக்க முடியவில்லை.. அதிலும் தன் தந்தை மலரை அங்கு விட்டுவிட்டு தான் மட்டும் அங்கு வந்திருக்க மலர் வரலையா என கேட்க முடியாமல் அவர் முகத்தை முகத்தை பார்த்திருந்தான்..
 
அவர் அவர்களின் தொழிற்சாலையை பார்வையிட்டுவிட்டு வேறு வேலையாக இங்கு வந்திருக்க மகனின் முகத்தை பார்க்கவுமே தெரிந்துவிட்டது.. போனதிலிருந்து சேவிங்கூட செய்யாமல் விட்ட தாடி , தொங்கிபோன முகம் என அப்பட்டமான அவன் மனைவி இல்லா ஏக்கம் முகத்தில் தெரிய இப்போதுதான் ராமலிங்கத்திற்கு திருப்தியாக இருந்தது.. இனி இவன் மனைவி குடும்பம் என இருந்துவிடுவான் என..
 
ஹோட்டலில் இருக்கும் ரேடியோவிலிருந்து ,
 
                      “நேற்று இல்லாத மாற்றம் என்னது
                                 காற்று என் காதில் ஏதோ சொன்னது
                     இதுதான் காதல் என்பதா
                               இளமை பொங்கி விட்டதா
                    இதயம் சிந்தி விட்டதா
              சொல் மனமே
          கடவுள் இல்லை என்றேன் தாயை காணும் வரை
            கனவு இல்லை என்றேன் ஆசை தோன்றும் வரை
          காதல் பொய் என்று சொன்னேன் உன்னை காணும் வரை…
 
பாடல் ஒலித்துக் கொண்டிருக்க வெற்றியும் அந்த பாடலின் வரிகளுக்குள்ளேயே சென்றுவிட்டான்.. மாற்றம்தான் இதுக்கு பேர்தான் காதலா.. இப்போதுதான் உணர்ந்தான் தன் மனைவி மீதுள்ள காதலை.. எந்த பொண்ணுக்கிட்டயும் நம்ம மனசு இந்த அளவுக்கு போனதில்லையே.. அங்க வேலை பார்க்கும் போதெல்லாம் வெளிநாடே அவன் கனவாயிருக்க அவன் மனம் எந்த பெண்ணிடத்திலும் செல்லவில்லை.. இப்போது மலரை தவிர வேறு எதுவும் அவன் கண்ணுக்கு தெரியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்..
 
இப்போது அவனுக்கு மலர் சிறுபிள்ளையாய் இருந்த போது தன்னையே சுற்றி சுற்றி வந்தது தன்னை தூக்கச் சொன்னது, முத்தமிட்டது என எல்லாம்  நினைவுக்கு வர இப்ப நான் கண்ணுக்கு முன்னாடியிருக்கேன் இவ எல்லாத்தையும் மறந்துட்டு அங்க இருக்காளே..  நாமதானா இது.. இவள கல்யாணம் பண்றதுக்கு முன்னாடி இப்படி மாறுவோம்னு யாராச்சும் சொல்லியிருந்தா நாம சத்தியமா நம்பி இருக்க மாட்டோம்..
 
வெற்றி மலரின் நினைவிலேயே இருக்க ராமலிங்கம் போனில் சில கால்களை பேசியவர் இரவு மணி எட்டிருக்கும் ஹோட்டலை அடைக்க வேண்டியநேரம்.. வெற்றிக்கு வீட்டுக்கு செல்லவே வெறுப்பாய் இருந்தது.. ஏதோ கார் சத்தம் கேட்கவும் ராமலிங்கம் வெளியில் வர மலர் காரிலிருந்து இறங்கியிருந்தாள்..
 
மாமா..”
 
வாத்தா.. வாத்தா.. அங்க எல்லாரும் நல்லாயிருக்காங்களா..?”
நல்லாயிருக்காங்க மாமா.. அவங்க எங்க மாமா..??”வாய் பேசினாலும் கண் கணவனை தேட,
 
அவனா அந்தா உலகமே இடிஞ்சு விழுந்த மாதிரி தலையில கைவைச்சிட்டு உட்கார்ந்திருக்கானே.. போ.. வந்திட்டேன்னு சொல்லு அப்பவாச்சும் சுயநினைவுக்கு வர்றானான்னு பார்ப்போம்..
 
மாமாவின் பேச்சில் அவளுக்கு வெட்கமாக வந்தாலும் அவன் மேலிருந்த அன்பு.. தனக்கே தனக்கென்று, தன்னையே விரும்பும் ஒரு கணவன் வேகமாக வெற்றியிடம் சென்றவள் அவன் குனிந்திருந்த தலையில் தன் கையால் கோத அந்த மென்மையில் தன் நினைவுக்கு வந்து சட்டென்று நிமிர்ந்து பார்த்தவன் பார்த்தபடியே இருந்தான்..
 
அம்மு..வந்துட்டியா…?” அவள் கையை பிடித்து அப்படியே அவன் கன்னத்தில் வைத்து அழுத்த இத்தனை நாள் அவன் முகத்திலிருந்த தாடி அவள் கையை குத்தியது.. அவன் முகத்தை பார்த்தவள் ஒரு நிமிடம் அதிர்ந்துதான் போனாள்.. என்ன இப்படி இருக்காங்க ..
 
என்னாச்சுத்தான் உடம்பு சரியில்லையா.. இப்படி வாடிப்போய் இருக்கிங்க..?”
 
நல்லா கேளும்மா .. உன் புருசனுக்கு என்னமோ ஆச்சு.. அவர்களிடம் வந்தவர்  சரிப்பா நான் கிளம்புறேன்..??”
 
சற்று நிலைக்கு வந்தவன், எங்கப்பா.. கிளம்புறிங்க..?”
 
மதுரைக்குத்தான்பா.. அங்க ஹோட்டல் திறக்கிறது சம்பந்தமா கொஞ்சம் வேலையிருக்கு.. நான் வர அஞ்சாறு நாளாகும்.. நான் கிளம்புறேன் ரெண்டு பேரும் பத்தரமா இருங்க.. ஹோட்டலை பார்த்துக்கோங்க..
 
ம்ம் சரிப்பா..
 
 மலர வீட்ல விட்டுட்டு கிளம்பவா..
 
இல்லப்பா  வண்டியிலயே போய்க்கிறோம்.. அவர் அவர்களிடம் விடைபெற்று காரில் கிளம்ப, வெற்றி மலரிடம் ஒன்றும் பேசாமல் முறுக்கிக் கொண்டு ஹோட்டலை அடைப்பதற்கான வேலையை பார்த்தான்..
 
அத்தான் அத்தான் என பின்னாலே வந்தாலும் அவன் கண்டு கொள்ளவில்லை.. அதுவரை ஏதோ போல வெற்றிடமாக இருந்த அவனது மனம் இப்போதும் சில்லென பனித்துளி விழுந்தது போல, சீரியல் லைட் போட்டது போல முன்பிருந்த நிலைக்கு தலைகீழாக மாற அந்த நேரத்து இன்பத்தை அனுஅனுவாக அனுபவித்தான்.. ஒரு பெண் என்பவள் ஆணுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை அந்த நொடியில் உணர்ந்தான்.. கணவன் மனைவி மகிழ்ச்சி என்பது பணத்திலோ ,நகையிலோ, பொருளிலோ இல்லை இருவரின் அன்பில் உள்ளது என்பதை புரிந்து கொண்டான்..
 
 மனைவியின் கெஞ்சல் அவனுக்கு பிடித்திருந்தது அதை இன்னும் இன்னும் அனுபவிக்க ஆசை வர ஒன்றும் சொல்லாமல் வண்டியை கிளப்பி மலரை பார்க்க, அவனை உரசியபடி வண்டியில் ஏறியவள் இன்னும் இன்னும் நெருங்கி கையால் அவன் இடுப்பை வளைத்தபடி ,
என்னத்தான் பேசாம இருக்கிங்க..?”
அவள் நெருக்கம்  இன்னும் ஆசையை தூண்ட அதை அனுபவித்தபடி வண்டியை ஓட்டி கொண்டிருந்தான்… மலருக்குத்தான் குழப்பமாக இருந்தது என்னாச்சு அத்தானுக்கு.. அங்க இருந்தப்போ வா வான்னு சொல்லிட்டு இப்ப மூஞ்சிய தூக்கி வைச்சிட்டு இருக்காங்க.. ஒருவேலை நாம உடனே வரலைன்னு கோபமா இருக்காங்களோ அந்த இருட்டின் ஏகாந்த வேலையில் தன் கணவன் மேல் கொள்ளை ஆசை வந்திருந்தது.. தான் அங்கு இருந்தாலும் மனம் முழுதும் இங்குதான் தன் கணவனைச் சுற்றிக் கொண்டிருந்தது..
 
 
வீட்டிற்கு வந்தவர்கள் மலர் சென்று கதவை திறக்க வெற்றி வண்டியை உள்ளே வைத்தவன் கதவடைத்துவிட்டு வர மலருக்குத்தான் வெற்றியின் மௌனம் கடுப்பாக இருந்தது.. ச்சே நாம கட்டியிருக்கிற புது சேலை, வைச்சிருக்கிற மதுர மல்லி எல்லாம் வேஸ்ட்டா.. அவர் நம்மள நிமிர்ந்துகூட பார்க்கலை.. அவங்க ரசிக்கத்தான பார்த்து பார்த்து அலங்காரம் பண்ணிட்டு வந்தோம்.. அப்ப சேலை மாத்தவா வேண்டாமா அவன் குளியல் அறைக்குள் செல்வதை பார்த்தவள் ஏற்கனவே சாப்பிட்டு வந்திருந்ததால் பால் மட்டும் காய்ச்ச அடுப்படிக்குள் நுழைந்திருந்தாள்..
 

Advertisement