Advertisement

இணை தேடும் இதயங்கள்
                         அத்தியாயம்  –  21
ராமலிங்கம் தன் மகன்களின் வரவேற்பை பெரிதாகவே வைக்க எண்ணினார்.. ஊருக்கே  பத்திரிக்கை கொடுத்து விருந்தை பலமாக வைக்க வேண்டும்… நிறைய வருடங்களுக்கு பிறகு தங்கள் வீட்டில் நடக்கும் ஒரு நல்ல காரியம்.. அதை சிறப்பாக செய்ய எண்ணினார்..
 
மறுநாள் அதிகாலையில் தன் வண்டியில் அவர் ஹோட்டலை திறக்க செல்ல மலர் எழுந்து குளித்திருந்தாள்.. கையில் அடிப்பட்டிருந்ததால் சேலையை ஏனோ தானோவென்று கட்டி தலையை சீவ முடியாமல் சும்மா விரித்துவிட்டு கிளிப்பிற்குள் அடக்கி வெற்றியை எழுப்ப சென்றவள் அவனை லேசாக உலுக்கவுமே விழித்துவிட்டான்..
 
ஆச்சர்யத்துடன் பார்த்தவளை,” என்னடி லுக்கு..? உடனே முழிச்சிட்டனேன்னா..? எங்க நான் சொன்ன மாதிரி ஒரு பக்கெட் தண்ணிய என் மேல ஊத்திட்டா என்ன பண்றது..!! அதான் இரு இன்னும் பத்து நிமிசத்துல கிளம்பிருறேன்.. கிளம்பி வந்தவன் மலரை பார்த்து,
 ஒரு நிமிசம் என்ன சேலையும் ஒழுங்கா கட்டலை.. தலையும் இப்படி விரிச்சு போட்டா ஹோட்டல் சாப்பாட்டுல தலைமுடி விழ வாய்ப்பிருக்கு இங்க வா..
 
கண்ணாடிக்கு நேரே அழைத்துச்சென்றவன் அவளுக்கு தலையை அழகாக வாரி பின்னி விட்டவன்.. ஒரு துண்டை கொண்டு அவள் மேல் மூடி சேலைக்கு அழகாக மடிப்பு வைத்து பின் குத்திவிட்டான்..
மலருக்கு ஆச்சர்யம் எப்படி இதெல்லாம் தெரியும்.. நெற்றியில் குங்குமத்தை வைத்து அழகு பார்த்தவன்,” இப்பத்தான் நல்லாயிருக்க போவமா..?”
 
என்ன கண்ண சிமிட்டாம இருக்க.. ?”அவள் நெற்றியில் தன் நெற்றியால் முட்ட,
 
இ… இல்லை இதெல்லாம் உங்களுக்கு…?” அவள் இழுக்க. அவன் செய்த செயல்களில் எந்த ஒரு தவறான பார்வையோ, தொடுகையோ இல்லை..
 
கீழே குனிந்து அவள் மடிப்பை சரிசெய்தவன்,” அதுவா.. இதெல்லாம் நானும் எங்க அண்ணனும் அம்மாவுக்கு செஞ்சு பழக்கம்.. அவங்க சும்மா இருந்தாலே மூச்சு அப்படி வாங்கும்.. எந்த வேலையும் செய்ய முடியாது.. நானாவது எப்பவாவது இங்க வரும்போதுதான் இதெல்லாம் செய்வேன்…சக்திதான் அம்மாவுக்கு எல்லா வேலையும் செய்வான்.. அம்மாவால எங்களோட கொஞ்சநேரம்கூட உட்கார்ந்து பேச முடியாது.. ஆனா பார்த்துக்கிட்டே இருப்பாங்க..அவங்களுக்கு இருந்த வியாதி சின்ன வயசிலயே  பார்த்து சரி செஞ்சிருக்க வேண்டிய வியாதிதான்.. என்னவோ அம்மாவுக்கு தெம்பில்லை..
 
ஏன் நீங்க ஒரு வேலைக்காரங்கள வைச்சிருக்கலாம் தான..??”
 
ம்ம் எவ்வளவோ பேர வைச்சோம்.. இதென்னமோ தொட்டா ஒட்டிக்கிற வியாதி மாதிரிதான் வர்றவங்க எல்லாரும் டிரீட் பண்ண ஆரம்பிச்சாங்க.. அவ்வளவு அருவருப்பு பட்டாங்க எங்க அம்மாவ தொட… ?அவங்களுக்கு மருந்து கொடுக்கன்னு…?  அப்ப சக்திக்கு கொஞ்சம் விவரம் தெரியிற வயசு சூழ்நிலைய புரிஞ்சு நடந்துக்குவான்.. நான்தான் ரொம்ப அடம்பிடிப்பேன்.. எல்லா பிள்ளைகளுக்கும் அவங்கவங்க அம்மா செய்றத பார்த்து நானும் அம்மாதான் ஸ்கூல்ல விடனும்.. சோறு ஊட்டனும்னு ஒரே அழுகையா அழுவேன் என்னை பார்த்து தன்னால எதுவும் செய்ய முடியலையேன்னு அம்மா அழுவாங்க..
 
 அதோட அவங்களுக்கு ரொம்ப வீசிங் வந்திரும்.. அவங்க படுறபாட்டை பொறுக்க முடியாம அப்பா என்னை அடிபிண்ணி எடுத்திடுவாரு.. அப்பத்தாத்தான் வந்து மறிச்சு கூட்டிட்டு போவாங்க.. ஆனால் நான் நாளுக்கு நாள் ரொம்ப சேட்டை பண்ணவும் என்னை ஹாஸ்டல்ல விட்டுட்டாங்க.. ஆனா சக்தி பத்து வயசிலயிருந்தே அம்மாவ பார்த்துக்க ஆரம்பிச்சிட்டான்.. அவன மாதிரி யாராலையும் பார்த்துக்க முடியாது..
 
 ஒரு தரம் அப்பத்தாவுக்கு என்னவோ வைரஸ் காய்ச்சல் வந்து ஒரு மாசத்துக்கு மேல படுக்கையில இருந்தாங்க.. அப்ப சக்திதான் அப்பத்தாவையும் பார்த்துக்கிட்டு அம்மாவையும் பார்த்துக்கிட்டு ,அதோட வீட்டு வேலை, அவனோட படிப்புன்னு ரொம்ப கஷ்டப்பட்டான்…அதிலயிருந்துதான் அப்பாவுக்கும் அப்பத்தாவுக்கும் அவன் மேல தனிப்பிரியம்..”
ஏன் உங்க மேல அவ்வளவு பிரியம் இல்லைன்னு வருத்தமா இருக்கா..?”
 
ச்சீ ச்சீ.. அப்படியெல்லாம் இல்லை.. உண்மையிலே அண்ணன் ரொம்ப நல்லவன்.. அவனோட பொறுமையும் நல்ல மனசும் யாருக்கும் வராது.. அவங்களுக்கே அப்படி பார்த்துக்கிட்டவன் தனக்கு வரப்போற மனைவி குழந்தைகளை எப்படி வைச்சிக்குவான்.. அண்ணி ரொம்ப குடுத்து வைச்சவங்க.. அவள் கையை பிடித்து அடிப்பட்ட இடத்தை பார்த்தவன் கையில தண்ணி படலதான…??”
 
 இல்லை என தலையாட்டவும்.. அவள் கையை பிடித்தபடி,” நீ சின்ன புள்ளையா இருக்கும்போது உன்னை தூக்குவேன் பாரு அப்ப என்ன வெயிட் இருந்தியோ இப்பவும் அதே வெயிட் இருக்கியே எப்படி..?”
 
அதுவரை அத்தையை பற்றியும் சக்தியை பற்றியும் நினைத்துக் கொண்டிருந்தவள் இவனின் இந்த கேள்வியில் வெட்கத்தில் முகம் குப்பென சிவந்தது.. ச்சே என்ன பேசும்போது என்ன கேட்கிறாங்க.. ஒன்றும் பேசாமல் விலகப்போனவளை,” நில் “ என்றபடி அவளை கைகளால் தூக்க வர ஐயோ என்றபடி வெளியில் ஓடி வந்திருந்தாள்..
 
அவளால் வண்டியில் பிடித்து கொண்டு உட்கார முடியாததால் வெற்றி காரை எடுத்துவந்தவன் முன் கதவை திறந்துவிட்டு மலரை ஏறச் சொன்னான்
 
இருவரும் ஹோட்டலுக்கு வந்தவர்கள் எட்டு மணிக்கு பிறகு ஒரு டிரைவரை ஏற்பாடு செய்து ராமலிங்கத்தை காரில் அனுப்பி வைத்தவன் ஹோட்டல் வேலைகளை தன் கையில் எடுத்துக் கொண்டான்..
 
மலரை ஒரு வேலையையும் செய்யவிடவில்லை.. சும்மா மேற்பார்வை மட்டுமே அதற்கே அரைமணி நேரத்திற்கு ஒருமுறை ஜூஸ்.. ஹோட்டலில் இருப்பதால் சாப்பாட்டை ஸ்பூனில் சாப்பிட்டாள்..
 
நாட்கள் அதன் போக்கில் செல்ல சக்திக்கும் இப்போது ரமலியின் தொழில்கள் பிடிபட துவங்கியது.. எல்லாவற்றையும்விட அவனுக்கு அவர்கள் நடத்தும் பள்ளிதான் மிகவும் பிடித்தமான இடம் காலையில் இருவரும் ஒன்றாக வீட்டைவிட்டு கிளம்புபவர்கள் எல்லா தொழிலையும் பார்வையிட்டாலும் பதினோரு மணிக்கு சக்தி அந்த பள்ளிக்கு சென்றுவிடுவான் மதியம்வரை அங்குதான்.. பின் சாப்பிடும் நேரத்திற்கு இருவரும் ஒன்றாக சேர்ந்து வீட்டிற்கு கிளம்புவார்கள்.. சில நேரங்களில் வேலைகளை பிரித்துக் கொள்வதும் உண்டு..
 
ஆனால் எப்படித்தான் இருந்தாலும் அவளோடு வம்பிழுப்பதோ., கட்டி அணைப்பதோ முத்தமிடுவதோ தினமும் அதை மறக்க மாட்டான்.. நல்ல பிரண்டாக ஏற்றுக் கொள்ளும் அவள் மனது இவனின் இந்த செயல்களில்தான் கோபம் வரும்.. இதுவரை தான் பார்த்த ஆண்களைவிட இவன் வித்தியாசமானவனாக இருந்தான்..
 
அவன் இருக்கும் இடத்தில் கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது.. வீட்டில் இருந்தால் அப்பத்தாவோடும் அம்மாவோடும் ஏதாவது அரட்டையில் இருப்பான்..அப்பத்தா தன் பேரனை பற்றி தன் குடும்பத்தை பற்றி தன் மருமகளுக்கு சக்தி உதவி செய்வது  அனைத்தும் சொல்லியிருக்க  சக்தியை பார்க்கும் போது ரேணுகாவிற்கு பிரம்மிப்பாய் இருக்கும்..இப்பத்தான் இப்படி இருக்கார்னா அப்போ நினைவில்லாதப்பவும் இதே மாதிரிதான இருந்தார்.. என்ன பேச்சுதான் ரொம்ப அமைதியா இருக்கும்.. இவ்வளவு தங்கமான பையனா..!! தன் மகள் போன ஜென்மத்தில ஏதோ புண்ணியம் செய்திருக்கிறாளோ என்ற எண்ணம்தான்.. இல்லையென்றால் ஏதோ மாயமந்திரம் போல எங்கோ பிறந்து வளர்ந்தவர் எதிர்பார்க்காத இடத்தில் மாப்பிள்ளையாக வர முடியுமா..??
 
முதல்நாள்தான் கோர்ட் சூட்டில் வந்தவன் மறுநாளில் இருந்து வேட்டி சட்டைதான் அப்பத்தா கேட்டதற்கு ஏதாவது முக்கியமான மீட்டிங் வரும்போது அந்த உடைக்கு மாறிக் கொள்வதாக சொல்லியிருந்தான்.. அன்று மாலை நான்கு மணி இருக்கும் பள்ளிக்கு காலையில் சென்றவன் அதுவரை வரவே இல்லை.. மதியம் சாப்பிடவும் வராமல் இருக்கவும் அதற்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியாதவள் தங்கள் பள்ளியை நோக்கி காரை செலுத்தினாள்..
 
பள்ளிக்கு வர பள்ளி விடப்பட்டு மாணவ மாணவிகள் கிளம்பியிருந்தனர்.. அவனுடைய அறைக்குச் சென்றவள் அவனை காணாமல் மெதுவாக பள்ளியைச் சுற்றி வலம்வர அங்கு விளையாட்டு மைதானத்தில் சக்தி கபடி பிராக்டிசில் இருப்பது தெரிந்தது.. ஆங்காங்கே நின்று சில ஆசிரியைகள் சக்தியை பார்த்துக் கொண்டிருக்க இவங்க எல்லாம் ஸ்கூல்விட்டும் போகாம என்ன பண்றாங்க..!!
 
அங்கு மாணவர்களோடு சக்தி கபடி விளையாடிக் கொண்டிருந்தான்.. வேட்டி சட்டை இல்லாமல் விளையாட்டு உடை டிரவுசர் பனியனோடு களத்தில் நிற்க உடலெல்லாம் வியர்வை ஆறாக ஓடியிருந்தது.. மாணவர்கள் அனைவரும் அவ்வளவு ஆர்வத்தோடு அவனோடு விளையாடினார்கள்.. முறுக்கேறிய உடலும் ஆண்மைக்கே இலக்கணமாக நின்றிருந்தவன் ஒவ்வொரு முறை கபடி பாடிச் செல்லும்போதும் மாணவர்கள் அவனை எப்படியாவது அவுட்டாக முயல… அவர்கள்தான் அவுட்டாகி வெளியில் சென்றார்கள்..
 
அப்போதுதான் அங்கே நின்றிருந்த ரமலியை பார்த்தவன்,” ஓகே பாய்ஸ் அன்ட் கேர்ள்ஸ் மிஞ்சத்தை நாளைக்கு பார்ப்போம்.. அனைவரும் அவர்களிடம் விடைபெற்றுச் செல்ல ஒரு துண்டை எடுத்து துடைத்தபடி வந்தவனுக்கு அவ்வளவு உற்சாகம்.. இவ நம்மள காணோம்னு தேடி வந்திட்டாளா..!!
 
வாங்க மேடம் என்ன இங்க…?? இங்க வரவெல்லாம் உங்களுக்கு நேரம் இருக்காதே அப்புறம் என்ன இந்த பக்கம்..??”
 
அதற்குள் அங்கு நின்று கொண்டிருந்த இந்த இரண்டு ஆசிரியர்ளும் சக்தியை நோக்கி வந்தவர்கள்.. ஸார் ரொம்ப நன்றி ஸார்..
 
அப்பா நல்லாயிருக்காங்களா டீச்சர்..?”
ரொம்ப நல்லா இருக்காங்க.. ஆப்ரேஷன் நல்ல படியா முடிஞ்சிருச்சு,, இந்த ஹெல்ப மறக்கவே மாட்டேன் ஸார்..”
 
பரவாயில்லப்பா..ஸ்கூல் டைம்லதான் நான் ஸார் இப்பத்தான் மணி அஞ்சாகப் போகுதே சும்மா அண்ணான்னு கூப்பிடுங்க.. நீங்க கிளம்புங்க பார்த்துப் போங்க..
 
அவர்கள் தலையாட்டியபடி செல்ல மாணவர்களில் பலர் சக்தியை பார்த்து உற்சாகமாக கைகாட்ட அவனும் கைகாட்டியபடியே வந்தான்.. மாணவிகள் நிறைய பேர் ஒடிவந்து
ஸார் எங்க டீம்முக்கும் கபடிக்கு நீங்களே கோச்சா இருங்க .. அப்பத்தான் நாங்களும் பாய்ஸ் டீம் மாதிரி ஜெயிக்க முடியும்..” அனைவரும் பெரிய பெண்கள் பத்தாவது பதினொன்றாவது படிப்பவர்கள்..
 
ஓகே கேர்ள்ஸ் நாளைக்கு கிரவுண்டுல பார்ப்போம்.. ரமலிக்கே இவனின் அனுகுமுறை பிடித்திருந்தது…தான் இந்த பள்ளிக்கு வந்தால் தன்னிடம் பேசவே அனைவரும் பயப்படுவார்கள்.. இவன்கிட்ட இவ்வளவு ப்ரியா பேசுறாங்களே..
 

Advertisement