Advertisement

இணை தேடும் இதயங்கள்
                                                  அத்தியாயம்  –  20 
 
மணியை பார்த்தவனுக்கு தன் ஆஸ்திரேலியா கனவு கலைந்தது தெரிந்தது.. தன்னுடைய நெடுநாள் கனவு இது.. மனதிற்குள் ஏமாற்றம் பரவினாலும் காலையில் இந்த நியூஸ் கிடைத்திருந்தால் மிகவும் மனம் உடைந்திருப்பானோ என்னவோ இப்போது மலரின் ரத்தத்தை பார்த்தது, அவளோடு அலைந்தது.. அதிலும் மலர் மயக்கம் வர்றமாதிரி இருக்குன்னு சொல்லி துவண்டுபோய் படுக்கவும் இவனே சற்று பயந்துவிட்டான்..
 
 
தன் தாயை நீண்ட காலமாக படுக்கையிலேயே பார்த்தவன் மறுபடி அதேபோல அவள் படுக்கவும் தன்னை அறியாமல் அவன் மனதால் அவள்பால் ஒரு எட்டு எடுத்து வைத்திருந்தான்..இவ ரொம்ப வீக்கா இருக்கா நிறைய பழங்கள் வாங்கி கொடுக்கனும்.. இன்னும் ரெண்டு பேர வேலைக்கு சேர்க்க சொல்லனும் என்ற முடிவோடுதான் வந்திருந்தான்..  
 
தான் மட்டும் இங்கு இல்லையென்றால் அப்பாத்தானே எல்லாத்தையும் பார்த்திருக்கனும். .அவர் செய்வார்தான் ஆனால் இப்போதே தன் வயதுக்கு மீறித்தான் உழைத்துக் கொண்டிருக்கிறார் ..காலை 4 மணிக்கு எழுந்தால் இரவு ஒன்பது மணிவரை உழைப்பு மட்டுமே.. என்னவோ காலையில் அந்த ஈமெயிலை பார்த்ததிலிருந்தே அவனுக்கு சற்று குழப்பம்தான்..
 
இங்கே வராமல் சென்னையிலே இருந்திருந்தால் முழுமனதோடு சம்மதித்திருப்பானோ என்னவோ…!! இங்கு வந்தபிறகு அவனுக்கு யோசிக்க வேண்டியிருந்தது.. அதிலும் இரவு தன் தந்தை தன்னை திட்டியதை பற்றி இரவு முழுவதும் யோசித்துக் கொண்டிருந்தான்..
 
தங்கள் வீடு வந்திருக்க தன் சிந்தனைகளை தள்ளிவைத்தவன் மலரை கைதாங்கலாக அழைத்துச் சென்று அறையில் படுக்க வைத்து திரும்பினான்..
 
தன் போனை எடுத்துப் பார்க்க அது சைலண்ட் மோடில் கிடந்தது.. அலுவலகத்தில் இருந்து ஏகப்பட்ட போன்கால்கள்.. அதை ஆன்செய்யவும் அவன் நண்பர்கள் போன் செய்து,
 
ஏண்டா வெற்றி நல்ல சான்ஸ மிஸ்பண்ணிட்ட ..நீ ஆஸ்திரேலியா போகலையாமே இப்பதான் மெயில் வந்திச்சு.. உனக்கடுத்திருந்த நம்ம சுந்தருக்கு அந்த சான்ஸ் கிடைச்சிருக்குடா.. இன்னும் பத்துநாள்ல கிளம்புறாங்களாம்.. 
 
தெரியும்டா.. இங்க கொஞ்சம் வேலையிருக்கு.. அப்புறமா பேசுறேன்..” போனை கட்செய்ய அவனுக்கு வந்த உணர்வு என்னவென்று தெரியவில்லை.. போனையே பார்த்துக் கொண்டிருக்க அடுத்து அந்த சுந்தரே போன் செய்திருந்தான்..
 
எடுத்து பேச சுந்தருக்கு பேச வாய்வரவில்லை..கரகரத்த குரலில் ,”ரொம்ப தாங்க்ஸ்டா மச்சி.. உன்னோட சான்ஸ்தான் இப்ப எனக்கு கிடைச்சிருக்கு.. உன்னப்பத்தி நம்ம ஹெட்ஆபிஸில் இருந்து ரொம்ப புகழ்ந்திருந்தாங்கடா..
 
குடும்பத்துக்காகத்தான் நீ வரலைன்னு …முதல்லயே இந்த சான்ஸ் எனக்கு கிடைச்சா ரொம்ப நல்லாயிருக்கும்னு நினைச்சேன்.. ஸாரி என்னடா இவன் இவ்வளவு சுயநலமா இருக்கானேன்னு என்னை தப்பா நினைச்சுக்காத.. நானும் என்னோட குடும்ப சூழ்நிலையாலத்தான் அங்க போகனும்னு இருந்தேன்..
 
 உனக்கே தெரியும் நாங்க ரொம்ப வசதியில்லாத குடும்பம்னு நான் ஒரு பையன் எனக்கடுத்து நாலு தங்கச்சிங்க அடுத்தடுத்து கல்யாணத்துக்கு நிற்கிறாங்க..இந்த சான்ஸ் எனக்கு ரொம்ப ரொம்ப உதவியா இருக்கும்.. இத்தனை நாள் சம்பாரிச்சது எங்களோட குடும்ப செலவுக்கும் எங்க அப்பா வாங்கியிருந்த கடனுக்கு வட்டி கட்டவே சரியாயிருந்திச்சு..
 
 இனி சம்பளம் அதிகமாயிரும்.. இந்த ரெண்டு வருசத்துக்குள்ள எப்படியாவது ரெண்டு தங்கச்சிக்கு கல்யாணத்தை முடிச்சிருவேன்டா.. நீ இப்ப விட்டுக் கொடுத்ததாலதான் இந்த வாய்ப்பு எனக்கு வந்திருக்கு..நன்றின்னு சொன்னா அது ரொம்ப சின்னவார்த்தை.. என்னோட வாழ்நாள் முழுசும் நான் உன்னை மறக்க மாட்டேன்.. தாங்க்ஸ்டா மச்சி…அவன் தழுதழுத்த குரலை கேட்டவன்,
 
டேய் லூசு விடு..  பிரண்ட்ஸ்க்குள்ள தாங்க்ஸ் எல்லாம் தேவையில்லடா.. உன்னோட குடும்பத்தை நல்ல நிலைமைக்கு கொண்டு வா.. இன்னும் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு போனை கட்செய்தவனுக்கு அந்த ஏமாற்ற உணர்வு எங்கே மறைந்ததென்றே தெரியவில்லை.. மனதிற்குள் ஒரு நிறைவு வந்திருந்தது..
 
சுந்தரை பற்றி தெரியும் அவன் சரியான கஞ்சன் என்றே நண்பர்கள் எல்லாம் கேலி செய்வார்கள்.. அவனும் யார் என்ன சொன்னாலும் கண்டு கொள்ளாதவன் பத்து ரூபாயைக்கூட அநாவசியமாக செலவு செய்யமாட்டான்..தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவன்.. ரொம்பவும் அமைதியானவன்..
 
வெற்றிக்குமே ஆடம்பரம் பிடிக்காது.. ஆனால் அவன் அளவுக்கு இல்லை.. ஞாயிற்றுகிழமைக்கூட வெளியில் வந்தால் செலவு வரும் என்று தன் அறையிலே முடங்கிக் கொள்வான்.. இல்லையென்றால் ஊருக்கு கிளம்பிவிடுவான்.. அவன் கொஞ்சம் வசதிவாய்ப்பு இல்லாதவன் என்று தெரிந்திருந்தவனுக்கு நான்கு தங்கைகள் இருப்பது இப்போதுதான் தெரிந்தது.. இப்போது அவன் பேசிய பேச்சிலிருந்து அவன் குடும்ப சூழ்நிலை புரிந்த போது தன்னுடைய தவறும் புரிந்தது..
 
அவனுக்கு இவ்வளவு பிரச்சனை இருந்தும் ஒருநாள்கூட அதிலயிருந்து தப்பிக்கனும்னு நினைச்சதில்லை..தன்னுடைய கடமையை ஒழுங்கா செய்யனும் நினைக்கிறான்.. நமக்கு கடமைன்னா என்னன்னே தெரியலை.. முதலில அம்மா உடம்பு சரியில்லாம இருந்தப்பவும் அவங்கள வந்து ஒழுங்கா பார்த்துக்கிட்டது இல்லை.. இப்ப என்னன்னா தாலி கட்டின பொண்டாட்டியே வேண்டாம்னு சொல்லி வெளிநாடுதான் முக்கியம்னு நினைச்சிட்டோம்..
 
இதுவரைக்கும் அப்பா கஷ்டப்பட்டதுக்கு நாம அவருக்கு எந்த உதவியும் செஞ்சதில்லை.. ஆனா இனியும் அப்படி இருக்ககூடாது.. ஒருவருக்கு மாற்றம் என்பது எப்போது வரும் என்பது தெரியாது..
 
அந்த மாற்றம் இப்போது சுந்தரின் மூலமாக வெற்றிக்கு வந்தது.. ஒரு தெளிவு கிடைத்தாற் போல இருக்க, வெளியில் கடைப்பையனின் சத்தம் கேட்கவும் சாப்பாட்டை வாங்கி வந்தவன் மணி மூன்றாக சாப்பாட்டை தட்டில் போட்டு மலருக்கு கொடுப்பதற்காக வேகமாக அறைக்குள் நுழைந்தான்..
 
அவள் அடிபடாத கையை கழுத்துக்குள் வைத்து நல்ல உறக்கத்தில் இருக்க முகம் சோர்ந்து போய் காணப்பட்டது.. அவள் கலைந்திருந்த தலையை ஒதுக்கிவிட்டவன்  மலர் மலர்  எழுப்பி சாப்பாட்டு தட்டை காட்டவும் மெதுவாக எழுந்து அமர்ந்தவள் தட்டை வாங்க கையை நீட்ட,
 
ஏய் இந்த கையிலதான அடிப்பட்டிருக்கு..? அப்புறம் எப்படி சாப்பிடுவ..வா நான் ஊட்டுறேன்..
 
பரவாயில்ல.. ஒரு ஸ்பூன் மட்டும்தாங்க நானே சாப்பிட்டுக்கிறேன்..
 
ஸ்பூன் வேண்டாம் நானே ஊட்டுறேன்…
 
மலருக்கு கூச்சமாக இருந்தது.. இல்ல வேண்டாம்ங்க.. ப்ளிஸ் நானே சாப்பிட்டுக்கிறேன்..
 
ஏய் போடி நான் இங்க வந்தா எங்க அம்மாவுக்கெல்லாம் நான்தான் ஊட்டுவேன்.. பயப்படாம சாப்பிடு.. அவளுக்கு எடுத்து ஊட்டிவிட்டவன் அவள் போதும் என்று சொன்னாலும் விடவில்லை.. பாரு இன்னைக்கு எவ்வளவு ரத்தம் போச்சு இப்படி சாப்பிட்டா அந்த ரத்தம் ஊறவே நாலு வருசமாகும்.. இன்னும் இன்னும் வைத்து திணிக்க அதில் ஒரு தாயின் பாசத்தையே  உணர்ந்தாள்.. குழந்தை வேண்டாம் என அடம்பிடிக்கும்போது மிரட்டி உருட்டி ஊட்டிவிடுவது போலவே இருந்தது இவன் செயல்..
ஒரு அளவுக்கு மேல், “ போதும்ங்க வயிறு வலிக்கிற மாதிரி இருக்கு..
 
அப்ப படுக்காம கொஞ்சநேரம் இப்படியே நட..அப்புறமா மாத்திரை போடலாம்.. அவளை முற்றத்தை சுற்றி நடக்கச் சொன்னவன் தானும் சாப்பிட அமர்ந்தான்..
 
ரமலி மனதிற்குள் சக்தியை திட்டிக் கொண்டிருந்தாள்..  பக்கி பக்கி நான் கிளம்பி வந்து எவ்வளவு நேரமாச்சு இன்னுமா கிளம்புறான்.. இன்று பத்து மணிக்கு ஒரு மீட்டிங் இருக்க இப்போதோ மணி ஒன்பதரை .. மணியை பார்க்கவும் மாடியை பார்க்கவும் என மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தவளை பார்வையிட்டு கொண்டிருந்த அப்பத்தா,
 என்னத்தா இன்னும் உன் மச்சான காணோம்னு பார்க்கிறியா..??”
 
மச்சானா எவன்டா அவன்..?? அப்பத்தாவிடம்,” யாரு அம்மாச்சி.. அந்த மச்சான்..?”
 
கலகலவென சிரித்தவர்,” என்னத்தா உன்புருசன்தான் உனக்கு மச்சான் இல்லைனா அயித்தான்.. அப்ப பட்டணத்துபுள்ளைக எல்லாம் புருசன எப்படி கூப்பிடுவாக..??”
 
மாடியில் இருந்து இறங்கி வந்து கொண்டிருந்தவனோ அது என்னப்பத்தா இப்படி கேட்டுட்டிங்க புருசன எல்லாம் பேர் சொல்லித்தான் கூப்பிடுவாங்க.. இல்லைனா வாடா போடான்னு…?” அவன் இழுத்தபடி ரமலியை குறும்பாக பார்க்க,
 
கம்பிய காயவைச்சு வாயில ரெண்டு இழு இழுத்தா கூப்பிடுவாக..” சொல்லியபடி தன் பேரனை பார்த்தவர் சக்தியின் இந்த தோற்றத்தில் அசந்திருந்தார்.. கருப்பு நிற கோர்ட் சூர்ட்டில் ஒரு மாடலை போல நின்றிருந்தான்..
 
அடியாத்தே என் பேரன பார்க்கையில உலகம் சுற்றும் வாலிபன் படத்துல வர்ற எம்சிஆரு மாதிரி இருக்கியேப்பு.. அவனை கன்னத்தில் முத்தமிட்டு பின் உருவி திருஷ்டி கழித்தவர் அந்த தொப்பி ஒன்னுதாப்பு பாக்கி..?”
 
அப்பத்தாவின் பதிலில் முதலில் திகைத்த ரமலி கடைசி பேச்சில் சிரிப்பு தாங்கவில்லை.. மனதிறகுள் சிரித்தவள்.. ஹாஹாஹா தொப்பி எதுக்குடா அப்படியே பிச்சை எடுக்கவா..டேய் இந்த டிரஸ் நல்லாத்தான் இருக்கு ஆனா அதுக்கு இந்த முத்தமெல்லாம் ஓவர்.. பச்சபுள்ள மாதிரி முகத்தை வைச்சிருக்கிறத பாரு.. இவனுக்குள்ள அன்னியன், அம்பி , ரெமோன்னு மூனு கேரக்டர் ஒளிஞ்சிருக்கும் போல..
 
அங்கு அப்பத்தாவும் பேரனும் செல்போனில் சேர்ந்து நின்று செல்பி எடுத்துக் கொண்டிருக்க ,அவர்களின் அலப்பறையை பார்த்துக் கொண்டிருந்தவளை தன்புறம் இழுத்தவன் அவளோடும் சேர்ந்து நின்று மூவருமாக எடுத்துக் கொண்டனர்..
 
இடுப்பில் கைபோட்டு வளைத்திருக்க கையை எடுத்து எடுத்து பார்த்தவள் கடுப்பை முகத்தில் காட்டாமல்  ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு போவமா..?” இருவரும் அப்பத்தாவிடம் சொல்லிக் கொண்டு வாசலை நோக்கி நடக்க ரேணுகா கோவிலுக்கு சென்று திரும்பியவர் சக்தியின் இந்த உடையில் அவரும் அசந்திருந்தார்..
 
இருவருக்கும் விபூதி குங்குமத்தை நீட்ட தனக்கு வைத்துக் கொண்டவன் அவளுக்கும் தன் கையாலே குங்குமத்தை வைத்துவிட்டான்.. நெற்றியில் வைத்து உச்சி வகிட்டிலும் வைத்துவிட ரேணுகாவிற்கு மனது நிறைந்தது.. சாயங்காலம் வரவும் ரெண்டுபேருக்கும சுத்தி போடனும் நம்ம கண்ணே பட்டுரும்போல..!!
 
காரில் ஏறி கண்ணாடியில் முகத்தை பார்த்தவள் தான் போட்டிருந்த உடைக்கும் இந்த விபூதி குங்கமத்திற்கும் சம்பந்தமே இல்லாமல் இருப்பது தெரிய உச்சியில் கைவைத்து அந்த குங்குமத்தை அழிக்க போக காரை ஸ்டார்ட் செய்தபடி,” புருசன் வைச்ச குங்கமத்தை அழிச்சா அந்த புருசன் சீக்கிரமாவே செத்து போவானாம்.. எங்க அப்பத்தா அடிக்கடி சொல்லும்..” அவன் அடித்துவிட அவள் கை அப்படியே நின்றது..
 
புருசனா நாம ஏத்துக்காட்டாலும் ஏற்கனவே ரெண்டுதரம் தலையில அடிப்பட்டிருக்கு.. இவன் நல்லாயிருக்கட்டும் கையை அப்படியே கீழிறக்கியிருந்தாள்.. அதை ஓரக்கண்ணால் பார்த்தவனுக்கு இவ பார்க்கத்தான் டெரர் பீஸ் போல நாம என்ன சொன்னாலும் நம்புறா..!!
 
வழி சொல்லிக் கொண்டே தன் கையில் வைத்திருந்த பைலில் மூழ்க இந்த மீட்டிங் இரண்டு மூன்று முறை நடந்து ஒரு முடிவு எட்டப்படாமல் இன்றும் நடக்கிறது.. தங்கள் கட்டுமான தொழிலுக்கு தேவையான பொருட்களை தாத்தா காலத்திலிருந்தே சில கம்பெனிகளில் தொடர்ந்து வாங்கி கொண்டிருக்க தற்போது சில மாதங்களாக அந்த பொருட்களில் கலப்படம் இருப்பதாக புகார்.. கோடிக்கணக்கில் பிஸினஸ் அதோடு அவர்களும் தரமான கம்பெனிதான் தாத்தா காலத்திலிருந்து அவர்கள் பழக்கம்..
 
இரண்டு முறை கூப்பிட்டு கண்டித்து சொல்ல இப்போது தலைமையேற்று இருந்த அவர்கள் பேரனோ ரமலி அத்தை குடும்பத்தின் பேச்சை கேட்டு அவர்களுக்கே கையாளாக இருந்தான்.. இவள் வெளிநாட்டில் இருக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவர்களோடு இவன் ஏகப்பட்ட தில்லுமுள்ளு செய்து கோடிக் கணக்கில் பணம் சுருட்டியது தெரிந்து இவள் காதிற்கு வரவும் தங்கள் மேலதிகாரிகளை வைத்து இரண்டு மூன்றுமுறை மீட்டிங் வைத்து பேசியும் எந்த முடிவும் எட்டப்படவில்லை.. இன்று நேரடியாக ரமலியே மீட்டிங்கில் கலந்து கொள்கிறாள்..
 

Advertisement